World Socialist Web Site www.wsws.org


CHAPTER ONE

அத்தியாயம் 1

What Has Been Achieved

என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது?

The Principal Indices of Industrial Growth

தொழிற்துறை வளர்ச்சியின் முதன்மைக் குறியீடுகள்

Back to screen version

ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் முக்கியத்துவமற்ற தன்மையின் காரணத்தால், பின்தங்கிய ரஷ்யாவின் ஜனநாயகப் பணிகளான முடியாட்சியையும் மற்றும் விவசாயிகளின் அரை-பிரபுத்துவ அடிமைத்தனத்தனத்தையும் ஒழிப்பது போன்றவை பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சர்வாதிகாரத்தால் மட்டுமே சாதிக்கப்பட முடியும். எவ்வாறாயினும், பாட்டாளி வர்க்கமானது, பரந்துபட்ட விவசாயிகளுக்கு தலைமையை வழங்கிய நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்த ஜனநாயகப் பணிகளை சாதித்ததுடன் நின்று விட முடியாது.  முதலாளித்துவப் புரட்சியானது ஒரு சோசலிசப் புரட்சியின் முதல் கட்டங்களுடன் நேரடியாக பிணைக்கப்பட்டிருந்தது. இந்த உண்மை தற்செயலானதல்ல. சமீபத்திய தசாப்தங்களின் வரலாறு மிகத் தெளிவாகக் காட்டுவது என்னவென்றால், முதலாளித்துவ வீழ்ச்சியின் நிலைமைகளில், முதலாளித்துவத்தின் பழைய மையங்கள் எட்டியிருந்த அந்த நிலையை பின்தங்கிய நாடுகள் எட்டுவதற்கு இயலாதிருக்கிறது. தாமாகவே ஒரு முட்டுச் சந்திற்கு வந்தடைந்து விட்டிருக்கும் மிகவும் நாகரிகமடைந்த நாடுகள், நாகரிகமடையும் நிகழ்முறையில் உள்ள நாடுகளுக்கு பாதையை தடைசெய்கின்றன. ரஷ்யா, பாட்டாளி வர்க்கப் புரட்சி என்னும் பாதையை எடுத்தது என்றால், அதற்குக் காரணம், அந்நாட்டு பொருளாதாரம் சோசலிச மாற்றத்திற்கு முதலாவதாக கனிந்ததால் மட்டுமல்ல, மாறாக அது ஒரு முதலாளித்துவ அடிப்படையில் அதற்கு மேல் அபிவிருத்தியுற முடியவில்லை என்பதுமாகும். உற்பத்தி சாதனங்களை சமூக உடைமைகளாக்குவது நாட்டை காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு அவசியமான நிபந்தனையாக ஆகியிருந்தது. அது தான் பின்தங்கிய நாடுகளுக்கான ஒன்றிணைந்த அபிவிருத்தி விதி ஆகும். "முதலாளித்துவ சங்கிலியின் பலவீனமான கண்ணியாக" (லெனின்) சோசலிசப் புரட்சிக்குள் நுழைகின்ற நிலையில், ஜார்களின் முந்தைய சாம்ராஜ்யமானது இப்போதும் கூட, புரட்சி முடிந்து 19ம் வருட காலத்திலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை "எட்டிப் பிடிப்பது பின் விஞ்சுவது" என்கிற பணியை இன்னும் எதிர்கொண்டு தான் இருக்கிறது, இதனால் முதலாவதாக எட்டிப் பிடிக்க வேண்டும். அதாவது இந்நாடு முன்னேறிய நாடுகளில் முதலாளித்துவத்தால் வெகு காலத்திற்கு முன்னமே தீர்க்கப்பட்டு விட்ட தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டாக வேண்டும்.

இது வேறுவிதமாக இருக்க முடியுமா? பழைய ஆளும் வர்க்கங்கள் தூக்கியெறியப்பட்டதானது, காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து கலாச்சாரத்திற்கு எழுச்சியுறுவதான பணியை சாதித்து விடவில்லை, மாறாக அந்த பணியை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டியது. அதே சமயத்தில், உற்பத்தி சாதனங்களின் உடைமையை அரசாங்கத்தின் கைகளில் குவியச் செய்ததன் மூலமாக, புதிய மற்றும் ஒப்பிட முடியாத அளவு கூடுதல் பயனளிக்கக் கூடிய பொருளாதார வழிமுறைகளை செயலுறுத்துவதை புரட்சி சாத்தியமாக்கியது. இத்தகையதொரு குறுகிய காலத்தில், ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு யுத்தங்களால் சிதைக்கப்பட்டிருந்தவற்றை மீட்சி செய்யவும், பிரம்மாண்டமான புதிய நிறுவனங்களை உருவாக்கவும், உற்பத்தியின் புதிய வகைகளை அறிமுகப்படுத்தவும் மற்றும் தொழிற்துறையின் புதிய பிரிவுகளை ஸ்தாபிக்கவும் சாத்தியமானதென்றால் அதற்குக் காரணம் திட்டமிட்ட கட்டளையிடும் ஆற்றல் மட்டும் தான்.

எந்த சர்வதேசப் புரட்சியின் தாமதமின்றிய உதவிக்காக போல்ஷிவிக் கட்சியின் தலைவர்கள் காத்துக் கொண்டிருந்தார்களோ அதன் அபிவிருத்தியில் ஏற்பட்ட அசாதாரண தாமதமானது சோவியத் ஒன்றியத்திற்கு கடுமையான சிக்கல்களை தோற்றுவித்தது மட்டுமல்ல, சோவியத் ஒன்றியத்தின் தனித்துவமான உள்ளார்ந்த மூலவளங்களையும் செயல்திறன்களையும் வெளிப்படுத்தவும் செய்தது. இருந்தாலும், சாதிக்கப்பட்ட முடிவுகள் - அவற்றின் பிரம்மாண்டம் மற்றும் அவற்றின் இயலாமைகள் - குறித்த ஒரு சரியான மதிப்பீடு என்பது, சர்வதேச அளவுகோல் ஒன்றின் உதவியோடு தான் சாத்தியமாவதாக இருக்கும். நிகழ்முறை குறித்த ஒரு வரலாற்று மற்றும் சமூகவியல் பொருள்விளக்கம் தான் இந்த வேலையின் வழிமுறையாக இருக்க முடியுமே தவிர புள்ளிவிவர விளக்கப்படங்களை குவிப்பது அல்ல. இருந்தபோதிலும், மேலதிக விவாதத்தின் நலன்களுக்காக, சில முக்கியமான கணிதத் தரவினை தொடக்கப் புள்ளியாக கொள்வது அவசியமாக இருக்கிறது.

ஏறக்குறைய ஒட்டுமொத்த முதலாளித்துவ உலகிலும் தேக்கமும் சரிவும் உள்ள ஒரு பின்னணியில்தான், சோவியத் ஒன்றியத்தில் தொழிற்துறைமயமாக்கத்தின் பரந்த விரிவெல்லை பின்வரும் மொத்தக் குறியீடுகளில் பதிலளிக்கமுடியாத வண்ணம் காட்சியளிக்கிறது. ஜேர்மனியின் தொழிற்துறை உற்பத்தி, வெறிபிடித்தாற் போன்ற போர் தயாரிப்புகளின் ஒரே காரணத்தால்இப்போது 1929 ஆம் ஆண்டின் நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் உற்பத்தி, பாதுகாப்புவாதத்தால் உந்தப்பட்டு, இந்த ஆறு வருடங்களில் 3 அல்லது 4 சதவீதம் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் தொழிற்துறை உற்பத்தி சுமார் 25 சதவீதமும், பிரான்சில் 30 சதவீதத்திற்கும் அதிகமாகவும் சரிவுற்றிருக்கிறது. முதலாளித்துவ நாடுகளில் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருப்பது ஜப்பான், இந்நாடு தன்னை மூர்க்கத்துடன் ஆயுதபாணியாக்கிக் கொண்டு தன்னுடைய அண்டை நாடுகளைக் கொள்ளையடிக்கிறது. அதன் உற்பத்தி ஏறக்குறைய 40 சதவீதம் உயர்ந்திருக்கிறது! ஆனால் இந்த அசாதாரணமான குறியீடும் கூட சோவியத் ஒன்றியத்தின் அபிவிருத்தியின் இயங்குசக்தியின் முன்னால் மங்கிவிடுகிறது. அதன் தொழிற்துறை உற்பத்தியானது இதே காலத்தில்   மடங்கு, அல்லது 250 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த தசாப்தத்தில் (1925 - 1935) கனரக தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை 10 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துக் கொண்டுள்ளன. முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாவது ஆண்டில் (1928-1929), மூலதன முதலீடுகள் 5.4 பில்லியன் ரூபிள்கள் அளவுக்கு இருந்தன; 1936 ஆம் ஆண்டுக்கு, 32 பில்லியன் ரூபிள்கள் குறியிடப்பட்டுள்ளது.

