முன்னோக்கு

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் போருக்கு மேலும் 50 பில்லியன் யூரோக்களை செலவிடுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அரச மற்றும் அரசாங்க தலைவர்களும் வியாழன் அன்று உக்ரேனில் போரைத் தீவிரப்படுத்த 50 பில்லியன் யூரோக்களை (54 பில்லியன் அமெரிக்க டொலர்) வழங்க முடிவு செய்தனர். டிசம்பரில், ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், இரத்து அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்தியதன் காரணமாக இது தொடர்பான முடிவு தோல்வியடைந்தது.

50 பில்லியன் யூரோக்கள் என்பது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு நிதியளிப்பதற்கும் யுத்தத்தை தீவிரப்படுத்துவதற்கும் பயன்படுத்தும் தொகையில் ஒரு அற்பத் தொகையே ஆகும். இந்த நிதி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உக்ரேனிய அரசின் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஒத்துழைக்க பிரத்தியேகமாக சேவை செய்வதுடன் நாடு திவாலாவதையும் ஊதியம் மற்றும் ஏனைய செலவுகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதையும் தடுப்பதை அர்த்தப்படுத்துகிறது.

ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பன்டேஸ்டாக்கில் உரையாற்றுகிறார் [Photo by DBT/Florian Gaertner/photothek ]

ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து விநியோகத்திற்கான பிரமாண்டமான தொகைகள் இந்த 50 பில்லியன் யூரோக்களில் சேர்க்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் புதனன்று ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அறிவித்தது போல், 13 ஐரோப்பிய நாடுகள் மட்டும் உக்ரைனுக்கு 2024 இல் 21 பில்லியன் யூரோக்கள் இராணுவ உதவி வழங்க விரும்புகின்றன. ஜேர்மனி 7.4 பில்லியன் யூரோவுடன் முதலிடத்தில் உள்ளது.

உலகப் பொருளாதாரத்திற்கான கீல் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள “உக்ரைன் ஆதரவு கண்காணிப்பகம்” 24 ஜனவரி 2022 மற்றும் 31 அக்டோபர் 2023 இற்கு இடைப்பட்ட காலத்தில் உக்ரைன் மொத்தம் 247 பில்லியன் டொலர் இராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிக் கடப்பாடுகளைப் பெற்றதாகக் கணக்கிட்டுள்ளது. மிகப்பெரிய நன்கொடையாளராக ஐரோப்பிய ஒன்றியம் 81 பில்லியன் டொலரை வழங்கியுள்ளது. அதை அடுத்து அமெரிக்கா 75 பில்லியன் டொலரும் மற்றும் ஜேர்மனி அதன் சொந்தமாக 22 பில்லியன் டொலரும் வழங்கியுள்ளன. இது, கடந்த, போருக்கு முந்தைய 2021 ஆம் ஆண்டில் 200 பில்லியன் டொலராக இருந்த உக்ரைனின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கணிசமானளவு அதிகமானதாகும்.

இந்த புள்ளிவிவரங்கள் போரின் உண்மையான தன்மையைப் பற்றி பேசுகின்றன. நேட்டோ சக்திகள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தளவாடங்கள் மற்றும் மூலோபாயத்தை வழங்குகின்றன, அவை வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அரசு இயந்திரம் மற்றும் ஊழல்நிறைந்த தன்னலக்குழு ஆட்சிக்கு நிதியளிக்கின்றன. அதற்கு பிரதியுபகாரமாக ஸெலின்ஸ்கி உக்ரேனிய இளைஞர்களை பீரங்கிக்கு இறையாக வழங்குகிறார்.

இந்தப் போர் “ஜனநாயகம்” மற்றும் “சுதந்திரம்” பற்றியது என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. உக்ரைன் இராணுவரீதியாக “வெற்றி” பெற்று ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் என்ற கற்பனையான சூழ்நிலையில் கூட, அது மிகவும் கடனாளியாக இருப்பதோடு அதன் தொழிலாள வர்க்கம் சர்வதேச நிறுவனங்களால் சுரண்டப்படும் பொருளாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியம் இப்போது வெளியிட்டுள்ள 50 பில்லியன் யூரோக்களில், 33 பில்லியன் யூரோக்கள் நீண்ட காலக் கடன்களாகும். அவை நிதிச் சந்தைகளில் வாங்கப்பட்டுள்ள இந்தக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

