மியூனிக் போர் மாநாடு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் (எம்.எஸ்.சி) அசல் குறிக்கோளான “பேச்சுவார்த்தை  மூலம் அமைதி,” என்பது  எப்போதும் கேலிக்கூத்தாகவே இருந்து வந்துள்ளது. கடந்த வார இறுதியில் 60வது முறையாக நடைபெற்ற அரசியல், இராணுவம், உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உயர்மட்டப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடலானது, சூழ்ச்சிகள், சதிகள் மற்றும் போருக்கான தயாரிப்புகளின் களமாகவே எப்போதும் இருந்து வருகிறது.

கமராக்களுக்கு முன்னால் பேசும் பேச்சுக்கள் மற்றும் விவாதங்கள் பிரதானமாக பிரச்சார நோக்கங்களுக்காகவே உள்ள அதே நேரம், மாநாட்டின் உண்மையான வேலை பின்புற அறைகளில் அரங்கேறுகிறது. நெருக்கமான இடங்களில் கூடுவதானது கலந்துரையாடல்களையும் உடன்படிக்கைகளை எளிதாக்குகிறது. வேறு வகையில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. 

இந்த ஆண்டு மியூனிக்கில் நடந்த கூட்டம் முந்தைய கூட்டத்தை விட அதிகமாக முன் சென்றது. நடந்துகொண்டிருக்கும் போர்களை தீவிரப்படுத்த இது நேரடியாகவும் உடனடியாகவும் சேவையாற்றியது. அது “பேச்சுவார்த்தை  மூலம் சமாதானம்” பற்றி கவலைப்படவில்லை, மாறாக எதிரியை பூதமாக சித்தரித்தல் மற்றும் இராணுவ விரிவாக்கத்தை ஊக்குவிப்பது பற்றியே அக்கறை காட்டியது. 

நேட்டோவின் தற்போதைய இரண்டு முக்கிய எதிரிகளான ரஷ்யாவும் ஈரானும் மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. சீனாவில் இருந்து ஒரு தூதுக்குழு பயணித்ததுடன் சீன வெளியுறவு அமைச்சர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரைச் சந்தித்த போதிலும், அது அடுத்த இராணுவ விரிவாக்கத்திற்கு முன்னதாக நிலப்பரப்பை பதம் பார்ப்பதாக இருந்தது.

மாநாடு விரக்தி மற்றும் கசப்பான மனநிலையால் குணாம்சப்படுத்தப்பட்டது. இலட்சக்கணக்கான மரணங்களின் பின்னரும் இரண்டு வருடகாலமாக ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வரும் உக்ரேன் போரின் அழிவுகரமான போக்கிற்கும், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் மீதான பூகோளரீதியான சீற்றத்திற்கும் எதிராக எதிர்வினையாற்றிய பங்கேற்பாளர்கள், காளையை கொம்புகளில பற்றிக்கொண்டு மேலும் தங்களை ஆயுதபாணிகளாக்கிக்கொண்டு ஒரு அணு ஆயுதப் போருக்குத் தயாராகின்றனர்.

17 பெப்ரவரி 2024 அன்று ஜேர்மனியின் மியூனிக்கில் நடந்த மியூனிக்பாதுகாப்பு மாநாட்டில் இஸ்ரேலின் ஜனாதிபதி இஸ்சாக் ஹெர்சாக் இடதுபுறமும் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், வலதுபுறமும் நின்று கைகுலுக்கினர். [AP Photo/Sven Hoppe]


மாநாட்டின் உத்தியோகபூர்வ முழக்கம், ”வெற்றி -வெற்றி” என்பதற்கு மாறாக “தோல்வி-தோல்வி” என்பதாக இருந்தது – இது ஆயுதப் போட்டி மற்றும் விரிவடையும் போர்களில், தோல்வியடைபவர்கள்  மட்டுமே இருக்க முடியும் என்பதை அப்பட்டமாக ஒப்புக்கொள்வதாக இருக்கிறது.  “தோல்வி-தோல்வி” என்பது வெளியேற வழியே இல்லாத ஒரு சூழ்நிலையாகும். மியூனிக்கில் சில விஷயங்கள் அப்படித்தான் தெரிகிறது” என்று Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை கருத்துரைத்தது. “2024 பாதுகாப்பு மாநாட்டைப் போல மேற்கு நாடுகள் ஒருபோதும் பாதுகாப்பு குறித்து அவநம்பிக்கையுடன் கூட இருந்ததில்லை,” Münchner Merkur  என்று எழுதியது.

