|
|
இந் நூலின் தமிழ்
மொழிபெயர்ப்பு மறைந்த ட்ரொட்ஸ்கிச தலைவர் கீர்த்தி பாலசூரியாவுக்கு சமர்ப்பணம் |
லெனினுக்கு
பின் 3ம் அகிலம் என்ற தலைப்பை கொண்ட இந் நூல் 1928ம் ஆண்டு மூன்றாம் அகிலத்தின்
6வது அகல்பேரவைக்கு புக்காரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு வேலைத்திட்டத்திற்கு
எதிரான ட்ரொட்ஸ்கியின் உயர்ந்த மட்டத்திலான தத்துவார்த்த, அரசியல்
போராட்டத்தினை உள்ளடக்கமாக கொண்டிருக்கின்றது.
இந்த வரைவு வேலைத்திட்டத்தின் மத்திய புள்ளி, சோவியத் அதிகாரத்துவத்தின்
உடனடித் தேவைகளை நிறைவு செய்வதை மையமாகக் கொண்டு தனி ஒரு நாட்டில் சோசலிச
வேலைத்திட்டத்தை மூன்றாம் அகிலத்தின் உத்தியோகபூர்வ கொள்கையாக பிரகடனப்படுத்தியது.
இதன் நேரடி விளைவுகள் உலகத் தொழிலாள வர்க்கத்தின் தொடர்ச்சியான தோல்விகளுக்கும்,
பின்னடைவுகளுக்கும் இறுதியில் 1933ல் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின்
தோல்விகளுக்கும் வழிதிறந்துவிட்டது.
லியோன் ட்ரொட்ஸ்கி, அக்டோபர் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கும்
மார்க்சிச கொள்கைகளுக்கும் நேர் எதிரான தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்பதின்
தேசியவாத தன்மையை, உலகப் பொருளாதார, அரசியல், அடித்தளத்தில் வரலாற்று
ரீதியாக ஆய்வு செய்தார். தனது விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே தொழிலாள வர்க்கத்தின்
வேலைத்திட்டம் தேசிய நிலமைகளை கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்பட முடியாதது-
அதனது உடனடித்தேவைகளை நிறைவேற்றுவதும் கூட சர்வதேசிய வேலைத்திட்டத்தின்
அடிப்படையில் மட்டுமே சாத்தியமாக முடியும் என்று நிறுவிக்காட்டினார்.
''எமது சகாப்தத்தில் -இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில்- அதாவது உலகப்
பொருளாதாரமும், உலக அரசியலும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள
நிலையில், எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாகவும், பிரதானமாகவும்
தனது சொந்த நாட்டினுள் உள்ள நிலைமைகளின், போக்குகளின் வளர்ச்சிகளில் இருந்து
ஆரம்பிப்பதன் மூலம் தனது வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. இது சோவியத்
ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளே அரசு அதிகாரத்தை திறமையாகப் பயன்படுத்தும்
ஒரு கட்சிக்கும் கூட முற்றிலும் பொருந்தும். 1914 -ஆகஸ்ட் 4ம் திகதி அனைத்துக்
காலங்களுக்குமாக தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது.
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி தற்போதைய சகாப்தத்திற்கு, முதலாளித்துவத்தின்
அதியுயர்ந்த வளர்ச்சியும், வீழ்ச்சியும் கொண்ட சகாப்தத்தின் தன்மையுடன்
தொடர்புடையதான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் என்பது ஒரு பொழுதும் தேசிய
வேலைத் திட்டங்களின் ஒட்டுமொத்தமோ அல்லது அவற்றின் பொதுத்தோற்றங்களின்
கலவையோ அல்ல. சர்வதேச வேலைத்திட்டம் என்பது, உலகப் பொருளாதார உலக அரசியல்
அமைப்பை முழுமையாகக் கொண்டதாகவும் நிலைமைகளின் போக்குகளின் அவற்றின் அனைத்துத்
தொடர்புகளையும் முரண்பாடுகளையும் அதாவது அதன் தனிப் பகுதிகள் பரஸ்பர
ரீதியாகப் பகைமையுடன் ஒன்றிலொன்று தங்கியுள்ள நிலைமைகள் பற்றிய ஆய்விலிருந்தே
நேரடியாக ஆரம்பிக்க வேண்டும். தற்போதைய சகாப்தத்தில் கடந்த காலத்தைவிட
மிக அதிக அளவில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஒரு உலக
நோக்குநிலையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்க முடியும், எதிர்மாறாக
அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து
வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான பிரதானமான வேறுபாடு இருக்கின்றது.''
