அகதிகளுக்கு எதிரான தாக்குதல்களை பாரியளவில் தீவிரப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பிப்ரவரி 9 ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள (EU) 27 நாடுகளின்  அரசாங்கத் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் ஒன்றுகூடி, புகலிடம் மற்றும் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்குவது குறித்து முடிவெடுத்துள்ளனர். அத்துடன், தீவிரமடைந்துவரும் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேன் போர் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்த உச்சி மாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி, நாசமாக்கிய பூகம்பம் தொடர்பான கலந்துரையாடல் இங்கு இடம்பெறவில்லை. சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் மனித கண்ணியம் அடிப்படையில் நிறுவப்பட்டதாக தோற்றமளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அதன் சுற்று வட்டத்தில் நிகழ்ந்த சுமார் 23 மில்லியன் மக்களை பாதித்துள்ள பேரழிவுக்கு எந்த பதிலும் வழங்கவில்லை. துருக்கிய-சிரிய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தினால், நூறாயிரக்கணக்கானோர் தங்கள் அன்புக்குரியவர்கள், தங்கள் வீடுகள் மற்றும் அவர்களிடம் உள்ள அனைத்தையும் இழந்துள்ளனர். ஆனால், ஐரோப்பிய அரசாங்கங்கள் பிடிவாதமாக தங்கள் கொலைகார நாடு கடத்தல் வழக்கத்தை கடைபிடிக்கின்றன.

கிரேக்க-வடக்கு மாசிடோனிய எல்லையில் அகதிகள் (2016) [Photo by Tim Lüddemann / flickr / CC BY-NC-SA 2.0]

ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் உச்சி மாநாட்டில் பின்வரும் புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டன:

  • ஐரோப்பிய யூனியனின் எல்லைகள் ஏஜென்சியான புரொன்டெக்ஸை (Frontex) மேலும் விரிவாக்குவதுடன், ‘’ஐரோப்பா கோட்டையை’’ இன்னும் அதிகமாக இறுக்கி மூடுதல்,
  • நிரந்தர வதிவிட உரிமை இல்லாத அகதிகளை பெருமளவில் நாடு கடத்துதல்,
  • அகதிகள் பிறந்த நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுதல், 

இந்த சிறப்பு உச்சி மாநாட்டிற்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடம் மற்றும் குடியேற்றக் கொள்கைக்கான திட்டங்களைத் தெளிவுபடுத்தினார். அதில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், 'எல்லை மேலாண்மை' மூலம் அகதிகளின் ஒழுங்கற்ற இடம்பெயர்வு தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கினார். இந்த நோக்கத்திற்காக ஒரு 'ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை மற்றும் நிலையான உள்கட்டமைப்பு’’ வசதிகள் வழங்கப்பட உள்ளது. எந்தவொரு பாசிசத் தலைவரையும் ஈர்க்கும் வகையில், 'வாகனங்கள் முதல் கேமராக்கள் வரை, கண்காணிப்பு கோபுரங்கள் முதல் மின்னணு கண்காணிப்பு' வரையிலான அதன் வசதிகள் உயர்த்தப்பட இருக்கிறது.

குடியேற்றம் தொடர்பான உச்சிமாநாட்டின் முடிவுகள், 'ஒழுங்கான பத்திரங்கள் இன்றி அந்தந்த நாட்டைவிட்டு புறப்படுதல் மற்றும் உயிர் இழப்புகளைத் தடுத்தல், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகள் மற்றும் வரவேற்பு திறன்களில் அழுத்தத்தைக் குறைத்தல், கடத்தல்காரர்களுக்கு எதிராகப் போராடி, திருப்பி அனுப்புதலை உறுதி செய்தல்' போன்ற நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் வலுப்படுத்தும் என்று கூறுகிறது. அத்துடன், அகதிகள் புறப்படும் மற்றும் இடையில் தங்கியிருக்கும் நாடுகளுடன், ஐரோப்பிய ஒன்றியம் 'பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை' வலுப்படுத்த விரும்புகிறது.

