ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போர், ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு பாரிய மற்றும் ஒருங்கிணைந்த இராணுவ அணிதிரட்டலின் தன்மையை அதிகரித்தளவில் எடுத்து வருகிறது. பனிப்போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தில் நேட்டோவின் மிகப் பெரிய போர்ப் பயிற்சியான Steadfast Defender நடவடிக்கை குறித்த கடந்த வார அறிவிப்பைத் தொடர்ந்து வந்த பல நேர்காணல்களில், பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் ஒரு நேரடி போருக்கு ஜேர்மனி தயாரிப்பு செய்ய வேண்டியிருப்பதாக அறிவித்தார். 

கடந்த திங்களன்று, அவர் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியான heute-journal  க்கு கூறுகையில், “நம்மீது திணிக்கப்பட்ட ஒரு போரை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு நிலையில் நம்மை நாமே நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும், நாம் தொடங்கும் போரை அல்ல, அது சொல்லாமலே விளங்கும்,” என்றார். பின்னர் அவர் கூறினார், “ஆனால் நாம் தாக்கப்பட்டால், நாம் போர் தொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும், அது முக்கியமானது, அதற்கு நாம் தயாரிப்பு செய்தாக வேண்டும்,” என்றார். 

லிதுவேனியாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற Griffin Storm 2023 போர்ப் பயிற்சியில் செய்தியாளர் சந்திப்பின் போது ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் பேசுகிறார். [AP Photo/Mindaugas Kulbis]

மில்லியன் கணக்கானவர்களின் உயிரிழப்பு மற்றும் ஒட்டுமொத்த கண்டத்தின் அழிவையும் விளைவிக்கும் போரை நடத்துவதற்கான நிகழ்வுகளை ஆளும் வர்க்கம் எவ்வளவு ஸ்தூலமாக விவாதித்து வருகிறது என்பதை இந்த ஒட்டுமொத்த நேர்காணலும் தெளிவுபடுத்தியுள்ளது. பால்டிக் அரசுகளில் ரஷ்ய சிறுபான்மையினரின் ஒரு எழுச்சியை மாஸ்கோ ஒழுங்கமைக்க வேண்டுமானால் அல்லது அத்தகைய நாடுகளில் ஒன்றைத் தாக்கினால், ஜெர்மனி, இந்த சூழ்நிலைகளின் கீழ், இராணுவ ரீதியாக பதிலளிக்க வேண்டும் மற்றும் முழு அளவிலான போரை நடத்தும் நிலையில் இருக்க வேண்டும்.

“அதுதான் துல்லியமான விஷயம்,” என்று பிஸ்டோரியஸ் கூறினார், அதனால் தான் லித்துவேனியாவில் 5,000 ம் சிப்பாய்களைக் கொண்ட ஒரு ஜேர்மன் போர் படைப்பிரிவு தற்போது “உடனடியாக களத்தில் இருப்பதற்காக” அமைக்கப்பட்டு வருகிறது. அந்த படைப்பிரிவு, “2027 இல்  நிறுத்தப்படுவதற்கு  தயாராக” இருக்கும் என்று அவர் விளக்கினார்.

இராணுவ நிபுணர்களின் கூற்றுப்படி, ரஷ்ய ஆக்கிரமிப்பு ஐந்து ஆண்டுகளுக்குள் நிகழும் என்று பிஸ்டோரியஸ் கூறினார். ஆனால், அவர் எச்சரித்தார், இது “ஒரு மதிப்பீடு தான்” மற்றும் “யாருக்கும் உறுதியாகத் தெரியாது.” எவ்வாறாயினும், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை “நம்மை தீவிரமாக ஆயுதபாணியாக்குவதற்கு” பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

Tagesspiegel க்கு அளித்த பேட்டியில், பிஸ்டோரியஸ் குறிப்பிடுகையில், “ஐந்து முதல் எட்டு ஆண்டு காலத்தில்” “ரஷ்யாவின் தாக்குதல்” சாத்தியமாகும் என்றார். ஆகவே “போருக்கு நம்மை நாமே ஆயுதபாணியாக்கிக் கொள்வதற்கு” சுவீடன் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பை “புரிந்து கொள்ளக் கூடியதே” என்று அவர் கருதினார். ஆனால் ஜேர்மனியர்கள் “இராணுவரீதியாகவும், சமூகரீதியாகவும் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பின் அர்த்தத்திலும் மீண்டும் ஆபத்துடன் வாழ கற்றுக்கொள்ளவும், நம்மை தயார்படுத்திக் கொள்ளவும்” வேண்டும் என்றார்.

