பகுதி 2: புதிய பொருளாதாரக் கொள்கையும் லெனினின் இறுதிப் போராட்டமும்

லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக் ஆகியவற்றால் கொண்டாடப்பட்ட இடது எதிர்ப்பு அணியின் 70வது ஆண்டு விழா நிகழ்வின் ஒரு பகுதியாக, 1993 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கிய ஒரு விரிவுரையின் இரண்டாவது பகுதி இதுவாகும். இந்த விரிவுரையானது 1923 அக்டோபரில் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பு அணியின் அரசியல் தோற்றத்திற்கு, 1917 புரட்சிக்குப் பின்னர் போல்ஷிவிக்குகள் எதிர்கொண்ட புறநிலை நிலைமை மற்றும் போல்ஷிவிக் கட்சிக்குள் உள்ள வெவ்வேறு அரசியல் போக்குகளின் பின்னணியை மதிப்பாய்வு செய்கிறது. இதன் முதலாவது பாகம் அக்டோபர் 20, 2023 அன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

இந்த விரிவுரையின் இரண்டாவது பாகம் ஜனவரி 17, 1994 அன்று சர்வதேச தொழிலாளர் புல்லட்டின் இதழில் வெளியிடப்பட்டதை இங்கு காணலாம்.

புதிய பொருளாதாரக் கொள்கை

அரசு அதிகாரத்திற்கும் அது நடைமுறைப்படுத்தப்படும் சமூகத்திற்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்துவது அவசியமாக இருக்கிறது. வரலாறு, பொதுவாக பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்படுவது போல, அரசு அதிகாரத்தைப் பற்றி ஒரு போலி வழிபாடு உருவாக்கப்படுகிறது: அதாவது அதிகாரத்தை வகிப்பவர்களுக்கு அற்புத சக்திகளை அந்த அதிகாரம் சமூகத்திற்கும் அதன் முரண்பாடுகளுக்கும் மேலாக வைக்கிறது என்பது போல அது சாதாரணமாக கூறுகிறது. மார்க்சிசம் அரசு அதிகாரம் என்ற கருத்தாக்கத்தை வரையறுத்து, அது அடிப்படையில் வர்க்கங்களுக்கிடையில் வரலாற்று ரீதியாக தீர்மானிக்கப்பட்ட சமூக உறவு என்பதை எடுத்துக்காட்டுகிறது. போல்ஷிவிக்குகள் ஒரு குறிப்பிட்ட சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளின் கீழ் அதிகாரத்திற்கு வந்தனர். தான் எதை அடைய விரும்புகிறது என்பதை அறிந்த ஒரு புரட்சிகர இயக்கத்தின் கைகளிலுள்ள அதிகாரம், சமூக வளர்ச்சியின் போக்கில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும், ஆனால் அது சர்வவல்லமை கொண்டதல்ல. அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு புரட்சிகரக் கட்சியானது, அந்தத் தருணத்திலிருந்து வரலாற்று நிகழ்ச்சிப்போக்கைத் தீர்மானிக்கும் ஒரே காரணியாக மாறிவிடாது. சமூகத்திற்கு என்ன வேண்டும் என்று வெறுமனே கட்டளையிட முடியாது. அது அதன் உள் இருப்பிலிருந்து சமூக உறவுகளை உருவாக்குவதில்லை. ஆட்சிக்கு வரும் ஒரு புரட்சிகரக் கட்சியானது சமூக வளர்ச்சியின் போக்கில் மாபெரும் காரணியாக மாறுகிறது. இருப்பினும், அந்தச் செல்வாக்கின் வரம்புகள் பல்வேறு முந்தைய வரலாற்று காரணிகளால் நிபந்தனைக்குட்படுத்தப்படுகின்றன. அத்தோடு, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாறுபாடுகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

கட்சி செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், அதிகாரத்தைக் கைப்பற்றும்போது அது எதிர்கொள்ளும் சமூக நிலைமைகளாலும் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது. போல்ஷிவிக் கட்சி, ஆணைகள் மூலம், உற்பத்திச் சாதனங்கள் மீதான தனியார் உடைமையை ஒழிக்க முடியும், ஆனால் அது ஆயிரம் ஆண்டுகால ரஷ்ய வரலாற்றை ஒழிக்க முடியாது. பல நூற்றாண்டுகளாக ரஷ்யாவில் உருவாகியிருந்த சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் பின்தங்கிய நிலைமைகளை ஒழிக்க முடியவில்லை. கல்வியறிவில்லாத ஒரு விவசாயியை ஒரே இரவில் கல்வியறிவு பெறச் செய்ய முடியாது. அரசியல், சமூக கலாச்சாரத்தை ஒருபோதும் அனுபவிக்காத வெகுஜனங்களுக்குக் கற்பிக்க முடியாது. ரஷ்யாவில் சமூக சக்திகளை வடிவமைப்பது தாங்கள் மட்டுமல்ல என்பதை போல்ஷிவிக்குகள் புரிந்து கொண்டனர். அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய சமூகத்தால் அவைகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. மிகவும் முன்னேறிய தொழில்நுட்பம், விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தை அணுகக்கூடிய மேற்கு ஐரோப்பாவின் தொழிலாள வர்க்கம் அந்த வளங்களை சோவியத் ரஷ்யாவுக்கு கிடைக்கச் செய்யாவிட்டால், போல்ஷிவிக் ஆட்சி மூழ்கடிக்கப்படும் என்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டதால், போல்ஷிவிக்குகள் உலகப் புரட்சியின் மீது தங்கள் பார்வையை மிகவும் உறுதியாக வைத்திருந்தனர். 1921 ஆண்டளவில், இளம் தொழிலாளர் அரசு முகங்கொடுக்கும் மிகப் பெரிய ஆபத்து ஏகாதிபத்திய இராணுவத் தாக்குதலின் அச்சுறுத்தல் அல்ல, மாறாக சமூக பிற்போக்குத்தனத்தின் மரபு மற்றும் வர்க்க சக்திகளின் சாதகமற்ற உறவாக இருந்தது.

1921 ஆம் ஆண்டின் முற்பகுதியில், உள்நாட்டுப் போரில் வெண்படைகளுக்கு எதிராக வெற்றி பெற்ற போதிலும், ஆட்சியின் சமூக அடித்தளம் பலவீனமடைந்து வருகிறது என்பது மேலும் மேலும் தெளிவாகிவிட்டது. பெரிய தொழிற்துறை மையங்கள் பேரழிவுகரமான சரிவிற்கு உள்ளாகின. போல்ஷிவிக் கட்சியில் இருந்த பல சிறந்த தொழிலாளர்கள் போர்முனையில் இறந்துவிட்டனர். உயிர் பிழைத்தவர்களில் பலர் அரசு இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டனர். பழைய போல்ஷிவிக் தொழிலாளர்கள் தங்கள் பணியிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில், விவசாயிகள் மேலும் மேலும் அமைதியற்றவர்களாக இருந்தனர், 1921 ஆம் ஆண்டின் முற்பகுதியில் போர்க் கம்யூனிசக் கொள்கையைத் தொடர முடியாது என்பது தெளிவாகிவிட்டது. 'போர்க் கம்யூனிசம்' என்பது கம்யூனிசம் அல்ல. உற்பத்தி சக்திகளின் மிக உயர்ந்த வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக வடிவமாக கம்யூனிசத்தை மார்க்சிசம் கருதுகிறது என்ற அர்த்தத்தில் அங்கு சமூகத்தின் அனைத்து செல்வங்களும் வெகுஜனங்களுக்கு நியாயமாக விநியோகிக்கப்பட முடியும், ஏனெனில் மிகுநிறைவான பொருட்கள் கிடைக்கின்றன. அதற்கு மாறாக, இது செம்படைக்கு ஆடை உற்பத்தி, உணவளித்தல் மற்றும் ஆயுதம் வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காகத் தேவையான மத்தியப்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் விநியோக முறையாகும். 1921 மார்ச்சில் குரோன்ஸ்டாட்டில் (Kronstadt) நடந்த எழுச்சியானது போல்ஷிவிக்குகளுக்கு பாதையை மாற்றுவது அவசியம் என்பதை தெளிவுபடுத்தியது.

