நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள்! 

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இது மே 1 அதிகாலை நடைபெற்ற 2023 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் வில் லெஹ்மன் வழங்கிய அறிக்கை இதுவாகும். லெஹ்மன், பென்சில்வேனியாவின் மெக்குங்கியில் உள்ள மக் றக்ஸ் நிறுவனத்தில் ஒரு சோசலிச தொழிலாளி ஆவார். அவர் அமெரிக்காவில் ஐக்கிய வாகன தொழிலாளர் தொழிற்சங்கத்தில் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். அனைத்து மே தின உரைகளையும் பார்ப்பதற்கு, wsws.org/mayday இணையத் தளத்துக்குள் பிரவேசியுங்கள்.

எனது பெயர் வில் லெஹ்மன், நான் பென்சில்வேனியாவில் உள்ள மெக்குங்கியில் உள்ள மக் றக்ஸ் நிறுவனத்தில் வாகனத் தொழிலாளியாக வேலை செய்கின்றேன். கடந்த ஆண்டு, நான் ஐக்கிய வாகனத் தொழிலாளர் (UAW) தொழிற்சங்கத்தின் தலைவர் பதிவிக்காக, நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின்  வேட்பாளராகப் போட்டியிட்டேன்.

வாகனத்துறைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் நிலைமை பரிதாபமானதாக உள்ளதால், நான் அதில் போட்டியிட்டேன். சமீபத்திய தசாப்தங்களில் இலட்சக் கணக்கான வேலைகள் வெட்டித் தள்ளப்பட்டதோடு உண்மையான ஊதியங்கள், அவை இருக்க வேண்டிய தொகையை விட அற்பமானதாக உள்ளன. அமெரிக்க தலைமையிலான ரஷ்யாவுக்கு எதிரான போரால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மிகவும் தீவிரமாக உள்ளதுடன், ஏறத்தாழ வாழ முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது. அதே நேரம், கூட்டுத்தாபனங்கள் பிரமாண்டமான இலாபம் பெறுவதுடன், வாகன வளங்கள் சங்கிலி தொடராக வீழ்ச்சியடைந்துள்ளது.

2023 சர்வதேச இணையவழி மே தினக் கூட்டம். வில் லெஹ்மனின் உரை

நான், UAW அதிகாரத்துவத்தை சரி செய்வதற்காகப் போட்டியிடவில்லை.  அது சாத்தியமற்றது என்பதையே, அந்த தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தப் பாரிய UAW தொழிற்சங்க எந்திரமானது சாதாரணமாகவே வாகனத்துறைப் பெருநிருவனங்களின் துணையுறுப்பு ஆகும். உண்மையில், UAW தேர்தல்கள், பல ஆண்டுகால இலஞ்ச ஊழல் அம்பலத்துக்கு வந்த காரணத்தால் மட்டுமே நடந்தது. அதில் பல தொழிற்சங்க நிர்வாகிகள், நிறுவனங்களில் இருந்து இலஞ்சம் பெற்றும் எங்கள் சந்தாப் பணத்தை திருடியும் பிடிபட்டார்கள். 

நான், தொழிற்சங்க எந்திரத்தை ஒழித்து சகல அதிகாரங்களையும் தீர்மானங்கள் எடுப்பதையும், தொழிற்சாலையிலும் ஏனைய வேலைத் தளங்களிலும் உள்ள தொழிலாளர்களின் கைகளில் எடுத்துக்கொள்வதற்காக பிரச்சாரம் செய்தேன். தொழிலாளர்களின் கூட்டுப் பலத்தை கட்டடவிழ்த்துவிட, நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் தலைமைத்துவத்தின் கீழ், வாகனத் தொழிற் துறை முழுவதிலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப அழைப்புவிடுத்தேன். ஒரு பெருமைமிக்க சோசலிஸ்டாக போட்டியிட்ட நான், கிட்டத்தட்ட 5,000 வாக்குகளை வென்றெடுத்தேன் -இது மொத்த எண்ணிக்கையில் ஐந்து சதவீதம் ஆகும்.

