முன்னோக்கு

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் இரண்டு ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஏப்ரல் 26, 2023 புதன்கிழமை அன்று உக்ரேனிய மற்றும் ரஷ்ய துருப்புக்களுக்கு இடையே கடுமையான போர்கள் நடந்த இடமான உக்ரேனின் பாக்முட்டில் உள்ள கட்டிடங்களில் இருந்து புகை எழுகிறது. [AP Photo/Libkos]

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 24, 2022 அன்று, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும், உக்ரேனை ஆக்கிரமிக்க ரஷ்யாவை தூண்டுவதில் வெற்றி பெற்றன. ரஷ்யாவை அரைக்-காலனி நிலைக்கு அடிபணியச் செய்து, யூரேசியப் பிரதேசத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், வாஷிங்டன், பேர்லின், லண்டன் மற்றும் பாரிஸ் நீண்ட காலமாக விளாடிமிர் புட்டினின் பிற்போக்கு தேசியவாத ஆட்சிக்கு எதிராக முழுமையான போரைத் தூண்டிவிட முயன்று வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் பாரிய படுகொலைக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடக்கின்ற இரத்தக்களரி யுத்தம் இதுவாகும். சுமார் அரை மில்லியன் உக்ரேனியர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். பொறுப்பற்ற முறையில் மோதலை தீவிரப்படுத்தி வருகின்ற அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியங்கள், போரின் விளைவுகளை முற்றிலும் அலட்சியப்படுத்துகின்றன. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பரஸ்பர அணுவாயுத தாக்குதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இதில் அடங்கும். இது மனிதகுலத்தின் உயிர்வாழ்வையே கேள்விக்குள்ளாக்கும்.

ரஷ்ய படையெடுப்பிற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, “புட்டின் அரசாங்கத்தின் உக்ரேன் படையெடுப்பையும் அமெரிக்க-நேட்டோ போர்வெறிக் கூச்சலையும் எதிர்ப்போம்! ரஷ்ய, உக்ரேன் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக நிற்போம்! ” என்ற அறிக்கையை வெளியிட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), அரசியல் ஸ்தாபனத்திலிருந்தும் ஊடகங்களிலிருந்தும் வெளிவரும் இடைவிடாத பிரச்சாரத்தை, இந்த மோதலை “புட்டினின் தூண்டப்படாத ஆக்கிரமிப்புப் போராக” சித்தரிப்பதை உறுதியாக நிராகரித்தது. இந்த போலிக் கதையின்படி, ஐரோப்பாவைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரேன் போருக்கு சூழ்ச்சி செய்யும் ரஷ்ய ஜனாதிபதியை ராணுவத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்பதாகும்.

சோவியத் யூனியனை கலைத்த ஸ்ராலினிச ஆட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி, ரஷ்யாவை சுற்றி வளைக்க நேட்டோவின் எல்லையை கிழக்கு நோக்கி விரிவுபடுத்துவதற்கான முறையான முயற்சிகளை 1990களில் இருந்து அமெரிக்கா வழிநடத்தி வந்தது. பின்னர், பிப்ரவரி 2014 இல், வாஷிங்டனும் பேர்லினும் மைதான் சதிக்கு நிதியுதவி செய்தன. இது முற்றிலும் பாசிச சக்திகளால் வழிநடத்தப்பட்ட தீவிர வலதுசாரி இயக்கமாகும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தூக்கியெறிந்து, கியேவில் மேற்கத்திய சார்பு கைப்பாவை ஆட்சியை நிறுவியது. இதற்கு பதிலடியாக, பொதுவாக்கெடுப்பை தொடர்ந்து ரஷ்யா கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்த மோதலின் பரந்த வரலாற்று வேர்களை ஆய்வு செய்து, ICFI பின்வருமாறு எழுதியது:

