முன்னோக்கு

காஸா இனப்படுகொலையை ஆதரிக்கும் பிரிட்டன் அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீது போர் தொடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

வியாழக்கிழமை, பிரதமர் ரிஷி சுனக் ஒரு நிமிட வீடியோ அறிக்கையை வெளியிட்டு, காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்குவதாக உறுதியளித்தார்.

சொந்த கைகளில் இரத்தக் கறையுடனிருக்கும் சுனக், “யூத எதிர்ப்பு, வன்முறை மிரட்டல் மற்றும் பயங்கரவாதத்தை போற்றிப்புகழ்தல் ஆகியவைகளின் அவமானகரமான எடுத்துக்காட்டுகள்” என்று போராட்டக்காரர்களைக் கண்டித்தார். “நமது வீதிகளில் ஒழுங்கைக் கொண்டுவர அவர்களுக்கு என்ன அதிகாரங்கள் தேவை என்று போலிஸிடம் கேட்டதாக” அவர் அச்சுறுத்தினார்.

தீப்பிழம்புகளை மூட்டுதல் மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஆர்ப்பாட்டங்களுக்கும், முகங்களை மறைத்தல், போர் நினைவுச் சின்னங்களில் ஏறுதல் ஆகியவைகளுக்கு எதிராக ஆரம்ப நடவடிக்கைகளை அறிவித்த அவர், “எதிர்ப்பு தெரிவிப்பதற்கான தங்கள் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பையும் நமது ஜனநாயக விழுமியங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள். இந்த மிரட்டல் மற்றும் அதிர்ச்சியளிக்கும் நடத்தையை ஒடுக்குவதற்கு போலிசிற்கு தேவையான அதிகாரங்களை நான் வழங்குவேன்.”

இவை ஒரு போலிஸ் அரசுக்கு தகுதியான கருத்துக்களாகும். பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் நிர்மூலமாக்கும் போருக்கு ஆளும் உயரடுக்கின் ஆதரவின் பின்விளைவாக, பிரிட்டனில் ஜனநாயக உரிமைகள் மீதான மேலதிக தாக்குதலை அவை சமிக்கை செய்கின்றன.

ஆர்ப்பாட்டப் போராட்டம் நடந்ததைத் தொடர்ந்து, முன்கூட்டியே கலைக்க அழைப்பு விடுத்ததனால், வையிட்ஹாலில் போலீசார் ஒன்றுதிரண்டுள்ளனர். 

“பாரபட்ச வெறுப்புக் குற்றம்” மற்றும் “பயங்கரவாத-எதிர்ப்பு” சட்டத்தின் கீழ் சமீபத்திய மாதங்களில் நடத்தப்பட்ட கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள், எதிர்க்கட்சியான தொழிற்கட்சியால் முழுமையாக ஆதரிக்கப்படும் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் வலதுசாரி, சர்வாதிகார திட்டநிரலை தெளிவுபடுத்துகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் — அனைவரும் காஸாவிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள்— அதாவது பத்திரிகையாளர் கிரேக் முர்ரே; பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக் குழுவின் இணை நிறுவனர் டோனி கிரீன்ஸ்டைன்; ஸ்காட்டிஷ் பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக் குழுவின் நிறுவனர் மிக் நேப்பியர்; மற்றும் பெரிய பிரித்தானியா கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), புரட்சிகர கம்யூனிஸ்ட் குழு மற்றும் சர்வதேச மார்க்சிச போக்கின் உறுப்பினர்கள் ஆவார்கள். பலரின் வீடுகள் சோதனையிடப்பட்டு மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடுமையான ஜாமீன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கைதுகள் வெறுமனே இடது போக்குகளின் உறுப்பினர்களை இலக்கு வைக்கும் அரசியல் மிரட்டல் நடவடிக்கைகள் மட்டுமல்ல. சுனக் அறிவித்த வகையிலான அரசியல் ஒடுக்குமுறையின் இன்னும் பரந்த நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக லண்டனில் நடந்த எதிர்ப்புக்களில் நடந்த கைதுகள், ஒரு நவீன மற்றும் செலவுமிக்க அரசாங்க கண்காணிப்பு முறையை நம்பியுள்ளன. “இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடந்து வரும் மோதல் மற்றும் இலண்டன் மீதான அதன் தாக்கத்திற்கு” மெட்ரோபொலிட்டன் பொலிஸின் பதிலுக்காக, “ஆபரேஷன் புரோக்ஸ்” க்காக இதுவரை சுமார் 22 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரதான ஆர்ப்பாட்டத்தின் போதும், முக அடையாளம் காணும் கருவியுடன் கூடிய சிசிடிவி, போலிஸ் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரகசிய அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல்கள் லம்பெத்திலுள்ள சிறப்பு நடவடிக்கை அறைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன, அங்கு போலிஸ் கிரவுன் குற்றவழக்குத் தொடர்புச் சேவையில் இருந்து மூத்த வழக்குத்தொடுனர் வழக்கறிஞர்களுக்கு அவர்களின் சொந்த செயல்பாட்டு மேசையை வழங்கியுள்ளது. வெறுப்பு குற்றங்கள் மற்றும் ஊடகம் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான உள்துறை செயலாளரின் முன்னணி சிறப்பு ஆலோசகர்களுக்கும் வாராந்திர அணுகல் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பிய ஒரு பகிரங்க கடிதம், இந்த “குற்றச்சாட்டு மற்றும் வழக்குத் தொடுப்பு செயல்முறையை முன்கூட்டியே ஏற்றுவது” குறித்து “தீவிர கவலைகளை” எழுப்புகிறது, இது “... பெருநகர காவல்துறையால் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.”