உக்ரைன் போருடன் நேட்டோ பின்பற்றும் உண்மையான இலக்கு, ரஷ்யாவை தகர்த்து அதன் மூலப்பொருட்கள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதாகும். வார்சா ஒப்பந்தமும் சோவியத் ஒன்றியமும் கலைக்கப்பட்டதில் இருந்து, நேட்டோ தனது எல்லைகளை கிழக்கிற்கு மேலும் விரிவுபடுத்தி, குறித்த உடன்படிக்கைகளை மீறி, கிழக்கு ஐரோப்பா முழுவதையும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் சில பகுதிகளையும் இராணுவக் கூட்டணியில் ஒருங்கிணைத்துள்ளது. 2014 இல், நேட்டோ சக்திகள் கியேவில் ஒரு வலதுசாரி, ரஷ்ய எதிர்ப்பு சதியை ஏற்பாடு செய்தமையே தற்போதைய போருக்கு வழிவகுத்தது.

ரஷ்ய தன்னலக்குழுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புட்டின் ஆட்சிக்கு, நேட்டோ சக்திகள் விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் உக்ரைன் மீது அதன் பிற்போக்கு தாக்குதலைத் தொடுப்பதைத் தவிர, நேட்டோ அத்துமீறலுக்கு வேறு பதில் கிடையாது.

ஆனால் நேட்டோ சக்திகள் விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை. அவர்கள் உக்ரேனில் போருக்கு நிதியளித்து அதை தீவிரப்படுத்துவது மட்டுமல்லாமல், ரஷ்யாவிற்கு எதிராக பாரியளவில் ஆயுதபாணிக்களாகி ஆயிரக்கணக்கான படையினரை ரஷ்ய எல்லையில் நிலைநிறுத்துகின்றனர். நடந்து கொண்டிருக்கும் “ஸ்டெட்ஃபாஸ்ட் டிஃபென்டர்” பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு நடக்கும் மிகப்பெரிய நேட்டோ பயிற்சியாகும். சுமார் 90,000 படையினர் வரை ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்து வருகின்றனர்.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் போன்ற முன்னணி அரசியல்வாதிகள், “ஐந்து முதல் எட்டு ஆண்டுகளுக்குள்” அணுஆயுதம் கொண்டுள்ள ரஷ்யாவுடன் ஐரோப்பா போருக்குத் தயாராக வேண்டும் என்று அறிவித்துள்ளனர். ஜேர்மனியர்கள் “மீண்டும் ஆபத்துடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும், அத்துடன் இராணுவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சிவில் பாதுகாப்பிலும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார். நேட்டோ இராணுவக் குழுவின் தலைவரான ரொப் பௌயர், “ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு” தயாராகும் வகையில் “போர் பொருளாதாரத்தை” கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்களும், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான மோதல்களாலோ அல்லது சீனாவுடனான போரில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்துவதை முன்நிறுத்தி டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதாலோ போரில் அமெரிக்க அர்ப்பணிப்பு குறைந்துவிட்டால், தாம் ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடருவோம், மேலும் தீவிரப்படுத்துவோம் என்று தெளிவுபடுத்தினர்.

ஃபைனான்சியில் டைம்ஸ் இல் வெளியிடப்பட்ட விருந்தினர் வர்ணனையில், ஷோல்ஸ் மற்றும் டென்மார்க், செக் குடியரசு, எஸ்டோனியா மற்றும் நெதர்லாந்தின் அரசாங்கத் தலைவர்களும், “நாங்கள் எங்கள் உறுதியை வலுப்படுத்த வேண்டும் மற்றும் எங்கள் ஆதரவை நீண்ட காலத்திற்கு தொடர்வதை உறுதிசெய்ய எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு “ஐரோப்பாவில் தொழில்துறை திறன்களின் விரிவாக்கம்” மற்றும் “உறுப்பு நாடுகளின் நிலையான முதலீடுகள்” தேவை என்றும் அவர்கள் கூறினர்.

“உக்ரேனிய பாதுகாப்புக்கு குளிர்காலத்திலும் மற்றும் நீண்ட கால கட்டத்துக்கும் தொடர்ந்து ஆதரிவளிப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் எங்களின் திறன் முக்கியமானது. ஐரோப்பியர்களான எங்களுக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது. அதனால்தான் நாம் செயல்பட வேண்டும்,” என விருந்தினர் வர்ணனை தொடர்கிறது.

