இலங்கையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் சமகால பொருத்தம் பற்றி கலந்துரையாடுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பெப்ரவரி 21 அன்று, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் “கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய கற்கை” என்ற தலைப்பில் விரிவுரை ஒன்றை நடத்தவுள்ளன.

இந்த வார நிகழ்வை விளம்பரப்படுத்த, ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் சோ.ச.க. உறுப்பினர்கள் மாணவர்களுடன் நேரிலும் இணையவழியாகவும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் 176 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் எழுதியுள்ள இந்த வரலாற்று ஆவணத்தின் உள்ளடக்கங்களைப் புரிந்துகொள்வதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர் இலங்கையின் கண்டியில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பேசுகிறார்

சோ.ச.க. பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கத்தின் அனுசரணையில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்துள்ள தொடரின் இரண்டாவது விரிவுரையை வழங்குவார்.

மாணவர்களின் சில கருத்துக்களை கீழே வெளியிடுகிறோம்.

இரண்டாம் ஆண்டு அரசியல் விஞ்ஞான மாணவியான தனோசா, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வேலையின்மை மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் மோசமான சமூகப் பிரச்சனைகளை விளக்கித் தொடங்கினார்.

“பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. தங்குமிடம், உணவு மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு நாங்கள் பணம் செலுத்த வேண்டும். ஆனால் மஹாபொல புலமைப்பரிசில் மாதாந்த 5,000(16அ.டொ) ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை. இந்த சொற்ப தொகையை கூட சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. எங்களின் தினசரி சாப்பாட்டின் விலை 500 ரூபாய்

“நாங்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை மற்றும் எங்களுக்கு முந்திய பட்டதாரிகள் இப்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை வேலையின்மை தான். நான்கு வருட படிப்பை முடித்த பிறகு நல்ல தொழில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

“இலங்கையில் மாணவர்கள் உட்பட பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், எனவே மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் சோசலிச முன்னோக்கு, குறிப்பாக அவர்களின் சமூக சமத்துவம் பற்றிய கருத்து, முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் முக்கியமானது. சமூக சமத்துவம் இருந்தால் சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

“நான் இந்த விரிவுரைக்கு வந்து கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் எங்கல்ஸின் படைப்புகளைப் படிக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் பகுப்பாய்வு பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. சமத்துவத்திற்காக எவ்வாறு போராடுவது என்பதை நாம் கற்றுக் கொள்ள அவர்களின் முன்னோக்கைப் படிக்க வேண்டும். மற்ற அறிவார்ந்த இளைஞர்களும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணைந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”

தொல்லியல் துறை மாணவியான ஹிருணி கூறியதாவது: நாங்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எனக்கு தெளிவான புரிதல் இல்லாததால், உங்களைச் சந்திப்பதற்கு முன்பு நான் நிலைமை குறித்து மிகவும் அவநம்பிக்கையுடன் இருந்தேன்.

“வறுமை, வேலையின்மை, பொதுக் கல்வி மீதான தாக்குதல், ஜனநாயக உரிமைகளை நசுக்குதல் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரேனில் இரத்தக்களரி போர்கள் போன்ற பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். கம்யூனிஸ்ட் அறிக்கை மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய உங்கள் விளக்கத்தைக் கேட்ட பின், நான் ஒரு பகுத்தறிவுப் பாதையை முன்னோக்கிப் பார்க்கிறேன், அது என்னை நம்பிக்கையடையச் செய்துள்ளது.

“இதுவரைக்குமான அனைத்து சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எனக்கு ஒரு புதிய திசையைக் காட்டியது. முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு நாம் மார்க்சியத்தைப் படிக்க வேண்டும், இது நான் ஆதரிக்கும் ஒரு முயற்சியாகும், எனவே நான் விரிவுரையில் கலந்துகொள்வதுடன் எனது சக மாணவர்கள் அனைவரையும் வருமாறு அழைப்பேன்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர் கொழும்பு கண்டியில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசுகிறார்.

தொல்லியல் மாணவரான சமாதி பின்வருமாறு கூறினார்: “நான் வெல்லஸ்ஸவைச் சேர்ந்தவள் [ஊவா மாகாணத்தின் தொலைதூரப் பகுதி]. இந்த பகுதியில் மிகவும் ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர், ஆனால் அவர்களின் தேவைகள், அவர்களின் உரிமைகள் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க உண்மையான இயக்கம் இல்லை.

“இந்த ஏழை கிராமங்களில் பிறந்து வளரும் இளைஞர்கள் திறமையும் பயிற்சியும் நிறைந்தவர்கள், ஆனால் தங்களை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்போ அல்லது களமோ இல்லை. மேலும் அவர்கள் தொடர்ச்சியான பொலிஸ் அடக்குமுறையையும் எதிர்கொள்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி கற்க உந்துதல் பெறவில்லை.

“நான் உயர்கல்விக்காக பல்கலைக்கழகத்திற்கு வந்தாலும், பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை கிடைக்குமா என்பது குறித்து எனக்கு நிச்சயமில்லை. குறிப்பாக இந்நாட்டில் தொல்லியல் துறைக்கான ஒதுக்கீட்டில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாரியளவிலான வெட்டுக்களால் தொல்லியல் கற்கும் எமக்கு வேலை கிடைப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. முதலாளித்துவத்தை சோசலிசத்துடன் பதிலீடு செய்வதன் மூலம் மட்டுமே நமது குறைகளை நிரப்ப முடியும் என்று நான் நினைக்கிறேன்.

