பிரித்தானிய ஆளும் உயரடுக்கு, கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் போர் வரவு செலவுத் திட்டத்தில் கூர்மையான அதிகரிப்புக்கு அழைப்பு விடுக்கின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“தேசத்தை போருக்கு அணிதிரட்டவும்”, மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கமான இராணுவ எண்ணிக்கையை 120,000 ஆக அதிகரிக்கவும் மற்றும் 500,000 “குடிமக்கள் இராணுவத்தை” உருவாக்கவும் அரசாங்கம் தயாராக வேண்டும் என்ற பிரிட்டிஷ் இராணுவத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸின் அழைப்பை ஆதரிக்கும் அறிக்கைகளால் பிரிட்டனின் ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன. பல அறிக்கைகள் வெளிப்படையாக கட்டாய ஆட்சேர்க்கைக்கான ஆதரவை உள்ளடக்கியிருந்தன.

ஆகஸ்ட் 11, 2022 அன்று நடந்த பயிற்சி முடித்து வெளியேறும் இராணுவ அணிவகுப்பில் பேட்ரிக் சாண்டர்ஸ் சல்யூட் அடிக்கிறார் [Photo: Corporal Rebecca Brown RLC / Open Government License v.3.0]

இத்தகைய அழைப்புகளுடன் வரும் தலைப்புச் செய்திகள் இந்தக் காலத்தின் அடையாளமாக இருக்கின்றன: தி சன் (The Sun) பத்திரிகையில் “மூன்றாவது உலகப் போர் நடக்குமா?” மற்றும் “நான் இங்கிலாந்தில் மூன்றாவது உலகப் போருக்கு தயாராக வேண்டுமா?, டெய்லி எக்ஸ்பிரஸில் (Daily Express) “மூன்றாம் உலகப் போரில் போரிட நீங்கள் தயாரா?”; டெய்லி மிரரில் (Daily Mirror) “மூன்றாம் உலகப் போர்: திகிலூட்டும் ஐந்து அறிகுறிகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அனைத்தும் உலகளாவிய அமைதியின்மைக்கு மத்தியில் மோதலையும் நோக்கி செல்கின்றன”.

இந்தக் அனைத்துக் கட்டுரைகளும் நேட்டோ சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பெரிய மோதல் தவிர்க்க முடியாதது என்றும், இது அணு ஆயுத யுத்தத்தின் சாத்தியத்தை அதிகரிக்கிறது என்றும், மேலும் தொழிலாள வர்க்கம் தேவையான உயிர்த்தியாகங்களைச் செய்யவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றன. சாண்டர்ஸின் வார்த்தைகளில், போருக்கு முந்தைய தலைமுறையின் தலைவிதி இதுதான், இப்போது போருக்குப் பிந்தைய சமாதான ஈவுத்தொகை முடிந்துவிட்டது.

கடைசி நாட்களில் நடந்த நிகழ்வுகளைப் வைத்துப் பார்க்கும்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரின் சுழலில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஜனவரி 22 அன்று, பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்ஸ் டைபூன் (British Royal Air Force Typhoon) ஜெட் விமானங்கள் உலகளாவிய வர்த்தக நாடியாக இருக்கும் செங்கடல் பகுதியைப் பாதுகாக்கும் போர்வையின் கீழ், யேமனில் உள்ள ஹவுதி இலக்குகளுக்கு எதிராக பாவ்வே IV (Paveway IV ) ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டன. இவை, ஜனவரி 11 அன்று அமெரிக்க இராணுவப் படைகளுடன் இணைந்து யேமனில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல்களைத் தொடர்ந்து நடந்திருக்கிறது.

வெள்ளியன்று செங்கடல் வழியாகச் சென்ற மார்லின் லுவாண்டா (Marlin Luanda) எண்ணெய்க் கப்பலை ஹவுதிப் படைகள் தாக்கியதால் பதற்றம் அதிகரித்திருந்தது. தாக்குதல்களினால் ஏற்பட்ட பெருந்தீயை, இந்திய, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு கடற்படைக் கப்பல்களால் அணைக்கப்பட்டது. இதில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

மார்லின் லுவாண்டா ஒரு “பிரிட்டிஷ்” எண்ணைக்கப்பல் என்றும், “ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு” ஆதரவாகவும், “எமது நாட்டிற்கு எதிரான அமெரிக்க-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்குப்” பதிலளிப்பதற்காகவும் அது தாக்கப்பட்டதாக ஹவுதி பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரீ (Yahya Saree ) கூறியுள்ளார். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பிரெஞ்சு பன்னாட்டு எண்ணெய் மற்றும் பொருட்கள் வர்த்தகர் ட்ராஃபிகுராவுக்குச் (Trafigura) சொந்தமான இந்தக் கப்பல் சிங்கப்பூருக்குச் செல்லும் வழியில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலின் நிர்வாகம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓசியோனிக்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Oceonix Services Ltd) உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் பிராந்தியத்தில் அதன் முக்கிய 45 ரக  நாசகாரி போர்க்கப்பலான (Type 45 destroyer warship) எச்எம்எஸ் டயமண்ட் (HMS Diamond), ஒரு ஆளில்லாத விமானத்தைச் சுட்டு வீழ்த்திய காட்சிகளைக் காட்டியது.

