ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக! 

போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் இரு உறுப்பினர்களிடமிருந்து புரட்சிகர வாழ்த்துக்கள்

இந்த மொழிபயெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

ஏப்ரல் 30 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட 2023 சர்வதேச இணையவழி மே தின கூட்டத்துக்கு, போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் (YGBL) அமைப்பின் இரு பிரதிநிதிகளால் இந்த வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன. YGBL என்பது முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பாகும். YGBL நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தனது அரசியல் ஒற்றுமையை அறிவித்து, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்புடன் இணைந்துகொண்டது. ஸ்டீபன் கெல்லர் உக்ரேனில் YGBL இன் பிரதிநிதியாக இக்கூட்டத்தில் உரையாற்றியதுடன், ரஷ்யாவில் YGBL சார்பாக ஆண்ட்ரி ரிட்ஸ்கி தனது வாழ்த்துக்களை வழங்கினார்.

2023 சர்வதேச இணையவழி கூட்டம்

உக்ரேனில் YGBL பிரதிநிதி ஸ்டீபன் கெல்லர் கூட்டத்தில் ஆற்றிய உரை

என் பெயர் ஸ்டீபன் கெல்லர். அன்பான வாசகர்களே, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனில் இருந்து நான் உங்களுக்கு உரையாற்றுகிறேன். இந்தப் போர் அமெரிக்க ஏகாதிபத்தியம், நேட்டோ மற்றும் புட்டின் ஆட்சியால் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இது ஒரு ஏகாதிபத்திய போர் ஆகும். ரஷ்யா, உக்ரேன் மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காக இந்தப் போர் நடத்தப்படவில்லை, மாறாக இந்த நாடுகளில் உள்ள மூலதனத்தின் நலன்களுக்காகவே நடத்தப்படுகிறது. இந்த போர் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதலாளித்துவ முறைமையின் விளைவு ஆகும். அதன் வரவிருக்கும் மரணத்தை எதிர்பார்த்து, பேரழிவு ஆயுதங்களுடன் விறைப்பாக நிற்கும் முதலாளித்துவம், தான் புதைக்கப்படுவதற்கு முன்பே, அனைத்து உயிரினங்களுக்கும் புதைகுழியைத் தோண்டிக்கொண்டிருக்கின்றது. 

உக்ரேன் மக்கள் அனைவரும் இந்தப் போரை ஆதரிக்கிறார்கள் என்பது உண்மையா? என் பதில் இல்லை! என்பதாகும். அனைத்து உக்ரேனியர்களும் இந்தப் போரை ஆதரிப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். இந்த போருக்கு பிரதானமாக முண்டு கொடுப்பது பயங்கரமான நிலைமையை எதிர்கொள்ளும் பாட்டாளி வர்க்கமும் உக்ரேனிய மக்களும் அல்ல. மாறாக, உக்ரேனிய முதலாளித்துவ தேசியவாதிகளும் அவர்களுக்கு சேவை செய்பவர்களுமே இந்த போருக்கு பிரதானமாக முட்டுகொடுக்கின்றனர்.

போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளாகிய நாங்கள், உக்ரேனிலோ அல்லது ரஷ்யாவிலோ இந்தப் போரை ஆதரிக்கவில்லை.

போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பு அதன் 5 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சித்திரம்

ஆம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இந்தப் போரை நிறுத்த முடியும் என்று உண்மையாக நம்புகிறவர்கள் உக்ரேனில் உள்ளனர். 2014 ஆட்சிக் கவிழ்ப்பால் நிறுவப்பட்ட ஆட்சிக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இப்போது செலன்ஸ்கிக்கு கிடைக்கும் ஆயுதங்கள் உக்ரேனை வெற்றிக்கு இட்டுச் சென்று இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் உண்மையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தப் போருக்கு எண்ணெய் வார்ப்பதன் மூலம், மூன்றாம் உலக ஏகாதிபத்தியப் போரைத் தூண்டுகிறது. இந்த மூன்றாவது ஏகாதிபத்தியப் போரைத் தூண்டுவதில் அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மற்றும் செலன்ஸ்கி பிரதிநிதித்துவப்படுத்தும் கியேவ் ஆட்சி மட்டுமன்றி, இந்த ஆட்சிகளுக்குச் சேவை செய்யும் முதலாளித்துவ உக்ரேனிய தேசியவாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த சக்திகள், தங்களை பாசிச உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN), உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மற்றும் கருத்தியலைப் பின்பற்றுபவர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள் மேற்கு உக்ரேன் பிரதேசத்தில் மக்களுக்கு எதிரான பயங்கரவாதத்தையும் தேசிய மற்றும் அரசியல் இனப்படுகொலையையும் கட்டவிழ்த்துவிட்டனர். உக்ரேன் மண்ணில் மரணத்தையும், பயத்தையும், துக்கத்தையும், கண்ணீரையும் அவர்கள் விதைக்கின்றனர். விவசாயக் குடிசைகளில் ரத்தத்தை ஓடவிட்டு, கிணறுகளில் பிணங்களை நிரப்பியுள்ளனர்.