UAW அதிகாரத்துவமானது சாமானியத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க விரோதமாக இருந்தது. அது தொழிற்சங்கத்தின் 1.1 மில்லியன் அங்கத்தவர்களின் பெரும்பான்மையானவர்களுக்கு தேர்தல் நடைபெறுவதைக் கூட அறிவிப்பதற்கு மறுத்துவிட்டது! பின்பு அது, அவர்களின் உண்மையான முகவரிகளுக்கு வாக்குச் சீட்டுக்களை அனுப்புவதற்கு கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

2022 ஆகஸ்ட்டில் ஜெனரல் மோடர்ஸ் ஃபிளின்ட் ஒருங்கிணைப்பு ஆலை தொழிலாளியுடன் வில் லெஹ்மன் பேசுகின்றார்

பெரும்பாண்மையான UAW உள்ளகத் தலைவர்கள், தேர்தல் பற்றி தமது வலைத் தளங்களிலோ அல்லது முகநூலிலோ பதிவிட்டதும் கிடையாது, ஒரு தேர்தல் நடைபெறுவதாக தொழிலாளர்களுக்கு சொல்வதற்கு குறிப்புகள் அனுப்பியதும் கிடையாது, வாக்களிக்குமாறு எமக்கு நினைவுபடுத்துவதற்கு ஆலைகள் வழியாக நடந்து சென்றதும் கிடையாது. எமது உரிமைகளை பயன்படுத்த விடக்கூடாது என்று அவர்கள் எதிர்பார்த்துள்ளனர். வேலைத் தளத்திலோ அல்லது உள்ளக தொழிற்சங்க மண்டபங்களிலோ வாக்குச் சீட்டுக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக் கூட எமக்கு வழங்கப்படவில்லை. அதன் பெறுபேறாக ஒன்பது சதவீமான அதாவது 104,000 வாக்குகளே போடப்பட்டன. இது அமெரிக்க வரலாற்றிலேயே எந்தவொரு தேசிய தொழிற்சங்க தேர்தலுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அளவாகும்.

எனது பிரச்சாரத்தின் பாகமாக, தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. UAW மற்றும் பைடன் நிர்வாகம் நீதி மன்றத்தில் எனக்கு எதிராக வாதாடியதோடு, அனைவருக்கும் தகவல் வழங்காத UAW இன் வழிமுறை, “அங்கத்துவத்தை வெட்டிக் குறைப்பதை போன்றதாகும்” என்று நீதிபதி தானே சுட்டிக் காட்டிய போதிலும் கூட, நான் வாக்குச் சீட்டைப் பெற்றுள்ளதால் எனது உரிமை மீறப்படவில்லை என்ற பொய்யின் அடிப்படையில், ஒரு பெடரல் நீதிபதி எனது வழக்கை தள்ளுபடி செய்தார். 

நீதித்துறை நிறுவனமான க்ரோவெல் மற்றும் மோரிங் மற்றும் தேர்தலின் நேர்மையை உறுதிப்படுத்த நீதி-மன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய சட்ட நிறுவனங்கள், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் பிற வாகன நிறுவனங்களின் நீண்டகால பிரதிநிதிகள் என நான் பின்பு அறிந்துகொண்டேன்.

இதுவே நிறுவனங்கள், நீதி மன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் ழுழு அவமதிப்புடன் நடத்தப்படுகின்ற அமெரிக்காவின் ”ஜனநாயக” நிலை ஆகும். இந்தத் தேர்தலில் இருந்து உருவாகிய தொழிற்சங்கத் தலைமைத்துவம், சட்டத்துக்குப் புறம்பானதாகும். அது சாமானியத் தொழிலாளர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை. புதிய UAW தலைவர் ஷான் பைன், வாக்களிக்கத் தகுதியுடைய சாதாரண அங்கத்தவர்களிடம் இருந்து மூன்று சதவீதமான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதனால் “மூன்று சதவீத தலைவர்” என அறியப்படுகின்றார்.

