Leon Trotsky - Culture and Socialism - 1927

WSWS : Tamil : நூலகம்

கலாச்சாரமும் சோசலிசமும் லியோன் ட்ரொட்ஸ்கி 1927
 
தொழில் நுட்பமும் கலாச்சாரமும்
 
ஆன்மீக கலாச்சாரத்தின் மரபியம்
 
நம் கலாச்சார முரண்பாடுகள்
 


 

ஜோர்ஜ் ஏலியட்ஸின் ஆதாம் பீட் புத்தகத்தின் 150-வது ஆண்டில் அதற்கான புகழாரம்
 
கலை பற்றிய கம்யூனிஸ்ட் கொள்கை (1923)
 

வர்க்கமும் கலையும்
சர்வாதிகாரத்தின் கீழ் கலாச்சாரம்

 

கலை இலக்கியம்

The Heritage of Spiritual Culture

ஆன்மீக கலாச்சாரத்தின் மரபியம்

Use this version to print | Send feedback

ஆன்மீக கலாச்சாரமும், பொருள்சார் கலாச்சாரத்தைப் போன்ற அதே முரண்பாட்டைக் கொண்டுள்ளது. பொருள்சார் கலாச்சாரத்தின் ஆயுதக் கிடங்குகளில் இருந்தும், தொகுப்புக்களில் இருந்தும் நாம் வில், அம்பு, கற்கருவிகள் அல்லது வெண்கலக்கால கருவிகளைச் சுற்றில் விடாமல், மாறாக மிகச் சமீபத்திய தொழில்நுட்பத்தின் மிகச் சிறந்த கருவிகளை எடுத்துக் கொள்ளுகிறோம் - அதே விதத்தில் தான் நாம் ஆன்மீக கலாச்சாரத்தையும் அணுக வேண்டும்.

பழைய சமூக கலாச்சாரத்தின் முக்கிய கூறுபாடாக மதம் இருந்தது. மனித அறிவு மற்றும் ஒற்றுமைக்கு அது மிக முக்கியமான வடிவமாக இருந்தது; ஆனால் இயற்கைக்கு முன்னால் மனிதனுடைய பெரும்பாலான பலவீனங்களும், சமூகத்திற்குள் அவனுடைய சக்தியற்ற தன்மையும் இவ்வடிவத்தில் தான் வெளிப்படுத்தப்பட்டன. நாம் மதத்தையும், மற்றும் அதனுடன் துணைநிற்கும் அனைத்தையும் முற்றிலும் நிராகரிக்கின்றோம். மெய்யியல் உடனான நிலைமை வேறுபாடானது. வர்க்க சமூகம் தோற்றுவித்த மெய்யியலில் இருந்து, நாம் இரண்டு விலைமதிப்பற்ற கூறுபாடுகளை உய்த்துணர வேண்டும்: அவை சடவாதமும் இயங்கியலுமாகும்.

சடவாதம் மற்றும் இயங்கியலின் இயல்பான கூட்டில் இருந்துதான் துல்லியமாக மார்க்சின் வழிமுறை தோன்றியதுடன், அவருடைய நெறி எழுந்தது. லெனினிசத்தின் அஸ்திவாரங்களிலும் இந்த வழிமுறையே தங்கி இருக்கிறது. விஞ்ஞானம் என்ற சொல்லின் உண்மையான பொருளுக்கு செல்வோமாயின், மனிதகுலம் அதன் நீண்ட வாழ்வில் சேகரித்து வைத்துள்ள மகத்தான அறிவு மற்றும் திறமை ஆகியவற்றின் தொகுப்பினை நாம் எதிர்கொள்கிறோம் என்பது இங்கே மிகவும் தெளிவாகிறது. யதார்த்தத்தை நுண்மையாக அறிதல் என்ற இலக்கைக் கொண்டுள்ள விஞ்ஞானத்தில் பல வர்க்க கலப்படங்கள் உள்ளன என்பதை ஒருவரால் சுட்டிக்காட்ட முடியும், இது உண்மையாகவும் உள்ளது. முற்றிலும் சரியே புகையிரதம் கூட சிலருடைய சலுகை நிலையையும், மற்றவர்களுடைய வறுமையையும் அடையாளம் காட்டுகிறது என்றால், இது இன்னும் கூடுதலான வகையில் விஞ்ஞானத்துக்கும் பொருந்தும். அதன் உள்ளடக்கம் புகையிரத பெட்டிகளைக் கட்டுவதற்குப் பயன்படும் உலோகம் மற்றும் மரத்தைவிட அதிக வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் இயற்கை சக்திகளை முற்றிலும் தன்னகப்படுத்துவதற்காக, இயற்கையை அறிய வேண்டிய தேவையினால் விஞ்ஞானத்தின் படைப்பாற்றல் அடிப்படையில் ஊட்டம் பெறுகிறது என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். இயற்கை விஞ்ஞானங்களில் கூட வர்க்க நலன்கள் சில தவறான போக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளன, தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்றபோதிலும், இந்த பொய்ம்மைப்படுத்தல் கூட  தொழில்நுட்ப வளர்ச்சியை நேரடியாகத் தடுக்கும் விதத்தில் உள்ள எல்லைகளின் வரம்பிற்குட்பட்டுள்ளன.