23 மார்ச் 1943 அன்று லிப்னிகியில் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) படுகொலைசெய்த போலிஷ் பொதுமக்கள். [Public domain via Wikimedia commons]

இந்த அட்டூழியங்களைப் பற்றிய எனது கட்டுரையை WSWS சமீபத்தில் வெளியிட்டது. இந்த யுத்தத்தை ஆதரிக்கும் முதலாளித்துவ உக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் போலி-இடதுசாரிகள் இந்த அட்டூழியங்களை உண்மையில் ஒருபோதும் நடக்காத ஒன்று போல் புனைகதை என்று கூறியுள்ளனர். மற்றவர்கள் அதன் கீழ் உள்ள கருத்துகளில், “60 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பண்டேராவையும், ஒரு சிலரே எஞ்சியிருக்கும் பாண்டேரோவைட்டுகளையும் ஏன் தொடுகிறீர்கள்?” என்று கேட்டுள்ளனர்.

அத்தகைய மனிதர்களிடம் இதுபோன்ற கேள்வியை ஒருவர் கேட்க விரும்புவார்: கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த லெனினின் நினைவுச்சின்னங்களை ஏன் அழிக்கிறீர்கள்? அந்தப் போருக்குப் பிறகும் பாண்டெரோவைட்டுகளின் குற்றங்கள் நடந்த அந்த நிகழ்வுகள் இடம்பெற்று கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், ஜேர்மன் பாசிச படையெடுப்பாளர்களுக்கு எதிரான வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட, அதே போல் உக்ரேனிய மக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட சோவியத் மக்களுக்கான நினைவுச் சின்னங்களை நீங்கள் ஏன் அழிக்கிறீர்கள்? அந்த நிகழ்வுகள் சம்பந்தமான மக்களின் நினைவுச் சின்னங்களை அழிப்பதற்காகவா? அல்லது, அந்த மக்களின் நினைவை அழிப்பதற்காகவா? பின்னர் வேறு எதற்காக?

உக்ரேனிய தேசியவாதிகளால் லிவிவ் நகரில் இருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. [Photo by Andrijko Z. / CC BY-SA 4.0]

பல ஆண்டுகளுக்குப் பின்பு, உக்ரேனிய முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் அவர்களின் குற்றங்களைப் பற்றி நாம் மீண்டும் மீண்டும் பேசும்போது, உக்ரேனின் தொழிலாள வர்க்கம் மற்றும் முழு உலகமும் நினைவில் கொள்வதற்காகவே இதைச் சொல்கிறோம். அதற்கு எதிராக யார் குற்றம் செய்தார்கள், யார் தொழிலாள வர்க்கத்தின் இரத்தத்தை, அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் இரத்தத்தை சிந்தச் செய்தவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஜேர்மன், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்து, தொழிலாளர்களின் கழுத்தை நெரித்து, ஒடுக்கியவர்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

அவர்களை, அவர்களது பிள்ளைகளை மற்றும் பேரக்குழந்தைகளையும் வறுமை, அடக்குமுறை மற்றும் அநீதியிலிருந்து காப்பாற்றி விடுவிக்க பாட்டாளி வர்க்கப் புரட்சிகர சர்வதேசியத்தால் மட்டுமே முடியும், முதலாளித்துவ தேசியவாதத்தால் அல்ல, என்பதை எந்த நாட்டிலும், எந்த தேசத்தினதும் தொழிலாள வர்க்கமும் நினைவில் கொள்ள வேண்டும். முதலாளித்துவவாதிகள் தங்கள் சேவைக்கும் ஆதரவுக்கும் முதலாளித்துவ தேசியவாதிகளை வைத்துக்கொண்டிருந்தாலும், புரட்சிகர சர்வதேசவாதிகள், பாட்டாளி வர்க்கத்துக்கும் புரட்சியின் நலன்களுக்கும் மட்டுமே சேவை செய்கிறார்கள், ஏகாதிபத்திய முதலாளிகளது அல்லது தேசிய முதலாளிகளது நலன்களுக்கு அல்ல.