இது ரஷ்யா மீதான ஒரு போர் பிரகடனத்திற்கு நிகரானதாகும். ஜேர்மனியை மீண்டும் “போருக்கு தகுந்ததாக” ஆக்குவதே அவரது நோக்கம் என்று அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர், ரஷ்யாவுடன் ஒரு நேரடி போரின் சாத்தியம் குறித்து பகிரங்கமாக பேசி வருகிறார். ஒரு “பாதுகாப்பு போர்” குறித்த பிரச்சார நிலைப்பாடு யதார்த்தத்தை தலைகீழாக மாற்றி, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பழைய பொய்களை எதிரொலிக்கிறது. 30 மில்லியன் சோவியத் குடிமக்களின் உயிர்களைப் பலிகொண்ட சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கும் போர் உட்பட, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் ஜேர்மன் ஆக்கிரமிப்பு, கெய்சர் பேரரசிலும் நாஜிக்களின் கீழும் இருந்த ஜேர்மன் உயரடுக்கினரால் “தற்பாதுகாப்பு” அல்லது “திணிக்கப்பட்ட தற்பாதுகாப்பு” என்று விவரிக்கப்பட்டது. 

இன்று, ஜேர்மன் ஏகாதிபத்தியம், ஏனைய முன்னணி நேட்டோ சக்திகளுடன் கூட்டணி சேர்ந்து, மீண்டுமொருமுறை ஆக்கிரமிப்பாளராக உள்ளது. ரஷ்யா மீதான திட்டமிட்ட இராணுவ சுற்றிவளைப்பு மற்றும் கியேவில் 2014 ரஷ்ய-விரோத ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஆகியவற்றுடன், நேட்டோவானது புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான தலையீட்டைத் தூண்டியது. இப்போது அது வளங்கள் நிறைந்த ரஷ்யாவை இராணுவரீதியில் அடிபணியச் செய்வதற்காக அதை இன்னும் பெரிய போருக்குள் தள்ளுவதற்காக மோதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. 

பிஸ்டோரியஸ் மற்றும் பிற நேட்டோ போர் முழக்ககாரர்கள் மனதில் வைத்திருக்கும் சரியான கால அட்டவணை எதுவாக இருந்தாலும் ஜேர்மனியும் நேட்டோவும் போருக்குத் தயாராகி வருகின்றன என்ற அந்த அறிவிப்பே விரிவாக்கத்தை தூண்டிவிடும். இந்த அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, ரஷ்ய அரசாங்கமும் இராணுவத் தலைமையும் சாத்தியமான நேட்டோ தாக்குதல் மற்றும் முழுவீச்சிலான போருக்கு தயாரிப்பு செய்ய தாங்களே நிர்பந்திக்கப்பட்டதாக கருதுவார்கள். 

தற்போது நடந்து வரும் பெரியளவிலான Steadfast Defender என்ற போர்ப் பயிற்சியானது, பனிப்போர் முடிந்ததற்குப் பிந்தைய மிகப் பெரிய நேட்டோ போர்ப் பயிற்சிகளை உள்ளடக்கி உள்ளன. நேட்டோ தகவலின்படி, மே மாத இறுதிக்குள் 90,000 சிப்பாய்கள் அணிதிரட்டப்படுவார்கள், இதில் அமெரிக்காவில் இருந்து சுமார் 40,000ம் சிப்பாய்கள், ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து 20,000ம் சிப்பாய்கள் மற்றும் ஜேர்மன் ஆயுதப் படைகளில் இருந்து 12,500ம் சிப்பாய்கள் பங்கேற்பார்கள். 50 க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள், 80 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மற்றும் 133 போர் டாங்கிகள் மற்றும் 533 காலாட்படை சண்டை வாகனங்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் இந்த போர் பயிற்சியில் பங்கேற்க இருக்கின்றன.

புவியியல் ரீதியாக, இந்த இராணுவ உத்திகள் ஸ்காண்டிநேவியா மற்றும் பால்டிக் அரசுகளைக் கடந்து போலந்து, ருமேனியா மற்றும் ஜேர்மனி வரை நீண்டுள்ளன. ஜேர்மனி இந்த பயிற்சிக்கான “தலைமைப் பொறுப்பை” ஏற்று வருவதாகவும், “தேசிய மற்றும் சர்வதேச படைகளின் அவசியமான துருப்பு நிலைநிறுத்தலுக்கான ஒரு மிகப் பெரும் மையமாக” சேவையாற்றி வருவதாகவும் ஜேர்மன் இராணுவம் பெருமைபீற்றுகிறது. 