ஓர்வெல்லியன் சொற்தொடர்களுக்குப் பின்னால் ஐரோப்பிய ஒன்றியத்துடன், ஐரோப்பியக் கடற்பரப்பில் மக்கள் இறப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு அவர்கள் வெளியேறுவதைத் தடுக்க, சர்வாதிகார ஆட்சிகள் மற்றும் கடத்தல் கும்பல்களுடன் மோசமான ஒப்பந்தங்கள் உள்ளன. ஐரோப்பிய ஷெங்கன் பகுதிக்குள் மக்கள் நுழைவதைத் தடுக்க, புரொன்டெக்ஸ் சோதனைகள் கடுமையாக்கப்பட்டு, அவர்களை சட்டவிரோதமாக பின் தள்ளும் நடைமுறைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம், தமது நாடுகளில் பெருமளவிலான நாடுகடத்தலை விரிவுபடுத்தி, அவற்றை இன்னும் கொடூரமானதாக மாற்ற விரும்புகிறது.

'போதுமான வளங்கள்' என்பது ''அனைத்து இடம்பெயர்வு வழிகளையும்'' உள்ளடக்கி, பசி, போர் மற்றும் துன்பங்களில் இருந்து மக்கள் தப்பிக்கும் வழியைத் தடுப்பதாகும். இந்த நோக்கத்திற்கான நிதி ஆதாரங்கள் ஏற்கனவே 2021 இல் ஐரோப்பிய யூனியனின், அயல்புற மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் (NDICI-Global Europe) மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. NDICI மூலம் 2027 வரை மொத்தம் 79.5 பில்லியன் டொலர்கள் அதற்கு கிடைக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மூன்றாம் நாடுகளுக்கு பாரிய நாடுகடத்தலை ''அதிகரிப்பதை'' உறுதிசெய்ய, ஐரோப்பிய கவுன்சில் 'இராஜதந்திரம், மேம்பாடு, வர்த்தகம் மற்றும் விசாக்கள்' ஆகியவற்றைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. இதற்குப் பின்னால், ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு இணங்க, அந்தந்த நாடுகளின் ஆளும் சக்திகள் மீது அரசியல் அழுத்தத்தையும் பொருளாதார அச்சுறுத்தலையும் பிரயோகிக்கும் நடவடிக்கைகளும் அடங்கியுள்ளன. இதனால், பாதிக்கப்படுபவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் ஆவர்.

அத்தோடு, இன்னும் கூடுதலான புகலிட விண்ணப்பங்களை ''சட்டப்பூர்வமாக'' நிராகரித்து, நாடு கடத்துவதற்கு, மேற்படி நாடுகள் பாதுகாப்பானது என்ற  தோற்றத்தை கொடுக்கும் கருத்துக்களும்  தீவிரமாகப் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், ஐரோப்பாவின் வெளிப்புற பகுதிகள் மற்றும் கடல் எல்லைகளை இன்னும் விரிவாகக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். இந்த நோக்கத்திற்காக, அவர்கள் 'ஐரோப்பிய எல்லை மற்றும் கடலோரக் காவல் ஏஜென்சிக்கு (Frontex) முழு ஆதரவையும்' வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். 'எல்லை மேலாண்மைத் திறன்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், வான்வழி கண்காணிப்பு உள்ளிட்ட கண்காணிப்பு வழிமுறைகள், மற்றும் உபகரணங்கள்' ஆகியவற்றை உறுதிசெய்ய, ஐரோப்பிய உறுப்பு நாடுகளிடமிருந்து பாரிய நிதி உதவியையும் அவர்கள் பெறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐரோப்பிய கோட்டையை மூடுவதற்கு புரொன்டெக்சின் பற்களுக்கு ஆயுதம் கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திடம், அதன் வெளிப்புற எல்லைகளுக்கு அப்பாலும் புரொன்டெக்சின் ஆணைகளை நீட்டிப்பதற்கான திட்டங்களும் உள்ளன. இந்த உச்சிமாநாடு, புரொன்டெக்ஸைப் பயன்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மூன்றாம் நாடுகளுக்கு இடையேயான புதிய மற்றும் திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளையும் அறிவித்துள்ளது.

அறிக்கையின் முடிவுரையானது, 'மனித உயிர்களைப் பாதுகாப்பது' என்ற பேரில் 'கடல் எல்லைகளின் சிறப்புகள்' பற்றி பேசுகின்றது. ஆனால், எண்ணற்ற மக்கள் ஏற்கனவே ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு தப்பிச் செல்லும்போது, அதன் எல்லைகளை விட்டு பரிதாபமாக மூழ்கிவிட்டனர் என்பதை மறைமுகமாக அது உறுதிப்படுத்துகிறது.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (International Organization for Migration - IMO) கூற்றுப்படி, 2014 முதல் 25,000 க்கும் மேற்பட்ட அகதிகள் மத்தியதரைக் கடலில் மூழ்கி அல்லது காணாமல் போயுள்ளனர். புகாரளிக்கப்படாது, காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம்.

