2023 மே தினமும் போருக்கு எதிரான போராட்டமும் 

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்த உரை, மே  1 அதிகாலை, உலக சோசலிச வலைத் தளமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் இணைந்து நடத்திய, 2023 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் எழுத்தாளரும் ஆசிரியரும், அத்தோடு சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) அரசியல் குழுவின் உறுப்பினருமான அன்ட்ரே டேமொன் வழங்கியதாகும்.

அன்பு நண்பர்களே, தோழர்களே,

நாம் மே தினத்தை கொண்டாடுவதற்காக கூடியிருக்கும்போது, உலகம் போரில் ஈடுபட்டுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றியம், ஒரு போர்க்களமாக மாறிவிட்டது. இலட்சக் கணக்கானோர் இருபுறமும் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட இளைஞர்களும் நடுத்தர வயதினரும், தங்கள் மரணத்திற்காக சில மீட்டர் தூரத்தில் இருக்கும் நிலப்பரப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். உக்ரேனில் நடக்கும் போர் மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர வைத்துள்ளதுடன் பேரழிவு தரும் கலாச்சார மற்றும் சமூக விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டங்களில், இது ஒரு ஆரம்ப மோதல் மட்டுமே.

2023 சர்வதேச மே தின இணையவழி கூட்டம். 

பெருமளவான துருப்புக்கள் உலகம் முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும், பால்டிக் முதல் கருங்கடல் வரை புதிய போர் எல்லைகள் விரிவாக்கப்படுகின்றன. உக்ரேன் நாட்டுக்குள், 150க்கும் மேற்பட்ட நேட்டோ துருப்புக்கள் ஏற்கனவே கடமையில் உள்ள நிலையில் மேலும் பத்தாயிரக் கணக்கானோர் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு தளபதியின் உத்தரவில், 'இன்றிரவு கூட போரிடுவதற்கு' அவர்கள் தயாராக உள்ளனர்.

பசிபிக் பகுதியில், தீவுகளின் சங்கிலித் தொடரினால் சுற்றியுள்ள உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமான பகுதிகளில் ஒன்றான சீன பெரு நிலப்பரப்பு சீனாவுடனான போருக்கான இராணுவமயமாக்கப்பட்ட முன்னரங்கு தளமாக மாற்றப்படுகிறது.

இந்த தருணத்தில், பென்டகனில் உள்ள போர் தயாரிப்பாளர்கள் ஒரு மூலோபாய அணுவாயுத பரிமாற்றத்தினால் மனிதகுலத்தின் பெரும் பகுதியினர் கொல்லப்படும் காட்சிகளைப் பற்றி விவாதித்து தயார்படுத்தி வருகின்றனர். அணுவாயுத போரில் மனித நாகரிகம் அழிவடையப் போகின்றது.

உக்ரேனில் நடக்கும் போர் அமெரிக்காவால் ஆத்திரமூட்டும் வகையில் தூண்டப்பட்டு நீடிக்கின்றது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய எழுச்சி ரஷ்யாவிற்கு எதிரான போராகவும் சீனாவுடனான போருக்கான தீவிர தயாரிப்பாகவும் மாறியுள்ளது.

கடந்த ஆண்டு நேட்டோவின் அறிக்கையின் வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா “அணு ஆயுதம் கொண்ட சம-போட்டியாளர்களுக்கு எதிரான போருக்கு” தயாராகின்ற நிலையில், வாஷிங்டன் இதை ஒரு 'பெரும் வல்லரசுகளின் மோதலின்' காலகட்டமாக பிரகடனம் செய்கின்றது.

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நேட்டோ துருப்புக்களை எஸ்டோனியாவின் தாலினில் உள்ள விமானப்படை தளத்தில் செவ்வாய், 1 மார்ச் 2022 அன்று சந்தித்த போது. [AP Photo/Leon Neal]

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, புஷ் நிர்வாகம் ஈராக் மீது படையெடுத்து, கொடூரமான சட்டவிரோத மற்றும் குற்றவியல் யுத்தத்தை நடத்தியது. இதில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன் முழு சமூகமும் அழிக்கப்பட்டது.

இது பொய்களால் உருவாக்கப்பட்ட ஒரு போராகும். வெள்ளை மாளிகை அந்த நாட்டை ஆக்கிரமிப்பதையும் கொள்ளயடிப்பதையும் நியாயப்படுத்துவதற்காக, ஈராக் மனிதப் பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அப்பட்டமான ஒரு ஊடகப் பொய்யைப் பரப்பி சதி செய்தது. 