போல்ஷிவிக் அரசாங்கமும், 1921ல் மேற்கு ஐரோப்பாவில் இன்னும் நீண்ட காலப் புரட்சி வளர்ச்சியைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தது. போருக்குப் பிந்தைய புயல்களை மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் எதிர்கொண்டு கடந்து சென்றது. எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும் ஒரு புதிய சமநிலை ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. போல்ஷிவிக் அரசாங்கம் ஒரு புதிய புரட்சிகர அலை வரும்வரை உயிர்வாழக்கூடிய ஒரு நீண்டகால மூலோபாயத்தை உருவாக்குவது அவசியமாக இருந்தது. மேலும், முந்தைய புரட்சிகளின் தோல்விக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணி புதிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவமின்மை என்பதை போல்ஷிவிக்குகள் அங்கீகரித்தனர். 1914 ஆகஸ்டில் இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்பால் அம்பலப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கத் தலைமையின் நெருக்கடியைக் கடக்க அதிக காலம் எடுக்கும் என்பது தெளிவாகிவிட்டது. மூன்றாம் அகிலத்தை ஸ்தாபிப்பது ஒரு புதிய புரட்சிகர முன்னணிப்படையை உருவாக்கும் செயல்முறையை மட்டுமே தொடங்க முடியும். 1918 மற்றும் 1921 க்கு இடையில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள், மூன்றாம் அகிலத்தின் இளம் கட்சிகள் வெகுஜனங்களின் தலைமைப் பொறுப்பில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்னர் ஒரு மிகப் பெரிய அளவு அரசியல் கல்வியூட்டல் தேவைப்பட்டது என்பதற்கான நடைமுறைச் சான்றுகளை வழங்கியது.

இந்தக் காலகட்டத்தில் போல்ஷிவிக் கட்சி என்ன செய்யப் போகிறது? மார்ச் 1921 இல் 10வது கட்சி மாநாட்டில் லெனின் ஒரு பொது பின்வாங்கலுக்கு அழைப்பு விடுத்தார். ஆரம்பத்தில் 1920ல் ட்ரொட்ஸ்கியால் முன்மொழியப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைக்காக (NEP) அவர் வாதாடினார். சோவியத் ரஷ்யாவிற்குள் முதலாளித்துவ சக்திகளுக்கு பரந்த அளவிலான சலுகைகளின் அடிப்படையில் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான சிதைந்த உறவுகளை மீட்டெடுப்பதன் மூலமும், விவசாயிகளை அமைதிப்படுத்துவதன் மூலமும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை புதுப்பிப்பதன் மூலமும் ரஷ்ய பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே அதன் நோக்கமாக இருந்தது. இதைத்தான் லெனின் வெளிப்படையாக அரசு முதலாளித்துவத்தின் ஒரு வடிவம் என்று வர்ணித்தார். இலாபத்தை அடையும் நம்பிக்கையில் விவசாயிகள் மீண்டும் தங்கள் பயிர்களை நட்டு அறுவடை செய்யும் நிலைமைகளை உருவாக்குவதும், இந்த பயிர் தானியங்களை நகரங்களுக்கு வழங்குவதும், நகர்ப்புற மக்களுக்கு உணவளிப்பதும், இந்த வழியில், சோவியத் பொருளாதாரத்தை புதுப்பிப்பதும் இதன் நோக்கமாக இருந்தது. குறிப்பாக, NEP ஆனது ஒரு பின்னடைவைக் குறிக்கிறது என்பதை லெனின் ஒப்புக்கொண்டார். அவர் இவ்வாறு கூறினார்: 'இது ஒரு பின்வாங்கலாகும். சாதகமற்ற சர்வதேச நிலைமை மற்றும் நீண்டகால மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை நாம் எதிர்கொண்டுள்ளதால் இந்த பின்வாங்கலைச் செய்கிறோம். சோவியத் புரட்சி மிக விரைவாக ஒரு உலகப் புரட்சியைத் தொடங்கும் என்ற எங்கள் ஆரம்ப நம்பிக்கை நனவாகவில்லை, நாம் வேறு கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.'

ட்ரொட்ஸ்கியும் லெனினும் 1921ல் 10வது கட்சி மாநாட்டில் செம்படை வீரர்களால் சூழப்பட்டு நிற்கும் காட்சி

புதிய பொருளாதாரக் கொள்கையானது (NEP) தனியார் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு விரிவான சலுகைகளை வழங்கியது. கிராமப்புறங்களில், விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யவும், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், பணம் அல்லது பணமல்லாத வேறு வகையில் வரி செலுத்திய பின்னர், தங்கள் உபரியை சந்தையில் விற்கவும் அனுமதிக்கப்பட்டனர். குலாக்குகள் (kulaks) என்று அழைக்கப்படும் பணக்கார விவசாயிகளின் அடுக்கு விரைவாக உருவானது. நகரங்களுக்குள், நெப்மென்கள் (Nepmen) என்று அழைக்கப்படுபவர்களால் உருவகப்படுத்தப்பட்ட தனியார் வர்த்தகமும் வணிகமும் செழித்தது, இதில் சிறு வர்த்தகர்கள் மட்டுமல்லாமல் பெரிய அளவிலான தொழில்முனைவோரும் அடங்குவர். 1922 வாக்கில் மாஸ்கோவில் ஒரு வர்த்தகப் பங்குச் சந்தை உருவாகி இருந்தது.

புதிய பொருளாதாரக் கொள்கையின் (NEP) விளைவுகள்

நான் சுட்டிக் காட்டியது போல, லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொள்வது ஐரோப்பாவில் புரட்சிகரப் போராட்டங்களின் முதல் அலையின் தோல்வியால் போல்ஷிவிக் ஆட்சியின் மீது திணிக்கப்பட்ட பின்வாங்கல் என்று விவரித்திருந்தார். புதிய பொருளாதாரக் கொள்கையின் (NEP) அரசியல் தாக்கம் குறித்து அவரும் மற்றவர்களும் வெளிப்படுத்திய கவலைகள், அந்தக் கொள்கையானது உருவாக்கிய பொருளாதார வெற்றிகளால் ஓரளவிற்கு தணிந்தன. பொருளாதார நிலை சீரானது. 1921 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் பெரிய அறுவடைகளின் உதவியுடன், சோவியத் ரஷ்யா பேரழிவிலிருந்து தப்பியது. எவ்வாறெனினும் புதிய பொருளாதாரக் கொள்கையானது அவசியமானது மற்றும் சரியானது என்றாலும், அது 'பாதகத்தன்மையை' கொண்டிருந்தது, அதன் விளைவுகள், முற்றிலும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், சோவியத் ஆட்சியின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவைகளாக இருந்தன.

சோவியத் ரஷ்யாவின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அதே வேளையில், புதிய பொருளாதாரக் கொள்கையானது (NEP) முக்கியமாக ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம் அல்லாத வர்க்கங்களுக்கு நேரடி நன்மை பயப்பதாக இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் வெற்றிகள் விவசாயிகளின் செல்வந்த அடுக்குகளின் நிலையையும் தன்னம்பிக்கையையும் வலுப்படுத்தியது, ஆனால் தங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்ததாக உணர்ந்த வணிகர்களின் அடுக்குகளின் நிலையும் தன்னம்பிக்கையும் வலுவடைந்தது. 'சிவப்பு மேலாளர்கள்' என்று வஞ்சப் புகழ்ச்சியாக அழைக்கப்படும் NEP தொழிற்துறையதிபர்களின் மிகவும் செல்வாக்கு மிக்க குழு உருவானது, அவர்களில் பலர் பழைய ரஷ்ய முதலாளித்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் புதிய சூழ்நிலையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மீண்டும் கணிசமான அந்தஸ்தை அடைந்தனர்.

தேசியவாதப் போக்குகளின் மறுமலர்ச்சி

NEP இன் பொருளாதாரக் கொள்கைகள் தவிர்க்கவியலாமல் அடிப்படை அரசியல் மாற்றங்களில் பிரதிபலித்தன. முதலாவதாக, போல்ஷிவிக் கட்சியின் அளவிலும் அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பெப்ரவரிப் புரட்சிக்கு முன்னதாக போல்ஷிவிக் கட்சியில் 10,000ம் உறுப்பினர்களுக்கு மேல் இருக்கவில்லை. ஆண்டின் போக்கில், அது மிக வேகமாக வளர்ந்தது, அதன் சரியான அளவு குறித்து பல்வேறு மதிப்பீடுகள் இருந்தாலும், போல்ஷிவிக்குகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அக்டோபரில் குறைந்தது 45,000 ஆக உயர்ந்தது என்று நியாயமான உறுதியுடன் கூறலாம். அது கணிசமாக பெரியதாக இருந்திருக்கலாம். அதன் சரியான அளவு எதுவாக இருந்தாலும், போல்ஷிவிக் கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவான மற்றும் போர்க்குணமிக்க கூறுகளில் பெரும்பகுதியை உள்ளடக்கியிருந்தது. உள்நாட்டுப் போரின் போது கட்சி தொடர்ந்து விரிவடைந்தது, குறிப்பாக இறுதி வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரித்தன. உள்நாட்டுப் போரின் முடிவில் இணைந்தவர்கள் பெரும்பாலும் ஆரம்பத்தில் இணைக்கப்பட்டவர்களை விட மிகவும் வேறுபட்ட பண்பாற்றலுள்ளவர்களாக இருந்தனர். எனவே, 1921 வாக்கில் கட்சி 386,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது என்பது லெனினால் சில கவலைகளுக்கு காரணமாகப் பார்க்கப்பட்டது. பிழைப்புத் தொழில் மற்றும் சலுகைகளைத் தேடி போல்ஷிவிக் கட்சிக்குள் ஊடுருவிய 'அயோக்கியர்களைப்' பற்றி அவர் அடிக்கடி பேசினார். 1921 மார்ச் மாதம் நடந்த 10வது மாநாட்டில் அத்தகைய சக்திகளை கட்சியிலிருந்து அகற்றுவதற்கான அரசியல் களையெடுப்பைத் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

1921 வரை போல்ஷிவிக் கட்சியின் வளர்ச்சி குறித்த ஒரு கண்ணோட்டத்தை இங்கு காணலாம். குறிப்பிட்ட ஆண்டில் எத்தனை புதிய உறுப்பினர்கள் சேர்ந்தனர் என்பதை நடுத்தர பத்தி குறிக்கிறது. எழுதியவர்: கெய்ல் லோனர்கன், ''காகித கம்யூனிஸ்டுகள்'-ரஷ்ய உள்நாட்டுப் போரில் போல்ஷிவிக் கட்சி உறுப்பினர்', இல்: கம்யூனிஸ்ட் மற்றும் பிந்தைய கம்யூனிச ஆய்வுகள், மார்ச் 2013, தொகுதி 46, எண் 1 (மார்ச் 2013), பக். 140.