இதன் நோக்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்பையும் காஸாவில் இனப்படுகொலைக்கு அது கொடுக்கும் ஆதரவை சட்டவிரோதமாக்குவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களை உதாரணமாக்கி மில்லியன் கணக்கான மக்கள் கொண்டுள்ள கருத்துக்களை குற்றமாக்குவதாகும். ஆழமான ஜனநாயக-விரோத பயங்கரவாத-எதிர்ப்பு சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கையாளர்களை உளவுபார்ப்பு, துன்புறுத்தல், தணிக்கை மற்றும் கைது ஆகியவற்றிற்கு உட்படுத்தி, இடதுசாரி அரசியலை “தீவிரவாதமாக” முத்திரை குத்துவதே இந்தப் பிரச்சாரத்தின் ஒரு முக்கிய பாகமாக உள்ளது.

இத்திட்டங்களைத் தயாரிப்பதில் பல ஆண்டுகள் செலவாகி விட்டன; இவை இப்பொழுது தீவிரப்படுத்தப்பட்டு, வெடிப்புத்தன்மை நிறைந்த சமூக, பொருளாதார நெருக்கடிக்கு இடையே இஸ்ரேலின் போர் பற்றிய எதிர்ப்பின் வெடிப்பை மையமாகக் கொண்டுள்ளன.

2019 ஆம் ஆண்டில், பிரிட்டன் அரசாங்கத்தின் தீவிரவாதத்தை எதிர்க்கும் ஆணையம் “வன்முறை தீவிரவாத தந்திரோபாயங்கள் மற்றும் குறுங்குழுவாத தீவிர இடதுசாரிகளின் சித்தாந்தம்” குறித்த அறிக்கையை வெளியிட்டது.

“புரட்சிகர தொழிலாளர்” மனோநிலையை “தீவிரவாதம்” என்று அறிவித்த அந்த அறிக்கை, “ஜனநாயகத்திற்கான மிகப் பெரும் அச்சுறுத்தல் எப்போதும் அதிவலதிடம் இருந்து வந்துள்ளது,” “சியோனிசம் இனவாதத்தின் ஒரு வடிவமாகும்,” “பிரதான செய்தித்தாள்களும் தொலைக்காட்சி சேனல்களும் ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்க பொய்களைக் கூறுகின்றன” மற்றும் “அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது உலகை ஒரு சிறந்த இடமாக ஆக்குகிறது” போன்ற நம்பிக்கைகளை எடுத்துக்காட்டுகளாக பட்டியலிட்டது.

“[அதி-இடது குறுங்குழுவாத குழுக்களின்] நம்பிக்கைகள் நம்பத்தகுந்த வகையில் வழங்க முடியும்... சட்டத்தை மீறுவதற்கான ஒரு உந்துதல்,” உட்பட “ஆபத்தான... பயங்கரவாத நடவடிக்கைகள்.”

