wsws : Tamil : History
Download the Font

 

அத்தியாயம் 2

கட்சியின் சமூகச் சேர்க்கை

Use this version to print | Send feedback

கட்சியின் உள்நெருக்கடி, தலைமுறைகளுக்கு இடையேயான உறவுகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. பரந்த வரலாற்று அர்த்தத்தில் இதற்கான தீர்வு கட்சியின் சமூக சேர்க்கையினால் நிர்ணயிக்கப்படுகிறது; எல்லாவற்றிற்கும் மேலாக, அது கொண்டுள்ள தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தினதும், தொழிற்சாலை குழுக்களின் விஷேட முக்கியத்துவத்தால் தீர்மானிக்கப்படுகின்றது.

அதிகாரத்தை கைப்பற்றியபின் தொழிலாள வர்க்கத்தின் முதல் கவனம் அரசு எந்திரம் ஒன்றை (இராணுவம், பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அமைப்புக்கள், போன்றவை உட்பட) தோற்றுவிக்க வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் அரசாங்கம், கூட்டுறவு ஏனைய அமைப்புகளுடன் தொழிலாளர்கள் பங்கு பெறுதல் என்பது தொழிற்சாலை குழுக்களை வலுவிழக்கச் செய்யும் அபாயத்தையும், கட்சியில் தொழிலாள வர்க்க அடித்தளத்தை கொண்டிருந்த அல்லது கொண்டிராத நிலையில் அதிகாரிகளின் மிகஅதிகளவிலான அதிகரிப்பையும் குறிப்பாக காட்டியது. இதுதான் நிலைமையில் இருந்த முரண்பாடாகும். இதை தவிர்க்கும் வழி கணிசமான பொருளாதார முன்னேற்றத்தை காணுதல் என்பதாகும்; தொழிற்துறை வாழ்வில் வலுவான உந்துதல் ஏற்படுத்தப்பட்டு, கட்சிக்குள் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களை கொண்டுவருதலும் ஆகும்.

இந்த அடிப்படை போக்கு எந்த வேகத்தில் நடக்கும், எத்தகைய ஏற்ற இறக்கப் போக்குகள் மூலம் அது கடந்து வரும்? அதைப் பற்றி இப்பொழுது முன்கணிப்பது கடினமாகும். எமது தற்போதைய பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தில், தொழிலாளர்களில் மிக அதிக அளவினர் கட்சியில் சேர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தேவையாகும். ஆனால் கட்சியில் உறுப்பினர்களின் கூட்டு தீவிர மாற்றத்திற்கு உள்ளாகக்கூடும் (எடுத்துக்காட்டாக, கட்சியின் மூன்றில் இரு மடங்கை தொழிற்சாலை குழுக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்). இது மிக மெதுவாக ஏற்படும்; அதுவும் குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டபின்தான் நடைபெறும். எப்படியும், ஒரு நீண்ட காலத்தை நாம் கருத்திற்கொள்ள வேண்டும்; அதில் மிக அனுபவமுடைய, கட்சியின் செயல்களில் தீவிரமாக இருப்பவர்கள் (தொழிலாளவர்க்கத்தில் இருந்து வந்தவர்கள் உட்பட இயல்பாகவே), அரசாங்கம், தொழிற்சங்கம், கூட்டுறவு, கட்சி அமைப்புகளில் பல்வேறு பதவிகளை வகிப்பர். இந்த நிலையே ஒரு ஆபத்தை உட்குறிப்பாக கொண்டுள்ளது; ஏனெனில் இதுதான் அதிகாரத்துவ வாதத்தின் மூலங்களில் ஒன்றாகும்.

கட்சியில் இளைஞர்களுக்கான பயிற்றுவிப்பு, இன்றியமையாமல் மகத்தான இடத்தை கொண்டுள்ளது; அது தொடர்ந்து அவ்வாறுதான் இருக்கும். எமது தொழிலாளர்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்விக்கூடங்கள் ஆகியவற்றை கட்டமைப்பதில், புதிதாக வரும் அறிவுஜீவிகளில் கூடிய விகிதத்தினர் கம்யூனிஸ்டுகளாக இருக்கும்; அத்தகைய நிலையில் இளைய தொழிலாள வர்க்க பிரிவினரை நாம் ஆலைகளில் இருந்து பிரிக்கிறோம் -- இது அவர்களுடைய கல்விகற்கும் காலத்திற்கு மட்டுமில்லாமல், அவர்களுடைய முழு வாழ்நாளிற்கும்தான். உயர்கல்வி நிலையங்களை கடந்த தொழிலாள வர்க்க இளைஞர்கள், அநேகமாக அனைவருமே, தொழிற்துறை, அரசாங்கம், கட்சி அமைப்புகளில் அமர்த்தப்படுவர். இதுதான் கட்சியின் உள் சமநிலையை, அதன் அடிப்படை குழுவான தொழிற்சாலை குழுக்களுக்கு பாதிப்பானவகையில் அழிப்பிற்கு உள்ளாக்கும் இரண்டாம் காரணியாகும்.

ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளவர்க்கத்தை சேர்ந்தவரா, அறிவுஜீவியா அல்லது வேறுவகை பின்னணியை சேர்ந்தவரா என்ற பிரச்சினை அது வெளிப்படையாகவே ஒரு மிகமுக்கியத்துவம் உடையதாகும். புரட்சியை அடுத்த உடனடிக்காலக்கட்டத்தில், அக்டோபருக்கு முன் ஒருவர் என்ன பதவி வகித்தார் என்பதும் தீர்மானகரமானதாக இருந்தது. ஏனெனில் தொழிலாளர்களை குறிப்பிட்ட சோவியத் செயற்பாட்டிற்கு அனுப்புதல் என்பது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருந்தது. இப்பொழுது இந்த விடயத்தில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிராந்திய குழுக்களின் தலைவர்களோ அல்லது பிராந்திய ஆணையாளர்களோ(7), அவர்களுடைய சமூக மூலங்கள் எப்படி இருந்தாலும், அவர்களுடைய தனிப்பட்ட பிறப்பிடம் எப்படி இருந்தபோதிலும், குறிப்பிட்ட சமூக பிரிவைத்தான் பிரதிபலிப்பர். இந்த ஆறு ஆண்டுகளில் சோவியத் ஆட்சியில் ஓரளவு உறுதியான சமூகப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே இப்பொழுதும் ஒப்புமையில் இன்னும் வரக்கூடிய ஓரளவு நீண்ட காலத்திற்கும், சிறந்த பயிற்சி பெற்ற கம்யூனிஸ்டுகளின் பிரதிநிதித்துவத்தை கொண்ட கட்சியின் பெரும்பகுதி, உள்ளாட்சி, இராணுவம், பொருளாதாரம் என்ற அமைப்புகளில் நிர்வாகம், மேலாண்மை என்னும் வேறுபட்ட பிரிவுகளுள் உள் இழுக்கப்பட்டுவிடும்; முக்கியமான மற்றொரு பகுதி அதன் கல்விகற்றலில் ஈடுபட்டுள்ளது; மூன்றாம் பகுதி நாடு முழுவதும் சிதறி நின்று விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது; நான்காம் பகுதி (இப்பொழுது இது கட்சி உறுப்பினர்களில் ஆறில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கிறது) உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைக் கொண்டுள்ளது. கட்சி அமைப்பின் (Party Apparatus) அதிகரிப்பும் மற்றும் இவ் அதிகரிப்புடன் ஒன்றிணைந்த அதிகாரத்துவமயமாக்கலும், அமைப்புடன் பிணைந்துள்ள தொழிற்சாலை பிரிவுகளினால் உருவாக்கப்படவில்லை, மாறாக இது கட்சி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அரசாங்க அமைப்புகளான நிர்வாகம், பொருளாதார மேலாண்மை, இராணுவக்கட்டுப்பாடு, கல்வி ஆகியவற்றின் மூலம் செய்யப்படுகின்றது என்பது தெளிவு. வேறுவிதமாகக் கூறினால், அதிகாரத்துவத்தின் மூலாதாரம், கட்சியில் சக்திகளின் அதிகரித்துவரும் ஒருமுகப்படுத்த கவனம் அரசாங்க நிறுவனங்கள், அமைப்புகளின் மீது செலுத்தப்படுவதும் மற்றும் தொழிற்துறையில் வளர்ச்சி மெதுவாக இருப்பதிலும் தங்கியுள்ளது. இந்த அடிப்படை உண்மைகள், போக்குகள் ஆகியவற்றால், நாம் பழைய காரியாளர்களின் அதிகாரத்துவ சீரழிவின் ஆபத்து பற்றி முற்றிலும் தெரிந்திருக்க வேண்டும். உலகின் மிகச்சிறந்த புரட்சிக்கர கல்விக்கூடத்தை பின்பற்றினர் என்பதால் தத்துவார்த்த(கருத்தியல்) ஏழ்மைத்தனம், சந்தர்ப்பவாத சீரழிவு ஆகியவற்றில் இருந்து வரும் அனைத்து ஆபத்துக்களையும் அவர்கள் எதிர்த்து நிற்கும் திறன் உடையவர் என்று நினைப்பது மடைத்தனமான கருத்தாகும். இல்லை! வரலாறு மனிதர்களால் உருவாக்கப்படுகிறது; ஆனால் மனிதர்கள் நனவுபூர்வமாக வரலாற்றை உருவாக்குவதில்லை; தங்கள் வரலாற்றைக்கூட அவர்கள் அவ்விதம் உருவாக்குவதில்லை. இறுதி ஆய்வில், இப்பிரச்சினை இரண்டு பெரும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளால் தீர்வு காணப்படும்: ஐரோப்பாவில் புரட்சியின் போக்கு, மற்றும் எமது பொருளாதார வளர்ச்சியின் விரைவுத்தன்மை ஆகியவையே அவை. ஆனால் அழிவுகரமான வழியில் இவை அனைத்திற்கும் இந்த புறந¤லைக் காரணிகளை பொறுப்பாக்குவது பெரும் தவறாகும்; கடந்த காலத்தில் இருந்து அளிப்பாக பெறப்பட்ட அகநிலையான தீவிரவாதம் அனைத்திற்கும் பாதுகாப்பளிக்கும் என்று கருதுவதுபோல்தான் இந்த நினைப்பும் இருக்கும். ஒரேவித புரட்சிகர சூழ்நிலையில், ஒரே மாதிரியான சர்வதேச சூழ்நிலையில், கட்சி சீர்குலையும் போக்குகளை தடுப்பதில் உள்ள தீவிரமான தன்மையும் அல்லது குறைவான தன்மையும் எந்த அளவிற்கு இந்த ஆபத்துக்களை பற்றி அது அதிகமான அல்லது குறைந்த உணர்மையை (நனவை) கொண்டிருக்கிறது மற்றும் எவ்வளவு தீவிரமாக அதற்கு எதிராக போராடுகின்றது அல்லது குறைவான தீவிரத்துடன் போராடுகின்றது என்பதை பொறுத்தே இது அமையும்.