இந்த அரசியல் களையெடுப்பு இருந்தபோதிலும், கட்சிக்குள் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. 1921 வாக்கில், நான்கு வருட புரட்சி மற்றும் உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ஏற்கனவே மூன்று ஆண்டு உலகப் போருக்கு முன்னதாக, போல்ஷிவிக் கட்சிக்குள் ஒரு வகையான அரசியல் முழுச்சோர்வு காணப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்களும் பெண்களும் கத்தியின் விளிம்பில் எவ்வளவு காலம் வாழ முடியும்? தன்னலமற்ற வீரமிக்க அன்றாட வாழ்க்கை முறையாக இருக்கும் வரலாற்று நிலைமைகள் அவற்றின் இயல்பிலேயே விதிவிலக்கானவையாகும். 'தன்னலமற்ற வீரமிக்க வாழ்க்கை முறைக்கு' எதிரான ஒரு பின்னடைவு உருவாகும்போது ஒரு புள்ளி வருகிறது - அது ஒவ்வொரு புரட்சியிலும் காணப்படுகிறது. 1921 வாக்கில் போல்ஷிவிக் ஆட்சியானது அதன் மிகப் பெரிய உள் மற்றும் வெளிப்புற எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டதாகத் தோன்றியது. தூக்கி எறியப்படும் அல்லது வீழ்ச்சியடையும் அபாயம் குறைந்தபோது, புரட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக மிகவும் சகித்துக் கொண்ட பலரிடமும் தங்கள் வாழ்க்கையில் எஞ்சியிருந்தவற்றில் ஓரளவு வசதியான நிலைமைகளை அனுபவிக்கவும், தங்கள் கடந்தகால முயற்சிகளின் பலனை ஓரளவிற்கு அறுவடை செய்யவும் விருப்பம் எழுந்தது.

சோவியத் ரஷ்யாவில் நிலவிய புறநிலை நிலைமைகளே இந்த மனநிலைகளுக்கு ஒரு சிறப்பு அரசியல் முக்கியத்துவத்தை அளித்ததாகும். அங்கு புரட்சியின் சமூகத் தன்மைக்கும் ரஷ்யாவின் பொதுவான பின்தங்கிய நிலைக்கும் இடையிலான முரண்பாடுதான் வாழ்க்கையின் மையமான மற்றும் மேலான உண்மையாக இருந்தது. உடனடி அச்சுறுத்தல்களில் இருந்து ஆட்சி தன்னைப் பாதுகாத்துக் கொண்ட போதிலும், மக்கள் மிகவும் தீவிர வறுமையான நிலைமைகளின் கீழ் வாழ்ந்தனர். கட்சி உறுப்பினர்கள் வேகமாக வளர்ந்து வரும் ஒரு அரசு எந்திரத்தின் பணிகளுக்குள் இழுக்கப்பட்டபோது, அவர்கள் ஒரு சமூக நிலை மட்டத்தில் வைக்கப்பட்டனர், இது பரந்த தொழிலாளர்களுக்குக் கிடைக்காத சலுகைகளை அவர்களுக்கு வழங்கியது. இந்த சலுகைகள் விதிவிலக்காக ஆடம்பரமானதாகத் தெரியவில்லை என்றாலும், இப்போது அவற்றை அனுபவித்த பலரின் அரசியல் கண்ணோட்டத்தில் ஒரு காரணியாக மாற அவைகள் போதுமானவையாக இருந்தன.

புதிய பொருளாதாரக் கொள்கையானது (NEP) பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு நிகழ்வை உருவாக்கியது: அதாவது தேசியவாத உணர்வுகளின் மறுமலர்ச்சியாகும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம் மற்றும் சர்வதேசப் புரட்சி என்ற பெயரின் அடிப்படையில் போல்ஷிவிக்குகளால் ரஷ்யப் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. உலக வரலாற்றில் ஒருபோதும் நாட்டின் தேசிய மரபுகளை இவ்வளவு தீர்க்கமாக உடைத்து அதிகாரத்தை வென்ற ஒரு கட்சி இருந்ததில்லை. உண்மையில், போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கணிசமான பகுதியினர் ரஷ்யாவிற்கு வெளியே பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். 1917 ஏப்ரலில் லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது, அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்திருந்தார். 1900 முதல், அவர் 1905 புரட்சியின் சூறாவளி மற்றும் அதன் உடனடி விளைவுகளின் போது சுமார் ஒன்றரை ஆண்டுகளை மட்டுமே ரஷ்யாவில் கழித்தார். ட்ரொட்ஸ்கி 1917க்கு முந்தைய 10 ஆண்டுகள் புலம்பெயர்வில் வாழ்ந்தார், அது அசாதாரணமானது அல்ல. ரஷ்யப் புரட்சியின் தலைவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள். பலர் பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்களாக இருந்தனர். லெனின் ரஷ்யன், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என்று நான் நம்புகிறேன். முக்கிய கட்சித் தலைவர்களில், ஸ்டாலினுக்கு சர்வதேச அனுபவம் இல்லாததாலும், எந்த வெளிநாட்டு மொழியிலும் பேச முடியாத அவர் மிகவும் விதிவிலக்கானவராக இருந்தார்.

ஆனால் 1917 இல், ஸ்ராலினும் கூட போல்ஷிவிக் கட்சிக்குள் நிலவிய புரட்சியின் சர்வதேசியவாத கருத்தாக்கத்தை சவால் செய்திருக்க மாட்டார். மேலும், உண்மையில், தூக்கியெறியப்பட்ட வர்க்கங்கள் போல்ஷிவிக்குகளை ரஷ்யாவுக்கு முற்றிலும் அந்நியமான ஒரு அரசியல் சக்தி என்று கண்டித்தன. 1917இல் முதலாளித்துவ வர்க்கம் லெனினுக்கு எதிராக சுமத்திய முக்கிய குற்றச்சாட்டு, அவர் ரஷ்யாவின் ஒரு துரோகி என்றும், 'ஜேர்மன் தங்கத்தால்' பணம் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டவர் என்று கூறுவது தற்செயலானது அல்ல. புரட்சியின் உடனடி பின்விளைவுகளில், புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள் போல்ஷிவிக் கட்சியை பழைய ரஷ்யாவின் கலாச்சாரத்தில் அவர்கள் நேசிக்கும் அனைத்தையும் மீறுபவர்களாக கருதினர்.

ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கையின் (NEP) அறிமுகத்துடன், புரட்சியின் குறிப்பாக தேசியத் தன்மையை வலியுறுத்தும் அல்லது குறைந்தபட்சம் கவனத்தை ஈர்க்கும் போக்குகள் பெருகிய முறையில் பொதுவானதாக மாறின. ஆரம்பத்தில், இந்தப் போக்கு ரஷ்யப் புரட்சியுடன் நல்லிணக்கத்தை ஆதரித்த புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அதன் மிகவும் வெளிப்படையான வெளிப்பாட்டைக் கண்டது. 1921 ஆம் ஆண்டு மாறும் அடையாளங்கள் (Changing Landmarks  - Smena Vekh) தொகுதியில் வெளிவந்த ஒரு கட்டுரையில், நிக்கோலாய் உஸ்ட்ரியலோவ் என்ற எழுத்தாளர் புரட்சி தன்னை சோசலிச, கம்யூனிச, சர்வதேசியவாதி என்று அழைத்தாலும், இறுதி பகுப்பாய்வில், அது ரஷ்ய வரலாறு மற்றும் ரஷ்ய கலாச்சாரத்தின் விளைபொருள் என்று வாதிட்டார். [1] புதிய பொருளாதாரக் கொள்கை என்பது சர்வதேசப் புரட்சிக்கான நேரத்தை வென்றெடுப்பதற்காக போல்ஷிவிக்குகள் மேற்கொண்ட தந்திரோபாய பின்வாங்கல் மட்டுமல்ல என்று உஸ்ட்ரியலோவ் எழுதினார். மாறாக, புரட்சி அதன் உண்மையான ரஷ்ய வேர்களுக்குத் திரும்புவதாக இருந்தது; சோவியத் அரசு, அதன் தலைவர்களின் கூற்றுக்கள் எதுவாக இருந்தபோதிலும், ஒரு ரஷ்ய முதலாளித்துவ அரசாக பரிணமிக்க முடிவு செய்யப்பட்டது. புரட்சியை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதன் இயற்கையான ரஷ்ய மற்றும் முதலாளித்துவ வளர்ச்சி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று உஸ்ட்ரியலோவ் வலியுறுத்தினார்.