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில், தீவிரவாதம் குறித்த பயங்கரவாத எதிர்ப்பு போலிஸ் “வழிகாட்டுதல் ஆவணம்” வெளிகொண்டுவரப்பட்டது, அதில் பாசிசவாத பயங்கரவாத குழுக்களுடன் சேர்ந்து சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), சோசலிஸ்ட் கட்சி (SP), போரை நிறுத்துக் கூட்டணி (Stop the War Coalition) மற்றும் கிளர்ச்சி அணைப்பு (Extinction Rebellion) போன்ற குழுக்களும் உள்ளடங்கி இருந்தன.

2021 ஆம் ஆண்டில், முன்னாள் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜான் உட்காக் நடத்தும் “இடதுசாரி தீவிரவாதம்” குறித்த மதிப்பாய்வை அரசாங்கம் அறிவித்து, அவர் தொழிற்கட்சியில் இருந்து இராஜினாமா செய்த பின்னர் டோரிக்களால் நியமிக்கப்பட்டார், மேலும் அப்போதைய தலைவர் ஜெர்மி கோர்பின் “பிரதம மந்திரியாக வந்தால் பிரிட்டன் தேசிய பாதுகாப்புக்கு ஒரு தெளிவான ஆபத்தை ஏற்படுத்துவார்” என்று வலியுறுத்தினார்.

வூட்காக் குறிப்பாக சோசலிச தொழிலாளர் கட்சியை (SWP) ஓர் அச்சுறுத்தலாக பெயரிட்டதுடன், “முற்போக்கான தீவிரவாதத்தின் —அதாவது, முற்போக்கான காரணங்களின் பெயரில் நடத்தப்படும் ஏற்றுக்கொள்ளவியலாத இடையூறு அல்லது வன்முறையையும் கூட— பிரிட்டனில் ஒரு இடைவெளி” இருப்பதைக் குறித்து எச்சரித்தார்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், சமூகங்களுக்கான செயலாளர் மைக்கேல் கோவ் “வன்முறையற்ற தீவிரவாதம்” மீதான ஒரு மீளாய்வை இறுதி செய்வதற்கு நெருக்கமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது, இது “பிரிட்டன் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறை, அதன் நிறுவனங்கள் மற்றும் மதிப்புகளை தூக்கியெறிய அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு சித்தாந்தத்தையும் ஊக்குவிப்பது அல்லது முன்னேற்றுவது” அல்லது “தனிநபர்களின் உரிமைகளை அச்சுறுத்துவது அல்லது தீவிரமயப்படலுக்கான ஒரு அனுமதிக்கப்பட்ட சூழலை உருவாக்குவது” என்று வரையறுக்கப்படும். வெறுக்கத்தக்க குற்றம் மற்றும் பயங்கரவாதம்.”

இந்த மூடிமறைக்கப்பட்ட வரையறைகள், காஸா ஆர்ப்பாட்டங்களுக்கும் மற்றும் முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான பரந்த எதிர்ப்பிற்கும் திட்டமிடப்பட்டுள்ள பரந்த ஒடுக்குமுறையையும் தெளிவுபடுத்துகின்றன.

தொழிற்கட்சி சகாக்களால் எதிரொலித்த அரசாங்க மந்திரிகள், கடந்த அக்டோபரில் முதலாவது தேசிய ஆர்ப்பாட்டத்தில் இருந்தே இதைத்தான் கோரி வருகின்றனர்.

போலீசார் ஆரம்பத்தில் அத்தகைய நேரடித் தாக்குதலை நடத்துவதை தவிர்த்தது, ஜனநாயக உரிமைகள் மீதான எந்தவொரு அக்கறையினாலும் அல்ல, மாறாக அரசியல் மற்றும் சட்டமன்ற தயாரிப்புகள் இன்னும் செய்யப்படவில்லை என்ற அச்சத்தினால் ஆகும். அவ்வாறு அவர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்தனர், பிரதமரும் செவிமடுத்துள்ளார். வியாழக்கிழமை சுனக்கின் உரை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள போலிஸ்-அரசு நடவடிக்கைகளை விரைவாக விரிவுபடுத்துவதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் ஆளும் வர்க்கம் வழங்கும் என்பதற்கான ஒரு சமிக்கையாகும்.