கட்சியின் சமூக சேர்க்கையில் உள்ள பன்முகத்தன்மை பழைய பாதையில் இருக்கும் எதிர்மறையானபகுதிகளை பெரிதும் வலுவிழக்கச் செய்வதற்கு மாறாக, மிகத்தீவிரமான வகையில் மோசமடையச் செய்கின்றது என்பது தெளிவு. நிர்வாகவாதத்தின் மீதான வெற்றிக்கும், அதிகாரிகளின் சாதி உணர்விற்கு ஜனநாயகமுறைதான் ஒரே வழி. வேறு வழி இல்லை, இருக்க முடியாது. "அமைதியை" தக்கவைத்துக் கொள்வதன் மூலம் கட்சி அதிகாரத்துவம், ஒவ்வொன்றையும் தனித்தனியாக்கி அனைவருடைய ஒற்றுமையையும் குலைப்பதுடன், வெவ்வேறுவகையில் தொழிற்சாலை பிரிவுகள், தொழில்துறை தொழிலாளர்கள், இராணுவத்தினர், மாணவ இளைஞர்கள் என அனைவருக்கும் சமமாக தாக்குதலை கொடுக்கிறது.

அதிகாரத்துவவாத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் பிந்தைய பிரிவுதான் (மாணவர்) உத்வேகத்துடன் எதிர்கொள்ளுகிறது. மாணவர்களை அதிகாரத்துவவாத்திற்கு எதிராக போரிட லெனின் அழைப்பு விட்டததற்கு காரணமில்லாமல் இல்லை. அதன் சமூக சேர்க்கை, தொடர்புகள் இவற்றினால், மாணவ இளைஞர்கள் கட்சியின் அனைத்து சமூக குழுக்களை பிரதிபலிப்பதுடன், அவற்றின் உளப்பாங்களையும் பிரதிபலிக்கின்றனர். அதன் இளமைத் தன்மையும், துடிப்புடன் நிலைமையை எதிர்கொள்ளும் தன்மையும் அதற்கு இத்தகைய உளப்பாங்கைக் கொள்ளுவதற்கு ஒரு துடிப்பைக் கொடுக்கின்றன. பயிலும் இளைஞர் என்னும் முறையில், அது விளக்கவும், பொதுமைப்படுத்திப் பார்க்கவும் முயல்கிறது. இதன்பொருட்டு அதன் அனைத்து செயல்கள் உணர்வுகள் எப்பொழுதும் ஆரோக்கியமான போக்குகளையே கொண்டவை என்று கூறிவிட முடியாது. அப்படி இருக்குமேயானால், ஓரிரு விஷயங்களை அது குறிப்பாகக் காட்டும்: கட்சியில் அனைத்துமே நன்றாக நடந்துகொண்டிருக்கின்றன அல்லது இளைஞர்கள் கட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இல்லை. ஆனால் இரண்டுமே உண்மையில்லை. கொள்கையளவில் ஆலைப்பிரிவுகள்தாம் எமது தளமே தவிர கல்விக் கூடங்கள் அல்ல. ஆனால் இளைஞர்கள் எமது வெப்பமானி போல் இருக்கிறார்கள் என்று கூறுவதன் அர்த்தம் அவர்களின் அரசியல் வெளிப்பாட்டிற்கு நாங்கள் ஒரு முக்கியம் அல்லாத ஆனால் ஒரு தோற்றப்பாட்டை காட்டும் மதிப்பையே வழங்குகின்றோம். ஒரு வெப்பமானி வானிலையை