2022 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த அகதிகளின் எண்ணிக்கைக்குத் திரும்புதல்

2022 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையானது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 46 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற கூற்றானது, சிறப்பு உச்சிமாநாட்டின் சாக்குப்போக்குகளில் ஒன்றாக இருக்கிறது. இது மொத்தத்தில், உச்சிமாநாட்டில் வான் டெர் லேயன் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, 924,000 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் (447 மில்லியன்) மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, ​​இது 0.2% மட்டுமே ஆகும். உக்ரேனில் போருக்குப் பின்னர் வந்த 4 மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனிய அகதிகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் தனது பிரச்சாரத்திற்கு இந்த புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துகிறது. ஒரு இடைநிலை ஒருங்கிணைப்பின் (Mediendienst Integration) தகவல் தளத்தின்படி, 2022 இல் ஐரோப்பாவில் அகதிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட உண்மையில் அதிகரித்துள்ளது. இருப்பினும், இவர்கள் முக்கியமாக உக்ரேனில் நடந்த போரில் இருந்து தப்பியவர்கள் ஆவர். பிப்ரவரி 2022 முதல், சுமார் 8.05 மில்லியன் உக்ரேனிய அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் (பிப்ரவரி 2023 வரை).

ஐரோப்பிய ஒன்றியத்தின் mass influx directive ன் அடிப்படையில், 4.8 மில்லியன் உக்ரேனியர்கள் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கையின் கீழ் உக்ரேனிய போர் அகதிகள் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை. உக்ரேனிய குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் மனிதாபிமான வதிவிட அனுமதிகள் வழங்கப்படுகின்றன, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலன்கள் மற்றும் மருத்துவ பராமரிப்புக்கான அணுகலையும் வழங்குகின்றன.

அதே நேரத்தில், Mediendienst Integration இன் படி, பிப்ரவரி முதல் அக்டோபர் 2022 வரையிலான காலகட்டத்தில், சுமார் 111,000 அகதிகள் பிரதான மத்தியதரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு தப்பித்து வந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோரி மொத்தம் 400,000 பேர் (உக்ரேன் அகதிகளை தவிர்த்து) விண்ணப்பித்துள்ளனர். இது 2021 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட சுமார் 63 சதவீதம் அதிகமாகும்.

இதற்கான காரணம், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் ஐரோப்பாவிற்கு வந்த போதிலிலும், முழுமையான எண்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.

ஐரோப்பிய ஆளும் வர்க்கம் இந்த விஷயத்தில் அதன் பிரச்சார இயந்திரத்தை முழு வேகத்தில் இயக்குகிறது: ஒழுங்கற்ற எல்லைக் கடப்புகளின் எண்ணிக்கை 2016ல் இருந்து எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் சுமார் 230,000 எல்லைக் கடப்புகள் இருந்ததாக புரொன்டெக்ஸ் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஒருவரால் முயற்சிக்கப்படும் அனைத்து எல்லைக் கடப்புகளும் எண்ணப்படுகின்றன. இதன் விளைவாக பல எண்ணிக்கையில் புரொன்டெக்சில் அவை பதியப்படுகின்றன.

பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் சிறப்பு உச்சிமாநாட்டின் மூலம் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முன்னெடுக்க விரும்பும் அகதிகளுக்கு எதிரான இரக்கமற்ற நடவடிக்கைகள் என்பன அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களும் வலது பக்கம் திரும்பியதன் வெளிப்பாடாக இருக்கிறது.

ஜூன் 2023 வரை ஸ்வீடன் ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைப் பதவியை வகிக்கிறது. இந்த நாட்டில் மூன்று வலதுசாரி கட்சிகளான மிதவாதிகள், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் தாராளவாதிகளின் கூட்டணி ஆதிக்கம் செலுத்துகிறது. நவ-பாசிச வேர்களைக் கொண்ட தீவிர வலதுசாரிக் கட்சியான ஸ்வீடன் ஜனநாயகக் கட்சி, தற்போது ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய பிரிவாக இருக்கிறது. இவர்களின் உதவியுடன்தான் பிரதம மந்திரி உல்ஃப் கிறிஸ்டர்சன் (மிதவாதி) செப்டம்பர் 2022 இல் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து, ஸ்வீடன் அரசாங்கத்தின் கொள்கைகள் அகதிகள் மீதான கடுமையான தாக்குதல்களால் வகைப்படுத்தப்படுகின்றன.