ரஷ்யாவுடனான தற்போதைய மோதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து அமெரிக்காவால் பின்பற்றப்பட்ட பூகோள அரசியல் மூலோபாயத்தின் விளைவாக இருக்கிறது. அதன் இலக்கானது, தனது பொருளாதாரச் வீழ்ச்சியை ஈடுகட்ட இராணுவ சக்தியைப் பயன்படுத்திவரும் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கம் ஆகும். ஈராக், சோமாலியா, சேர்பியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா மீதான படையெடுப்பு மற்றும்/அல்லது குண்டுவீச்சு உள்ளிட்ட, அமெரிக்காவால் தொடங்கப்பட்ட எண்ணற்ற மற்றும் முடிவற்ற தொடர் போர்களுக்கு இதுவே ஆதாரமாக உள்ளது. நிச்சயமாக, இந்த சட்டவிரோத போர்களின் கதை, இன்று ஊடகங்களில் குறிப்பிடப்படுவதில்லை.

தொடர்ந்து வந்த இரண்டு வருடங்கள் இந்த பகுப்பாய்வை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளன. ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் வலுவான ஆதரவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் மோதல் தீவிரமடைவதற்கு முதன்மையான ஆதாரமாக உள்ளது. ஏகாதிபத்தியவாதிகள் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் மற்றும் யூரோக்கள் பெறுமதியான அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை உக்ரேனுக்குள் செலுத்தி, பல்லாயிரக்கணக்கான கூடுதல் நேட்டோ துருப்புக்களை கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்து, ரஷ்யாவிற்கு எதிரான அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலுடன் உலகை அச்சுறுத்தியுள்ளனர். அதேநேரம், உள்நாட்டில் சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் ஏகாதிபத்திய போரைத் தொடுப்பதற்கு பாரிய இராணுவச் செலவு உயர்வுகளுக்கு உட்படுத்திய அவர்கள், சமூகத் திட்டங்களை அகற்றுவது, மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு எதேச்சாதிகார ஆட்சி வடிவங்கள் மற்றும் அதிதீவிர வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு வெளிப்படையான திருப்பம் ஆகியவற்றிற்கு அடிபணிந்தனர்.

“ஜனநாயகத்தைப்” பாதுகாப்பதில் தங்கள் உறுதியை திரும்பத் திரும்பப் பறைசாற்றும் ஏகாதிபத்திய சக்திகள், உக்ரேனில் உள்ள பாசிச சக்திகளுடன் குறிப்பாக, இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் யூனியனுக்கு எதிரான அழிவுப் போரிலும், இனப் படுகொலையிலும் பங்கேற்ற நாஜி ஒத்துழைப்பாளர்களின் அரசியல் சந்ததியினருடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன.

நேட்டோ சக்திகள் மற்றும் உக்ரேனின் பாசிச-ஆக்கிரமிப்பு இராணுவ மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்கு இடையே உள்ள நெருக்கமான கூட்டணி பற்றி தற்செயலான எதுவும் இல்லை. மாறாக, எட்டு தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் யூனியனுக்கு எதிரான நாஜிப் போரைப் போலவே, தற்போதைய மோதலும் கொள்ளை, சந்தைகள் மற்றும் புவிசார் மூலோபாய மேலாதிக்கத்திற்காக நடத்தப்படுகின்ற ஏகாதிபத்தியப் போர் என்ற யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த செப்டம்பரில் கனேடிய பாராளுமன்றம் மற்றும் பிற G7 உறுப்பு நாடுகளின் தூதர்கள் Waffen-SS மூத்த மற்றும் நாஜிப் போர் குற்றவாளியான யாரோஸ்லாவ் ஹன்காவிற்கு கனடாவின் பாராளுமன்றமும் மற்ற G-7 உறுப்பு நாடுகளின் தூதுவர்களும் அளித்த ஒருமித்த கைத்தட்டல் மூலம் இந்த உண்மை அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

