பிரான்சில் மக்ரோன்-அட்டல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முன்னோக்கி செல்லும் பாதை எது?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த மாதம், ஒரு புதிய பிரெஞ்சு அரசாங்கத்திற்கு தலைவராக கேப்ரியல் அட்டலை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நியமித்ததில் இருந்து, தொழிலாள வர்க்கம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுக்கான அழைப்புகள், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் வர்க்கப் போராட்டத்தின் பரந்த வெடிப்பை முன்னறிவிக்கும் ஆரம்ப அறிகுறிகளாகும். மக்ரோன் மற்றும் பிற உயர்மட்ட நேட்டோ அதிகாரிகளின் ஆதரவுடன், காஸாவில் இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலைக்கு எதிரான ஒரு சர்வதேச வெகுஜன எதிர்ப்பு அலைக்கு மத்தியில் இவை கட்டவிழ்ந்துள்ளன.

பாரிஸில் உள்ள பாரளுமன்றத்தில் புதிய அரசாங்கத்திற்கான முதல் கேள்வி அமர்வின் போது பிரெஞ்சு பிரதமர் கேப்ரியல் அட்டல் சைகை செய்கிறார்.  Tuesday, Jan. 16, 2024. [AP Photo/Michel Euler]

முதலாளித்துவ சுரண்டலின் அதிகரிப்பினால், தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்து வருகிறது. இது வாழ்க்கைத் தரங்களில் வரலாற்று வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. ஐரோப்பிய முதலாளித்துவ தன்னலக்குழு, உக்ரேனில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அதிகரித்து வரும் போருக்கு மத்தியில், வங்கிகளுக்கு பிணை எடுப்பதற்கும் இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதற்கும் டிரில்லியன் கணக்கான யூரோக்களை திசை திருப்புகிறது. பிரெஞ்சு பில்லியனர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிகர மதிப்பை நூற்றுக்கணக்கான பில்லியன்களாக அதிகரிக்கும்போது, ​​2021ல் இருந்து உணவு விலைகள் 20 சதவீதமும், எரிசக்தி விலைகள் 30 சதவீதமும் அதிகரித்து ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன.

புறநிலை ரீதியில் எழும் இந்த புரட்சிகரமான சூழ்நிலை முன்னோக்கு பற்றிய அவசர கேள்விகளை எழுப்புகிறது. தொழிலாளர்கள் ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் நடத்தப்படக்கூடிய தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்கொள்ளவில்லை, மாறாக முதலாளித்துவத்தின் போர் மற்றும் பாசிச பிற்போக்குத்தனத்திற்கு எதிரான ஒரு சர்வதேச அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். முதலாளித்துவத்தை வீழ்த்தி, தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்து சோசலிசத்தை கட்டியெழுப்ப போராடும் ஒரு சர்வதேச புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதுதான் தீர்க்கமான கேள்வியாகும்.

அத்தகைய தலைமை இல்லாமல், மிகவும் போர்க்குணமிக்க இயக்கம் கூட தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை மாற்றியமைக்க முடியாது என்பதை நிரூபிக்கும் பல உதாரணங்களை பிரான்ஸ் வழங்குகிறது. இது கிட்டத்தட்ட கடந்த ஒரு தசாப்தத்தில் பல வெடிப்புமிக்க போராட்டங்களைக் கண்டுள்ளது: குறிப்பாக, 2016 இல் சோசலிஸ்ட் கட்சி கொண்டுவந்த தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக, 2018-2019 “மஞ்சள் அங்கி” எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மக்ரோனின் பணிக்குத் திரும்புவதற்கான உத்தரவுகளுக்கு எதிரான போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவைகளாகும். கடந்த ஆண்டு, 1936 மற்றும் 1968 க்குப் பிறகு, மக்ரோன் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் பெரும் செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களை சுமத்துவதற்கு எதிராக மிகப்பெரிய வெகுஜன வேலைநிறுத்தங்கள் வெடித்ததை பிரான்ஸ் கண்டது.

பாரிஸின் லத்தீன் பகுதியிலுள்ள பாந்தியோன் முன் மாணவர்கள் மக்ரோன் மற்றும் அவரது ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

போராட்டங்கள் அடிமட்டத்திலிருந்து வெடித்திருந்தும், ஆளும் உயரடுக்கின் பிற்போக்கு, அதன் போக்கை மாற்றவில்லை. மாறாக, அது இடது பக்கம் அல்ல, வலது பக்கம் மேலும் திரும்பியுள்ளது. இது மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய பேரணி (RN) கட்சியிலிருந்து பிரிக்க முடியாத போர் மற்றும் பாசிச பிற்போக்கு கொள்கைகளை பின்பற்றுவதற்கு வெளிப்படையாக வடிவமைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக, அட்டலை மக்ரோன் பதவிக்கு கொண்டு வந்ததில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பரில், மக்ரோனின் கட்சி, பிறப்புரிமைக் குடியுரிமைக் கொள்கையை மறுக்கும் குடியேற்ற-எதிர்ப்புச் சட்டத்தை அங்கீகரிக்க வாக்களித்தது மற்றும் பிரெஞ்சு குடிமக்கள் அல்லாதவர்களுக்கு மருத்துவச் சேவைக்கான அணுகலை மறுத்துள்ளதோடு, இந்த நடவடிக்கையை லு பென், அதிதீவிர வலதுசாரிகளுக்கு கிடைத்த “கருத்தியல் ரீதியான வெற்றியாகப்” பாராட்டினார். அட்டால், பிரதமர் பதவிக்கு வந்தவுடன், வேலையின்மை காப்பீடு மற்றும் குறைந்தபட்ச ஊதிய சட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு உறுதியளித்தார். அவர், பிரான்சின் பாரிய பொலிஸ் படைகளை மேலும் வலுப்படுத்தி, முஸ்லீம்களின் ஆடைகளை தடை செய்வதோடு, பொதுப் பள்ளிகளில் “தேசபக்தி” கல்வியை செயல்படுத்துவார்.