அதி தீவிர வலதுசாரி ஃப்ராடெல்லி டி இத்தாலியா (Fratelli d’Italia) கட்சியின் இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி வெளிப்படையாக வலதுசாரி கட்சிகளான லெகா மற்றும் ஃபோர்சா இத்தாலியாவுடன் (Lega and Forza Italia) இணைந்து ரோமில் ஆட்சி செய்கிறார். மெலோனி அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்று, மத்தியதரைக் கடலில் வரும் அகதிகள் மீட்பு பணிகளை மிகவும் கடினமாக்குவதாகும்.

எடுத்துக்காட்டாக, அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அகதிகள் கப்பல்களை இத்தாலியின் வடக்கில் உள்ள அன்கோனா அல்லது ரவென்னா போன்ற துறைமுகங்களுக்குத் திருப்பிவிடுமாறு மெலோனி அரசாங்கம் கட்டாயப்படுத்தியது. சிசிலியை விட ஜேர்மனிக்கு அருகில் ரவென்னா துறைமுகம் இருக்கிறது. சிறப்பு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, மெலோனி ஐரோப்பிய ஒன்றியம் 'வெளி எல்லைகளின் பாதுகாப்பில் தலையிட வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார்.

ஆஸ்திரியாவில், கன்சர்வேடிவ் ஆஸ்திரிய மக்கள் கட்சியின் (ÖVP) அதிபர் கார்ல் நெஹாம்மர், சிறப்பு உச்சிமாநாட்டிற்கு சற்று முன்பு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து 'நேரடி நிராகரிப்புக்கு' அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி, தஞ்சம் கிடைக்க வாய்ப்பில்லாதவர்கள் எல்லையில் இருக்கும் போதே நாடு கடத்தப்படலாம். நெஹாமரின் இந்த யோசனை என்பது சட்டவிரோதமாக அகதிகளை பின்நோக்கி தள்ளுவதை சட்டப்பூர்வமாக்குவதாகும். வியன்னாவில், ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை (UNHCR) இந்தக் கோரிக்கை 'அகதிகள் சட்டத்தை அப்பட்டமாக மீறும்' செயல் என்று கூறியது.

நெஹாம்மர் எல்லையிலுள்ள தடுப்பு வேலிகளை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக கூடுதல் எல்லைக் காவலர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, எந்த வேலியும் 'கண்காணிக்கப்படுவதால்' மட்டுமே நல்லது என்று கூறினார். ஹங்கேரி, போலந்து மற்றும் கிரீஸ் ஆகியவை ஐரோப்பாவினால் நிதியளிக்கப்பட்ட எல்லைகளில் அமைக்கப்படும் வேலிகளுக்கு ஆதரவாகப் பேசின. இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் 2,000ம் கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லை வேலிகள் கட்டப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தூரம் வெறும் 300 கிலோமீட்டராக இருந்தது.

இதர ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் அதி தீவிர வலதுசாரிக் கொள்கைகளை அதிகளவில் செயல்படுத்தி வருகின்றன. ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) பிப்ரவரி தொடக்கத்தில் பாசிச மெலோனிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, தாராளவாத ஜனநாயகவாதிகள் (FDP) மற்றும் பசுமைக் கட்சிகளுடனான தனது கூட்டணியுடன் சேர்ந்து, அதி தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்று கட்சியின் கொள்கையை (AfD) செயல்படுத்தி வருகிறார். ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், ஒருபுறம் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு குடியேற்றம் அவசியம் என்று விளக்கிய ஷோல்ஸ், மறுபுறம், தங்குவதற்கு உரிமை இல்லாத மக்கள் நாடு கடத்தப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்றும், அதற்கான பணிகளை தனது அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய கவுன்சிலின் உச்சிமாநாடு, ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் ''உடன்படாத'' வழக்கமான ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்துடன் முடிந்தது. ஆனால், குறைந்தபட்சம் ஒரு புள்ளியில் 27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் உடன்பட்டனர். அவர்கள் அனைவரும் இணைந்து அல்லது தேசிய அளவில் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகவும் கடுமையாக்குவார்கள். பசி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களை தங்கள் சொந்த பொருளாதார மற்றும் போர்க் கொள்கைகளுக்காக சுரண்டினால் மட்டுமே இது விதிவிலக்காக இருக்கும்.

Loading