மாறும் அடையாளங்களின் (Changing Landmarks [Smena Vekh]) அட்டைப்படம், 1921

உஸ்ட்ரியலோவின் வாதங்கள் சோவியத் ரஷ்யாவிற்குள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு, ஒரு எதிரொலிப்பு தாளத்தை எழுப்பின. ஓரளவிற்கு, சோவியத் ஆட்சியின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியடைந்து வரும் கௌரவத்தை அங்கீகரிப்பதாக உஸ்ட்ரியலோவின் கருத்துக்கள் வரவேற்கப்பட்டன. ஆனால் இந்த விடையிறுப்பு சோவியத் ரஷ்யாவிற்குள் தேசியவாத உணர்வுகளின் மீளெழுச்சியையும் பிரதிபலித்தது, இதற்கு கட்சியின் பெரும் பிரிவுகள் —அவர்களில் பெரும்பாலானோர் 1917 க்கு முந்தைய காரியாளர்களின் பரந்த சர்வதேச அனுபவத்தையும் கோட்பாட்டு அறிவையும் கொண்டிருக்கவில்லை— எந்த வகையிலும் விதிவிலக்கல்ல. புரட்சியின் ரஷ்யத் தன்மையைச் சித்தரித்து மகிமைப்படுத்திய போரிஸ் பில்னியாக் போன்ற பிரபலமான எழுத்தாளர்களைக் கொண்டு ஒரு இலக்கியக் குழு உருவாகத் தொடங்கியது.

1913 இல் நிக்கோலாய் உஸ்ட்ரியலோவ் [Photo by GenR law / CC BY-SA 4.0]

இந்த வளர்ச்சியானது ரஷ்யப் புரட்சியின் சமூக முரண்பாடுகளில் வேரூன்றியிருந்தது. இது ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியால் வழிநடத்தப்பட்டது, ஆனால் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருந்த மில்லியன் கணக்கான விவசாயிகளின் ஆதரவில் தங்கியிருந்தது. ஆனால் புரட்சி குறித்த விவசாயிகளின் அணுகுமுறை தெளிவற்றதாக இருந்தது. விவசாயிகள் தங்களுக்கு நிலம் கொடுத்த போல்ஷிவிக் புரட்சியை ஆதரித்தனர். ஆனால் கம்யூனிசத்திலும் சர்வதேச தொழிலாள வர்க்க ஒற்றுமையிலும் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

தேசியவாத உணர்வுகளின் மறுமலர்ச்சி விவசாயிகளின் கண்ணோட்டத்தை மட்டுமல்ல, வளர்ந்து வரும் அதிகாரத்துவத்தின் பணியாளர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தியது, புதிய தேசிய சோவியத் அரசில் சலுகை பெற்ற பதவிகளை வகித்தவர்களுக்கு இந்தப் புரட்சி உருவாக்கிய சலுகைகளின் கண்ணோட்டத்தில் இருந்து புரட்சியை மேலும் மேலும் பார்க்க வந்தனர். லெனின் தனது அரசியல் புத்திசாலித்தனத்துடன் இதைக் கண்டுகொண்டார்.

லெனினின் இறுதி நாட்கள்

மார்ச் 1922 இல், NEP இன் ஒரு வருடத்திற்குப் பிறகு, லெனின் 11 வது கட்சி மாநாட்டில் அரசியல் அறிக்கையை வழங்கினார். அவர் மாறிவரும் அடையாளங்கள் என்ற கட்டுரைகள் குறித்து விரிவாகக் கையாண்டார், மேலும் உஸ்ட்ரியலோவின் வாதங்களின் ஆழமான அரசியல் முக்கியத்துவத்தை விளக்க முயன்றார். லெனினைப் பொறுத்தவரை, ரஷ்யப் புரட்சியின் போக்கைப் பற்றிய அதன் அவதானிப்புகள் அடித்தளம் இல்லாமல் இல்லை என்பதோடு, உண்மையில், சோவியத் அரசிற்குள் உண்மையான சமூக நிகழ்ச்சிப்போக்குகளைப் பிரதிபலித்தன.

விளாடிமிர் லெனின் 1919 ஆண்டளவில் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளினிலுள்ள தனது அலுவலகத்தில் இருக்கிறார் [AP Photo]

லெனினைப் பொறுத்தவரை, ரஷ்யப் புரட்சியின் ஆழமான சீரழிவுக்கான புறப்பாட்டுப் புள்ளியாக NEP மாறக்கூடும் என்பது எந்த வகையிலும் நினைத்துப் பார்க்க முடியாதது அல்ல. 'இப்படி நேர்மையாக இருப்பதன் மூலம், உஸ்ட்ரியலோவ் நமக்கு ஒரு பெரிய சேவையைச் செய்கிறார்' என்று லெனின் மாநாட்டில் கூறினார்.

நாங்களும், மற்றும் நானும், குறிப்பாக, என் நிலைப்பாட்டின் காரணமாக, ஒவ்வொரு நாளும் நிறைய உணர்ச்சிபூர்வமான கம்யூனிச பொய்கள், கம்யூனிச புரளிகளைக் கண்டு வெறுப்படையச் செய்யப்படுகிறோம். ஆனால் இப்போது இந்த கம்யூனிஸ்ட் பொய்களுக்குப் பதிலாக, மாறும் அடையாளங்கள் (ஸ்மேனா வேக் - Smena Vekh)  கட்டுரை நகல் எனக்குக் கிடைத்திருக்கிறது, அது மிகவும் தெளிவாக இவ்வாறு கூறுகிறது, 'பாருங்கள், விஷயங்கள் நீங்கள் கற்பனை செய்வது போல இல்லை. எல்லா இடங்களிலும் கோஷங்களால் அலங்கரிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கொடிகளுடன் நீங்கள் சாதாரண முதலாளித்துவ புதைகுழிக்குள் நழுவிக் கொண்டிருக்கிறீர்கள்.' [2]

லெனின் பின்வருமாறு தொடர்ந்தார்:

உஸ்ட்ரியலோவ் பேசும் விஷயங்கள் சாத்தியம் என்பதை நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். வரலாறு அனைத்து வகையான மாற்றங்களையும் அறிந்திருக்கிறது. உறுதியான நம்பிக்கை, விசுவாசம் மற்றும் பிற அற்புதமான அறநெறி குணங்களை நம்புவது அரசியலில் ஒரு தீவிரமான அணுகுமுறையைத் தவிர வேறில்லை. ஒரு சில மக்களுக்கு மிகச் சிறந்த அறநெறிப் பண்புகள் இருக்கலாம், ஆனால் வரலாற்றுப் பிரச்சினைகள் பரந்த வெகுஜனங்களால் தீர்மானிக்கப்படுகின்றன, அவைகள் ஒரு சிலருக்குப் பொருந்தவில்லை என்றால், சில நேரங்களில், அவர்களை மிகவும் கண்ணியமாக நடத்தாமல் போகலாம். [3]

உஸ்ட்ரியலோவ் தனக்காகவோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் சில ஆயிரம் புலம்பெயர்ந்தவர்களுக்காகவோ மட்டுமே பேசிக் கொண்டிருந்தால், அரசியல் அக்கறைக்கு எந்தக் காரணமும் இருந்திருக்காது. ஆனால், லெனின் இவ்வாறு எச்சரித்தார்:

மாறும் அடையாளங்கள் (ஸ்மேனா வேக் - Smena Vekh)  இன் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான முதலாளித்துவ அல்லது சோவியத் ஊழியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள், அவர்களின் பணியாக இருப்பது நமது புதிய பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்துவதாகும். இதுதான் உண்மையான மற்றும் முக்கியமான ஆபத்து, அதனால்தான் ஒன்றுகுவித்து முக்கியமான கேள்வியில் கவனம் செலுத்தப்பட வேண்டும்: அதாவது யார் வெற்றி பெறுவார்கள்? நான் போட்டி குறித்து பேசியிருந்தேன். இப்போது எங்கள் மீது நேரடித் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. எங்களை யாரும் கழுத்தைப் பிடிக்கவில்லை. நாளை என்ன நடக்கும் என்பதை நாம் இன்னும் பார்க்கவில்லை என்பது உண்மைதான், ஆனால் இன்று நாம் ஆயுத தாக்குதலுக்கு உட்படுத்தப்படவில்லை. ஆயினும்கூட, முதலாளித்துவ சமூகத்திற்கு எதிரான போராட்டம் நூறு மடங்கு மூர்க்கத்தனமானதாகவும் ஆபத்தானதாகவும் மாறிவிட்டது, ஏனென்றால் நாம் எப்போதும் நண்பர்களிடமிருந்து எதிரிகளிடம் சொல்ல முடியாது. [4]