இன்று, ஈராக் ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்த பொய்கள் ஒரு பயங்கரமான பிறழ்ச்சியாக பார்க்கப்படுவதற்கு மாறாக ஆளும் வர்க்கத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதில் பின்பற்றப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாகவே பின்பற்றப்படுகின்றன.

ஊடகங்களால் உருவாக்கப்பட்ட 'பேரழிவு ஆயுதங்கள்' என்ற பொய்யானது, அரசுகளின் நிரந்தரமான விவகாரமாக மாறிவிட்டது. நிதி அமைப்புமுறை நன்றாக உள்ளதாகவும் கோவிட்-19 தொற்றுநோய் 'சிறியதாகவும்' காட்டப்படுகின்றது. கோவிட்-19 சிறுவர்களைப் பாதிக்காது என்றும், தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், முகக் கவசம் தேவையில்லை என்றும் கூறப்படுகின்றது. உண்மையைப் பொய்யிலிருந்து வேறுபடுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கும் வரை பொய்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு வருகின்றன.

போர் பற்றிய அனைத்தும், பொய்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டன. 'இது ஒரு பினாமி போர் அல்ல... நேட்டோ இதில் ஈடுபடவில்லை,' என்று வெள்ளை மாளிகை கூறியது. 'நான் உக்ரேனில் சண்டையிடுவதற்காக அமெரிக்கப் படையினர்களை அனுப்ப மாட்டேன்' என்று பைடன் அறிவித்தார். இந்த பொய்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக விழுந்துவிட்டன. இரண்டு அணு ஆயுத வல்லரசுகள் ஒன்றோடொன்று போரில் ஈடுபட்டுள்ளன என்பது மட்டுமே எஞ்சியிருக்கும் உண்மையாகும். 

போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் குற்றங்களை நியாயப்படுத்தும் அப்பட்டமான பொய்களை நிராகரிப்பதோடு மட்டுமன்றி, உள்ளார்ந்த அக்கறையுடன் கூடிய விளக்கமும் தேவைப்படுகிறது.

'ஏகாதிபத்திய போர் என்றால் என்ன?' என்று, முதலாம் உலகப் போரைப் பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி கேட்டார்.

இது முதலாளித்துவ சொத்து வடிவங்களுக்கு எதிராக மட்டுமன்றி, முதலாளித்துவ அரசுகளின் எல்லைகளுக்கு எதிராகவும் உற்பத்தி சக்திகளால் நடத்தப்படும் கிளர்ச்சியாகும். உற்பத்தி சக்திகள் தேசிய அரசுகளின் எல்லைக்குள் தாங்கமுடியாமல் கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற உண்மையை ஏகாதிபத்தியப் போர் வெளிப்படுத்தியது. முதலாளித்துவத்தால் தானே உருவாக்குகின்ற உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்த இயலாது என்பதையும், ஒரு உயர்ந்த பொருளாதார கட்டமைப்பிற்குள் முதலாளித்துவ அரசுகளின் எல்லைகளை மீறி வளர்ந்துள்ள உற்பத்திச் சக்திகளை இணைக்கும் திறன் சோசலிசத்துக்கு மட்டுமே உள்ளது என்ற நிலைப்பாட்டை நாங்கள் எப்போதும் பேணி வருகிறோம்.

20 ஆம் நூற்றாண்டை விவரிக்க எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், வேர்டன் மற்றும் சோம் (பிரான்சிலுள்ள Verdun and the Somme ஆகிய பகுதிகளில் நடந்த முதலாம் உலக யுத்த அழிவுகள்) தொழில்துறை காட்டுமிராண்டித்தனத்தை நினைவூட்டுகின்ற, ஆனால் ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஆயுதங்களுடன் போரிடுகின்ற, 21 ஆம் நூற்றாண்டுக்கு இன்னும் அதிகமாக செல்லுபடியாகின்றது.  

எல்லா இடங்களிலும், பழைய பிற்போக்குத்தனமான சமூக ஒழுங்கு முறையானது, உலகமயமாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளுக்கு எதிராக வன்முறையுடன் திணறுகிறது; செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகளாவிய தகவல் தொடர்பு வலையமைப்புகளின் முற்போக்கான சக்தியை எதிர்த்துப் போராடுவதற்காக, இருண்ட காலத்தின் சாக்கடைகள் தோண்டப்பட்டு, பொது மக்களின் நனவில் தெளித்துவிடப்படுகின்றன. இவை ஒரு புதிய உலகப் போருக்காக, பொதுக்கருத்தை நாசம் செய்யவும் பொது நனவை கட்டுப்படுத்தவும் முன்னெடுக்கப்படுகின்றன.