இயற்கை விஞ்ஞானங்களை நீங்கள் வேரிலிருந்து ஆராய்ந்தால், அடிப்படையான உண்மைகளைச் சேகரிப்பதிலிருந்து உயர்ந்த மற்றும் மிகச் சிக்கலான பொதுக் கருத்துக்கள் வரை, மிக அனுபவபூர்வமான விஞ்ஞான ஆய்வானது, அதன் பொருள்வகைக்கும், உண்மைக்கும் இடையே மிக நெருக்கமான மற்றும் மிக தெளிவான முடிவுகளை அளிக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். பொதுமைப்படுத்தப்படும் துறை (Generalizations of field) பரந்திருந்தால், இயற்கை விஞ்ஞானமானது மெய்யியல் பிரச்சினைகளுக்கு மேலும் நெருக்கமாக அருகே வருவதுடன், வர்க்கக் கருத்துக்களின் செல்வாக்கிற்கும் அது கூடுதலாக இயைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். சமூக விஞ்ஞானங்கள், “மனித இனவியல் என்று அழைக்கப்படுபவைகளிடம் வரும்போது பருப்பொருள்கள் (Matters) இன்னும் சிக்கல் வாய்ந்தவையாகவும், மோசமாகவும் உள்ளன. இங்கும் கூட, என்ன உள்ளது என்பதை அறியும் விரும்பும் அடிப்படையில் இயங்குகின்றது. இதனால், போன போக்கில், நமக்கு மிகச் சிறப்பான தொல்சீர் பூர்ஷ்வா பொருளாதார வல்லுனர்களின் சிந்தனைக் கூடம் கிடைத்தது.

ஆனால் இயற்கை விஞ்ஞானத்தை விட இன்னும் நேரடியாகவும், அவசியமானதாகவும் சமூக விஞ்ஞானங்களில் உணரப்படும் வர்க்க நலன், விரைவிலேயே முதலாளித்துவ சமூகத்தில் பொருளாதார சிந்தனை வளர்ச்சியை நிறுத்தத்திற்கு கொண்டு வந்தது. எவ்வாறிருப்பினும், இத்துறையில் பிறரை விட கம்யூனிஸ்டுக்களாகிய நாம் சிறப்பான தயார் நிலையில் உள்ளோம். தங்களைத்தாங்களே முதலாளித்துவ விஞ்ஞானத்தின் அடித்தளத்தில் இருத்திக்கொண்டும், திறனாய்வு செய்தும், தொழிலாள வர்க்கம் தோற்றுவித்த வர்க்கப் போராட்டத்தினால் விழிப்புணர்வு பெற்ற சோசலிச தத்துவவாதிகள் - மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தமது படைப்புக்களில், மிகச் சக்தி வாய்ந்த வரலாற்று சடவாத வழிவகையையும், மூலதனத்தில் (Capital) அதன் இணையற்ற பயன்பாட்டையும் தோற்றுவித்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக பொருளாதாரம் மற்றும் சமூகவியலின் துறைகளில் முதலாளித்துவக் கருத்துக்களின் செல்வாக்கிற்கு எதிராக நாம் பாதுகாப்பாக உள்ளோம் என்ற பொருளை நிச்சயமாக இது தராது. பழைய அறிவின்பொக்கிஷப் பெட்டகங்களில் இருந்து மிக ஜனரஞ்சக கதேட சோசலிச* மற்றும் மாற்றங்களை விரும்பாத ஜனரஞ்சகவாத போக்குகள் வெடித்தெழுந்து நம்முடைய அன்றாட வழக்கங்களின் ஒவ்வொரு கட்டத்திலும், தமக்கென இருந்த இடைமருவுகாலத்தின் முரண்பட்ட மற்றும் ஒழுங்குமுறையற்ற உறவுகளில் இவை விளைநிலங்களைத் தேட முற்படுகின்றன. ஆனால் இந்தப் பிரிவிலும் நாம் லெனினுடைய படைப்புக்களால் சரிபார்க்கப்பட்ட, செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சிசத்தின் மாற்ற முடியாத அளவு கோல்களைக் கொண்டிருக்கிறோம். அவை இன்றைய அனுபவங்களுடன் எங்களை  நாங்களே குறைவாக கட்டுப்படுத்திக் கொண்டு, பரந்தளவில் உலகெங்கிலும் உள்ள பொருளாதார வளர்ச்சி முழுவதையும் நாம் தழுவினால், அதன் அடிப்படை போக்குகளை ஊகத்தையொட்டிய மாற்றங்களில் இருந்து பிரித்தால், ஜனரஞ்சக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் சமூக விஞ்ஞானவாதிகள் மீது நாம் காணும் வெற்றி இன்னும் உறுதியாக இருக்கும். * கதேட சோசலிஸிட்டுகள்-1870களில் ஜேர்மனில் தோன்றிய சீர்திருத்தவாத போக்குகள்.

இந்தப்போக்கின் ஆதரவாளர்கள் பின்னர் ஜேர்மன் பாராளுமன்றத்தில் சோசலிஸ்டுகளுக்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். சட்டம், அறநெறி, பொதுவான சிந்தனைப் போக்கு ஆகிய பிரச்சினைகளை பொறுத்தவரை, முடியுமானால், பொருளாதாரத் துறையில் இருப்பது போல் முதலாளித்துவ விஞ்ஞானத்தின் நிலைமை இன்னும் கூடுதலாக வருந்த வேண்டிய நிலையில் உள்ளது. டஜன் கணக்கான உபதேச வகை குப்பைகளைப் படித்த பின்னர், ஒரு சிறிய அளவுதான் முத்துப்போன்ற உண்மையான அறிவைக் காண்பதற்கு முடியும். இயங்கியலும் சடவாதமும் உலகைப் பற்றிய மார்க்சிச அறிகையின் அடிப்படைக் கூறுபாடுகளாக உள்ளன. ஆனால் இதை எந்த அறிவுத்துறையிலும், ஒரு பொதுவான சிறப்புத் திறவுகோல் போல் பயன்படுத்தலாம் என்ற உட்குறிப்பை இது கொடுக்காது. இயங்கியலை உண்மைகள் மீது புகுத்த முடியாது, அது, உண்மையில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதாகும்; அது உண்மைகளின் இயல்பு மற்றும் வளர்ச்சியில் இருந்து அடையப்படுவதாகும். கணக்கிலடங்கா விடயங்களில் பெரும் ஆற்றலுடன் உழைத்ததின் விளைவுதான், உழைப்பின் மதிப்பு என்னும் கருத்தாய்வை பொருளாதாரத்தில் இயங்கியல் முறையைக் கட்டியெழுப்புவதற்கான திறமையை மார்க்சிற்கு அளித்தது. மார்க்சின் வரலாற்றுரீதியான வேலைகள், அவரின் பத்திரிகை கட்டுரைகளும் கூட, இதே முறையில் தான் படைக்கப்பட்டுள்ளன. இயங்கியல் சடவாதத்தை, அதன் உள்ளிருந்தே, பெரும் தேர்ச்சி அடைந்த பின்னர் தான், ஒருவரால் புதிய துறைகளில் அதை பயன்படுத்த முடியும். முதலாளித்துவ விஞ்ஞானத்தை தூய்மைப்படுத்தப்படுவதற்கு முதலாளித்துவ விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெறுவதால் மட்டுமே முடியும். முறையற்ற வெற்றுவிமர்சனம் அல்லது அப்பட்டமான கட்டளையிடல் மூலம் நாம் எதையும் சாதித்துவிட முடியாது. இங்கு ஆழமான மறு ஆக்கத்துடன், உய்த்துணர்தலும் பயன்படுத்துதலும் ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்கின்றன. நாம் வழிமுறையைக் கொண்டிருக்கிறோம், ஆனால் இன்னும் பல தலைமுறைகளுக்குச் செய்ய வேண்டிய பணியும் உள்ளது. விஞ்ஞானம் பற்றிய மார்க்சிச திறனாய்வு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது முற்றிலும் துதிபாடுதல் அல்லது பமுசோவிசம் என்ற தன்மைக்கு இழிந்துவிடும்.[1] உதாரணத்திற்கு உளவியலை எடுத்துக் கொள்வோம். பவ்லோவின் பிரதிபலிப்பியல் (reflexology) பற்றிய சிந்தனைகள் இயங்கியல் சடவாதத்தின் வழிவகைகளைத்தான் முற்றிலும் பின்பற்றுகிறது. உடற்கூறுபாட்டிற்கும் உளக்கூறுபாட்டிற்கும் இடையே உள்ள சுவரை அது அனைத்து காலத்திற்கும் அழித்துவிடுகிறது. மிக எளிமையான பிரதிபலிப்பு உடல்கூறுபாடாக உள்ளது.

மேலும் பிரதிபலிப்புகளின் அமைப்புமுறை நமக்குமுழு நனவை அளிக்கிறது. உடற்கூறுபாட்டு அளவின் திரட்சி ஒரு புதியஉளவியல் பண்பை அளிக்கிறது. பவ்லோவின் பயிலகத்தின் முறை பரிசோதனை களமாகவும், கடுமையானதாகவும் உள்ளது. பொதுவாகக் கூறப்படும் கருத்துக்கள் - ஒரு நாயின் உமிழ்நீரில் இருந்து, கவிதை வரை - படிப்படியாக வளர்ச்சி அடைந்தவையாகும். அதாவது, (அதன் சமூகப் பொருளுரைக்கு அல்லாமல்) அதன் உளவியல் இயக்க முறைக்கு. ஆனால் கவிதைக்கு இட்டுச் செல்லும் பாதைகள் குறித்து கண்டறியப்படவில்லை என்பது உண்மைதான். வியன்னாவின் உளவியல் பகுப்பாய்வாளர் பிராய்டின் (Freud) பயிலகம், பிரச்சினைக்கு வேறுவித அணுகுமுறை ஒன்றைக் கொண்டுள்ளது. மிகச் சிக்கல் வாய்ந்த, நேரிய உளவியல் நிகழ்போக்கிற்கு உந்துதல் கொடுக்கும் சக்தி உடற்கூற்றின் தேவைதான் என்பதை அது முன்கருத்தாகக் கொண்டுள்ளது. இது மிக அதிகமான வலியுறுத்தலை ஏனைய கூறுபாடுகளை விட்டுவிட்டு பாலியல் கூறுபாட்டின் மீது அதிக கவனம் செலுத்துகிறதோ இல்லையோ என்ற வினாவை ஒதுக்கிவைத்து விட்டுப் பார்த்தால், இப்பொதுத் தன்மையில் அது சடவாதம் ஆகும். ஏனெனில் இது ஏற்கனவே சடவாத வரம்பிற்குள் ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. ஆனால் உளப் பகுப்பாய்வாளர் முழு நனவுப் பிரச்சினையை பரிசோதனை ரீதியாக அணுகவில்லை, அதாவது கீழ்நிலை நிகழ்வுகளில் இருந்து உயர்ந்த தன்மைக்கோ அல்லது எளிய பிரதிபலிப்பு செயலில் இருந்து மிகச் சிக்கல் வாய்ந்த செயல்களுக்கோ அணுகவில்லை. மாறாக இந்த இடைப்பட்ட படிநிலைகள் அனைத்தையும் மதக் கற்பனை, இசைக் கவிதை அல்லது கனவு மற்றும் உளத்தின் (psyche) உடற்கூறு அஸ்திவாரங்களில் இருந்து ஒரே வீச்சில் மேலிருந்து கீழாக பாய்ந்து கடக்க முனைகிறார். உளம் (psyche) சுதந்திரமானது என்றும், “ஆன்மா” ("soul") என்பது கீழே முடிவற்ற ஒரு கிணறு போன்றது என்றும் கருத்துவாதிகள் கற்பிக்கின்றனர். பவ்லோவ், பிராய்ட் இருவருமே உடற்கூறுஆன்மாவின் கீழுள்ளது என்கின்றனர். ஆனால், ஒரு முத்துக் குளிப்பவர் போல் பவ்லோவ் (Pavlov) கீழ்ப்பகுதிக்கு இறங்கி பெரும் முயற்சியுடன் கிணற்றை கீழிருந்து மேல் வரை ஆராய்கிறார். இதற்கு மாறாக பிராய்ட் (Freud) கிணற்றிற்கு மேல் நின்று ஆழ்ந்த ஊடுருவும் பார்வையுடன், எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கும் சகதி நீரின் ஆழங்களின் இறுதிக் கோடுகளை பற்றியெடுக்க அல்லது ஊகிக்க முயல்கிறார். பவ்லோவின் வழிவகை பரிசோதனை முறையாகும். பிராய்டின் வழிவகை ஊக முறையாகும், சில நேரங்களில் பெரும் ஆச்சரியமானதாகவும் உள்ளது. உளவியல் பகுப்பாய்வுமுறையை மார்க்சிசத்துடன்பொருத்தமற்றது என்று அறிவித்து, பிராய்டிசத்திலிருந்து ஒதுங்குவது என்பது மிக எளிது, அல்லது இன்னும் துல்லியமாகக் கூறவேண்டும் என்றால் சுலபமானதுமாகும். ஆனால் எப்படியும் பிராய்டிசத்தை ஏற்க வேண்டும் என்னும் கட்டாயம் நமக்கு இல்லை. அது ஆராய்ச்சியில் இருக்கும் புனைவாகும்; சந்தேகத்திற்கிடமின்றி அது சில முடிவுகளையும், ஊகங்களையும் அளிக்கிறது, அவை சடவாத உளவியல் வகையில் செல்கின்றன. நாளடைவில் பரிசோதனை வழிமுறையும் சரிபார்த்தலுக்கே இட்டுச் செல்லும். ஆனால் மற்ற பாதையின் மீது தடைவிதிப்பதற்கு நம்மிடம் ஆதாரங்களோ உரிமையோ இல்லை; இது சற்றே நம்பிக்கைக் குறைவாக இருந்தாலும் கூட, அது பரிசோதனைப் பாதையால் எட்டப்படும் முடிவுகளை முன்கூட்டியே எதிர்நோக்க தொடர்ந்து முயல்கிறது, ஆனால் இது மிக மெதுவாக நடக்கிறது.[2} இந்த உதாரணங்கள் மூலம், ஓரளவிற்கேனும், நம் விஞ்ஞான மரபியத்தின் பன்முகத் தன்மையையும், அதை தொழிலாள வர்க்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு உள்ள வழிவகைகளில் உள்ள சிக்கல்களையும் காட்ட முற்பட்டேன்.

பொருளாதாரக் கட்டமைப்பில் விடயங்கள் கட்டளையால் முடிவெடுக்கப்படுவதில்லை என்றால், மேலும் நாம்வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், பின் விஞ்ஞானத்தில், அப்பட்டமான ஆணை எதையும் வழங்காது, மாறாக தீமையையும், சங்கடத்தையும் தான் அளிக்கும். இங்கு நாம்எப்படிக் கற்பது என்பது பற்றி கற்கவேண்டும்.” உலகில் தன்னை நோக்குநிலைப்படுத்திக் கொள்வதற்கான வழிவகைகளில் கலையும் ஒன்றாகும்; இவ்விதத்தில் கலையின் மரபியமானது விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் மரபியத்தைவிட மாறுபட்டது அல்ல - அதேபோல் குறைவான முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், விஞ்ஞானத்தைப் போலன்றி, கலை உலகை அறியும் ஒரு வடிவம், அது ஒரு விதிகளிலான அமைப்பு அல்ல. ஆனால் தோற்றங்களின் தொகுப்பாகவும், அதே நேரத்தில் சில உணர்வுகள் மற்றும் மனநிலை உணர்வுகளைத் தூண்டும் ஒரு சாதனமாக உள்ளது. கடந்த நூற்றாண்டுகளின் கலை, மனிதனை அதிக சிக்கல் நிறைந்ததாகவும், வளைந்து கொடுக்கும் தன்மையை உடையவனாகவும் செய்து, அவனுடைய உளத்தை உயர் மட்டத்திற்கு உயர்த்தி, அவனது மனத்தை பல விதங்களிலும் செழிப்புடையதாகச் செய்துள்ளது. இந்தச் செழிப்பானது கலாச்சார வெற்றியின் விலைமதிப்பற்ற தன்மையாக இருக்கிறது. எனவே பழைய கலையில் தேர்ச்சி அடைதல் என்பது ஒரு புதிய கலையைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான முன்னிபந்தனை என்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய சமூகத்தைக் கட்டமைப்பதற்கும் தேவையானது; ஏனெனில் கம்யூனிசத்திற்கு மிக அதிக வளர்ச்சி உடைய உளத்தைக் கொண்ட மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் உலகின் கலைத் திறன் அறிகையால் எம்மை செழுமையாக்குவதற்கான திறன் பழைய கலைக்கு இருக்கிறதா? ஆம், அதற்கு இருக்கிறது. இக்காரணத்தினால் தான் அது துல்லியமாக நம் உணர்வுகளுக்கு உரமூட்டி அவற்றைச் செழிக்க வைக்கும் திறனைக் கொண்டுள்ளது. பொறுப்பற்ற முறையில் பழைய கலையை நாம் கைவிட்டால், உடனடியாக நாம் ஆன்மாவில் வறியவராகத்தான் போவோம். கலை சில மனநிலைக்கு உணர்ச்சி ஊட்டுவதையே அதன் இலக்காக கொண்டுள்ளது, ஆனால் உண்மையை உய்த்தறிவதற்கு அல்ல என்ற போக்கு இன்று இங்குமங்குமாக நம்மைச்சுற்றி காணமுடியும். எனவே இந்த முடிவுரை: பிரபுக்கள் அல்லது பூர்ஷ்வாக்களுடைய கலையினால் என்ன விதமான உணர்வுகள் நம்மை பாதித்திருக்க முடியும்? இது அடிப்படையிலேயே தவறாக உள்ளது. அறிகையின் ஒரு சாதனம் என்ற முறையில், கலையின் முக்கியத்துவம்-வெகுஜனங்களுக்காக என்று மட்டும் இல்லாமல், ஆனால் குறிப்பாக அவர்களுக்காகவும்-இதன்புலனுணர்ச்சி முக்கியத்துவத்தை விட குறைந்துவிடவில்லை. வீரம் செறிந்த கவிதை மட்டும் இல்லாமல், கற்பனைக் கதை, பாடல், பழமொழி, மக்களின் பாட்டுக்களும் தோற்றவகைகளில் நமக்கு அறிகையை அளிக்கின்றன; அவை கடந்த காலத்தை ஒளியூட்டி, நம் அனுபவத்தைப் பொதுமைப்படுத்த செய்கின்றன, நம் தொடுவானங்களை விரிவாக்குகின்றன மற்றும் இம்முறையில் சிலஉணர்வுகளை தூண்டும் திறனையும் பெற்றுள்ளன. இது பொதுவாக அனைத்து