அளவிடும் அலகாக ரூபிளின் ஸ்திரமற்றதன்மையை பார்ப்போமானால், பண மதிப்பீடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, முழுக்கவும் கேள்விக்கு இடமில்லாத மற்றுமொரு அலகுக்கு வருவோம். 1913 டிசம்பரில், டான் பேஸின் 2,275,000 தொன்கள் நிலக்கரியை உற்பத்தி செய்தது; 1935 டிசம்பரில், இது 7,125,000 தொன்கள். கடந்த மூன்று ஆண்டு காலங்களில் இரும்பு உற்பத்தி இருமடங்காகியிருக்கிறது. உருக்கு மற்றும் உருட்டு ஆலைகளின் உற்பத்தி ஏறக்குயை மடங்கு அதிகரித்திருக்கிறது. எண்ணெய், நிலக்கரி மற்றும் இரும்பின் உற்பத்தி போருக்கு முந்தைய அளவை விட 3 முதல்   மடங்கு அதிகரித்திருக்கிறது. 1920 ஆம் ஆண்டில், மின்சார உற்பத்திக்கான முதலாவது திட்டம் வரையப்பட்ட போது, நாட்டில் இருந்த 10 மாவட்ட மின்சார உற்பத்தி நிலையங்களின்  மொத்த மின்சார உற்பத்தி 253,000 கிலோவாட்களாக இருந்தது. 1935 ஆம் ஆண்டு, அது 95 நிலையங்களாக மாறியிருந்தது, மொத்த மின்சார உற்பத்தி 4,345,000 கிலோவாட்களாகி இருந்தது. 1925 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் மின்சார உற்பத்தியில் 11வது இடத்தில் இருந்தது; 1935 ஆம் ஆண்டு இது ஜேர்மனி மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து விட்டது. நிலக்கரி உற்பத்தியில், சோவியத் ஒன்றியம் 10வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. உருக்கில், 6வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. டிராக்டர்கள் உற்பத்தியில், உலகின் முதலாவது இடத்திற்கு வந்துள்ளது. சர்க்கரை உற்பத்தியிலும் இதேநிலை.

தொழிற்துறையில் பிரமாண்டமான சாதனை, விவசாயத்தில் மிகப்பெருமளவில் நம்பிக்கையளிக்கும் ஆரம்பங்கள், பழைய தொழிற்துறை நகரங்களின் அசாதாரண வளர்ச்சி மற்றும் புதியவற்றின் கட்டுமானம், தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒரு துரித வளர்ச்சி, கலாச்சார மட்டம் மற்றும் கலாச்சாரத் தேவைகளில் ஒரு அதிகரிப்பு இவையெல்லாம் பழைய உலகின் தீர்க்கதரிசிகள் எந்த அக்டோபர் புரட்சியில் மனித நாகரிகத்தின் கல்லறையைக் காண முற்பட்டார்களோ அதன் சந்தேகத்திற்கிடமற்ற விளைவுகளே ஆகும். முதலாளித்துவ பொருளாதாரவாதிகளுடன், நாம் இனியும் சண்டையிட எதுவும் இல்லை. மூலதனம் புத்தகத்தின் பக்கங்களில் அல்லாது, பூமியின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கைத் தழுவியிருக்கும் ஒரு பொருளாதாரத் தளத்தில்; இயங்கியல் மொழியில் அல்லாது, மாறாக இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் மொழியில் சோசலிசம் வெற்றிக்கான தன் உரிமையை எடுத்துக்காட்டியுள்ளது. உள்முகச் சிக்கல்கள், வெளியிலிருந்தான தாக்குதல்கள் மற்றும் தலைமையின் தவறுகள் இவற்றின் விளைவாக சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியுற நேருமாயின் கூட - இது நடக்காதென்று உறுதியாக நம்புவோம் - பின்தங்கிய ஒரு நாடு முழுக்கவும் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் காரணத்தால் இருபது ஆண்டுகளுக்கும் குறைவானதொரு காலத்தில் வரலாற்றில் உதாரணம் காட்டமுடியாத வெற்றிகளைச் சாதித்திருக்கிறது என்கின்ற அழிக்கவியலாத உண்மை வருங்காலத்திற்கான ஒரு நம்பிக்கையூட்டும் உறுதிமொழியாக எஞ்சியிருக்கும்.

தொழிலாளர் இயக்கத்திற்குள் சீர்திருத்தவாதிகளுடனான மோதல்களையும் இது முடிவுக்குக் கொண்டு வருகிறது. ஒரு கணமேயாயினும் அவர்களின் எலிகளின் சலசலப்புகளை புரட்சியால் ஒரு புதிய வாழ்க்கைக்கு எழுச்சி பெற்றிருக்கும் இந்த மக்களால் சாதிக்கப்பட்டிருக்கும் மலை போன்ற வேலையுடன் நாம் ஒப்பிட முடியுமா? 1918 ஆம் ஆண்டில் ஜேர்மனியின் சமூக ஜனநாயகவாதிகள், தொழிலாளர்கள் அவர்களுக்கு அளித்திருந்த அதிகாரத்தை முதலாளித்துவத்தை மீட்பதற்கு அல்லாமல் ஒரு சோசலிசப் புரட்சிக்குப் பயன்படுத்தியிருந்தார்களேயானால், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியும் ஒரு சோசலிச பகுதியின் வசம் இன்று எந்த அளவு வெல்லமுடியாத பொருளாதார சக்தி சொந்தமாகியிருக்கும் என்பதை ரஷ்யாவின் அனுபவத்தின் அடிப்படையில் கண்டுணர்வது எளிது. உலக மக்கள், சீர்திருத்தவாதத்தின் வரலாற்றுக் குற்றத்திற்கு புதிய போர்கள் மற்றும் புரட்சிகளின் ஊடாக விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

இந்த சாதனைகளின் ஒப்பீட்டு மதிப்பீடுகள்

சோவியத் தொழிற்துறையின் இயங்குசக்தியின் மதிப்பீடுகள் உதாரணம் காட்ட முடியாதவை. இருப்பினும் அவை தீர்மாகரமானவையாக இருப்பதில் இருந்து இன்னும் வெகு தூரத்தில் இருக்கின்றன. சோவியத் ஒன்றியம் தன்னை அதி பள்ளமான ஒரு இடத்தில் இருந்து மேலே உயர்த்திக் கொண்டிருக்கிறது, அதே சமயத்தில் முதலாளித்துவ நாடுகள் மிகவும் உயர்ந்த ஒரு இடத்தில் இருந்து சரிந்து கொண்டிருக்கின்றன. நடப்புத் தருணத்தில் சக்திகளுக்கு இடையிலான இடையுறவு, வளர்ச்சி விகிதத்தால் நிர்ணயிக்கப்படவில்லை, மாறாக இரண்டு தரப்பிலுமான பொருள் திரட்டுகள், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும், எல்லாவற்றுக்கும் மேலாக, மனித உழைப்பின் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் வெளிப்படுகின்ற ஒட்டுமொத்த சக்தியின் ஒப்புமைவேறுபாட்டில் தான் நிர்ணயமாகிறது. விடயத்தை இந்தப் புள்ளிவிவரப் பார்வையில் இருந்து அணுகினால், நிலைமை உடனே சோவியத் ஒன்றியத்திற்கு முற்றிலும் அனுகூலமற்றதாய் மாறுகிறது.