ஆனால், எனது பிரச்சாரத்துக்கான இவ்வளவு பரந்த அளவிலான தொழிலாளர்களின் ஆதரவு, அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் சோசலிசத்தை நம்பிக்கையின்றி எதிர்க்கிறார்கள் என்ற கட்டுக்கதையை நொருங்கச் செய்துள்ளது. UAW தலைவர் பதவிக்காக ஒரு சோசலிஸ்டாக எனது பிரச்சாரத்திற்கான வாக்கு, பெருநிறுவன சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ”சாமானியத் தொழிலாளர்களுக்கு அதிகாரம்” வழங்கப்பட வேண்டும் என்ற எனது பிரச்சாரத்தின் போர்க்குரலை நடைமுறைப்படுத்துவதற்கும் அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கத்தில் பரந்த பகுதியினர் ஆதரவாக உள்ளதை வெளிப்படுத்துகின்றது. 

எனது பிரச்சாரத்தின் போது, பல தொழிலாளர்கள், ”தொழிலாாளர் நடவடிக்கை குழு என்றால் என்ன?” மற்றும் “நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி என்றால் என்ன?” என்று என்னிடம் கேட்டார்கள்.

அதற்கான பதில்: தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் சாமானிய தொழிலாளர்களால் இயக்கப்படும் ஜனநாயக அமைப்புகள் ஆகும். அவை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அவசியமானவை ஆகும். இந்த குழுக்கள் ஊடாக, தொழிலாளர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றார்கள், பொதுவான நடவடிக்கையை திட்டமிடுகிறார்கள், ஒவ்வொரு சுழற்சியையும் உற்பத்தி வரிசையையும் இணைக்கிறார்கள். ஆகவே அனைவரும் ஒரே தளத்தில் இருக்கிறார்கள். நடவடிக்கை குழுக்கள், அனைத்து ஆலைகள் மற்றும் பெருநிருவனங்கள் முழுவதும், தொழிலாளர்கள் ஒன்றிணையும் தீர்க்கமான வழிமுறையாக இருப்பதால், தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தலை உடைத்து ஒரு வலையமைப்பில் அவர்களை ஒன்றிணைக்க முடியும். அத்துடன் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் முழுப் பலத்தையும் பாவிக்கவும் முடியும்.

ஒவ்வொரு குழுக்களும், நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் பாகமாகும். இது, தேசிய வரம்புகளைக் கடந்து தொழிலாளர்களை ஒன்றிணைக்கின்ற, நாடுகடந்த பெரு நிறுவனங்களுக்கு ஒரு சர்வதேச பதிலிறுப்பு நடவடிக்கையை ஒருங்கிணைக்க எமக்கு அதிகாரம் அளிக்கின்ற குழுக்களின் உலகம் தழுவிய வலையமைப்பாகும்.

சர்வதேச ஐக்கியம் மிகவும் அவசியமானது. பல தசாப்தங்களாக, எல்லா இடங்களிலும் உள்ள தொழிற்சங்கங்களின் தேசியவாத அணுகுமுறையானது தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக இனவாத பகைமையில் நிறுத்தியுள்ளது. இதற்கு முடிவுகட்ட வேண்டும். ஊதியத்தின் மீது ஒருவரை ஒருவர் சண்டையிடுவதில் தொழிலாளர்களுக்கு எவ்வித நலன்களும் இல்லாதது போலவே, போரிலும் ஒருவருவரை ஒருவர் சண்டையிடுவதிலும் எமக்கு எந்த நன்மையும் கிடையாது.

இந்த ஆண்டு மே தின கூட்டமானது உலகம் முழுவதிலும் வர்க்கப் போராட்டங்கள் மேற்பரப்புக்கு வெடித்து கொண்டிருக்கும் ஒரு நிலையில் இடம்பெறுகின்றது.