தொழிலாள வர்க்கமும் புரட்சிகர இளைஞர்களும், தங்கள் சர்வதேசியவாதம் மற்றும் ஒற்றுமையால் மட்டுமே வரவிருக்கும் ஏகாதிபத்திய போரை நிறுத்த முடியும். முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தால் அன்றி, சர்வதேசியவாதத்தால் மட்டுமே வறுமை, மனித ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கு முடிவுகட்ட முடியும்.

விரைவிலோ அல்லது பின்னரோ தவிர்க்க முடியாமல் முதலாளித்துவத்திற்கு முடிவு வரும். இந்த முடிவு மூலதனத்தின் மையத்தின் மீதான ஒரு சர்வதேச தாக்குதலின் கீழ் மட்டுமே வர முடியும். அதன் மறைவு புதிய மற்றும் பிரகாசமான வாழ்க்கைக்கான வழியைத் திறக்கும், அதில் இன்றைய வாழ்க்கையைப் பாதிக்கும் அனைத்தும் இல்லாமல் போகும்.

2023 ஆம் ஆண்டு மே தினம் இந்த புதிய உலகத்திற்கு நம் அனைவரையும் இன்னும் நெருக்கமாக கொண்டு வரட்டும், அதற்காக பூமியின் உண்மையான எஜமானர்கள் மற்றும் புதிய உலகத்தை உருவாக்குபவர்களான அனைத்து நாடுகளின் மற்றும் கண்டங்களினதும் தொழிலாளர்கள் போராடினர் மற்றும் போராடுவார்கள்.

ரஷ்யாவில் YGBL உறுப்பினர் ஆண்ட்ரி ரிட்ஸ்கியின் உரை

நான், ஆண்ட்ரி ரிட்ஸ்கி, ரஷ்யாவிலிருந்து போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் சார்பாக, இன்று நடைபெறும் இந்த வருடாந்த முக்கியமான நிகழ்வுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், ரஷ்ய சமூகம் என்றுமில்லாத வகையில் இன்று ஒரு சமூக-பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதன் பகிரங்க வெளிப்பாடே இப்போது உக்ரைனில் நடந்து வரும் போராகும்.

30 ஆண்டுகளுக்கு முன்புதான் ரஷ்யாவும், அமெரிக்காவும் மற்றொரு அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், இப்போது நாம் உலகின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை வைத்திருக்கும் நாடுகளுக்கு இடையே ஏற்படவுள்ள அணுவாயுதப் பேரழிவின் விளிம்பில் இருக்கிறோம். சர்வதேச உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்தச் சீரழிவை உணர்ந்து கொள்வதற்கு, வெகு தொலைவில் அல்லாத கடந்த காலத்தைப் பற்றி ஆராய்வது அவசியமாகும்.

சோவியத் ஒன்றிய பொதுச் செயலாளர் மிகைல் கோர்பச்சேவ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனும் 8 டிசம்பர் 1987 அன்று வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இடைநிலை-தூர அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். [Credit: White House]

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் எந்த நாட்டிற்கும் அதன் விதிமுறைகளை ஆணையிடும் ஒரு “ஒற்றை துருவ” உலகத்தை அறிவித்தது. அதே நேரம், முதலாளித்துவம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட ரஷ்ய கூட்டமைப்பு, ஏகாதிபத்திய சூழலுடன் 'சமமான ஒத்துழைப்பின்' போக்கைத் தொடங்கியது.

ஆரம்பத்தில், ரஷ்யா பெரும்பகுதியாக உள்ள யூரேசியா முழுவதையும் விட, மத்திய கிழக்கை நோக்கி தனது பார்வையை திருப்புவது மிகவும் அவசியம் என்று கருதிய வரையில், அமெரிக்காவால் சம பங்காளிகளினுடனான விளையாட்டை விளையாட கூடியதாக இருந்தது. புட்டின் ஆட்சிக்கு முன்பிருந்த யெல்ட்சின் ஆட்சி, மேற்கு நாடுகளுடன் ஒன்றிணையும் பாதையைத் தொடர்ந்தது. நேட்டோவில் இணைவது அவசியம் என்று ரஷ்யா கூட கருதியது.