பேர்லின் உக்ரேனுக்கு இன்னும் கூடுதலான ஆயுதங்களை வழங்குவதில் முன்னேறி வருகிறது. இந்த ஆண்டு, ஜேர்மனி கியேவுக்கு அதன் ஆதரவை பாரியளவில் விரிவுபடுத்தும் என்று செவ்வாயன்று ராம்ஸ்டீன் வடிவம் என்று அழைக்கப்படும் உக்ரேனிய பாதுகாப்பு தொடர்பு குழுவின் கூட்டத்தில் பிஸ்டோரியஸ் தெரிவித்தார். மற்றவற்றுடன், ஆறு SEA KING Mk41 பல்நோக்கு ஹெலிகாப்டர்களை ஜேர்மன் இராணுவ (Bundeswehr) இருப்புகளில் இருந்து வழங்க திட்டமிட்டுள்ளது. விநியோகிப்பதற்கு கருவிகள் மற்றும் உதிரிப்பாகங்கள் ஒரு முழு தொகுப்புடன், விமான மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆதரவும் அடங்கும். 

பிஸ்டோரியஸின் கருத்துப்படி, சீ கிங் ஹெலிகாப்டர்கள் “கருங்கடல் மீதான உளவுபார்ப்பில் இருந்து சிப்பாய்களின் போக்குவரத்து வரையில் பல பகுதிகளில் உக்ரேனியர்களுக்கு உதவும்.” ரஷ்யாவுக்கு எதிரான போரில், “வான் பாதுகாப்பு தான் முதலிடத்தில் முன்னுரிமையாக உள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். ஆகவே ஜேர்மனி, பிரான்சுடன் சேர்ந்து, “வான் பாதுகாப்பு தகைமை கூட்டணியில் பொறுப்பேற்கும் மற்றும் 20 க்கும் அதிகமான பங்காளிகளுடன் கூட்டாக ஒருங்கிணைக்கும்” என்பதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். 2024 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் 10,000ம் உக்ரேனிய சிப்பாய்களுக்கு பயிற்சி அளிக்கும் இலக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

உக்ரேனுக்கான ஜேர்மன் அரசாங்கத்தின் இராணுவ ஆதரவு சேவைகளின் உத்தியோகபூர்வ பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது, இது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக பேர்லின் ஏற்கனவே எந்த அளவிற்கு போரை நடத்தி வருகிறது என்பதைக் காட்டுகிறது. பின்வரும்  பொருட்கள் “தயாரிப்பு/செயல்படுத்தல்” பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன:

  • 105 LEOPARD 1 A5 பிரதான போர் டாங்கிகள்
  • 30 MARDER காலாட்படை போர் வாகனங்கள்
  • 42 இராணுவ கவச வாகனங்கள் (APC)
  • 15 GEPARD விமான எதிர்ப்பு டாங்கிகள்
  • 9 IRIS-T SLM வான் பாதுகாப்பு அமைப்புகள்

கூடுதலாக, கவச மீட்பு வாகனங்கள், கவச பாலம் அமைக்கும் வாகனங்கள் மற்றும் கவச கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள், அத்துடன் 250,000 சுற்றுகள் 155 மிமீ பீரங்கி வெடிகுண்டுகள் மற்றும் 259,680 சுற்றுகள் கெப்பர்ட் வெடிகுண்டுகள் உட்பட பல்வேறு வகையான வெடிகுண்டுகளும் உள்ளன.

Tagesspiegel க்கு அளித்த பேட்டியில், இராணுவ உதவி விடயத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஜேர்மனி கியேவுக்கு “இரண்டாவது மிகப் பெரிய ஆதரவாளர்” என்றும், “அவ்விதத்தில் ஐரோப்பாவிலேயே மிகப் பெரியது” என்றும் பிஸ்டோரியஸ் பெருமைபீற்றினார். ஜேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, “பாதுகாப்பு வரவு-செலவு திட்டக்கணக்கு”க்கான நிதி 2023 இல் (2022 இல் 2 பில்லியன் யூரோக்களுக்குப் பின்னர்) சுமார் 5.4 பில்லியன் யூரோக்களாக இருந்தன. மேலும் 2024 மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான உறுதிப்பாட்டு அங்கீகாரங்கள் ஏற்கனவே சுமார் 10.5 பில்லியன் யூரோக்களாக இருந்தன. இந்த மாபெரும் தொகைகள் ஆயுதப் போட்டிக்கு செலுத்தப்படும் மொத்தப் பணத்தில் ஒரு சிறு பகுதிதான். 