சோவியத் யூனியன் உலகப் பொருளாதாரத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட
பொருளாதாரத் தன்னிறைவை பெறமுடியும் என இந்த வரைவு வேலைத்திட்டம்
பிரேரித்தது. இந்த தன்னிறைவின் மூலம் தனிநாட்டு சோசலிசம் சாத்தியமாகும்
என்றும் இந்த தன்னிறைவானது உலகப்புரட்சியின் ஒரு தேசிய கட்டம் என்றும்
நியாயப்படுத்தியது. இதனை தீர்மானகரமாக எதிர்த்த ட்ரொட்ஸ்கி ஏகாதிபத்திய
சகாப்தத்தில் சோவியத் யூனியனின் தலைவிதி, அதனது பிரத்தியேக குணாம்சங்கள்
எப்படியிருந்தபோதும் உலக நிகழ்வுகளின் வளர்ச்சிப்போக்குகளுக்கு கட்டுப்படுத்தப்பட்டது
என்பதனை வலியுறுத்தினார். அக்டோபர் புரட்சியின் பின்னர் சோவியத் யூனியனின்
பொருளாதார வெற்றிகள் உலக சோசலிசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற
அதிகாரத்துவத்தின் ஒப்பீட்டில் இருந்த அரசியல் ஆபத்தினை
சுட்டிக்காட்டிய ட்ரொட்ஸ்கி சோவியத் யூனியனில் சோசலிசத்தை கட்டியெழுப்புவது
ஏனைய நாடுகளில் சோசலிசப் புரட்சியிலும் சோவியத் யூனியனில் ஒரு சரியான
தலைமையிலும் தங்கியிருக்கிறது என்பதனை வலியுறுத்தினார். இது சாத்தியப்படாத
சந்தர்ப்பத்தில் தொழிலாள வர்க்கம் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற
அவரது எச்சரிக்கை வரலாற்றில் மிகவும் கசப்பான முறையில் நிரூபணமாகியுள்ளது.
"சோவியத் ரஷ்யாவின் பொருளாதார வெற்றிகளானது உலகளாவிய பாட்டாளி வர்க்க
புரட்சியின் பிரிக்கவியலா ஒரு அங்கமாகிறது என்று கூறும்போது வரைவு
வேலைத்திட்டமானது ஒரு கேள்விக்கப்பாற்பட்ட சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
ஆனால் புதிய கருத்தாக்கத்தின் அரசியல் ஆபத்தானது அதன் உலக சோசலிசத்தின்
இரண்டு நெம்புகோல்களான நமது பொருளாதார சாதனைகளுக்கான நெம்புகோல் மற்றும்
உலகளாவிய பாட்டாளி வர்க்க புரட்சிக்கான நெம்புகோல் பற்றிய ஒரு தவறான ஒப்பீட்டு
மதிப்பீட்டில் இருக்கிறது. ஒரு வெற்றிகரமான பாட்டாளி வர்க்க புரட்சி இல்லாமல்,
நம்மால் சோசலிசத்தை கட்ட முடியாது. ஐரோப்பிய தொழிலாளர்களும் மற்றும்
உலகம் முழுவதும் உள்ள பிற தொழிலாளர்களும் இதனைத் தெளிவாகப் புரிந்து
கொள்ள வேண்டும். பொருளாதார கட்டுமானத்திற்கான நெம்புகோல் அதிமுக்கியத்துவம்
வாய்ந்ததாகும். ஒரு சரியான தலைமை இல்லாமல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
பலவீனமாகி விடும்; அதன் வீழ்ச்சியானது சர்வதேசப் புரட்சிக்கு பலத்த அடியாகி
விடும், அதிலிருந்து பல வருடங்களுக்கு மீள்வது அதற்கு கடினமாகி விடும்.