அணு ஆயுதப் போருக்கான திட்டமிடலை உறுதிப்படுத்தும் வகையில், சனிக்கிழமையன்று டெலிகிராப், பென்டகன் ஆவணங்களை மேற்கோள் காட்டி, சஃபோல்க்கில் (Suffolk) உள்ள RAF லேகன்ஹீத்தில் (Lakenheath) “உடனடியாக” ஒரு “அணுசக்தி குறிப்பணிகள்” நடக்கும் என்று தெரிவித்துள்ளது. முந்தைய மார்ச் மாதம் அமெரிக்க காங்கிரஸுக்கு RAF லேக்கன்ஹீத்தில் “அணுயுதங்களைப் பாதுகாக்கும் இடம்” (“surety dormitory”) ஒன்றுக்கு அமெரிக்க விமானப்படையிலிருந்து $50 மில்லியன் டாலர்கள் (£39.5 மில்லியன்) 2024 பட்ஜெட் கோரிக்கை வந்ததாக கடந்த செப்டம்பரில் அது செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க இராணுவ மொழியில் அது அணு ஆயுதங்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது.

அந்த பத்திரிகைச் செய்தியின்படி, பிழை திருத்தம் செய்யப்படாத கொள்முதல் ஒப்பந்தங்கள் “அதிக மதிப்புள்ள சொத்துக்கள்” மீதான தாக்குதல்களில் இருந்து இராணுவ சிப்பாய்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஏவுகணை தாக்குதலிருந்து பாதுகாக்கும் (ballistic shields) உபகரணம் உட்பட, தளத்திற்கான புதிய தளவாடங்களை பென்டகன் எவ்வாறு உத்தரவிட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.”

இங்கிலாந்து மண்ணில் இருந்து அமெரிக்க அணு ஏவுகணைகள் அகற்றப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு, “50 கிலோ டன்கள் வரை மாறுபடும் பாதிப்பை ஏற்படுத்தும் B61-12 புவியீர்ப்பு குண்டுகளை லேகன்ஹீத் (Lakenheath) இல் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 1945 இல் ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டின் சக்தியைவிட மூன்று மடங்கு விளைவை ஏற்படுத்தக்கூடியது.

ஆயுதப் படைகளை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கான சாண்டர்ஸின் அழைப்பை ஆதரித்தவர்களில் அமெரிக்க இராணுவப் பிரதிநிதிகளும் அடங்குவர்.  “இன்று இருக்கும் அச்சுறுத்தல்களை இங்கிலாந்து அவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதை மறுபரிசீலனை செய்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்”  என்று அமெரிக்க கடற்படை செயலாளரான கார்லோஸ் டெல் டோரோ (Carlos Del Toro), லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டில் (Rusi)  உரை நிகழ்த்தும்போது விபரித்தார்.

பிரித்தானியா தனது இராணுவத்தின் பலத்தை தீர்மானிக்கும். “ஆனால், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கடற்படையில் முதலீடுகள் குறிப்பிடத்தக்கவை என்று நான் மிகவும் வெளிப்படையாக வாதிடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்டனின் முன்னாள் நேட்டோ கமாண்டர் ஜெனரல் சேர் ரிச்சர்ட் ஷெரிப்பின் (Sir Richard Sherriff) ஆதரவுடன், சாண்டர்ஸ், இராணுவச் செலவினங்களில் அதிகரிப்பு செய்ய - தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதத்திற்கும் மேலாகவும், 2.5 சதவிகித இலக்காக மாற்றப்படுவதை - இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஒரு பொதுத் தேர்தலில் ஒரு முக்கிய பிரச்சினையாக உறுதி செய்ய விரும்புகிறார்.

இராணுவச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கிரான்ட் ஷாப்ஸ் (Grant Shapps) கூறினார். ஆனால் சாண்டர்ஸ், ஷெரிப், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளும் டோரி மற்றும் தொழிலாளர் அரசியல்வாதிகள் பலர் ஷாப்ஸின் இலக்கை மிஞ்சுமளவுக்கு போருக்கான செலவுகளைக் கோருகின்றனர்.

