WSWS / Tamil / ICFI |
|
ஹீலி நான்காம் அகிலத்தை பாதுகாத்தல் Use this version to print | Send this link by email | Email the author பப்லோவாதிகளுடன் முறித்துக்கொண்டதும், அனைத்துலகக் குழுவை நிறுவியதும், 1956ல் உலகம் முழுவதும் கிரெம்ளின் அதிகாரத்துவத்திற்கும் அதன் துணை அமைப்புக்களுக்கும் ஏற்பட்ட நெருக்கடியின் வெடிப்பிற்கு நான்காம் அகிலத்தினுடைய இன்றியமையாத தயாரிப்பாக இருந்தது. மாஸ்கோவில் குருச்சேவ் ஓர் இரகசிய உரையாற்றினார் என்பதையும், அதில் ஜோசப் ஸ்ராலின் எவ்வாறு சோவியத் ஒன்றியத்தில் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாயிருந்த குற்றவாளி என்பது ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது என்ற செய்தி அறிக்கையையும், அந்த ஆண்டின் குளிர்காலத்தின் இறுதிநாட்களில், ஒரு சனிக்கிழமை காலை கேள்விப்பட்டது பற்றி ஹீலி பின்னர் அடிக்கடி நினைவு கூர்வதுண்டு. இந்த வாய்ப்பிற்குத்தான் வருடக்கணக்காக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் காத்துக் கொண்டிருந்தனர்! இச்செய்தி சரிதானா என்று உறுதிசெய்துகொண்ட உடனேயே, ஹீலி தனக்கே உரிய ஆற்றலுடன் பிரதிபலிப்பினை காட்டினார். பிரிட்டிஷ் பகுதியில் தனக்கோ, மற்றவர்களுக்கோ தெரிந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவர் பெயரையும் சேகரித்தார்; அதன்பின் நாட்டின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிவரை பயணம் செய்து, ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், குருச்சேவின் வெளியீட்டின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கலானார். பப்லோவாத திரித்தல்வாதத்திற்கு எதிராக அவர்கள் தெளிவு கொண்டிருந்ததின் விளைவாலேயே ஸ்ராலினிசத்தின் நெருக்கடியில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடைய தலையீட்டின் ஆற்றல் வலிமை பெற்றது. பிரிட்டிஷ் பிரிவு, ஸ்ராலினிசத்துடன் சமரசம் செய்து கொள்ளவோ, நிபந்தனையற்று சரணடையவோ செய்ய மறுத்திருந்த துல்லியமான காரணங்களினால், ஸ்ராலினிச கீழ்மட்ட அணிகளிடையே தகர்த்து வழி அமைக்க ஹீலியால் முடிந்தது, அதிலும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுஜீவிகளான கிளிப் சுலோற்றர், டாம் கெம்ப், பீடர் பிரையர் போன்றவர்களை வென்றுகொள்ளமுடிந்தது. ஸ்ராலினிச Daily Worker's இன் புடாபெஸ்ட்டிலிருந்த நிருபர், பீட்டர் பிரையர் 1956 நவம்பர் மாதம் ஹங்கேரியப் புரட்சி நசுக்கப்பட்டதைக் கண்ணுற்றபின், ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் நெருக்கடியும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு புதிய முக்கியத்துவம் நிறைந்த சக்திகளையும் அணிதிரட்டிக்கொண்டதும், பிரிட்டிஷ் பகுதியில் மேலதிகமாக அரசியல் மற்றும் அமைப்புரீதியான அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிக்க இரண்டு செயல்திட்டங்களைக் இயங்கச்செய்வதில் ஹீலிக்கு உறுதுணையாக இருந்தது. அவை News Letter, Labour Review எனும் ஏடுகளை வெளியிடத் தொடங்கியதுமாகும். News Letter தொழிற்சங்கங்கள், தொழிற்கட்சி இரண்டிற்குள்ளும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் சுயாதீனமான அரசியல் செயல்களை பெரிதும் வலியுறுத்தியது, அங்கு வலதுசாரி சமூக ஜனநாயகவாதிகள், மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் இரண்டுமே புரட்சிகர மார்க்சிசவாதிகளின் செல்வாக்கு உறுதியாக வளர்ந்துகொண்டு வருவதை அதிர்ச்சியுடன் கண்ட நிலையும் ஏற்பட்டது. Labour Review விரைவிலேயே சர்வதேசப் புரட்சிகர மார்க்சிசத்தின் தலையாய கருவி என்ற புகழை ஏற்படுத்திக் கொண்டுவிட்டது. ஸ்ராலினிச நெருக்கடியின் உட்குறிப்புக்கள் பற்றிய பரந்த விவாதங்களுக்காக அதிக அளவில் மத்தியவாதிகள், மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் கருத்து நீரோட்டங்கள் இடம் பெற்றாலும், Labour Review ஆசிரியர் குழுவின் கொள்கை சிறிதும் சளைக்காமல் புரட்சிகர மார்க்சிசத்தின் வேலைத் திட்டங்களை பாதுகாப்பதில் முன்நின்றது. தொழிற் கட்சியில் நுழைவு வேலை 1947ம் ஆண்டு, புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி (RCP) சிறுபான்மை தொழிற் கட்சிக்குள் நுழைந்ததிலிருந்து 1959ல் சோசலிச தொழிலாளர் கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திற்கிடையே, ஹீலி மேற்கொண்டிருந்த நுழைவு வேலையில் (Entry work) குறைபாடுகளையும் தவறுகளையும் கண்டிபிடிப்பது கஷ்டமல்ல. நுழைவுப்பணியே, அதன் தன்மையை ஒட்டி, புரட்சிகர தோழர்களை முற்றிலும் விரோதமான அரசியல் மற்றும் அமைப்பு பிரிவினரிடையே நிறுத்திவைக்கிறது. வலதுசாரி அதிகாரத்துவத்தினரால் தடுத்துநிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட வேண்டியிருக்குமோ என்ற நிரந்தர அச்சுறுத்தல், இதன் சுதந்திரமான