ஆளும் வர்க்கத்தை முழுமையான போரை நோக்கி உந்தித் தள்ளும் காரணிகள் யாவை? நேட்டோ போர் விரிவாக்கம் குறித்த சமீபத்திய முன்னோக்கில் உலக சோசலிச வலைத் தளமானது இவ்வாறு எழுதியது:  

20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களில் இருந்ததைப் போலவே, ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்குகள் - இராணுவ சூழ்நிலையிலும் சர்வதேச வர்க்கப் போராட்டத்திலும் - தங்களுக்கு எதிராக செயல்படும் சக்திவாய்ந்த அரசியல் சக்திகளை- எதிர்கொள்ள தங்களுக்கு சிறிது காலம் தான் இருப்பதாகவும், அதனால் விரைவான விரிவாக்கத்தினால் மட்டுமே –எதிர் கொள்ள முடியும் என்றும் உணருகின்றனர். 

இது குறிப்பாக ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு பொருந்தும். ஆளும் வர்க்கம் உக்ரேனிய தாக்குதலின் தோல்விக்கு எதிர்வினையாற்றுகிறது, பல்லாயிரக்கணக்கான சிப்பாய்கள் இறந்த பின்னரும், அது எந்த குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் கொண்டு வரவில்லை. போர் மற்றும் அதிக சுதந்திரமான ஜேர்மன்-ஐரோப்பிய பெரும் சக்தி கொள்கைக்கு ஆதரவாக முன்பினும் அதிக ஆக்ரோஷமாக முரசு கொட்டுவதன் மூலமாக ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுக்கும் அது விடையிறுத்து வருகிறது. 

Tagesspiegel க்கு அளித்த பேட்டியில், பிஸ்டோரியஸ் இவ்வாறு கூறினார்:

“அமெரிக்க தேர்தல்களின் முடிவு என்னவாக இருந்தாலும், செயல்படுவதற்கு நமக்கு அதிக ஐரோப்பிய தகைமை அவசியப்படுகிறது. குறிப்பாக பாதுகாப்புத் துறையை மிகவும் திறனுடையதாக நாம் மாற்றுவது அவசியம்” என்றார்.

தொழிலாள வர்க்கமானது தமது போர்த் திட்டங்களை தகர்த்துவிடும் என்பதையிட்டு, உயரடுக்குகள் மிகவும் பீதியடைகின்றனர். பல மாதங்களாக, உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் காஸா பகுதியில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வருகின்றனர், இது ஜேர்மனியின் ஆளும் வர்க்கத்தால் “மீண்டும் ஒருபோதும் வேண்டாம்” என்ற பதாகையின் கீழ் சிடுமூஞ்சித்தனமாக ஆதரிக்கப்படுகிறது. ஜேர்மனியில், பாரிய விவசாயிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, இரயில் ஓட்டுநர்கள் தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சிக்கு எதிராகவும் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கம் வலதை நோக்கிய கூர்மையான திருப்பத்திற்கு எதிராகவும் மில்லியன் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். 

பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு, எதிர்ப்பானது, ஒரு தெளிவான சோசலிச தலைமை மற்றும் முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, SGP) ஜூனில் வரவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களில், ஐரோப்பா முழுவதிலுமான அதன் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து, துல்லியமாக இதற்காகவே போராடி வருகிறது. SGP இன் தேர்தல் அறிக்கை பின்வருமாறு அறிவிக்கிறது:

மனிதகுல வரலாற்றின் மிக மோசமான குற்றங்களான நாஜி ஜேர்மனியின் நிர்மூலமாக்கும் போர் (war of extermination) மற்றும் யூத இனப்படுகொலையில் (Holocaust) இருந்து பெறக்கூடிய ஒரே நியாயமான முடிவு இதுதான்: தொழிலாள வர்க்கம் மீண்டுமொரு போதும் போர் மற்றும் பாசிசவாதத்தை அனுமதிக்கக் கூடாது, மேலும் இந்த பயங்கரத்தின் வேரான முதலாளித்துவத்தை ஒரேயடியாக அகற்றியாக வேண்டும். ... நாங்கள் கோருகிறோம்:

உக்ரேனில் நேட்டோ போரை நிறுத்து! பொருளாதார தடைகள் அல்லது ஆயுத விநியோகங்ளைச் செய்யாதே!

இரண்டு உலகப் போர்கள் போதும்! போர் வெறியர்களை நிறுத்து!

போர் தளவாடங்கள் மற்றும் போருக்கு பதிலாக, 100 பில்லியன் யூரோக்களை குழந்தைப் பராமரிப்பு மையங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செலவு செய்!

Loading