பேராதனை பல்கலைக்கழகத்தில் இலங்கை IYSSE நடத்தும் பகிரங்க விரிவுரை: "கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய ஒரு கற்கை"

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, பெப்ரவரி 21 அன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 'கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய ஒரு கற்கை' என்ற தலைப்பில் ஒரு பகிரங்க விரிவுரையை நடத்தவுள்ளது. இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர விரிவுரையை வழங்குவார்.

இந்த நிகழ்வை வளாகத்தில் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்துள்ளமைக்காக பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள அரசியல் விஞ்ஞானத் துறை மாணவர் சங்கத்திற்கு ஐ.வை.எஸ்.எஸ்.இ. நன்றி தெரிவிக்கிறது.

'வரலாற்று பொருள்முதல்வாதத்திற்கு ஒரு அறிமுகம்' என்ற தலைப்பிலான இரண்டாவது விரிவுரை கடந்த ஆண்டு நடைபெற்றது. 'சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் வரலாற்று வேர்கள்' மற்றும் 'உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி' ஆகிய தலைப்பிலான ஏனைய விரிவுரைகளுக்கான திகதிகள் மற்றும் நேரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 21 பெப்ரவரி 1848 அன்று வெளியிடப்பட்டதுடன் 1848 புரட்சிகர அலை கண்டம் முழுவதும் வெடித்த நிலையில் ஐரோப்பா முழுவதும் அது விநியோகிக்கப்பட்டது. இதுவே உலக சோசலிச இயக்கத்தின் அடித்தளக் கோட்பாடுகளை வகுத்தது. அடுத்தடுத்து உருவான அகிலங்களும் நான்காம் அகிலமும் தங்கள் அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளை இதன் அடிப்படையிலேயே அபிவிருத்தித செய்தன.

கம்யூனிஸ்ட் அறிக்கையானது, 'இதுவரைக்குமான அனைத்து சமூகத்தின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்' என்ற பிரகடனத்துடன் பிரபலமாகத் தொடங்கி, 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!' என்ற வார்த்தைகளுடன் முடிவடைகிறது.

அறிக்கையானது வரலாறு மற்றும் வர்க்கப் போராட்டம் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தை அறிமுகப்படுத்துகிறது. நிச்சயமான சமூக வர்க்கங்களின் தோற்றமும் இருப்பும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் ஒரு நிச்சயமான கட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை அதன் ஆசிரியர்கள் விளக்குவதோடு, முதலாளித்துவ சமூகம் தொடர்பாக இதை திட்டவட்டமான முறையில் நிரூபித்துள்ளனர். உற்பத்தி சக்திகளின் அபரிமிதமான முன்னேற்றமும் முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்திச் சாதனங்களின் உலகளாவிய மையப்படுத்தலும், விரைவில் அந்த சமூக உறவுகளை காலாவதியாக்கி, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் சுரண்டலற்ற ஒரு பகுத்தறிவான, வர்க்கமற்ற மனித சமுதாயத்தை ஸ்தாபிப்பதற்கும் புறநிலை அடிப்படையை உருவாக்குகிறது.

இந்த சகாப்தத்தை மாற்றும் வரலாற்றுப் பணிக்கு, தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கும் தயாரிப்பதற்கும் என்ன தேவைப்படுகிறது என்பதில் அறிக்கை கவனத்தை ஈர்ப்பதுடன் 'பாட்டாளி வர்க்கத்தை ஒரு வர்க்கமாக ஒழுங்கமைத்தல் மற்றும் அதன் விளைவாக ஒரு அரசியல் கட்சியாக ஒழுங்கமைத்தல்' பற்றிய பிரச்சனைகளை கலந்துரையாடியுள்ளது.

உலக முதலாளித்துவத்தின் முறிவை வெளிப்படுத்திய முதலாம் உலகப் போரின் வெடிப்பும், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக் கட்சியால் வழிநடத்தப்பட்ட 1917 ரஷ்யப் புரட்சியின் வெற்றியும் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் வரலாற்று ஆவணத்தின் வரலாற்று ஏற்புடமையை நிரூபித்தன.

மீண்டும் ஒருமுறை, உலக முதலாளித்துவ அமைப்பு ஆழ்ந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா, பூகோளத்தை உலகளாவிய பேரழிவை நோக்கி இழுத்துச் செல்கின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கம் இப்போது ஆழ்ந்த வர்க்கப் போராட்டங்களுக்குள் நுழைவதுடன் இது காலாவதியான இந்த முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிய புரட்சிகர வாய்ப்புகளை வழங்கும். இந்த பணிக்கு தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் தயார்படுத்துவதே காலத்தின் தேவை ஆகும். இந்த தயாரிப்பிற்கு கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய கற்கை அவசியமாகும்.

கம்யூனிஸ்ட் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை விளக்கும் இந்த விரிவுரையில் கலந்துகொள்ளுமாறும், இந்த தீர்க்கமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கல்விமான்களுக்கு ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கிறது.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையை பாரதூரமானதாக எடுத்துக்கொள்வதால் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரையும் தங்களதும் மற்றவர்களதும் சுகாதார பாதுகாப்பிற்காக KN95 முககவசங்களை அணியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

இடம்: விரிவுரை மண்டபம் எண். 86, அரசியல் விஞ்ஞானத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

நாள் மற்றும் நேரம்: பெப்ரவரி 21 மாலை 3.00 மணி.