இயக்கத்தை தவிர்க்கமுடியாமல் கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்திவிடும். மார்க்சிசமல்லாத பிரிவினருடன் தவிர்க்கமுடியாமல் உடன்பாடு கொள்ளவேண்டிய தேவையினால், விரோதப்போக்கு உடைய அமைப்பின் வரம்பிற்குள் புரட்சிப்பணி செய்தல் எப்போழுதுமே, முதலில் கருதியிருந்ததைவிட தவிர்க்கமுடியாத சலுகைகளை கூடுதலாக கொடுக்கவேண்டிய ஆபத்தையும் கொண்டுள்ளது. தொழிற்கட்சியின் துரோகங்கள் நிறைந்த நீரோட்டத்தில் படகை இயக்குவதில், அரசியல் ஆபத்துக்களை ஹீலி எப்பொழுதுமே தவிர்க்காமல் இருக்க முடிந்ததில்லை. ஆயினும்கூட, இவருடைய பணி புரட்சிகர மார்க்சிசத்தின் பாதாகையின் கீழ் நடாத்தப்பட்டது என்பதோடு, இன்றளவும் கூட அதன் குறை, நிறைகளுடன் அரசியல் அனுபவத்தில் செழிப்பான ஆதாரமாக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஓர் அத்தியாயமாக விளங்குகிறது. கனத்த அட்டையுடன் கூடிய பழைய Newsletter, Labour Review இதழ்களின் தொகுதிகளைப் புரட்டிப் படிக்கும்போது, அவற்றின் மிக உயர்ந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைப்பாடு, மற்றும் அன்றாட பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு சிறிதும் விட்டுக் கொடுக்காத போக்கு இவற்றால் ஊக்கம் பெறாமல் வாசிக்க முடியாது. 1958ம் ஆண்டு, Labour Review தன்னுடைய வாசகர்களுக்கு விளக்கியது, "தொழிலாளர் இயக்கத்தில் மார்க்சிச கருத்தை வழங்கும் கடின செயலில் ஈடுபடும் எவரும், போர்க்குணம் வளர்ந்துவரும் நேரங்களில்கூட எளிதான வெற்றிகளை எதிர்பார்க்க முடியாது என்று விளக்குகிறது. இது ஒரு மலையேற்றம் போன்று கடினச் செயல் ஆகும். முதலில், நமது வெளியீடுகளை படித்தவர் ஒருவர் இங்கு வெற்றிகொள்ளப்பட்டார், அங்கு ஒரு தொடர்பு கிடைத்தது, அங்கு ஒரு விவாதக் குழு அமைக்கப்பட்டது, பிறிதோரிடத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மார்க்சிச கருத்திற்கும் மூலோபாயத்திற்கும் போர்க்குணமிக்க ஒரு குழு வெற்றிகொள்ளப்பட்டது போன்றவை தெரியவரும். புரட்சிகர நெருக்கடி முற்றும் முன்பு, மார்க்சிச பதாகையின்கீழ் பல நூறாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு வரும் முன், மார்க்சியம் ஒன்றுதான் பரந்தமுறையில் மூலோபாயத்தைக் கொண்டுள்ளது என்று உணருபவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள்தான் வருங்கால தொழிலாள வர்க்க கட்சியின் விலைமதிப்பற்ற காரியாளர்கள் ஆவர். அவர்களை திரட்டுவதிலும், அவர்களுக்கு அமைப்புபற்றி, அரசியல் கருத்துக்களிலும், தத்துவார்த்தத்திலும் பயிற்சியளிப்பதில் கவனமோ அல்லது முயற்சியோ ஒன்றைவிட ஒன்று பெரியது என கருதக்கூடாது. (August-September 1958, p.97). இதன் பின்னர், Labour Review எத்தகைய விதமான மார்க்சிச அமைப்பை நிறுவுவதற்குப் போராடி வருகிறது என்பதைக் குறிப்பிடுகிறது: "தங்கள் தவறுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளும் முன்னோக்குகளற்ற அல்லது வேர்களற்ற, திறனற்ற, கசப்படைந்த கோட்பாட்டினர் குழு அல்ல; தங்கள் பார்வையின்கீழ் நடந்துகொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தை தவிர, வேறு எதைப்பற்றியும் ஏதேனும் கூறவியலும் நல்லெண்ணமுடைய பல்கலைக் கழகப் பேராசிரியர்களோ, எழுத்தாளர்களோ அல்ல; உண்மையில் மாஸ்கோ கட்டுப்பாட்டிலுள்ள மார்க்சிசத்திற்கு உதட்டளவில் சேவை செய்யும் கட்சியுமல்ல. இல்லை, Chartists, Clydeside தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் மார்க்சிச இயக்கத்தின் அமைப்பு, பள்ளங்களிலும், தொழிற்சாலைகளிலும், கட்டிடம் கட்டும்பெரும் இடங்களிலும் இருக்கும்; இது 'அறிவுஜீவித்தன்மை' என்பது ஓர் அழுக்கான சொல்லாக இராத எல்லா தொழிலாளர்களின் முயற்சிகளையும், போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு பணி செய்யவேண்டும் என்று கருதும் அறிவுஜீவிகளையும், ஒன்றாக இணைக்கும்; புரட்சி வேகம், கட்டுப்பாடு, உறுதியானதன்மை, சர்வதேசியம் என்ற கருத்துக்களின் இணைப்பிற்கு நேர்த்தியாக போல்ஷிவிசம் என்ற பெயர் அமைந்துள்ள மரபு பெருமைகளிடம், முன்னோக்கி அழைத்துச் செல்லும், அவற்றைப் புதிய சூழ்நிலையில் நம்முடைய மண்ணின் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் சிறந்த மரபுகளுடன் ஒன்றாக இணைக்கும். மார்க்சிய இயக்கம் பிரிட்டனில், சிலீணீக்ஷீtவீsts, சிறீஹ்பீமீsவீபீமீ வேலைநிறுத்தம் செய்தவர்கள், நடவடிக்கைகள் செயற்குழுக்கள், 1920-24லிருந்த கம்யூனிஸ்ட் கட்சி, தேசியச் சிறுபான்மை இயக்கம், முப்பதுகளின் மார்க்சிசக் குழுக்கள், நாற்பதுகளின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கு பெருமைவாய்ந்த பின்தோன்றலாகத் திகழும். (ibid) தொழிற் கட்சிக்குள் ஹீலி ஆற்றிய பணி, பிரிட்டனில், ட்ரொட்ஸ்கிச அனுபவத்தின் முக்கிய பகுதி