2023ம் ஆண்டானது, சர்வதேசரீதியில் தொழிலாளர்களது வேலை நிறுத்தங்கள் மற்றும் வர்க்க மோதல்களின் சடுதியான வளர்ச்சியைக் கண்டது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். ஐக்கிய இராச்சியத்தில், உயர்ந்து வருகின்ற விலைவாசியை சமாளிக்க சம்பள உயர்வுகளை கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ், பாரிசில் பன்தியோன் முன்னால் வெகுஜன ஆர்ப்பாட்டம்

பணவீக்கம் மற்றும் சம்பள உயர்வுகளுக்கான கோரிக்கைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜேர்மனி, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் மற்றும் கனடாவிலும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களை இதே போன்று வேலை நிறுத்தம் செய்யத் தள்ளியுள்ளன.

ஜேர்மனியில் ரயில் சாரதிகள், ஐக்கிய இராச்சியத்தில் அஞ்சல் தொழிலாளர்கள், நைஜீரியாவில் விமான ஊழியர்கள், பிரேசிலில் ஆசிரியர்கள், டெட்ரோயிட்டில் வாகனத்துறை தொழிலாளர்கள் அல்லது இலங்கையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, சர்வதேச தொழிலாளர் வர்கத்தின் அங்கத்தவர்களாக எமது பொதுவான நலன்கள் என்ன என்பது அதிகரித்தளவில் தெளிவாகியுள்ளது.

எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரே அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள்:

  • உணவு, வீடு மற்றும் பிற அத்தியவசியங்களைப் பெற்றுகொள்ள முடியாதளவு வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடி உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க மற்றும் நோட்டோ போரால் கடுமையாக மோசமாக்கப்படுகின்றது.

  • ஆளும் வர்க்கங்கள் சம்பள உயர்வுக்கான இந்த இயக்கத்தை கீழறுக்கவும் அடக்கவும் சுரண்டலை தீவிரமாக்கவும் முயலுகின்ற அதே வேளை, பாரிய வேலையிழப்புகள் மற்றும் வேலை வெட்டுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

  • பாதுகாப்பற்றதும் மற்றும் அடிக்கடி ஆபத்தான வேலை நிலைமைகள் காணப்படுகின்றன. இவை தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் உயிர் வாழ்வுக்கும் மேலாக பெருநிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதன் விளைவாகும்.

  • இறுதியாக, கோவிட-19 தொற்று நோயால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தேவையற்று உயிரிந்த அதேவேளை, தொற்றுநோயின் வேளையில் பாரிய பெருநிருவனங்கள் மற்றும் அதி-செல்வந்தர்கள் கொழுத்த இலாபங்களை பெற்றதுடன், மறுபக்கம் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி அருவருக்கத்தக்க மற்றும் மிகவும் உயர்ந்த அளவில் உள்ளது.

ஏகாதிபத்திய போராக, தொற்றுநோயாக, பொருளாதார நெருக்கடியாக அல்லது காலநிலை மாற்றமாக இருந்தாலும், தாம் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளும் உலகப் பிரச்சினை என்பதை மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் புரிந்துகொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினைகள் தொழிலாளர் நலனில் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்தும் மூலோபயமும் அதை செயற்படுத்த ஒரு அமைப்பும் எமக்கு அவசியமாகும். நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி அத்தகைய மூலோபாயம், அமைப்பு மற்றும் தலைமைத்துவத்தை வழங்குகின்றது. இன்று இந்த உரையைக் கேட்பவர்களை இதில் இணைந்துகொண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றேன்.

ICFI இன் இணையவழி மே தினக் கூட்டம் 2023: போருக்கு எதிராக ஓர் உலகளாவிய தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய மைல்கல்

மே தினம் 2023: தேசிய பேரினவாதத்துக்கும் போருக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக!

இலங்கையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டுக்கான போராட்டம்

2023 மே தினமும் போருக்கு எதிரான போராட்டமும் 

ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக! 

Loading