யார் தாக்குப் பிடிப்பார்கள்? என்று லெனின் சூத்திரப்படுத்திய கேள்வியானது, ஒரு பக்கத்தில் சோவியத் ஒன்றியமும் உலகப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கமும் இருக்க மறுபக்கத்தில் சர்வதேச மூலதனமும் ஒன்றியத்திற்குள்ளான குரோத சக்திகளும் இருக்க, இவற்றுக்கு இடையிலான சக்திகளின் இடைத்தொடர்பு குறித்த கேள்வியாகும். சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார வெற்றிகளானவை அது தனக்கு அரண் ஏற்படுத்திக் கொள்வதற்கும், முன்னேறுவதற்கும், தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வதற்கும், மற்றும் அவசியப்படும் சமயத்தில், பின்வாங்கிக் காத்திருப்பதற்கும், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நின்று பிடிப்பதற்கு சாத்தியமாக்குகின்றன. ஆனால், யார் தாக்குப் பிடிப்பார்கள் என்கின்ற இராணுவரீதியானதாக மட்டுமல்லாமல் இன்னும் கூடுதலாய்  பொருளாதாரரீதியானதாகவும் உள்ள ஒரு கேள்வி, அதன் வெகு இயல்பான ஒன்றாய், சோவியத் ஒன்றியத்தை உலக அளவில் எதிர்கொள்கிறது. இராணுவத் தலையீடு ஒரு அபாயம். முதலாளித்துவ இராணுவங்களின் சரக்கு இரயில்களில் வரும் மலிவு விலைப் பண்டங்களின் தலையீடு ஒப்பிட முடியாத அளவு அதனினும் கூடுதல் அபாயமானது. மேற்கத்திய நாடு ஒன்றில் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியானது உடனடியாகவும் தீவிரமாகவும் சக்திகளுக்கு இடையிலான இடைத்தொடர்பினை நிச்சயமாக மாற்றும். ஆனால், சோவியத் ஒன்றியம் தனிமைப்பட்ட நிலையில் தொடர்கின்ற காலம் வரையிலும், இன்னும் மோசமாக, ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் பின்னடைவுக்கு தள்ளப்பட்டு பின்வாங்குவதை தொடர்கின்ற காலம் வரையிலும், சோவியத் கட்டுமானத்தின் வலிமை என்பது இறுதிப் பகுப்பாய்வில் உழைப்பின் உற்பத்தித் திறனின் மூலம் தான் அளவிடப்படுகிறது. அது ஒரு சந்தைப் பொருளாதாரத்தின் கீழ், தன்னை உற்பத்திச் செலவுகள் மற்றும் விலைகளில் தான் வெளிப்படுத்துகிறது. உள்நாட்டு சந்தை விலைகளுக்கும் உலகச் சந்தையில் உள்ள விலைகளுக்கும் இடையிலான வித்தியாசம் சக்திகளுக்கு இடையிலான இந்த இடைத்தொடர்பினை அளவிடுவதில் முக்கியமான வழிவகைகளில் ஒன்றாகும். ஆனாலும், சோவியத் புள்ளிவிவர நிபுணர்களோ இந்தப் பிரச்சினையை அணுகுவதற்கும் கூடத் தடை செய்யப்படுகின்றனர். காரணம் என்னவென்றால், முதலாளித்துவம் தேக்கமுற்ற இற்றுப் போன நிலையில் இருந்தாலும் தொழில்நுட்பம், ஒழுங்கமைப்பு மற்றும் உழைப்புத் திறமை ஆகிய விஷயங்களில் அது இன்னமும் வெகு தூரம் முன்னால் நிற்கிறது.

சோவியத் ஒன்றியத்தில் விவசாயத்துறையின் பாரம்பரியமாய் பின்தங்கிய நிலைமை போதுமான அளவு நன்கு அறியப்பட்ட ஒன்று தான். அதன் எந்த ஒரு பிரிவிலும் மிகக் குறைந்த அளவில் கூட தொழிற்துறை முன்னேற்றத்துடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் நிகழ்ந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு, "பீட் உற்பத்தியில் நாம் முதலாளித்துவ நாடுகளை விட மிகவும் பின்தங்கி இருக்கிறோம்" என்று 1935 ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் புகார் தெரிவிக்கிறார் மோலோடோவ். "1934 ஆம் ஆண்டில் நாம் ஒரு ஹெக்டர் நிலத்தில் 82 சென்ட்னர்களை* (centners) விளைச்சல் செய்தோம்; 1935 ஆம் ஆண்டில், உக்ரைனில் அசாதாரண விளைச்சலில் 131 சென்ட்னர்கள். ஒரு ஹெக்டர் நிலத்தில் செக்கோஸ்லேவேக்கியா மற்றும் ஜேர்மனியில் 250 சென்ட்னர்களும், பிரான்சில் 300 சென்ட்னர்களுக்கும் அதிகமாகவும் விளைச்சல் செய்கிறார்கள். (ஒரு ஹெக்டர் என்பது சுமார் 2.5 ஏக்கர்கள். ஒரு சென்ட்னர் என்பது 100 கிலோகிராம்கள்). மோலோடோவின் புகாரை விவசாயத்தின் ஒவ்வொரு துறைக்கும் நீட்டிக்க முடியும் -ஆடைநூல் மற்றும் தானிய விளைச்சல், மற்றும் குறிப்பாக கால்நடை வளர்ப்புக்கு. பயிர்களின் முறையான சுழற்சி முறை, விதைகள் தேர்வு, உரமிடுதல், டிராக்டர்கள், அறுவடை எந்திரங்கள், கலப்பினமில்லாத கால்நடைப் பண்ணைகள்- இவை எல்லாம் சமூகமயமாக்கப்பட்ட விவசாயத்தில் ஒரு உண்மையான பிரம்மாண்டமான புரட்சிக்குத் தயார் செய்கின்றன. ஆனால், இந்த மிகவும் பழமைவாய்ந்த பிரிவில் தான் புரட்சிக்கு, அதிகமான நேரம் தேவையானதாய் இருக்கிறது. இதனிடயே, கூட்டுற்பத்தி இருந்தாலும் கூட, சிறு பண்ணை அமைப்பினைக் கொண்டு கையொடிந்த நிலையில் இருக்கும் முதலாளித்துவ மேற்கின் உயர்ந்த மாதிரிகளை நெருங்குவதே இன்னமும் பிரச்சினையாக இருக்கிறது.