ஆனால், சோசலிச உலகத்திற்கும் முதலாளித்துவ உலகத்திற்கும் இடையிலான
முக்கிய வரலாற்று போராட்டமானது இரண்டாவது நெம்புகோலை, அதாவது உலக
பாட்டாளி வர்க்க புரட்சியைச் சார்ந்து உள்ளது. சோவியத் யூனியனின் மலை
போன்ற முக்கியத்துவம் அது உலகப்புரட்சியின் மோதலுக்கான அடித்தளமாக இருப்பதில்
இருக்கிறதே தவிர, உலக புரட்சியில்லாமல் சுயாதீனமாக சோசலிசத்தை கட்டமைக்க
முடியும் என்கிற அனுமானத்தில் இல்லை."
இந்நூலில் ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தில் மற்றுமொரு பிரதானமான கேள்வி,
பின்தங்கிய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையும், அரசியல் ரீதியாக
அதனது சுயாதீன பாத்திரம் பற்றியதுமாகும். ஆறாம் அகல்பேரவையின் தீர்மானம்,
பின்தங்கிய நாடுகளின் தேசிய முதலாளித்துவத்திற்கு ஒரு முற்போக்கு
பாத்திரத்தினை வளங்கி அதனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை
செய்யமுடியும் என்ற தகமையை பரிந்துரைத்தது. இதன் நடைமுறை அரசியல்
முடிவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டுகளுக்கு
உடன்படவேண்டும் என தீர்மானித்தது.
இந்த அடிப்படையில் சீனாவில் மென்ஷிவிக் இரண்டு கட்ட புரட்சி வேலைத்திட்டத்தில்
தேசிய முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு அரசியல் ஆதரவு வழங்கப்பட்டது. இந்த
வேலைத்திட்டமே 1925-26 களில் சீன தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளுக்கு
நேரடிப் பொறுப்பாக இருந்தது.
இதை தீர்மானகரமாக நிராகரித்த ட்ரொட்ஸ்கி ஏகாதிபத்திய சகாப்தத்தில்
தேசிய முதலாளித்துவத்திற்கு எந்தவித முற்போக்குப் பாத்திரமும் இல்லை என்பதை
வலியுறுத்தியதுடன், அதனது ஏகாதிபத்திய எதிர்ப்பு "தனது சொந்த தொழிலாளர்களை"
சுரண்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கான கோரிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
என்பதை வலியுறுத்தினார்.
"ஒரு புரட்சிகர போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் முழு
உள்வர்க்க கட்டமைப்பினால்தான் முதலாளித்துவத்தின் இயல்பும், கொள்கையும்
தீர்மானிக்கப்படுகின்றன; அப்போராட்டம் வளர்ச்சியுறும் வரலாற்றுச் சகாப்தத்தினால்;
பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ வகையில் உலக ஏகாதிபத்தியம் முழுவதையும்
அல்லது அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேசிய முதலாளித்துவ வர்க்கம் எந்த
அளவிற்கு நம்பியுள்ளது என்ற தன்மையில்; முக்கியமாக இறுதியில் நாட்டின்
தொழிலாள வர்க்கத்தின் வர்க்க செயலின் தன்மை மற்றும் நாடு எந்த அளவிற்கு
சர்வதேச புரட்சிகர இயக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை பொறுத்தும்
இருக்கும்.
ஒரு ஜனநாயக அல்லது தேசிய விடுதலை இயக்கம், ஆழ்ந்த, பரந்த வகையில் சுரண்டுவதற்கான
வாய்ப்புக்களை கூடுதலாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு கொடுக்க முடியும்.
ஒரு புரட்சிகர அரங்கில் சுயாதீனமான தொழிலாள வர்க்க தலையீடு என்பது முதலாளித்துவ
வர்க்கம் முற்றிலும் சுரண்டும் சாத்தியத்தை இல்லாமற் செய்யும்."