நியூயார்க் டைம்ஸின் நீண்டகால நிருபர்களான டேவிட் இ. சாங்கர்,  ஸ்டீவன் எர்லாங்கர் ஆகியோர் மாநாட்டின் சூழ்நிலையை பின்வருமாறு விவரித்தனர்:

மியூனிக்கில், தலைவர்கள் தாங்கள் எதிர்பார்க்காத எதிர்ப்புகளுக்கு முகங்கொடுத்ததால், மனக் கவலையுடனும் அமைதியற்றும் இருந்தனர். 75 ஆண்டுகளாக அதன் பாதுகாப்பு மூலோபாயத்தின் மையத்தில் இருந்து வரும் ஒரு சக்தியான அமெரிக்காவால் தாம் விரைவில் கைவிடப்படலாம் என்ற ஐரோப்பாவின் வளர்ந்து வரும் கவலைகளுடன், திரு. புட்டினின் சாத்தியமான அடுத்த நகர்வுகள் பற்றிய எச்சரிக்கைகள் கலந்துள்ளன.

ரஷ்யாவிற்கு எதிரான போரின் விரிவாக்கம்

2007 ஆம் ஆண்டில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மியூனிக்கிற்கு நேரில் சென்று அமெரிக்காவும் நேட்டோவும் பலவந்தமாக உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட தொடர்ந்து முயற்சிப்பதற்கு எதிராக அவசர அவசரமாக எச்சரித்தார். நேட்டோ கிழக்கு நோக்கி மேலும் விரிவுபடுத்துவதை பற்றி குறிப்பாக எதிர்த்த அவர், அதை “ஆத்திரமூட்டும் காரணி” என்று விவரித்ததுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்பு பெற்ற உத்தரவாதங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.

நேட்டோ இதைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், கிழக்கு நோக்கி அதன் விரிவாக்கத்தை துரிதப்படுத்தியது. ரஷ்யாவுடன் 2,000ம் கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உக்ரேனில், வாஷிங்டனும் பேர்லினும் தங்களுக்குச் சார்பான ஒரு ஆட்சி கொண்டுவருவதற்கு 2014 பெப்ரவரியில் உதவி செய்ததோடு நாட்டை திட்டமிட்டு ஆயுதபாணியாக்க  தொடங்கின. இதற்கு மாஸ்கோ, 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான இராணுவத் தாக்குதலை நடத்தி  பதிலளித்தது. 

மேற்கத்திய ஆட்சிகள் 250 பில்லியன் யூரோக்களுடன் உக்ரேனை ஆதரித்த போதிலும், போர் ஒரு முட்டுச்சந்தையில் உள்ளது. உக்ரேனிய இராணுவத்தின் ஆரம்ப இராணுவ வெற்றிகள் 2023 மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கொண்டாடப்பட்டாலும், இராணுவம் இப்போது தற்காப்பு நிலையில் உள்ளது. மாநாட்டின் தொடக்கத்தில், கடுமையான மோதல் நடந்த நகரமான அவ்டிவ்காவிலிருந்து உக்ரேனியப் பின்வாங்கல் பற்றிய செய்திகள் வெளியாகின -இது ஒரு பாதூரமான தோல்வியாகும்

மேலதிகமாக, இதுவரை பலிக் கடாவாக பயன்படுத்தப்பட்ட 500,000ம் உக்ரேனிய துருப்புகளை பிரதியீடு செய்வதில் சிக்கல்கள் அதிகரித்து வருவதுடன், அமெரிக்க குடியரசுக் கட்சியினரின் நிதித் தடை மற்றும் குறுகிய காலத்தில் தங்கள் சொந்த உற்பத்தியை அதிகரிப்பதில் ஐரோப்பியர்களின் இயலாமை காரணமாக வெடிமருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாமல் இருக்கின்றனர்.

மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், இராணுவத்தில் போதுமான நிதியை முதலீடு செய்யாத ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க ஆதரவை கைவிடுவதாகவும், “இந்த நட்பு நாடுகளுடன் புட்டின் என்ன நரகத்தை செய்ய விரும்பினாலும் அதை செய்யும்படி அவரை ஊக்குவிக்கப் போவதாகவும்” அச்சுறுத்தினார்.

“அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாமல் - அல்லது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மாதிரியான ஆதரவு வாக்குறுதியுடன் ஐரோப்பா விரைவில் தன்னை அடையாளப்படுத்துமா?”  என்று Die Zeit  கேட்டது:

மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த நெருக்கடிக்கு ஒரு பின்வாங்கலுடன் அன்றி, மாறாக மேலும் விரிவாக்கத்துடன் பதிலளித்தது. புட்டின் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தாலும், மிக சமீபத்தில் வலதுசாரி அமெரிக்க தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுக்கு அளித்த பேட்டியில், அத்தகைய தீர்வு எதுவும் பரிசீலிக்கப்படவில்லை. அணு ஆயுத நாடான ரஷ்யாவின் இராணுவத் தோல்வியின்றி போரை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் இப்போது நேட்டோ வட்டாரங்களில் தேசத்துரோகமாகக் கருதப்படுகிறது.

மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக தனது கணவர் அலெக்ஸி நவல்னியின் இறப்பு குறித்து அறிந்த யூலியா நவல்னாயா, அங்கு திடீரென வருகை தந்ததுடன் மாநாடு தொடங்கியது. மரணத்துக்கான காரணம் ஒருபுறம் இருக்க, மரணம் உறுதிப்படுத்தப்பட்டிராவிட்டாலும், கூடியிருந்த அரசாங்கத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்கள் பல நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டல் மற்றும் தாளக் கரவொலியுடன் அவரை வரவேற்றனர்.

“புட்டின் மற்றும் அவருக்காக பணிபுரியும் அனைவரும் நாட்டிற்கும், எனது குடும்பத்திற்கும், எனது கணவருக்கும் என்ன செய்தார்களோ அதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை நான் அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.” “தீமையை எதிர்த்துப் போராட நான் உலகிற்கு அழைப்பு விடுக்கிறேன்,” என்று நவல்னயா கூச்சலிட்டார்.

செலென்ஸ்கியும் ஷோல்சும் புட்டினை கண்டனம் செய்கின்றனர்

நேரில் வந்திருந்த உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, தனது உரையின் பெரும்பகுதியை விளாடிமிர் புட்டினைக் கண்டிப்பதற்காகவே அர்ப்பணித்தார். அவர் நவால்னியின் கொலைக்கு ரஷ்ய ஜனாதிபதியை குற்றம் சாட்டியுதுடன் அவருக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்றார்: ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையை எதிர் கொள்வது அல்லது அவரது கூட்டாளிகளில் ஒருவரால் படுகொலை செய்யப்படுவது. 

புட்டின் முழு ஐரோப்பாவையும் மற்றும் பல நாடுகளையும் அச்சுறுத்துவதாக செலென்ஸ்கி குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு நாம் அறிந்திருந்த உலகின் முடிவைக் குறித்தது என்றார். விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கை மீண்டும் நிறுவ வேண்டிய ஆண்டாக 2024 இருக்கிறது.  