ஏகாதிபத்தியத்தை “மலிவாக” செய்ய முயற்சிப்பதற்காக அடுத்தடுத்து வரும் அரசாங்கங்களைக் கண்டிக்கும் வகையில் ஊடகங்களில் ஒரு வெறித்தனமான பிரச்சாரம் நடந்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் டெலிகிராப்  பத்திரிகையானது, “£3bn HMS ராணி எலிசபெத் (£3bn HMS Queen Elizabeth) போர்க்கப்பலை [மத்திய கிழக்கு] பிராந்தியத்திற்கு அனுப்புவதற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.” ஏனெனில் RFA போர்ட் விக்டோரியா “முழுமையாக பயன்படுத்துவதற்கு தேவையான வெடிமருந்துகள், போர் விமானம், உதிரி உபகரணங்கள் மற்றும் அனைத்துத் துருப்புகளுக்கும் உணவு வழங்கக்கூடிய ஒரே உறுதியான உதவிப் போர்க்கப்பலாக இது இருக்கிறது, மாலுமிகள் பற்றாக்குறையால் கப்பலை இயக்க முடியவில்லை” என்று எழுதியது.

டெய்லி மெயில் (Daily Mail) பத்திரிகையின் கருத்துரைப் பக்கத்தில், பிரபலமான ஊடகவியலாளர் ஆண்ட்ரூ நீல் (Andrew Neil) ஒரு புகாரை தெரிவித்திருக்கிறார். “இடது மற்றும் வலதுசாரி அரசியல்வாதிகள், ரஷ்யாவிலிருந்து ஈரான், சீனா மற்றும் வட கொரியா வரை அதிகரித்து வரும் புதிய அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல், போருக்குப் பின்னரான  ஈவுத்தொகையின் வருவாயை சட்டைப்பைக்குள் சேர்ப்பதில் மிக வேகமாக செயல்பட்டனர்… ஹவுதிகளின் நிலைகள் மீது அமெரிக்கத் தலைமையிலான தாக்குதல்களின் ஒரு பகுதியாக பிரிட்டன் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் எங்கள் டைஃபூன் (Typhoon) போர் விமானங்கள் சைப்ரஸிலிருந்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்திவிட்டு 3,000ம் மைல் போய்வருவதற்கு பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அங்கிருந்து திரும்புவதற்கும் ஆகாயத்தில்தான் எரிபொருள் நிரப்ப வேண்டியுள்ளது.

ராயல் கடற்படையின் (Royal Navy) “8 பில்லியன் பவுண்டுகள் செலவில் கட்டப்பட்டு, உலகின் அதிநவீன போர் விமானமான F35 களை சுமந்து கொண்டு செல்லக்கூடிய இரண்டு அதிநவீன விமானம் தாங்கி கப்பல்கள், ராணி எலிசபெத் II (Queen Elizabeth II) மற்றும் வேல்ஸ் இளவரசர் (Prince of Wales) ஆகியவை இரண்டும் போர்ட்ஸ்மவுத் (Portsmouth) கப்பல்துறையில் செயல்படாமல் கிடக்கின்றன. வெளிப்படையாக அவற்றைத் தேவைப்படும் இடத்திற்கு அனுப்புவதற்கு, அவற்றைச் சுற்றி வைக்க போதுமான பாதுகாப்புக் கப்பல்கள் எங்களிடம் இல்லை. எனவே அதற்கு பதிலாக எங்கள் RAF விமானிகள் 3,000 மைல்கள் பறந்துசெல்ல வேண்டியிருக்கிறது”. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாங்கள் இப்போது ஒரு வருடத்திற்கு 50 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் பாதுகாப்புக்காக செலவிடுகிறோம், ஆனால் தேவைப்படும்போது எந்த இராணுவ சக்தியை நாம் பயன்படுத்த முடியும் என்பதில் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். எச்எம்எஸ் டயமண்ட் (HMS Diamond) கூட அமெரிக்க கடற்படையையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது” என்று கூறினார்.