*1centners=100 கிலோகிராம்

தொழிற்துறையில் உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கான போராட்டம் இரண்டு பாதைகளில் செல்கிறது: அவையாவன அபிவிருத்தியடைந்த தொழில்நுட்பத்தை கையாள்வது ஒன்று மற்றும் உழைப்புச்சக்தியை சிறப்பாக பயன்படுத்துவது இன்னொன்று. ஒருபக்கத்தில் மேற்கின் உயர்ந்த முதலாளித்துவ தொழில்நுட்பமும் இன்னொருபக்கத்தில் உள்நாட்டு ஆட்சிப்பகுதியின் திட்டமிட்ட பொருளாதாரமும் இருந்தது தான் ஒரு சில வருட காலத்துக்குள்ளேயே மிகவும் நவீன வகையைச் சேர்ந்த பிரம்மாண்டமான தொழிற்சாலைகளை நிறுவுவதை சாத்தியமாக்கின. இந்த துறையில் அந்நிய சாதனைகள் உட்கிரகித்துக் கொள்ளப்படும் நிகழ்போக்கு முன்னுரிமைமிக்கது. சோவியத் தொழிற்துறை, செம்படைக்கான ஆயுதத் தயாரிப்புகளுடன் சேர்த்து, ஒரு உந்தப்பட்ட உத்வேகத்தை உருவாக்கியுள்ளது என்கின்ற உண்மையானது பாரிய சாத்திய அனுகூலங்களை கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் அல்லது பிரான்சில் போல, தொழிற்சாலைகள் காலாவதியாகிப் போன செயலாக்கப் பாதையில் இழுக்கப்பட நிர்ப்பந்தமுறவில்லை. பழைய வகைக் கருவிகளைச் சுமக்கும் வண்ணம் இராணுவம் சபிக்கப்படாதிருக்கிறது. ஆனால் இதே பரபரப்பான வளர்ச்சியானது தனது எதிர்மறையான பக்கத்தையும் கொண்டு தான் இருக்கிறது. தொழிற்துறையின் பல்வேறு கூறுகளுக்கு இடையே பொருந்தாத வளர்ச்சி இருக்கிறது; மனிதர்கள் தொழில்நுட்பத்திற்கு பின்தங்கி இருக்கிறார்கள்; தலைமை தன் கடமைகளுக்கு ஈடு கொடுப்பதாக இல்லாமல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இது அதி உயர்வான உற்பத்திச் செலவுகளிலும் உற்பத்திப் பொருளின் மோசமான தரத்திலும் தன் வெளிப்பாட்டைக் காண்கிறது.

எண்ணெய் துறையின் தலைவர் எழுதுகிறார், ""எங்களது ஆலைகள் அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற அதே சாதனத்தையே கொண்டிருக்கின்றன. ஆனால் துளையிடும் ஒழுங்கமைப்பு பின்தங்கி இருக்கிறது; ஆட்கள் போதுமான அளவு திறம்பெற்றவர்களாய் இல்லை". கவனக்குறவு, திறனின்மை மற்றும் தொழில்நுட்ப மேற்பார்வை இல்லாமை ஆகியவற்றின் விளைவால் ஏராளமான இடையூறுகள் நிகழ்வதாக அவர் விளக்குகிறார். மோலோடோவ் புகார் தெரிவிக்கிறார்: "கட்டுமானத் துறை ஒழுங்கமைப்பில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்....பெரும் பகுதி பழைய வழிகளில் கருவிகள் மற்றும் எந்திரவகை முறைகளின் செயல்திறமற்ற பயன்பாட்டுடன் மேற்கொள்ளப்படுகின்றன". இத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சோவியத் ஊடகங்கள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இதுவரையிலும், புதிய தொழில்நுட்பமானது எந்தவகையிலும் தனது முதலாளித்துவ தாயகத்தில் தருவதைப் போன்றதொரு அதே விளைகளை தருவதில்லை.

கனரகத் தொழிற்துறையின் மொத்தமான சாதனைகள் ஒரு பிரம்மாண்டமான வெற்றியாகும்: இத்தகையதொரு அடித்தளத்தில் தான் கட்டுமானம் செய்வது சாத்தியப்படும். இருப்பினும், தொழில்நுட்பக் கலாச்சாரம் மற்றும் பொதுக் கலாச்சாரம் ஆகிய இரண்டையும் கோரும் நுண்ணிய எந்திரவியக்க வகைமுறைகளை உருவாக்குவது தான் ஒரு நவீன பொருளாதாரத்திற்கான பரீட்சையாக இருக்கிறது. இந்த அம்சத்தில், சோவியத் ஒன்றியத்தின் பின்தங்கிய தன்மை இன்னும் மிகப்பெரும் அளவில் தான் இருக்கிறது.

சந்தேகத்திற்கிடமில்லாமல் மிகவும் முக்கியமான வெற்றிகள், அளவுரீதியாகவும் சரி பண்புரீதியாகவும் சரி, யுத்த தொழிற்துறைகளில் தான் சாதிக்கப்பட்டிருக்கின்றன. இராணுவமும் படைவரிசைகளும் தான் மிகவும் செல்வாக்கான நுகர்வோராகவும், பொருட்களைக் கறாராய் பரிசோதித்து வாங்குபவர்களாகவும் இருக்கிறார்கள். இருப்பினும், யுத்தத் துறையின் தலைவர்கள் - அவர்களில் வோரோசிலோவும் இருக்கிறார் - தங்களது தொடர்ச்சியான பொது உரைகளில், இடைவிடாமல் தெரிவிக்கும் புகார்: "செம்படைக்கு நீங்கள் வழங்கும் தயாரிப்புகளின் தரத்தில் எங்களுக்கு எப்போதும் முழுத் திருப்தி இருக்கவில்லை". இந்த எச்சரிக்கை தொனிக்கும் வார்த்தைகளின் பின்மறைந்துள்ள கவலையைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல.

"எந்திர உற்பத்தியின் உற்பத்திப் பொருட்கள் நல்ல தரத்துடன் இருக்க வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு இருப்பதில்லை" என்று கனரகத் தொழிற்துறையின் தலைவர் ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறுகிறார். அவர் தொடர்ந்து கூறுகையில், "எங்களிடம் இருக்கும் எந்திரங்கள் விலை மிகுந்ததாயும் இருக்கின்றன" என்கிறார். எப்போதும் போல், உலக உற்பத்தியுடன் ஒப்பிட்டு துல்லியமான ஒப்பீட்டுத் தரவினை அளிப்பதில் இருந்து பேசுபவர் ஒதுங்கிக் கொள்கிறார்.

டிராக்டர் சோவியத் தொழிற்துறையின் பெருமிதமாகக் கருதப்படுவது. ஆனால் டிராக்டர்களின் திறம்பட்ட பயன்பாட்டின் மதிப்பீடுகள் மிகவும் குறைவானதாக இருக்கிறது. கடந்த தொழில் ஆண்டில், எண்பத்தியொரு சதவீத டிராக்டர்களை முக்கியமான திருத்தங்களுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது. மேலும், அவற்றில் ஒரு கணிசமான எண்ணிக்கையிலானவை, உழும் பருவத்தின் உச்ச காலத்தில் மீண்டும் பழுதுற்றன.  குறிப்பிட்ட கணக்கீடுகளின் படி, எந்திர மற்றும் டிராக்டர் நிலையங்கள், ஹெக்டருக்கு இருபது முதல் இருபத்தி இரண்டு சென்ட்னர்கள் வரை தானிய அறுவடை இருந்தால் தான் செலவினத்திற்கு ஈடுகட்ட முடியும். நடப்பில், சராசரி அறுவடையானது அதில் பாதி தான் இருக்கிற சூழ்நிலையில், அரசாங்கம் பற்றாக்குறையை ஈடுகட்ட பில்லியன் கணக்கான தொகையைச் செலவிடும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறது.