அனைத்திற்கும் மேலாக, இதுவரையில் போரை-நிறுத்து இயக்கத்தின் மீது வைக்கப்பட்டிருந்த பிரதான கட்டுப்பாடு —போரை நிறுத்து கூட்டணி (Stop the War Coalition) என்ற அதன் இப்போதைய தலைமையின் முன்னோக்கு நலிந்து வருகிறது என்ற உண்மையை அங்கீகரிப்பதாகும். இனப்படுகொலையை நிறுத்துவதற்கு ஒரு வழியைத் தேடும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்கட்சி, மற்றும் தொழிற்சங்கங்கள், அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு முறையீடு செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பதானது இஸ்ரேலின் பெருகிய தாக்குதலுக்கு முன்னால் பயனற்றவை என்று நிரூபணமாகியுள்ளன.

இந்த சக்திகளின் திவால்நிலைமையானது, கடந்த ஆண்டின் வேலைநிறுத்த அலையின் போது மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் இன்றியமையாத அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது, ஸ்டார்மரின் தொழிற்கட்சி அவர்களுக்கு எதிராக பகிரங்கமாக வெளிப்பட்டதையும், தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒன்றன்பின் ஒன்றாக போராட்டங்களை விற்றுத்தள்ளியதையும் அவர்கள் கண்டனர்.

ஆளும் வர்க்கம் அதன் தொழில்துறை மற்றும் அரசியல் போலிஸ் படையாக செயல்பட தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தைத்தான் நம்பியுள்ளது. தொழிற்கட்சியானது வலதுசாரி தொடங்கிய ஒரேயொரு தாக்குதலை எதிர்த்துப் போராட மறுத்துள்ள கோர்பின் போன்ற “இடது” பிரதிநிதிகள் உட்பட, அது மதிப்பிழந்திருப்பது, அதன் கட்டுப்பாட்டிற்கு வெளியே வெடிப்பார்ந்த வர்க்க மோதல்களுக்கான சாத்தியக்கூற்றை எழுப்புகிறது என்பதை அவர்கள் அறிவார்கள்.

போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் முன்பினும் பரந்த பிரிவுகள், குறிப்பாக அதன் இளைய தலைமுறையினர், போராட்டத்திற்கான புதிய வழிகளைத் தேடுவதை எதிர்பார்த்து, அரசு காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்கு தயாரிப்பு செய்து வருகிறது.

காஸா போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்பு கூட, பிரிட்டன் அரசாங்கம் சர்வாதிகார போலிஸ், குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்றச் சட்டம் (2022) மற்றும் பொது ஒழுங்கு சட்டம் (2023) ஆகியவற்றை நிறைவேற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை அகற்றி இருந்தது, இதன் கீழ் கடந்த ஆண்டு வெறும் ஐந்து வாரங்களில் நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இவற்றைத் தொடர்ந்து வேலைநிறுத்தங்கள் (குறைந்தபட்ச சேவை மட்டங்கள்) சட்டம் (2023) வந்தது, இது வேலைநீக்கங்களை  எதிர்கொள்கையில் மறியல் போராட்டங்களைக் கடந்து செல்ல தொழிலாளர்களை நிர்பந்திப்பதன் மூலமாக பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகளில் வேலைநிறுத்தங்களை உடைப்பதற்கான கருவிகளை முதலாளிகளுக்கு வழங்கியது.

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன இயக்கம் பொலிஸ் அரச ஆட்சியை நோக்கிய இந்த நகர்வுகளை துரிதப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் இனப்படுகொலை போரின் எதிர்ப்பாளர்களை யூத எதிர்ப்பாளர்கள் என அவதூறு செய்யும் ஒரு இடைவிடாத பிரச்சார நடவடிக்கையின் மத்தியில், பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் இதே பிரச்சினைகளை தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்கின்றனர். தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச, சோசலிச, போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவே இது பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதுபோன்றதொரு இயக்கம் மட்டுமே இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுத்து ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிரான போருக்கு தயாரிப்பு செய்து வருகின்ற ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்குகளை எதிர்த்துத் தோற்கடிக்க முடியும்.

Loading