டப்ளின் கலவரங்கள் ஆழமான சமூக நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலாம்.

கடந்த வியாழன் இரவு டப்ளினில் நடந்த கலவரங்கள் அயர்லாந்திலும் சர்வதேச அளவிலும் அதி-வலதுசாரிகளின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகின்றன.

ஆளும் வர்க்கம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை சீரழிப்பதற்கு புலம்பெயர்ந்தோரை பலிகடாவாக அதிகளவில் பயன்படுத்துகின்ற நிலைமைகளின் கீழ், இந்த சக்திகள் நம்பிக்கையைப் பெற்று வருகின்றன.

ஏறக்குறைய 500 பேர் ஈடுபட்ட இந்த வன்முறைகளில் ஒரு டிராம் மற்றும் இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்ததோடு 13 கடைகளை சூறையாடினர். இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெருமளவில் கலகப் பொலிஸாரை இறக்குவதற்கு வழிவகுத்தது. 11 போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் சுமார் 50 அதிகாரிகள் காயமடைந்ததோடு 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அன்றைய தினம் ஒரு வெளிநாட்டுப் பிரஜையால், ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அதி-வலது கிளர்ச்சியாளர்களால் இந்த வன்முறை தூண்டப்பட்டது. சந்தேகத்திற்குரிய நபர் 40 வயதிற்கு மேற்பட்ட ஐரிஷ் குடிமகன் என்றும், அவர் 20 ஆண்டுகளாக நாட்டில் வசித்து வருவதாகவும் பிபிசிக்கு தகவல் கிட்டியுள்ளது. சமீபத்தில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டார் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. பிரேசிலைச் சேர்ந்த விநியோக சாரதியான கயோ பெனிசியோ அவரை நிராயுதபாணியாக்க உதவினார்.

மாலை 5.22 மணிக்கு, “அனைத்து வெளிநாட்டவரையும் கொல்” என்ற குழுவின் பயனர், ஒரு குரல் செய்தியை டெலிகிராம் சேனலுக்கு அனுப்பினார். “உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.” “ஓ*தா… எந்த வெளிநாட்டவனையும்… கொல்லுங்கள். ஓ*தா அவன்களைக் கொல்லுங்கள். இதை செய்தியாக ஆக்குவோம்,” என்று அதில் அவர் வலியுறுத்தினார்.

அதே நாளில், ஐரிஷ் கலப்பு தற்காப்புக் கலை வீரரானான கோனார் மெக்ரிகோர், கத்திக்குத்துக்கு பிரதிபலிக்கும் விதமாக தனது 10 மில்லியன் வாசகர்களுக்கு பின்வருமாறு ட்வீட் செய்திருந்தார். “நாங்கள் பின்வாங்கவில்லை, நாங்கள் எங்களை சூடாக்கிக்கொள்கிறோம். நமது தேசத்தின் பாதுகாப்பிற்காக உண்மையான மாற்றம் செயல்படுத்தப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை. முதலில் அயர்லாந்தில் கூட இருக்கக் கூடாத நோய்வாய்ப்பட்ட மற்றும் மூர்க்க நபர்களிடம் எங்கள் பெண்களையும் பிள்ளைகளையும் நாங்கள் இனியும் இழக்கப் போவதில்லை.

முந்தை நாள் புலம்பெயர்ந்தோரை வாக்களிக்க பதிவு செய்ய ஊக்குவித்ததற்காக பிரதமர் லியோ வரத்கரை கண்டித்து தொடர்ச்சியான பதிவுகளை இட்ட பின்னர், “அயர்லாந்தில், நாங்கள் போரில் இருக்கிறோம்,” என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

பிரித்தானிய பாசிசத் தலைவர்களான, பிரிட்டன் முதலில் என்ற அமைப்பின் தலைவர் போல் கோல்டிங் மற்றும் ஆங்கில பாதுகாப்பு கழகத்தின் முன்னாள் தலைவரான டொம்மி ரொபின்சனும் மெக்ரிகோரை வாழ்த்துவதற்கு விரைந்தனர். ரொபின்சன், “கோனர் அயர்லாந்து மக்களுக்காக முன்நிற்பதையிட்டு மிகவும் மகிழ்வதாக” பதிவிட்டுள்ளார். “டப்ளினில் ஒரு “சுதந்திர பேரணியை” ஏற்பாடு செய்யுமாறு அவருக்கு கோல்டிங் அழைப்பு விடுத்தார்.