உருவாக்குவதில்லை; அதன் செயல் வானிலையை பதிவு செய்வதுதான். அரசியல் வானிலை என்பது வர்க்கங்களின் ஆழ்ந்த தன்மையால் உருவாக்கப்படுகின்றதுடன், எத்துறைகளில் அவ்வர்க்கங்கள் நெருக்கமான தொடர்பை கொள்ளுகின்றனவோ அங்குதான் அது உருவாக்கப்படுகின்றது. தொழிற்சாலைக்குழுக்கள் கட்சிக்கும் தொழிற்துறையின் தொழிலாளவர்க்கத்திற்கும் இடையே நேரடியான உடனடி இணைப்பை ஏற்படுத்துகின்றன; அது நமக்கு மிக முக்கியமானது ஆகும். கிராமப்புற குழுக்கள் சற்றே பலமற்ற தொடர்பை விவசாயிகளுடன் ஏற்படுத்துகின்றன. இராணுவ குழுக்களின் மூலம்தான், அதுவும் விஷேட சூழ்நிலையின் கீழ் இருப்பதால், நாம் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். அனைத்து சோவியத் சமூகத்தின் அடுக்குகளில் இருந்தும், பிரிவுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ இளைஞர்களை பொறுத்தவரையில், அது எமது சிறப்பு நலன்கள், குறைகள் இவற்றின் கலந்த அமைப்புத் தன்மையை பிரதிபலிப்பதுடன், அதன் உணர்வுகளுக்கு பெரும் கவனம் கொடுக்காமல் போவது பெரும் மடத்தனமாகிவிடும். மேலும் எமது மாணவர்களில் கணிசமான பகுதி கம்யூனிஸ்டுகளாக இருப்பதால், இளைஞர்களை பொறுத்தவரையில் அது மிகக் கணிசமான முறையில் புரட்சிகர அனுபவம் ஆகும். "அதிகாரத்துவ அமைப்பினரில்" தீவிரக்கருத்து உடையவர்கள் இளைஞர்களை தாழ்த்தி மதிப்பிடும் வகையில் பெரும் தவறினை செய்கின்றனர். நம்மையை நாம் சோதித்துக் கொள்ளுவதற்கு இளஞர்கள் ஒரு வழிவகையாவர்; நமக்கு பதிலாக செயலாற்றக் கூடியவர்கள்; ஏனெனில் வருங்காலம் அவர்களுக்குத்தான் உரியது.

ஆனால் நாம் அரச செயல்களில் கொண்டுள்ள பங்கின் விளைவாக கட்சியில் ஒருவருக்கொருவரிடம் இருந்து பிரிந்து இருக்கும் குழுக்களின் பன்முகத்தன்மை பிரச்சினைக்கு மீண்டும் வருவோம். கட்சியின் அதிகாரத்துவவாதம் என்பது ஏதோ முந்தைய ஆட்சியில் இருந்த எச்சசொச்சமோ, அல்லது மறைந்து போய்க்கொண்டிருக்கும் ஒரு போக்கோ அல்ல என்று நாம் கூறினோம், மீண்டும் கூறுகிறோம். மாறாக, அடிப்படையில் இது ஒரு புதிய நிகழ்வுப்போக்காகும்; புதிய பணிகளில் இருந்து, புதிய செயல்களில் இருந்து, புதிய இடர்பாடுகளில் இருந்து, கட்சியின் புதிய தவறுகளில் இருந்து விளைவதாகும்.