20 ஜூலை 2021 செவ்வாய் அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கெபிடல் ஹில்லில் கோவிட்-19 தொடர்பான செனட்டின் சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதியக் குழு விசாரணையின் போது, செனட்டர் ராண்ட் பால் (குடியரசு-கென்டக்கி) தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபௌசியிடம் கேள்வி எழுப்புகிறார். [AP Photo/J. Scott Applewhite]

ரஷ்ய இசைக் கலைஞர்கள், போர் முயற்சிக்கு விசுவாசமாக சத்தியம் செய்யாவிட்டால் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். சீனாவில் உள்ள தங்கள் சக விஞ்ஞானிகளுடன் வெளிப்படையான விஞ்ஞான ஒத்துழைப்பை ஆதரிக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள் மீது கோவிட்-19 வைரசை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இனவெறி அவதூறு மீண்டும் தலை தூக்கியுள்ளது. ஸ்கோப்ஸ் விசாரணையை மீண்டும் தொடக்குவதற்காகவும், இறுதியாக விஞ்ஞானிகளை தள்ளி விடுவதற்கு ஆளும் வர்க்கம் முயற்சிப்பதோடு, எல்லா இடங்களிலும் அறிவியல் விரோத மதவெறி ஊக்குவிக்கப்படுகிறது. 

21ஆம் நூற்றாண்டின் ஆயுதங்கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் பிரச்சார முறைகளைக் கொண்ட ஏகாதிபத்தியவாதிகளின் போர்த் திட்டங்களால் ஏற்படும் அச்சுறுத்தலை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பல நாடுகள் போரிட்ட ஒரு உலகப் போர் இதுவரை நடந்ததில்லை.

ஆனால், இந்தப் போருக்கு எதிராகப் போராட முன் வந்துகொண்டிருக்கும் சக்திகளைக் குறைத்து மதிப்பிடுவது மிகப் பெரிய தவறாகும். ஏனென்றால், நவீன போர்க் கருவிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து அழிவுகளையும் பொறுத்தளவில், நவீன உலகத்தால் உருவாக்கப்பட்ட படைப்பாற்றல் மிக்க மற்றும் முற்போக்கான சக்திகள் வலிமையானவை.

உலகளாவிய உற்பத்தி செயல்முறையில் ஒன்றுபட்டுள்ள, பூகோள தொலைத் தொடர்பு வழிமுறைகள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கம், எதிர்ப்போக்கு சக்திகளை விட, அளவிட முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்தது.

வடக்கு நைஜீரியாவில் உள்ள ஹவுசா பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஸ்மார்ட்போனைப் பார்க்கிறார். [AP Photo/Ben Curtis]

ஆனால், இந்த மாபெரும் சக்தியை அணிதிரட்ட ஒரு முன்னோக்கு மற்றும் தலைமைத்துவம் தேவை. இந்த தலைமைத்துவத்தை கட்டியெழுப்பவே இன்று நாம் ஒன்று கூடியுள்ளோம்; ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரை, முழு யூரேசிய நிலப்பரப்பு மற்றும் அமெரிக்கா பூராகவும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சக்திகளை ஒன்றிணைக்கவும், பழைய வேதனைகளில் இருந்து ஒரு புதிய, சோசலிச சமுதாயத்தின் பிறப்புக்கான போராட்டத்தை அறிவிப்பதற்காகவும் இன்று நாம் ஒன்றுகூடியிருக்கிறோம்.

மூன்றாம் உலகப் போரை நிறுத்தவும், மனித நாகரிகத்தைக் காப்பாற்றவும் ஒரு புரட்சிகர தலைமைத்துவத்தை உருவாக்க முடியுமா? அந்த கேள்வி போராட்டத்தின் மூலமே -இன்று இங்கு கூடியிருப்பவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் ஊக்குவிப்பு மற்றும் கல்வி ஊட்டுதல் மூலமே தீர்மானிக்கப்படும்.

போருக்கு எதிரான போராட்டத்தை சோசலிசத்திற்கான போராட்டமாக முன்னெடுத்துச் செல்ல உங்கள் பங்களிப்பினைச் செய்யுங்கள் என, இந்த ஆண்டு மே தினத்தில் பங்கேற்கும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் வாசிக்க

மே தினம் 2023: தேசிய பேரினவாதத்துக்கும் போருக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக!

ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக! 

மே தினம்: மக்ரோனை வீழ்த்துவதற்கான சர்வதேச மூலோபாயம் என்ன?

Loading