சமீபத்திய தசாப்தங்களில் அதி-வலதுசாரிகள் அரசியல் பிரசன்னத்தைக் குறைவாகக் கொண்டிருந்த அயர்லாந்தில் இது போன்ற நிகழ்வுகள், உலகளவில் முதலாளித்துவத்தால் அதி-வலது இயக்கங்கள் கருத்தரிக்க வைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவை, மிக பிரசித்தமாக ஐரிஷ் தேசியக் கட்சி மற்றும் ஐரிஷ் சுதந்திரக் கட்சி போன்ற அதி-வலதுசாரி அமைப்புகளால் நடத்தப்பட்ட, கீழ்மட்ட கிளர்ச்சி, மிரட்டல் மற்றும் வன்முறையின் காலகட்டத்தை தொடர்ந்து வந்துள்ளன.

அதிதீவிர தேசியவாதிகள், வெள்ளை மேலாதிக்கவாதிகள், மத அடிப்படைவாதிகள், தடுப்பூசி-எதிர்ப்பு பிரச்சாரகர்கள் மற்றும் கோவிட் மறுப்பாளர்களின் குழுக்கள். குடியேற்றவாசிகளுக்கு எதிராகவும் “பலவீனமான” மற்றும் “சமூகப் பிரச்சினைகளையிட்ட நனவான” ஸ்தாபனத்திற்கு எதிராக ஒன்றுசேர்கின்றன –இவை உண்மையில் அதே ஸ்தாபனத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோத வாய்ச்சவடாலை மட்டுமே பெரிதாக்குகிறது. 2022ல் அயர்லாந்தில் 300க்கும் மேற்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களும், 2023 முதல் ஆறு மாதங்களில் 169 போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

ஒரு சிறிய நிகழ்வுப் போக்கிலிருந்து தற்போதைய மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்களாக இருப்பது வரை, கடந்த 20 ஆண்டுகளில் அயர்லாந்திற்கான இடம்பெயர்வு வரைபு கணிசமாக மாறிவிட்டது. புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 2021 இல் 7,500 இல் இருந்து இந்த ஆண்டு 74,000 ஆக உயர்ந்துள்ளது - அவர்களில் பெரும்பாலோர் உக்ரேனியர்கள் ஆவர்.

இது 2008 நிதியச் சரிவுக்குப் பின்னர், அவர்களின் பல கூற்றுகளை அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ள நிலையில், அதி-வலது சக்திகள் இந்த புலம்பெயர்ந்தோரை ஒரு சமூக நெருக்கடிக்கான பலிகடா ஆக்கியுள்ளன.

கலவரத்திற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, RTÉ சேவையின் இந்த வார அரசியல் என்ற நிகழ்வில் பேசிய வரட்கர், “குடியேற்றம் அயர்லாந்திற்கு ஒரு நல்ல விஷயம் என்றாலும்,” நாடு “வருகையை மெதுவாக்க வேண்டும்” மற்றும் வழங்கப்படும் ஆதரவைப் பற்றி “யதார்த்தமாக” இருக்க வேண்டும் என்று கூறினார்.

“தொடர்ச்சியற்ற இடம்பெயர்வு என்று வரும்போது, ​​அது உக்ரைனில் இருந்து வருபவர்கள் அல்லது சர்வதேச பாதுகாப்பைத் தேடுபவர்களாக இருந்தாலும் சரி, நாம் செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்று இதைப் பற்றி ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டியிருக்கும். அதாவது தங்குமிடத்தின் அடிப்படையிலா, தொழில் அடிப்படையிலா, பணத்தின் அடிப்படையிலா என்று நாங்கள் எதனடிப்படையில் வழங்குகிறோம் என்பதை உறுதி செய்வதாகும். இது மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வழங்கப்படுவதைப் போன்றதாகும்.

ஆளும் வர்க்கம் அதன் சொந்த நலன்களில் மட்டுமே அக்கறை காட்டுவதால் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சமூக நெருக்கடிக்காக, ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட கொள்ளையடிக்கும் போர்கள் காரணமாக வெளியேறி தஞ்சம் கோருபவர்கள் உட்பட, புலம்பெயர்ந்தோர் மீதே குற்றம் சாட்டப்படுகிறது.