தொழிலாள வர்க்கம் தன்னுடைய சர்வாதிகாரத்தை சோவியத் அரசின் மூலம் அடைகிறது. தொழிலாள வர்க்கத்தின் முன்னணிக் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது; அதன் விளைவாக அத்தகைய அரசின் முன்னணியில் உள்ளது. இப்பொழுது பிரச்சினையின் முழுமையானது, இந்த தலைமையை அதிகாரத்துவ சீரழிவுக்கு உள்ளாக்காமல் அரச அதிகாரத்துவ அமைப்பினுள் கலைந்துவிடாமல் உருவாக்கிக் கொள்வதே. கம்யூனிஸ்டுகள் கட்சிக்குள்ளும், அரசு, அரசாங்க அமைப்பினுள்ளும், பலவிதமான குழுக்களில் அடையாளம் காணப்படுகின்றனர். அரசாங்க அமைப்பினுள் படிமுறை ரீதியாக அவர்கள் ஒருவரையொருவர் நம்பியிருக்கும் நிலை உள்ளதுடன், அத்துடன் அவர்கள் கட்சியில் இல்லாத வெகுஜனங்களுடன் தனிப்பட்ட, சிக்கல் வாய்ந்த பரஸ்பரமான ஒரு தொடர்பிலும் உள்ளனர். கட்சியில் அவர்கள் அனைவரும் சமமாகத்தான் உள்ளனர்; அதாவது கட்சியில் அடிப்படை செயற்பாட்டு முறைகள், பணிகள் நிர்ணயிக்கப்படுதல் இவற்றை பொறுத்தவரையில் சமம்தான். வேலையில் அமர்ந்துள்ள கம்யூனிஸ்டுகள் தொழிற்சாலை குழுக்கள், ஒரு பகுதியாக இருந்து, நிர்வாகங்கள், அறக்கட்டளைகள், கூட்டு வணிகங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கின்றனர் என்பதோடு மக்களின் பொருளாதார குழுக்களிலும் தலைமை வகிக்கின்றனர். பொருளாதாரத்தின்மீது கட்சியின் செயற்பாடு, பொருளாதார நிர்வாகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடைய எண்ணங்கள், அனுபவங்கள், கருத்துக்கள் போன்றவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எமது கட்சியின் இன்றியமையாத, ஒப்புமையில்லாத மேன்மை என்னவெனில், ஒவ்வொரு கட்டத்திலும் தொழிற்துறையை ஒரு கம்யூனிஸ்ட் இயந்திர இயக்குபவர், கம்யூனிஸ்ட் சிறப்பு வல்லுனர், கம்யூனிஸ்ட் இயக்குனர், கம்யூனிஸ்ட் வணிகர் என்ற கண் கொண்டு நோக்ககூடியதாக இருப்பதுடன், ஒன்றோடொன்று நலன் பயக்கும் துறைகளில் தொழிலாளர்களின் அனுபவங்களை திரட்டி, அவற்றில் இருந்து முடிவுகளை மேற்கொண்டு, அவ்விதத்தில் பொதுப் பொருளாதாரத்தின் இயக்கத்தை நிர்ணயிப்பதுடன் மற்றும் ஒவ்வொரு துறையையும் குறிப்பாக கவனம் செலுத்தி செல்லவும் முடியும்.

அத்தகைய தலைமை கட்சிக்குள் துடிப்புடன் செயல்படும் ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் அடையமுடியும் என்பது தெளிவு. இதற்கு மாறாக, "அமைப்பின்" வழிவகைகள் முன்னுரிமை பெறுமேயானால், கட்சியின் தலைமை அதன் நிர்வாக அமைப்புக்களுக்கு (குழுக்கள், பெரும் மன்றம், செயலாளர் போன்றவற்றிற்கு) இடத்தை கொடுத்து விடும். இத்தகைய ஆட்சி உறுதி அடையும்போது அனைத்து விவகாரங்களும் ஒரு சிறிய குழுவின் கைகளில் குவிப்பை அடையும்; சில சமயம் ஒரு செயலாளர் மட்டுமே அதிகாரத்தை கொள்ளுவார்; அவர் நியமித்தல், நீக்குதல், உத்தரவுகள் வழங்குதல், தண்டனை கொடுத்தல் என்று அனைத்தையும் செய்வார்.