மாநாட்டிற்குப் பிறகு, அவர் தனது கணவரின் இடத்தைப் பிடித்து அவரது அரசியல் பணிகளைத் தொடரப்போவதாக ஒரு வீடியோவில் நவல்னயா அறிவித்தார். வெளிப்படையாக, அவர் முன்பு எப்போதும் நிராகரித்த இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மியூனிக்கில் ஊக்குவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. 

செலென்ஸ்கியின் உரை, மேலும் இராணுவ உதவி மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுப்பதுடன் முடிவடைந்தது. விளாடிமிர் புட்டின் ஒரு தோல்வியை சந்தித்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பயப்பட வேண்டாம் என்று அவர் தனது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.  வேறுவிதமாகக் கூறினால், அணு ஆயுத போருக்கான சாத்தியம் குறித்து  பயப்பட வேண்டாம், என்பதாகும்.

ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், அதேபோன்று உக்ரேனில் நடக்கும் போரை மையப்படுத்தி ரஷ்ய ஜனாதிபதியை கடுமையாகத் தாக்கினார். “நவல்னி கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறினார். போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, “புட்டினுக்கு சமிக்ஞை அனுப்ப நாங்கள் போதுமான அளவு செயற்பட்டுள்ளோமா?” என்று ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்”, என்று அறிவித்த அவர்,  “நாங்கள் இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறோம்,” என்று மேலும் கூறினார்.

உக்ரேனில் ரஷ்யா வென்றால், அது, “சுதந்திரமான, சுயாதீனமான மற்றும் ஜனநாயக நாடு என்ற உக்ரேனின் முடிவையும் மற்றும் நமது ஐரோப்பிய அமைதி ஒழுங்கின் அழிவையும்” அர்த்தப்படுத்தும் என்று சான்சலர் கூறினார். “அப்போது நாம் செலுத்த வேண்டிய அரசியல் மற்றும் நிதியின் விலை, இன்றும் எதிர்காலத்திலும்,  உக்ரேனுக்கான நமது ஆதரவின் அனைத்து செலவுகளையும் விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.”

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இதுவரை கிட்டத்தட்ட 90 பில்லியன் யூரோக்கள் வழங்கியுள்ளன என்றும் மேலும் 50 பில்லியன் யூரோக்கள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளன என்பதை ஷோல்ஸ் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். ஜேர்மனி மட்டும் 28 பில்லியன் யூரோக்களுக்கான  இராணுவ ஆதரவை வழங்கியது அல்லது உறுதியளித்தது. வேறு இடங்களில் பணம் பற்றாக்குறையாக இருந்த போதிலும், “பாதுகாப்பு இல்லாமல், மற்றைய  அனைத்தும் ஒன்றுமில்லை,” என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு மாநாட்டிற்கு உடனடியாக முன்னதாக, ஷோல்சும் செலென்ஸ்கியும் பேர்லினில், உக்ரேன் நேட்டோவில் திட்டமிட்டபடி  சேரும் வரை நிரந்தர இராணுவ ஆதரவிற்கு உத்தரவாதம் அளிக்கும் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். “இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தி மதிப்பிட முடியாது,” என்று ஷோல்ஸ் வலியுறுத்தினார்.

ஜேர்மனியின் கூட்டாட்சி குடியரசு இந்த வடிவத்தில் உத்தரவாதம் அளிக்கும் அரசாக செயல்படுவது இதுவே முதல் முறையாகும். ஏனையவற்றுடன் சேர்த்து, இந்த ஒப்பந்தமானது ஆயுதங்களை வழங்குதல், உக்ரேனிய துருப்புகளுக்கு பயிற்சி அளித்தல், கண்ணிவெடி அகற்றல் மற்றும் புனரமைப்புக்கான ஆதரவை வழங்குகிறது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் போர் வெடித்தால், 24 மணி நேரத்திற்குள் விரைவான மற்றும் பயனுள்ள இராணுவ ஆதரவு வழங்குவது குறித்து கலந்துரையாட ஜேர்மன் அரசாங்கம் சம்மதித்தது.