லெனின் பின்னர் சோவியத் ஆட்சியின் மைய முரண்பாட்டை அடையாளம் கண்டு கொண்டார்:

மாஸ்கோவை அதன் 4,700 கம்யூனிஸ்டுகளுடன் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களை எடுத்துக்கொண்டால், மிகப்பெரிய அதிகாரத்துவ எந்திரத்தை, பிரமாண்டமான கூட்டத்தை நாம் எடுத்துக் கொண்டால், நாம் இதைக் கேட்க வேண்டும்: 'யார் யாரை வழிநடத்துகிறார்கள்?' இந்தக் கூட்டத்தை கம்யூனிஸ்டுகள் வழிநடத்துகிறார்கள் என்று உண்மையாகச் சொல்ல முடியுமா என்பது எனக்கு மிகவும் சந்தேகமாக இருக்கிறது. உண்மையைச் சொல்வதானால், அவர்கள் வழிநடத்தவில்லை, அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். நாம் குழந்தைகளாக இருந்தபோது நமது வரலாற்றுப் பாடங்களில் சொல்லப்பட்டதைப் போன்ற ஒன்று இங்கே நடந்தது: அதாவது சில நேரங்களில் ஒரு தேசம் மற்றொன்றை வெற்றிகொள்ளும், வெற்றிகொள்ளும் தேசமே வெற்றியாளன், தோற்கடிக்கப்பட்ட தேசம் வெற்றிகொள்ளப்பட்ட தேசமாகும். இது எளிமையானது மற்றும் அனைவருக்கும் புரியக்கூடியது. ஆனால் இந்த தேசங்களின் கலாச்சாரம் என்னவாகும்? இங்கே விஷயங்கள் அவ்வளவு எளிதானவை அல்ல. வெற்றிகொள்ளும் தேசம் தோற்கடிக்கப்பட்ட தேசத்தை விட அதிக கலாச்சாரமானதாக இருந்தால், முந்தையது தனது கலாச்சாரத்தை பிந்தைய தேசத்தின் மீது திணிக்கிறது; ஆனால் அதற்கு நேர்மாறாக இருந்தால், தோற்கடிக்கப்பட்ட தேசம் தனது கலாச்சாரத்தை வெற்றிகொள்ளுவதன் மீது திணிக்கிறது. ரஷ்ய சோவியத் கூட்டாட்சி சோசலிசக் குடியரசு (R.S.F.S.R - Russian Soviet Federative Socialist Republic) இன் தலைநகரில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையா? 4,700 கம்யூனிஸ்டுகள் (கிட்டத்தட்ட ஒரு முழு இராணுவப் பிரிவு, அவர்கள் அனைவரும் மிகச் சிறந்தவர்கள்) அந்நிய கலாச்சாரத்தின் செல்வாக்கின் கீழ் வந்தார்களா? தோற்கடிக்கப்பட்டவர்கள் உயர்ந்த கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர் என்ற எண்ணம் இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அப்படியெல்லாம் இருக்கவில்லை. அவர்களின் கலாச்சாரம் துயரகரமானது, முக்கியமற்றது, ஆனால் அது இன்னும் நம்மை விட உயர்ந்த மட்டத்தில் உள்ளது. துயரகரமானதாகவும், தாழ்ந்ததாகவும் இருந்தாலும், இது நமது பொறுப்பான கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை விட உயர்ந்தது, ஏனெனில் பிந்தையவர்களுக்கு நிர்வாகத் திறன் இல்லை. [5]

இந்த உரையின் மூலம் லெனின் தனது அரசியல் வாழ்க்கையின் கடைசி சிக்கலான ஆண்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டிய ஒரு அரசியல் கருப்பொருளை எழுப்பினார். 1921 ஜனவரி மாதத்திலேயே, லெனின் சோவியத் ஆட்சியை 'அதிகாரத்துவ சிதைவுகளைக் கொண்ட தொழிலாளர் அரசு' என்று வரையறுத்தார். [6] ஒரு மிகப் பெரிய மற்றும் பின்தங்கிய நாட்டை நிர்வகிக்கும் சிக்கலான பணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரிய அரசு அதிகாரத்துவத்தின் தேவையை உருவாக்கியதால், ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான அனுபவமிக்க புரட்சிகர காரியாளர்களை நீண்ட காலத்திற்கு முன்பே இருட்டடிப்புச் செய்து மறைத்துவிட்டு பழைய ஜாரிச அரசு இயந்திரத்தின் அதிகாரிகளிடமிருந்து ஆட்சேர்ப்பு செய்ய ஆட்சி நிர்பந்திக்கப்பட்டதால், கட்சியின் மாறிவரும் சமூக தன்மை மற்றும் கண்ணோட்டத்தைப் பற்றி மேலும் மேலும் லெனின் எச்சரிக்கையடைந்தார். சோவியத் ஆட்சி எதிர்கொண்ட பயங்கரமான முரண்பாட்டை லெனின் உணர்ந்தார். புரட்சியைக் பாதுகாப்பதற்கு புதிய பொருளாதாரக் கொள்கை அவசியமானதாக இருந்தது, ஆனால் வளர்ச்சியின் சில சூழ்நிலைகளின் கீழ், அதன் அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடிய நிலைமைகளையும் அது துரிதப்படுத்தியது.

இந்த உரையை நிகழ்த்திய இரண்டே மாதங்களில் லெனினுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் பேச்சு சக்தியை இழந்து முடமாக்கப்பட்டார். ஆனால் அவர் வியக்கத்தக்க வகையில் விரைவாக குணமடைந்தார், 1922 இலையுதிர்காலத்தின் முற்பகுதியில் அவர் தலைமைப் பதவிக்குத் திரும்பினார். இருப்பினும், கட்சியிலும் அரசிலும் இப்போது அவர் எதிர்கொண்ட நிலைமை, அவரது முந்தைய எச்சரிக்கை அவர் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக நிரூபிக்கப்படுகிறது என்பதை அவருக்கு உணர்த்தியது. லெனின் நோய்வாய்ப்படுவதற்குச் சற்று முன்னர் எடுக்கப்பட்ட ஒரு முடிவால் தலைமைக்குள் ஏற்பட்ட ஒரு சூழ்நிலை லெனினின் அச்சங்களை அதிகப்படுத்தியது. அதுதான் ஸ்டாலின் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதாகும்.

கட்சியிலும், அரசிலும் யார் பதவி வகிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் திறனை ஸ்டாலினுக்கு இந்தப் பதவி வழங்கியது. ஸ்ராலினின் கீழ், பொதுச் செயலாளர் பதவி ஒரு பரந்த ஆதரவு நடவடிக்கையின் மையமாக மாறியது. மேலும் ஸ்டாலின் தனது கூட்டாளிகளை முக்கிய பதவிகளில் அமர்த்த அந்தப் பதவியைப் பயன்படுத்துவதற்கான வரம்பற்ற வாய்ப்பை வெறித்தனத்துடன் பயன்படுத்தினார். இவ்வாறாக, ஸ்டாலினால் படிப்படியாக ஒரு பெரிய தனிப்பட்ட ஆதரவாளர்களின் வலையமைப்பை உருவாக்க முடிந்தது, அவர்கள் தங்கள் பிழைப்புத் தொழில் மற்றும் வசதிகளை அவரது ஆதரவால் பெற வேண்டியிருந்தது. அதேசமயம், பெரும்பாலும் தான் நம்பாதவர்களை ஸ்டாலின் ஓரங்கட்டினார். ட்ரொட்ஸ்கியை தனிமைப்படுத்துவதற்கான ஸ்ராலினுக்கு மிகவும் பிடித்த வழிமுறைகளில் ஒன்று, சோவியத் ரஷ்யாவுக்கு வெளியே தூதுவர் பதவிகளுக்கு அடோல்ஃப் ஜோஃப் போன்ற ட்ரொட்ஸ்கியின் நெருங்கிய ஆதரவாளர்களை நியமிப்பதாகும். கட்சி அமைப்பின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நியமனங்களின் அடிப்படையிலான நடைமுறை விரிவுபடுத்தப்பட்டது, மேலும் இது தலைமையின் மீது எந்த வகையான அரசியல் கட்டுப்பாட்டையும் செலுத்துவதற்கான உறுப்பினர்களின் திறனை வெகுவாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. உள்ளூர் கட்சி அமைப்புகளின் தலைவர்கள் தங்கள் பகுதியால் தேர்ந்தெடுக்கப்படுவதை விட பொதுச் செயலாளரால் நியமிக்கப்படுவது மிகவும் பொதுவானதாகிவிட்டது.

பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க்கில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது அடோல்ஃப் ஜோஃப் (இடது) மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி

1922 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் லெனின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் திரும்பியபோது, அவர் இல்லாதபோது ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அவர் திகிலடைந்தார். லெனினால் தான் தோற்றுவித்த கட்சியை அடையாளம் காண முடியவில்லை என்றால் அது மிகைப்படுத்தலாகாது. நிச்சயமாக, அவர் எல்லாப் பழைய முகங்களையும் அடையாளம் கண்டார், ஆனால் எப்படியோ விளையாட்டின் விதிகள் மாறிவிட்டதை அவர் உணர்ந்தார். லெனின் தேர்ந்தெடுத்துக் கல்வியூட்டப்பட்டவர்கள், அவரது தொலைநோக்குப் பார்வையாலும், மேதைமையாலும் பெருமளவு வடிவமைக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களின் விளைவாக உயர்ந்தவர்கள், பொதுவாக அந்த இலக்குகள் இறுதியில் பயனளிக்கும் வர்க்க நலன்கள் குறித்து தேவையான விழிப்புணர்வோ அக்கறையோ இல்லாமல், இப்போது தங்கள் சொந்த அரசியல் நோக்கங்களை தொடர்கின்றனர்.

புதிய மற்றும் விரும்பத்தகாத கட்சிச் சூழலில் ஒரு வலதுசாரி அரசியல் நோக்குநிலை படிப்படியாக உருவெடுத்து வருகிறது என்பதை லெனினுக்கு உணர்த்தியதானது, அரசுக் கொள்கையின் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்தது. அவர் இல்லாத காலத்தில், வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகத்தைக் கைவிடுமாறு புக்காரின் மற்றும் சோகோல்னிகோவ் ஆகியோரின் முன்மொழிவுகளுடன் ஸ்டாலின் உடன்பட்டார் என்பதை அவர் அறிந்து கொண்டார். இது லெனினை மிகவும் அச்சமடையச் செய்தது, ஏனெனில் இது சோவியத் ஆட்சியின் மிக முக்கியமான வழிமுறைகளில் ஒன்றான செயல்பாடுகளும் செல்வாக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையால் (NEP) பெரிதும் அதிகரித்த முதலாளித்துவ சக்திகளின் பொருளாதார வலிமையை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அதன் மிக முக்கியமான வழிமுறைகளில் ஒன்றைப் பறிப்பதாகும். கிராமப்புறங்களிலும் நகரத்திலுமுள்ள முதலாளிகள் ஒருவருக்கொருவர் விற்க முடியும். அவர்கள் அரசுக்கும் விற்கலாம். ஆனால் அவர்களால் நேரடியாக வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்க முடியாது. அனைத்து வெளிநாட்டு வர்த்தகமும் அரசின் கைகளூடாகச் செல்ல வேண்டும். ரஷ்ய முதலாளிகளும் செல்வந்த விவசாயிகளும் ஒரு முறை சர்வதேச மூலதனத்துடன் நேரடித் தொடர்புகளை ஸ்தாபிக்க முடிந்தால், தொழிலாளர் அரசு ஒரு மிகப் பெரும் மற்றும் கட்டுப்படுத்த முடியாத பொருளாதார சக்தியை எதிர்கொள்ளும் என்று போல்ஷிவிக் ஆட்சி அஞ்சியது. எனவே, ஏகபோகத்தைக் கைவிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தபோது, லெனின் ஆழ்ந்த எச்சரிக்கையடைந்தார். மேலும், தனது விசாரணைகளுக்கு காட்டப்பட்ட அலட்சியத்தால் அவர் கோபமடைந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், லெனின் லியோன் ட்ரொட்ஸ்கி பக்கம் திரும்பினார். ட்ரொட்ஸ்கியும் ஏகபோகத்தைக் கைவிடும் திட்டத்தை எதிர்த்தார் என்பதை அறிந்து அவர் நிம்மதியடைந்தார்.

ஏகபோகத்தை கைவிடுவதற்கு எதிராக ஒரு அரசியல் அணியை உருவாக்க வேண்டும் என்று லெனின் ட்ரொட்ஸ்கிக்கு முன்மொழிந்தார். இதை அறிந்த ஸ்டாலின், தனது அரசியல் பாதையில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததால், அதீத துணிச்சலுடன் இருப்பதை விட எச்சரிக்கையாக இருப்பது புத்திசாலித்தனம் என்பதை அவர் புரிந்துகொண்டார். எனவே அவர் ஏகபோகத்தை கைவிடுவதற்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டார். லெனின் இந்த வெற்றியை வரவேற்றார், மேலும் அவர் ட்ரொட்ஸ்கிக்கு இவ்வாறு எழுதினார்: 'ஒரு தாக்குதல் கூட இல்லாமல், ஒரு எளிய கையாளல் மூலம் நிலைப்பாட்டை எடுக்க முடிந்தது போல் தெரிகிறது' என்றார். [7]

ஆகஸ்ட் 1922 இல் கோர்க்கியில் லெனின்

லெனினின் குறிப்பானது, அவர்கள் தங்கள் அரசியல் தாக்குதலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அதிகாரத்துவத்தின் அதிகரித்து வரும் சுமை குறித்து விவாதிப்பதற்காக அவர் ட்ரொட்ஸ்கியை சந்தித்தார். பின்னர் ட்ரொட்ஸ்கி நினைவுகூர்ந்தபடி, 'பொதுவாக' அதிகாரத்துவத்திற்கு எதிராகவும் 'குறிப்பாக' ஸ்ராலின் தலைமையிலான அமைப்பு பணியகத்திற்கு (நிர்வாக முகாமைத்துவ பணியகம் -Organizational Bureau) எதிராகவும் ஒரு அணியை அமைப்பதற்கான ஒரு உடன்பாட்டிற்கு அவர்கள் வந்தனர்.

1922 டிசம்பரில், இந்த நேரத்தில், லெனின் தனது நாட்கள் எண்ணப்படுவதை உணர்ந்தார். அவர் தீவிர தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் அவரது முதல் பெரிய மாரடைப்புக்கு முந்தைய பிற அறிகுறிகளை அவர் அடையாளம் கண்டுகொண்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியின் நிலை, குறிப்பாக அதன் தலைமை குறித்த லெனினின் கவலை மற்றொரு சம்பவத்தால் தீவிரமடைந்தது. 1922 இன் பிற்பகுதியில், போல்ஷிவிக் அரசாங்கம் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாவதற்கு வழிவகுக்கும் தேசிய குடியரசுகளுக்கு இடையிலான புதிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை உருவாக்கும் இறுதிக் கட்டத்தில் இருந்தது. ரஷ்ய தேசியவாதத்தின் சமரசமற்ற எதிர்ப்பாளரான லெனின், இந்த ஏற்பாடுகள் முன்மொழியப்பட்ட சோவியத் கூட்டமைப்பிற்குள் உள்ள இதர தேசிய குழுவாக்கங்கள் மீது ரஷ்ய தேசத்தின் மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். சோவியத் கூட்டமைப்பில் அங்கம் வகிக்க வேண்டிய தேசிய இனங்களின் அபிலாஷைகள் மற்றும் உணர்வுகளுக்கு இடமளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மிகவும் முக்கியமான விவாதங்களில் ஜோர்ஜிய போல்ஷிவிக்குகளுடன் நடந்த கலந்துரையாடல்களில் மிகவும் உணர்திறன் வாய்ந்த விவாதங்களும் அடங்கும், அவர்கள் தங்கள் நியாயமான உரிமைகள் மீதான அத்துமீறல்கள் என்று அவர்கள் விளக்கியவை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். லெனின் அவர்களின் அணுகுமுறையில் சில அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால் ஸ்டாலின், ஜெர்ஜின்ஸ்கி மற்றும் ஆர்ட்ஜோனிகிட்சே ஆகியோரின் திமிர்பிடித்த மற்றும் ஆத்திரமூட்டும் நடத்தை பற்றி அறிந்தவுடன் அவரது பார்வைகள் மாறின. லெனினின் உண்மையான வெறுப்பிற்கு காரணம், பேச்சுவார்த்தைகளின் போது ஜோர்ஜியர்களில் ஒருவருக்கு எதிராக ஆர்ட்ஜோனிகிட்சே உண்மையில் உடல் வலிமையைப் பயன்படுத்தினார் என்பதை அவர் அறிந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் லெனின் போல்ஷிவிக் கட்சிக்குள் ஒரு ஆழமான அரசியல் நோய் அறிகுறியின் வெளிப்பாட்டைக் கண்டார், இது ரஷ்யப் புரட்சியின் சமூக முரண்பாடுகளின் விளைபொருளாக இருந்தது. லெனின் தனது அரசியல் வாழ்வின் இறுதி வாரங்களில் கட்டளையிட்ட அசாதாரணமான தொடர் ஆவணங்களை இந்த அரசியல் பின்னணியில்தான் புரிந்து கொள்ள முடியும். அவரது மரணத்திற்குப் பிறகு லெனினின் அரசியல் சாசனம் (Lenin’s Testament) என்று அறியப்பட்டவை இந்த ஆவணங்களில் அடங்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, லெனின் டிசம்பர் 24, 1922 திகதியிட்ட ஒரு குறிப்பில் போல்ஷிவிக் கட்சியின் முன்னணி ஆளுமைகளை மதிப்பாய்வு செய்தார். ஆனால் அவரது கவனம் 'தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் [மத்தியக் குழுவின்] இரண்டு தலைசிறந்த தலைவர்கள்' என்று அவர் மதிப்பிட்ட இரண்டு தனிநபர்கள் மீது இருந்தது. ட்ரொட்ஸ்கி குறித்து அவரது மதிப்பீடு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. அவருடைய 'சிறந்த திறமை' அவரை 'தற்போதைய மத்தியக் குழுவில் மிகவும் திறமையான மனிதராக' ஆக்கியது. [8] எவ்வாறெனினும், ட்ரொட்ஸ்கி 'பணி முற்றிலும் நிர்வாகப் பக்கத்தின் மீது அதீத ஈடுபாடு காட்டினார்' என்ற அவதானிப்பினால் இந்த பாராட்டு தூண்டப்பட்டது. இந்த இலேசான விமர்சனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சங்கங்கள் மீதான அவர்களின் புகழ்பெற்ற மோதலின் போது எழுந்த நீடித்த பதட்டங்களை பிரதிபலித்திருக்கலாம்.