மற்றொரு தொல்லியல் மாணவி ஷஷினி,கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய உங்கள் விளக்கத்திலிருந்து நான் புரிந்துகொள்வது என்னவென்றால், இந்த சமுதாயத்தில் முதலாளிகள் தங்கள் செல்வத்தை வளப்படுத்த தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் . இந்த விஷயங்களைப் பற்றி எங்களுக்கு வழிகாட்டும் மற்றும் கல்வி கற்பிக்கும் ஒரு இயக்கத்தை நான் சந்திப்பது இதுவே முதல் முறை, எனவே ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” எனக் கூறினார்.

விவசாய பீட மாணவர் கோஷி, “காசா மற்றும் உக்ரேன் போர்கள் நாளுக்கு நாள் ஆழமடைந்து பரவி வருகின்றன. இது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பெரும் சக்திகளுக்கு இடையே மிகவும் கடுமையான மோதலை நோக்கி அபிவிருத்தி அடையலாம். இது மனிதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் அழித்துவிடும். பிரச்சனை என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தி மற்றும் ஆற்றலைப் பற்றியும் அது தலையிட்டு போரை நிறுத்த முடியும் என்பதையும் நாம் அறிந்திருக்கவில்லை,” எனத் தெரிவித்தார்.

“மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதிய 175 ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் இப்போது எதிர்கொள்ளும் பல ஆபத்துகள் குறித்து ஏற்கனவே எச்சரித்துள்ளனர் என்பதை உணர கடினமாக உள்ளது. இந்த விஷயத்தைப் பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால், நான் அதைப் படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” என்றும் அவர் கூறினார்.

பெப்ரவரி 16 அன்று ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்த ஒரு இணையவழி கலந்துரையாடலில், மூன்றாம் ஆண்டு கலைப் பீட மாணவியான அனோயா, “தொழிலாளர் வர்க்கத்திற்கு கல்வி ஊட்டுவதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கையின் கருத்துக்கள் முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தொழிலாள வர்க்கத்தின் உழைப்பின் மூலம் எவ்வாறு இலாபம் பெறப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் சோ.ச.க. ஏன் பல்கலைக்கழக மாணவர்களிடையே மட்டும் தலையிடுகின்றன, தொழிலாள வர்க்கத்தின் தலையிடுவது இல்லை? என கேட்டார்.

சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள், இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச அளவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில் தொழிலாள வர்க்கத்தினரிடையே தனது கொள்கைகளுக்காக எமது இயக்கம் எவ்வாறு தொடர்ந்து போராடுகிறது என்பதை விளக்கினர்.

“எங்கள் முன்னோக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கியுள்ளது. இது கம்யூனிஸ்ட் அறிக்கை சுட்டிக்காட்டுவது போல், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சமூகத்தில் சக்திவாய்ந்த மற்றும் தீர்க்கமான புரட்சிகர சமூக சக்தியாகும். எவ்வாறாயினும், புரட்சிகர நனவு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஒற்றுமை ஆகியவை தன்னிச்சையாக வளர்ச்சியடைவதில்லை.

“தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிலிருந்து அதிகாரத்தைப் பெற அவர்களுக்கு கல்வி ஊட்டுவதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் ஒரு புரட்சிகரக் கட்சி தேவை. இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள இளைஞர்களும் மாணவர்களும் அந்த செயல்முறையில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்க முடியும்,” என்று சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ பிரச்சாரகர்கள் விளக்கினர்.

உண்மையான மார்க்சிஸ்ட் கட்சிகளிலிருந்து போலி மார்க்சிஸ்ட் அமைப்புகளை தொழிலாளர்களும் மாணவர்களும் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க முடியும்? என்று அனோயா கேட்டார்.

உண்மையான மார்க்சிஸ்ட் கட்சிகள் சர்வதேசியம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை விளக்குவதன் மூலம் கட்சி பிரச்சாரகர்கள் பதிலளித்தனர். போலி-இடது அமைப்புகள் மார்க்சிய சொற்றொடரைப் பயன்படுத்தினாலும், அவை வரலாற்றின் பொருள்முதல்வாதக் கருத்தையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும் நிராகரிக்கின்றன. அவர்களின் முன்னோக்கு முதலாளித்துவ அமைப்பிற்குள், செல்வத்தின் மிகவும் சாதகமான பகிர்வைத் தேடுவதே தவிர, அதைத் தூக்கியெறிவதல்ல.

இந்தக் கேள்விகள் மற்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை மற்றும் சோசலிச சர்வதேசியத்திற்கான போராட்டம் பற்றி அவர்களிடம் உள்ள ஏனைய கேள்விகளைப் பற்றி கலந்துரையாட இந்த வார விரிவுரையில் கலந்து கொள்ளுமாறு மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கல்விமான்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: விரிவுரை மண்டபம் எண். 86, அரசியல் அறிவியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

நாள் மற்றும் நேரம்: பெப்ரவரி 21 மாலை 3.00 மணி.

Loading