இறுதியில், உயர்மட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள், ரஷ்யா மீது முழுமையான போரை நடத்துவதற்கு பிரித்தானிய மக்கள் பெருமளவிலான கட்டாய ஆட்சேர்ப்புக்குத் தயாராக வேண்டும் என்று கோருகையில், பிரெஞ்சு இராணுவத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பிரெஞ்சு இளைஞர்கள் மீது கட்டாய உலகளாவிய தேசிய சேவையை (SNU) செயல்படுத்த அட்டல் திட்டமிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் பொது வாழ்வின் மையத்தில் நவ-பாசிசத்தை வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று முதலாளித்துவத்தின் பொது ஊழியர்கள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். அட்டலின் நியமனம் தொடர்பாக Le Monde பின்வருமாறு எழுதியது, “அட்டலின் நியமனம் RN கட்சியை ஓரங்கட்டும் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது..., இது, செயலற்றதாகிவிட்ட தார்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் அல்ல, மாறாக, அவள் எடுத்துக்காட்டிய பிரச்சினைகளுக்கு தீவிரமான தீர்வை வழங்கும் திறனின் அடிப்படையில், லு பென்னுக்கு சவால் விடுவதற்கான முடிவை இது குறிக்கிறது”.

பிரெஞ்சு முதலாளித்துவத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் ஏன் பாசிசத்தின் மரபுக்கு, கொள்கை ரீதியான எதிர்ப்புகள் “பயனற்றது” என்பதை உறுதிப்படுத்துகிறது? இது, இறுதியில் தற்போதைய ஏகாதிபத்தியத்தின் இனப்படுகொலைக் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இன அழிப்புக்கான நவ-பாசிசத்தின் வரலாற்றுப் பாதுகாப்பு, சோவியத் ஒன்றியத்தின் மீதான அழிவுப் போர் மற்றும் நாசிசத்துடன் பிரெஞ்சு ஒத்துழைப்பு ஆகியவை, காஸாவில் இனப்படுகொலையை ஆதரிப்பதற்கும், ரஷ்யாவுடனான ஒரு புதிய உலகப் போரில் மூழ்குவதற்கும் மற்றும் உள்நாட்டில் பாசிச எதிர்வினைக்கும் ஆளும் வர்க்கத்திற்கு இன்றியமையாதவையாக இருக்கின்றது.

மக்ரோன்-அட்டல் அரசாங்கத்திற்கு பரவலான எதிர்ப்பு உள்ளது. அவர் பிரதமராக நியமனம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள், அட்டலின் கருத்துக் கணிப்பு மதிப்பீடுகள் 32 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், தேர்தல் மற்றும் பாராளுமன்ற கட்டமைப்பில் தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு முன்னோக்கி செல்லும் பாதை இல்லை.

ஆளும் வர்க்கம், முக்கிய முதலாளித்துவ ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்கள் ஆகியவை, அதிகாரத்திற்காக சீர்செய்யும் தேர்தல் மாற்றீடு நவ-பாசிச மரின் லு பென் ஆகும். முழு முதலாளித்துவத்தின் நவ-பாசிச நோக்குநிலையிலிருந்து லாபம் ஈட்டும் அதே வேளையில், சமூகக் குறைகளை சுரண்டி முஸ்லிம்-எதிர்ப்பு இனவெறிக்கு முறையிடுபவராக மரின் லு பென் இருக்கிறார்.

இந்த நிலைமையில், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய புரட்சிகர தலைமை கட்டியெழுப்பப்பட வேண்டும். மக்ரோனின் பாசிச பரிணாமம், தாராளவாத முதலாளித்துவத்துடன் மக்கள் முன்னணி கூட்டணிகளின் மரபுகளின் அடிப்படையிலான போக்குகளின் திவால்நிலையை வெளிப்படுத்துகிறது. இதில் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் மட்டுமல்ல, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) பிரிந்து ஸ்ராலினிச அல்லது சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களை நோக்கி நகர்ந்த ட்ரொட்ஸ்கிசத்தின் துரோகிகளின் நடுத்தர வர்க்க வழித்தோன்றல்களும் அடங்குவர்.