எவ்வாறாயினும், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கமும் உக்ரேனில் 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்கான அதன் முழுமையான ஆதரவும், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்கள், பல் துருவ ஒத்துழைப்பை பற்றி கனவு கண்டுகொண்டிருந்த புட்டின் ஆட்சியின் எதிர்பார்ப்புக்கு எதிரானதாக இருப்பதை காட்டியது. இது ஏனைய விடயங்களிலும் பிரதிபலித்த்து. உக்ரேனில் தற்போதைய போருக்கு உள்ளூர் முன்னரங்கான டொன்பாஸில் நடந்த மோதலிலும் இது பிரதிபலித்தது. 

1949 முதல் நேட்டோவின் கிழக்கு நோக்கி விரிவடைவதைக் காட்டும் வரைபடம் [Photo by Patrickneil / CC BY-NC-SA 4.0]

அமெரிக்காவில் வளர்ச்சியடைந்துவரும் உள்நாட்டு நெருக்கடியால், ஏகாதிபத்தியம் உடைந்து போக வேண்டிய கட்டாயத்திற்கு  தள்ளப்பட்டது. ரஷ்யாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் வளங்கள் அமெரிக்காவிற்கு அதன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் மற்றைய ஏகாதிபத்திய மற்றும் வளரும் சக்திகளுடனான போட்டிகளை தீவிரப்படுத்த முண்டுகொடுப்பதற்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.

மறுபக்கம், நவீன ரஷ்ய ஆட்சியானது, முதலாளித்துவ தன்னலக் குழுவால் சூறையாடப்பட்ட சோவியத் சமுதாயத்தின் இடிபாடுகளின் மீது, அதன் வளமான பாரம்பரியத்துடன் எழுச்சியடைந்தது. அக்டோபர் புரட்சியின் வெற்றிகளை ஸ்ராலினிச அதிகாரத்துவம் இறுதியாகவும் மீட்க முடியாத வகையிலும் காட்டிக்கொடுத்தது. இது, சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் இரத்தம் தோய்ந்த போராட்டத்தின் மூலம் வென்ற பெரும் பாரம்பரியத்தை விற்றுத் தள்ளுவதற்கு வழிவகுத்தது.

ஸ்ராலினிசத்தின் பிரதான வாரிசான ரஷ்ய அதிசெல்வந்த குறுங்குழு, ஏகாதிபத்தியத்திற்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் அதன் சிறப்புரிமை நிலையை இழக்க விரும்பவில்லை. எனவே அது, அதன் பற்களைக் காட்டுவதுடன் நேட்டோவுடன் இராணுவ மோதலுக்கு கூட தயாராக உள்ளது.

இந்த நிலைப்பாடு, 2022 பிப்ரவரி 24 அன்று உக்ரேனை ஆக்கிரமிக்கும் சாகச நடவடிக்கையின் மூலம் மிகச்சரியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையால் ஊக்குவிக்கப்பட்டு பலவீனமாக தயாரிக்கப்பட்டு இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை, அதன் எதிர்ப் போக்கையும் மட்டுப்பாடான தன்மையையும் பெருகிய முறையில் வெளிக்காட்டுகிறது.

கிரெம்ளின் திட்டமிட்ட இலக்குகள், முற்றிலும் எதிர் விளைவுகளுக்கு வழிவகுத்தன. பிசாசுடனான உடன்படிக்கைக்குப் பதிலாக, ரஷ்யா அதனுடன் அணுவாயுத யுத்தத்தின் விளிம்பில் உள்ளது. ஒரு 'பல்துருவ உலகம்' மற்றும் முதலாளித்துவ பேரினவாத தளத்தின் மீதான நம்பிக்கையும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முற்றிலும் இலாயக்கற்றவையாகும்.

கிரெம்ளின் வாஷிங்டனுடன் எவ்வளவு மோதினாலும் பரவாயில்லை, அவர்களின் ஆட்சிகள், உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை என்ற பொதுவான அடித்தளத்திலேயே நிற்கின்றன. அவை இரண்டும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிலாஷைகளுக்கு எதிராக முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கின்றன.