என்பதற்கு திறனாய்வு செய்யத் தகுதி படைத்துள்ள போதிலும், 1953 பிளவிற்குப்பின், குட்டி முதலாளித்துவ திரித்தல்வாதத்தின், பிற்போக்குத் தாக்குதலுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் வேலைதிட்டத்ததைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய பணி, இன்னும் மகத்தான, நீடித்த வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றதாகும். ஹீலியும், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளும், சோசலிச தொழிலாளர் கட்சி கொள்கையற்ற முறையில் பப்லோவாதிகளுடன் இணைவதற்கு எதிராக நடத்திய போராட்டம், 20-ம் நூற்றாண்டில், மார்க்சிசத்திற்கு கிடைத்த பங்களிப்புக்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவற்றுள் ஒன்று என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும். புரட்சிகர தொடர்ச்சியின் உயிரோட்ட இழைகள் அறுந்துபோயிருக்கக் கூடும் என்ற காலகட்டத்தில், சோசலிச தொழிலாளர் கட்சியின் ஓடுகாலிகளுக்கு எதிராக ஹீலி எடுத்த நிலைப்பாடு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை, திரித்தல்வாத ஸ்ராலினிச, தேசிய முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ தீவிரவாத அரசியல் ஆகியவற்றின் திரித்தல்வாத சேற்றில் அரசியலளவில் கலைத்திருந்திருக்கும் உடனடி ஆபத்திலிருந்து காப்பாற்றியது. அவர்களால் நல்லமுறையில் தொகுக்கப்பட்ட சொற்றொடரான "ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியில், இன்றைய கட்டத்தில், தொடர்ந்திருக்கும் சந்தர்ப்பவாதம்"தான் தொழிலாள வர்க்க இயக்கத்தை எதிர்கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சினை என்று, ஹீலியும் சோசலிச தொழிலாளர் கழகமும் வலியுறுத்தின. (World Prospect For Socialism, Labour Review, Winter 1961, p.90). அந்தப் போராட்டத்தின்போது தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், ஒரு புரட்சிகர சர்வதேசிய வாதிகளின் மார்க்சிச கல்வியூட்டலுக்கும் நான்காம் அகிலத்தை தத்துவார்த்த ரீதியாக மறு ஆயுதபாணியாக்குவதற்கும், அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தன. இவற்றில் பல, கிளிவ் சுலோற்றரால் எழுதப்பட்டவை என்றாலும், திரித்தல்வாதிகளுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் ஹீலிதான் தலைவர் என்பதை மறுப்பதற்கு இல்லை. முடிவில்லாத ஹீலி எதிர்ப்பு அவதூறுகள் மற்றும் தூண்டிவிடுதல்கள் நீரோட்ட வடிவத்தில் இது பப்லோவாதிகளாலே உறுதிப்படுத்தப்பட்டது. அவை குட்டி முதலாளித்துவத்திற்குள், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டம் பற்றிய வெறுப்பும் பயமும், செறிந்த அரசியல் வெளிப்பாட்டை விட குறைவானதாக இருக்கவில்லை. குணவர்த்தனாக்கு கனன் எழுதிய கடிதம் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிரான நீடித்த போராட்டம், லங்கா சமஜமாஜ கட்சியின் (LSSP) லெஸ்லி குணவர்த்தனா, பப்லோவாதிகளுடன் ஐக்கியம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடத்த விருப்பம் உடையதாக தெரிவித்தை தொடர்ந்து, 1957 மார்ச் மாதம் கனன் எழுதிய கடிதம் ஒன்றில் தொடங்கியது. இந்தக் கடிதம் தனது முகத்தில் விழுந்த குத்துப் போல் இருந்தது என்று, ஹீலி அடிக்கடி நினைவு கூர்வதுண்டு. இந்தச் சந்தேகத்திற்குட்பட்ட முயற்சியில் இறங்குவதற்குமுன், பிரிட்டிஷ் பகுதியைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்ற அக்கறையை, கனன் காட்டாத உண்மை, அரசியல் நெறியில் நுட்பமான வழிகளை அறிந்துள்ள சோசலிச தொழிலாளர் கட்சி, மார்க்சிச அடிப்படையில் சர்வதேச ஒத்துழைப்பு பற்றி உண்மையில் அதிக நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டியது. 1957ம் ஆண்டு மே 10 அன்று, ஹீலி, கனனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி, ஐக்கியம் பற்றிய பிரச்சினையை அமைப்புரீதியாக அணுகுவதை நிராகரித்து, பப்லோவாதிகளின் திரித்தல்வாதம் பற்றிய நிலைப்பாடு 1953 பிளவிற்குப்பின் கூடுதலான, வரையறுக்கப்பட்ட தன்மையைப் பெற்றுவிட்டது என்றும் எச்சரித்தார். ஸ்ராலினிசத்தின் நெருக்கடி, இன்னும் கூடுதலான வளைந்து கொடுக்காத தன்மையைத்தான் ட்ரொட்ஸ்கிச வாதிகளிடம் தோற்றுவிக்கவேண்டும் என்றும், அது பப்லோவாத திரித்தல்வாதம் பற்றிச் சற்றும் சளையாத போராட்டத்தின் அடிப்படையில்தான் வளர்க்கப்பட முடியும் என்றும் வலியுறுத்தினார். "அண்மையில், உலகப் போருக்குப் பின்னான நம்முடைய இயக்கத்தின் உள்ஆவணங்களை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்," என்று கனனுக்கு எழுதினார். "இக்காலக்கட்டத்தைப் பற்றிய புறநிலை ஆய்வு, வருங்காலத்தில் நம்முடைய காரியாளர்களுக்கு கல்வியூட்டுவதில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். பப்லோ மற்றும் ஜெர்மைன் ஆகியோரின் இரட்டைப் பேச்சு, கண்டத்தில் நம்முடைய தோழர்களுக்கு முன்பு பெருமளவு பிழையான, பயங்கரமான விளைவிகளை ஏற்படுத்தியுள்ளது; 20ம் காங்கிரசிற்கு பிறகு நிலைமை நமக்கு அனுகூலமாக இருக்கிறது என்ற வெறுமனே அறிவிப்பதின்மூலம் இதனை சரிசெய்துவிட முடியாது. நீங்கள் எவ்வாறு சட்மன், பேர்ன்ஹாம் இவர்களுக்கு எதிரான போராட்டம் பற்றிய நூல்கள் மூலம் செய்யமுடிந்ததோ, அதுபோல எவ்வாறு பப்லோ வளர்ச்சியுற்றார், அவருடைய கொள்கைகள் வளர்ச்சியுற்றன என்பதைப்பற்றியும், நம்முடைய காரியாளர்களுக்கான மார்க்சிச கல்வியூட்டல் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். புறச்சூழ்நிலை மட்டுமே இதைசெய்வதற்குப் போதுமானதாக இருக்காது.... "எந்த நிபந்தனையுமின்றி, இப்பொழுதுள்ள சாதகமான அரசியல் நிலைமை நம்முடைய இயக்கத்தின் தனிமைப்படலை பண்பிட்டுக் காட்டிய சிதைவுகளையும் பிளவுகளை தடுத்து நிறுத்தக்கூடும் என்று நாம் வைத்துக்கொண்டாலும், 1953-ல் பப்லோவும் ஜெர்மைனும் எடுத்துரைத்த "வெகுஜன அழுத்தம்" தத்துவங்களைப் போன்றுதான் இது ஒருதலைப்பக்கமான மற்றும் தவறான முடிவைக் கொடுக்கும் வழியில்தான் அழைத்துச் செல்லும். இந்தக் காலகட்டத்தில், நம்முடைய காரியாளர்களை வலுப்படுத்தவேண்டியது மிகமுக்கியமானது என்பதுடன், இது திரித்தல்வாதம் பற்றிய பிரச்சினைகளை முழுமையாக அறிந்தால்தான் முடியும். இது, நம்முடைய இயக்கம், மிக முக்கியமான முழு நனவுடன் செய்யவேண்டிய கடமை ஆகும். (Trotskyism Versus Revisionism [London: New Park Publications, 1974] vol.3, pp.33-34). சோசலிச தொழிலாளர் கட்சிக்கும், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும் இடையே இருந்த உறவு சீர்குலையத் தொடங்கியதும், பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் ஐக்கியம் பற்றிய அதன் கண்ணோட்டம் பற்றி அனைத்துலகக் குழுவிற்குள் பொது நிலைப்பாட்டை உருவாக்கி கொள்வதற்கான முயற்சியில், கனனிடமும் மற்ற சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர்களுடனும், 1958 கடைசியிலும், 1960ன் முற்பகுதியிலும், இரண்டு தடவை, கனடாவில் ஹீலி விவாதங்களை நடத்தினார். மறு ஐக்கியம் பற்றிய எந்த இறுதி முடிவும் 1953 பிளவிற்குக் காரணமான அரசியல் கருத்து வேறுபாடுகளை தெளிவுபடுத்துவதை பொறுத்துத்தான் என்று, ஹீலி தொடர்ந்து வலியுறுத்தினார். அமெரிக்க, பிரிட்டிஷ் அணுகுமுறையில் எந்த உறுதியான உடன்பாடும் அடையப்படமுடியவில்லை என்பதுடன் இரு பகுதிகளும் தத்தம் வழியில் செல்ல உள்ளனர் என்ற வெளியிடப்படாத நிலையின் உணர்வுதான் எஞ்சியது. ஆனால் விவாதங்களில் சிலசமயம் மிருதுவான கணங்களும் இருந்தன. ஒரு கட்டத்தில், கனன், ஹீலியிடம் அவருக்குக் கட்டாயமாக புதிய உடைகள் தேவையென்று உடைத்துக் கூறினார்; பெரும் ஆரவாரத்துடன் சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர்கள், ஹீலியை அருகிலிருந்த பல்பொருள் அங்காடிக்கு அழைத்துச் சென்றனர். சில மணி நேரம் கழித்து கனனுடைய விடுதி அறைக்கு ஹீலி புதிய உடைகளுடன் வந்தபொழுது, ஹீலியை ஏற இறங்கப்பார்த்து, "மோசமில்லை, இது மோசமில்லை" என்று கனன் குறிப்பிட்டார். "ஆனால், வழியை மாற்றுங்கள், நாம் அதை எடுத்துக் கொண்டுவிடுவோம்" என்று கனன் கூறினார். ஆனால், அனைத்துலகக் குழுவின் கொள்கையை மாற்றக் கருதியது கனன்தான்; 1961 ஜனவரி மாதம் 2ம் தேதியன்று, சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழு சோசலிச தொழிலாளர் கட்சிக்கு ஒரு கடிதம் எழுதியது; இதை திட்டமிடப்பட்டிருந்த பப்லோவாத திரித்தல்வாதத்துக்கு நிபந்தனையற்ற சரணடைதலை எதிர்க்கும் போர்ப் பிரகடனம் என்றே விளக்கிக் கூறமுடியும். சோசலிச தொழிலாளர் கழகம் கனனிடம், அவர் எழுதிய "பகிரங்கக் கடிதத்தில்" உள்ளது பற்றியே நினைவுபடுத்தி, அதன் கோட்பாடுகளில் இருந்து எந்தவிதமான பின்வாங்கலும், தொழிலாள வர்க்கம் முன்போன்று சர்வதேச அளவில் எழுச்சி கொள்ளக்கூடிய சூழ்நிலையில், "ட்ரொட்ஸ்கிச இயக்கம் உலக வரலாற்றளவில் மிகப்பெரிய தவற்றினைச் செய்துவிடக்கூடிய முக்கியத்துவத்தைப் பெறும்" என்ற எச்சரிக்கையையும் விடுத்தது. இதன்பின், சோசலிச தொழிலாளர் கழகம், சோசலிச தொழிலாளர் கட்சிக்கு கீழே கூறப்பட்டுள்ள ஆலோசனையைத் தெரிவித்தது: "ட்ரொட்ஸ்கிசத்தை எதிர்நோக்கியிருக்கும் வாய்ப்புக்களின் பரந்த தன்மையைக் கருத்தில் கொண்டு, அரசியல், கொள்கையளவிலான தெளிவுத்தன்மையின் தேவை ஏற்பட்டுள்ளதால், திரித்தல்வாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக நம் வழியைப் புலப்படுத்த வேண்டிய கட்டாயம் அவசரமாக உள்ளது. பப்லோவாதம், ட்ரொட்ஸ்கிசத்திற்குள்ளான ஒரு போக்கு என்று கருதியிருந்த காலகட்டம் முடிவை நெருங்கிவிட்டது. இதைச் செய்யாவிடில், இப்பொழுது ஆரம்பித்துள்ள புரட்சிகரப் போராட்டங்களுக்கு நாங்கள் தயார் செய்து கொள்ள முடியாது. சோசலிச தொழிலாளர் கட்சி எங்களுடன் நனவுபூர்வமாக இந்த வழியில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம்." (ibid.,p.49). சோசலிச தொழிலாளர் கழகம் கோட்பாடற்ற மறு ஐக்கியத்தை எதிர்க்கிறது பப்லோவாதத்துடனான சந்தர்ப்பவாத மறு ஐக்கியத்திற்கு சோசலிச தொழிலாளர் கழகம் இப்பொழுது வெளிப்படையாகவே தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டதால், சோசலிச தொழிலாளர் கட்சி மிகுந்த கடினமான கசப்புணர்வுடன் தன்னுடைய விடையைக் கொடுத்தது. 