ஏகாதிபத்தியமும் யூதப் படுகொலையின் அரசியல் பொருளாதாரமும்Imperialism and the political economy of the Holocaust |
WSWS : Tamil : நூலகம் |
|
Imperialism and the political economy of the Holocaustஏகாதிபத்தியமும் யூதப் படுகொலையின் அரசியல் பொருளாதாரமும்By Nick Beams Use this version to print | Send feedback இந்த உரை சான் டியாகோ அரசுப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 29 அன்று வழங்கப்பட்டது. சான் டியகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் உலக விவகார நிறுவனத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட “ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகக் கொல்லுதல்: நெருக்கடியில் இருக்கும் ஒரு உலகத்தில் அரசியல் வன்முறை” என்ற தலைப்பிலான தொடர் உரை வரிசையில் இது எட்டாவதாகும். அனைத்து ஐரோப்பிய யூதர்களையும் கூட்டமாய் கொல்வதற்கான தங்களது திட்டத்தை அடோல்ஃப் ஹிட்லரும் நாஜி ஆட்சியும் முன்னெடுத்ததின் பின் ஏறக்குறைய ஏழு தசாப்தங்கள் கடந்திருக்கின்றன. காலம் கடந்திருந்தாலும் இக்குற்றத்தின் கொடுமை குறித்த நமது உணர்வு குறைந்திருக்கவில்லை. மாறாக, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ அடக்குமுறை போர்கள், பிரதான முதலாளித்துவ சக்திகள் இடையே ஆழமடையும் போட்டிகள் மற்றும் நாஜி ஆட்சியின் தோற்றத்திற்கு காரணமாய் இருந்த 1930களின் நெருக்கடிகளை நினைவுகூரத்தக்க முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கின் முறிவு ஆகிய இப்போது கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளால் யூத இனப் படுகொலை நிகழ்வின் முக்கியத்துவம் மேலும் வலியுறுத்தி காட்டப்படுகின்றது. இந்த குறிப்புகள் சர்ச்சைக்குரியதாய் தோன்றுகின்றதென்றால் அவை அப்படித் தான் இருந்தாக வேண்டும். ஏனென்றால் யூத இனப் படுகொலை என்பதையே அதனைச் சுற்றிய வாதங்கள் மற்றும் பிரச்சினைகளை - சமகால அரசியல் பொருத்தமுடைய சர்ச்சைகள் - ஊடுருவிப் பார்க்காமல் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே, எனது குறிப்புகளின் வழியில் நான் மறுக்கத் தலைப்படும் சில நிலைப்பாடுகளை சுட்டிக் காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறேன். 1996ல், ஹார்வர்டு கல்வியியல் அறிஞரான டானியல் கோல்ட்ஹாகன் தனது ஹிட்லருடைய ஆர்வப்பட்ட கொலைகாரர்கள்: சாதாரண ஜேர்மனியர்களும் யூதப் படுகொலையும் (Hitler’s Willing Executioners: Ordinary Germans and the Holocaust) என்ற புத்தகத்தின் மூலம் காட்சிக்குள் திடீரென நுழைந்தார். ”சாதாரண ஜேர்மனியர்களின்” உள்ளத்திலும் நோக்கத்திலும் ஆழமாய் வேரூன்றியிருந்த கொலைவெறியுடனான யூத குரோதத்தின் விளைபொருளே யூத இன ஒழிப்பு முயற்சி என்பது கோல்ட்ஹாகனின் ஆய்வு முடிவு. நாஜி இயக்கம் குறித்தும் அது அதிகாரத்துக்கு எழுச்சிபெற்றது குறித்ததுமான எந்த ஆய்வும் அதற்கு அவசியப்படவில்லை, அதே போல் யூத இன ஒழிப்பு முயற்சிக்கு இட்டுச் சென்ற சமூக மற்றும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் மீதான ஒரு ஆய்வும் அவசியப்படவில்லை. அது வெறுமனே 'யூத எதிர்ப்பின் ஒரு விளைபொருள், அந்த ஜேர்மனிய யூத-எதிர்ப்பே பல்லாயிரக்கணக்கான சாதாரண ஜேர்மனியர்களை யூதர்களை படுகொலை செய்வதற்கு நகர்த்தியது, சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் இன்னும் மில்லியன்கணக்கான ஜேர்மனியர்களை நகர்த்தியிருக்கும்'. கோல்ட்ஹாகனின் புத்தகத்தின் வர்த்தக ரீதியான “வெற்றி”யானது அதன் மேலெழுந்தவாரியான தன்மைக்கும் மற்றும் சிந்தனைக்கோ அல்லது விமர்சனரீதியான பகுப்பாய்வுக்கோ அவசியமில்லாத தவறான முன்தீர்மானங்கள் மற்றும் எளிமையான விளக்கங்களுக்கு அது அழைப்பு விடுத்ததிலும் அமைந்திருந்தது. இது அக்காலகட்டத்தின் ஒரு வெளிப்பாடாக அமைந்தது. அது 1990களின் “எழுச்சி”க் காலமாகும். அதாவது சந்தை மேலாதிக்கம் செலுத்தியது, சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவால் 'வரலாறே ஒரு முடிவுக்கு வந்திருந்தது', விமர்சனரீதியான சிந்தனையே தேவையில்லை என்றிருந்த காலமாகும். எப்படியிருப்பினும், கோல்ட்ஹாகனின் ஆய்வறிக்கை ஏராளமான திசைகளில் இருந்து எதிர்ப்பைக் கண்டது, அத்துடன் அதன் தெளிவற்ற பகுதிகள் துரிதமாய் அம்பலப்பட்டன. உதாரணத்திற்கு, ஜேர்மனியர்கள் என்றவகையில் ஜேர்மனியர்களின் யூத-எதிர்ப்புத்தான் இதற்குப் பொறுப்பு என்கின்ற வாதத்தை எடுத்துக் கொள்வோம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், எந்த நாட்டில் யூதர்கள் மீதான ஒரு பாரிய படுகொலை ஒழுங்கமைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்குமாயின், நிச்சயமாக ரஷ்யா என்பது தான் பதிலாக இருந்திருக்கும். ஜேர்மனியைப் பொறுத்த வரையில், “ஜேர்மன் மொழி மற்றும் கலாச்சாரத்துடன் உணர்வுபூர்வமாய் அடையாளம் காணப்படுவதற்கு ஒரு நோபல் பரிசு இருந்திருந்தால், 1933க்கு முந்தைய சமயத்தில் யூதர்கள் தான் அதனை நிச்சயம் வென்றிருப்பார்கள்” என்று வரலாற்றாசிரியர் ரொபேர்ட் விஸ்ட்ரிச் குறிப்பிட்டார். [1] கோல்ட்ஹாகனின் ஆய்வறிக்கை நார் நாராய் கிழிக்கப்பட்ட போதிலும் அதன் பல்வேறு வகைகளிலும் வெகுஜன உணர்மையில்தான் யூதப் படுகொலைக்கான “விளக்கம்” காணப்படத்தக்கதாய் இருக்கிறது. எனது விரிவுரையின் தலைப்பையும், அது யூதப் படுகொலைக்கு அடிப்படை உந்து சக்திகளாக அமைந்தனவற்றைப் பற்றி கூறவிருப்பதாகவும் கேள்விப்பட்ட ஒரு மனிதர் சாதாரணமாக “நான் இதனை வெறுக்கிறேன்” என்று சொன்னார். எப்படியிருப்பினும் இந்த பிரச்சினை மிகவும் கூடுதலான சிக்கலானது. யூதப் படுகொலையை மிகவும் அதிர்ச்சிகரமானதாக, புரிந்து கொள்ள மிகவும் கடினமானதாக ஆக்குவது என்னவென்றால், ஹனா ஆரெண்டின் வார்த்தைகளில் சொல்வதானால் “சாத்தானின் அற்பவேலை”யாக அது குணாதிசயப்படுத்தப்பட்டது தான். ’பாரிய படுகொலையானது ஒரு பக்கசார்பற்ற அதிகாரத்துவ எந்திரத்தின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது’. இந்த குணாதிசயப்படுத்தல் ஒரு மொத்த சிந்தனைப் பள்ளிக்கும் அடிப்படையாக ஆகியிருக்கிறது. யூதப் படுகொலை அதிகாரத்துவவயமாகவும், தோற்றப்பாட்டில் காரணகாரியரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததை தமது தொடக்கப் புள்ளியாக கொண்ட பிராங்க்பேர்ட் பள்ளி சீடர்கள் அதன் மூலகாரணங்கள், அதாவது மனிதசிந்தனையில், பகுத்தறிவிற்கு ஒத்ததாய் அமைந்திருந்தது என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரித்தனர். இந்த போக்கின் இரு ஸ்தாபகத் தந்தைகளான மக்ஸ் ஹொக்கன்கைய்மர் மற்றும் தியோடர் அடோர்னோ 1944ம் ஆண்டில் எழுதியதன் படி: ”எங்களது வேலையில் நாங்கள் எதிர்கொண்ட முதல் இரண்டக நிலையே புலனாய்வுக்கான முதல் நிகழ்வாய் அமைந்தது: அதாவது அறிவொளிமயமாக்கத்தின் சுய-அழிவு. சமூக விடுதலை என்பது அறிவொளிமயமாக்கல் சிந்தனையில் இருந்து பிரிக்கவியலாதது என்பதில் நாங்கள் முழுக்க உறுதியுடன் இருக்கிறோம். எப்படியாயினும், இந்த சிந்தனை வழி குறித்த கருத்து அது பின்னப்பட்டிருக்கும் உண்மை வரலாற்று வடிவங்களுக்கு -சமூக ஸ்தாபனங்கள்- கொஞ்சமும் குறைச்சலில்லாமல், இன்று உலகெங்கிலும் இருக்கும் தலைகீழ் நிலைக்கான விதையை ஏற்கனவே கொண்டிருக்கிறது என்பதை அதே அளவுக்கு நாங்கள் தெளிவாய் உணர்ந்திருப்பதாய் நம்புகிறோம். [2] இந்த கண்ணோட்டத்தின் படி, யூதப் படுகொலையின் விதைகள் மானுடத்திற்கு உள்ளேயே தான் வசித்துக் கொண்டிருக்கின்றன. பிராங்பேர்ட் பள்ளியின் கருத்துக்கள் புத்திஜீவிப் பிரிவுகளின், குறிப்பாக “இடதுகள்” என்று கூறிக் கொள்பவர்களின் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஆற்றி, அவர்களின் மூலம் கலை மற்றும் கலாச்சாரத் துறைகளிலும் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளன. இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது வென்ற காத்ரின் பிகெலோ அதன் ஒரு உதாரணமாவார். தனது முதல் திரைப்படம் குறித்து பிகெலோ கூறினார்: “1960களில் எதிரி உங்களிடம் இருந்து வெளியே ஒரு போலிஸ் அதிகாரியாக, அரசாங்கமாக, அமைப்பாக இருந்ததாக நீங்கள் கருதினீர்கள், ஆனால் உண்மையில் எப்போதும் அவ்வாறிருப்பதில்லை. பாசிசம் என்பது வெகு ஆழ்மனத்தில் அமைந்திருக்கிறது. எல்லா சமயங்களிலும் நாம் அதனை மறு உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறோம்.” [3] இந்த தத்துவங்கள் ஒரு வெகு திட்டவட்டமான சமூக மற்றும் அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்கின்றன. 'மனித நாகரிகத்தின் மேம்பாட்டிற்கும் ஒரு மேம்பட்ட உலகத்திற்கும் பாடுபடுகையில் அத்தகைய நோக்கத்தின் அடித்தளத்தில் இருக்கும் சிந்தனையின் அடிப்படை வடிவங்களில், தங்களை யூதப் படுகொலையில் வெளிப்படுத்திக் கொண்ட சமூக அடக்குமுறை மற்றும் காட்டுமிராண்டித்தன வகையான நோய்க்கிருமிகள் இருக்குமானால் அவ்வாறு பாடுபடுவதன் பயன் தான் என்ன? ’இறுதிப் பகுப்பாய்வில் பாசிசத்தின் விதைகள் நம் அனைவருக்கும் உள்ளே தான் இருக்கிறது. சரியான நிலைமைகள் நிலவும் பட்சத்தில் அவை மலர்ச்சியுறும்.’ என அவை கூறுகின்றன. அரசியல்ரீதியாக யூதப் படுகொலை பற்றி முக்கியத்துவத்தில் குறைவற்ற இன்னொரு தத்துவமும் இருக்கிறது. அது கூறுவதன் படி ’முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளில் இருந்து அது எழவில்லை, மாறாக நாஜிக்களின் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தான் வெறுமனே எழுந்தது. நாஜிக்கள் பாதுகாத்த சமூக ஒழுங்கிற்கு இதில் தொடர்பில்லை. நாஜிக்கள் எப்படியோ ஜேர்மன் அரசைக் கைப்பற்றி விட்டார்கள், பின் தங்களது இனவாத கொலைவெறி முன்னோக்கினை முன்னெடுப்பதற்கு அந்த அரசை பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தை பொறுப்பாக்க முடியாது, ஏனென்றால் சமூகத்தின் மற்ற பிரிவினருடன் சேர்ந்து அதுவும் நாஜிக்களின் உத்தரவுகளுக்கு பணிந்து செல்ல வேண்டியதாய் இருந்தது.’ ஜேர்மன் ஆளும் மேல்தட்டினரை குற்றத்திலிருந்து விடுவிப்பது மட்டுமன்றி இத்தத்துவம் சமீப காலங்களில் அரசியல்ரீதியாகவும் பயனுள்ளதாய் நிரூபணமாகி உள்ளது. ஏனென்றால் ’உலகின் எந்தப் பகுதியிலும் இன்னொரு ஹிட்லர் தோன்றி விடாமல் தடுக்கும் வகையில் “உலக சமுதாயம்” (“world community”) செயல்பட வேண்டும் என்பதே இதிலிருந்து பெற்றுக் கொள்வதற்கான படிப்பினையாய்’ அது தொடர்ந்து பராமரிக்கிறது. பாராட்ட வேண்டிய நோக்கம் தானே என்று தோன்றக் கூடும். ஆயினும் “உலகசமுதாயத்தின்” பார்வைகள் பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுடன் ஒன்றுபட்ட நிலையில் தான் எப்போதுமே தோற்றமளிக்கிறது. எனவே தான் ஈராக்கில் சதாம் ஹுசேன் புதிய ஹிட்லராகிக் கொண்டிருக்கிறார் என்கிற அடிப்படையில் அவரது ஆட்சி மீது ஒரு போரும், பால்கன் பகுதிக்கான ஹிட்லராக ஸ்லோபோடான் மிலோசெவிக் தோன்றியிருக்கிறார் என்கிற அடிப்படையில் அவரது ஆட்சி மற்றும் சேர்பியா மீது முன்னெடுக்கப்பட்ட போரும் என இரண்டு போர்களை நாம் காண்கிறோம். 1990களில், ஜேர்மன் சமூக ஜனநாய கட்சி-பசுமை கட்சி அரசாங்கமானது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பழைய பால்கன் தடம்பொறிக்க இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்கும் கூட யூதப் படுகொலையை இழுத்தது. மற்ற நாடுகளை விடவும் இனப் படுகொலையின் படிப்பினைகளை ஜேர்மனி நன்கு அறியும் என்றும் எனவே இன்னொரு இன ஒழிப்பு முயற்சிப் படுகொலையைத் தடுப்பதற்கு தலையீடு ஒழுங்கமைக்கப்பட வேண்டியிருந்தது என்றும் அது கூறியது. 1990களில் யூகோஸ்லாவியாவை உடைத்தது, அதனையொட்டி வெடித்த பயங்கர மோதல்களுக்கு வித்திட்டது ஆகியவற்றில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் அதிமுக்கிய பாத்திரம் சத்தமில்லாமல் கடந்து செல்லப்பட்டது. இந்த தத்துவங்களுக்கு எதிராய், இந்த உரையானது நாஜிக்கள் அதிகாரத்துக்கு வந்தது மனிதகுலத்தின் பாரம்பரியத்திற்குள் பொதிந்த தீமையின் விளைபொருளோ, அல்லது நவீனத்துவத்தின் ஒரு விளைபொருளோ, அல்லது ஒரு பயங்கரமான விளக்கவியலாத விபத்தோ அல்ல என்பதை விளங்கப்படுத்த முயல்கிறது. ஜேர்மன் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தான் எதிர்கொண்ட அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு அளித்த பதிலிறுப்பு அது. மேலும், சோவியத் ஒன்றியத்தின் மீது 1941 ஜூன் மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட போரும், அதிலிருந்து எழுந்த “இறுதித் தீர்வும்”, இந்த நெருக்கடியை ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களில் தீர்த்துக்கொள்வதற்கு நாஜிக்கள் கொண்டிருந்த வேலைத்திட்டத்தின் விளைவே என்பதையும் விளங்கப்படுத்த முயல்கிறேன். முதலில் நாஜிக்கள் எப்படி அதிகாரத்துக்கு வந்தார்கள் என்கின்ற கேள்விக்குத் திரும்புவோம். ஜனாதிபதி ஹின்டென்பேர்கால் ஹிட்லர் சான்சலராக அமர்த்தப்பட்ட ஜனவரி 30, 1933 தினம் நாஜிக்களின் “அதிகாரத்துக்கான போராட்டம்” முற்றுப் பெற்ற நாள் அல்ல. அந்நாளில் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றவில்லை, அவர்களுக்கு அந்த அதிகாரம் ஜேர்மனிய சொத்துடைமை வர்க்க மேற்தட்டினரின் சார்பாக ஜேர்மனிய அரசின் தலைவரால் ஜேர்மனிய அரசியல் சட்ட கட்டமைப்புக்கு உட்பட்டு ஒப்படைக்கப்பட்டது. பேராசிரியர் இயன் கெர்ஷா சரியாகக் கூறியது போல, “ஹிட்லரை ஆட்சிக்குக் கொண்டு வந்ததில் அவரது சொந்த நடவடிக்கைகளே இரண்டாம்பட்ச முக்கியத்துவம் தான் பெற்றிருந்தன”. மிக உயர்ந்த அதிகாரத்தை - ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த எதேச்சாதிகார சக்திகளின் ஆதரவு கொண்ட சான்சலர் பதவி - நோக்கி கரம் நீட்டிய அவரது கொள்கையும், எந்த சமரசத்திற்கும் இடம்தர அவர் மறுத்ததும் இறுதியில் வேலை செய்தன. ஆனால் இது “ஹிட்லரது சொந்த நடவடிக்கைகளை விடவும் மற்றவர்களின் நடவடிக்கைகளின் ஒரு பின்விளைவாகவே அமைந்தது.” [4] ஜனவரி 30, 1933 அன்று எடுக்கப்பட்ட முடிவுக்கு இட்டுச் சென்ற அரசியல் நெருக்கடியின் அனைத்து பரபரப்புகளையும் திருப்பங்களையும் பின்தொடரப் போனால் நமக்கு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் கொஞ்சம் கூடப் போதாது. இந்த விடயத்தில் ஏராளமாய் எழுதப்பட்டிருக்கிறது. முக்கியமான திருப்பப் புள்ளிகளை மட்டும் நான் சுட்டிக் காட்டுகிறேன். முதலாம் உலகப் போர் முடிந்து நவம்பர் 9, 1918 அன்று கெய்சர் தூக்கியெறியப்பட்டதற்கு பின் வந்த ஐந்து ஆண்டுகளில், ஜேர்மனி தொடர்ச்சியான பல அரசியல் நெருக்கடிகளாலும் புரட்சிகரப் போராட்டங்களாலும் உலுப்பப்பட்டிருந்தது. இதன் உச்சம் தான் 1923ம் ஆண்டின் கோடையின் பிந்தைய பகுதியிலும் இளவேனிலின் ஆரம்ப காலத்தில் அபிவிருத்தியுற்ற புரட்சிகர சூழ்நிலை. ஆயினும் 1923 அக்டோபரில் திட்டமிடப்பட்ட ஒரு கிளர்ச்சியை ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) கைவிட்டதும் சூழ்நிலை அதிரடியாய் மாற்றம் கண்டது. இந்த கருக்கலைந்த புரட்சி ஜேர்மன் பொருளாதாரத்திலும் மற்றும் அதன் அரசியல் அமைப்பிலும், பிரதானமாக அமெரிக்காவில் இருந்து வந்த கடன் முதலீட்டின் பாய்வின் காரணமாக, ஒரு மறுஸ்திரப்படலுக்கான அரசியல் நிலைமைகளை உருவாக்கியது. ஆனால் 1920களின் இறுதியில், இந்த நிதியப்பாய்ச்சல் குறைந்து போகத் தொடங்கியது. 1928-29 அளவில் ஜேர்மன் பொருளாதாரம் ஒரு முக்கிய கீழ்நோக்கிய திருப்பத்துள் நுழைந்து கொண்டிருந்தது. மந்த நிலை ஆழமுற்றதால், வைய்மார் குடியரசின் கீழ் தொழிலாள வர்க்கத்திற்கு அளிக்கப்பட்டிருந்த சமூக சலுகைகள் மீது ஜேர்மன் தொழிற்துறை முதலாளித்துவ வர்க்கம் பெருகிய முறையில் எதிர்ப்புணர்ச்சி கொள்ளத் தொடங்கியது. 1930 மார்ச்சில் வேலையற்றோருக்கு வழங்கப்படும் நிதியுதவி தொடர்பாக நேர்ந்த முரண்பாட்டில் சமூக ஜனநாயகக் கட்சியினரும் பிரதான முதலாளித்துவக் கட்சிகளும் பங்கு பெற்றிருந்த கூட்டணி அரசாங்கம் சீர்குலைந்த போது இந்த நெருக்கடி முன்னணிக்கு வந்தது. 1930 செப்டம்பரில் நடந்த தேர்தல்கள் ஜேர்மன் அரசியல் வரைபடத்தில் ஒரு பரந்த மாற்றத்தைக் காட்டின. சமூக ஜனநாயகக் கட்சியின் வாக்குகள் 6 சதவீதம் சரிந்தன, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள் 40 சதவீதம் அதிகரித்திருந்தன. இது தொழிலாள வர்க்கத்தின் இடது நோக்கிய ஒரு நகர்வை சுட்டிக் காட்டியது. ஆனால் நாஜிக்களின் வாக்குகளில் மிகப்பெரும் அதிகரிப்பு இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்க முடிவாக இருந்தது. அதன் வாக்குகள் 700 சதவீதம் அதிகரித்து கட்சியை நாட்டின் ஒன்பதாவது பெரிய கட்சி என்பதில் இருந்து இரண்டாவது பெரிய கட்சி என்கிற இடத்திற்குக் கொண்டு வந்தது. ஜேர்மன் நாடாளுமன்றத்தில் வெறும் 10 இடங்களைப் பெற்றிருந்த நாஜிக்கள் 100க்கும் அதிகமான இடங்களைப் பெற்று விட்டனர். தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்த லியோன் ட்ரொட்ஸ்கி ஜேர்மனியில் இப்போது பாசிசம் அதிகாரத்திற்கு வரும் உண்மையான பெரும் அபாயம் நெருங்கியிருப்பதாய் எச்சரித்தார். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்குநிலையை முழுமையாய் மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே இந்த அபாயம் கடக்கப்பட முடியும் என்று அவர் வலியுறுத்தினார். ஸ்ராலினிச தலைமையிலான கம்யூனிச அகிலம் 1928 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய ஆறாவது காங்கிரசில் “சமூக பாசிசம்” என்னும் கொள்கையை முற்றுமுதலாய் மாற்றுவது அவசியமாய் இருந்தது. இந்த கொள்கையின் கீழ், தொழில்துறை தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகளைக் கொண்ட சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களை “சமூக பாசிஸ்டுகள்” என்று ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை கண்டனம் செய்ததோடு, நாஜி அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு தொழிலாளர் அமைப்புகளின் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதை எதிர்த்தது. “ஐக்கிய முன்னணி”க்காக போராடுவதென்றால் வைய்மார் குடியரசையோ அல்லது சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் மற்ற கட்சிகளின் தலைவர்களையோ “குறைந்த தீமை” என்பதாய்க் கூறி ஆதரிப்பதாக அர்த்தம் ஆகி விடாது, மாறாக தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று வெற்றிகளை திட்டவட்டமான நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் பாதுகாப்பதாகும். ட்ரொட்ஸ்கி விளக்கினார்: “பாசிசம் என்பது வெறுமனே பழிவாங்கல், தனித்த ஒடுக்குமுறை, போலிஸ் பயங்கரவாதத்தை மட்டும் கொண்ட ஒரு அமைப்பு அல்ல. பாசிசம் என்பது முதலாளித்துவ சமுதாயத்திற்குள் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் அனைத்து கூறுகளையும் வேரோடு பிடுங்குவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அரச அமைப்பாகும். பாசிசத்தின் பணி கம்யூனிசத்தின் முன்னணிப் படையை அழிப்பது மட்டுமல்ல, அந்த ஒட்டுமொத்த வர்க்கத்தையும் நிர்ப்பந்தமாய் பிரித்து வைத்திருப்பதும் தான். இந்த அர்த்தத்தில், தொழிலாளர்களின் மிகவும் புரட்சிகரமான பிரிவினரை உடலியல்ரீதியாக அழிப்பது மட்டும் அதற்கு போதுமானதாய் இருப்பதில்லை. அனைத்து சுயாதீனமான மற்றும் தன்னியலான அமைப்புகளையும் நொறுக்குவதும், பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து பாதுகாப்பு அரண்களையும் இடித்துத் தள்ளுவதும், ஒரு நூற்றாண்டின் முக்கால் பகுதி காலத்தில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களால் சாதிக்கப்பட்டிருக்கக் கூடிய எந்த ஒன்றையும் வேரோடு பிடுங்கியெறிவதும் பாசிசத்திற்கு அவசியமாய் இருக்கிறது. இறுதிப் பகுப்பாய்வில், கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னை இந்த வெற்றிகளின் மேல் தான் தன்னை அடித்தளமாக கொள்கிறது.”[5] 1930 செப்டம்பர் றைஸ்ராக் தேர்தல்களைத் தொடர்ந்து, பாராளுமன்ற ஆட்சி ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்து விட்டது. கத்தோலிக்க அடிப்படையில் அமைந்த மத்திய கட்சியின் (Centre Party) ஒரு உறுப்பினரான சான்சலர் புரூனிங்கின் அரசாங்கம் ஜனாதிபதி ஹிண்டென்பேர்க் ஆதரவுடனான தொடர்ச்சியான பல்வேறு தீர்ப்புகளின் வழியாய் ஆட்சி செய்தது. ஒரு புதிய தேர்தல் நாஜிக்களின் நிலையை மேலும் வலுப்படுத்தி விடும் என்கின்ற அடிப்படையில் சமூக ஜனநாயகக் கட்சியின் ”சகிப்பின்” மூலமாக புரூனிங்கின் அரசாங்கம் அதிகாரத்தில் தொடர்ந்தது. எப்படியிருப்பினும் நாஜிக்கள் இத்தகையதொரு தேர்தல் வலிமையைப் பெற முடிந்தது என்றால், அதுவும் கூட தொழிலாள வர்க்கத்தை சட்டபூர்வம் மற்றும் நாடாளுமன்றவாதத்தின் எல்லைகளுக்குள்ளாக அடக்கி வைப்பதற்கும் எந்த புரட்சிகரப் போராட்டத்தின் அபிவிருத்தியையும் தடுப்பதற்கும் சமூக ஜனநாயகக் கட்சி கொண்டிருந்த உறுதியின் விளைபொருளே. சூழ்நிலை இயல்பாகவே ஸ்திரமற்றதாய் இருந்தது. புரூனிங்கின் ஆட்சி சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவில் தங்கியிருக்க, அவை தொழிலாள வர்க்கத்தின் கோபமுற்ற மற்றும் அரைமனதான ஆதரவைச் சார்ந்திருந்தன. ஆனால், ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல், இந்த முறைமையானது ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரிவுகளுக்கு பெருகிய முறையில் திருப்தியற்றதாய் ஆனது. இவை வெறும் அரைகுறை நடவடிக்கைகளாக இருந்தன. தொழிலாள வர்க்கம், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அடக்கப்பட்டிருந்தது என்றாலும், தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து இருந்து, அரசியல் சூழலில் ஒரு சக்திவாய்ந்த அச்சுறுத்தலாகும் சாத்தியத்துடன் இருந்தன என்பது தான் அவர்களுக்கு பிரச்சினையாய் இருந்தது. அவர்களுக்கு இந்த அமைப்புகளை அழித்து அந்த அச்சுறுத்தல் அகற்றப்பட வேண்டியிருந்தது. பெருமந்தநிலையின் உச்சமுற்ற நிலைமையான 1932 முழுவதிலும் இந்த நெருக்கடி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. உழைக்கும் மக்களில் 30 சதவீதம் பேர் வரை வேலைவாய்ப்பற்று இருந்தனர். தொடர்ச்சியாய் பல வங்கிகள் பொறிவு கண்டன. புரூனிங்கின் அரசாங்கம் மே மாதத்தில் வீழ்ந்தது. “கட்சிகளுக்கு மேலான” ஒரு அரசாங்கத்தை உருவாக்க பிரஷ்ய கனவானான ஃபிரன்ஸ் வொன் பாப்பனை நோக்கி ஹின்டன்பேர்க் திரும்பினார். 1932 ஜூலை இறுதியில் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. நாஜிக்கள் 37.4 சதவீதம் வாக்குகள் பெற்றனர்,சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி இரு கட்சிகளும் சேர்ந்து 36 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தன. ஆனால், நாஜிக்கள் றைஸ்ராக்கில் (பாராளுமன்றத்தில்) தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த போதிலும், ஹிட்லரை முழு அதிகாரங்களுடனான சான்சலராக அமர்த்துவதான கோரிக்கையை ஹின்டன்பேர்க் நிராகரித்தார். அதற்குப் பதிலாய் மீண்டும் வான் பாப்பனை அவர் நியமித்தார். புதிய றைஸ்ராக் செப்டம்பர் 21 அன்று கூடியபோது, 513 க்கு 32 என்கிற வாக்கு வித்தியாசத்தில் பாப்பென் ஆட்சி வாக்கு கண்டனத்தை பெற்றது. றைஸ்ராக் மீண்டும் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நவம்பர் 6 அன்று நடத்தப்பட்டன. இந்த முறை நாஜிக்களின் வாக்குகள் 2 மில்லியன் சரிந்தது, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குகள் அதிகரித்தன. அடுத்த சில வாரங்களில் தொடர்ச்சியாய் பல்வேறு காய் நகர்த்தல்கள் நடந்தன. அதன் உச்சமாய் ஜனவரி 30, 1933 அன்று ஹிட்லர் அதிகாரத்துக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வு அமைந்தது. முதலாளித்துவத்தின் மிகச் சக்திவாய்ந்த பிரிவுகள் வைய்மார் ஜனநாயகத்தை அகற்றுவதற்கான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கான தேவையில் ஒன்றுபட்டு இருந்தன. ஆயினும், சமூகத்தின் கீழ் மட்டங்களில் இருந்து வந்த புதியவர்களாகவும் மற்றும் பாதி குற்றவாளிகள் என்கிற வகையிலான ஒரு கும்பலாகவும் தோன்றும் நாஜிக்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து முதலாளித்துவம் மற்றும் நிலவுடைமை மேற்குடியினரிடம் தோன்றிய கவலைகள் காரணமாக ஹின்டன்பேர்க் ஹிட்லரை அதிகாரத்தில் அமர்த்த மறுத்தார். ஆனால், ஒரு நாஜி ஆட்சியில் சாத்தியமாகக் கூடிய அசௌகரியங்களைக் காட்டிலும் அரசியல் நெருக்கடி தொடர அனுமதிப்பதால் நேரும் அபாயங்களின் அளவு அதிகரித்து விட்டது பெருகிய முறையில் வெளிப்படையானது. ஜேர்மன் முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை, 1917-1923 சம்பவங்கள் இன்னும் பசுமையாய் நினைவில் நின்றதால், சமூக ஜனநாயகக் கட்சியின் மண்டியிடல் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் திவால் நிலை எல்லாம் இருந்தபோதிலும் கூட, சமூகப் புரட்சி என்பது மாறாது தொடரும் அச்சுறுத்தலாய் இருந்தது. நூதனமானவகையில், நவம்பர் தேர்தல்களில் நாஜிக்களின் வாக்குகளில் கணிசமான சரிவு நேர்ந்ததும் கட்சிக்குள் நெருக்கடிக்கான அறிகுறிகள் பெருகியதும் ஹிட்லரை அதிகாரத்தில் அமர்த்தும் முடிவிற்கு ஊக்கமளித்த காரணிகளில் ஒன்றாய் இருந்தது. முந்தைய இரண்டு ஆண்டுகளில் நாஜிக்களின் பின்னால் அணிதிரண்ட குட்டிமுதலாளித்துவ மற்றும் விவசாய வெகுஜனங்கள் இப்போது விலகிச் செல்ல ஆரம்பித்து விட்டனர் என்றால், அவர்கள் எங்கே செல்வார்கள்? சிலவேளை ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி செல்லலாம். தவிர, பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளும் தோன்றின. அது தொழிலாளர் போராட்டங்களுக்கு மீண்டும் புத்துயுர்ப்பு கொடுக்கும் அச்சத்தைத் தூண்டியது. 1932 நவம்பரில் நடந்த பேர்லின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் இதற்கான ஒரு எச்சரிக்கையாய் அமைந்தது. இந்த நிலைமைகளின் கீழ் தான், அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து ஜேர்மன் மூலதனத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கும் அவசியமான வகை ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான ஒரு வாக்களிப்புடன் நாஜிக்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான -வான் பாப்பென் வார்த்தைகளில் கூறுவதானால் அவர்களை “வாடகைக்கு அமர்த்துவதற்கான” - முடிவு எடுக்கப்பட்டது. இந்த அரசியல் நெருக்கடி முழுவதிலும், ஸ்ராலினிசமயமான ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாஸ்கோவில் இருந்த அகிலம் இரண்டும் ஐக்கிய முன்னணி என்கிற தந்திரோபாயத்திற்கு -அதாவது, இன்னும் சமூக ஜனநாயகக் கட்சியின் அமைப்புகளுக்குள் சிக்கியிருந்த பரந்துபட்ட தொழிலாளர்களை வென்றெடுத்து அவர்களை ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கிக் கொண்டு வருவதற்கான போராட்டத்தில் இறங்குவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வலிமையைத் திரட்டி அதன்மூலம் நாஜி கட்சியின் வெகுஜன அடித்தளத்தை உடைப்பதற்கு - தொடர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அரசியல் மூலோபாயம் அதிகாரத்துவ இறுதிக்கெடுக்களும், ”சமூக பாசிசம்”, “கீழிருந்து ஐக்கிய முன்னணியை உருவாக்கு”, “ஹிட்லருக்குப் பின்னர் நாங்கள்” போன்ற வெற்று முழக்கங்களாலும் மற்றும் பிரஷ்யாவின் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான முயற்சியில் செய்யப்பட்ட நாஜி-தலைமையிலான பொதுஜனவாக்களிப்பிற்கான ஆதரவும் பிரதியீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக, அதுவரை கண்டதில் மிகவும் சக்திவாய்ந்த, அரசியல்ரீதியாக அபிவிருத்தியுற்றிருந்த சோசலிச தொழிலாளர் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. இது வரலாற்றில் தொழிலாள வர்க்கத்திற்கு நேர்ந்த மிகப் பெரும் தோல்வியாகும். ஜேர்மன் பெரு வணிகங்களுடன் நாஜிக் கட்சிக்கு இருந்த உறவு குறித்த கேள்வி அக்கட்சியின் பாத்திரம் குறித்த கேள்விகளில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாய் இருக்கிறது. அமெரிக்க வரலாற்று ஆசிரியரான ஹென்றி ஆஸ்பி டர்னர் எழுதிய ஜேர்மன் பெரு வணிகங்களும் ஹிட்லரின் எழுச்சியும் (German Big Business and the Rise of Hitler) என்கிற புத்தகத்தில், நாஜிக் கட்சியின் எழுச்சி மற்றும் வளர்ச்சியில் பெரு வணிகங்களிடம் இருந்தான நிதி தீர்மானமான பாத்திரத்தை கொண்டிருக்கவில்லை என்பதை விளக்க கணிசமாய் விவாதிக்கிறார். அப்படியே இருப்பினும் கூட, ஜேர்மன் பெரு வணிகங்கள் வைய்மார் குடியரசுக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஆழமான விரோதமாய் இருந்தன என்பதையும், தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கான ஒரு எதேச்சாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதற்காக அவை உழைத்தன என்பதையும் டர்னரின் படைப்பே விளங்கப்படுத்துகிறது. இத்தகையதொரு ஆட்சியை ஸ்தாபிக்க நாஜிக்களை ஆட்சியில் அமர்த்துவது தான் கையிலிருக்கும் ஒரே வழி என்றுணர்ந்து, 'விளைவு என்னவாயிருந்தாலும் வைய்மார் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்து மார்க்சிசத்தை இல்லாதொழிக்க'ப் போவதாக சூளுரைத்த ஹிட்லரின் உறுதிக்கு ஆதரவாக மார்ச் 5, 1933 பொதுத்தேர்தலில் நாஜிக் கட்சிக்கு பெரு வணிகங்கள் ஆதரவை திரட்டியதுடன் மற்றும் பெரும் அளவிலான பணத்தை வழங்கின. 1960களில் நான் மாணவனாக இருந்த காலத்தில், பாசிச ஆட்சிகள் அதிகாரத்திற்கு வருவதென்பது, ஜேர்மனியில் மிகவும் பலமாக இருந்தது போன்ற வெகுஜன சோசலிச தொழிலாளர் இயக்கங்களால் எதிர்கொள்ளும் அபாயங்களுக்கு முதலாளித்துவ வர்க்கம் அளிக்கும் நேரடியான பதிலிறுப்பு என்பதாகவே பரவலாய் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. கடந்த சுமார் 25 வருட காலங்களில் இந்த புரிதல் தொடர்ந்து தாக்குதலைச் சந்தித்து வந்திருக்கின்றது. 2005ம் ஆண்டின் இறுதிவாக்கில் வலதுசாரி வீக்லி ஸ்டாண்டர்டு இதழில் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரான மைக்கல் பர்லே எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “20 வருடங்களுக்கு முன்னால் நவீன ஜேர்மனியின் வரலாற்றை நான் கற்றுக் கொடுக்கத் தொடங்கிய சமயத்தில், பாசிசத்திற்கான பழியை பெரு வணிகங்களின் இந்த அல்லது அந்த கூறின் மீது இருத்தி வைக்க முயலும் மார்க்சிசவாத முயற்சிகளுக்கு கணிசமான கவனம் அளிக்க வேண்டியது கட்டாயமானதாய் இருந்தது. இடதுசாரி சார்பு கொண்ட அறிஞர்கள் தான் இலக்கியங்களின் பெரும்பகுதியை எழுதியவர்களாய் இருந்தார்கள். பாசிசம் குறித்த வகுப்புகள் தீவிரவாத பிரிவுகளில் இருந்து நிறைய மாணவர்களை ஈர்க்கத் தலைப்பட்டன. அதன்பின் சம்பவங்கள் மாறியிருக்கின்றன. இப்போதெல்லாம் நாசிசத்தை ஒரு ‘இனவாத அரசின்’ வகையாக, அல்லது இன்னும் ஒரு பதிலீட்டு மதமாக விவாதிப்பது என்பது மிகவும் சாதாரணமாகி விட்டது.[6] 2001ம் ஆண்டு வெளியான மூன்றாவது ரைய்க்: ஒரு புதிய வரலாறு (The Third Reich: A New History) என்னும் தனது புத்தகத்தில், ‘முதலாளித்துவத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான உறவு குறித்த கற்பனாவாத சிந்தனைப் பள்ளி’ ரேர்னரால் (Turner) சிறந்த வகையில் நிர்மூலமாக்கப்பட்டதாக பர்லே (Burleigh) தெரிவித்தார். [7] பர்லேயின் கருத்துப் படி, 'நாசிசம் என்பது ஒரு வகையான ‘அரசியல் மதம்', அது அதிகாரத்துக்கு உயர்ந்ததையும் அது இழைத்த குற்றங்களையும் முதலாளித்துவத்துடன் தொடர்புபடுத்த முடியாது' என்றார். ஆனால் நாஜி இயக்கத்திற்கும் பெரு வணிகங்களுக்கும் இடையிலான உறவு குறித்த பிரச்சினையானது வெறுமனே நிதியாதாரத்தின் அளவைக் கொண்டு பேசி அலுத்து விட்டது என்று கூறுவதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. நாஜிக் கட்சிக்குப் பின்னால் பெரு வணிகத் தலைவர்களின் ஒரு இரகசியக் கூட்டம் ஒன்று ஆட்டுவித்துக் கொண்டிருந்ததாக மார்க்சிச இயக்கம் ஒருபோதும் கூறி வந்ததில்லை. ஆயினும் அதற்காக நாஜி இயக்கத்தின் கருத்தாக்கங்களும் கருத்தியலும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆழமான தேவைகளுக்கும் நலன்களுக்கும் சம்பந்தமில்லாததாய் இருந்தது என அர்த்தமாகி விடாது. நாஜி இயக்கத்தின் கருத்தியலுக்கும், அது ஜேர்மன் ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருந்த உறவுக்கும் நாம் திரும்புகையில், யூத-எதிர்ப்பு குறித்த ஹிட்லரின் சொந்த விளக்கத்தில் இருந்தே இதனைத் தொடங்குவோம். தனது பிரச்சாரங்களில் மத பிம்பங்களையும் குறிப்புகளையும் சில சமயங்களில் அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்றாலும் யூதர்கள் மீதான ஹிட்லரின் குரோதம் கிருத்துவ திருச்சபைகளின் போதனைகளில் வேரூன்றியிருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட வெகுஜன சோசலிச இயக்கங்களின் வளர்ச்சியை எதிர்கொள்வதற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட இனவாத தத்துவங்களில் அது வேரூன்றியிருந்தது. பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி அதனை தேசத்தின் தேவைகளுக்கு அடிபணியச் செய்வதற்கு குட்டிமுதலாளித்துவ மற்றும் விவசாய வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கான ஒரு கருவியாகத் தான் யூத எதிர்ப்பு பார்க்கப்பட்டது. அந்த வேலைத்திட்டம் நிச்சயமாக ஜேர்மன் பெரு வணிகங்கள் மற்றும் பெருநிலங்களை உடைமையாகக் கொண்டிருந்த உயர்தட்டினரின் நலன்களில் அமைந்தது தான். 1923 அக்டோபரில் மூனிச் சதி பற்றி சிறையில் இருந்த சமயத்தில் (மிக வசதியுடன் தான் அவர் சிறையில் வைக்கப்பட்டார் என்பதைக் கவனிக்க வேண்டும்) தான் எழுதிய எனது போராட்டம் (Mein Kampf) புத்தகத்தில், தனது யூதர் மீதான வஞ்சம் எவ்வாறு மார்க்சிசம் மீதான வஞ்சத்துடன் பிணைப்பு கொண்டிருந்தது என்பதை ஹிட்லர் விளக்கினார். அவர் எழுதினார்: போருக்கு முந்தைய வியன்னாவில் யூதக்கேள்வி பற்றிய விடயங்கள் விளங்கிக்கொள்ள போராடிக் கொண்டிருந்ததன் பின்னர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஒரு யூதர் இருப்பதை அறிந்தபோது எனது விழிகளின் முன்நின்ற திரைகள் அகன்று விட்டன. மார்க்சிசத்தின் போதனைகளில் இன்னும் ஆழமாய் நான் சென்றபோது, விதியே தனது பதிலை எனக்கு தந்தது. மார்க்சிசம் என்னும் யூத தத்துவம் இயற்கையின் உயர்குடிக் கோட்பாட்டை நிராகரித்து அதிகாரத்திற்கான சாசுவதமான முன்னுரிமை மற்றும் பலத்தை வெகுஜனங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சொந்த எடையின் மூலம் இடம்பெயர்க்கின்றது இவ்வாறாக, இது தனிமனித சிறப்பியல்பை, தேசியம் மற்றும் இனத்தின் முக்கியத்துவத்திற்கு சவால் விடுகிறது, அதன்மூலம் மானுடத்தில் இருந்து அதன் இருப்பு மற்றும் அதன் கலாச்சாரத்தின் முன்நிபந்தனைகளை திரும்பப் பெறுகிறது. [8] ஹிட்லரின் பற்றிய வாழ்க்கைச் சரிதத்தில் பத்திரிகையாளர் கோன்ராட் ஹேய்டன் குறிப்பிடுவதைப் போல, யூதர்களால் வழிநடத்தப்பட்டதால் ஹிட்லர் தொழிலாளர் இயக்கத்தின் மீது வெறுப்புணர்ச்சி கொள்ளவில்லை, மாறாக தொழிலாளர் இயக்கத்திற்கு தலைமை நடத்தியதால் தான் யூதர்கள் மீது அவருக்கு வெறுப்பு தோன்றியது. காரல் மார்க்ஸ் என்னும் சோசலிஸ்டு தான் ஹிட்லரின் யூதஎதிர்ப்பை கிளறி விட்டவர். [9] ”இனம்சார்ந்த அரசு” (Racial state) என்னும் நாஜி தத்துவம் அடோல்ஃப் ஹிட்லரால் உருவாக்கப்பட்டது அல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலும் வலதுசாரி கல்வியியல் மற்றும் அரசியல் வட்டங்களில் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட இனவாத தத்துவங்களில் இருந்து அது வரையப்பட்டது. யூதப் படுகொலைக்கு தத்துவார்த்த அடிப்படையை வழங்கத் தலைப்பட்ட ’இனத் தாழ்வு’, ’இனரீதியான சுத்திகரிப்பு அவசியம்’, மற்றும் ’“இழிவான” மக்களை அகற்றுவதற்கு அல்லது நீக்குவதற்கான போராட்டம்’ ஆகிய தத்துவங்கள் எல்லாம் ஜேர்மனி அல்லது ஐரோப்பாவின் எல்லைக்குள்ளாக கட்டுப்பட்ட விடயங்கள் அன்று. அமெரிக்காவில் அதன் ஐவி லீக் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட தலைமைக் கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் அவை விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த புள்ளியை விளங்கப்படுத்திக் காட்டுவதற்கு, 1922ம் ஆண்டில் வெளியான மிகவும் மதிப்பு பெற்ற எழுத்தாளரான லோத்ரோப் ஸ்ரொட்டார்ட் எழுதிய நாகரிகத்திற்கு எதிரான கலகம்: கீழான மனிதனின் எழுச்சி (The Revolt Against Civilization: The Rise of the Under Man) என்ற தலைப்பிலான புத்தகத்தில் இருந்து சில பத்திகளை நான் மேற்கோளிடுகிறேன். ஸ்ரொட்டார்ட் ஹார்வர்டில் முனைவர் பட்டம் பெற்றவர். வாரன் ஹார்டிங் மற்றும் ஹெர்பேர்ட் ஹூவர் ஆகிய இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகளால் பாராட்டப் பெற்றவர். தி கிரேட் கேட்ஸ்பி நாவலில் இப்புத்தகம் குறிப்பிடப்பட்டது என்பது பரவலாய் அறியப்பட்டதாய் இருந்தது. இந்த கீழான மனிதன் (Under-Man) என்கிற பதப் பிரயோகம் முக்கியமானது. நாஜி கோட்பாட்டுடன் மிக நெருக்கமாகத் தொடர்புபட்ட வார்த்தைகளில் ஒன்று இந்த Untermensch என்கிற ஜேர்மன் வார்த்தை. இது பெரும்பாலும் “மனிதத்திற்கு குறைந்தது” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்பட்டாலும் “கீழான மனிதன்” என்பது தான் அதன் வார்த்தைரீதியான பொருள். தனது புத்தகங்களில் - இவர் எழுதிய இன்னொரு புத்தகத் தலைப்பு வெள்ளை உலக மேலாதிக்கத்திற்கு எதிராக எழுச்சியுறும் நிற அலை (The Rising Tide of Color Against White World-Supremacy) - ஸ்ரொட்டார்ட் அந்த சமயத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டு வந்த பிரச்சினைகளை எடுத்துக் கொண்டார். கீழான, நிறமுடைய இனங்களால் முன்நின்ற அச்சுறுத்தல், இனரீதியான மக்களை மேம்படுத்துவதில் தெரிவுசெய்து வளர்ப்பதின் பாத்திரம் ஆகியவை இதில் அடங்கும். ஒரு கணிசமான காலத்திற்கு இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு வந்தன என்றாலும் 1920களின் உலகத்தில் ஒரு புதிய காரணி எழுந்திருந்தது: '1917ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியும் போல்ஷிவிசத்தின் எழுச்சியும் மனித நாகரிகத்திற்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாகத் தோன்றியிருந்தது' என எழுதியிருந்தார். ஸ்ரொட்டார்ட் சமத்துவத்திற்கு வெளிப்படையானதொரு எதிரி. சமத்துவமின்மை என்பது இயற்கையிலேயே அடிப்படையாய் அமைந்திருப்பதாய் அவர் எழுதினார். மனிதநாகரீகம் என்பது குறிப்பிட்ட இனங்களுக்கே சாத்தியமானது. அது மட்டுமல்ல, சமூகத்திற்குள் நாகரிகத்தை எட்டும் திறனற்ற இனங்கள் இருப்பதென்பது அந்த சமூகத்திற்கே ஒரு அச்சுறுத்தலாய் ஆகிவிடுகிறது என்றார். இந்த கருத்தாக்கங்களுடன் தொடர்புபட்டது தான் தெரிவு வளர்ப்பு அறிவியல் (eugenics) என்று அழைக்கப்படுவது அல்லது “இன மேம்படுத்தல்”. இது சமூக அமைப்புமுறைக்கே நீண்டகால தாக்கங்களை கொடுக்கும். ஸ்ரொட்டார்ட் கருத்துப்படி: “மேலானவர்களின் பெருக்கம் என்பது இனத்தைக் கட்டும் ஒரு நிகழ்முறை; கீழானவர்களை நீக்குவது என்பது இனத்தை சுத்தப்படுத்தும் ஒரு நிகழ்முறை... இனத்தை சுத்தப்படுத்துவது என்பது தான் இனத்தை மேம்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைகிறது என்பது வெளிப்படை.” இன மேம்படுத்தல் என்பது சீரழிவுக் கருத்தாக்கத்துடன் பிணைந்தது. ”சீரழிவு (Degeneracy) என்பது....ஒரு புற்றுநோய்க் கரும்புள்ளி, தொடர்ந்து பரவக் கூடியது, களங்கப்படுத்தக் கூடியது, பின் பெரும் பாதிப்புகளை உருவாக்கி, இன மதிப்புகளை அழித்து, சமூக சுமைகளை அதிகரிக்கும். உண்மையில், சீரழிவு என்பது சமூகத்தை முடக்குவதோடு அதன் இருப்பையே அச்சுறுத்துகிறது. நமது சமூக தீமைகள் எல்லாம் பெரும்பாலும் சீரழிவின் விளைபொருள் தான் என்பதை நாம் காண்கிறோம், எனவே அத்தீமைகளை தீர்ப்பதற்கு சீரழிவை அழிப்பது என்பது வேறெந்த நடவடிக்கையையும் விட அதிக பலன் தரும். ஆனால் சீரழிந்தோரை நீக்குவதன் மூலம் தான் சீரழிவை நீக்க முடியும். இது ஒரு இன விடயமே அன்றி சமூக விடயம் அல்ல.... பொருந்தாத தனிநபர்களும் நியாயமற்ற சமூக நிலைமைகளும் அழிக்கப்பட வேண்டும்.” [10] 'கீழான மனிதன் ஏன் நாகரிகத்தின் எதிரியாக இருக்கிறான் என்றால் இயற்கையே அவனால் அதனை எட்ட முடியாது என முடிவு கட்டியிருந்தது'. ஆனால் இப்போது 'முற்போக்கிற்கும் நாகரிகத்திற்கும் எதிரியான அந்த கீழான மனிதன்' ஒரு வெற்றிவீரனைப் பெற்றிருந்தான். ”தொழிற்சங்க வாதம் மற்றும் அதன் வெளிவளர்ச்சியான போல்ஷிவிசத்தின் முக்கியத்துவத்தை மிகைமதிப்பீடு செய்து விட்டதாக கூற முடியாது. உலகம் இதுவரை கண்டிருப்பதில் மிக பயங்கரமான சமூக நிகழ்வு இதுவென்றால் அது மிகையில்லை. தொழிற்சங்க வாதத்தில் வரலாற்றில் முதன்முறையாக கீழான மனிதனின் ஒரு முழுவீச்சு மெய்யியலை நாம் காண்கிறோம் - நாகரிகத்திற்கு எதிரான பரந்ததொரு கலகத்தின் முகவுரை தான் அது. இதைத் தான் ரஷ்ய போல்ஷிவிசம் உண்மையில் தொடக்கியிருக்கிறது..... கீழான மனிதனின் இந்த தத்துவம் தான் இன்று போல்ஷிவிசம் என்று அழைக்கப்படுகிறது.” ’போல்ஷிவிசம் நாகரிகம் மற்றும் இனத்தின் பரம வைரியானதோடு “நமது இருப்பின் ஒவ்வொரு இழையையும் சீரழிக்கவும்” அத்துடன் இறுதியாக “காட்டுமிராண்டித்தனமான, இனரீதியாக வறுமைப்பட்ட உலகத்தை மிகவும் இழிவான நம்பிக்கையற்ற கலப்பினக் கூட்டங்களுக்குள் தூக்கிவீசும்” அச்சுறுத்தலை அது கொண்டிருக்கிறது. எனவே போல்ஷிவிசத்தை “எத்தனை விலை கொடுத்தேனும்” நசுக்கியாக வேண்டும்’. அத்துடன் வின்ஸ்டன் சேர்ச்சில் உட்பட்ட பலரைப் போல, ஸ்ரொட்டார்டும் “மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் காலத்தில் இருந்து இன்று சோவியத் ரஷ்யாவில் பெருமளவு யூத போல்ஷிவிச ஆட்சியாக இருப்பது வரை”[12] அனைத்து சமூக புரட்சிகர இயக்கங்களிலும் யூதர்கள் ஆற்றிய முக்கிய பாத்திரத்தைக் குறிப்பிட்டார். இங்கு நாஜிக்களின் இனவாத உயிரியல் மற்றும் கொலைகாரத்தனமான தாக்கங்களின் அனைத்து முக்கியக் கூறுகளும் இதில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஜேர்மன் சூழ்நிலையை மட்டும் குறிப்பிடுகின்ற நாஜி வேலைத்திட்டத்தின் மற்ற முக்கிய பாகங்கள் வலதுசாரி வட்டங்களில் முந்தைய மூன்று தசாப்தங்களில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது. 1901-ல், நாஜி கருத்தியலில் ஒரு மைய இடத்தைப் பிடிக்கவிருந்த உயிர்வாழ்விற்கான இடம் (Lebensraum) என்கிற வார்த்தை எழுத்தாளர் பிரெடரிக் ரட்சலால் உருவாக்கப்பட்டது. ஒரு மக்கள் கூட்டத்தின் அபிவிருத்தி அதன் விரிவாக்கத் திறனால் பக்குவப்படுத்தப்படுகிறது என்றும், ஆரோக்கியமான ஒரு மக்கள் கூட்டம் வளர்வதற்கும் அபிவிருத்தியடைவதற்கும் இடம் தேவை என்றும் அவர் தொடர்ந்து கூறினார். இன ஆரோக்கிய நலன்களின் அடிப்படையில் பார்த்தால், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற மற்றய காலனித்துவ சக்திகளைப் போன்று ஜேர்மனியும் காலனிகள் கொண்டிருப்பது அவசியமானது என்பது ரட்செலின் கருத்து. ரட்செல் காலனிகளுக்கான அவசியம் குறித்து எழுதிக் கொண்டிருந்த சமயத்தில், மற்ற நாடுகள் தமது விரிவாக்கத்திற்கான இடமான ஐரோப்பிய கண்டத்தை நோக்கித் திரும்பின. காலனிகளை கையகப்படுத்துவதில் ஜேர்மனி தொடர்ந்து தனது போட்டி நாடுகளுடன் மோதியது பிரச்சினையை உருவாக்கியது. ஆளும் வட்டாரத்தின் இனவாதக் கண்ணோட்டம் நிரம்பியிருந்த இராணுவத்தின் பிரிவுகள் கடல்கடந்த காலனிப் பகுதிகளைக் காட்டிலும் தாயகத்திற்கு நெருக்கமாய் இருந்த பகுதிகளை நோக்கித் திரும்பின. ’போர் என்பது உயிரியல் அவசியம் ஏனென்றால் போர் இல்லையென்றால் கீழான இழிந்த இனங்கள் ஆரோக்கியமான முளை விட்டுக் கொண்டிருக்கும் கூறுகளை எளிதாக நிறுத்தி விட முடியும் என்பதோடு உலகளாவிய சீரழிவு இதனைப் பின்தொடரும்' என்று 1912ல் வெளியான ஒரு புத்தகத்தில் ஜெனரல் பிரெடரிக் பேர்ன்ஹார்டி வலியுறுத்தினார்.[13] 1960களில் வரலாற்றாசிரியர் ஃபிரிட்ஸ் பிஷ்சர் கண்டறிந்ததைப் போல - ஜேர்மன் கல்வியியல் வரலாற்று ஸ்தாபகத்தில் இருந்தான கடுமையான எதிர்ப்புக்கு இடையில்- ஜேர்மன் இராணுவம் 1914 செப்டம்பரில் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதி உள்ளிட்ட பிராந்தியங்களின் பெரும் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கான ஒரு திட்டத்தை வரைந்திருந்தது. “பிஷ்சர் ஆய்வறிக்கை” கடும் சர்ச்சையைக் கிளப்பியது, ஏனென்றால் முதலாம் உலகப் போரின் ஏகாதிபத்திய ஜேர்மனிக்கும் மற்றும் நாஜி ஆட்சிக்கும் அயலுறவுக் கொள்கை நோக்கங்களுக்கு இடையில் இருந்த அத்தியாவசியமான தொடர்ச்சியை அது ஸ்தாபித்துக் காட்டியது. Mein Kampf (எனது போராட்டம்) புத்தகத்தில் ஹிட்லர், இனம், யூத-எதிர்ப்பு, உயிர்வாழ்விற்கான இடம் மற்றும் போல்ஷிவிசத்திற்கு எதிரான போராட்டம் அனைத்தையும் ஒன்றாக இணைத்தார். ’ரஷ்ய போல்ஷிவிசம் என்பது யூதர்கள் இருபதாம் நூற்றாண்டில் உலகளாவ ஆளுவதற்குச் செய்யும் முயற்சி எனக் கருதப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார். ’யூத உலகளாவிய-போல்ஷிவியமயமாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எனவே சோவியத் ரஷ்யாவை நோக்கிய ஒரு தெளிவான மனோபாவம்’ அவசியமாய் ஆனது. இதுவும் கூட ஜேர்மன் குடியரசின் (ரைஹ்கின்) விரிவாக்கத்துடன் -உயிர்வாழ்விற்கான இடத்திற்கான உந்துதலுடன்- பிணைந்துபட்டதாக இருந்தது. தேசமானது கடல்கடந்த பிரதேசங்களின் காலனித்துவமயமாக்கத்தின் மூலமாக அல்லாமல் “தாயகப் பகுதியை மேம்படுத்துகின்ற” பிராந்தியத்தை கையகப்படுத்துவதன் மூலமாக வலிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த கருப்பொருள்களை எல்லாம் தனது “கிழக்கத்திய கொள்கை” மீதான விவாதத்தில் ஒன்றாகக் கொணரும் ஹிட்லர் எழுதினார்: “தெற்கிலும் மேற்கிலுமான நமது முடிவற்ற ஜேர்மனிய நகர்வை நாம் நிறுத்துவோம், நமது பார்வையை கிழக்கிலுள்ள நிலப்பகுதிகளின் பால் பாய்ச்சுவோம்... ஐரோப்பாவில் இன்று நாம் மண் குறித்து பேசுவதாய் இருந்தால், ரஷ்யாவையும் அந்நாட்டிற்கு அடிபணிந்து செயல்படும் எல்லை அரசுகளையும் தான் நாம் பிரதானமாக மனதில் கொள்ள முடியும்.” ’சோவியத் ரஷ்யா யூதர்களால் தலைமைதாங்கப்பட்டதால், ஜேர்மனிக்கு அதனை வெல்வதற்கான உரிமையுள்ளது’: “பல நூற்றாண்டுகளாக ரஷ்யா தனது உயர் தலைமை அடுக்கில் இருக்கும் இந்த ஜேர்மனிய உட்கருவில் இருந்து தான் ஊட்டத்தைப் பெற்றிருந்தது. இன்று அக்கரு ஏறக்குறைய முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது, வெளியேற்றப்பட்டு விட்டது எனக் கருதலாம். யூதர்களால் அது இடம்பெயர்க்கப்பட்டுள்ளது. ரஷ்யரைப் பொறுத்தவரை யூதர்களின் கருமையத்தை உலுக்குவதென்பது எவ்வாறு சாத்தியமில்லாததோ, அதே அளவுக்கு யூதருக்கும் இந்த வலிமையான சாம்ராஜ்யத்தை என்றென்றைக்குமாய் பராமரிப்பதென்பது சாத்தியமில்லாதது. யூதனே ஒரு கட்டமைப்பின் கூறு அல்ல, மாறாக சிதைவுக்கான கிருமி தான். கிழக்கில் பாரசீக சாம்ராஜ்யம் உருக்குலைவுக்கு முதிர்ச்சியுற்றிருக்கிறது. அத்துடன் ரஷ்யாவில் யூத ஆட்சியின் முடிவு ஒரு அரசாக ரஷ்யாவின் முடிவாகவும் இருக்கும். தேசிய இனத் தத்துவத்தின் வலிமைக்கு பெரும் வலிமையூட்டத்தக்க உறுதிப்படுத்தலாய் அமையவிருக்கும் ஒரு பேரழிவு நிகழ்வுக்கான சாட்சியாக இருக்க விதி நம்மைத் தெரிவு செய்திருக்கிறது.”[14] போர் வெற்றி மற்றும் காலனித்துவமயம் குறித்த இந்த கருத்தாக்கங்கள் எல்லாம் ஹிட்லரின் வெறியின் விளைவுகள் மட்டுமே என்று யாரும் சிந்திப்பதற்கு முன், அவை மிக சமகால நிகழ்வுகளில் உறுதியாய் வேரூன்றியிருந்தன என்பதை நாம் சுட்டிக் காட்டலாம். 1918ம் ஆண்டு நவம்பரில் முதலாம் உலகப் போர் முடிந்தபோது, ஜேர்மன் மண்ணில் எந்த அந்நியத் துருப்புகளும் இல்லை, ரஷ்யாவின் பகுதிகளோடு சேர்த்து உக்ரைனின் பரந்த பகுதிகளை ஜேர்மன் குடியரசு கொண்டிருந்தது. கிழக்கத்திய ஆக்கிரமிப்பின் அடிப்படையிலான ஒரு சாம்ராஜ்யம் குறித்த ஹிட்லரின் முன்னோக்கிற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்த பிராந்தியம் 1918 மார்ச் 3 அன்று சோவியத் அரசாங்கம் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்ட பிரெஸ்ட்-லிட்தோவ்ஸ்க் உடன்படிக்கையின் படி ஜேர்மனியால் கைப்பற்றப்பட்ட பிராந்தியமாகும். ஜேர்மனியால் கைப்பற்றப்பட்ட நிலத்தின் விரிவெல்லையை கீழேயிருக்கும் வரைபடத்தில் காணலாம்.
சாம்ராஜ்யம் மற்றும் உயிர்வாழ்விற்கான இடம் குறித்த ஹிட்லரின் கருத்தாக்கங்கள் எல்லாம் 1928ம் ஆண்டில் அவர் எழுதிய வெளியிடப்படாத இரண்டாவது புத்தகத்தில் (Second Book) உறுதிப்படுத்தப்பட்டன. முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகத்தில் அமெரிக்கா பொருளாதார மேலாதிக்க நிலைக்கு எழுவதென்னும் இரண்டாவது பெரிய மாற்றத்தின் தாக்கங்கள் குறித்த அவரது ஆய்வை இதில் நாம் காண்கிறோம். 1914 ஆம் ஆண்டில் அப்போதும் அமெரிக்கா ஒரு கடனாளி நாடாகத் தான் இருந்து கொண்டிருந்தது. ஒரு தசாப்த காலத்திற்குப் பின் உலகின் தலைமை நிதி சக்தியாக அது ஆகியிருந்தது. தனது இரண்டாவது புத்தகத்தில் ஹிட்லர் அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார மேலாதிக்கம் மற்றும் ஐரோப்பா மீது இருத்தப்படும் நெருக்குதல் ஆகியவற்றின் வெளிச்சத்தில் உயிர்வாழ்விற்கான இடத்திற்கான தேவையை மறுஆய்வு செய்கிறார். வாழ்க்கைத்தரம் குறித்த ஐரோப்பிய கருத்தாக்கங்கள் அதன் சொந்த பொருளாதார சாத்தியங்களின் மூலம் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் என்ன நிலவுகிறது என்பதன் மூலமும் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அமெரிக்க பொருளாதாரமானது ஒப்பீட்டளவில் மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையில் தங்கியிருந்தது. நிலவிய ஒழுங்கிற்குள்ளாக ஜேர்மன் மக்களுக்கான சாத்தியவளங்கள் பிரகாசமாய் இல்லை என ஹிட்லர் எழுதினார். ஏனென்றால், ஜேர்மன் இராணுவம் மற்றும் சொத்துடமையுடைய உயர்தட்டினரை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய அனைத்து வலதுசாரி இயக்கங்களின் கோரிக்கையான '1914ம் ஆண்டு எல்லைகள் மீட்கப்படுவது என்பது நிகழ்ந்தாலும் கூட அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்க வாழ்க்கைத்தரத்தை உறுதி செய்வதற்கு அது போதுமானதாய் இருக்காது. 1914ல் இருந்தது போலவே ஜேர்மனி உலக சந்தைகளுக்கான போராட்டத்தில் முன்செலுத்தப்பட வேண்டி நேரும்'. சந்தைப் போட்டியின் மூலம் அதிகமான ஏற்றுமதிச் சந்தைகளை ஜேர்மனி கைப்பற்றுவது என்பது செழுமைக்கான ஒரு உகந்த பாதையாக இருக்காது, ஏனென்றால் அனைத்து ஐரோப்பிய சக்திகளுமே இதேபோன்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் என்பது தவிர, அமெரிக்கா பல பகுதிகளில் மிகக் கடுமையான போட்டியாளராக இருந்தது என ஹிட்லர் வலியுறுத்தினார். ஹிட்லர் எழுதினார்: “அதன் உள்நாட்டுச் சந்தையின் அளவும் செல்வமும் உற்பத்தி அளவுகளையும் உற்பத்தி ஆலைகளையும் எந்த மட்டத்திற்கு பொருட்களின் விலையைக் குறைக்க அனுமதிக்கிறது என்றால், பெரும் ஊதியங்களை வழங்கியும் நம்மால் அவற்றை விட விலை குறைப்பது என்பது இனியும் சாத்தியமில்லை என்றாகி விட்டது. வாகனத் துறையின் அபிவிருத்தியை ஒரு எச்சரிக்கை உதாரணமாக இங்கு வழங்கலாம். ஜேர்மனியர்களாகிய நம்மால், நமது விநோதமான ஊதியங்கள் இருந்தும் கூட, அமெரிக்க போட்டிக்கு எதிராக ஒரு சிறிய அளவுக்கு கூட வெற்றிகரமாக ஏற்றுமதியில் சாதிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, நமது சொந்த நாட்டிலேயே கூட அமெரிக்க வாகனங்கள் எந்த அளவுக்கு பல்கிப் பெருகி வருகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்க உள்நாட்டு சந்தையின் அளவு, வாங்கும் சக்தியின் செல்வம் மற்றும், மறுபடியும் கூற வேண்டியிருக்கிறது, அதன் கச்சாப் பொருட்கள் ஆகியவை அமெரிக்க வாகனத் துறைக்கு உள்நாட்டு விற்பனை சந்தை அளவுகளுக்கு உறுதியளிப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது. அது மட்டுமே உள்நாட்டு விற்பனை வாய்ப்புகளின் பற்றாக்குறையால் ஐரோப்பாவில் சாத்தியமற்றதாய் இருக்கின்ற உற்பத்தி வழிமுறைகளை அங்கு அனுமதிக்கிறது.”[15] வேறுவார்த்தைகளில் சொல்வதானால், வரலாற்றாசிரியர் ஆடம் டூஸ் குறிப்பிட்டதைப் போல, அந்த சமயத்தில் தொழிலாளர் உற்பத்தித் திறனின் எனவே மூலதன இலாபத்திறனின் மிக உச்ச அபிவிருத்தியாக இருந்த போர்ட் வாதத்திற்கு உயிர்வாழ்விற்கான இடம் அவசியமாய் இருந்தது. முன்னதாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த இனவாத தத்துவங்கள் எல்லாம் இப்போது, அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் ஜேர்மனியின், ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவின், பொருளாதாரத் திறனை அபிவிருத்தி செய்வதை பிரதான பணியாகக் கொண்ட ஒரு முன்னோக்கிற்குள் ஒருங்கமைக்கப்பட்டது. ஐரோப்பாவெங்கிலுமான ஏதோ இயக்கம் ஒன்றில் அதற்கான பதில் அமைந்திருக்கவில்லை. அது ஒரு அற்பமான யூத கருத்தாக்கம் என்று ஹிட்லர் வலியுறுத்தினார். ’ஐரோப்பிய ஐக்கியப்படுத்தல் என்பது ரோம் இலத்தீன் அரசுகளை வெற்றிகொண்டது போல, பிரஷ்யா ஜேர்மன் குடியரசினை ஒன்றிணைத்தை போல’ வலிமைவாய்ந்த அரசினால் மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். ஹிட்லர் எழுதினார்: “எதிர்காலத்தில், வட அமெரிக்காவிற்கு நிகராக ஒரு அரசு நிற்க வேண்டுமென்றால், எந்த ஒரு அரசு தனது உள்நாட்டு வாழ்க்கையின் குணாதிசயத்தின் மூலமும் அத்துடன் தனது வெளியுறவுக் கொள்கையின் சாரம் மூலமும் தனது சொந்த மக்களின் இன மதிப்பினை உயர்த்தி அதனை இந்த நோக்கத்திற்கான மிக நடைமுறைப்பட்ட தேசிய வடிவத்திற்கு எப்படிக் கொண்டு வர வேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறதோ அந்த அரசால் மட்டுமே முடியும். இந்த கடமைக்கு சாத்தியமான மிக உயர்ந்த மட்டத்திற்கு நமது தந்தை நாட்டை வலிமைப்படுத்துவதும் தயார் செய்வதும் தேசிய சோசலிச இயக்கத்தின் கடமை ஆகும்.”[16] 1928ம் ஆண்டில் ஹிட்லர் இந்த வரிகளை எழுதிய சமயத்தில் அவை ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளில் இருந்து சற்று தொலைவில், அதீத வலதுசாரி முனையில் இருந்ததாக தோன்றலாம். அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார ஆசிகளின் கீழ் உலகச் சந்தையில் பங்கேற்பதன் மூலம் ஒரு ஐரோப்பிய மற்றும் உலக சக்தியாக ஜேர்மனியின் நிலையை மீட்சி செய்ய தலைப்படுவது என்பது தான் வைய்மார் குடியரசின் தலைமை முதலாளித்துவ அரசியல்வாதியான குஸ்டவ் ஸ்ட்ரேசமானின் கொள்கையாக இருந்தது. ஆனால் சூழ்நிலை அதிரடியாய் மாறவிருந்தது. போருக்குப் பிந்தைய குறுகிய கால விரிவாக்கத்தின் கடைசி வருடமாக 1928 ஆனது. வெறும் இரண்டே வருட கால இடைவெளியில் உலக சந்தை ஏறக்குறைய சிதறுண்டு போனது. மூலதனப் பாய்வுகள் நின்றுபோயின, இறக்குமதி வரிகள் உயர்ந்தன, ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவமும் பெருகிய அளவில் தேசியவாத தீர்வுகளை நோக்கித் திரும்பின. 1930களின் ஆரம்பத்தில், நாஜி இயக்கத்தின் இரண்டு முக்கியமான தத்துவங்கள் - ஜேர்மனியில் இருந்து மார்க்சிசத்தை அகற்றுவது மற்றும் உயிர்வாழ்விற்கான இடத்தின் தேவையின் அடிப்படையில் ஒரு தேசியவாத பொருளாதார வேலைத்திட்டத்தை பின்தொடர்வதுதான வளர்ந்துவரும் ஜேர்மன் ஆளும் உயர்தட்டினரின் பிரிவுகளின் அரசியல் நோக்குநிலையுடன் பொருத்தமாக இருந்தது. ஆடம் டூஸ் குறிப்பிடுவது போல, “தேசிய சோசலிசத்தின் மூலாதாரம் என்னவென்றால், செல்வம் கொழிக்கும் ஆங்கிலம்-பேசும் நாடுகள் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒரு உலகளாவிய பொருளாதார ஒழுங்கிற்குள் ஜேர்மனிக்கான ஒரு இடத்தை அமைதியாக ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும், இந்த ஒழுங்கினை நோக்கிய ஒரு தீரமிக்க பாரிய சவாலை முன்நிறுத்துவதற்கு தனது மக்களின் அடக்கி வைக்கப்பட்டிருந்த விரக்திகளை அணிதிரட்டுவதில் ஹிட்லர் முனைந்தார். ஐரோப்பிய நாடுகள் முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் உலகளாவிய அளவில் செய்ததை மீண்டும் செய்கையில், ஜேர்மனி தனது சொந்த ஏகாதிபத்திய பின்னிலத்தை உருவாக்கும்; கிழக்கில் தனது கடைசி நிலப் பறிமுதல் மூலம் உள்நாட்டில் வளமைக்கான தன்னிறைவு அடிப்படையை உருவாக்கும் என்பதோடு வரவிருக்கும் அமெரிக்காவுடனான வல்லரசுப் போட்டியில் தாக்குப் பிடிப்பதற்கு அவசியமான தளத்தையும் உருவாக்கும்.”[17] ஹிட்லர் பதவியில் அமர்த்தப்பட்ட வெறும் ஐந்து மாதங்களில் எழுதுகையில் ட்ரொட்ஸ்கி நாஜி ஆட்சியின் பாதையை வரைந்தார். கோபமுற்றிருந்த நோக்குநிலை தவறியிருந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான தங்களது திறமையின் மூலம் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்திருந்தனர். முதலாளித்துவத்தின் பழைய கட்சிகள் உடைந்து விட்டிருந்தன ஆனால் தொழிலாளர் வர்க்கத்தின் கட்சிகள் முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான எந்த வழியையும் வழங்க முடியவில்லை. சமூக ஜனநாயகக் கட்சி சோசலிசப் புரட்சிக்கு மாறாக முதலாளித்துவ ஒழுங்கு மற்றும் நாடாளுமன்றவாதத்தை பாதுகாக்க உறுதியளித்துக் கொண்டிருக்க, கம்யூனிஸ்ட் கட்சி வெகுஜனங்களை புரட்சிக்கு அழைத்தது எனினும் முழுமையாய் அதனை நடத்தி முடிப்பதற்கு திறனற்றிருந்தது. இந்த நிலைமைகளின் கீழ், குட்டி முதலாளித்துவத்தின் பிரமைகள் மற்றும் மாயைகளை ஒரு அரசியல் வேலைத்திட்டமாக மாற்றி அதிகாரத்தைப் பிடிக்க நாஜிக்களால் முடிந்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்தவுடன் ஹிட்லரது பணிகள் ஏகபோக மூலதனத்தின் நலன்களால் தீர்மானிக்கப்பட்டது என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். “ஏகாதிபத்திய நலன்களில் மக்களின் அனைத்து சக்திகள் மற்றும் ஆதாரவளங்கள் நிர்ப்பந்தமாய் குவிக்கப்படுகிறது என்றால் - பாசிச சர்வாதிகாரம் என்பதன் உண்மையான வரலாற்று அர்த்தம் இது - போருக்கான தயாரிப்பு என்று அர்த்தம்; இந்த பணியானது, தனது பங்கிற்கு, எந்த உள்முக எதிர்ப்பையும் சகித்துக் கொள்வதில்லை என்பதோடு இன்னும் கூடுதலாய் எந்திரத்தனமாய் அதிகாரத்தைக் குவிப்பதற்கு இட்டுச் செல்கிறது.“[18] பாசிசம் சீர்திருத்தப்படவோ அல்லது சேவையில் இருந்து ஓய்வு வழங்கப்படவோ முடியாது, அது போர் அல்லது புரட்சியின் மூலமாக மட்டுமே தூக்கியெறியப்படும். ஐரோப்பாவின் ஒரு புதிய பேரழிவிற்கான தேதி ஜேர்மனியை மீண்டும் ஆயுதபாணியாக்க அவசியமான காலத்தால் தீர்மானிக்கப்படும் என்று பிந்தைய குறிப்பு ஒன்றில் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். அது ’சில மாதங்கள் பற்றிய பிரச்சினை அல்ல, ஆனால் பல தசாப்தங்கள் கழித்தான பிரச்சினையும் இல்லை.’ ஒரு சில ஆண்டுகளிலேயே ஐரோப்பா மீண்டும் போருக்குள் மூழ்கும் சாத்தியத்தை எதிர்கொண்டது. நாஜி ஆட்சியின் முன்கண்டிராத குணநலனானது, ட்ரொட்ஸ்கி செய்ததைப் போல அதனை ஒருவகையில் ஏகபோக மூலதனத்தின் ஆட்சியாக சித்தரிப்பது என்பது மார்க்சிச “அனுபவமற்றதன்மைக்கான'' உதாரணமன்றி வேறொன்றும் இல்லை’ என்பதாக மீண்டும் மீண்டும் கூறப்படுவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. மாறாக நாஜி ஆட்சி தான் தனது அரசியல் மற்றும் இனவாத இலக்குகளுக்கு ஏற்ற வகையில் பெரு வணிகங்களன் கொள்கைத்திட்டத்தை கட்டளையிட்டது என வாதிடப்படுகிறது. குறிப்பாக அரசியல்ரீதியாக வசதியான வாதமாக அவர்களுக்கு இது ஆகி விடுகிறது, ஏனென்றால் ஹிட்லர் ஆட்சியின் பயங்கரங்களுக்கு ஏகபோக மூலதனத்தைப் பொறுப்பாக்க முடியாது, ஏனெனில் அதுவும், 'சமூகத்தின் மற்ற ஒவ்வொரு பிரிவையும் போலவே நாஜி சர்வாதிகாரத்திற்கு ஆட்படுத்தப்பட்டடிருந்தது’ என அது அர்த்தப்படுகின்றது. ஆரம்பத்திலேயே இதுபற்றி தெளிவாக கூறவிரும்புகிறேன், பெரு வணிகத் தலைவர்கள் தான் ஒருவகையாய் ஹிட்லர் ஆட்சியின் கொள்கைத் திட்டங்களை நேரடியாக கட்டளையிட்டனர் என்று நான் கூற வரவில்லை. எந்த முதலாளித்துவ அரசாங்கமும் அந்த வகையில் செயல்படுவதில்லை. ஆனாலும், அவ்வாறு கூறியபோதிலும் அது நிச்சயமாக ஏகபோக மூலதனத்தின் ஒரு ஆட்சி தான். இந்த சமயத்தில் அமெரிக்காவில் இருக்கும் நிலைமையைப் பார்த்தால் சம்பந்தப்பட்ட சிக்கல்களை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 1930களில் சமூகப் புரட்சிக்கு எதிராக அமெரிக்க முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் நிர்வாகம் ஒரு முழுமையான தீர்மானமான பாத்திரத்தை ஆற்றியது என்பதில் இன்றைக்கு ஒருவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. முன்னணி முதலாளித்துவ வட்டங்களில் இருந்த தனது எதிர்ப்பாளர்கள் பலரது கூற்றுக்கும் எதிராக ரூஸ்வெல்ட் முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் தன்னை விடவும் உறுதியுள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதை வலியுறுத்தினார். எப்படியாயினும், அந்த சமயத்தில், புதிய உடன்பாடு (New Deal) ஒருவகையில் முதலாளித்துவத்தையும் கடந்து சென்றிருந்த ஒரு புதிய அரசியல் பொருளாதாரத்தை குறித்ததாக பலரும் கருதினர். ரூஸ்வெல்ட் அவரது “சோசலிச” மற்றும் “கம்யூனிச” நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பெரு வணிகத்துடன் ரூஸ்வெல்ட்டின் மோதல்கள் என்னவாய் இருந்தாலும், மிக ஆழமானதொரு பொருளில், ஜேர்மனியில் இருந்த நாஜி ஆட்சியைப் போலவே அதுவும் ஏகபோக மூலதனத்தின் ஒரு ஆட்சி தான். அனைத்து அரசாங்கங்களுமே தேசியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஏகபோகங்கள், வங்கிகள் மற்றும் பெரு வணிகங்களில் இருந்து சார்பு ரீதியாக ஓரளவு சுதந்திரத்தை கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு ஆட்சியின் தன்மையும் அது சேவை செய்யும் வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. நாஜி அரசின் விடயத்தில், உண்மைகளும் புள்ளிவிவரங்களும் பிரச்சினையை வெகு தெளிவாக ஆக்குகின்றன. உதாரணமாக, 1933 முதல் 1939 வரையான காலத்தில் தேசிய வருவாயில் இலாபங்களின் பங்கு 36 சதவீதம் அதிகரித்ததாக மதிப்பிடப்படுகிறது, அதே சமயத்தில் ஊதியங்கள் 5 சதவீத சரிவினைக் கண்டன. உண்மை ஊதியங்கள் சுமார் 25 சதவீதம் வரை சரிந்தன, சுயாதீனமான தொழிற்சங்கங்களும் அவற்றுடன் சேர்த்து கூட்டு கொடுக்கல்வாங்கல்களும் மற்றும் வேலைநிறுத்த உரிமை ஆகியவையும் தடைசெய்யப்பட்டன. 1919ம் ஆண்டில் மணிக்கு 95.5 ஜேர்மன் பென்னிகளாக இருந்த திறன்படைத்த தொழிலாளருக்கான ஊதியங்கள் 1942ம் ஆண்டில் மணிக்கு 81 ஜேர்மன் பென்னிகளாக சரிந்திருந்தது. முந்தைய அரசாங்கங்களின் சில தேசியமயமாக்கல் நடவடிக்கைகளையும் கூட அது பின்வாங்கியபோதிலும், நாஜி அரசு மூலதன உடைமையை முற்றுமுழுதாக பாதுகாத்தது, நாஜி ஆட்சி ஏகபோக மூலதனத்தின் ஒரு கருவியாக இல்லை என்பதான கூற்று பெரும்பாலும் நாஜி ஆட்சியின் கீழ் முதலாளித்துவ பொருளாதாரத்தின் விதிகளை பிரயோகிக்கவில்லை என்பதான கருத்துப்பாட்டுடன் சேர்த்துக் கூறப்படுகிறது. இந்த கருத்து 1941ல் பிராங்க்பேர்ட் பள்ளியின் ஒரு முன்னணி உறுப்பினரான பிரெடரிக் போலாக் என்பவர் எழுதிய “அரசு முதலாளித்துவம்: அதன் சாத்தியங்களும் மட்டுப்படுத்தல்களும்” (“State Capitalism: Its Possibilities and Limitations”) என்ற மிகவும் பிரபலம் பெற்ற கட்டுரையில் முன்னெடுக்கப்பட்டது. நாஜி ஜேர்மனியில் ஆதாரவளங்களின் ஒதுக்கீடு (allocation of resources) பெருகிய முறையில் அரசு மற்றும் அதன் திட்டமிடல் அதிகாரிகளிடம் இருந்தான உத்தரவுகளினால் தீர்மானிக்கப்பட்டதே அன்றி சந்தையால் தீர்மானிக்கப்படவில்லை என்கிற உண்மையில் இருந்து போலாக் தனது ஆய்வுக்கான அடிப்படையை எடுத்துக் கொண்டார். சந்தை இல்லாதுபோனதால் “பொருளாதார விதிகள் என்பவையும் மறைந்து போயின” என்றார் அவர். இத்தகையதொரு சூழ்நிலை நீண்டகால விளைவுடைய தாக்கங்களைக் கொண்டிருந்தது. உலக முதலாளித்துவ முறைமையில் இருந்து எழுந்திருந்த முரண்பாடுகளில் இருந்து நாஜி ஆட்சி விடுபட்டிருந்தது என்பதானது, “அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பும் சந்தையின் இயற்கை விதிகளின் மூலம் அல்லாமல் நனவான திட்டமிடலின் மூலம் செயல்படுத்தப்படும் சமயத்தில் பழைய அர்த்தத்தில் பொருளாதார பிரச்சினைகள் என்பவை இனியும் இருக்காமல் போயின” [19] என்று போலாக் எழுதினார். புதிய பொருளாதார ஒழுங்கின் கீழ், இலாப நோக்கமானது அதிகார நோக்கத்தால் இடம்பெயர்க்கப்பட்டிருந்தது. ஆதாரவள ஒதுக்கீட்டுக்கான மைய இயங்குமுறையாக முதலாளித்துவ சந்தை மறைந்து போவதை அடிப்படையாகக் கொண்டு போலாக் வாதிடுகிறார். ஆனால் அது முதன்மையாய் நாஜிக்களின் நடவடிக்கைகளின் ஒரு விளைவு அல்ல. அவர்கள் அதிகாரத்திற்கு வரும் முன்பே, உலக மூலதனச் சந்தையானது அனைத்து நோக்கங்களுக்கும் விருப்பங்களுக்கும் செயல்பட இயலாது நின்று போனது. இறக்குமதி வரிகள், சிறப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நாணய மண்டலங்கள் ஆகியவற்றால் வர்த்தகம் ஒடுக்கப்பட்டிருந்த நிலையில், சர்வதேச மூலதனத்தின் பாய்வு ஏறக்குறைய நின்று போயிருந்தது. இந்த நிலைமைக்கும் மற்றும் குறிப்பாக ஜேர்மன் செலுத்தமதி நிலுவையினால் உருவான நெருக்கடிகளுக்கான பிரதிபலிப்பாகவே இந்த நடவடிக்கைகள் நாஜிக்களால் அபிவிருத்தி செய்யப்பட்டன. அரசியலானது பொருளாதாரத்தை இடம்பெயர்த்தது என்பதைக் காட்டிலும், ஜேர்மன் முதலாளித்துவத்தின் பொருளாதார முரண்பாடுகள் நாஜி ஆட்சியின் அரசியல் திட்டத்தை முன்தள்ளியது என்பதே சரியாகும். ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் சொல்வதானால், அந்த திட்டத்தின் சாரம் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதற்கும் போருக்கு தயாரிப்பு செய்வதற்கும் மக்களின் அனைத்து ஆதாரவளங்களையும் ஒருமுகப்படுத்துவதாய் இருந்தது. உலக சந்தை சீர்குலைந்ததால் ஜேர்மன் முதலாளித்துவத்தின் இயக்க ஆற்றலுக்கு எந்த சர்வதேச வடிகாலும் இல்லாது போனது. அதேசமயத்தில் ஜேர்மனியின் மட்டுப்படுத்தப்பட்ட தேசிய பொருளாதாரத்திற்குள்ளாக மட்டும் அது கட்டுப்படுத்தப்படவும் முடியாது. ஐரோப்பிய பொருளாதாரத்தை மறுஒழுங்கமைக்கும் வகையில் வெளிநோக்கி அது நெருக்க வேண்டியிருந்தது. ஆனால் எப்படி? இராணுவ வழிகளின் மூலமாக. ஹிட்லரின் அரசாங்கம் அதிகாரத்தில் அமர்ந்து இரண்டாம் வருடத்திற்குள், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அனைத்து அரசாங்க செலவினத்துக்கும் ஒதுக்கப்பட்ட தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 1935க்குள்ளாக, இந்த விகிதாச்சாரம் 73 சதவீதமாக அதிகரித்திருந்தது. 1933 மற்றும் 1935ம் ஆண்டுகளுக்கு இடையே ஜேர்மன் தேசிய வருவாயில் இராணுவ செலவினத்திற்கான ஒதுக்கீடு 1 சதவீதத்தில் இருந்து சுமார் 10 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. இந்த அதிகரிப்பு அமைதிக்காலத்தில் எந்த ஒரு முதலாளித்துவ அரசிலும் கண்டிராத அதிகரிப்பாகும். [20] இராணுவமயமாக்கத்தால் ஜேர்மன் பொருளாதாரத்திற்கு வழங்கப்பட்ட ஊக்கத்தில் இருந்து விளைந்த வெளிப்படையான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான பதிலிறுப்பாக போலாக்கின் ஆய்வறிக்கை அமைந்தது. ஆயினும் இந்த ஸ்திரத்தன்மை பெரு மந்தநிலைக்கு இட்டுச் சென்றிருந்த முரண்பாடுகள் வெல்லப்பட்டிருந்ததாக அடையாளப்படுத்தவில்லை. மாறாக, அவை புதிய வடிவங்களில் வெளிப்படவிருந்தன--இந்தமுறை ஏகாதிபத்திய போராக. இங்கே அரசியல் பொருளாதாரம் குறித்த சில தத்துவார்த்த பிரச்சினைகளுக்குள் சுருக்கமாகவேனும் நாம் ஆழமாக செல்ல வேண்டியிருக்கிறது. தேவையையும் வேலைவாய்ப்பையும் திறம்பட உயர்த்துவதன் மூலமாக ஒரு தேக்கமுற்றுள்ள பொருளாதாரத்திற்கு இராணுவ செலவினம் உத்வேகம் அளிக்க முடியும். ஆனால் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருப்பது நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியோ அல்லது வேலைவாய்ப்பை உருவாக்குவதும் இல்லை. உபரி மதிப்பின் திரட்சிதான் மூலதன விரிவாக்கத்திற்கான மூலாதாரதாகும். இந்த நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது, இராணுவச் செலவினம் என்பது தனிநபர் முதலாளிகளுக்கு பெரும் ஆதாயங்களை வழங்குகிற அதே சமயத்தில் உபரி மதிப்பின் நுகர்வையும் உள்ளடக்கியிருக்கிறது. கச்சாப் பொருட்கள், எந்திரங்கள், புதிய தொழில்நுட்பம் மற்றும் இன்னபிற மூலதனப் பொருட்களிலான முதலீடு ஆதாயமளிப்பதாய் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்த மூலதனம் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரி மதிப்பை பிழிந்தெடுப்பதற்கு பயன்படுகிறது என்ற காரணத்தால் தான். இராணுவச் செலவினம் முக்கிய பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. பொருளாதார ரீதியாக ஆடம்பரப் பொருட்களில் முதலாளித்துவம் செலவு செய்வதற்கு இது ஒப்பானது. ஒவ்வொரு முதலாளித்துவ பொருளாதாரமும், அது சுதந்திர போட்டி, ஏகபோக விலை-நிர்ணய முறை அல்லது அரசு வரன்முறை ஆகிய எந்த நிலைமைகளின் கீழ் இயங்கினாலும் சரி, உபரி மதிப்பின் திரட்சியில் தான் ஈடுபட்டிருக்கிறது. 1871-ல் ஒன்றிணைந்த ஜேர்மன் அரசு உருவாக்கப்பட்ட நாள் தொட்டே, உலக சந்தையில் விற்கப்படுகிற பொருட்களின் உற்பத்தி தான் ஜேர்மன் மூலதனத்திற்கான உபரி மதிப்பிற்கான ஆதாரமாய் இருந்து வந்துள்ளது. உலக பொருளாதாரத்தின் மீதான இந்த சார்பு என்பது ஜேர்மன் மூலதனத்தின் அடிப்படை குணநலனாக இருந்தது, இருந்து வருகிறது. உதாரணமாக, இன்று அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 47 சதவீதம் அதன் ஏற்றுமதியாகும். இது சீனாவினுடையதை விடவும் பெரிய விகிதாசாரம் ஆகும். ஆனால் 1930களில் உலக சந்தை நிலைகுலைந்தது. தேசிய பொருளாதாரமானது மந்த நிலை பாதாளங்களில் இருந்து இராணுவ செலவினத்தின் மூலமாக வெளியில் இழுக்கப்பட்டிருந்தது. ஆயினும் அது மூலதன திரட்சியின் பிரச்சினையை தீர்க்கவில்லை, மாறாக, அது அந்த பிரச்சினையை அதிகமாக்கியது. ஜேர்மனியில் மூலதன திரட்சியை தொடர்ந்து பெருக்குவதை உறுதி செய்வதற்கான ஆதாரவளங்களை எங்கிருந்து எவ்வாறு பெறுவது? இராணுவ வெற்றியின் மூலமான ஆக்கிரமிப்புகள் மூலமாகத் தான். இது தான் போருக்கு இட்டுச் சென்ற இயங்குசக்தி. அத்துடன் போர், எல்லாவற்றிற்கும் மேலாய் கிழக்கில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போரானது, யூதப் படுகொலைக்கான நிலைமைகளை உருவாக்கியது. போருக்கான பொருளாதார கட்டாயத்தை ஹிட்லர் நேரடியாக ஏராளமான உரைகளில் குறிப்பிட்டார். 1937 நவம்பர் 5 அன்று ஹோஸ்பாக் கூட்டத்தில் (Hossbach Memorandum) இராணுவ அதிகாரிகளுக்கு அவர் வழங்கிய உரையின் மையக் கருப்பொருளாய் இது அமைந்திருந்தது. 1939 செப்டம்பரில் போலந்து மீதான தாக்குதலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக ஆயுதப் படை தளபதிகளுக்கு அவர் ஆற்றிய உரை ஒன்றிலும் பொருளாதார நெருக்குதல்கள் குறித்து அவர் மீண்டும் குறிப்பிட்டார். ஜேர்மனிக்கு முடிவுகளை எடுப்பது எளிது என்றார் அவர். “நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை; பெறுவதற்கு நிறைய இருக்கிறது. நமது வரம்புமுறைகளின் காரணமாக இன்னும் ஒரு சில வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய மட்டத்திற்குத் தான் நமது பொருளாதார நிலைமை உள்ளது. கோரிங் (Göring) இனால் இதனை உறுதி செய்ய முடியும். நமக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை, நாம் செயல்பட்டாக வேண்டும்.” [21] போலந்தை நாஜிக்கள் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து பல மாத கால “போலியான போர்” நடந்தது. அதன்பின் பிரான்ஸ் ஆக்கிரமிப்பு, டுங்கிர்கில் இருந்து பிரிட்டிஷ் படைகள் வெளியேற்றப்பட்டது, மற்றும் ஜூன் 1940ல் பிரான்ஸ் சரணடைந்தது எல்லாம் நடந்தது. ஒரு வருடம் கழித்து, 1941 ஜூன் 22 அன்று, ஹிட்லர் தனது ஆட்சி எந்த இலக்குகளுக்காக தயாரிப்பு செய்து கொண்டிருந்ததோ - சோவியத் ஒன்றியத்தை வெற்றி கண்டு காலனியாக்குவது - அந்த இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு கிழக்கு நோக்கி தனது பார்வையைத் திருப்பினார். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போர் பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு எதிரான போரில் இருந்து மாறுபட்டது என்பதை ஹிட்லர் தெளிவாக்கினார். இப்போரின் நோக்கம் சோவியத் படைகளைத் தோற்கடிப்பது மட்டுமல்ல, மாறாக சோவியத் பிராந்தியத்தை காலனியாக்கி ஜேர்மன் அரசின் தேவைகளுக்கு இணக்கமான வகையில் அதனை முழுமையாக பொருளாதார மற்றும் சமூக மறுஒழுங்கமைவு செய்வதாகும். 1941 செப்டம்பர் 17 அன்று, சோவியத் ஒன்றியம் வெகு விரைவில் வீழ்ந்து விடும் என்று தோன்றிய சமயத்தில், ஹிட்லர் ஊடுருவல் நோக்கங்களை விரிவாய் தெரிவித்தார்: “ஐரோப்பாவைப் பொறுத்தவரை உலகில் மேலாதிக்கத்திற்கான போராட்டம் ரஷ்ய பிராந்தியத்தைக் உடமையாக கொண்டிருப்பதன் மூலம் தான் தீர்மானிக்கப்படுகிறது; இது ஐரோப்பாவை தடைகளில் இருந்து உலகின் மிகவும் பாதுகாப்பான பகுதியாக ஆக்குகிறது. ....தம் சொந்த வாழ்க்கைக்காக விதியை கொண்டிராத ஸ்லாவிய மக்களாவர்.... ....ரஷ்ய பிராந்தியம் நமது இந்தியா, எப்படி கையளவிலான எண்ணிக்கை கொண்ட சிலரைக் கொண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளுகிறார்களோ அந்த வகையில் நமது காலனித்துவ பிராந்தியமான இதனை நாம் ஆட்சி செய்வோம். உக்ரைனியர்களுக்கு தலையணிகளையும், அணிகலன்களாய் கண்ணாடிச் சங்கிலிகளையும் மற்றும் காலனித்துவ மக்கள் விரும்பும் எதனையும் நாம் வழங்குவோம்.”[22] மற்ற சந்தர்ப்பங்களில் ஹிட்லர் சோவியத் ஒன்றியத்தை வெற்றி காண்பதை மேற்கு அமெரிக்க காலனியாக்கத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். ’வோல்கா மிசிசிபி போல ஆகும், ஸ்லாவிய மக்கள் பூர்விக அமெரிக்கர்களைப் போல் காலி செய்யப்பட்டு ஒரு ‘உயரிய’ மக்களால் இடம்பெயர்த்தப்படுவார்கள். அமெரிக்கா அல்ல ஐரோப்பாவே எல்லைகளற்ற வாய்ப்புகளுக்கான நிலமாய்த் திகழும்’. 1941 டிசம்பரில் பிராக்கில் நடந்த ஒரு மாநாட்டில் நாஜி பொருளாதார அமைச்சரான வால்தர் வுங்க் காலனித்துவ கருப்பொருளைக் கையிலெடுத்தார். சிறப்புரை ஆற்றிய அவர் பின்வருமாறு கூறினார்: “பழைய கண்டமானது ஒரு புதிய முகத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது, அந்த முகத்தை கிழக்கு நோக்கித் திருப்புகிறது. பொருளாதாரரீதியாக அதன் அர்த்தம் என்னவென்றால், ஆங்லோ-சாக்சன் கடற் படையின் கடல்கடந்த மற்றும் காலனித்துவ-நோக்குநிலை கொண்ட கொள்கையில் இருந்து விலகிச் செல்வது என்பதாகும். கச்சாப் பொருட்கள் செறிந்தும் இன்னும் ஐரோப்பாவிற்கு திறந்து விடப்படாமலும் இருக்கும் ஐரோப்பிய கிழக்குப் பகுதியின் பரந்த பிராந்தியங்கள் வருங்காலத்தில் ஐரோப்பாவின் வளமைக்கான நம்பிக்கையளிக்கும் காலனி நிலமாகத் திகழும்.” [23] அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் காலனித்துவ வன்முறைக்கும் ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் சமயத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரங்களுக்கும் இடையிலான உறவை ரோசா லுக்சம்பேர்க் 1915ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது Junius pamphlet என்னும் பிரசுரத்தில் சுட்டிக் காட்டினார். “உலகப் போர் ஒரு திருப்புமுனை. முதல் முறையாக, முதலாளித்துவ ஐரோப்பாவால் உலகின் அனைத்து பகுதிகளிலும் ஏவி விடப்பட்ட வெறிகொண்ட மிருகங்கள் இப்போது ஐரோப்பாவின் மீதே ஏவி விடப்பட்டிருக்கின்றன. ஐரோப்பிய நாகரிகத்தின் விலைமதிப்பில்லா அணிகலனாக இருந்த பெல்ஜியமும், வடக்கு பிரான்சின் மிகச் சிறந்த கலாச்சார நினைவுச்சின்னங்களும் கண்ணற்ற அழிவின் தாக்கத்தினால் சுக்கல் சுக்கலாக்கப்பட்ட போது உலகெங்கும் பயங்கரத்தின் ஒரு அலறல் கேட்டது. பத்தாயிரக்கணக்கான ஹெரெரோ பழங்குடி மக்கள் கொல்லப்பட்டு கலாஹரி பாலைவனத்தில் தாகத்தால் இறந்து கொண்டிருந்த மனிதர்களின் வெறி கொண்ட அலறல்களாலும் மரண ஓலங்களாலும் நிரம்பிய சமயத்தில் இதே ‘நாகரிக உலகம்’ தான் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது; ஐரோப்பிய தொழில்துறை தலைவர்களின் ஒரு கூட்டத்தால் புதுமயோ நதிக்கரையில் [கொலம்பியா] பத்து வருட காலத்திற்குள் நாற்பதாயிரம் மனிதர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டு மற்றவர்கள் முடமாக்கப்பட்ட போதும் இதே ‘நாகரிக உலகம்’ பார்த்துக் கொண்டு தான் இருந்தது; சீனாவில் பல்லாண்டு பாரம்பரிய கலாச்சாரம் எல்லாம் ஐரோப்பிய கூலிப்படைகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு விட்டன, அவர்கள் அனைத்து வகை குரூரங்களையும், அடக்குமுறைகளையும், காட்டாட்சியையும் அரங்கேற்றினர்; இறுகும் அந்நிய ஆதிக்கப் பிடியை எதிர்க்க திராணி இல்லாமல் பாரசீக கழுத்து நெரிக்கப்பட்டது; திரிபோலியில் நெருப்பும் வாளும் முதலாளித்துவ உட்கருவுக்குக் கீழே அரபிகளை தலைவணங்கச் செய்து அவர்களது கலாச்சாரத்தையும் வாழ்விடங்களையும் அழித்தன. ஏகாதிபத்திய மிருகத்தின் கடி மரணத்தைக் கொண்டு வருகிறது என்பதும், அதன் மூச்சும் கூட நெருப்பு மூட்டத்தக்கது என்பதும் இன்று தான் இந்த ‘நாகரிக உலகத்தின்’ கவனத்தைப் பெற்றுள்ளது. இப்போது தான், இந்த மிருகத்தின் கிழிக்கும் விரல்நகங்கள் தனது சொந்த தாயின் மடியையே, அதாவது ஐரோப்பாவின் முதலாளித்துவ நாகரிகத்தையே கவ்வும்போது தான், நாகரிக உலகம் இதனை உணர்ந்தது.” சோவியத் ஒன்றியத்தை கைப்பற்ற நடந்த முயற்சி ஒரு காலனித்துவ போரையும் விட அதிகமான ஒன்றாக இருந்தது. அது ஒரு சமூக எதிர் புரட்சியானதும் கூட. ஹிட்லரைப் பொறுத்தவரை, சோவியத் ஒன்றியத்தை வெற்றி கண்டு காலனியாக்குவது என்பது 1917 அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட அரசினை கவிழ்ப்பதற்கு மட்டும் அவசியமாய் இருக்கவில்லை, அந்த புரட்சிக்கு தலைமை அளித்து சோவியத் அரசை காப்பாற்றி வந்திருந்த சமூக மற்றும் புத்திஜீவித சக்திகளை - எல்லாவற்றுக்கும் மேலாய் “யூத-போல்ஷிவிக்குகளை” அழிப்பதற்கும் அவசியப்பட்டது. ஆக, கிழக்கிலான போர் என்பது ஒவ்வொரு அர்த்தத்திலும் ஒரு பேரழிப்பு மற்றும் முற்றுமுதலான அழிப்புக்கான போராக ஆனது. இது தான் யூதப் படுகொலைக்கான மூல ஊற்றாகும். போருடனான அதே சமயத்தில் யூதர்களுக்கு எதிரான ஒரு கொலைவெறி மிக்க பிரச்சாரமும் நடக்கவிருப்பதை இராணுவத்திற்கும் அதன் துணைப் படைகளுக்கும் ஹிட்லர் மற்றும் மற்ற நாஜித் தலைவர்கள் வழங்கிய உத்தரவுகள் தெளிவாக்கின. மார்ச் 3, 1941 அன்று ஆயுதப் படைகளின் உயர் தலைமையின் செயல்பாட்டு ஊழியர்களுக்கான தலைவரான ஆல்பிரட் ஜோடியிடம் ஹிட்லர் கூறுகையில், நடக்கவிருக்கும் இராணுவ தாக்குதல் வெறுமனே ஆயுதங்கள் குறித்த ஒரு பிரச்சினை அல்ல, மாறாக இரண்டு உலகப் பார்வைகளின் மோதல் என்று கூறினார்: “இன்று வரை இந்த மக்களின் ’அடக்குமுறையாளராக’ இருந்து வரும் யூத-போல்ஷிவிக் புத்திஜீவித் தட்டு அகற்றப்பட வேண்டும்.” SS படையினருக்கான பணிகளையும் ஹிட்லர் சுருக்கமாய் விவரித்தார்: “ஸ்ராலினால் நிறுத்தப்பட்டிருக்கும் புத்திஜீவித அடுக்கு நீக்கப்பட வேண்டும். ரஷ்ய சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டு எந்திரம் நொருக்கப்பட வேண்டும். மகா ரஷ்யாவில் படைவலிமையானது அதன் மிகவும் மூர்க்கமான வடிவத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்." 1941 மார்ச் 30 அன்று, எதிர்வரவிருக்கும் போர் குறித்து 200 இராணுவ அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்தில் ஹிட்லர் உரையாற்றினார். அந்த கூட்டக் குறிப்புகள் இவ்வாறு கூறுகின்றன: “இரண்டு தத்துவங்களின் மோதல். சமூகவிரோத குற்றத்தன்மையுடன் அடையாளம் காணப்படும் போல்ஷிவிசத்திற்கு கடுமையான கண்டனம். கம்யூனிசம் நமது வருங்காலத்திற்கு பிரம்மாண்டமான அபாயம் ஆகும். யுத்தத்திற்குப் பின்னரும் முன்னரும் ஒரு கம்யூனிஸ்டு தோழராக இருக்க முடியாது. இது அழிப்புக்கான போர். இதை நாங்கள் புரிந்து கொண்டு செய்யாவிட்டால், நாம் எதிரியுடன் போராடிக்கொண்டே இருப்போம், ஆனால் 30 வருடங்களுக்குப் பின்னால் மீண்டும் நாம் கம்யூனிச எதிரியுடன் போரிட வேண்டியிருக்கும். எதிரியை உயிருடன் வைத்துபேண நாம் போரிடவில்லை... ரஷ்யாவிற்கு எதிரான போர். போல்ஷிவிச ஆணையாளர்கள் மற்றும் கம்யூனிச புத்திஜீவித் தட்டை அழிப்பது......மேற்கிலான போரைக் காட்டிலும் இது மிகவும் மாறுபட்ட ஒரு போராக இருக்கும். கிழக்கில் இன்று கடுமையாக இருந்தால் எதிர்காலத்தில் தாட்சண்யம் காட்ட முடியும். படைத்தளபதிகள் தங்களது சொந்த மனக்கிலேசங்களை வெல்வதற்கு தியாகத்தை செய்ய வேண்டும்.” இந்த சுருக்கக் குறிப்பின் இறுதியில் இருக்கும் குறிப்பு: “மதியம்: அனைவரும் பகலுணவுக்கு அழைக்கப்படுகின்றனர்.” வென்ற பிராந்தியத்தில் அமைதிப்படுத்தலுக்கு அவசியமான நடவடிக்கை வகைகள் குறித்து இராணுவத்தின் உயர் மட்டங்களில் வரையப்பட்ட ஒரு ஆவணம் கூறியது: “இது தொடர்பான விடயத்தில், வழக்கமான இராணுவ எதிர்ப்பைக் கடந்து இந்த முறை துருப்புகள் அனைத்து ஒழுங்கிற்கும் ஊறு விளைவிக்கும் ஒரு வெகுஜன மக்களில் இருந்தான அபாயமான கூறாக யூத-போல்ஷ்விக் உலகக் கண்ணோட்டத்தை சுமந்து திரிபவர்களை சந்திக்கும் என்பது நிலைநாட்டப்பட வேண்டும். இவர்கள் முடிந்த இடங்களில் எல்லாம் போரில் அல்லது கைப்பற்றிய பகுதியில் அமைதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ஜேர்மன் இராணுவத்திற்கு எதிராக விலகச் செய்யும் வகையிலும் பின்னாலிருந்தும் இந்த சீர்குலைக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்துவர். எனவே துருப்புகளுக்கு இந்த சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக முழுமையாகவும் திறம்பட்ட வகையிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையும் கடமைப்பாடும் உள்ளது.” ஜேர்மன் துருப்புகளின் நடத்தைகளுக்கான வழிகாட்டல்களின் தொடக்கப் பகுதி தெரிவித்தது: “போல்ஷிவிசம் என்பது தேசிய சோசலிச ஜேர்மனிய மக்களுக்கு மரண எதிரியாகும். சீர்குலைக்கும் உலகப் பார்வையுடனும் அதனை சுமந்து திரிபவர்களுடனும் ஜேர்மனி மோதியாக வேண்டும். இந்த போராட்டம் போல்ஷிவிக் கலகக்காரர்கள், கெரில்லாக்கள், இரகசியக் குழுவினர், யூதர்கள் அனைவருக்கும் எதிரான இரக்கமற்ற சக்திவாய்ந்த நடவடிக்கைகளையும் மற்றும் எந்த செயலூக்கமிக்க அல்லது அமைதியான எதிர்ப்பையும் முழுமையாக இல்லாதொழிப்பதை கோருகிறது.” [25] நடைமுறையில் இதன் அர்த்தம் என்ன என்பது 1941, செப்டம்பர் 29-30 அன்று உக்ரைன் தலைநகரமான கீவ் நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் ஒரு மலையிடுக்குப் பகுதியான பாபி யா (Babi Yar) என்ற இடத்தில் விளங்கப்படுத்தப் பெற்றது. ஜேர்மன் துருப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட கெரில்லா தாக்குதலின் பின்னர் 33,771 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1941ம் ஆண்டு முடிவதற்குள்ளாக, கிழக்கில் நடந்த பாதைகளில் 800,000 யூதர்கள் - ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் என அனைவரும் இதில் அடங்குவர் - கொல்லப்பட்டிருந்தனர், அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 4,200 பேர் என்கிற அளவில். மொத்த பகுதிகளும் ”யூதர்கள் அற்றவை”யாக குறிப்பிடப்பட்டன. அதே சமயத்தில், சோவியத் போர்க் கைதிகள் ஒரு நாளைக்கு 6,000 என்கிற சராசரியில் உயிரிழந்து கொண்டிருந்தனர். வேர்மாஹ்ட் (ஜேர்மனியின் பாதுகாப்புப் படை) வசம் கைதிகளான 3.5 மில்லியன் படையினர்களில் 1942ம் ஆண்டு இளவேனில் காலத்திற்கு முன்னதாக 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்து விட்டிருந்தனர். 1941ம் ஆண்டு முடிவை நெருங்கிய சமயத்தில், இந்த படுகொலை நடவடிக்கைகள் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்தன. தடுப்பு முகாம்களில் விஷ வாயு மூலம் யூதர்களைக் கூட்டமாய் கொல்வதற்கான தயாரிப்புகள் தொடங்கின. சோவியத் ஒன்றிய ஊடுருவலுக்கும் அந்த ஆண்டின் இறுதிக்கும் இடையிலான ஒரு காலத்தில் யூத பிரச்சினைக்கான ‘இறுதித் தீர்வானது’ பாரிய படுகொலை மூலமாகத் தான் சாதிக்கப்பட முடியும் என்கின்ற முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, யூதர்களை மடகாஸ்கர் தீவுக்கு அனுப்புவதற்கான ஒரு திட்டம் கருதப்பட்டு வந்தது, ஆனால் நாஜிக்கள் பிரிட்டனைத் தோற்கடிக்கத் தவறி, அதன்மூலம் கடல்பகுதி மேலாதிக்கத்தை பெற முடியாது போனதால் அந்த வாய்ப்பு இப்போது இல்லையென்றானது. யூரால் மலைத்தொடருக்குக் கிழக்கே சைபீரியாவிற்குள் யூதர்களைக் கடத்துவதற்கான இன்னொரு திட்டம் இருந்தது. ஆனால் சோவியத் ஒன்றியம் இன்னும் வெற்றி காணப்பட்டிருக்கவில்லை. இந்த திட்டங்கள் எல்லாம் கணிசமான உயிர்கள் போகும் என்பதை அறிந்திருந்தன. ஆனாலும் நாஜிகளால் கட்டுப்படுத்தப்படும் ஐரோப்பாவில் வசிக்கும் அனைத்து யூதர்களையும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் பாரிய படுகொலை செய்வதற்கான ஒரு திட்டம் இன்னும் செயற்படுத்தப்படவில்லை. ஆயினும் 1942, ஜனவரி 20 அன்றைய இழிபுகழ்மிக்க வான்ஸே மாநாட்டுக்கு முன் அந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டிருந்தது. அது வான்ஸேயில் எடுக்கப்படவில்லை. கெஸ்டபோ (Gestapo) மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் போலிஸ் முகமைகளின் மேற்பார்வை அமைப்பாக இருந்த குடியரசின் பிரதான பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவரான ரைய்ன்ஹார்ட் ஹெட்ரிச் இந்த மாநாட்டைக் கூட்டி அதற்குத் தலைமை தாங்கினார். ஜேர்மன் அரசின் அதிகாரத்துவத்திற்கு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த முடிவு குறித்து தெரிவிப்பதும் யாரெல்லாம் யூதராக வகையறை செய்யப்பட வேண்டும் என்பதற்கான வரையறையில் ஒரு தீர்மானத்திற்கு வருவதும் இந்த மாநாட்டிற்கான நோக்கங்களாய் இருந்தன. பாரிய படுகொலைத் திட்டம் செயல்முறைப்படுத்தப்பட்டு போரின் இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது. உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் திகைப்பூட்டுவதாகத் தான் இருக்கிறது: அவுஸ்விட்ஸ் 1.4 மில்லியன், பெல்ஸெக் 600,000, செல்ம்னோ 320,000, மஜ்டனெக் 380,000, மாலி டிராடினெட்ஸ் 65,000, ஸோபிபோர் 250,000, டிரெப்லிங்கா 870,000. மொத்தமாய், சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர், இது ஏறக்குறைய ஐரோப்பாவில் இருந்த யூத மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆகும்.[26] ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின், ஒட்டுமொத்தமாய் உலக முதலாளித்துவத்தின், பொருளாதார முரண்பாடுகளில் தான் இந்த பாரிய படுகொலையின் மூலங்கள் தங்கியிருக்கின்றன என்பதை நாம் வலியுறுத்தியிருக்கிறோம். உடனடியாய் இவ்வாறான ஆட்சேபக் குரல்கள் எழும்பும். ’நாஜி கருத்தியல் தான் பிரதான பாத்திரம் ஆற்றியது, பொருளாதார சக்திகள் அல்ல என்கிற போது யூதப் படுகொலை குறித்த மார்க்சிச விளங்கம் எவ்வாறு சாத்தியம்? யூதர்களை கொல்வதற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து கொண்டு செல்ல தேவை மிகுந்திருந்த போக்குவரத்து மற்றும் மற்ற ஆதாரவளங்களை பயன்படுத்தியதற்கு என்ன பொருளாதாரக் காரணி உத்வேகம் அளித்திருக்க முடியும்? பொருளாதார ரீதியாகவும் சரி இராணுவத்தின் பார்வையில் இருந்து பார்த்தாலும் சரி யூதர்களின் உழைப்பை சுரண்டியிருப்பது தான் நிச்சயமாக மிகக் கூடுதல் அனுகூலமானதாய் இருந்திருக்க முடியும்.’ இவ்வாறெல்லாம் இந்த ஆட்சேபக் குரல்கள் கூறுவது என்னவென்றால், ’இந்த பாரிய படுகொலைக்கு நாஜிக்களின் இனவெறி கருத்தியல் தான் உந்துசக்தியாய் அமைந்தது, பொருளாதாரம் உள்ளிட்ட மற்ற எல்லாமே இதற்கு கீழ்ப்படிந்ததாகவே இருந்தது’ என்பதையே. நாஜிக்களின் இனவெறி கருத்தியலை வெறுமனே மாறாத ஒன்றாக அப்படியே நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவதில் இருந்து நாம் தொடங்கலாம். அதுவே விளக்கப்பட வேண்டிய ஒன்று. நாஜிக்களின் உயிரியல்ரீதியான இனவாதம் யூதப் படுகொலைக்கான கருத்தியல் கட்டமைப்பினை வழங்கியது, இது “சுத்தப்படுத்தல்” என்றும் நாகரிகத்திற்கு உறுதியூட்டல் என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் இந்த கருத்தியல் எங்கிருந்து வந்தது? வெறுமனே அது ஹிட்லரின் காய்ச்சல் கண்டிருந்த மூளையில் இருந்து எழும்பவில்லை. உயிரியல்ரீதியான இனவாதம் என்பது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்த ஆளும் முதலாளித்துவ உயர்தட்டினர் காலனித்துவத்துக்கான தங்களது ஊக்கத்திற்கென கொண்டிருந்த தத்துவத்தின் ஒரு பிரதான பாகமாக இருந்தது. 1919ம் ஆண்டில் ஜனநாயக சக்திகள் என்று கூறப்படும் இந்த நாடுகள் தான் வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தில் இருந்து இன சமத்துவத்தை அங்கீகரிக்கும் ஒரு சரத்தை நீக்க ஒப்புக் கொண்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரதான முதலாளித்துவ சக்திகள் தங்களது காலனித்துவ சாம்ராஜ்யங்களை கட்டுமானம் செய்வதில் முனைந்து கொண்டிருந்த சமயத்தில் -இந்த திட்டம் பொருளாதார நலன்கள் மிகத் தீர்மானமான அதிமுக்கிய பாத்திரம் வகித்த ஒன்றாகும் - அபிவிருத்தியுற்ற ஒரு கருத்தியலின் மிகவும் தீவிரப்பட்ட ஒரு பதிப்பு தான் ஹிட்லர் மற்றும் அவரது கூட்டத்தின் இந்த உயிரியல்ரீதியான இனவாதம் ஆகும். கருத்தியல் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் உண்மையான பொருளாதார நோக்கங்களுக்கான ஒரு மூடுதிரைதான் என்று மார்க்சிசம் வாதாடுவதாக கூறப்படுவது, மார்க்சிசம் குறித்து அடிக்கடி முன்வைக்கப்படும் கேலிச்சித்திரங்களில் ஒன்றாய் இருக்கிறது. அதன்படி, 'தனிநபர் செயற்பாடுகள் பொருளாதார நோக்கங்களால் அல்லாது சக்திவாய்ந்த தத்துவங்களின் அடிப்படையில் தான் செயல்படுவதாக கண்டறிந்து மார்க்சிசத்தின் ‘பிழை’ நிரூபிக்கப்படுகிறது'. உதாரணமாய், 'முதலாம் உலகப் போரில் ஈடுபட்ட இரு தரப்புக்குமே எந்த வர்த்தக நலன்களும் இருக்கவில்லை என்பதால் -இருதரப்பின் உடனடி பொருளாதார நலன்களுக்கும் இப்போர் சேவை செய்யவில்லை- இதன் மூலங்கள் முதலாளித்துவ பொருளாதார முறைமைக்குள் அமைந்திருப்பதாக சொல்ல முடியாது' என்கின்றனர். இந்த விடயத்தில் எந்த வர்த்தக அல்லது நிதி நலன்களும் மந்த நிலையை விரும்பவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆயினும் எப்படியாயினும் மந்தநிலைகள் ஏற்படுகின்றன, அவை முதலாளித்துவ பொருளாதாரத்தின் முரண்பாடுகளில் இருந்து எழுகின்றன. வரலாற்றில் செயற்பாட்டாளர்கள் தங்களது கருத்தியல்களால் தான் உந்தப்படுகிறார்கள் செயலில் இறங்குகிறார்கள் என்பதை மார்க்சிசம் மறுக்கவில்லை, இந்த கருத்தியல்கள் எல்லாம் வெறுமனே உண்மையான பொருளாதார நோக்கங்களுக்கான காரணக்கற்பிப்பு தான் என்றும் அது கூறவில்லை. ஆயினும் அது வலியுறுத்துவதெல்லாம், நோக்கங்களுக்குப் பின்னாலுள்ள நோக்கங்களை, அதாவது வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் உண்மையான, அடித்தளத்திலுள்ள உந்து சக்திகளாக அமைபவற்றை ஆராய்வதும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கு சேவை செய்யும் சமூக நலன்களை -இந்த உறவு அதில் சம்பந்தப்பட்ட தனிநபர் நனவுடன் புரிந்து கொண்டதாகவோ அல்லது புரிந்து கொள்ளாததாகவோ இருக்கலாம்- தெளிவுபடுத்துவதும் அவசியம் என்பதையே. நாஜிக்கள் கட்டுமானம் செய்ய முற்பட்ட மக்கள் கூட்டமைப்பு (Volksgemeinschaft) என்னும் இனரீதியான சமுதாயத்தின் ஸ்திரத்தன்மைக்கான தலைமை அச்சுறுத்தலாக “யூத-போல்ஷிவிக்”குகளைக் கொண்டதொரு இனவாத கருத்தியலின் அடிப்படையில் தான் நாஜிக்கள் யூதர்கள் மீதான பாரிய படுகொலையை நடத்தினர். யூதபோல்ஷிவிசத்தை அகற்றுவது மற்றும் உயிர்வாழ்விற்கான இடத்தை கைப்பற்றுவது ஆகிய இரண்டு விடயங்களைச் சார்ந்து தான் ஜேர்மன் இனத்தின், சொல்லப் போனால் ஐரோப்பிய நாகரிகத்தினுடையதே கூட, வாழ்வும் வளமையும் இருப்பதாக அவர்கள் வலியுறுத்தினர். கிழக்கு நோக்கிய ஆக்கிரமிப்புப் போரில் இந்த இரண்டு கருத்தியல்களும் ஒன்றாய் இணைந்து வெடிப்பு மிகுந்த சக்தியுடன் வெளிப்பட்டன. 1943-ல் ஜேர்மன் அயலுறவு அலுவலகத்தின் பத்திரிகைத்துறை தலைவராக இருந்த போல் கார்ல் ஸ்மித் விடுத்த ஒரு அறிக்கையில் நாஜி ஆட்சியின் கண்ணோட்டம் சுருக்கமாய் தெரிவிக்கப்பட்டிருந்தது: “யூதப் பிரச்சினை என்பது மானுடத்தின் பிரச்சினையல்ல, மதத்தின் பிரச்சினையல்ல, அது அரசியல்ரீதியான ஆரோக்கியம் குறித்ததொரு பிரச்சினை. காணுமிடங்களில் எல்லாம் யூதம் தோற்றகடிக்கப்பட்டாக வேண்டும், ஏனென்றால் அது ஒரு அரசியல் தொற்று, சீரழிவின் புளித்துப்போன மற்றும் ஒவ்வொரு தேசிய உயிரினத்தின் மரணம்.”[27] ஆரிய இனத்தின் மேலாதிக்கத்தை அடிப்படையாய்க் கொண்டு மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு மாபெரும் காலனித்துவ சாம்ராஜ்யத்தை உருவாக்குவது தான் நாஜி ஜேர்மனியின் போர் நோக்கங்களாய் இருந்தது. இந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு யூதர்களை அகற்றுவது அவசியமாய் இருந்தது. 'இவர்களின் தேசிய-விரோத வாழ்க்கை முறையும் போல்ஷிவிசத்துடனான இவர்களின் பிணைப்பும் ஆட்சிக்கு அச்சுறுத்தல் என்பதோடு இவர்களின் இருப்பே “கீழான இனங்கள்” என்ற எதிர்ப்புக்கு எண்ணெய் ஊற்றியது. உடலியல்ரீதியாக யூதர்கள் அகற்றப்பட முடியாதென்றால் அவர்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்'. அவுஸ்விட்ச்சில் உயிர்தப்பிய பிரைமோ லெவி தான் எழுதிய இது ஒரு மனிதனா (If This is a Man) என்கிற புத்தகத்தின் நிறைவுரையில், யூதப் படுகொலைக்கான தணித்துக் கூறும் விளக்கங்கள் உண்மைக்கு பொருத்தமில்லாமல் இருப்பதால் அவை தம்மை திருப்திப்படுத்தவில்லை என்று எழுதுகிறார்: “வரலாற்றில் எனக்குத் தனித்துவத்துவமான ஒன்றாகத் தோன்றுகின்ற பொதுவான கட்டுப்படுத்தமுடியாத முட்டாள்த்தனத்தின் கருத்துப்படிவம் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.” ஆயினும், நாஜி விஷத்தை புரிந்து கொள்வது சாத்தியமில்லாதது என்று கருதினாலும் “அது எங்கிருந்து எழுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும், புரிந்து கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவிக்கிறார். லெவியின் இக்கருத்துகள் ஆமோதிக்கப் பெறுகின்றன. நாஜி ஆக்கிரமிப்பில் இருந்த ஐரோப்பாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் யூதர்களை, அவர்களைக் கொல்லும் பொருட்டு, நாஜிக்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு துளியும் இல்லாத போரின் கடைசி நாட்கள் வரையிலும் கூட கொண்டு சென்ற ஒரு பாரிய படுகொலை திட்டத்தை ஒருவர் எங்ஙனம் “புரிந்து கொள்ள” முடியும்? ஆனால் இன்னொரு வரலாற்று சூழ்நிலையைக் கருதுவோம். முதலாம் உலகப் போரில் கட்டளையிடும் அதிகாரிகள் இளைஞர்களை - இதில் பலரும் சிறுவர்கள் - அவர்கள் எந்தவித முன்னேற்றத்திற்கும் சாத்தியமின்றி எந்திரத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்தும் தொடர்ந்து “முன்னணிப் படை”யாக அனுப்பிய உத்தரவுகளை நம்மால் “புரிந்து கொள்ள” முடியுமா. இத்தகைய முடிவுகளை “புரிந்து கொள்வது” சாத்தியமில்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக அவற்றின் மூலாதாரத்தை நாம் அறிவோம் - ஆகஸ்டு 4, 1914 அன்று வெடித்த இலாபம் மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கான போர் தான் அந்த மூலாதாரம். அதேபோல் நாஜி இயக்கத்தின், அழித்தொழிக்கும் அதன் வேலைத்திட்டத்தின் மூலாதாரத்தையும் நாம் அறிவோம், நம்மால் புரிந்து கொள்ள முடியும். உலகம் அதுவரை கண்டிருந்ததில் பெரியதும், மிக சக்திவாய்ந்ததும், அரசியல்ரீதியாக அபிவிருத்தியுற்றிருந்ததுமான ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தை அழிப்பது மற்றும், கிழக்கில் ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டுவது என்னும் முதலாம் உலகப் போரில் ஆரம்பித்த தனது திட்டத்தைத் தொடரும் பொருட்டு முதலாம் உலகப் போருக்குப் பின் ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கான புனர்வாழ்வு அளிப்பது ஆகிய இரண்டு முனைகளில் ஜேர்மன் முதலாளித்துவத்தின் நலன்களுக்கு அது சேவை செய்தது. ஜேர்மன் முதலாளித்துவத்தின் பொருளாதார நலன்களுக்கு யூதர்களின் பாரிய படுகொலை அவசியமாக இருக்கவில்லை என்று வாதிடலாம். ஆனால் ஜேர்மன் ஆளும் மேற்தட்டினரின் நிலைப்பாட்டை வரலாற்றுக்கு வெளியே மற்றும் காலம் மற்றும் நேர இடைவெளிக்கு அப்பாற்பட்டு கருத முடியாது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் தனது வேலைத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராகவும் தேசிய தலைமையாகவும் நாஜி இயக்கத்தை நோக்கி திரும்பியதையே வரலாற்று அபிவிருத்திகள் அர்த்தப்படுத்தின. அதே சமயத்தில், ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு மிகவும் அவசியமாயிருந்த நாஜி இயக்கமோ ஐரோப்பிய யூதர்களைக் குவித்துக் கொல்வதற்கு இட்டுச் சென்ற ஒரு இனவெறி வேலைத்திட்டத்தை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. வரலாற்று சடவாதம் குறித்த தனது தத்துவம் குறித்து விமர்சகர்களுக்கு மார்க்ஸ் பதிலளிக்கையில், 'சடப்பொருள் நலன்கள் கோலோச்சிய இன்றைய சமூகத்திற்கு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) இது பொருந்தியது என்று அவர்கள் ஒப்புக் கொண்ட போதிலும், ரோமன் கத்தோலிக்கவாதத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட மத்திய காலத்திற்கோ அல்லது அரசியலால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஏதென்ஸ் அல்லது ரோமுக்கோ பொருந்தாது' என்று நிலைப்பாடு கொண்டிருந்ததை குறிப்பிட்டுக் காட்டினார். இதற்குப் பதிலளித்த மார்க்ஸ், மத்திய காலம் மற்றும் ஏதேன்ஸ் மற்றும் ரோம் இவற்றின் தன்மை குறித்து தானும் நன்கு அறிந்து வைத்திருப்பதாகக் கூறினார். ஆயினும் ஏதேன்ஸ் மற்றும் ரோம் அரசியல் மீது உயிர்வாழ முடிந்ததைக் காட்டிலும் சற்றும் அதிகமாக கத்தோலிக்கவாதத்தின் மீது மத்திய காலத்து சமூகம் உயிர்வாழ முடியவில்லை என்பதே உண்மையாக இருந்தது என்றார் மார்க்ஸ். அவர் எழுதினார், “அதற்கு மாறாக இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெற்ற வகைமுறையானது ஏன் ஒரு விடயத்தில் அரசியலும் இன்னொரு விடயத்தில் கத்தோலிக்கவாதமும் தலைமை பாத்திரத்தை ஏற்றன என்பதை விளக்குவதாய் இருக்கிறது.”[29] இப்போது யூதஎதிர்ப்பு மற்றும் அது சேவை செய்யும் வர்க்க நலன்கள் குறித்த பிரச்சினையை ஆராய இந்த பகுப்பாய்வை விரிவாக்கிப் பார்க்கலாம். நிலப் பிரபுத்துவ சமுதாயத்தில், யூதர்கள் கத்தோலிக்க இறையியலுக்கும் பொதுவாக கிறிஸ்தவ இறையியலுக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையை முன்வைத்தனர். அவர்கள் பகானியர்கள் (pagans) அல்ல. அவர்கள் இறைவாசகத்தைக் கேட்டிருந்தனர், ஆனால் ஏசு கிறிஸ்துவை அவர்கள் நிராகரித்திருந்தனர். ஆயினும் அவர்கள் தான் கிறிஸ்துவம் அபிவிருத்தியுற்றதற்கு வேராக அமைந்தவர்கள். எனவே இறையியல் ரீதியாக அவர்கள் கிறிஸ்தவ போதனைகளுக்கான ஒரு அச்சுறுத்தலை தாங்கியிருந்தவர்களாய் இருந்தனர். அவர்களை சமூகத்தின் பிற பகுதியினரிடம் இருந்து பிரித்தெடுக்க வேண்டியிருந்தது. இந்த பிரிப்பு நிலப் பிரபுத்துவ சமுதாயத்திற்கு தீவிரமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்ததாய் இருந்தது. யூதர்கள் கிறிஸ்துவின் போதனைகளுக்கு செவிமடுத்திருந்தனர், ஆனால் அவற்றை நிராகரித்திருந்தனர். இந்த வாழும் நிராகரிப்பானது மிகவும் அபாயமானதாக இருந்தது, ஏனென்றால் பிரபுக்களும், இளவரசர்களும், திருச்சபையும் விவசாயிகள் மீது செலுத்திய சுரண்டலானது வெறுமனே படைபலத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை, மாறாக வர்க்க உறவுகள் கடவுளால் கட்டளையிடப்பட்டவை என்று கூறிவந்த கிறிஸ்துவத்தினால் வழங்கப்பட்ட கருத்தியலிலும் அது தங்கியிருந்தது. இந்த காலகட்டத்தின் கிறிஸ்தவ யூதஎதிர்ப்பு படைத்தவர்கள் எல்லாம் கருத்தியலின், இறையியலின் அடிப்படையில் தான் செயல்பட்டார்கள், ஆனால் அவர்களது யூதஎதிர்ப்பு என்பது நிலப் பிரபுத்துவ சமுதாயத்தின் வர்க்க உறவுகளையும் உற்பத்தி செய்பவர்களைச் சுரண்டும் அதன் குறிப்பான வகைமுறையையும் பராமரிப்பதில் ஒரு வெகுமுக்கிய பாத்திரம் ஆற்றியது. இப்போது நாஜி ஆட்சியைக் கருதுவோம். கொலைவெறி கொண்ட யூதவிரோதத்தில் முழுமையாக வெளிப்பாடு கண்ட உயிரியல் இனவாதம் மற்றும் தேசியவாதக் கருத்தாக்கங்களினால் இது ஆதிக்கம் செய்யப் பெற்றது. ஆனால் கத்தோலிக்கவாதத்தை சார்ந்து நிலப் பிரபுத்துவ சமுதாயம் வாழ்ந்ததை விடவும் சற்றும் அதிகமாய் ஜேர்மன் முதலாளித்துவமானது உயிரியல் இனவாதம் மற்றும் யூதவிரோதத்தை நம்பி வாழ முடியவில்லை. உபரிமதிப்பை கையகப்படுத்துவதன் மூலமும் திரட்டுவதன் மூலமும் மட்டுமே ஜேர்மன் மூலதனமானது வாழவும், விரிவடையவும், வலிமையாய் வளரவும் முடிந்தது. தொழிலாளர் இயக்கத்தை அழிப்பதும் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டுவதும் இதற்கு அவசியமாய் இருந்தது. இந்த முடிவை சாதிப்பதற்கான கருவி தான் நாஜி இயக்கமும் அதன் கொலைவெறி வேலைத்திட்டமும். இது தான் யூதப் படுகொலையின் அரசியல் பொருளாதாரம். Notes: 1. Robert Wistrich, Hitler and the Holocaust (Modern Library 2003), p. 6. 2. Max Horkheimer and Theodore W. Adorno, Dialectic of Enlightenment (Continuum New York 1997), p. xiii. 3. Cited in David Walsh “The Hurt Locker and the rehabilitation of the Iraq war: New York Times journalists weigh in”. 4. Ian Kershaw, Hitler Volume 1, (Penguin Harmondsworth (1998), pp. 379-380. 5. Leon Trotsky, The Struggle Against Fascism in Germany (Penguin Harmondsworth 1971), pp. 112-113. 6. Michael Burleigh, Weekly Standard, December 26, 2005. 7. Michael Burleigh, The Third Reich (Pan Books London 2001), p. 927. 8. Adolf Hitler, Mein Kampf Excerpts http://www.jewishvirtuallibrary.org/jsource/Holocaust/kampf.html 9. Konrad Heiden, Der Fuehrer, Volume 1 (Victor Gollancz London 1944), p. 59. 10. Lothrop Stoddard, The Revolt Against Civilization: The Menace of the Under-Man (Charles Scribner’s Sons New York 1922), pp. 245-246. 11. Ibid., pp. 162-163. 12. Ibid., p. 152. 13. Richard Evans, The Coming of the Third Reich (Allen Lane London 2003), p. 35. 14. Adolf Hitler, Mein Kampf (Houghton Mifflin Boston 1971), p. 655. 15. Hitler’s Second Book, Gerhard L. Weinberg ed. (Enigma Books New York 2003), p. 107. 16. Ibid., p. 116. 17. Adam Tooze, The Wages of Destruction (Allen Lane London 2006), p. xxiv. 18. Leon Trotsky, “What is National Socialism?” in The Struggle Against Fascism in Germany (Penguin Books Harmondsworth 1975), p. 414. 19. Friedrich Pollock “State Capitalism: Its Possibilities and Limitations” in The Essential Frankfurt School Reader, Andrew Arato and Eike Gebhardt eds. (Continuum New York 1994), p. 87. 20. Adam Tooze, The Wages of Destruction (Allen Lane London 2006), pp. 62-65. 21. Cited in Ian Kershaw, The Nazi Dictatorship (Arnold London 2000), pp. 61-62. 22. Cited in Jürgen Zimmerer, Colonialism and the Holocaust in Genocide and Settler Society, A. Dirk Moses ed. (Berghahn Books New York 2005), p. 49. 23. Cited in David Furber, “Near as Far in the Colonies: The Nazi Occupation of Poland” in The International History Review Vol. 26, No. 3 (September 2004), p. 541. 24. Rosa Luxemburg, The Junius Pamphlet, http://www.marxists.org/archive/luxemburg/1915/junius/ch08.htm. 25. Christopher R. Browning, The Origins of the Final Solution (University of Nebraska Press Lincoln 2004), pp. 216-223. 26. See http://en.wikipedia.org/wiki/The_Holocaust#Extermination_camps. 27. Cited in Alex Callincos “Marxism and the Holocaust” in The Yale Journal of Criticism Vol. 14, No. 2, (2001), p. 402. 28. Primo Levi, If This is a Man (Abacus London 1988), pp. 395, 396. 29. Karl Marx, Capital Volume 1, (Penguin Harmondsworth 1976), p. 176. |