ஏகாதிபத்திய அரசாங்கங்கள் உக்ரேனில் “ஜனநாயகத்தைப்” பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. உண்மையில், அவர்கள் ரஷ்ய கூட்டமைப்பைப் பிரிக்கவும், அதன் இயற்கை வளங்களைக் கைப்பற்றவும், அதன் மூலம் சீனாவுடன் இராணுவ மோதலுக்குத் தயாராகவும், தங்கள் விருப்பத்தின் ஒரு பகுதியாக உக்ரேனை தங்கள் செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வர விரும்புகிறார்கள். இந்த மூலோபாயத்தைத் தொடர, அவர்கள் போர்க்களங்களில் தியாகம் செய்த நூறாயிரக்கணக்கான இளம் உக்ரேனியர்களால் காட்டப்பட்டுள்ளபடி, கடைசி உக்ரேனியருடன் போரிட அவர்கள் தயாராக உள்ளனர்.

ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட பேரழிவுகரமான 2023 “தாக்குதலின்” போது 100,000 க்கும் அதிகமானோர் உட்பட, போர் தொடங்கியதில் இருந்து 500,000ம் உக்ரேனிய துருப்புக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பயங்கரமான மனித உயிர் இழப்புக்கு ஏகாதிபத்தியவாதிகளின் அலட்சியம், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு நிபந்தனையற்ற ஆதரவின் மூலம் பிரதிபலிக்கிறது. அங்கு கடந்த நான்கு மாதங்களில், 30,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், தீவிர வலதுசாரி நெதன்யாகு அரசாங்கத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரேனில் ரஷ்யாவுடனான போரை ஏகாதிபத்திய சக்திகள் பொறுப்பற்ற முறையில் விரிவுபடுத்துவதும், பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலுக்கு அவர்கள் கட்டுப்பாடற்று ஒப்புதல் அளித்து வருவதும், “விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு” (புட்டினின் “கொடுமைக்கு” மாற்றாக, பைடென், ஷோல்ஸ் மற்றும் பலர் ஆதரித்து வருவதை) உண்மையில் என்ன என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்க நிலைப்பாட்டைப் பாதுகாப்பது, கடந்த தசாப்தங்களாக அதன் பொருளாதார அடித்தளம் படிப்படியாக அழிந்து வருகிற நிலையில், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு ஏகாதிபத்திய உலகப் போர்களின் போது அனுபவித்த பயங்கரங்களை ஒத்த காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை நாடுவதன் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

ஏகாதிபத்திய அரசுகளின் ஆக்கிரோஷமான இரத்தம் தோய்ந்த மனப்பான்மை, புட்டின் ஆட்சியின் கொள்கைகளுக்கு எந்த முற்போக்கான உள்ளடக்கத்தையும் கொடுப்பது ஒருபுறமிருக்க, நியாயப்படுத்தாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ICFI வலியுறுத்தியது போல்:

1991ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவை ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் தடுக்க முடியாது. ரஷ்ய தேசியவாதம் என்பது விளாடிமிர் புட்டின் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆழமான பிற்போக்கு சித்தாந்தமாகும்.

உக்ரேனை ஆக்கிரமிப்பதில் புட்டினின் குறிக்கோள் ஏகாதிபத்தியத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கு சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதாக இருந்தது. ரஷ்யாவை அடிபணிய வைக்க ஏகாதிபத்தியங்களைத் தூண்டுகின்ற எந்தவொரு புறநிலை செயல்முறைகள் இருப்பதை அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். மாறாக, பாசிச அமெரிக்க பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன் உடனான சமீபத்திய நேர்காணலில் அவரது பரிதாபகரமான நடிப்பு வெளிப்படுத்தியதுபோல், வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் மூலம் “பல துருவ” சர்வதேச ஒழுங்கை உருவாக்குவதற்கு ஆதரவளிக்க முடியும் என்ற நிலையில், எல்லாமே ஒரு பெரிய தவறான புரிதல் என்று புட்டின் தொடர்ந்து நம்புகிறார்.

உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும், ஏகாதிபத்திய சக்திகளின் பெருகிய அழுத்தத்தையும் எதிர்கொள்ளும் ஊழல் நிறைந்த ரஷ்ய முதலாளித்துவ தன்னலக்குழுவின் பிரதிநிதியாக, போருக்கு புறநிலை காரணங்கள் இருப்பதை புட்டினால் ஒப்புக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்வதற்கு, அவரது ஆட்சியின் திவால்நிலையை மட்டும் அங்கீகரிக்காமல், ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களுக்கு சோவியத் யூனியனில் முதலாளித்துவ மறுசீரமைப்பு ஏற்படுத்திய பேரழிவு விளைவுகளையும் அங்கீகரிக்க வேண்டும். ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை விட, ரஷ்ய தன்னலக்குழுவிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, கீழிருந்து சமூக எதிர்ப்பு வெடிக்கும் என்ற அச்சத்தை இந்த ஒப்புக்கொள்ளுதல் எழுப்பும்.

பூகோள முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத முரண்பாடுகள், பெரும் வல்லரசுகளுக்கிடையே உலகம் ஒரு புதிய மறுபகிர்விற்கு தூண்டியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர், வேகமாக வளர்ச்சியடைந்துவரும் மூன்றாம் உலகப் போரின் ஒரு முன்னரங்காக மட்டுமே உள்ளது. இந்த மோதல், ஏகாதிபத்தியம் தனது புவிசார் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் அதன் நலன்களைப் பாதுகாப்பதற்கான எதிர்ப்புரட்சிகரப் போராட்டத்தின் வடிவத்தை எடுக்கிறது. வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் மற்ற முக்கிய இலக்குகள் மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தோ-பசிபிக் பகுதியில் சீனா ஆகும். அமெரிக்க மேலாதிக்கத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவுடனான போரின் வாய்ப்பு இனி ஒரு சாத்தியக்கூறு அல்ல. மாறாக, இது தவிர்க்க முடியாதது என விவாதிக்கப்படுகிறது.

ரஷ்யா மீது அமெரிக்க-நேட்டோ போர் வெடித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், உலக சோசலிச வலைத் தளம் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை, இந்த இரத்தக்களரியை உடனடியாக நிறுத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறது. மூன்றாம் உலகப் போரை ஏகாதிபத்தியவாதிகள் வெறித்தனமான விரிவாக்கி வருவதற்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தனது புத்தாண்டு அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டது:

முதலாளித்துவத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் முரண்பாடுகள், அதைத் தூக்கியெறிந்து, சமூகத்தை ஒரு புதிய மற்றும் முற்போக்கான அடிப்படையில், அதாவது சோசலிசத்தின் மறுசீரமைப்பிற்கான நிலைமைகளையும் அமைக்கின்றன என்ற வரலாற்று ரீதியாக சரிபார்க்கப்பட்ட உண்மை இல்லாமல், மனிதகுலத்திற்கான வாய்ப்புகள் இருண்டதாக இருக்கும். இந்த மறுசீரமைப்பிற்கான சாத்தியம் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இருப்பில் வேரூன்றியுள்ளது. வர்க்கப் போராட்டம் என்பது சோசலிச மறுசீரமைப்பின் புறநிலை சாத்தியத்தை நடைமுறையில் உணரும் வழிமுறையாகும்.

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளின் அவசரப் பணி, இந்த புறநிலை செயல்முறையை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் மனதில் நனவாக மாற்ற வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படையாக அது செயல்படும். இந்த இயக்கமானது, ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாளர்களையும், கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களால் குறிவைக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களையும் ரஷ்யா, உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ தங்கள் நலன்களை ரஷ்யா மீது திணிக்க விரும்புவதற்கு அடிப்படைக் காரணமான முதலாளித்துவ இலாப முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டமே அவர்களின் பொதுவான இலக்காக இருக்க வேண்டும். 1917 ஆம் ஆண்டு, போல்ஷிவிக் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் சோசலிச மற்றும் சர்வதேச மரபுகளின் மறுமலர்ச்சி மூலம், ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள தன்னலக்குழு ஆட்சிகளுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், தவிர்க்க முடியாத எதிர்ப்பை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

Loading