அக்டோபர் புரட்சி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் மரபுகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாதுகாப்பின் அடிப்படையில் ஒரு புரட்சிகர தலைமை கட்டியெழுப்பப்பட வேண்டும். கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த ஓய்வூதியப் போராட்டத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளின் பங்கு பற்றிய மதிப்பாய்வில் இருந்து இது வெளிப்படுகிறது. வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புகளும் பல மாதங்களாகப் பெருகிவரும் நிலையில், குறிப்பாக பாராளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு கூட இல்லாமல் பட்ஜெட் வெட்டுக்களை சுமத்த மக்ரோனின் முடிவுக்கு எதிர்ப்புகள் வெடித்த பிறகு, இந்த போக்குகள் நிகழ்வுகளுக்கு பயந்து பின்வாங்கின.

பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பொருளாதாரத்தை முடக்கவும், பொது வேலைநிறுத்தம் மூலம் மக்ரோனை வீழ்த்தவும் விரும்புவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் சமூக-ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச தொழிற்சங்க கூட்டமைப்புகளின் தலைவர்கள் எதிர்ப்புக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைக்கு அச்சுறுத்துவதாகவும், அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறினர். கலகத் தடுப்புப் பொலிசார் வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் இளைஞர்களைத் தாக்கியதால், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் எதிர்ப்பு போராட்டத்தை அணிதிரட்ட மறுத்து, இறுதியில் மக்ரோனுக்கு எதிரான அனைத்து வேலைநிறுத்தங்களையும் முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்தன. இது பெரும்பான்மையான பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பையும் மீறி ஓய்வூதிய வெட்டுக்களை நிறைவேற்ற அனுமதித்தது.

2022 ஜனாதிபதித் தேர்தலில், அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் ஜோன்-லூக் மெலன்சோன் 8 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்தார். இருந்த போதிலும், இதர போலி-இடது குழுக்களான பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, மோரேனாய்ட்டுக்களின் நிரந்தரப் புரட்சி மற்றும் லம்பேர்டிஸ்ட்டுக்களின் சுதந்திர ஜனநாயக தொழிலாளர் கட்சி (POID) ஆகியவற்றைப் போன்று, மக்கள் விரும்பும் பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்வதற்கு அதன் வாக்காளர்களை அணிதிரட்டுமாறு LFI எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை. அத்துடன், இதர போலி-இடது குழுக்களைப் போல, நிலைமை புரட்சிகரமாக இல்லை என்று கூறிய LFI, மக்ரோனுக்கு அழைப்புவிடுவது அல்லது ஒரு ஜனரஞ்சகமான, போர்க்குணமிக்க கொள்கையைத் தொடர தொழிற்சங்கங்களுக்கு முறையீடு செய்வதோடு தன்னை மட்டுப்படுத்திக் கொண்டது.

ஜோன்-லூக் மெலன்சோன் தெற்கு பிரான்சின் மார்சேயில் உரை நிகழ்த்துகிறார். Friday, June 10, 2022 [AP Photo/Daniel Cole]

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES) மக்ரோனுக்கு எதிராக ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பப் தனித்துப் போராடி வருகிறது. தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இது அவசியமான முதல் படி என்று விளக்கி, மக்ரோனை வீழ்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பணியிடங்களிலும் பள்ளிகளிலும் தீர்மானங்களை நிறைவேற்றுமாறு PES அழைப்பு விடுத்துள்ளது. நவ-பாசிச கொள்கைகளை மக்ரோன் ஏற்றுக்கொண்டது மற்றும் காஸாவில் இனப்படுகொலைக்கு மத்தியில் சியோனிச ஆட்சியுடன் நட்புறவு பற்றிய அவரது அறிவிப்புகள் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகின்றன.

மக்ரோன் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறார் என்பதை பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியினர் அறிவர். எவ்வாறாயினும், பரந்த தொழிலாளர்களின் அரசியல் நனவில் இருந்து புறநிலை புரட்சிகர சூழ்நிலையை பிரிக்கும் இடைவெளி இன்னும் உள்ளது. இது தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது கட்சிகளால் நடத்தப்படும் தொழிலாளர் போராட்டங்கள் மீதான மேலாதிக்கத்துடன் பிணைந்துள்ளது. இந்த கட்சிகள், தொழிலாளர்களின் போராட்டங்களை சர்வதேச அளவில் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து துண்டித்து அவர்களை முதலாளித்துவ அரசோடு பிணைக்க முயல்கின்றன.

Donges எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலைநிறுத்தத்தை புதுப்பிக்க தொழிலாளர்கள் வாக்களிக்கின்றனர். மேற்கு பிரான்ஸ், வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2023. [AP Photo/Jeremias Gonzalez]

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் முக்கியமான பணி, தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிச புரட்சிகர நனவுக்கான போராட்டமாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் அதிகாரத்திற்கான போராட்டமாக மற்றும் சோசலிச கொள்கைகளை செயல்படுத்துவதற்கான, சர்வதேச ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே முன்னோக்கி செல்லும் ஒரே வழியாகும். இதற்கு பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சியையும் உலகெங்கிலுமான நாடுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளையும் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading