|
Socialism and the State The Transition Regime அத்தியாயம் 3 சோசலிசமும் அரசும் இடைமருவு ஆட்சி சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் ஏற்கனவே எட்டப்பட்டு விட்டதாக உத்தியோகபூர்வ அதிகாரிகள் திட்டவட்டமாய் தெரிவிப்பது உண்மையா? இல்லையெனும் பட்சத்தில், அடையப்பட்டிருக்கும் வெற்றிகள், குறைந்தபட்சம் உலகின் பிற பகுதிகளில் என்ன நடந்தாலும் தேசிய எல்லைகளுக்குள்ளாக அதனை எட்டிவிடும் சாத்தியத்தையாவது உறுதிப்படுத்தியிருக்கிறதா? சற்று முன்னர் கண்ட சோவியத் ஒன்றிய பொருளாதாரத்தின் பிரதானக் குறியீடுகள் மீதான விமர்சனரீதியான மதிப்பீடு இந்தக் கேள்விக்கு ஒரு சரியான பதிலுக்குரிய ஆரம்பப் புள்ளியை நமக்கு அளிப்பதாக இருக்க வேண்டும், ஆனால் சில குறிப்பிட்ட அடிப்படைத் தத்துவார்த்த சிந்தனைகளும் புள்ளிகளும் நமக்கு அவசியமாகிறது. முன்னேற்றத்தின் அடிப்படை உந்துவிசையாக தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குகின்ற மார்க்சிசம், கம்யூனிச வேலைத்திட்டத்தை உற்பத்தி சக்திகளின் இயக்கவியலின் (dynamic) மீது தான் கட்டியெழுப்புகின்றது. ஏதோ ஒரு பிரபஞ்சப் பயங்கரம் வெகு அண்மை வருங்காலத்தில் நம் கோளத்தை அழிக்கப் போகிறது என்று நீங்கள் சிந்தித்தால், கட்டாயமாக கம்யூனிச முன்னோக்கினை ஏனைய அனைத்துடனும் சேர்த்து நீங்கள் நிராகரிக்கவே வேண்டும். அதுவும் பிரச்சினைக்குரிய அபாயமே என்றாலும் இதைத் தவிர இன்றுவரையில், நமது தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் கலாச்சார சாத்தியக்கூறுகளுக்கு முன்கூட்டியே எந்த வரம்பும் நிர்ணயிப்பதற்கு எந்தவித சின்னஞ்சிறு விஞ்ஞானபூர்வமான காரணமும் இல்லை. மார்க்சிசம் முன்னேற்றத்தின் மீதான நம்பிக்கையால் நிரம்பியுள்ளது, சொல்லப் போனால், அது மட்டும் தான் அதனை மதத்திற்கு சமரசமற்ற வகையில் எதிரானதாய் ஆக்குகிறது. உற்பத்திக்கான உழைப்பானது, ஒரு சுமையாக இருக்கும் நிலை மறைந்து, அதற்கு எந்த தார்க்குச்சியும் அவசியப்படாத நிலையையும், வாழ்க்கைப் பொருட்களின் விநியோகமானது, அவை தொடர்ச்சியாக தாராளமாய்க் கிடைக்கப் பெறும் நிலையில், கல்வி, பழக்கவழக்கம் மற்றும் சமூகக் கருத்துகளில் தவிர வேறெதிலும் எந்தக் கட்டுப்பாட்டையும் கோராத நிலையையும் (அதாவது இப்போது எந்த வசதியானதொரு குடும்பத்திலும் அல்லது “கண்ணியமான”தொரு தங்குமிடத்திலும் காணக்கூடியதாய் இருக்கும் நிலையைப் போல) ஏற்படுத்தும் அளவுக்கு மனிதனின் பொருளாதார சக்திகள் மிக உயர்ந்த நிலைக்கு அபிவிருத்தி காணவேண்டும் என்பது தான் கம்யூனிசத்தின் சடரீதியான முன்நிபந்தனையாக இருக்க வேண்டும். வெளிப்படையாகச் சொல்வதென்றால், உண்மையிலேயே இத்தகையதொரு கண்ணியமான முன்னோக்கை "கற்பனாவாதமாக"க் கருதுவது வறண்ட நகைச்சுவை என்றே நான் கருதுகிறேன். தொழில்நுட்பம், விஞ்ஞானம், மற்றும் பாட்டாளி வர்க்கம் என ஒரு சமூகப் புரட்சிக்கான நிலைமைகளையும் சக்திகளையும் முதலாளித்துவம் தயார் செய்தது. ஆயினும் அதற்காக கம்யூனிச கட்டுமானம் உடனடியாக முதலாளித்துவ சமூகத்தை இடம்பெயர்த்து விட முடியாது. கடந்த காலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற சடரீதியான மற்றும் கலாச்சார ரீதியான பாரம்பரியங்கள் மட்டும் அதற்கு முற்றிலும் போதாது. தொழிலாளர்’ அரசுக்கு அதன் முதல் படிநிலைகளில் இருக்கும் போது, ஒவ்வொருவரும் "அவரின் இயலும் தன்மைக்கு ஏற்ப வேலை செய்ய", அதாவது அவரால் முடிந்த மற்றும் விரும்பும் அளவுக்கு வேலை செய்ய அனுமதிப்பது என்பதையோ அல்லது ஒவ்வொருவருக்கும் அவர் செய்யும் வேலையின் அளவைப் பொறுத்து அல்லாமல் அவரது "தேவைகளைப் பொறுத்து" ஊதியமளிப்பது என்பதையோ அனுமதித்து விட இன்னும் இயலாது. உற்பத்தி சக்திகளை அதிகரிக்கும் பொருட்டு, வழக்கமான சம்பள வழங்கல் முறைகளை (கூலி கொடுப்பனவை) அதாவது, தனிநபர் உழைப்பின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ற விகிதாசாரத்தில் அவருக்கு வாழ்க்கைப் பொருட்களை விநியோகம் செய்வது என்னும் முறையை பயன்படுத்துவது அவசியமாகவே இருக்கிறது புதிய சமூகத்தின் இந்த முதல் கட்டத்திற்கு மார்க்ஸ் “கம்யூனிசத்தின் முதல்கட்ட நிலை” என்று பெயரிட்டார். பற்றாக்குறை நிலையின் கடைசிப் பேயுருக்களுடன் சேர்ந்து சடப்பொருள் ரீதியான ஏற்றத்தாழ்வும் காணாமல் போகின்றதான மிக உயர்ந்த கட்டங்களில் இருந்து இது வேறுபட்டிருக்கும். இந்தப் பொருளில் சோசலிசமும் கம்யூனிசமும் புதிய சமூகத்தின் முதல் கட்டம் மற்றும் உயர்ந்த கட்டங்களாய் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. "நாங்கள் இன்னும் முழுமையான கம்யூனிசத்தை எட்டி விடவில்லை என்பது உண்மை தான், ஆனால் ஏற்கனவே நாங்கள் சோசலிசத்தை - அதாவது கம்யூனிசத்தின் முதல்கட்ட நிலையை - சாதித்து விட்டோம்" என்கிறது நடப்பு உத்தியோகபூர்வ சோவியத் கோட்பாடு. இதற்குச் சான்றாக, தொழிற்துறையில் அரசாங்க அறக்கட்டளைகளும், விவசாயத்தில் கூட்டுற்பத்திப் பண்ணைகளும், வணிகத்தில் அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் முன்வைக்கிறார்கள். முதல் பார்வையில் இது மார்க்சின் ஒரு காரிய வியூகத் திட்டத்திற்கு, எனவே கருதுகோள் அடிப்படையிலான திட்டத்திற்கு, முழுமையாய் பொருந்தி நிற்பதாய் தோன்றுகிறது. ஆனால் எட்டப்பட்ட உழைப்பின் உற்பத்தித் திறனைக் கணக்கில் எடுக்காமல் சொத்து வடிவங்களை மட்டும் கருதி இந்தப் பிரச்சினை தீர்ந்து போவதில்லை என்பதும் அதே மார்க்சிசவாதி கருத்தில் கொள்வதற்கானது தான். கம்யூனிசத்தின் முதல்கட்டப் படிநிலை என்று மார்க்ஸ் கூறும்போது, மிக ஆரம்பத்தில் இருந்தே தனது பொருளாதார அபிவிருத்தியில் மிக முன்னேறிய முதலாளித்துவத்தைக் காட்டிலும் உயர்ந்த இடத்தில் நிற்கின்றதொரு சமூகத்தையே அவர் குறிப்பிட்டார். தத்துவ ரீதியாக இத்தகையதொரு கருத்தாக்கம் மாசற்ற ஒன்று, ஏனெனில் உலக அளவில் எடுத்துக் கொண்டால், கம்யூனிசம் அதன் முதல் அரும்புநிலைகளிலும் கூட, பூர்சுவா சமுதாயத்தை விடவும் உயர்ந்த நிலையிலான அபிவிருத்தியையே அர்த்தப்படுத்துகிறது. இது தவிர, மார்க்ஸ் எதிர்பார்த்ததெல்லாம் சோசலிசப் புரட்சியை பிரெஞ்சுக்காரர்கள் தொடக்கி வைப்பார்கள், ஜேர்மனியர்கள் பின்தொடர்வார்கள், ஆங்கிலேயர்கள் நிறைவு செய்வார்கள் என்பது தான், ரஷ்யர்களை வெகு தொலைவில் பின்னால் காணுகின்ற அளவோடு அவர் விட்டு விட்டார். ஆனால் தத்துவார்த்த ரீதியான இந்த வரிசை உண்மைகளால் உலுக்கப்பட்டது. மார்க்சின் உலகளாவிய வரலாற்றுக் கருத்தாக்கத்தை இப்போது சோவியத் ஒன்றியம் என்ற குறிப்பிட்ட விடயத்துக்கு அதன் கொடுக்கப்பட்ட அபிவிருத்திக் கட்டத்தில் எந்திரத்தனமாய் பொருத்திப்பார்க்க யார் முயன்றாலும் அவர்கள் நம்பிக்கையிழக்கச் செய்யும் முரண்பாடுகளுக்குள் உடனே சிக்கிக் கொள்வது நிச்சயம். முதலாளித்துவ சங்கிலியில் ரஷ்யா மிகவும் வலிமையான கண்ணி அல்ல, மாறாக மிகவும் பலவீனமான கண்ணி. நடப்பு சோவியத் ஒன்றியம் உலகப் பொருளாதார மட்டத்திற்கு மேலாக நின்று கொண்டிருக்கவில்லை, மாறாக முதலாளித்துவ நாடுகளை எட்டிப் பிடிக்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தனது சகாப்தத்தின் மிகவும் முன்னேறிய முதலாளித்துவத்தின் உற்பத்தி சக்திகளை சமூகமயமாக்குவதன் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற சமூகத்தை மார்க்ஸ், கம்யூனிசத்தின் ஆரம்பப் படிநிலை என்று கூறினார் என்றால், அந்த வரைவிலக்கணம் இன்றும் முதலாளித்துவ நாடுகளை விட தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் நல்ல விஷயங்களில் கணிசமான ஏழ்மையுடனேயே திகழும் சோவியத் ஒன்றியத்துக்கு பொருந்தாது என்பது வெளிப்படை. அப்படியானால், அதன் அத்தனை முரண்பாட்டுத் தன்மைகளுடனும் நடப்பு சோவியத் ஆட்சிக்கு நீங்கள் பெயரிட வேண்டுமென்றால், சோசலிச ஆட்சி என்று இட முடியாது, மாறாக முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு மாறத் தயாரிப்பு செய்யும் இடைமருவு ஆட்சி என்று கூறுவது தான் கூடுதல் உண்மை படைத்ததாக இருக்கும். இந்த விடயத்தில் வார்த்தையியல் துல்லியத்துக்கான பகட்டுத்தனம் என்பது துளியும் கிடையாது. ஆட்சிகளின் வலிமையும் ஸ்திரத்தன்மையும் தொலைநோக்கில் ஒப்பீட்டளவிலான உழைப்பின் உற்பத்தித் திறனைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன. முதலாளித்துவத்தை விடவும் மிகவும் உன்னதமான ஒரு தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்ற ஒரு சோசலிசப் பொருளாதாரம் அதன் சோசலிச அபிவிருத்தியில் உண்மையிலேயே உத்தரவாதம் பெற்றதாக இருக்கும், சொல்லப் போனால், தானாகவே; துரதிர்ஷ்டவசமாக சோவியத் ஒன்றியப் பொருளாதாரத்தின் விடயத்தில் இத்தகையதொரு கூற்றுக்கு சாத்தியமற்ற நிலையே இன்னும் இருக்கிறது. உள்ள நிலையிலான சோவியத் ஒன்றியத்தின் கொச்சை வக்காலத்துவாதிகளில் பெரும் எண்ணிக்கையிலானோர் ஏறக்குறைய பின்வருமாறு காரணமளிக்கத் தலைப்படுகின்றனர்: 'தற்போதுள்ள சோவியத் ஆட்சியானது இன்னும் சோசலிசமயமாகி விடவில்லை என்று நீங்கள் ஒப்புக் கொண்டால் கூட, தற்போதுள்ள அடித்தளங்களின் மீது உற்பத்தி சக்திகள் மேலும் அபிவிருத்தி அடைந்து செல்கையில் வெகு விரைவிலோ அல்லது பிந்தியோ சோசலிசத்தின் முழு வெற்றிக்கு அது இட்டுச் செல்லும் அல்லவா. ஆக கால அளவு என்னும் காரணி மட்டும் தானே உறுதியற்றதாய் இருக்கிறது. அது குறித்துக் கூச்சலிடுவது நலம் பயக்குமா?' இத்தகையதொரு வாதம் முதல் பார்வையில் எவ்வளவு வெற்றிகரமான ஒன்றாகத் தோன்றினாலும், உண்மையில் இது அதீத மூடத்தனமான ஒன்றாகும். வரலாற்று நிகழ்வுப்போக்குகள் தொடர்பான பிரச்சினைகளில் காலம் என்பது ஒருபோதும் இரண்டாம் பட்ச காரணியாக இருப்பதில்லை. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் போட்டுக் குழப்புவது என்பது இலக்கணத்தை விடவும் அரசியலில் மிக மிக அபாயகரமானது. அபிவிருத்தி என்றால் அது எந்த வகையிலும், வெப் இனது வகையறாக்களை (Webb type) சேர்ந்த கொச்சைப் பரிணாமவாதிகள் கற்பனை செய்வதைப் போல, ஏற்கனவே இருப்பதின் ஒரு உறுதியான திரட்சி மற்றும் தொடர்ந்த "மேம்பாட்டை"க் கொண்டதல்ல. அதன் அளவு பண்பாக மாறியமை, அதன் நெருக்கடிகள், பாய்ச்சல்கள் மற்றும் பின்தங்கல்களை கொண்டிருக்கிறது. சோசலிசத்தின் முதல் கட்டத்தை எட்டுவதற்கே சோவியத் ஒன்றியம் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது என்ற துல்லியமாக அதே காரணத்தால் தான், உற்பத்தி மற்றும் விநியோகத்தின் ஒரு சமநிலைப்பட்ட அமைப்புமுறையாக, அதன் அபிவிருத்தியானது இசைவுடன் முன்னேறிச் செல்ல முடியவில்லை, முரண்பாடுகளில் தவிர. பொருளாதார முரண்பாடுகள் சமூகக் குரோதங்களை உற்பத்தி செய்கின்றன, அவை தம் பங்கிற்கு, உற்பத்தி சக்திகளின் மேலதிக வளர்ச்சிக்குக் காத்திராமல் தங்களது சொந்த தர்க்கவியலை அபிவிருத்தி செய்து கொள்கின்றன. இது குலாக்குகளின் விடயத்தில் எவ்வளவு உண்மை என்பதை சற்றுமுன் தான் நாம் கண்டோம். சோசலிசத்துக்குள் பரிணாமரீதியாக ”வளர்ச்சியடைய” விரும்பாத அவர்கள் அதிகாரத்துவமும் அதன் தத்துவாசிரியர்களும் அதிர்ச்சி காண்கின்ற வகையில் ஒரு புதிய உப புரட்சியைக் கோரினார்கள். அதிகாரத்தையும் செல்வத்தையும் தனது கைகளில் குவித்து வைத்திருப்பதான அதிகாரத்துவமே கூட தான் அமைதியாக சோசலிசத்துக்குள் வளர்ச்சியுற விரும்புமா? இந்த விடயத்தில் சந்தேகங்கள் நிச்சயமாக அனுமதிக்கத்தக்கவையே. எப்படியாயினும், இதில் அதிகாரத்துவத்தின் வார்த்தைகளை அப்படியே ஏற்பது விவேகமற்றதாக இருக்கும். சோவியத் சமூகத்தின் பொருளாதார முரண்பாடுகளும் சமூகக் குரோதங்களும் அடுத்த மூன்று, ஐந்து, அல்லது பத்து ஆண்டு காலத்தில் எந்தத் திசையில் அபிவிருத்தியுறும் என்ற கேள்விக்கு இப்போது இறுதியான, மாற்றவியலாததொரு பதிலை அளிப்பது சாத்தியமில்லாதது. இதன் விளைபொருள், ஒரு தேசிய அளவில் மட்டுமல்லால் சர்வதேச அளவிலும் கூட, உயிர்வாழும் சமூக சக்திகளின் ஒரு போராட்டத்தின் மீது தான் சார்ந்திருக்கிறது. எனவே, ஒவ்வொரு புதிய கட்டத்திலும், அவற்றின் இணைப்புகள் மற்றும் தொடர்ச்சியான இடையுறவுகளில் உண்மையான உறவுகள் மற்றும் போக்குகளின் ஒரு ஸ்தூலமான பகுப்பாய்வு அவசியமாகிறது. அரசு பற்றிய விடயத்தில் இத்தகையதொரு ஆய்வின் முக்கியத்துவம் குறித்து இப்போது நாம் பார்க்கலாம். வேலைத்திட்டமும் யதார்த்தமும் சுரண்டுபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து விட்ட நிலையில், சமூகத்திற்கு மேலாகத் தூக்கி வைக்கப்பட்ட ஒரு அதிகாரத்துவ எந்திரத்துக்கு, அனைத்துக்கும் மேல், ஒரு போலிஸ் மற்றும் நிரந்தர இராணுவத்துக்கான அவசியத்தை அது இல்லாதொழிக்கிறது என்ற உண்மையில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முதல் தனித்துவமான அம்சம் வெளிப்படுவதை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸைத் தொடர்ந்து லெனின் கண்டார். "பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு அரசு அவசியம் - இதை எல்லா சந்தர்ப்பவாதிகளுமே உங்களுக்குச் சொல்ல முடியும்", 1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதும் லெனின் தொடர்ந்து சொல்கிறார், "ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு அவசியமாய் இருப்பது ஒரு உலர்ந்து உதிர்கின்ற அரசு, அதாவது உருவாகி முடித்த உடனேயே உதிரத் தொடங்குகின்ற வகையில், அவ்வாறு உதிர்வதைத் தவிர வேறுவழியிராத வகையில் கட்டுமானம் செய்யப்படுகின்ற ஒரு அரசுதான் என்பதை சேர்த்துக் கூற அந்த சந்தர்ப்பவாதிகள் மறந்து விடுகின்றனர்.” (அரசும் புரட்சியும்). இந்த விமர்சனம் அந்த சமயத்தில் ரஷ்ய மென்ஷிவிக்குகள், பிரிட்டிஷ் ஃபேபியன்கள் போன்ற வகையைச் சேர்ந்த சீர்திருத்தவாத சோசலிஸ்டுகளை நோக்கிச் செலுத்தப்பட்டதாகும். இன்று ”உலர்ந்து உதிர்வதற்கு” இம்மியளவும் நோக்கம் கொண்டிராத ஒரு அதிகாரத்துவ அரசின் சடங்குகளைக் கொண்டு சோவியத் விக்கிரகத்தை வழிபட்டுக் கொண்டிருப்போரை அதே விமர்சனம் இருமடங்கு பலத்துடன் தாக்குகிறது. “மென்மைப்படுத்தப்பட”, “சமாளித்துக் கொள்ளப்பட”, ”கட்டுப்படுத்தப்பட” (எப்போதும் தனியந்தஸ்து படைத்தவர்கள், உடைமையாளர்களின் நலன்களிலும் எப்போதும் அதிகாரத்துவத்தின் அனுகூலத்துக்கானதாகவேயும் இருக்கும்) அவசியம் கொண்ட கூர்மையான குரோதங்கள் இருக்கிறதான அனைத்து சூழ்நிலைகளிலும் ஒரு அதிகாரத்துவத்துக்கான சமூகக் கோரிக்கை எழுகிறது. எனவே அனைத்து முதலாளித்துவ புரட்சிகளிலும், அவை எவ்வளவு ஜனநாயகவயப்பட்டவையாக இருந்தாலும், அங்கு அதிகாரத்துவ எந்திரம் ஒன்று திண்ணப்படுவதும் முழுமையுறுவதும் நடந்திருக்கிறது. லெனின் எழுதுகிறார்: "அதிகாரத்துவ தட்டும் மற்றும் நிரந்தர இராணுவமும் என்பது பூர்சுவா சமூகத்தின் உடல் மீதான ஒரு 'ஒட்டுண்ணி' ஆகும், இந்த சமூகத்தைக் குத்திக் கிழிக்கக் கூடிய உள்முக முரண்பாடுகளால் உருவாக்கப்படுகின்ற ஒரு ஒட்டுண்ணி தான் என்றாலும் அது உடம்பின் சுவாசத் துளைகளை அடைக்கின்ற ஒரு ஒட்டுண்ணியே அன்றி வேறல்ல". 1917 ஆம் ஆண்டு, அதாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது ஒரு நடைமுறைப் பிரச்சினையாக கட்சியை எதிர்கொண்ட அந்த தருணத்தில் இருந்தே, இந்த "ஒட்டுண்ணி"யைக் கலைப்பது குறித்து லெனின் சிந்தித்துக் கொண்டிருந்தார். சுரண்டும் வர்க்கங்களைத் தூக்கியெறிந்து விட்ட பின்னர், பாட்டாளி வர்க்கம் பழைய அதிகாரத்துவ எந்திரத்தை நொருக்கி விட்டு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்ட தனது சொந்த எந்திரத்தை உருவாக்கும் என்று 'அரசும் புரட்சியும்' நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் மீண்டும் மீண்டும் விளக்குகிறார். அத்துடன் அவர்கள் அதிகாரிகளாக மாறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், அதாவது ”மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்பட்ட நடவடிக்கைகளையும் அது எடுக்கும்: (1) தேர்தல் மூலம் பொறுப்பிலமர்த்த முடிவது மட்டுமல்ல எந்த சமயத்திலும் திருப்பி அழைத்துக் கொள்ளவும் முடிவது; (2) தொழிலாளர்களின் கூலிகளை விட அதிகமான ஊதியம் இருக்கக் கூடாது; (3) கட்டுப்படுத்தும் மற்றும் மேற்பார்வையிடும் பணிகளை எல்லாருமே செய்கின்ற வகையிலான ஒரு ஆட்சிமுறைக்கு உடனடியாக மாறுவது, இதன்மூலம் எல்லோருமே கொஞ்ச காலத்திற்கு “அதிகாரி”களாக மாறி விடுவார்கள் என்பதால் எவருமே அதிகாரியாக ஆக முடியாது.” லெனின் பல தசாப்தங்களுக்கு நீளுகின்ற ஒரு வேலையைக் குறித்துப் பேசுவதாக நீங்கள் நினைத்து விடக் கூடாது. அவ்வாறில்லை, இது தான் ”ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி சாதிக்கப்பட்ட உடன் நாம் தொடங்குவதற்குரிய மற்றும் தொடங்கியாக வேண்டிய முதல் படியாகும்". ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலான அரசு குறித்தும் இதே துணிச்சலான பார்வை, அதிகாரத்தைக் கைப்பற்றியதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிந்தைய போல்ஷிவிக் கட்சியின் (அதன் இராணுவத்திற்கான பிரிவு உட்பட) வேலைத்திட்டத்தில் நிறைவடைந்த வெளிப்பாட்டைக் கண்டது. ஒரு வலிமையான அரசு இருக்கும், ஆனால் மாண்டரின்கள் (அதிகாரிகளின் அடுக்குவரிசை) இருக்க மாட்டார்கள்; ஆயுதமேந்திய படை இருக்கும், ஆனால் சாமுராய் (போர்ப் பரம்பரை வீரர்) இருக்க மாட்டார்! ஒரு இராணுவத்தையும் அரச அதிகாரத்துவத்தையும் உருவாக்குவது பாதுகாப்புத் துறையின் பணிகளாக இருக்க முடியாது, மாறாக சமூகத்தின் வர்க்க அமைப்புத்தான் பாதுகாப்பு ஒழுங்கமைப்பின் பொறுப்பையும் சுமக்க வேண்டும். இராணுவம் என்பது சமூக உறவுகளின் ஒரு நகல் மட்டுமே. அந்நியர் அபாயத்துக்கு எதிரான போராட்டம், மற்ற அரசுகள் போலவே தொழிலாளர் அரசிலும் ஒரு சிறப்பு நிபுணத்துவம் பெற்ற இராணுவத் தொழில்நுட்ப அமைப்பினைக் கோருகிறது, ஆனால் அது எந்த வகையிலும் தனியந்தஸ்து படைத்த அதிகாரிகள் சாதியைக் (caste) கோரவில்லை. நிரந்தர இராணுவத்தை ஆயுதமேந்திய மக்கள் படையைக் கொண்டு இடம்பெயர்க்க கட்சியின் வேலைத்திட்டம் கோருகிறது. இவ்வாறாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஆட்சியென்பது அதன் மிக ஆரம்பத்தில் இருந்தே “அரசு” என்ற வார்த்தையின் பழைய அர்த்தத்தில் இருந்து, அதாவது பெரும்பான்மையான மக்களைத் தன் பிடிக்குள் கொண்டிருப்பதற்கான ஒரு சிறப்பு எந்திரமாக இருப்பதில் இருந்து, நீங்கி விடுகிறது. சடப்பொருள்ரீதியான சக்தியும், அத்துடன் ஆயுதங்களும், நேரடியாகவும் உடனடியாகவும் சோவியத்துகள் போன்ற தொழிலாளர்கள்’ அமைப்புகளின் கரங்களுக்குள் சென்று சேர்கின்றன. ஒரு அதிகாரத்துவ எந்திரமாக அரசு உலர்ந்து உதிரத் தொடங்குவதென்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் முதல் நாளிலேயே ஆரம்பித்து விடுகிறது. இது தான் கட்சி வேலைத்திட்டத்தின் குரல், இன்று வரை இது தன் செல்தகைமையை இழந்துவிடவில்லை. விநோதம் என்னவென்றால் கல்லறையில் இருந்து வருகின்ற ஒரு குரல் போல் இது தோற்றமளிக்கிறது. நடப்பு சோவியத் அரசின் தன்மையை நீங்கள் எந்த வகையில் பொருள்புரிந்து கொண்டாலும் சரி, ஒரு விடயம் சந்தேகத்திற்கிடமில்லாதது: அதன் இருப்பின் இரண்டாவது தசாப்தம் முடியப் போகும் நிலையில், அது உலர்ந்து உதிர்ந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, “உலர்ந்து உதிர”த் தொடங்கவே இல்லை. அதை விட மோசம், அது இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு பலாத்காரத்தின் எந்திரமாக வளர்ந்திருக்கிறது. அதிகாரத்துவம், தன் இடத்தை பரந்த மக்களுக்கு இயல்பாக விட்டுக்கொடுத்து விட்டு மறைந்து போயிருக்கவில்லை, மாறாக பரந்த மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு கட்டுப்பாடற்ற சக்தியாக மாறியிருக்கிறது. இராணுவம் ஆயுதந்தரித்த மக்களை கொண்டு இடம்பெயர்க்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக மார்ஷல்களை மகுடமாய்க் கொண்ட தனியந்தஸ்து படைத்த அதிகாரிகளெனும் ஒரு சமூகப் பிரிவிற்கு பிறப்பளித்துள்ளது, அதே சமயத்தில் “ஆயுதந்தரித்து சர்வாதிகாரத்தை சுமந்து செல்லக் கூடிய” மக்களோ இப்போது சோவியத் ஒன்றியத்தில் சுடுதிறனற்ற ஆயுதங்களை கூட சுமந்து செல்வதில் இருந்து தடைசெய்யப்பட்டிருக்கின்றனர். தொழிலாளர்’ அரசு குறித்த மார்க்ஸ், ஏங்கல்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் சிந்தனை வடிவத்திற்கும் இப்போது ஸ்ராலின் தலைமையில் உள்ள நடப்பு அரசுக்கும் இடையில் நிலவுகின்ற பேதத்தை விடவும் அதிகமான ஒரு பேதத்தைக் கற்பனை செய்ய வேண்டுமென்றால், சிந்தனைத் திறனின் முழு வீச்சையும் பயன்படுத்தினால் கூட சிரமமான ஒன்றாகவே இருக்கும். லெனினின் எழுத்துக்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன (நிச்சயமாக, சில பகுதிகளை வெட்டி எடுத்துப் பயன்படுத்துவது மற்றும் சிதைப்புகள் ஆகிய தணிக்கையினரின் கைங்கரியத்துடன் தான்) என்ற அதே சமயத்தில், வேலைத்திட்டத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்தக் வானத்திற்கெட்டுமளவிலான விலகல்களுக்கான காரணங்கள் குறித்த கேள்வியை, சோவியத் ஒன்றியத்தின் தற்போதைய தலைவர்களும் மற்றும் அவர்களது தத்துவார்த்தப் பிரதிநிதிகளும் எழுப்புவதும் கூட இல்லை. அவர்களுக்காக அதனை நாம் செய்ய முயலுவோம். தொழிலாளர் அரசின் இரட்டை தன்மை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலாளித்துவ மற்றும் சோசலிச சமூகங்களுக்கு இடையே ஒரு பாலத்தை உருவாக்குகிறது. ஆகவே அதன் மிகவும் சாராம்சத்திலேயே அது ஒரு தற்காலிகத் தன்மையைத் தாங்கியிருக்கிறது. சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் ஒரு தற்செயலான அதே சமயத்தில் மிகவும் அத்தியாவசியப் பணியாக அமைவது என்னவென்றால் தன் சொந்தக் கலைப்புக்குரிய தயாரிப்பை செய்வதுதான். இந்த "தற்செயலான" பணியை எந்தளவிற்கு நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதுதான், ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு, வர்க்கங்கள் இல்லாத மற்றும் சடப்பொருள் முரண்பாடுகள் இல்லாத ஒரு சமுதாயத்தை கட்டமைப்பது என்னும் அதன் அடிப்படையான இலட்சியத்தை பூர்த்தி செய்வதில் அதன் வெற்றியை அளவிடும் ஒரு அளவுகோலாகும். அதிகாரத்துவவாதமும் சமூக ஒத்திசைவும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான உறவினைக் கொண்டவை. டூரிங்கிற்கு எதிரான தனது புகழ்பெற்ற மறுப்பில் ஏங்கல்ஸ் எழுதினார்: "உற்பத்தியின் தற்போதைய அராஜகத்தன்மையால் உருவாக்கப்பட்ட வர்க்க மேலாதிக்கம் மற்றும் தனிமனித வாழ்வுக்கான போராட்டம் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்தப் போராட்டத்தினால் விளையும் முரண்பாடுகளும் மற்றும் அத்துமீறல்களும் கூட மறைந்து போகும்போது, அச்சமயம் முதல் ஒடுக்குவதற்கு என்று எதுவும் இருக்காது, ஒடுக்குமுறைக்கான அரசு என்ற ஒரு சிறப்பு சாதனத்திற்கான அவசியமும் எதுவும் இருக்காது.” சிந்தனைவறட்சியுடையோர் (பிலிஸ்டைன்கள்) ஆயுதம் தரித்த அமைப்பை எக்காலத்திற்குமானதாய் கருதுகிறார்கள். உண்மையில் இயற்கைக்கு மனிதன் முழுமையாகக் கடிவாளமிடும் காலம் வரையில் தான் ஆயுதம் தரித்த அமைப்பும் மனித குலத்திற்கு கடிவாளமிடமுடியும். அரசு மறைந்துபோக வேண்டுமென்றால், "வர்க்க மேலாதிக்கத்துடன் சேர்ந்து, தனிமனித வாழ்வுக்கான போராட்டமும்" மறைந்து போகவேண்டும். ஏங்கெல்ஸ் இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஒன்றாய் இணைக்கிறார், ஏனென்றால் சமூக ஆட்சிகளை மாற்றுவதான முன்னோக்கில் ஒரு சில தசாப்தங்கள் என்பது ஒன்றுமேயில்லை. ஆனால் ஒரு புரட்சியின் எடையைத் தோளில் தாங்கி நிற்கின்ற தலைமுறைகளுக்கு விடயமே வேறாய் காட்சியளிக்கிறது. முதலாளித்துவ அராஜகம் ஒவ்வொருவரும் எல்லோருக்கும் எதிராகப் போராடும் நிலையை உருவாக்குகிறது என்பது உண்மையே, ஆனால் சிக்கல் என்னவென்றால் உற்பத்தி சாதனங்களை சமூகமயமாக்குதல் மட்டுமே தானாக "தனிமனித வாழ்வுக்கான போராட்டத்தை" அகற்றி விடுவதில்லை என்பது தான். அது தான் இப்பிரச்சினையின் கரு! மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடு என்ற அடிப்படையில் அமெரிக்காவிலேயே ஒரு சோசலிச அரசு அமைந்தால் கூட, ஒவ்வொருவருக்கும் அவர்தம் தேவைக்கேற்ற அளவினை வழங்கி விடுவது என்பது அதனால் உடனடியாக முடியாது, எனவே ஒவ்வொருவரும் சாத்தியமுள்ள அளவுக்கு உற்பத்தி செய்யத் தூண்டுவதற்கு அது நிர்ப்பந்தத்திற்குள்ளாகவே செய்யும். இந்தச் சூழ்நிலைகளில் தூண்டுபவரது பாத்திரம் இயல்பாக அரசின் மேல் விழுகிறது, அப்போது அது தன் முறையில், பல்வேறு மாற்றங்கள் மற்றும் குறைப்புகளுடன், முதலாளித்துவத்தால் செதுக்கிச் செயல்படுத்தப்பட்ட உழைப்பு கூலி வழிமுறையை பயன்படுத்துவதைத் தவிர அதற்கு வேறுவழியிருக்காது. இந்த ஒரு பொருளில் தான் மார்க்ஸ் 1875 ஆம் ஆண்டில் பின்வருமாறு எழுதினார்: "கம்யூனிச சமுதாயத்தின் ஆரம்ப கட்டத்தில், முதலாளித்துவ சமூகத்தில் இருந்து நெடிய பிரசவ வலிகளுக்குப் பின்னர் அது வெளிவருகின்ற அந்த வடிவத்தில், பூர்சுவா சட்டம் தவிர்க்கவியலாதது. சட்டம் ஒருபோதும், பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் அந்த கட்டமைப்பால் பக்குவப்படுத்தப்பட்ட சமுதாயத்தின் கலாச்சார அபிவிருத்தி இவற்றிற்கு மேற்பட்டதாக இருக்க முடியாது.” இந்த அற்புதமான வரிகளை விளக்குவதற்கு லெனின் மேலும் சேர்க்கிறார்: "நுகர்வுப் பொருட்களின் விநியோக விடயத்திலான முதலாளித்துவச் சட்டம் தவிர்க்கவியலாமல் ஒரு முதலாளித்துவ அரசை மனதில் நிறுத்திக் கொள்கிறது என்பது உண்மையே, ஏனென்றால் தனது சட்டபூர்வமான நிர்ணயங்களைக் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கக் கூடிய ஒரு எந்திரம் இல்லாமல் சட்டம் என்பது ஒன்றுமேயில்லை. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் (இன்னும் நாம் லெனினையே மேற்கோள் காட்டுகிறோம்) கம்யூனிசத்தின் கீழ் முதலாளித்துவச் சட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கம் இல்லாத ஒரு முதலாளித்துவ அரசுமே கூட, சில காலம் நீடித்திருக்கும் என்பது தான்.” தற்போதைய உத்தியோகபூர்வ தத்துவாசிரியர்களால் முழுக்கவும் உதாசீனப்படுத்தப்படுகின்றதான இந்த மிக முக்கியமான முடிவு சோவியத் அரசின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு - அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், அத்தகையதொரு புரிதலுக்கான ஒரு முதல் அணுகுமுறைக்கு, தீர்மானகரமானதொரு முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது. எந்த மட்டத்திற்கு, சமுதாயத்தை சோசலிச ரீதியில் உருமாற்றும் பொறுப்பைக் கையில் கொண்டுள்ள அரசு, ஏற்றத்தாழ்வினை, அதாவது ஒரு சிறுபான்மை எண்ணிக்கையிலானோரின் சடப்பொருள்ரீதியான தனியந்தஸ்துகளை, பலாத்கார வழிமுறைகளின் மூலம் பாதுகாக்க நிர்ப்பந்திக்கப்படுகிறதோ, அந்த மட்டத்திற்கு அது முதலாளித்துவ வர்க்கம் இல்லாதிருப்பினும் கூட ஒரு "முதலாளித்துவ" அரசாகவே தொடரும். இந்த வார்த்தைகளில் இருப்பது புகழ்ச்சியோ அல்லது புகாரோ அல்ல; அவை வெறுமனே விடயங்களை அவற்றின் உண்மையான பெயர் கொண்டு குறிப்பிடுகின்றன, அவ்வளவு தான். முதலாளித்துவ விநியோக நிர்ணயங்கள் பொருளாதாய சக்தியின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதன் மூலமாக சோசலிச நோக்கங்களுக்கு சேவை செய்தாக வேண்டும் - ஆனால் இறுதி ஆய்வில் மட்டுமே. அரசு நேரடியாகவும் அதன் வெகு ஆரம்பத்தில் இருந்தேயும் இரட்டைக் குணாம்சத்தை கொண்டிருக்கிறது: உற்பத்தி சாதனங்களில் சமூக உடைமைகளை அது பாதுகாக்கும் மட்டத்திற்கு அது சோசலிசக் குணம் கொண்டிருக்கிறது; உயிர்வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் விநியோகமானது மதிப்பு குறித்த ஒரு முதலாளித்துவ மதிப்பீட்டை கொண்டும் அதிலிருந்து எழுகின்ற அனைத்து பின்விளைவுகளுடனும் நடத்தப்படுகின்ற மட்டத்திற்கு அது முதலாளித்துவக் குணாம்சத்தை கொண்டிருக்கிறது. இத்தகையதொரு முரண்பாடான குணநலனாக்கம் வறட்டு சித்தாந்தவாதிகளையும், ஏட்டுக் கல்விப் பண்டிதர்களையும் கலவரப்படுத்தக் கூடும்; அவர்களுக்கு நமது அனுதாபங்களை மட்டுமே நாம் வழங்க முடியும். தொழிலாளர்’ அரசின் இறுதியான அங்க இலட்சணம் என்பது அதன் முதலாளித்துவ மற்றும் சோசலிசப் போக்குகளுக்கு இடையில் மாறுகின்ற உறவுகளால் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. சோசலிசப் போக்குகளின் வெற்றி அக்காரணத்தாலேயே ஆயுதம் தரித்த அமைப்பின் இறுதிக் கலைப்பை, அதாவது அரசை ஒரு சுயமாக ஆளும் சமூகத்தில் கலைத்துவிடுவதைக் குறிப்பதாக இருக்கமுடியும். சோவியத் அதிகாரத்துவவாதப் பிரச்சினை, அதனளவிலும் சரி ஒரு அறிகுறியாகவும் சரி இரண்டு வகையிலுமே அளவிடமுடியாத எத்துணை அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது இதிலிருந்து மட்டுமே போதுமான அளவு தெளிவாகிறது! லெனின் தன்னுடய முழுமையான புத்திஜீவித்தன பக்குவத்திற்கேற்ப மார்க்சின் கருத்தாக்கத்திற்கு ஒரு மிகக் கூர்மையான வெளிப்பாட்டை கொடுத்த காரணத்தினால், அவர் எதிர்காலச் சிக்கல்களின் மூலத்தை வெளிப்படுத்தினார், அவற்றில் அவரது சொந்தச் சிக்கல்களும் இருந்தன; இருப்பினும் அவரே கூட தன் ஆய்வினை இறுதிவரை எடுத்துச் செல்வதில் வெற்றிபெற முடியவில்லை. ''முதலாளித்துவ வர்க்கம் ஒன்று இல்லாத ஒரு முதலாளித்துவ அரசு'' என்பது உண்மையான சோவியத் ஜனநாயகத்துடன் இசைவற்றதாக நிரூபணமானது. அரசின் இரட்டைச் செயல்பாடு அதன் கட்டமைப்பைப் பாதிக்காமல் இருக்க முடியவில்லை. தத்துவத்தால் தெளிவாக முன்காண முடியாமல் இருந்ததை அனுபவம் வெளிக்கொணர்ந்தது. முதலாளித்துவ எதிர்ப்புரட்சிக்கு எதிராக சமூகமயமாக்கப்பட்ட உடைமையைப் பாதுகாப்பதற்கு ”ஆயுதந்தரித்த தொழிலாளர்களின் ஒரு அரசு” முழுக்கப் போதுமானதாய் இருந்தது என்றால், நுகர்வு தொடர்பான ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் விடயமே மிக மாறுபட்டதாய் இருந்தது. தனியந்தஸ்து இல்லாதிருந்தவர்கள் அவற்றை உருவாக்க மற்றும் பாதுகாக்க விருப்பமில்லாதவர்களாக இருந்தார்கள். சிறுபான்மையின் தனியந்தஸ்து குறித்து பெரும்பான்மை தன்னைக் கவலையில் ஆழ்த்திக் கொள்ள முடியாது. “முதலாளித்துவ சட்டத்தை”ப் பாதுகாக்க தொழிலாளர்’ அரசானது ஒரு “முதலாளித்துவ” வகைப்பட்ட சாதனத்தை, அதாவது ஒரு புதிய சீருடையில் என்றாலும் அதே பழைய ஆயுதம் தரித்த அமைப்பை உருவாக்கும் நிர்ப்பந்தத்தைப் பெற்றது. இவ்வாறாக, போல்ஷிவிக் வேலைத்திட்டத்திற்கும் சோவியத் யதார்த்தத்திற்கும் இடையிலான அடிப்படையான முரண்பாடுகளைப் புரிந்து கொள்வதில் நாம் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம். அரசு உலர்ந்து உதிர்ந்து போகவில்லை, மாறாக மேலும் மேலும் சர்வாதிகாரம் கொண்டதாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால், தொழிலாள வர்க்கத்தின் முழு அதிகாரத்தை கொண்ட பிரதிநிதிகள் அதிகாரத்துவவாதிகளாக ஆகின்றனர், அதிகாரத்துவமோ புதிய சமுதாயத்திற்கும் மேலாக எழுந்து நிற்கிறது என்றால், இது ஏதோ கடந்த காலத்தின் உளவியல் ரீதியான எச்சங்கள் என்பது போன்ற இரண்டாம்பட்சக் காரணங்களால் அல்ல, மாறாக உண்மையான சமத்துவத்திற்கு உத்தரவாதமளிக்க சாத்தியமில்லாமல் இருக்கும் வரை ஒரு தனியந்தஸ்து கொண்ட சிறுபான்மைக்கு பிறப்பளிக்கவும் ஆதரவளிக்கவுமான உருக்குறுதி பெற்ற அவசியத்தால் வந்த விளைவு தான். முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்களின் இயக்கத்தை கழுத்து நெரிப்பதாக இருக்கும் அதிகாரத்துவவாதப் போக்குகள், எல்லா இடங்களிலுமே ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்னரும் கூட தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாய் இருக்கும். ஆனால், எந்த அளவுக்கு புரட்சியில் இருந்து வரும் சமுதாயம் ஏழ்மையில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு இந்த "விதி"யின் வெளிப்பாடு கூடுதல் உறுதியானதாகவும் கூடுதல் அப்பட்டமானதாகவும் இருக்கும், அந்த அளவுக்கு அதிகாரத்துவத்தினால் கொள்ளப்படும் வடிவங்களும் கூடுதல் முரட்டுத்தனமானதாக இருக்கும், அந்த அளவுக்கு அது சோசலிச அபிவிருத்திக்கான கூடுதல் அபாயகரமானதாக மாறும். சோவியத் அரசு உலர்ந்து உதிர்வதில் இருந்து மட்டுமல்ல, தன்னை அதிகாரத்துவ ஒட்டுண்ணியிடம் இருந்து விடுவித்துக் கொள்வதில் இருந்தும் கூட தடுக்கப்பட்டுள்ளது, இது ஸ்ராலினின் முழுமையான போலிஸ் கோட்பாடு அறிவிப்பதைப் போல, முன்னாள் ஆளும் வர்க்கங்களின் "எச்சங்களால்" அல்ல, ஏனென்றால் இந்த எச்சங்கள் தம்மளவில் சக்தியற்றவையாக இருக்கின்றன. பொருளாதாய ஆசை, கலாச்சாரப் பின்தங்கியநிலை மற்றும் அதன் விளைவாக ஒவ்வொரு ஒவ்வொரு மனிதனையும் உடனடியாகவும் உயிர்மையுடனும் தொடக்கூடியவற்றில் அதாவது அவனது தனிமனித இருப்பைக் காப்புறுதி செய்து கொள்ளக் கூடிய வேலையில் உருவாகக் கூடிய “முதலாளித்துவச் சட்ட”த்தின் மேலாதிக்கம் ஆகிய அளவற்ற வலிமைவாய்ந்த காரணிகளால் அது தடுக்கப்படுகிறது. "பொதுப்படையாக்கப்பட்ட தேவை"யும் ஆயுதம் தரித்த அமைப்பும்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு இரண்டு வருடம் முன்னதாக இளம் வயது மார்க்ஸ் எழுதினார்: "உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி என்பது [கம்யூனிசத்தின்] முழுக்கவும் அவசியமாய் இருக்கும் அடிப்படையான நடைமுறை முதற்கோளாகும். ஏனென்றால் அது இல்லாமல் தேவை பொதுமைப்படுத்தப்படும்போது, தேவையுடன் சேர்ந்து அத்தியாவசியங்களுக்கான போராட்டமும் மறுபடியும் தொடங்குகிறது, அதன் அர்த்தம் என்னவென்றால் எல்லா பழைய குப்பைகளும் மறுபடியும் உயிர்பெற்றாக வேண்டியிருக்கிறது". இந்த சிந்தனையானது மார்க்ஸ் நேரடியாக அபிவிருத்தி செய்த ஒன்று அல்ல, தற்செயலான காரணத்திற்காகவும் அவர் செய்ததல்ல: ஒரு பின்தங்கிய நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சியை அவர் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. லெனினும் கூட ஒருபோதும் இதனிலேயே மூழ்கியிருக்கவில்லை, இதுவும் தற்செயலானதல்ல. சோவியத் அரசு இவ்வளவு வெகுகாலம் தனிமைப்படுத்தப்படக் கூடும் என்று அவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படியிருந்தபோதிலும், மார்க்ஸ் வெறுமனே அருவமாய்க் கட்டுமானம் செய்த, எதிர்மாறான விவாதமாக இருந்த இந்த மேற்கோள், சோவியத் அரசின் முழுமையான உறுதியான சிக்கல்கள் மற்றும் நோய்களுக்கான தவிர்க்கமுடியாத தத்துவார்த்த திறவுகோலை வழங்குகிறது. வரலாற்று ரீதியாக மிகவும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அடிப்படையில், ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு யுத்தங்களின் சீரழிவுகளால் மேலும் மோசமுற்று, "தனிமனித வாழ்க்கைக்கான போராட்டமானது", முதலாளித்துவ வர்க்கம் தூக்கியெறியப்பட்ட அடுத்த நாளில் மறைந்து விடவில்லை என்பது மட்டுமல்ல, தொடர்ந்து வந்த வருடங்களில் அது குறையவுமில்லை என்பது மட்டுமல்ல, மாறாக நேரெதிரான வகையில், சில சமயங்களில் முன்கேள்விப்பட்டிராத சீற்றத்தையும் பெற்றிருந்தது. நாட்டின் சில குறிப்பிட்ட பிராந்தியங்கள் மனிதரை மனிதர் தின்னும் நிலைக்கு இரண்டுமுறை சென்றதை நாம் நினைவு கூரவும் அவசியமா என்ன? ஜாரிய ரஷ்யாவை மேற்கில் இருந்து பிரிக்கும் தூரம் இப்போது மட்டுமே உண்மையில் மெச்சத்தக்கதாக இருக்க முடியும். மிகவும் சாதகமான, அதாவது உள்முகமான தொந்தரவுகளோ அல்லது வெளிப்புறத்திலிருந்தான பெருங்கேடுகளோ இல்லாத சூழல்களில், முதலாளித்துவ நாகரிகத்தின் முதலில் பிறந்த தேசங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளை செலவழித்திருக்கக் கூடிய பொருளாதார மற்றும் கல்விச் சாதனைகளை சோவியத் ஒன்றியம் முழுமையாக உள்ளீர்த்துக் கொள்வதற்கு இன்னும் பல ஐந்து-ஆண்டு திட்டங்கள் தேவைப்படும். சோசலிசத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கான பிரச்சினைகளை தீர்க்க சோசலிச வழிமுறைகளை பிரயோகிப்பது என்பது தான் சோவியத் ஒன்றியத்தின் நடப்பு பொருளாதார மற்றும் கலாச்சார வேலையின் அடிப்படையான சாராம்சம். உறுதியாகச் சொல்லலாம், இப்போதும் கூட மார்க்ஸ் சகாப்தத்து மிகவும் முன்னேறிய நாடுகளை விடவும் உற்பத்தி சக்திகள் விடயத்தில் சோவியத் ஒன்றியம் விஞ்சியே நிற்கிறது. ஆனால் முதலாவதாய், இரண்டு ஆட்சிகளுக்கான வரலாற்று போட்டி ஒப்பீட்டில், அது சார்புரீதியான மட்டங்களிலான கேள்வியாக இருந்ததே அல்லாது அனைத்து மட்டங்களிலான கேள்வியாக இருக்கவில்லை. சோவியத் ஒன்றியம் ஹிட்லர், பால்ட்வின் மற்றும் ரூஸ்வெல்டின் முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கின்றதே ஒழிய, பிஸ்மார்க், பால்மெர்டன் அல்லது ஆபிரகாம் லிங்கனின் முதலாளித்துவத்தை அல்ல. இரண்டாவதாக, மனிதத் தேவைகளின் அடிப்படை விரிவெல்லையே கூட, உலக தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்து அடிப்படையாக மாற்றம் காண்கிறது. மார்க்சின் சமகாலத்தவர்கள் மோட்டார் வாகனங்கள், வானொலிகள், திரைப்படங்கள், விமானங்கள் குறித்து எதுவும் அறிந்திராதவர்கள். ஆனால், இந்த அனைத்துப் பொருட்களையும் சுதந்திரமாக அனுபவிக்காத ஒரு சோசலிச சமூகத்தை இன்று சிந்தித்துப் பார்க்க முடியாது. மார்க்சின் வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தினால், "கம்யூனிசத்தின் முதல்கட்ட நிலை"யானது, மிகவும் முன்னேறிய முதலாளித்துவம் வெகு அருகில் வந்திருக்கக் கூடிய ஒரு மட்டத்தில் இருந்து தொடங்குகிறது. எனினும், வருகின்ற சோவியத் ஐந்தாண்டுத் திட்டத்தின் உண்மையான வேலைத்திட்டம் "ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை எட்டிப் பிடிப்பது". சோவியத் ஒன்றியத்தின் எண்ணிக்கையற்ற இடங்களில் வாகனச் சாலைகள் மற்றும் தார் நெடுஞ்சாலைகளின் ஒரு வலையமைப்பை கட்டுவது என்பது, அமெரிக்காவில் இருந்து வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகளை கொண்டுவந்து அமர்த்துவதை அல்லது அவர்களது தொழில்நுட்பத்தை கையகப்படுத்துவதை விடவும் கூட மிகவும் அதிகமான காலத்தையும் மூலப்பொருட்களையும் செலவு வைக்கக் கூடியதாகும். ஒவ்வொரு சோவியத் குடிமகனும் தனது வாகனத்தில் தான் விரும்பும் திசையில் பயணம் செல்வதற்கும், வழியில் எந்தச் சிக்கலும் இல்லாமல் எரிபொருள் நிரப்புவதற்கும் சாத்தியமாக எத்தனை வருடங்கள் தேவைப்படும்? காட்டுமிராண்டித்தன சமூகத்தில் வாகன ஓட்டியும் பாதசாரியும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களை சேர்ந்தவர்கள். எந்திரவாகனம் குதிரை வாகனத்தின் அதே அளவுக்கு சமுதாயத்தை கோடுபிரித்துக் காட்டுகிறது. ஒரு கண்ணியமான "ஃபோர்டு" வாகனமும் கூட சிறுபான்மை எண்ணிக்கையிலானோரின் தனியந்தஸ்தாக இருக்கின்ற வரையிலும், ஒரு முதலாளித்துவ சமுதாயத்திற்குரிய அத்தனை உறவுகளும் பழக்கங்களும் அங்கு உயிர்வாழ்கின்றன. அவைகளோடு சேர்ந்து ஏற்றத்தாழ்வின் பாதுகாவலனான அரசும் தொடர்ந்து உயிர்வாழ்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்த மார்க்சிச தத்துவத்தின் மீது தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த லெனின், நாம் கூறியது போல, இந்த கேள்விக்கென தான் அர்ப்பணித்த பிரதானப் படைப்பிலும் (அரசும் புரட்சியும்) சரி, அல்லது கட்சி வேலைத்திட்டத்திலும் சரி, நாட்டின் பொருளாதாரப் பின்தங்கிய நிலைமை மற்றும் நாடு தனிமைப்படுத்தப்படுவதாலான சிக்கல் இவற்றில் இருந்து விளைகின்ற அரசின் பண்பு குறித்த விடயத்தில் அவசியமான அனைத்து முடிவுகளையும் வரைவதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. நிர்வாகப் பங்கேற்பில் வெகுஜனங்களுக்குப் பரிச்சயமின்மை மற்றும் போரினால் விளையும் தனித்தனியான சிக்கல்கள் இவற்றினைக் கொண்டு அதிகாரத்துவம் புத்துயிர் பெற்றதை விளக்கிய இந்த வேலைத்திட்டமானது, "அதிகாரத்துவ பிறழ்வுகளை" வெல்வதற்கு வெறுமனே அரசியல் நடவடிக்கைகளை - எந்தப் பிரதிநிதிகளையும் எந்த நேரத்திலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவதோடு மட்டுமன்றி திருப்பி அழைத்துக் கொள்ளவும் இயலுவது, பொருளாதாய தனியந்தஸ்துகளை இல்லாதொழிப்பது, வெகுஜனங்கள் மூலமான செயலூக்கத்துடனான கட்டுப்பாடு போன்றவை - மட்டுமே பரிந்துரைக்கிறது. இந்தப் பாதையின் வழி செல்கையில், ஒரு அதிகாரி, ஒரு உயர்நிலை அதிகாரி என்பதில் இருந்து இறங்கி, ஒரு எளிய மற்றும் தவிரவும் தற்காலிகமான தொழில்நுட்ப முகவராக மாறிவிடுவார், அத்துடன் அரசும் படிப்படியாக கண்ணுக்குப் புலப்படா வகையில் காட்சியில் இருந்து மறையும் என்று அனுமானிக்கப்பட்டது. நிலுவையிலுள்ள சிக்கல்கள் குறித்த இந்த வெளிப்படையான குறைமதிப்பீட்டுக்கான விளக்கம் இந்த வேலைத்திட்டம் முழுமையாக ஒரு சர்வதேச முன்னோக்கின் அடிப்படையிலானது என்ற உண்மையின் மூலம் பெறத்தக்கது. "ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நனவாக்கியிருக்கிறது... உலகப் பாட்டாளி வர்க்க கம்யூனிஸ்டுப் புரட்சியின் சகாப்தம் தொடங்கியிருக்கிறது." இவை தான் வேலைத்திட்டத்தின் அறிமுக வரிகள். இவற்றின் ஆசிரியர்கள் "தனியொரு நாட்டில் சோசலிசத்தைக்" கட்டமைக்கும் இலட்சியத்தைத் தங்களுக்கு விதித்துக் கொள்ளவில்லை - அந்தச் சிந்தனையே ஒருவரின் மூளையிலும், மற்றவரெல்லாம் போக ஸ்ராலின் மூளையில் கூட அப்போது உதித்திருக்கவில்லை - என்பது மட்டுமல்ல, ஆனால் அத்துடன், முன்னேறிய முதலாளித்துவம் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே தீர்வு கண்டு விட்டதான பொருளாதார மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளை, சுமார் இரண்டு தசாப்த காலத்திற்குத் தனிமைப்பட்ட நிலையில் தீர்வு காணத் தள்ளப்பட்டால், சோவியத் அரசு என்னவிதமான பண்பை பெற்றிருக்கும் என்பதான கேள்வியையும் அவர்கள் தொடவில்லை. எப்படியாயினும், போருக்குப் பிந்தைய புரட்சிகர நெருக்கடி ஐரோப்பாவில் சோசலிசத்தின் வெற்றிக்குக் கொண்டு செல்லவில்லை. சமூக ஜனநாயகவாதிகள் முதலாளித்துவத்தைக் காப்பாற்றி விட்டனர். லெனினுக்கும் அவரது சகாக்களுக்கும் ஒரு குறுகிய "மூச்செடுக்கும் காலமாக"த் தோன்றிய அந்தக் காலகட்டம் ஒரு முழுமையான வரலாற்று சகாப்த காலமாக நீட்சி கண்டுவிட்டிருக்கிறது. சோவியத் ரஷ்யாவின் முரண்பாடான சமூகக் கட்டமைப்புகள், மற்றும் அதன் அரசின் அதிதீவிர அதிகாரத்துவ பண்பு ஆகியவை எல்லாம் இந்த தனித்துவமான மற்றும் "முன்கூட்டி எதிர்பார்த்திராத" வரலாற்று இடைநிறுத்தத்தின் நேரடி விளைவுகளாக இருந்தன; இந்த இடைநிறுத்தம் அதே சமயத்தில் முதலாளித்துவ நாடுகளில் பாசிசத்திற்கோ அல்லது பாசிசத்துக்கு முந்தைய பிற்போக்குத்தன நிலைக்கோ இட்டுச் சென்றது. அதிகாரத்துவம் அற்ற ஒரு அரசை உருவாக்குவதற்கான முதல் முயற்சியானது, முதலாவதாக, சுய நிர்வாக அமைப்புக்கு வெகுஜன மக்கள் பரிச்சயமற்று இருந்தமை, சோசலிசத்துக்கு அர்ப்பணிப்பு கொண்ட திறம்படைத்த தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவை காரணமாக இடறி விழுந்து விட்ட அதே சமயத்தில், இந்த உடனடிப் பிரச்சினைகளுக்குப் பிந்தைய வெகு விரைவிலேயே இன்னும் ஆழமான மற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டது. அரசு “கணக்குவழக்கு பராமரிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது” ஆகிய செயல்பாடுகளுக்குக் குறுக்கிக் கொண்டதும், அதனுடன் சேர்ந்து கட்சி வேலைத்திட்டத்தால் கோரப்பட்ட பலவந்தமான செயல்பாடுகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தமையும் ஒப்பீட்டளவிலேனும் ஒரு பொதுவான மனத்திருப்தி நிலையைக் கொண்டுவந்து விட்டது. பற்றாக்குறையாய் இருந்தது இந்த அத்தியாவசியமான நிபந்தனை மட்டுமே: மேற்கில் இருந்து எந்த உதவியும் வரவில்லை. தனியந்தஸ்து பெற்ற குழுக்கள் உயிர்வாழ்வது பாதுகாப்புத் துறைக்கும், தொழிற்துறைக்கும், தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் துறைக்கும் அவசியமாக இருந்த நிலையில் அந்த தனியந்தஸ்துக் குழுக்களுக்கு வசதி செய்து தருவது தான் அன்றாடக் கடமை என்கின்ற போது ஜனநாயக சோவியத்துகளின் அதிகாரம் நெருக்குவதாய், இன்னும் சகிக்கமுடியாததாயும் கூட நிரூபணமானது. பத்துப் பேரிடம் இருந்து எடுத்து ஒருவருக்குக் கொடுக்கின்ற இந்த தீர்மானித்த "சோசலிசமற்ற" நடவடிக்கையில், இவையெல்லாம் திண்மை பெற்று விநியோகத்தில் நிபுணர்களாகிய ஒரு சக்திவாய்ந்த சாதிப்பிரிவை உருவாக்கியது. எப்படியாயினும், சமீப காலகட்டத்தின் பிரம்மாண்டமான பொருளாதார வெற்றிகள் ஏற்றத்தாழ்வு குறைவதற்கு இட்டுச் செல்லாமல் மாறாக கூர்மைப்படுவதற்கும், அதே சமயத்தில் அதிகாரத்துவவாதம் ஒரு "பிறழ்வாக" இருந்ததில் இருந்து இப்போது ஒரு நிர்வாக முறையாகவே ஆகியிருக்கக் கூடிய அளவுக்கு மேலதிக வளர்ச்சி அடைவதற்கும் இட்டுச் சென்றிருப்பது எப்படி, ஏன்? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முயற்சிக்கும் முன்னதாக, சோவியத் அதிகாரத்துவத்தின் வல்லமை பெற்ற தலைவர்கள் தங்களது சொந்த ஆட்சியை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கேட்போம். சோசலிசத்தின் முழுமையான வெற்றி" மற்றும் "சர்வாதிகாரத்தினை உறுதிப்படுத்துதல்" சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் "முழுமையான வெற்றி" குறித்து சமீப வருடங்களில் பல்வேறு அறிவிப்புகள் வந்திருக்கின்றன - அதிலும் "குலாக்குகளை ஒரு வர்க்கமாய் இருப்பதில் இருந்து கலைப்பது" தொடர்பாக இந்த அறிவிப்புகள் திட்டவட்டமான வடிவங்களைக் கொண்டிருந்தன. ஜனவரி 30, 1931 அன்று ஸ்ராலினின் உரை ஒன்றுக்குப் பொருள்விளக்கமளித்த பிராவ்தா கூறியது: "இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்தின் போது, நமது பொருளாதாரத்தில் முதலாளித்துவக் கூறுகளின் கடைசிச் சுவடுகளும் கூட கலைக்கப்பட்டிருக்கும்" (அழுத்தம் சேர்க்கப்பட்டது.) இந்த முன்னோக்கின் கோணத்தில் இருந்து பார்த்தால், அரசானது அதே காலகட்டத்தில் தீர்மானகரமாய் உலர்ந்து உதிரும் நிலை முடிவுக் கட்டத்துக்கு வந்திருக்க வேண்டும், ஏனென்றால் முதலாளித்துவத்தின் "கடைசிச் சுவடுகளும்" கலைக்கப்பட்டு விடும்போது அரசு செய்வதற்கு இனி வேலை ஒன்றும் இருக்கவில்லை. இந்த விடயத்தில் போல்ஷிவிக் கட்சியின் வேலைத்திட்டம் கூறுவது என்னவென்றால், "சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்து கிடக்கும் நிலையும், எனவே அதன்பொருட்டான அத்தனை அரசு அதிகாரமும், முழுமையாக மறைந்து போகாத வரைக்கும் ஒவ்வொரு அரசுக்கும் வர்க்க பண்பு என்று இருப்பது தவிர்க்கவியலாதது என்பதை சோவியத் அதிகாரம் பகிரங்கமாய் அங்கீகரிக்கிறது”. இருந்தாலும், முதலாளித்துவத்தின் “கடைசிச் சுவடுகள்” கலைக்கப்படும் நம்பிக்கையில் இருந்து அரசு எவ்வாறு உலர்ந்து உதிரப் போகின்றது என்பதை ஆராய சில முன்னெச்சரிக்கையற்ற மாஸ்கோ தத்துவாசிரியர்கள் முயற்சிசெய்தபோது, அத்தகைய தத்துவங்கள் எல்லாம் “எதிர்ப்புரட்சிகரமானவை” என அதிகாரத்துவம் உடனடியாய் அறிவித்தது. அதிகாரத்துவத்தின் தத்துவார்த்தப் பிழை எங்கே இருக்கிறது: அடிப்படை முன்நிபந்தனைகளிலா அல்லது தீர்மானித்த முடிவிலா? இரண்டிலுமே. "முழுமையான வெற்றி" குறித்த முதலாவது அறிவிப்புகளுக்கு, இடது எதிர்ப்பாளர்கள் பதிலளித்தனர்: உற்பத்தி சக்திகளின் மட்டம் என்ற அடிப்படையான அளவுகோலில் இருந்து எடுக்கப்படும் கனிந்திராத, முரண்பாடான, விவசாயத்தில் இன்னமும் ஸ்திரமற்று இருப்பதான சமூக-சட்ட உறவு வடிவங்களுடன் உங்களை நீங்கள் மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. சட்ட வடிவங்களே கூட தம்மளவில் தொழில்நுட்ப மட்டத்தின் உயரத்தைப் பொறுத்து ஒரு அடிப்படையாய் மாறுபட்ட சமூக உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். "சட்டம் ஒருபோதும் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் அதனால் பக்குவப்படுத்தப்படும் கலாச்சார மட்டத்தை விடவும் உயர்ந்து இருக்க முடியாது" (மார்க்ஸ்). பொருளாதார வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் மிக நவீன சாதனைகள் அமர்த்தப்படுவதன் அடிப்படையில் சோவியத்தின் சொத்து வடிவங்கள் இருப்பது தான் உண்மையில் சோசலிசத்தின் முதல் கட்டமாக இருக்கும். உழைப்பு சக்தியின் குறைவான உற்பத்தித் திறனுடனான சோவியத் வடிவங்கள் என்பது வரலாறு தலைவிதியை இன்னமும் இறுதியாய் எடைபோட்டிராத ஒரு இடைமருவு ஆட்சியையே குறித்து நிற்கும். "இது அரக்கத்தனமானதாக இல்லையா?" - என நாம் 1932 மார்ச்சில் எழுதினோம். "நாடு பொருட்களின் பஞ்சத்தில் இருந்து மீள முடியவில்லை. ஒவ்வொரு படிநிலையிலும் விநியோக நிறுத்த நிலையே உள்ளது. குழந்தைகளுக்கு பால் இல்லை. ஆனால் உத்தியோகபூர்வ அசரீரிகள் அறிவிக்கின்றன: 'நாடு சோசலிசக் காலகட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது?’ சோசலிசத்தின் பெயரை இதை விடவும் நச்சுத்தனமாய் களங்கப்படுத்த முடியுமா?". இப்போது ஆளும் சோவியத் வட்டாரங்களில் பிரபலமாய் இருக்கும் பரப்புரையாளரான கார்ல் ரடெக், ஜேர்மன் தாராளவாத இதழான Berliner Tageblatt இல் சோவியத் ஒன்றியத்துக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பிதழில் (1932 மே மாத இதழ்) இந்த கருத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு கூறிய பின்வரும் வார்த்தைகள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் தகுதி படைத்தவை: "பால் என்பது பசுக்களால் கிடைப்பதே அன்றி சோசலிசத்தால் அல்ல. பரந்துபட்ட மக்களின் பொருளாதாய நிலைமையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏதும் இன்றியே கூட ஒரு நாடு சற்று காலத்திற்கு அபிவிருத்தியின் ஒரு உயர்ந்த மட்டத்திற்கு உயர முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாம் என்றால் நீங்கள் சோசலிசத்தை பால் ஆறாக ஓடும் ஒரு நாட்டின் கற்பனையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியது தான்". நாட்டை ஒரு பயங்கரமான பஞ்சம் உலுக்கிக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த வரிகள் எழுதப்பட்டன. சோசலிசம் என்பது, மனிதத் தேவைகளை சிறந்த முறையில் பூர்த்தி செய்வதற்குரிய திட்டமிட்ட உற்பத்திக் கட்டமைப்பு ஆகும்; இல்லாவிட்டால் அது சோசலிசம் என்ற பெயருக்குத் தகுதியானது அல்ல. பசுக்கள் சமூகமயமாக்கப்படுகின்றன, ஆனால் பசுக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கின்றன, அல்லது அவற்றின் மடிகள் எல்லாம் மிகக் குறைவான அளவில்தான் பால் சுரக்கின்றன என்றால், பற்றாக்குறைப் பால் விநியோகத்தின் காரணமாக மோதல்கள் உருவாகின்றன - நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையில், கூட்டுற்பத்திப் பண்ணைகளுக்கும் தனிநபர் விவசாயிகளுக்கும் இடையில், பாட்டாளி வர்க்கத்தின் பல்வேறு தட்டுகளுக்கு இடையில், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் அதிகாரத்துவத்திற்கும் இடையில். உண்மையில் பசுக்களை சமூகமயமாக்கியதுதான் விவசாயிகள் அவற்றை மொத்த மொத்தமாய் அழித்த நிலைக்கு இட்டுச் சென்றது. பற்றாக்குறையால் உருவாக்கப்பட்ட சமூக மோதல்கள் தங்கள் பங்கிற்கு "அனைத்துப் பழைய குப்பைகளும்" மறுபடி எழும் நிலைக்கு இட்டுச் செல்ல முடியும். இத்தகைய வகையில் தான் நமது பதிலின் சாராம்சம் இருந்தது. கம்யூனிச அகிலத்தின் ஏழாவது பேரவை, 1935 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று மேற்கொண்டதொரு தீர்மானத்தில் உறுதிபடத் தெரிவித்தது: தேசியமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகளின் வெற்றிகள், கூட்டுற்பத்தி முறையின் சாதனை, முதலாளித்துவக் கூறுகள் நெருக்கி வெளித்தள்ளப்பட்டமை மற்றும் குலாக்குகள் ஒரு வர்க்கமாய் இருப்பதில் இருந்து கலைக்கப்பட்டமை ஆகிய வெற்றிகளின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகையில், ”சோசலிசத்தின் இறுதியான மற்றும் திருப்பவியலாத வெற்றியும் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசிற்கு அனைத்துப் பக்கங்களிலிருந்துமான வலுவூட்டலும் சோவியத் ஒன்றியத்தில் சாதிக்கப்படுகிறது.“ திட்டவட்டமான தொனியைக் கொண்டிருக்கின்ற கம்யூனிச அகிலத்தின் இந்தச் சாட்சியம் முழுக்கவும் சுய-முரண்பாடு கொண்டதாய் இருக்கிறது. ஒரு கோட்பாடாய் அல்ல மாறாக வாழும் சமூக ஆட்சியாக சோசலிசம் "இறுதியாகவும் திருப்பவியலாத வண்ணமும்" வெற்றி கொள்ளப்பட்டிருக்குமானால், பின் ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு புதுப்பிக்கப்பட்ட "வலிமையூட்டல்" என்பது வெளிப்படையாகவே அநாவசியமான அபத்தம். இதற்கு நேரெதிராய், ஆட்சியின் உண்மையான தேவைகளால் தான் சர்வாதிகாரத்திற்கான வலிமையூட்டல் தூண்டப்படுகிறது என்றால், சோசலிசத்தின் வெற்றி இன்னும் வெகுதொலைவில் தான் இருக்கிறது என்பது தான் அதன் பொருள். சர்வாதிகாரத்தை "வலிமையூட்டுவதற்கான" - அதாவது அரசாங்க அடக்குமுறைக்கான - அவசியம் சான்றளிப்பது வர்க்கமற்ற இசைவொற்றுமையின் வெற்றியை அல்ல, மாறாக புதிய சமூகக் குரோதங்களின் வளர்ச்சியையே என்பதை ஒரு மார்க்சிசவாதி மட்டுமல்ல, எந்த உண்மையான அரசியல் சிந்தனையாளரும் புரிந்து கொள்ளக் கடமைப்பட்டவராவார். இவை அனைத்தின் கீழும் இருப்பது என்ன? உழைப்பின் குறைந்த உற்பத்தித் திறனில் இருந்து விளைகின்ற வாழ்வாதாரப் பொருட்களின் பற்றாக்குறையே. சோசலிசத்தை "சோவியத் அதிகாரத்துடன் மின்சாரமயமாக்கம் இணைவது" என்று லெனின் ஒருமுறை குணாம்சப்படுத்தினார். இந்த பதப்பிரயோகம் - இதன் ஒருபக்கமான தன்மை அந்த சமயத்தின் பரப்புரை நோக்கங்களால் வந்தது - மின்சாரமயமாக்கத்தில் முதலாளித்துவ மட்டத்தினை ஒரு குறைந்தபட்ச ஆரம்பப் புள்ளியாக கருதியிருந்தது. தற்போது சோவியத் ஒன்றிய குடிமக்களில் நபர் ஒருவருக்கு முன்னேறிய நாடுகளில் கிடைப்பதில் மூன்றில் ஒரு பங்கு மின்சார சக்தி கிடைக்கிறது. இடைப்பட்ட காலத்தில் சோவியத்துகள் வெகுஜனங்களில் இருந்து சுயாதீனமான ஒரு அமைப்பிற்கு வழி விட்டிருக்கின்றன என்பதை நீங்கள் கருத்தில் கொண்டால், சோசலிசம் என்பது, அதிகாரத்துவத்தின் அதிகாரத்துடன் முதலாளித்துவ மின்சாரமயமாக்கத்தில் மூன்றில் ஒரு பங்கினை இணைக்க கிடைப்பது என்று அறிவிப்பதை தவிர கம்யூனிச அகிலத்திற்கு மாற்று வழி இருக்கவில்லை. இத்தகையதொரு வரையறை புகைப்படரீதியாய் துல்லியமாய் இருக்கும், ஆனால் சோசலிசத்திற்கு இது போதாது! 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஸ்டாகனோவிஸ்டுகளிடயே பேசிய ஸ்ராலின் மாநாட்டின் அனுபவவாத நோக்கங்களுக்குக் கடமைப்பட்ட வகையில் எதிர்பாராத வகையினதாக அறிவித்தார்: "சோசலிசம் முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறையை வெல்ல முடியும், வெல்ல வேண்டும், மற்றும் அவசியமாய் வெல்லும், ஏன்? ஏனென்றால் அது உயர்ந்த உழைப்பின் உற்பத்தித் திறனை வழங்க முடியும்". தற்சமயமானதாய், கம்யூனிச அகிலம் அதே கேள்வியின் மீது மூன்று மாதங்களுக்கு முன்பாக ஏற்றுக் கொண்டிருந்த தீர்மானத்தையும், தானே கூட பலமுறை தொடர்ந்து அளித்து வந்திருந்த அறிவிப்புகளையும் நிராகரிக்கும் வகையில் ஸ்ராலின் இங்கே சோசலிசத்தின் "வெற்றி" குறித்து எதிர்காலத்தில் பேசுகிறார். உழைப்பின் உற்பத்தித் திறனில் விஞ்சும்போது சோசலிசம் முதலாளித்துவ அமைப்புமுறையை வெற்றி கண்டு விடும் என்கிறார் அவர். நாம் காண்பதைப் போல, வினைச்சொற்களின் காலங்கள் மட்டுமல்ல மாறாக சமூக அளவுகோல்களே கணத்துக்குக் கணம் மாறின. "பொதுவான பாதையுடன்" கூட நடப்பது என்றால் எந்த சோவியத் குடிமகனுக்கும் அது நிச்சயமாக எளிதான ஒன்றல்ல. இறுதியாக மார்ச் 1, 1936 அன்று, ராய் ஹோவார்டுடனான கலந்துரையாடலில், ஸ்ராலின் சோவியத் ஆட்சிக்கு ஒரு புதிய வரையறையை வழங்கினார்: "நாம் உருவாக்கியிருக்கும் சமூக அமைப்புமுறையை ஒரு சோவியத் சோசலிச அமைப்புமுறை என்று அழைக்கலாம், இது இன்னும் முழுமையாக நிறைவுபெறவில்லை, ஆனால் இதன் வேரில் சமூகத்தின் ஒரு சோசலிச ஒழுங்கமைப்பாய் இருக்கிறது." திட்டமிட்டுத் தெளிவற்ற வகையில் வழங்கப்பட்ட இந்த வரையறையில் ஏறக்குறைய வார்த்தைகளின் அதே எண்ணிக்கையில் முரண்பாடுகளும் இருக்கின்றன. சமூக ஒழுங்கமைப்பு "சோவியத் சோசலிச" அமைப்பு என அழைக்கப்படுகிறது, ஆனால் சோவியத்துகள் என்பவை அரசின் ஒரு வடிவம், சோசலிசம் என்பது ஒரு சமூக ஆட்சிமுறை. இந்த அழைப்புப்பெயர்கள் ஒத்த வகையாய் இல்லை என்பது மட்டுமல்ல, நமது விவாதப்பொருள் விடயத்தின் கோணத்தில், குரோதப்பட்டவையாகவும் இருக்கின்றன. சமூக அமைப்பு சோசலிசவயப்பட்டதாக ஆகியிருக்கும் மட்டத்திற்கு, கட்டிடம் கட்டி முடிந்த பின் சாரக்கட்டு அகன்று விடுவதைப் போல சோவியத்துகள் அகன்று விட வேண்டும். அப்போது ஸ்ராலின் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்துகிறார்: சோசலிசம் "முழுமையாக இன்னும் நிறைவு பெறவில்லை". "முழுமையாக இல்லை" என்பதன் பொருள் என்ன? எஞ்சியிருப்பது ஐந்து சதவீதமா அல்லது எழுபத்தைந்து சதவீதமா? அவர்கள் அதை நமக்குச் சொல்வதில்லை, எப்படி அவர்கள் "வேரில் சோசலிசவயம்" கொண்ட ஒரு சமூக அமைப்பு என்பதன் பொருள் என்ன என்பதை நமக்குச் சொல்லவில்லையோ அதைப் போல. சொத்து வடிவங்களைக் குறிப்பிடுகிறார்களா அல்லது தொழில்நுட்ப வடிவங்களையா? எப்படியிருந்தாலும், வரையறையின் வெகு மூட்டமான தன்மையே, 1931 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளில் கணக்கிட முடியா அளவுக்கு கூடுதல் திட்டவட்டமானதாய் இருந்த சூத்திரங்களில் இருந்து ஒரு பின்வாங்கலையே குறித்து நிற்கிறது. இதேபாதையில் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், ஒவ்வொரு சமூக அமைப்பின் "வேரும்" உற்பத்தி சக்திகள் தான் என்பதையும், சோவியத் வேர் சோசலிசத் தண்டினையும் மனிதகுல நலன் என்ற தலைப் பகுதியையும் தாங்கும் அளவுக்குப் போதுமான வலிமையுடையதாய் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ளும் இடத்திற்கு வரலாம். *************** • சோவியத் தலைவர்களுக்கு எதிராக பயங்கரவாத சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காரல் ரடெக் கைது செய்யப்படுவதற்கு முன்னர் எழுதியது. |