ஆனால் ஸ்டாலினைப் பற்றிய லெனினின் விமர்சனம் மிகவும் வித்தியாசமானது: அதாவது 'தோழர் ஸ்டாலின், பொதுச் செயலாளரான பிறகு, அவரது கைகளில் எல்லையற்ற அதிகாரம் குவிந்துள்ளது, மேலும் அவர் எப்போதும் அந்த அதிகாரத்தை போதுமான எச்சரிக்கையுடன் பயன்படுத்த முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை' என்று லெனின் குறிப்பிட்டிருந்தார். [9]

போல்ஷிவிக் கட்சிக்குள் பிளவு ஏற்படும் அபாயம் ஸ்ராலினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையிலான உறவுகளில் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது என்ற லெனினின் வியக்கத்தக்க முன்னறிவிப்பு இந்த இருவரைப் பற்றிய அவரது சுருக்கமான குணாம்சத்தை விட மிக முக்கியமானது. இவ்விருவருக்கும் இடையிலான உறவுகளுக்கு லெனின் ஏன் இவ்வளவு பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் காட்டினார் என்று ஒருவர் கேட்கலாம். சிக்கலான அரசியல் பிரச்சினைகளை தனிநபர்கள் மற்றும் அவர்களின் அகநிலை நோக்கங்களின் மட்டத்திற்குக் குறைக்கும் கொச்சையான பொதுப் போக்குக்கு எதிராக லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அரசியல் பிரச்சினைகள் குறித்த தனது அணுகுமுறையை அவர் நிச்சயமாக மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக, ட்ரொட்ஸ்கிக்கும் ஸ்ராலினுக்கும் இடையிலான நீண்டகால பதட்டத்தில் போல்ஷிவிக் கட்சிக்குள் உண்மையான சமூக மோதல்களின் வெளிப்பாட்டை லெனின் அங்கீகரித்திருக்க வேண்டும். அவைகள் ரஷ்யப் புரட்சியை அச்சுறுத்திய சமூக முரண்பாடுகளின் பிரதிபலிப்பாக இருந்தன.

லெனினின் அரசியல் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது ட்ரொட்ஸ்கியுடன் வேறுபாடுகள் இருந்தபோதிலும், லெனின் சந்தேகத்திற்கு இடமின்றி ட்ரொட்ஸ்கியின் சாதனைகளின் வரலாற்றுத் தன்மையைப் புரிந்துகொண்டார். ட்ரொட்ஸ்கியின் சாதனைகளை அங்கீகரிப்பதை லெனினின் மனைவி நதெஸ்டா குருப்ஸ்கயா மட்டுமல்ல, அடோல்ப் ஜோஃப் ஆகியோரும் அங்கீகரித்தனர். 1917 க்கு முன்னர் ட்ரொட்ஸ்கியால் பாதுகாக்கப்பட்ட தத்துவார்த்த நிலைப்பாடுகள் ரஷ்யப் புரட்சியின் அபிவிருத்தியால் நிரூபணமானவை என்பதை ஒப்புக்கொண்டு, ட்ரொட்ஸ்கி மீது லெனின் மரியாதையையும் பாராட்டையும் வெளிப்படுத்துவதை தான் தனிப்பட்ட முறையில் கேட்டதாக ஜோஃப் நினைவு கூர்ந்தார். சாராம்சத்தில், ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களும் பங்களிப்புகளும் புரட்சியின் வெற்றியில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தன என்பதை லெனின் ஒப்புக்கொண்டார். அனைத்திற்கும் மேலாக, துல்லியமாக புறநிலை அடிப்படையில், லெனின் ட்ரொட்ஸ்கியை சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் ரஷ்யப் புரட்சியின் அபிலாஷைகளின் முதன்மையான அரசியல் பிரதிநிதியாக சந்தேகத்திற்கிடமின்றி அங்கீகரித்தார்.

இந்த வகையில்தான் ஸ்டாலின் போல்ஷிவிக் கட்சியின் தலைமைக்குள் ட்ரொட்ஸ்கியின் அரசியல் எதிர்ப்பை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஒன்பது மாதங்களுக்கு முன்னர், லெனின் உஸ்ட்ரியலோவின் கட்டுரையைக் குறிப்பிட்டிருந்தார். அவரது தேசியவாத கருத்துக்கள் 'ஆயிரக்கணக்கான மற்றும் பல்லாயிரக்கணக்கான முதலாளித்துவ அல்லது சோவியத் ஊழியர்களின் உணர்வுகளை' வெளிப்படுத்தின. இப்போது, ஸ்டாலினின் ஆளுமையில், புரட்சியின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக இருக்கும் பேரினவாதத்தில் மூழ்கியிருந்த ஒரு மீளெழுச்சியடைந்த ரஷ்ய அதிகாரத்துவத்தின் உருவகத்தை லெனின் கண்டார்.

லெனினின் அரசியல் சாசனத்தின் ஆவணத்தின் (Lenin’s Testament) இந்த விளக்கம் அடுத்தடுத்த நாட்களில் அவர் தயாரித்த விரிவான குறிப்புகளால் (memos) உறுதிப்படுத்தப்படுகிறது. டிசம்பர் 30, 1922 அன்று, லெனின் ஜோர்ஜியர்களுடனான சர்ச்சையில் தனது கவனத்தை திருப்பினார். மேலும் அவர் ஸ்டாலின் மற்றும் அவரது அடியாட்களின் நடவடிக்கைகள் குறித்து பேரழிவு ஏற்படுத்துவதைக் குறிக்கும் மதிப்பீட்டைச் செய்தார். 'ஆர்ட்ஜோனிகிட்ஸே உடல்ரீதியான தாக்குதல் வன்முறையைப் பிரயோகிக்கும் அளவுக்கு விஷயங்கள் வந்துவிட்டால், நாம் எத்தகைய ஒரு குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும்' என்று லெனின் அறிவித்தார்.

ஆனால் லெனின் இந்த 'குழப்பத்திற்கு' மையப் பொறுப்பை ஏற்றது ஆர்ட்ஜோனிகிட்ஸே அல்ல. பிரதான குற்றவாளி ஸ்டாலின் ஆவார், அவர் இப்போது 'ஒரு பெரிய ரஷ்ய பேரினவாதி, அடிப்படையில் ஒரு காடையன் மற்றும் கொடுங்கோலன், வழக்கமான ரஷ்ய அதிகாரத்துவத்தைப் போலவே' இப்போது விவரித்தார். ஸ்டாலினின் 'பகைமை' குறித்து அவர் இழிவாக குறிப்பிட்டார், 'அரசியலில் பொதுவாக பகைமைத் தன்மை மிகவும் அடிப்படையான பாத்திரங்களை வகிக்கிறது' என்று குறிப்பிட்டார்.