பிரஸ்ஸல்ஸுக்குப் புறப்படுவதற்கு முன்பு ஜேர்மன் பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அரசாங்க அறிக்கையில் ஷோல்ஸ் இன்னும் தெளிவாக இருந்தார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் ஐரோப்பாவின் சோர்வு பற்றி புட்டின் நம்பிக்கைகொண்டுள்ளதாக கூறிக்கொண்ட அவர், பின்வருமாறு உறுதியளித்தார்: “இந்த ஆண்டு எங்கள் பெரிய பங்களிப்பை நாங்கள் செய்வோம், மேலும் உக்ரைன் நம்பக்கூடிய அளவிற்கு ஐரோப்பாவின் கூட்டு பங்களிப்பு மிகவும் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அதில், ஒரு கட்டத்தில் எங்கள் ஆதரவு மங்கிவிடும் என்று புட்டின் எதிர்பார்க்க முடியாது.”

ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உக்ரைனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இரண்டு முறை ரஷ்யாவைக் கைப்பற்ற முயன்ற ஜேர்மன் ஏகாதிபத்தியம், உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கும் ஏகாதிபத்திய மேலாதிக்க உலக ஒழுங்கின் வீழ்ச்சிக்கும் அன்று போலவே இப்போதும் எதிர்வினையாற்றுகிறது: ஐரோப்பாவின் மேலாதிக்கம், மறு ஆயுதபாணியாதல், இராணுவ ரீதியாக பலமாக நிலைக்கு உயர்வதற்கு அது முயற்சிக்கிறது.

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு மேலதிகமாக, ஜேர்மனி மற்றும் ஏனைய ஐரோப்பிய சக்திகளும், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் மத்திய கிழக்கை அடிபணியச் செய்வதற்கான மற்றொரு போருக்கு முன்னோடியாக சேவை செய்கின்ற, காஸாவில் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலையையும் அத்துடன் சீனா எதிரான அமெரிக்காவின் போர் தயாரிப்புகளையும் ஆதரிக்கின்றன.

ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய இராணுவவாதத்தின் மீள்வருகையானது புவிசார் அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக மட்டுமன்றி, போர் மற்றும் இராணுவவாதத்தின் செலவினங்களை தாங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அதன் சொந்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், விவசாயிகள் போன்ற குட்டி முதலாளித்துவத்தின் சுரண்டப்பட்ட பிரிவுகளுக்கு எதிராகவும் இயக்கப்படுகிறது.

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அவர்கள் முழு வீதிகளையும் றக்டர்களைக் கொண்டு அடைத்தனர். பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, செக் குடியரசு, லிதுவேனியா மற்றும் கிரீஸிலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் மானிய வெட்டுக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் போர்க்குணம் அதிகரித்து வருகிறது. ஜேர்மனியில், ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முந்தைய வாரத்தில், இரயில் ஓட்டுநர்கள் ஐந்து நாட்களுக்கு இரயில் போக்குவரத்தை முடக்கினர், விமான நிலையத் தொழிலாளர்கள் ஒரு நாள் விமானப் போக்குவரத்தை நிறுத்தினர், பேருந்து மற்றும் டிராம் ஓட்டுநர்கள் ஒரு நாள் பொதுப் போக்குவரத்தை முடக்கினர். உலகளவில் வாகனம், விநியோகம் மற்றும் பல தொழில்துறைகளில் ஆட்குறைப்பு மற்றும் அடிப்படை ஊதிய வெட்டுக்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான நனவான இயக்கமாக மாற்றுவதன் மூலம் மட்டுமே போரின் ஆபத்தை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க முடியும். இதற்கு, அரசாங்கங்களுடன் நெருக்கமாக வேலை செய்கின்ற, போர்க் கொள்கையை ஆதரிக்கின்ற தொழிற்சங்கங்களின் கட்டுப்படுத்தல்களை தகர்த்தெறிந்து வெளியேறுவதோடு போருக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் முழு உலக தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கின்ற, அவர்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக வென்றெடுக்கின்ற ஒரு சர்வதேச கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்த முன்னோக்கிற்காகவே போராடுகின்றன.

Loading