வாகனப் போக்குவரத்து விடயத்தில் நிலைமை இன்னும் மோசம். அமெரிக்காவில் ஒரு டிரக் ஆண்டுக்கு அறுபதாயிரம் முதல் எண்பதாயிரம் அல்லது ஒரு இலட்சம் கிலோமீட்டர் வரை கூடப் பயணம் செய்கிறது; சோவியத் ஒன்றியத்தில் வெறும் இருபதாயிரம் கிலோமீட்டர், அதாவது மூன்றில் அல்லது நான்கில் ஒரு பங்கு தான் செல்கிறது. ஒவ்வொரு 100 எந்திரங்களுக்கும், 55 மட்டும் தான் இயங்குகின்றன, மற்றவை எல்லாம் பழுதுநீக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன அல்லது அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. பழுதுநீக்கங்களுக்கான செலவு மொத்த புதிய எந்திரங்களுக்கான மொத்தச் செலவையும் விட இரண்டு மடங்காக இருக்கிறது. "வாகனப் போக்குவரத்து என்பது உற்பத்திச் செலவில் ஒரு மிகப்பெரிய சுமையே தவிர வேறொன்றுமில்லை என்று அரசாங்கக் கணக்கு அலுவலகம் தெரிவிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இரயில் பாதைகளின் சுமைகாவும்திறன் அதிகரிப்புடன், ஏராளமான தடம் புரள்வுகளும் பழுதாகி நிற்பதும் சேர்த்து அதிகரிப்பு கண்டுள்ளது என்கிறார் மக்கள் ஆணையர்கள் குழுவின் தலைவர். அடிப்படைக் காரணம் அதே தான்: கடந்த காலத்தில் இருந்து பாரம்பரியமாய் வந்த வேலைத்தகைமையின்மையாகும். தண்டவாளங்களில் திசைமாற்றுக் கருவிகளை நல்ல நிலையில் பராமரிப்பதற்கான போராட்டம் ஒரு பெரும் தீர காரியமாக இருக்கிறது, இது குறித்து அதில் பணிபுரியும் பெண்கள் கிரெம்ளின் அதிகாரத்தின் உயர்ந்த வட்டாரத்தில் இருப்பவர்களிடம் புகார் அளிக்கிறார்கள். நீர்ப் போக்குவரத்தும், சமீப வருடங்களின் முன்னேற்றம் எல்லாம் இருந்த போதிலும், இரயில் பாதைகளை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. "நீர்ப் போக்குவரத்தின் வெறுப்பூட்டும் செயல்பாடு", "கப்பல் பழுதுநீக்கத்தில் மிகவும் குறைந்த தரம்" போன்றவை குறித்த தகவல்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் தவறாது இடம் பிடிக்கின்றன.

இலகுரகத் தொழிற்சாலைகளில் சூழ்நிலை கனரகத் தொழிற்சாலைகளை விடவும் சாதகமற்றதாக இருக்கிறது. சோவியத் தொழிற்துறைக்கான ஒரு பிரத்யேகவிதியை பின்வருமாறு சூத்திரப்படுத்தப்பட முடியும்: பண்டங்கள் வெகுஜன நுகர்வோருக்கு எவ்வளவு அருகில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவை மோசமான நிலை கொண்டதாக இருக்கின்றன என்பது ஒரு பொது விதியாகவே இருக்கிறது. ஜவுளித் துறையில், பிராவ்தா கூறுகின்றதன் படி, "அவமானகரமான வகையில் பழுதுபட்ட உற்பத்திப் பொருட்கள், தெரிவில் திறனின்மை, குறைந்த தரமுடையவையே எங்கும் காணப்பட முடிவது ஆகியவையே கூடிய சதவீதத்தில் இருக்கின்றன". பரவலான நுகர்வுக்கான பொருட்களின் மோசமான தரம் குறித்த புகார்கள் அவ்வப்போது செய்தித்தாள்களில் வந்து கொண்டே இருக்கின்றன: "நேர்த்தியற்ற இரும்புப் பொருட்கள்"; "மோசமாக இணைக்கப்பட்டு கவனமின்றி நிறைவு செய்யப்பட்ட அவலட்சணமான மரத் தயாரிப்புகள்"; "தரமான பொத்தான்களை காண முடியவில்லை"; "சமூக உணவு வழங்கல் அமைப்புமுறை முழுக்கவும் திருப்தியளிக்காத வகையில் செயல்படுகிறது". இதுபோன்ற செய்திகள் முடிவில்லாமல் தொடர்கின்றன.

தொழிற்துறை வளர்ச்சியை தரத்தைக் கருத்தில் கொள்ளாமல் அளவுரீதியான தகவல்களை மட்டும் கொண்டு குணாதிசயப்படுத்த முற்படுவதென்பது, ஒரு மனிதனின் மார்பு அளவுகளை அலட்சியப்படுத்தி விட்டு உயரத்தை மட்டும் கொண்டு அவன் உடல் வலுவை வர்ணிப்பதற்கு ஏறக்குறைய ஒப்பானதாகும். தவிரவும், சோவியத் தொழிற்துறையின் இயக்கநிலையைச் சரியாகக் கணிப்பதற்கு, பண்புரீதியான திருத்தங்களுடன் சேர்த்து, சில பிரிவுகளின் துரிதமான முன்னேற்றத்துடன் கைகோர்த்து மற்ற பிரிவுகளின் பின்தங்கிய போக்கும் உடன் வருகிறது என்கின்ற உண்மையையும் எப்போதும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம். பிரம்மாண்டமான வாகனத் தொழிற்சாலைகளின் உருவாக்கத்திற்கான விலை நெடுஞ்சாலைகளின் பற்றாக்குறையிலும் அவற்றின் மோசமான பராமரிப்பிலும் செலுத்தப்படுகிறது. "நமது சாலைகளின் சிதைவுநிலை அசாதாரணமானது. மாஸ்கோ முதல் யரோஸ்லேவல் வரையான நமது மிக முக்கியமான நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் தான் [ஆறு மைல்கள்] செல்ல முடிகிறது". [Izvestia] நாடு இன்னமும் "காலம் காலமாய் இருந்து வரும் சாலையற்ற பாரம்பரியங்களை"ப் பராமரித்து வருவதாக அரசாங்கத் திட்டக் குழுவின் தலைவர் உறுதிபடத் தெரிவிக்கிறார்.

நகராட்சிப் பொருளாதாரமும் இதேபோன்றதொரு நிலையில் தான் இருக்கிறது. புதிய தொழில் நகரங்கள் குறைந்த காலத்தில் உருவாகின்றன; அதே சமயம் ஏராளமான பழைய நகரங்கள் கவனிப்பாரில்லாமல் ஆகின்றன. தலைநகரங்களும் தொழிற்துறை மையங்களும் வளர்கின்றன, தங்களை அலங்கரித்துக் கொள்கின்றன; ஆடம்பரத் திரையரங்குகள் மற்றும் விடுதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முளைத்துக் கொண்டிருக்கின்றன; ஆனால் வாழ்விடக் குடியிருப்புகளின் பற்றாக்குறை தாங்கவியலாததாக இருக்கிறது. குடியிருக்கும் வீடுகள் விடயத்தில் அலட்சியம் ஒரு விதியாகவே தொடர்கிறது. "நாம் கட்டுவது மோசமானதாக இருக்கிறது, அதற்கான செலவோ ஏராளமாய் ஆகிறது. நம் வீடுகள் பாழடைகின்றன, ஆனால் புதுப்பிக்கப்படுவதில்லை. நாம் பழுது நீக்குவதும் கொஞ்சம் தான், அதுவும் மோசமாகத் தான்". [Izvestia]