தலைமையில் அத்தகைய சீரழிவு தோன்றினால், கட்சியின் முக்கிய மேன்மை, அதன் பன்முக கூட்டு அனுபவம் ஆகியவை பின்னணிக்கு தள்ளப்பட்டுவிடும். தலைமை என்பது முற்றிலும் அமைப்புரீதியான தன்மையைத்தான் கொண்டு, அடிக்கடி உத்தரவுகளை பிறப்பித்து குறுக்கீடுகள் புரியவும் சீரழிவையடையும் கட்சி அமைப்பு கூடுதலான முறையில் சோவியத் அமைப்பின் பணிகளுள் நுழையும், தன்னுடைய அன்றாட வாழ்விற்காக வகைசெய்து கொள்ளும் என்பதுடன், தானே தன்னை செல்வாக்கிற்குட்படுத்தி கொண்டு மரங்களை காணுமே அன்றி கானகத்தை காணாது. கட்சி அமைப்பு கூட்டாக எப்பொழுதும் பரந்த அனுபவத்தை கொண்டதாக இருந்து, அரச அமைப்பு ஒரு விருப்புமிக்க அமைப்பாக இருக்குமானால், இதே கருத்தை தனிப்பட்ட நபர்கள் என்ற முறையில் பதவியில் இருப்பவர்களை பற்றி கூறமுடியாது. உண்மையில் ஒரு செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியின் பெயரினால் கட்சிக்கு தேவையான அனைத்து அறிவு, திறமை ஆகியவற்றை தன்னிடத்திலே கொண்டிருப்பார் என்று சொன்னால், அது சிறுபிள்ளைத்தனமாகிவிடும். உண்மையில் அவர் தனக்கு என்று ஒரு துணைக் கருவியை, அதிகாரத்துவ பிரிவுகள், தகவல் கொடுக்கும் அதிகார கருவி என ஏற்படுத்திக் கொண்டு அக்கருவியின் துணையுடன் சோவியத் அமைப்புடன் நெருக்கமாகிறார்; பின்னர் கட்சியின் வாழ்விலிருந்து தன்னை பிரித்துக்கொள்ளுகிறார். ஒரு புகழ்பெற்ற ஜேர்மனிய பழமொழி கூறுவதுபோல்: "நீங்கள் மற்றவர்களை அசைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், யதார்த்தத்தில் நீங்கள்தான் அசைகிறீர்கள்."

சோவியத் அரசின் முழு அன்றாட அதிகாரத்துவ நடவடிக்கையும் இவ்வாறு கட்சி அமைப்பினுள் ஊடுருவி அதற்குள் அதிகாரத்துவவாதத்தை நுழைத்துவிடுகிறது. கட்சி கூட்டாக தன்னுடைய தலைமையை உணர்வதில்லை; ஏனெனில் அது அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே தலைமை சரியாக இயங்கும் இடங்களிலும் கூட, அதிருப்தி அல்லது விளங்கிக்கொள்ளாத தன்மை ஆகியவை இருக்கும். ஆனால் பயனற்ற விவகாரங்களில் நொருங்கி விடுவதை தவிர்த்து, முறையாகவும் அறிவுரீதியாகவும் கூட்டுத் தன்மையை செயல்படுத்தினால் அன்றி, இந்த தலைமை தன்னையே சரியான வகையில் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான் அதிகாரத்துவவாதம் கட்சியின் உள் ஒன்றிணைப்பை அழிப்பதுமட்டும் அல்லாமல், கட்சியால் அரசாங்க அமைப்பின் மீது செலுத்த வேண்டிய தேவையான அதிகாரத்தையும் வலுவிழக்க செய்துவிடுகின்றது. இதுவே சோவியத் அரசுடனான உறவுகள் பற்றி, கட்சியின் தலைமை தாங்கும் பங்கு பற்றி உரத்த குரலில் கூவுபவர்களுடைய கவனம் மற்றும் புரிந்துகொள்ளலிருந்து முற்றிலும் தப்பி விடுகிறது.

 

 

The Lessons of October

 


Copyright 1998-2006
World Socialist Web Site
All rights reserved