லெனின் இந்தக் குறிப்பை பின்வருமாறு முடித்தார்: 'இங்கே நமக்கு ஒரு முக்கியமான கொள்கைக் கேள்வி உள்ளது: அதாவது சர்வதேசியத்தை எவ்வாறு புரிந்துகொள்வது?' [10]

அதே குறிப்பில், லெனின் ஸ்டாலினை 'ஒரு உண்மையான மற்றும் துல்லியமாக 'தேசியவாத-சோசலிஸ்ட்' என்றும், ஒரு கொச்சையான பெரும்-ரஷ்ய கொடுமைக்காரன் என்றும் கண்டனம் செய்தார். [11]

1925 ஆண்டு திபிலிசியில் ஸ்டாலின் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளான அனஸ்டாஸ் மிகோயன் மற்றும் செர்கோ ஆர்ட்சோனிகிட்ஸே (வெள்ளைச் சட்டையில்)

தனது பகுப்பாய்வின் அரசியல் உட்குறிப்புகளை ஆராய்ந்தபோது, லெனின் தலைமைக்குள் ஸ்டாலினின் அதிகாரம் வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். எனவே, லெனின் ஜனவரி 4, 1923 அன்று, தனது அரசியல் சாசன ஆவணத்தின் பிரபலமான பின்னிணைப்பை பின்வருமாறு எழுதினார்: அதாவது 'ஸ்டாலின் மிகவும் முரட்டுத்தனமானவர், இந்தக் குறைபாடு, எங்கள் மத்தியிலும் கம்யூனிஸ்டுகளாகிய நம்மிடையேயும் மிகவும் சகிக்கக்கூடியதாக இருந்தாலும், ஒரு பொதுச் செயலாளரிடம் சகிக்க முடியாததாகி விடுகிறது. அதனால்தான், தோழர் ஸ்டாலினை அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக எல்லா விஷயங்களிலும் தோழர் ஸ்டாலினிடமிருந்து வேறுபடுபவர் ஒருவரை நியமிப்பது குறித்து தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அதாவது குறைந்த இரக்கமுள்ளவராக இருப்பது என்ற ஒரே ஒரு அனுகூலத்தை மட்டுமே தவிர்த்து, அதிக சகிப்புத்தன்மை, அதிக விசுவாசம், அதிக பணிவு, தோழர்களிடம் அதிக அக்கறை கொண்டவராக அவர் இருக்க வேண்டும். ” [12]

1923 ஏப்ரலில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள முடியுமா என்று லெனினுக்குத் தெரியாது. எனவே, அவர் தனது முழு ஆற்றலையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு பணிகளுக்கு அர்ப்பணித்தார்: முதலாவதாக, அவர் சோவியத் அரசின் இயந்திரத்திலுள்ள பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்ய முயன்ற இரண்டு முக்கிய கட்டுரைகளை எழுதினார். 'தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பரிசோதனையை நாம் எவ்வாறு மறுசீரமைக்க வேண்டும்' மற்றும் இரண்டாவதாக, 'சிறந்த குறைவான அளவு, அதுவே சிறந்த தரம்' என்ற கட்டுரைகளுடன், ஸ்டாலினுடன் ஒரு அரசியல் மோதலுக்கு லெனின் தயாரானார். அந்தக் கட்டுரைகளே ஸ்டாலினின் கட்சி முகாமைத்துவத்தையும் அரச நிர்வாகத்தையும் பற்றிய ஒரு மதிப்பீட்டை மிகவும் பேரழிவுகரமானதாக முன்வைத்தன, 'சிறந்த குறைவான அளவு, அதுவே சிறந்த தரம்' (Better Fewer, But Better) வெளியீட்டைத் தடுக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உண்மையில், லெனினுக்குக் காட்டப்பட வேண்டிய ஒரே ஒரு பிரதியை மட்டுமே கொண்ட பிராவ்தாவின் போலி பதிப்பில் கட்டுரையை வெளியிட அரசியல் குழுவில் முன்மொழியப்பட்டது. ஆனால், 1923 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அத்தகைய அரசியல் மோசடி உண்மையில் மேற்கொள்ளப்படவில்லை.

லெனினை சுற்றி சூழ்ச்சிகள் இருந்தபோதிலும், அவரது செயலாளரின் வார்த்தைகளில், 'ஸ்டாலினுக்கு எதிராக அவர் ஒரு வெடிகுண்டைத் தயாரித்துக் கொண்டிருந்தார்'. இது, ஸ்டாலினின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து 12வது மாநாட்டிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த ஆவணப்படுத்தப்பட்ட பதிவைக் கொண்டிருந்தது. இதன் எடுத்துக்காட்டுகளில் ஜோர்ஜிய போல்ஷிவிக்குகளை அவர் துன்புறுத்தியது மட்டுமல்லாமல், லெனினின் மனைவிக்கு எதிரான அவரது அவமானகரமான நடத்தையும் அடங்கும். கடைசியாக பெயரிடப்பட்ட அத்தியாயம் தொடர்பாக, லெனின், மார்ச் 5, 1923 அன்று, ஸ்டாலினிடமிருந்து மன்னிப்புக்கூறக் கோரினார் மற்றும் அதை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். முட்டாள்தனமான சதித்திட்டத்தில் அவரது அனைத்து திறமையையும் மீறி, அரசியல் போராட்டத்தில் லெனினுக்கு இணையாக ஸ்டாலின் ஒருபோதும் இருந்ததில்லை.

ஸ்டாலினிடம் லெனின் விரும்பியது வருத்தத் தெரிவிப்பு அல்ல. மாறாக, எழுத்துப்பூர்வ மன்னிப்பானது லெனினுக்கு தவறான நடத்தைக்கான மற்றொரு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரத்தை வழங்கியது, ஸ்டாலினை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வரவிருக்கும் மாநாட்டின் ஒப்புதலைப் பெறத் தேவையாக இருந்தது.

மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாரடைப்பு இல்லையென்றால், லெனின் தனது 'குண்டை' 12 வது மாநாட்டில் வீசியிருப்பார். ஆனால் அவர் திடீரென காட்சியில் இருந்து நீக்கப்பட்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குள் உள்ள சக்திகளின் உறவில் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், லெனின் ரஷ்யாவுக்கு சரியான நேரத்தில் திரும்பியதுதான் இடைக்கால அரசாங்கம் மீதான கட்சியின் சமரச அணுகுமுறையை மாற்றுவதற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கிய பாதையில் அதை நகர்த்துவதற்கும் அவருக்கு உதவியது. இப்போது, சோவியத் புரட்சிக்கு எதிரான தெர்மிடோரிய பிற்போக்குத்தனம் வலுப்பெற்று கொண்டிருந்தபோது, லெனினின் எதிர்பாராத நோய் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு வெளிப்படையான போராட்டத்தைத் தொடங்குவதில் பல முக்கியமான மாதங்கள் தாமதமாகிவிட்டது.

முடிவுற்றது.

[1]நிக்கோலாய் உஸ்ட்ரியலோவ் (1890-1937) தேசிய போல்ஷிவிசத்தின் முக்கிய சித்தாந்தவாதியாக அறியப்படுகிறார். உள்நாட்டுப் போரின் போது எதிர்ப்புரட்சிகர வெண் படைகளின் ஆதரவாளராக இருந்து போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை ஒருங்கிணைத்து புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியவுடன், சோவியத் அரசாங்கம் குறித்த தனது அரசியல் அணுகுமுறையை மாற்றிக் கொண்டார். 1921 ஆம் ஆண்டில் பிராக்கில் முதன்முதலில் வெளியிடப்பட்ட ஸ்மேனா வெக் (மாறும் அடையாளங்கள்) கட்டுரைகளின் தொகுப்பில், அவரும் அவரது சக சிந்தனையாளர்களும் ரஷ்யப் புரட்சி குறித்த ஒரு தேசியவாத விளக்கத்தை கோடிட்டுக் காட்டினர். அவர்கள் 'ஸ்மெனவெகோவ்ட்ஸி' என்று அழைக்கப்பட்டனர். 1920 களின் உட்கட்சிப் போராட்டத்தில், இடது எதிர்ப்பு அணி பெரும்பாலும் உஸ்ட்ரியலோவின் கருத்துக்களை 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற தேசியவாத வேலைத்திட்டத்தின் மிகவும் நனவான மார்க்சிச-விரோத வெளிப்பாடு என்று குறிப்பிட்டது.

[2] விளாடிமிர் லெனின், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் 11 வது மாநாட்டின் தொடக்க உரை, மார்ச் 27, 1922.

URL: https://www.marxists.org/archive/lenin/works/1922/mar/27.htm

[3] Ibid.

[4] Ibid.

[5] Ibid.

[6] Vladimir Lenin, “The Party Crisis,” January 19, 1921. URL: https://www.marxists.org/archive/lenin/works/1921/jan/19.htm

[7] Note by Vladimir Lenin to Leon Trotsky, December 21, 1922. URL: https://www.marxists.org/archive/lenin/works/1922/dec/21.htm

[8] Vladimir Lenin, “Letter to the Congress,” note from December 25, 1922. URL: https://www.marxists.org/archive/lenin/works/1922/dec/testamnt/congress.htm

[9] Vladimir Lenin, “Letter to the Congress,” note from December 24, 1922. URL: https://www.marxists.org/archive/lenin/works/1922/dec/testamnt/congress.htm

[10] Vladimir Lenin, “The Question of Nationalities or ‘Autonomisation,’” December 30, 1922. URL:  https://www.marxists.org/archive/lenin/works/1922/dec/testamnt/autonomy.htm.

[11] Ibid.

[12] Vladimir Lenin, Addendum to the “Letter to the Congress,” January 4, 1923. URL: https://www.marxists.org/archive/lenin/works/1922/dec/testamnt/congress.htm 

Loading