உக்ரேனில் நடக்கும் தற்போதைய போர், உலக முதலாளித்துவத்தின் வளர்ந்துவரும் நெருக்கடியின் விளைவு ஆகும். எனவே, இந்த நெருக்கடியைத் தீர்ப்பதன் மூலம் மட்டுமே இந்தப் போரையும் முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமாகும். ஏகாதிபத்தியத்தால் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று கூறுவது, உலகத்தை பல தசாப்த கால அணுவாயுத யுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவில் முடிவடைகின்ற பேரிடருக்குள் தள்ளுவதாகும். புட்டின் போன்ற முதலாளித்துவ வருத்தம் தெரிவிப்போர் அமைதியைக் கொண்டுவரும் திறன் கொண்டவர்கள் என்று கூறுவது, களையை அதன் வேர்களைத் தொடாமல் பறிப்பது சாத்தியம் என்று நம்புவதாகும். 

ஏகாதிபத்திய படையெடுப்பின் காரணமாக வீழ்ச்சியடையும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்ற கிரெம்ளின், கூர்மையான அரசியல் நெருக்கடியில் உள்ளது. இது ரஷ்ய ஆளும் வர்க்கத்தின் மேல்மட்டத்தில் தொடர்ந்து நடக்கும் சண்டைகளிலும் அதன் பரபரப்பான திடீர் திருப்பங்களிலும்; அடக்குமுறை எந்திரத்தின் விரிவாக்கம் மற்றும் சட்டங்களை இறுக்குவதிலும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அதன் இராணுவ பிரச்சாரத்தை அதிகரிப்பதிலும் பிரதிபலிக்கிறது.

ஒருபுறம், காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் வாரிசாக தன்னை அறிவிக்கத் தயாராக இருக்கும் புட்டின், மறுபுறம், ரஷ்யா போல்ஷிவிக் கட்சியின் கடந்த காலத்தைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார். காலனித்துவத்திற்கு எதிராகப் போராடிய உண்மையான போராளிகளான லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியை அவர் தாக்குகின்றார். 

ரஷ்ய சமுதாயத்தின் வர்க்க காயம் தன்னை தானே உணர வைத்திருக்கிறது. தொழிலாள வர்க்கம் மேலும் மேலும் உக்ரேன் போருக்கு ஒரு விரைவான முடிவை எட்ட வேண்டும் என விரும்புவதுடன் தனது போர்-எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, உக்ரேனிய தொழிலாளர்களின் தற்போதைய நிலைமைக்கு தனது அனுதாபத்தை தெரிவிக்கிறது. தொழிலாள வர்க்கம், போர் வெடித்த போதிலும், கடந்த ஆண்டு அதன் போர்க்குணத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது, இந்த ஆண்டு அதை விரிவுபடுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கிரெம்ளினால் நடத்தப்படும் போருக்கான நிதி தங்களின் செலவிலும் அதே போல்வே மற்றய நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் செலவிலுமே வழங்கப்படுகின்றது என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். அதேபோல், உக்ரேனிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கங்கள் இப்போது செலன்ஸ்கி ஆட்சிக்கான கடன்களை செலுத்துகின்றன.

மேலும் மேலும் தொழிலாளர்கள் ஊதியக் குறைப்புக்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களையும்  எதிர்கொண்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததே, கடந்த ஆண்டு நடந்த தொழிலாளர்களின் போராட்டங்களின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது என்பது தற்செயலானதல்ல.

ரஷ்ய தொழிலாளர்கள் மற்றய தொழிலாளர்களைப் போலவே போர்க்குணம் மிக்கவர்கள். இது அவர்களின் உறுதியான போராட்டங்களின் மூலம் மீண்டும் மீண்டும் இது வெளிப்பட்டது. வைல்ட்பெர்ரி நிறுவனத்தில் விநியோகப் பகுதி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் சமீபத்திய உதாரணமாகும்.