ஒட்டுமொத்த சோவியத் பொருளாதாரமும் இதுபோன்ற ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட வரம்புகளுக்குள் இது தவிர்க்க முடியாதது, ஏனென்றால் முன்னேற்றத்தை மிகவும் முக்கியமான பிரிவுகளில் இருந்து தொடக்குவது அவசியமானதாக இருந்திருக்கிறது, இருந்து வருகிறது. இருந்தாலும் குறிப்பிட்ட பிரிவுகளின் பின்தங்கிய நிலைமை மற்ற பிரிவுகளின் பயனுள்ள செயல்பாடுகளைப் பெருமளவில் குறைத்து விடுகிறது. ஒரு உன்னதமான திட்டமிடல் கட்டளையிடும் ஆற்றல் என்பது தனித்தனிப் பிரிவுகளில் உயர்ந்தபட்ச உத்வேகத்திற்கு உறுதியளிப்பதாய் இருக்காது, மாறாக ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தில் அதிகபட்ச சாத்தியமான முடிவினையே உறுதியளிப்பதாய் இருக்கும். அத்தகையதொரு நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், முதலாவது காலத்தில் வளர்ச்சிக்கான புள்ளிவிவர மதிப்பீடுகள் குறைவானதாகவே இருக்கும், ஆனால் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், அதிலும் குறிப்பாக நுகரும் மக்கள், ஆதாயம் பெறுவதாக இருக்கும். போகப் போக பொதுவான பொருளாதார இயக்கமும் ஆதாயம் பெறத் தொடங்கும்.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரத்தில், வாகனங்களின் உற்பத்தியும் பழுதுநீக்கமும் மொத்த தொழிற்துறை உற்பத்தியுடன் சேர்க்கப்படுகிறது. பொருளாதாரத் திறன்வீதக் கணக்கீட்டுப் பார்வையில் பார்த்தால், கழிப்பது தான் முறையானதாக இருக்குமே தவிர, சேர்ப்பது அல்ல. இந்தக் குறிப்பு தொழிற்துறையின் இன்னும் பல பிரிவுகளுக்கும் பொருந்தும். இக்காரணத்தால், ரூபிள்களிலான எல்லா மதிப்பீடுகளும் சார்பியல் மதிப்பை மட்டுமே கொண்டிருக்கின்றன. ஒரு ரூபிள் குறிப்பது என்ன என்பது குறித்து உறுதியாகத் தெரிவதில்லை. அதன் பின்னால் இருப்பது என்ன - ஒரு எந்திரத்தின் கட்டுமானமா, அல்லது முந்தித் தோன்றிய அதன் பழுதா - என்பது எப்போதும் உறுதியாகத் தெரிவதில்லை. "ஸ்திரமான" ரூபிள்களிலான ஒரு மதிப்பீட்டில், பெரும் தொழிற்சாலைகளின் மொத்த உற்பத்தி, போருக்கு முந்தைய அளவுகளில் இருந்து 6 மடங்கு உயர்ந்திருக்கிறது என்றால், எண்ணெய், நிலக்கரி மற்றும் இரும்பு ஆகியவற்றின் தொன்களிலான உண்மையான உற்பத்தி 3 முதல் மடங்கு அதிகரித்திருக்கும். சோவியத் தொழிற்துறையானது ஜாரிச ரஷ்யா அறிந்திராத புதிய பிரிவுகள் ஏராளமானவற்றைத் தோற்றுவித்திருக்கிறது என்கிற உண்மையில் தான் குறியீடுகளின் இந்த விலக்கத்திற்கு அடிப்படையான காரணம் தங்கியிருக்கிறது, ஆனால் உப காரணம் ஒன்று புள்ளிவிவரங்களில் கைப்புரட்டு செய்யும் போக்கிலும் கண்டறியத்தக்கதாய் இருக்கிறது. யதார்த்தத்தினை அழகாக காட்டுவது எந்த அதிகாரத்துவமும் உயிர் வாழ்வதற்கான அவசியத் தேவையாக இருக்கிறது என்பது நன்கு அறிந்ததே.

மக்கள் தொகையின் தனிநபர் உற்பத்தி அளவு

சோவியத் ஒன்றியத்தின் சராசரி தனிநபர் உழைப்பின் உற்பத்தித் திறன் இன்னமும் மிகக் குறைவானதாகவே இருக்கிறது. சிறந்த உலோக வார்ப்பு ஆலையில், அதன் இயக்குனரே ஒப்புக் கொண்டுள்ள படி, ஒரு தனிநபர் உற்பத்தி செய்யும் இரும்பு மற்று உருக்கின் அளவு அமெரிக்க வார்ப்பு ஆலைகளின் தனிநபர் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கே ஆகும். இரண்டு நாடுகளிலும் சராசரி அளவுகள் மீதான ஒரு ஒப்பீட்டைப் பார்த்தால், இந்த விகிதம் 1 க்கு 5 என்பதாக, இல்லையெனில் அதனினும் மோசமானதாக இருக்கும். இந்தச் சூழ்நிலைகளில் உயர்ந்த உருக்குலைகளை முதலாளித்துவ நாடுகளை விட "மேம்பட்ட" முறையில் பயன்படுத்தப்படுவதான அறிவிப்பு அர்த்தமற்றதாகவே இருக்கிறது. தொழில்நுட்பத்தின் இயக்கம் மனித உழைப்பை மிச்சப்படுத்தவது அன்றி வேறொன்றுமில்லை. மரம் மற்றும் கட்டுமானத் தொழிற்துறைகளில் விடயம் உலோகத் துறையில் இருப்பதை விடவும் சாதகம் குறைந்த நிலையாக இருக்கிறது. அமெரிக்காவின் கல்லுடைக்கும் குவாரிகளில் இருக்கும் ஒவ்வொரு தொழிலாளர் கணக்கிலும் 5,000 தொன்கள் உற்பத்தி ஆண்டுக்கு விழுகிறது, சோவியத் ஒன்றியத்திலோ இது 500 தொன்களாய் இருக்கிறது - அதாவது பத்தில் ஒரு பங்கு. இத்தகைய பெரும் வித்தியாசங்கள் திறமைபடைத்த தொழிலாளர்கள் இன்மையால் மட்டுமல்ல, வேலையின் மோசமான ஒழுங்கமைப்பாலும் இன்னும் கூடுதலாய் எடுத்துக்காட்டப்படுவதாக இருக்கிறது. அதிகாரத்துவம் தனது அனைத்து பலத்தையும் பிரயோகித்து தொழிலாளர்கள் மீது குத்துகிறது, ஆனால் உழைப்பு சக்தியை அதற்கு முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. தொழிற்துறையினை விடவும் விவசாயத்தில் விடயம் இன்னமும் குறைவான அனுகூலத்துடன் இருக்கிறது. உழைப்பு சக்தியின் குறைவான உற்பத்தித் திறன் காரணமாக குறைவான தேசிய வருவாய் வந்து சேருகிறது, அதன் தொடர்ச்சியாக வெகுஜன மக்களுக்கு வாழ்க்கைத் தரக் குறைவும் வந்து சேருகிறது.

தொழிற்துறை உற்பத்தியின் அளவில் 1936 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் ஐரோப்பாவில் முதலிடத்தை பிடித்து விடும் - இந்த முன்னேற்றம் அதனளவில் பிரம்மாண்டமானது! - என்று உறுதிபடக் கூறும் சமயத்தில், அவர்கள் பொருட்களின் தரம் மற்றும் உற்பத்திச் செலவை மட்டுமன்றி, மக்கள்தொகை அளவையும் கருத்தில் கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கையை நுகர்வோர் எண்ணிக்கையால் வகுத்துக் காண்பதின் மூலமாகத் தான் ஒரு நாட்டின் பொதுவான வளர்ச்சி மட்டம், அதிலும் குறிப்பாக வெகுஜன மக்களின் வாழ்க்கைத் தரம், குறைந்த பட்சம் அண்ணளவான அளவுகளிலேனும் வரையறுக்கப்படும் விதமாய் இருக்கிறது. இந்த எளிய எண்ணிக்கைக் கணக்கைப் பார்ப்போம். பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் இராணுவ விடயங்களுக்கு இரயில் பாதைப் போக்குவரத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கத் தேவையில்லை. சோவியத் ஒன்றியம் 83,000 கிலோமீட்டர்கள் இரயில் பாதைகளைக் கொண்டிருக்கிறது, ஜேர்மனியில் இது 58,000, பிரான்சில் 63,000 மற்றும் அமெரிக்காவில் 417,000. இதன் அர்த்தம் என்னவென்றால், எண்ணிக்கையில் பத்தாயிரம் பேருக்கு ஜேர்மனியில் 8.9 கிலோமீட்டர் இரயில் பாதையும், பிரான்சில் 15.2 கிலோமீட்டர் பாதையும், அமெரிக்காவில் 33.1 கிலோமீட்டர் பாதையும், சோவியத் ஒன்றியத்தில் 5.0 கிலோமீட்டர் இரயில் பாதையும் இருக்கிறது என்பதாகும். இவ்வாறாக, இரயில் பாதைக் குறியீடுகளின் படி, சோவியத் ஒன்றியம் நாகரிக உலகில் மிகவும் தாழ்வான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிலை தான் தொடர்கிறது. வியாபாரக் கப்பல்கள், கடந்த ஐந்து வருடங்களில் மும்மடங்காகி இருக்கும் நிலையில், இப்போது தான் ஏறக்குறைய டென்மார்க் மற்றும் ஸ்பெயினுக்கு நிகராக நிற்கின்றன. இந்த உண்மைகளுடன், நெடுஞ்சாலைகள் விடயத்தில் இன்னமும் மிகவும் கீழமைந்ததொரு இடத்தில் தான் சோவியத் ஒன்றியம் இருக்கிறது என்பதையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 0.6 வாகனம் என்ற விகிதத்தில் இருக்கிறது. இங்கிலாந்தில், இது சுமார் 8 (1934 ஆம் ஆண்டில்), பிரான்சில் சுமார் 4.5, அமெரிக்காவில் 23 (1928 இல் 36.5 ஆக இருந்தது). அதே சமயத்தில் குதிரைகளின் எண்ணிக்கையிலான ஒப்பீட்டிலும் (ஒவ்வொரு 10 அல்லது 11 குடிமக்களுக்கு ஒரு குதிரை) சோவியத் ஒன்றியம், இரயில் பாதை, நீர் மற்றும் வாகனப் போக்குவரத்து இவற்றிலான அதீத பின்தங்கிய நிலைமைகள் இருந்தபோதிலும், பிரான்சு அல்லது அமெரிக்காவை முந்த முடியவில்லை, அந்தக் கால்நடைகளின் தரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையே தொடர்கின்றது.