இலக்கியத்திற்கும் பொருந்தும், பெரும் காப்பியங்களுக்கு மட்டுமில்லாமல் இசைக் கவிதைக்கும் பொருந்தும். இது ஓவியத்திற்கும் சிற்பக்கலைக்கும் கூட பொருந்தும். ஒரு குறிப்பிட்டவிதத்தில், இசை ஒரே விதிவிலக்காக உள்ளது; இதன் தாக்கம் மிகச் சக்தி வாய்ந்தது; ஆனால் ஒருபக்க சார்புடைடையது. இசை கூட இயற்கையின், அதன் ஒலி மற்றும் தாளங்களின் ஒரு குறிப்பிட்ட வகையில் அறிகையை (cognition) அடிப்படையாகக் கொண்டது என்பது உண்மையே. ஆனால் இங்கு அறிகை என்பது ஆழ்ந்து மறைக்கப்பட்டுள்ளது, அதையொட்டி இயற்கையின் தூண்டல்களின் விளைவுகள் மனிதனுடைய நரம்புகள் வழியாக முறிவடைகிறது; அதையொட்டி இசையே ஒரு தன்னிறைவு கொண்டவெளிப்பாடாக செயல்படுகிறது. அனைத்துவிதக் கலைகளையும் இசைக்கு ஒப்ப, “தொற்றும்”* ("Infection")  கலை என்ற விதத்தில் கொண்டு வர பலமுறை முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. அவை எப்போதுமே கலையில் காரணம் காணும் பங்கைக் குறைக்கும் முக்கியத்துவத்தைக் கொண்டு, ஒழுங்கற்ற உடல் கூற்றுத்தன்மைக்கு ஆதரவாக உள்ளன. இத்தன்மையில் அவை பிற்போக்குத்தனமாக இருந்தன, இருக்கின்றன இன்னும் மோசமான விதத்தில், “கலையின் அத்தகைய படைப்புக்கள் காட்சிகளில் அறிகையையும் அளிக்கவில்லை, கலைநயதொடர்வையும் அளிக்கவில்லை; அவை மிகவும் பயனற்ற பாசாங்குத்தனங்களை முன்வைக்கின்றன. அத்தகைய படைப்புக்களை நாம் ஒன்றும் குறைவாக வெளியிடுவதில்லை, துரதிருஷ்டவசமாக அவை மாணவர்களின் கலைப் பயிலக ஏடுகளில் மட்டுமில்லாமல், பல ஆயிரக்கணக்கான பிரதிகளாகவும் காணக்கிடக்கின்றன *இங்கு ட்ரொட்ஸ்கி, டோல்ஸ்டோயின் கருத்தான கலை என்பது உணர்வை சமூகமயமாக்கும் ஒரு வழிமுறை என்பதற்கு எதிராக திரும்புகின்றார். கலாச்சாரம் என்பது ஒரு சமூக நிகழ்வுபோக்கு. இக்காரணத்திற்காகவே, மக்களிடையே தொடர்பிற்கான ஒரு கருவியான மொழி, அதன் மிக முக்கியமான கருவியாக உள்ளது. மொழியின் கலாச்சாரமே, கலாச்சாரத்தின் அனைத்து துறைகளுடைய வளர்ச்சிக்கும் மிக முக்கிய நிபந்தனையாகும் குறிப்பாக விஞ்ஞானத்திலும், கலையிலும். முந்தைய அளவீட்டு கருவிகளில் திருப்தி இல்லாமல், தொழில்நுட்பம் புதிய கருவிகளை, மைக்ரோமீட்டர்கள், வோல்ட்மீட்டர்கள், இன்னும் பலவற்றை கூடுதலான துல்லியத் தன்மையை அடைவதின் நோக்கத்திற்காக படைத்தது போல், மொழித் துறையிலும் தக்க சொற்களைத் தேர்ந்தெடுக்கும் திறன், அவற்றை உரிய முறையில் இணைத்துப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றிற்கு சிறந்த துல்லியம், தெளிவு, தீவிரம் ஆகியவற்றுடன் நமக்கும் இடைவிடா, முறையான, கடும் உழைப்பு தேவைப்படுகிறது. இத்தகைய பணிக்கு அடிப்படை, கல்வியறிவற்ற நிலை, அரைகுறைக்கல்வி அல்லது குறைந்த தரமுடைய கல்வி இவற்றிற்கு எதிரான போராட்டம் தேவையாகும். இப்பணியில் அடுத்த கட்டம் தொல்சீர் ரஷ்ய இலக்கியத்தில் தேர்ச்சி பெறுவதாகும்.

ஆம், வர்க்க ஒடுக்குமுறைக்கு கலாச்சாரம் என்பது முக்கிய கருவியாக இருந்துள்ளது. ஆனால் கலாச்சாரம், அது மட்டுமே, சோசலிச விடுதலைக்கான கருவியுமாகவும் மாறமுடியும்.
 

1. தொழில் நுட்பமும் கலாச்சாரமும்
 
3. நம் கலாச்சார முரண்பாடுகள்