செலென்ஸ்கி, மியூனிக்கிற்கு வராமல் இருந்த பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனுடனும் இதேபோன்ற ஒரு உடன்பாட்டை எட்டினார். ஒரு மேலதிக இரகசிய பிரிவு உள்ளடங்கிய ஒரு ஒப்பந்தம் ஏற்கனவே பிரிட்டனுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

காஸாவில் இனப்படுகொலை

பாதுகாப்பு மாநாட்டில் இரண்டாவது முக்கிய தலைப்பு மத்திய கிழக்கு மோதல் ஆகும். இங்கே, நேட்டோ சக்திகளின் பிரதிநிதிகள்  தங்கள் ஆதிக்கத்தின் கீழ் அப்பிராந்தியத்தை மறுசீரமைப்பதற்கான அவர்களின் திட்டங்களில் அரபு ஆட்சிகளை  ஈடுபடுத்தவும், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் மத்தியில் தங்களது மானத்தை காப்பாற்ற  அனுமதிக்கும் தேவையான சூத்திரங்களையும் உருவாக்க முயன்றனர்.

அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் துருக்கியும் இடம்பெற்றுள்ளது.

சவூதி வெளியுறவு அமைச்சர் பின்னர் தெரிவித்தபடி, ஒரு பாலஸ்தீனிய அரசு மற்றும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் சீர்திருத்தத்திற்கான வாக்குறுதிக்கு ஈடாக, சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவது குறித்த பேச்சுக்களில் இந்த நாடுகள்  கவனம் செலுத்தின.

மியூனிக்கில் இருந்த இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கும், சவூதி அரேபியாவுடனான உறவுகளை இயல்பாக்குவது பிராந்தியத்தில் “ஆட்டத்தை மாற்றியமைக்கும்” ஒன்றாக இருக்கும் என்று விவரித்தார். எவ்வாறாயினும், “இஸ்ரேலின் பாதுகாப்பு பிரச்சினைக்கு உண்மையான தீர்வுகளை நாங்கள் காணவில்லை என்றால்” பாலஸ்தீன அரசு என்ற ஒன்று இருக்காது என அவர் கூறினார்.

ஒரு அறிக்கையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “பாலஸ்தீனியர்களுடனான ஒரு நிரந்தர ஏற்பாடு தொடர்பான எந்தவொரு சர்வதேச கட்டளைகளையும் உறுதியாக நிராகரித்தார்.”

அணு ஆயுதங்களுக்கு அழைப்பு

ஷோல்ஸ், மியூனிக்கில் ஆற்றிய உரையில், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அணு ஆயுத சக்தியாக எழுச்சி கண்டதைப் பற்றியும் மறைமுகமாகப் பேசினார். பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் “எதிர்த்தாக்குதலைத் தடுக்கும் துல்லிய ஆயுதங்களின்” உருவாக்கம் மற்றும் அறிமுகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கோடையில் இருந்து ஜேர்மன் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் நடுத்தர தூர ஆயுதங்களின் அபிவிருத்தியை ஏற்கனவே அறிவித்துள்ளதுடன், ஷோல்ஸ் இப்போது இதை அணுசக்தி நாடுகளான பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உடன் இணைப்பதோடு, வல்லுநர்கள் இந்த ஆயுதங்கள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

சமீபத்திய வாரங்களில், லிபரல் ஜனநாயக (FDP) தலைவரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியன் லிண்ட்னர் மற்றும் சமீபத்தில் மறைந்த கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) அரசியல்வாதியான வொல்ஸ்கங் சைபல், முன்னாள் வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷர் (பசுமைவாதிகள்) மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான மன்ஃப்ரெட் வெபர் (CSU) மற்றும் கத்தரினா பார்லி (SPD) உள்ளிட்ட ஜேர்மனியில் உள்ள அனைத்து ஸ்தாபனக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்