மிகச் சிறப்பான வெற்றிகளை ஈட்டியுள்ளதான கனரகத் தொழிற்சாலை வட்டாரத்தில், ஒப்பீட்டுக் குறியீடுகள் இன்னமும் சாதகமற்றவையாகவே தொடர்கின்றன. 1935 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் ஒரு தனிநபருக்கான நிலக்கரி உற்பத்தி சுமார் 0.7 டன்கள் என்பதாக இருக்கிறது; இங்கிலாந்தில், இது ஏறக்குறைய 5 டன்கள்; அமெரிக்காவில் சுமார் 3 டன்கள் ( இது 1913 ஆம் ஆண்டில் 5.4 டன்கள் என்று இருந்தது); ஜேர்மனியில் சுமார் 2 டன்கள். உருக்கு: சோவியத் ஒன்றியத்தில் இது ஒரு நபருக்கு சுமார் 67 கிலோகிராம்கள் [தோராயமாக 1 கிலோகிராம் = 2.2 lbs]; அமெரிக்காவில் சுமார் 250 கிலோகிராம்கள். வார்ப்பு இரும்பு மற்றும் உருட்டு இரும்பிலும் ஏறக்குறைய இதே விகிதாச்சாரங்கள் தான். சோவியத் ஒன்றியத்தில், 1935 ஆம் ஆண்டில் ஒரு தனிநபருக்கான மின்சார உற்பத்தி அளவு 153 கிலோவாட் மணியாக (KWH) இருந்தது, இங்கிலாந்தில் (1934) 443, பிரான்சில் 363, ஜேர்மனியில் 472.

இலகுரகத் தொழிற்சாலைகளில், தனிநபர் குறியீடுகள் இதனினும் குறைந்த நிலையில் இருப்பது ஒரு பொது விதியாகவே இருக்கிறது. 1935 ஆம் ஆண்டில் தனிநபர் ஒருவருக்கான கம்பளி ஆடையின் அளவு ½ மீட்டருக்கும் குறைவானதாக இருந்தது [1 மீட்டர் = 39.37 அங்குலம்], அல்லது அமெரிக்கா அல்லது இங்கிலாந்தை விட 8 முதல் 10 மடங்கு குறைவானதாக இருந்தது எனலாம். கம்பளி ஆடை என்பது தனி அந்தஸ்து கொண்டிருந்த  சோவியத் குடிமக்களுக்கு மட்டுமே அணுகத்தக்கதாக இருந்தது எனலாம். வெகுஜன மக்களைப் பொறுத்த வரை பருத்தி ஆடைகள்தான் குளிர்கால ஆடைக்கும் பயன்படுத்தப்பட வேண்டியதாய் இருந்தது, இதில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 16 மீட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டன. பாதணிகளின் உற்பத்தி சோவியத் ஒன்றியத்தில் தற்போது சராசரியாய் தனிநபர் ஒருவருக்கு ஒரு சோடி-இணையில் பாதி என்கிற அளவுக்கு இருக்கிறது, ஜேர்மனியில் ஒரு இணைக்கும் அதிகமான அளவு, பிரான்சில் ஒரு இணையும் மற்றுமொரு பாதியும், அமெரிக்காவில் சுமார் மூன்று இணைகள் என்ற அளவில் இருக்கின்றன. இதில் தரக் குறியீடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை, எடுத்துக் கொண்டால் இன்னமும் ஒப்பீட்டில் கீழிறங்கி விடும். முதலாளித்துவ நாடுகளில் பல இணை பாதணிகளை வைத்திருக்கும் மக்களின் சதவீதம் சோவியத் ஒன்றியத்தில் இருப்பதை விட கணிசமான அளவில் அதிகம் இருக்கிறது என்பதே காரணம் என்று நாம் இதனை மெத்தனமாக எடுத்துக் கொண்டு விடக் கூடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாதணிகள் இல்லாத மக்களின் சதவீதத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடுகளில் ஒன்றாகவும் சோவியத் ஒன்றியம் இருக்கிறது.

ஏறக்குறைய இதே இடைத்தொடர்புதான், பகுதியாக இன்னும் குறைந்த சாதக நிலைமை தான், உணவுப்பொருட்கள் உற்பத்தியிலும் நிலவுகிறது. சமீப வருடங்களில் சந்தேகத்திற்கிடமில்லாமல் முன்னேற்றம் இருந்தது என்றாலும், ஜாம்கள், பாகுகள், வெண்ணெய் - மிட்டாய் பிஸ்கட் கேக் வகைகளைக் கேட்கவும் வேண்டாம் - இவை எல்லாம் இன்னும் மக்கள்தொகையின் அடிப்படையான மக்களுக்கு முழுமையாக எட்டாத நிலையில் தான் இருக்கின்றன. பால் பொருட்கள் விடயத்திலும் நிலைமை சாதகமாக இல்லை. பிரான்சிலும் அமெரிக்காவிலும், அண்ணளவாக ஐந்து பேருக்கு ஒரு பசு மாடு இருக்கிறது, ஜேர்மனியில் ஆறு பேருக்கு ஒன்று, சோவியத் ஒன்றியத்தில் எட்டு பேருக்கு ஒன்று. ஆனால் பால் கொடுப்பதைப் பொறுத்த வரை, இரண்டு சோவியத் மாடுகளை ஒன்று எனத் தான் கருத வேண்டியிருக்கும். தானிய வகைப் பயிர்களின் உற்பத்தியில் மட்டும் தான், குறிப்பாக சிறுதானிய மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தியில் மட்டும் தான் சோவியத் ஒன்றியம், மக்கள்தொகையின் அடிப்படையில் பார்க்கும்போது ஐரோப்பிய நாடுகளின் பெரும்பான்மையானவற்றையும் அமெரிக்காவையும் விஞ்சி நிற்கிறது. ஆனால் சிறுதானிய ரொட்டியும் உருளைக்கிழங்கும் மக்கள் தொகையின் அநேகமான உணவாக இருக்கிறது என்றால் - அதுதான் வறுமையின் சிறந்த அடையாளமாய் இருக்கிறது.