1961, மே 10ம் தேதி, கனன் ஜோசப் ஹான்செனுக்கு ஒரு கடிதம் எழுதினார்; இதில் அவர் "பிரிட்டனில் வெடித்துள்ள ஒரு புதிய-ஓஹிலியவாத (Neo-Oehlerite) வெறி அலை, நம்மோடு கூர்மையான மோதலுக்கு அவர்களை அழைத்து வரத் தவறாது" என்று குறை கூறினார். இரண்டே நாட்களுக்குப் பிறகு, கனன், பாரெல் டொப்சிற்கு ஒரு கடிதம் எழுதினார்: "எங்களுக்கும் ஜெரிக்குமிடையே உள்ள இடைவெளி தெளிவாகவே அதிகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதை உணரமுடிகிறது; ஆனால் இந்தச் சமீபத்திய போக்கு எவ்வாறு திருப்பப்படமுடியும் என்பது தெரியவில்லை. என்னுடைய கருத்தில், ஜெரி பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்பது மட்டுமல்லாமல், தன்னுடைய கட்சி முழுவதையும் அவருடன் அழைத்துக் கொண்டு செல்கிறார்." ( ibid., pp.71) [1] Hugo Oehler உடைய ஆவியை இத்தருணத்தில் கனன் அழைத்தது, ஹீலிக்கு எதிராக இழிசொற்கள் கூறும் பிரச்சார அரங்கிற்கு சர்வதேச முறையில் வகை செய்து, கியூப புரட்சியை எதிர்த்த "மிகத்தீவிர இடதுசாரி குறுங்குழுவாதி" என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது! ஹீலியின் "குறுங்குழுவாதம்" என்பதன் உறைபொருள், மார்க்சிச கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அடிப்படைகளை துறக்க மறுத்துலுக்கும், எந்தவொரு நாட்டில் அரசியல் மேலாதிக்கம் கொண்டிருக்கும் ஸ்ராலினிசத்திற்கோ, முதலாளித்துவ தேசியவாதத்திற்கோ அல்லது குட்டி முதலாளித்துவ தீவிரவாத சக்திகளுக்கோ தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்யும் பப்லோவாத கருத்துடன் சேர்ந்து செல்ல மறுத்ததைக் கொண்டிருக்கிறது. ஹீலி, கியூப புரட்சியை எதிர்த்தார் என்ற குற்றச் சாட்டைப் பொறுத்தவரையில், இது, சோசலிச தொழிலாளர் கட்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட சர்வதேச அளவில் ஜோசப் ஹான்சனால் பரப்பப்பட்ட ஓர் அப்பட்டமான பொய். இதனுடைய நோக்கம், சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் ஏனைய பப்லோவாத அமைப்புக்களின் அரசியல் ரீதியாக நோக்குநிலைமாறிய உறுப்பினர்களிடம் சோசலிச தொழிலாளர் கட்சி பற்றித் தவறான கருத்தைக் கொள்ளவேண்டும் என்பதற்காக, சிக்கலான கியூப பிரச்சினை பற்றிய சோசலிச தொழிலாளர் கழகத்துடைய பொதுக்கருத்து என்ன என்றுகூட கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக இட்டுக் கட்டப்பட்டது. இதனை ஹீலி பின்னர் நினைவு கூறுகிறார்: "இந்த அவதூறினைப் பரப்ப ஹான்சன் மிகவும் சுறுசுறுப்பு அடைந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூப மக்களை நசுக்கிவைக்கவில்லையா? அதுதான் செய்தது, சோசலிச தொழிலாளர் கழகம் கியூபாவை ''தொழிலாள வர்க்க'' நாடு என்று வரையறை செய்வதற்கு தயக்கம் காட்டினால், அது சுயமாகவே சோசலிச தொழிலாளர் கழகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டு என்று அர்த்தப்படாதா?. "இந்தக் கதையைத்தான் அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் கூட்டாக இருந்த சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு எதிராக, சோசலிச தொழிலாளர் கட்சியை சுற்றியுள்ள அரசியல் சூழ்நிலையை நச்சுப்படுத்திடவேண்டுமென்பதற்காக பரப்பி வந்தார். "இவற்றோடெல்லாம் சேர்ந்து, சோசலிச தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள், கியூபாவிற்கு செல்லுவதற்கு, அவர்களை அந்த 'சோசலிச நாட்டை' பார்த்து அறிந்து கொள்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர். "அமெரிக்காவிலிருந்து, அதன் சிகப்பு-எதிர்ப்பு பழிவாங்கல் வேட்டையாடல் சூழ்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பார்வையில் கியூபாவை அவர்கள் பார்த்ததெல்லாம், மிகப் பிரமாதமாக இருந்தது; அவர்களுடைய ஒரே குறை அவர்கள் அங்கு குறுகிய காலம்தான் இருக்க முடிந்தது என்பது ஆகும். "எவ்வாறிருந்தபோதிலும், இது ஹான்சனுடைய நோக்கத்திற்கு உதவியது. அமெரிக்க மற்றும் கனடியச் சுற்றுலாப் பயணியர் திரும்பியதுடன், அவர் சொல்லிக் கொண்டிருந்தார்: "இப்பொழுது நீங்கள் சோசலிச தொழிலாளர் கழகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எப்படி உதவுகிறது என்பதைக் கண்டீர்கள். அவர்களுடைய செய்தி அறிவிப்புக்களைப் படிக்கத் தேவையில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடைய ஆதரவாளர்களுடன், ஜிம் கனன் விவாதம் வைத்துக் கொள்ளாததில் சரியான முடிவே எடுத்துள்ளார், இல்லையா?" என வினவ, அவர்கள் வருந்தத்தக்க முறையில், ட்ரொட்ஸ்கிச வழிமுறையின் ஸ்ராலினிச திரித்தல்களுக்கு "ஆமாம்" என்று தங்கள் பங்குக்கு கூறினர். (Problems of the Fourth International [New York: Labour Publications, 1972] p.26). சோசலிச தொழிலாளர் கழகத்தின் செய்தியேடுகள் பலவற்றில், கியூப புரட்சியை ஐயத்திற்கிடமின்றி, அமெரிக்க ஏகாதிபத்திய ஆத்திரமூட்டலிலிருந்து பாதுகாத்து ஹீலியே எழுதியவை உட்பட கணக்கிலடங்கா கட்டுரைகள் பல இருந்தன. ஆனால், சோசலிச தொழிலாளர் கழகம், ஒடுக்கப்பட்ட நாடு என்ற முறையில் கியூபா கொள்கையளவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது, பிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியை சோசலிச ஆட்சி என்று வரையறுக்கவேண்டும் என்ற பிழையான வாதத்தை நிராகரித்தது. சோசலிச தொழிலாளர் கட்சி, கியூபாவை பெருமைப்படுத்தும் நோக்கத்துடன் "தொழிலாளர் அரசு" என்று வர்ணிப்பது, பப்லோவாத திரித்தல்வாத பார்வைக்கும், வழிமுறைக்கும் நிபந்தனையின்றி சரணடைவதின் அரசியல் விளைவு என்பதை சரியாக உணர்ந்தது; சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு இன்றியமையாத நிபந்தனை தொழிலாள வர்க்கத்தின் சொந்த மார்க்சிச கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாய் புரட்சிகரமாய் அணிதிரட்டல் என்பதை பப்லோவாதம் ஒப்புக்கொள்ளவில்லை. 1961 இலிருந்து 1964 வரை ஹீலியும், அவருடைய சோசலிச தொழிலாளர் கழகமும் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிராகப் பாதுகாத்த அரசியல் பாதையை, 1970 களிலும் 1980 களிலும் தொழிலாளர் புரட்சிக் கட்சி கொண்டிருந்த வழியோடு ஒப்பிட்டுப்பார்த்தால், அதைப்போல் ஹீலியின் சீரழிவை வேறு எதுவும் வெளிப்படையாக அம்பலப்படுத்திக் காட்டாது. உண்மையில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வெட்கமின்றி, நம்பிக்கையற்ற தன்மையில், தொழிலாளர் புரட்சிக் கட்சி வாதிட்டது போல், 1960களின் முற்பகுதியில் சோசலிச தொழிலாளர் கழகம் முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஸ்ராலினிசம் தொடர்பான சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை கொண்டிருந்தால், அது சோசலிச தொழிலாளர் கட்சியுடன் முறித்துக்கொள்ளவோ, ஜூன் 1963ல் பப்லோவாதியுடன் மறு ஐக்கியத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கவோ காரணமிருந்திருக்காது. 1961 இலிருந்து 1964 வரை சோசலிச தொழிலாளர் கழகத்தால் தயாரிக்கப்பட்ட முக்கியமான ஆவணங்கள், பின்தங்கிய நாடுகளில் முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு ஒரு புறமும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குருச்சேவின் அணிக்கு மறுபுறமும் பப்லோவாதத்தின் அடிபணிவானது எதிர்ப்புரட்சிகர தாக்கங்களை கொண்டிருப்பதை திரும்பத்திரும்ப வலியுறுத்திக் காட்டுகின்றன. உதாரணமாக ,செப்டம்பர் 1963ல் அனைத்துலகக் குழுவிற்கு அனுப்பிய தன்னுடைய அறிக்கையில் சோசலிச தொழிலாளர் கட்சியுடன் ஏற்பட்ட பிளவின் மைய அரசியல் பிரச்சினைகள் பற்றிச் சுருக்கமாகக் கூறுகையில், கிளிப் சுலோற்றர், ட்ரொட்ஸ்கிசமும் பப்லோவாதமும் முக்கியமான பிரச்சினைகளில் எவ்வாறு மாறுபட்டிருந்தது என்று சுட்டிக்காட்டுகிறார்: "பின்தங்கிய நாடுகளில், தலைமை பற்றிய நெருக்கடியை தீர்ப்பதற்குப் போராடுதல் என்றால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்காக, பாட்டாளி வர்க்க கட்சிகள் அமைக்கப் பாடுபடுதல் என்று பொருளாகும். அதிக அளவில் குட்டி முதலாளித்துவ வர்க்கம் அல்லது விவசாயிகள் இருக்கும் நாடுகளில், தலைமையின் பாட்டாளி வர்க்க குணாம்சத்தை வலியுறுத்தவேண்டியது குறிப்பாக அவசியமாகும். இந்தப் பிரச்சினையில் திரித்தல்வாதிகள், லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோருக்கு எதிரான பாதையைக் கொண்டு, குட்டி முதலாளித்துவத்திற்கு, தேசியவாதத் தலைமைகளுக்கு தங்களின் நிபந்தனையற்ற சரணடைதலை நியாயப்படுத்தும் வகையில், புதிய முறையிலான விவசாயிகளைப்பற்றி ஊகக் கருத்துக்களைக் கூறுகின்றனர். இவையனைத்தும், அல்ஜீரியாவில் குட்டிமுதலாளித்துவ தலைமையான FLN க்கும், கியூபாவில் காஸ்ட்ரோவுக்கும் சரணடைந்ததை மெல்லிய துணியால் மறைப்பது போலாகும்.... "ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் அரசியல் புரட்சி இவற்றைப் பொறுத்தவரையில் வாதம் இன்னும் தெளிவாகக் கூறப்படுகிறது. பப்லோ அதிகாரத்துவம் ஸ்ராலினிசத்தை அழிப்பதை நோக்கி செல்லும் என்று கூறிய சில ஆண்டுகளில் குருச்சேவின் உறுதியான வலதுசாரி திருப்பம் தோன்றிவிட்டது.... ஸ்ராலினிச எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவத்தின் பகுதிகள் "இடது புறம் நகரும்" என்ற கருத்துருவிலிருந்து வரும் என்ற கருதுகோள்களிலிருந்து வரும் எந்த மூலோபாயமும் ட்ரொட்ஸ்கிசத்தை மறுப்பது போலத்தான் ஆகும்." (Trotskyism VCersus Revisionism, vol.4, pp.188-89). 1960களின் முற்பகுதியில் ஹீலியின் அரசியல் பணியில் ஒரு முக்கிய தன்மை இருந்தது; அவருடைய வாழ்வின் கடைசி இருபது ஆண்டுகால செயல்பாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கையில், அது அவருடைய பிந்தைய அரசியல் சரிவை இன்னும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் நடந்த போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் காரியாளர்களுக்கு, கட்சியின் அடிப்படை வேலைதிட்டம், கொள்கைகள் பற்றிய தெளிவும், அறிவையும் கொடுப்பதைவிட வேறு எதுவும் ஹீலிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்லை. எந்தப் பிரச்சினையையும் தெளிவுபடுத்தாமல் வழிநடத்திய 1953ல் பிளவுக்குத் தூண்டிய பப்லோவாதிகளுடன் கோட்பாடற்ற முறையில் மறு ஐக்கியம் செய்து கொள்ள அவர் எதிர்ப்புத் தெரிவித்ததின் தலையாய காரணம் இதுதான். ஹீலியும் சோசலிச தொழிலாளர் கட்சி சிறுபான்மையும் பின்னர் தொழிலாளர் கழகத்தை (Workers League) நிறுவியவரும், சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவிற்கு (ICFI) ஆதரவான சிறுபான்மை பிரிவின் தலைவராக இருந்தவருமான ரிம் வொல்போர்த்துடன் (Tim Wohlforth), கோட்பாடற்றமுறையில் மறு ஐக்கியத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹீலி எழுதிய அரசியல் கடிதங்களைப் படிப்பது பெரும் ஒளியைத் தருவது ஆகும். சோசலிச தொழிலாளர் கழகத்திற்கும், சோசலிச தொழிலாளர் கட்சிக்கும் இடையே ஆழ்ந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும் கூட, ஹீலியின் சொந்தக் கடிதப் போக்குவரத்து, நான்காம் அகிலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முன்னோக்குகள் மீதான ஆழமான கலந்துரையாடல் மூலம் தீர்த்துவிடமுடியும் என்று அவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கைக்குச் சான்றாக இருக்கிறது. வொல்போர்த்திடம் பலமுறையும் எந்த குழுவாத நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறும், அது சர்வதேச உறுப்பினர்களிடையே அரசியல், தத்துவார்த்த தெளிவுபடுத்தப்படல் இல்லாமற்செய்துவிடும் என்றும் ஹீலி வற்புறுத்திக் கூறியுள்ளார். ''1954 லிருந்த நாம், பிரிட்டனில் மாபெரும் முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுகிறோம்" என்று வொல்போர்த்திற்கு அவர் 1961 மார்ச் 8ம் தேதி எழுதினார். "நம்முடைய தலைமை தத்துவார்த்த அளவில் மிகுந்த வலிமையுடன் இருப்பதுடன், பல கணிசமான கஷ்டங்களுக்கு இடையேயும் நாம் நம்முடைய செல்வாக்கை முக்கிய வட்டங்களில் அதிகப்படுத்துவதில் முன்னேறி வருகிறோம். நம்மைப் பொறுத்தவரை, இப்பொழுது மிக விரிவான விவாதத்திற்கு அரங்கு தயாராகிவிட்டது என்பதுடன், அதை மிக வெற்றிகரமான முடிவிற்குக் கொண்டுவருவோம் என்பதிலும் நல்ல நம்பிக்கை கொண்டிருக்கிறோம்; ஏனென்றால், பல நாடுகளிலிருந்தும் தோழர்கள் அத்தகைய விவாதத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர். "நம்முடைய ஆற்றல்களை எவ்விதமான கன்னைவாதத்திலும் (பிரிவு வாதம்) வீணடித்து விடாமல் இருப்பதற்கு நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். கோட்பாடுகளில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருந்தால், சர்வதேச இயக்கம் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மறு சீரமைக்கப்பட்டுவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை ஆகும். "சோசலிச தொழிலாளர் கட்சி தோழர்களுக்கு, உங்கள் ஆவணம் பெரிதும் உபயோகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்." மார்ச் 21, 1961 அன்று, வொல்போர்த்திற்கு கீழ்க்கண்ட ஆலோசனையை அவர் தெரிவித்தார்: "சோசலிச தொழிலாளர் கட்சியில் நடக்கவுள்ள விவாதம் மிகுந்த புறநிலைரீதியாக நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தே நாங்கள் கொண்டுள்ளோம். பல குழு போராட்டங்களில் (திணீநீtவீஷீஸீணீறீ ஷிtக்ஷீuரீரீறீமீs) பங்குகொண்டவன் என்ற முறையில் இதைக் கூறுவதுடன், கன்னைவாதம் பற்றி, ஜிம் கனன் அவ்வப்பொழுது கூறியுள்ள எச்சரிக்கைகளுக்கும் முழுமனத்துடன் ஒப்புதல் அளிப்பதில் நான் தயக்கம் காட்டவில்லை. "பப்லோவாதத்தை பற்றிய பிரச்சினையில், நாம் நமக்குள் அரசியல்ரீதியாக விவாதித்து முடிவிற்கு வரவேண்டும்; அடுத்த ஆண்டையொட்டி, நம்முடைய இயக்கத்தின் சர்வதேசக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும். இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை இயக்கத்ததைப் பற்றி தெளிவுபடுத்துதலாகும். "எனக்கு அடிக்கடி, இயன்ற அளவு, தயவு செய்து கடிதம் போடவும்; உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்ளுவதில் நான் அதிக ஆர்வத்தையே எப்பொழுதும் காட்டி வருகிறேன். "நாம் இப்பொழுது ஒரு பெரிய சர்வதேச இயக்கத்தின் நுழைவாயிலில், உறுதியான மரபுவழி ட்ரொட்ஸ்கிச நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்று கருதுகிறேன்." ஏப்ரல் 5, 1961: "கன்னைவாதத்தைப் பற்றிய நம்முடைய கவலை, இருபுறமும் நிலவும் நல்லெண்ணத்தைப்பற்றி நாம் நன்கு அறிந்தாலும், அதைத் தவறாகப் புரிந்து கொள்ளுவதால் தோன்றுவதாக அல்லாமல், அரசியல் வேறுபாடுகளிலுள்ள அடிப்படைத்தன்மை பற்றிய உண்மையினால் விளைந்தது ஆகும். உங்கள் கட்டுரை பற்றிய நோராவின் பங்களிப்பு எச்சரிக்கையின் அடையாளமாகும். இத்தகைய தவறான கல்வியூட்டல் சோசலிச தொழிலாளர் கட்சியில் தீவிர பிடிப்பைக் கொண்டால், காரியாளர்கள் எவ்வளவு உறுதியாக இருந்தாலும், அது தன்னுடைய அரசியல் நெறிகளை இழந்துவிடும்." மூன்று வாரங்களுக்குப் பிறகு, 1961 ஏப்ரல் 24ம் தேதி, ஹீலி பழையபடி எழுதினார்: "எங்களை கன்னைவாதிகள் என்று எவர் கூறியபோதிலும்கூட, சோசலிச தொழிலாளர் கழகத்தைப் பொறுத்தவரையில், ஒரு விஷயத்தைப்பற்றி நீங்கள் தயக்கம் காட்டத் தேவையில்லை. இது முற்றிலும் தவறான கருத்தாகும்; எங்களுடைய சர்வதேச இயக்கத்தின் பிரச்சினைகள் பற்றி, அரசியலளவில் ஒரு தெளிவு தேவை என்று விரும்புகிறோம். இதில் நாங்கள் ஒருவருக்கும் வளைந்து கொடுக்கத் தயாராக இல்லை. அத்தகைய தத்துவார்த்த விளக்கத் தெளிவு கொடுப்பதை தவிர்ப்பதில் நிறைய நேரத்தை வீணடித்துவிட்டோம் என்று உணர்கிறேன். எனவே எங்கள் தேசிய நிர்வாக குழு சோசலிச தொழிலாளர் கட்சியில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் குறுக்கிடுவதற்கு, ஓர் ஆவணத்தை தயாரிப்பதாக முடிவெடுத்துள்ளது என்பதை அறிய நீங்கள் ஆர்வத்துடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த ஆவணத்தை மே மாத இறுதிக்குள் தயாரித்து முடித்து விடுவோம். நாங்கள் உங்கள் மாநாடு தொடங்குவதற்குள், அங்கு வினியோகிக்கப்படுவதற்காக உரிய நேரத்திற்குள் அனுப்பிவைக்க எங்களின் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். "எவ்வாறாயினும், எத்தகைய கன்னைவாத குழுவாத நிலைகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற உங்கள் முடிவில் எனக்கும் உடன்பாடுதான். தயவுசெய்து, இக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுங்கள், எத்தகைய கஷ்ட நிலைமைகளை நீங்கள் உணர்ந்தாலும் பரவாயில்லை, சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து எவரும் பிரிந்து செல்லுவது பற்றி எதுவும் பேசவேண்டாம். உங்கள் பிரச்சினை சோசலிச தொழிலாளர் கட்சி பற்றிய பிரச்சினை அல்ல; அது அடிப்படையில் ஒரு சர்வதேசப் பிரச்சினை. சர்வதேச அளவில், பிரச்சினைகளுக்குத் தெளிவு காணவேண்டும். எங்கள் பகுதியின் பொறுப்பை, இந்தத்துறையில் நான் முழுமையாக அறிவேன். ..." அனைத்துலகக் குழுவிலிருந்து 1985-86ல் பிரிந்து சென்ற தொழிலாளர் புரட்சி கட்சியுடைய எந்த ஓடுகாலிக் கன்னைகளும், சுலோட்டர், டோரென்ஸ், ரெட்கிரேவ்கள் (ஹீலி தன்னுடைய வாழ்நாளின் கடைசிப்பகுதியைக் கழித்த பரிதாபகரமான "மார்க்சிஸ்ட் கட்சி" யைச் சேர்ந்தவர்கள்). ஆகியோர் சோசலிச தொழிலாளர் கழகத்தை பப்லோவாதத்துடன் இணைவதற்கு எதிராக 1961-64ல் நடந்த போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுவதுகூடக் கிடையாது என்பதில் வியப்பில்லை. அவர்களுக்கு அந்த காலகட்டத்திய, தன்னைப் பெருமிதத்துடன் "மரபுவழியிலான ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" என்று கூறிக்கொண்ட, ஹீலியோடு பொதுமைப்பாடுகள் ஏதும் கிடையாது. தொழிலாளர் புரட்சி கட்சியின் அக்டோபர் 1985 பிளவுக்கும் பின்னர் ஹீலியுடன் அவர்கள் எத்தகைய தொடர்புகள் கொண்டிருந்தாலும், சோசலிச தொழிலாளர் கட்சியின் பப்லோவாத மறு ஐக்கியத்திற்கு எதிராக ஹீலியும் சோசலிச தொழிலாளர் கழகமும் நடத்திய போராட்டத்தின் அடிப்படையையும், சர்வதேசக் கொள்கைகளையும் அவர்கள் நிராகரித்திருந்தனர். ________________________________________________________________ 1. ஹூகோ ஒயெலர் (Hugo Oehler) 1930களில் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளே உள்ள குறுங்குழுவாத கன்னையின் (பிரிவின்) தலைவராக இருந்தார், அது ஐக்கிய அமெரிக்க அரசுகளில் "பிரெஞ்சு திருப்பம்" எனும் தந்திரோபாயத்தைப் பயன்படுத்துவதற்கு, அதாவது சோசலிச கட்சியுள் ட்ரொஸ்கிஸ்டுகள் நுழைவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஒயெலரிசம் கோட்பாடுகளுக்கு மலட்டுத்தன்மையை பின்பற்றுவதை ஒத்திருக்கிறது, அவை மிக அருவமான வகையில் மட்டுமே புரிந்துகொள்ளப்பட முடியும். |
Copyright 1998-2009
World Socialist Web Site All rights reserved |