ஆனால், உலகெங்கிலும் வாழும் ரஷ்ய தொழிலாளர்களின் சகோதரர்கள், ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்திற்கு இருப்பது ஒரு அரசியல் தலைமைப் பிரச்சினையே என்பதையும், அது உலகில் வேறு எங்கும் இருப்பதை விட குறைவான பிரச்சினை அல்ல என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். 'இடதுசாரிகள்' என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் தற்போதைய அரசியல் சக்திகளால் இந்த நெருக்கடிக்கு முற்போக்கான தீர்வு ஒன்றைக் கூட வழங்க முடியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் போலி-இடது அரசியல் சக்திகள் தேசியவாதக் கண்ணோட்டத்திலேயே நிற்கின்றன. “சட்டம் சார்ந்த” சக்திகள், கிரெம்ளினின் வெளிப்படையான பேரினவாத நிலைப்பாட்டில் நிற்பதோடு, உக்ரேன் மீதான புட்டின் படையெடுப்பையும் நியாயப்படுத்துகின்றன. “சட்டவிரோத” சக்திகள் பெரும்பாலும் ஏகாதிபத்திய சார்பு அல்லது தேசிய சீர்திருத்த திட்ட நிரல்களை ஊக்குவிக்கின்றன.

போர் என்பது, ஒரு சர்வதேச நெருக்கடியின் வெளிப்பாடே அன்றி, அது ஒரு தேசிய நெருக்கடி அல்ல என்று இந்தப் போலி-இடதுகள் பார்ப்பதில்லை. எனவே, முதலாளித்துவ அரசுகளின் தேசிய எல்லைகள் இருந்தபோதிலும், புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம் பூகோள ரீதியான உற்பத்தியின் நூல்களால் இணைக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த நெருக்கடிக்கான தீர்வு உலக அரங்கில் மட்டுமே சாத்தியமாகும். 

ஒரு சர்வதேச முன்னோக்கை அபிவிருத்தி செய்யும் இயலுமை கொண்ட தேசியக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கான தொடக்கப் புள்ளியாக, தொழிலாள வர்க்கத்தின் உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை இந்தப் போலி-இடதுகள் எதிர்க்கின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், உலகெங்கிலும் உள்ள அதன் பிரிவுகளுமே தலைமைத்துவ நெருக்கடியைத் தீர்க்கும் திறன் கொண்ட ஒரே புரட்சிகர அமைப்புக்கள் என்று கூறி, இந்த உரையை முடிக்க விரும்புகிறேன். நமது இயக்கத்தைப் பொறுத்தவரை, மாபெரும் வெற்றிகளும் கசப்பான தோல்விகளும் ஏற்பட்ட, பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றுப் போராட்டத்தில் நிறுவப்பட்ட புரட்சிகரக் கொள்கைகள், வெற்று வார்த்தைகள் அல்ல, மாறாக நம் வாழ்வின் ஒரு பகுதியும், காட்டுமிராண்டித்தனம், சுரண்டல் மற்றும் மக்களிடையே சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தினதும் ஒரு பகுதியாகும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டவை.

இந்த ஆண்டு, போல்ஷிவிக் கட்சி மற்றும் சோவியத் அரசின் அதிகாரத்துவ மற்றும் தேசியவாதச் சீரழிவுக்கு எதிராக, ஸ்டாலினிச எழுச்சிக்கு எதிராக, லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் உருவாக்கப்பட்ட இடதுசாரி எதிர்ப்பு இயக்கம் நிறுவப்பட்டதன் நூற்றாண்டைக் குறிக்கிறது. 

விக்டர் எல்ட்சின் (மேல் வலது) மற்றும் இகோர் போஸ்னன்ஸ்கி (நடுவில் இடது) உட்பட 1928 இல் சோவியத் இடது எதிர்ப்பின் நாடுகடத்தப்பட்ட தலைவர்கள் [Photo: MS Russ 13 (T 1086), Houghton Library, Harvard University, Cambridge, Massachusetts]

அக்டோபர் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய போராட்டம், வரலாற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ், போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் அபிவிருத்தியானது, ரஷ்யாவிற்குள்ளும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் ட்ரொட்ஸ்கிசத்தின் மீள் எழுச்சியை எடுத்துக்காட்டுகிறது.

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் ஆண்டு நிறைவுக் கூட்டத்திற்கான வாழ்த்துக்கள்

உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஓர் அழைப்பு: உக்ரேன் போரை நிறுத்த ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைப்போம்!

“உக்ரேன் உறுப்பு நாடாக மாறும்' என்று நேட்டோ அறிவிக்கிறது: நேரடி நேட்டோ-ரஷ்ய போருக்கான ஒரு முன்னறிவிப்பு

Loading