போலந்து அரசாங்கத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க், ஏர்பஸ் குழுமத்தின் தலைவர் ரெனே ஓபர்மேன் ஆகியோரும் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

ஜனாதிபதி மக்ரோன் முன்வைத்துள்ளபடி, பிரெஞ்சு அணு ஆயுதங்களை ஐரோப்பா முழுவதற்கும் பயன்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை உள்ளது. பிரிட்டனை போலல்லாமல், பிரெஞ்சு அணு ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து முற்றிலும் சுதந்திரமானவை. ஏறக்குறைய 300 போர்முனைகளில் அறுபத்து நான்கு குண்டுகள் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவை 6,000 கிலோமீட்டர்கள் வரை செல்லக்கூடியவை. பிரான்ஸ் அணு ஆயுதங்களால் அழிக்கப்பட்டாலும் அவை ஏவப்படக்கூடியவை, எனவே அவை குறிப்பாக பயனுள்ள தடுப்பு ஆயுதங்களாக கருதப்படுகின்றன.

ஆயுதங்கள், ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு நிதியளிப்பு, உக்ரேனுக்கான ஆதரவு மற்றும் ஒரு ஐரோப்பிய அணு ஆயுத வளர்ச்சியும் பெரும் நிதித் தொகையை விழுங்குகின்றன. ஜேர்மனி நிர்ணயித்துள்ள அனைத்து இலக்குகளையும் அடைவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்திற்குப் பதிலாக நான்கு சதவீதத்தை செலவிட வேண்டி இருக்கும் என்று கணக்கீடுகள் தெருவிக்கின்றன. இது ஆண்டுக்கு மேலும் 85 பில்லியன் யூரோக்களை கூடுதலாக சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பு செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்குவதைக் குறிக்கும் - இது சமூக செலவினங்களை வெட்டுவதன் மூலம் திரும்பப் பெறப்படும்.

போர் வெறியானது வர்க்கப் போராட்டத்தின் மிகப்பெரிய தீவிரத்துடன் கைகோர்த்து செல்கிறது. பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் டிம் மேசன் 1930 களில் ஜேர்மனியை இரண்டாம் உலகப் போருக்குத் தள்ளிய இயக்கவியல் பற்றி எழுதினார்:


சர்வாதிகாரம் மற்றும் மறுசீரமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு பதட்டங்கள் மற்றும் நெருக்கடிகளினால் இந்த ஆட்சிக்கு திறந்து விடப்பட்டிருக்கும் ஒரே “தீர்வு” அதிக சர்வாதிகாரம் மற்றும் அதிக ஆயுதமேந்துதல், பின்னர் விரிவாக்கம், பின்னர் போர் மற்றும் பயங்கரவாதம், பின்னர் கொள்ளை மற்றும் அடிமைப்படுத்தல். எப்போதும் இருக்கும் மாற்றீடு தகர்ந்து போவதும் குழப்பிப் போவதும், எனவே அனைத்து தீர்வுகளும் தற்காலிக, பரபரப்பான, தீர்வுக்கான அவ்வப்போதைய விவகாரங்களாகி, கொடூரமான கருப்பொருளைச் சுற்றி மேலும் மேலும் காட்டுமிராண்டித்தனமான முன்நகர்வுகளாக இருப்பது வெளிப்படையானதாகும்.

இன்று, முதலாளித்துவத்தின் ஆழமான பூகோள  நெருக்கடியானது, அதே இயக்கத்தை உருவாக்குகிறது அதிலிருந்து முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் எந்தக் கட்சியாலும் தப்பிக்க முடியாது.  1980 களின் முற்பகுதியில் தோன்றிய பசுமைவாதிகள், நடுத்தர தூர பெர்ஷிங் 2 அணு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தனர். இன்று அணு குண்டுக்கு உரத்த குரலில் அழைப்பு விடுக்கிறார்கள். சுரண்டல் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்தை தூக்கியெறியும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தினால் மட்டுமே இந்த முறைமையை தகர்த்தெறிய முடியும்.

Loading