காகித நுகர்வு என்பது கலாச்சாரத்தின் முதன்மையான குறியீடுகளில் ஒன்றாகும். 1935 ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியம் ஒரு நபருக்கு 4 கிலோகிராமுக்கும் குறைவான அளவில் தான் காகிதம் உற்பத்தி செய்தது, இந்த அளவு அமெரிக்காவில் 34 கிலோவுக்கும் அதிகமாகவும் (1928 இல் இது 48 கிலோவாக இருந்தது), மற்றும் ஜேர்மனியில் 47 கிலோவுக்கும் அதிகமாகவும் இருந்தது. அமெரிக்காவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 12 பென்சில்கள் என நுகர்வு இருக்கின்ற அதே சமயத்தில், சோவியத் ஒன்றியத்தில் வெறும் 4 மட்டுமே நுகர்வு இருக்கிறது. அந்த நான்கு பென்சில்களும் கூட எந்த அளவுக்கு மட்டமான தரத்தில் இருந்ததென்றால் அவற்றின் பயனுள்ள வேலை நல்ல பென்சில் ஒன்று அல்லது அதிகப்பட்சம் இரண்டு செய்யும் வேலையைத் தாண்ட முடியாது என்கிற அளவுக்கு. அரிச்சுவடிகள், காகிதம் மற்றும் பென்சில்கள் இவற்றின் பற்றாக்குறை பள்ளிகளின் பணியை முடக்கி விடுவதாக செய்தித்தாள்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றன. அக்டோபர் புரட்சியின் 10 வது ஆண்டு நிறைவுக்கென அடையாளம் காட்டப்பட்ட எழுத்தறிவின்மையை ஒழிப்பது என்னும் பணி சாதிக்கப்படுவதில் இருந்து வெகு தொலைவில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இன்னும் பொதுவான பல கருதிப் பார்த்தல்களில் இருந்து தொடங்கினால் பிரச்சினை இதேபோல் விளங்கச்செய்யப்பட முடியும். சோவியத் ஒன்றியத்தில் தனிநபர் தேசிய வருமானம் மேற்கு நாடுகளில் இருப்பதை விட கணிசமான அளவில் குறைவானதாக இருக்கிறது. மற்றும் மூலதன முதலீடு சுமார் 25 முதல் 30 சதவீதத்தை பிடித்துக் கொண்டு விடுகிறது என்பதால் (இது வேறெங்கிலும் ஒப்பிட முடியாத அளவு அதிகமானதாகும்) வெகுஜன மக்களால் நுகரப்படும் மொத்த அளவானது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இருப்பதை விட கணிசமான அளவில் குறைவாகவே இருந்தாக முடிகிறது.

சோவியத் ஒன்றியத்தில் அவற்றின் ஆடம்பரம் வெகுஜன மக்களின் குறை நுகர்வினால் சமநிலைப்படுத்தப்பட்டிருக்கும் சொத்துடமை வர்க்கங்கள் எதுவும் இல்லை என்று உறுதியாகக் கூற முடியும். ஆனாலும், இந்தத் திருத்த நடவடிக்கையின் தாக்கம் மேம்போக்கான முதல் பார்வையில் தோன்றுவதைப் போல் அவ்வளவு மகத்தானதாய் இல்லை. இந்த சொத்துடமை வர்க்கங்களின் ஆடம்பரம் அதனளவில் எவ்வளவு வெறுக்கத்தக்க ஒன்றாக இருந்த போதிலும் கூட, முதலாளித்துவ அமைப்பின் அடிப்படையான தீமை அதுவல்ல, மாறாக ஆடம்பரத்துக்கான தனது உரிமையை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு முதலாளித்துவ வர்க்கமானது உற்பத்திச் சாதனங்களின் தனிச்சொத்துடைமையை பாதுகாக்கிறது அதன் மூலம் பொருளாதார அமைப்பை அராஜக நிலைக்கும் சிதைவுக்கும் ஆட்பட விட்டு விடுகிறது என்கின்ற உண்மையில் தான் அந்தத் தீமை இருக்கிறது. ஆடம்பரப் பொருட்களைப் பொறுத்த வரையில், முதலாளித்துவ வர்க்கத்தினர் தான் நுகர்வில் ஏகபோகம் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் ஆரம்ப அத்தியாவசியங்களின் விடயத்தில், உழைக்கும் மக்கள் தான் நுகர்வோரில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். தவிரவும், சொத்துடமை வர்க்கம் என்று நாம் குறிப்பிடும் வார்த்தையின் முறையான அர்த்தத்தில் சோவியத் ஒன்றியத்தில் அத்தகைய வர்க்கங்கள் இல்லை என்றபோதிலும், நுகர்வின் வட்டத்தில் பெருமளவு பங்கினை உறிஞ்சிக் கொள்ளக் கூடிய மிகவும் தனியந்தஸ்தை எடுத்துக் கொள்ளும் அதிகாரத் தட்டு ஒன்று இருக்கிறது என்பதை நாம் பின்னர் காண இருக்கிறோம். எனவே சோவியத் ஒன்றியத்தில் தனிநபருக்கான ஆரம்ப அத்தியாவசியப் பொருட்களின்  சராசரி உற்பத்தி முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இருப்பதை விடவும் குறைவாக இருக்கிறதென்றால், அதன் அர்த்தம் சோவியத் வெகுஜன மக்களின் வாழ்க்கைத் தரம் முதலாளித்துவ நாடுகளில் உள்ள மட்டத்தை விட இன்னும் கீழே இருக்கின்றது என்பதாகும்.

இந்த சூழ்நிலைக்கான வரலாற்றுரீதியான காரணம், ரஷ்யாவின் கடுமையும் வறுமையும் மிக்க அதன் பாரம்பரியமாய் வந்த மோசமான கடந்த காலத்தில் தான் இருக்கிறது என்பது உண்மையே. முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதைத் தவிர வளர்ச்சிக்கான பாதையில் வேறு எந்த வழியும் அங்கு இருக்கவில்லை. இந்த எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள பால்கன் நாடுகள் மற்றும் போலந்து மீது ஒரு பார்வை செலுத்தினால் போதும், ஒரு சமயத்தில் ஜார் சாம்ராஜ்யத்தின் மிகவும் முன்னேறிய பகுதிகளாக இருந்த இவை இன்று சதுப்பில் இருந்து எழ முடியாமல் திணறுவதைக் காணலாம். சோவியத் ஆட்சியின் மரணமில்லாத சேவை என்பது ரஷ்யாவின் ஆயிரம் ஆண்டு கால பின்தங்கிய நிலைமையுடனான அதன் தீவிரமான மற்றும் வெற்றிகரமான போராட்டத்தில் தான் தங்கியிருக்கிறது. ஆனால் என்ன அடையப்பட்டிருக்கிறது என்பதன் மீதான ஒரு சரியான மதிப்பீடு தான் மேலும் முன்னேறுவதற்கான ஒரு முதல் நிபந்தனையாகும்.

மேற்கின் தொழில்நுட்ப மற்றும் கலாச்சார வெற்றிகளை இறக்குமதி செய்வது, இரவல் பெறுவது மற்றும் உட்கிரகித்துக் கொள்வது என சோவியத் ஒன்றியம் ஒரு தயாரிப்பு கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. இந்த தயாரிப்புக் கட்டம் நிறைவடைந்ததாய்  கூறுவதற்கு வெகு தொலைவில் இருப்பதையே உற்பத்தி மற்றும் நுகர்வின் ஒப்பீட்டு மதிப்பீடுகள் நமக்கு சான்றளிக்கின்றன. ஒரு முற்றான முதலாளித்துவ தேக்கம் தொடர்வதற்கான சாத்தியமற்ற ஒரு நிலையின் கீழும் கூட, அப்போதும் அது முழுமையானதொரு வரலாற்றுக் காலகட்டத்தை கடந்தாக வேண்டும். இது தான் நமது அடுத்துவரும் ஆய்வுகளில் நமக்கு அவசியப்படக் கூடிய முதலாவதும் மிக முக்கியமானதுமான தீர்மானமாகும்.

                     * * * * * * * * *  ** **