அதி-வலதுகளால் சுரண்டிக்கொள்ளப்படும் வெகுஜன அதிருப்தியைப் பற்றிப் பேசிய புலம்பெயர்ந்தோர் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் கில்லோரன், “2008 பொருளாதார மந்தநிலை மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சிக்கன வெட்டு காலகட்டம் வரை பின்நோக்கி பார்க்கக் கூடிய, வீட்டுவசதி அவசரநிலை மற்றும் சுகாதார சேவைகள் சீரழிப்பு உட்பட பல நெருக்கடிகள், அயர்லாந்தைப் பற்றிக் கொண்டிருக்கின்றன,” எனக் கூறியதாக யூரோநியூஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஜனவரியில், எச்சரிக்கை ஒன்றை விடுத்த ஐரிஷ் மருத்துவ சங்கம், “எங்கள் பொது சுகாதார சேவைகள் நெருக்கடியின் முடிவில்லாத சுழற்சியில் உள்ளன. மிகக் குறைவான மருத்துவர்கள், மிகக் குறைவான படுக்கைகள் மற்றும் மிகக் குறைவான சுகாதார நிபுணர்களே உள்ளனர். நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை அதிகரிக்க பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நாங்கள் போதுமான முதலீடு செய்யவில்லை. இது ஆபத்தான முறையில் சிகிச்சைக்காக அதிக காலம் காத்திருக்க வேண்டிய நிலைமையையும், மருத்துவர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவு வேலைச் சுமை நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது,” எனத் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டில், ஐரிஷ் பரிசோதகர் அறிக்கையின்படி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 127,000 மருத்துவமனை செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன. அவற்றில் 24,000 சிகிச்சைகள் சிறுவர் நோயாளிகள் தொடர்பானவை ஆகும்.

மார்ச் மாதம், வரட்கர், 250,000 வீடுகள் பற்றாக்குறை இருப்பதை ஒப்புக்கொண்டார். 12,000 பேர் வீடற்றவர்களாக உள்ளதுடன் அவர்களில் 1,400 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜனவரி முதல் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் என்று ஐரிஷ் அகதிகள் கவுன்சில் கூறுகிறது.

பேங்கிங் & பேமெண்ட்ஸ் ஃபெடரேஷன் அயர்லாந்து (BPFI) அமைப்பின் படி, 2010-2022 இடையில் 12 ஆண்டுகளில் சராசரி வாடகை 82 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி தொகை 18 சதவீதம் ஆகும். வீடுகளின் விலை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. BPFI இன் அறிக்கை, அதே காலகட்டத்தில், அயர்லாந்தின் மக்கள் தொகை அரை மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ள அதே நேரம், வீட்டு உற்பத்தி வெறும் 130,000 அலகுகள் மட்டுமே அதிகரித்துள்ளது.

குத்தகைதாரர்களின் உதவி அமைப்பான த்ரெஷோல்ட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆன்-மேரி ஓ’ரெய்லி, “அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சமூக வீட்டுவசதிக்கான ஆதரவை எப்படிக் கைவிட்டன,” என்பதைப் பற்றி இந்த ஜூலை மாதம் லு மொண்ட் இடம் விளக்கியிருந்தார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள், அடிக்கடி ஹோட்டல்கள், பழைய அலுவலகத் தொகுதிகள் மற்றும் விளையாட்டு அரங்குகள் போன்ற மிகவும் பின்தங்கிய மற்றும் குறைந்த சேவைப் பகுதிகளில் தங்க வைக்கப்படும் அதேநேரம், அதி-வலதுகளோ இந்த நியாயமான சமூகக் குறைகளை திரிபுபடுத்தி கையாளுகின்றனர்.

ஐரிஷ் அரசியலில் அவர்கள் ஒரு விளிம்பு சக்தியாக இருக்கும் அதே வேளை, ஜேர்மனிக்கான மாற்று, இத்தாலியின் சகோதரர்கள், பிரெஞ்சு தேசிய பேரணி, சுதந்திரத்திற்கான டச்சுக் கட்சி மற்றும் ஸ்வீடன் ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகள் 10-20 சதவிகித வாக்குகளை பெற்று ஒரு நிலையான தொகுதியை உருவாக்கிக்கொண்டு, தேசிய அரசியலில் அபரிமிதமான செல்வாக்கு செலுத்துகின்ற ஐரோப்பாவிலான எடுத்துக்காட்டுகள், ஒரு எச்சரிக்கை ஆகும்.

சமூக நெருக்கடிக்கு, தொழிலாள வர்க்க புலம்பெயர்ந்தோரை பூதாகரமாக காட்டும் இத்தகைய இனவாத தேசியவாத பிரதிபலிப்புக்கு இருக்கும் ஒரே பதில், பல் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்வத்தை அபகரிக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட சோசலிச பதிலே ஆகும். முதலாளித்துவ கட்சிகளின் போருக்கு ஆதரவான, வணிக சார்பு கொள்கைகளே சமூக துன்பங்களுக்கு உண்மையான காரணம் ஆகும். அயர்லாந்திலும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக ஒரு சர்வதேச சோசலிசப் போராட்டத்தை விரிவாக முன்னெடுக்கும் அளவைப் பொறுத்தே அதி-வலதுசாரிகளை எதிர்த்துப் போராட முடியும்.

Loading