பிரிட்டிஷ் இராணுவத்திற்கான செலவுக் குறைப்புகள், “இனி 25,000-பலம் கொண்ட கவசப் பிரிவைக் கூட களமிறக்கும் அளவுக்கு பெரிதாக நம்மிடம் இல்லை... போர் மண்டலங்களில் பயனுள்ள கூட்டாளிகளாக இருப்பதற்கான அளவு எங்களுக்குத் தகுதி இல்லை என்று அமெரிக்க இராணுவம் மேலும் மேலும் நினைக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கன்சர்வேட்டிவ் எம்.பி., பாதுகாப்புத் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவரான டோபியாஸ் எல்வுட் (Tobias Ellwood), எல்பிசி (LBC) ரேடியோவில் சாண்டர்ஸைப் புகழ்ந்து, “அடிவானத்தில் என்ன நடக்கிறது என்பது நம்மை அதிர்ச்சியடையச் செய்யும்” என்று கூறினார். இராணுவம் “இருக்க வேண்டியதை விட பாதி அளவுதான் இருக்கிறது” என்று அவர் கூறினார், இராணுவ வரவுசெலவுத் திட்டத்தின் அளவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) யில் இரண்டு சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாக உடனடியாக இரட்டிப்பாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஆறு மாதங்களில் இராணுவத் தலைவர் பதவியில் இருந்து சாண்டர்ஸ் விலகுவதாக கார்டியன் தலையங்கம் எழுதியது, “இது ஒரு தேர்தல் ஆண்டு என்பதை அவர் அறிவார். அரசியல் கட்சிகள் அவரை மீண்டும் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்” என்று எழுதியது.

“மருத்துவமனைகள், சுகாதார சேவைகள், உள்ளூர் அரசாங்கம், பள்ளிகள் மற்றும் பசுமை நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றுடன் இராணுவம் போட்டியிட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, ஜெனரல் சாண்டர்ஸின் சில கோரிக்கைகளுக்கு எதிராக இவை எதுவும் ஒரு தூய வாதமாக இல்லை. சர்வதேச ஆபத்துகள் உண்மையில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக போலந்து மற்றும் பால்டிக் மற்றும் நோர்டிக் நாடுகளுக்கு ரஷ்யா ஒரு உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது. ஆதலால், வரிசைப்படுத்தக்கூடிய இராணுவ எண்கள் உண்மையில் முக்கியம்” என்று எழுதியது.

கன்சர்வேட்டிவ் பிரதம மந்திரி ரிஷி சுனக், இராணுவ செலவினங்களை அதிகரிக்க வேண்டியதன் அவசிய கருத்தில் சாண்டர்ஸுடன் அடிப்படை வேறுபாடுகள் எதுவுமில்லை என்றாலும், அவர் இந்த கட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்புக்கான கோரிக்கைகளை ஆதரிக்கவில்லை.

குறுகிய கால லிஸ் ட்ரஸ் (Liz Truss) பிரதமர் பதவியைத் தொடர்ந்து சுனக் பிரதமராக பதவியேற்றார். ஆனால் சனிக்கிழமை போரிஸ் ஜான்சன், “ஆணையிடப்படாத இராணுவ அதிகாரியாக ஜோன்சன் பணியில் இணைகிறார்” என்று இராணுவ வணக்கத்துடன் தொடங்கிய வீடியோவில் தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.  “போரைத் தடுப்பதற்கான சிறந்த வழி அதற்குத் தயாராவதே…அதனால்தான், ஜெனரல் சாண்டர்ஸ், ஆயுதப் படைகளில் உள்ள தற்போதைய பிரச்சனைகள் மற்றும் குறிப்பாக குறைவான ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும் என்ற அவரது முக்கியக் கருத்து சரியாக உள்ளது”. என்று டெய்லி மெயில் பத்திரிகையில் தனது கட்டுரையில் அவர் எழுதியுள்ளார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மற்ற முக்கிய கருவியான தொழிற் கட்சியால் இந்த வெறித்தனமான சக்திகள் கோரும் எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.

நிறைவேற்று அதிகாரம் இல்லாத எதிர்கட்சியைச் சேர்ந்த பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி (John Healey), இங்கிலாந்து நேட்டோ படைப்பிரிவு துருப்புக்களை பார்வையிட எஸ்தோனியாவிற்கு தனது சமீபத்திய பயணத்தை மேற்கொண்டு,  “14 ஆண்டுகளுக்கும் மேலாக கன்சர்வேட்டிவ் கட்சியினர் (Conservatives) நமது ஆயுதப் படைகளை வெறுமையாக்கியுள்ளனர். எங்கள் ஆயுதப் படைகளின் நிலை, எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் இங்கிலாந்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான திறன்கள் ஆகியவற்றை முழுமையாக மதிப்பிடுவதற்கு, எங்களுடைய முதலாவது ஆண்டில் ஒரு மூலோபாய பாதுகாப்பு மதிப்பாய்வை தொழிற் கட்சி நடத்தும்” என்று வெள்ளிக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

Loading