ட்ரொட்ஸ்கியின் இந்த விமர்சனங்களும் ஆய்வுகளும் பிரசுரிக்கப்பட்டு 80
வருடங்களின் பின்னர் முதல்முறையாக இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இன்று தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மிகவும் சிக்கலான அரசியல் பணிகளுக்கான
முன்னோக்கினை தேடும் இளம் தலைமுறையும், உழைக்கும் பரந்துபட்ட மக்களும்
இந்த மொழிபெயர்ப்பை நிச்சயம் ஆர்வத்துடன் வரவேற்பர். அக்டோபர் புரட்சி
முகங்கொடுத்த பிரச்சனைகளையும் அதன் வரலாற்றையும் விளங்கிக் கொள்வதற்கு
சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதுடன் ஒரு புதிய துணிவையும் உத்வேகத்தையும்
கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ட்ரொட்ஸ்கியின் பிரதானமான ஆக்கங்களில் ஒன்றான இந் நூலை இந்திய துணைக்கண்டத்தின்
தலைசிறந்த மார்க்சிசவாதியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் தலைவர்களில் ஒருவருமான கீர்த்தி பாலசூரியாவின் உயர்ந்த
நினைவிற்கு சமர்ப்பணம் செய்வதில் பெருமையடைகிறோம்.
1987 இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்திய உபகண்டத்தின் அனைத்து
இடதுசாரி கட்சிகள், தேசிய விடுதலை இயக்கங்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பது
அல்லது எதிர்ப்பது என்ற அடிப்படையில் ஒன்றில் இந்திய முதலாளித்துவத்தின்
அல்லது இலங்கை முதலாளித்துவத்தின் அரசியல் கால்நடைகளாக மாறினர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் இலங்கை பிரிவான புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகமும் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) மட்டுமே இந்த
ஒப்பந்தம் உப கண்டத்தின் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு
முழுமையாக விரோதமானது என எச்சரித்தது. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின்
ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் இந்திய உபகண்டத்தில் சோசலிசத்திற்கான
போராட்டத்துடன் இணைந்துள்ளது என்ற முன்னோக்கினை முன்மொழிந்தது. தமிழ்,
சிங்கள தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியமும் தொழிலாள வர்க்கத்தின்
சுயாதீனமான தலையீடும் அதற்கான முன்நிபந்தனை என்பதையும் வலியுறுத்தியது.
இந்த அடிப்படையில் 29 நவம்பர் 1987ல் ஜேர்மனியின் ஸ்ருட்கார்ட் நகரில்
ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் பேசிய கீர்த்தி பாலசூரியா, அன்றைய
காலப்பகுதியில் தேசிய விடுதலை இயக்கங்களில் இருந்து வெளியேறிய இளைஞர்கள்
சர்வதேசிய வாதத்தை நோக்கி திரும்புவதற்கு வாதங்களையும் விளக்கங்களையும்
முன்வைத்தார். கீர்த்தியின் மறைவின் 20 வருடங்களின் பின்னர் அவரது அன்றைய
தலையீடுதான் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கத்தையும், "நிரந்தரப்
புரட்சி & முடிவுகளும் வாய்ப்புக்களும்", "ரஷ்ய புரட்சியின் மூன்று கருத்துருக்கள்",
"அக்டோபரின் படிப்பினைகள்" "புதிய பாதை" "நிரந்தரப் புரட்சி"
"லெனினுக்கு பின் மூன்றாம் அகிலம்" போன்ற பல தொழிலாள வர்க்கத்திற்கு அத்தியாவசியமான
படிப்பினைகளை கொண்ட மொழிபெயர்ப்புக்களையும் வெளிக்கொணர்வதற்கு வழிவகுத்தது
என்பதையும் மிக உயர்ந்த கௌரவத்தோடு நினைவு கூருகின்றோம்.
|
|
|
|
«ñôFè õ£CŠ¹èœ
|
|
|
|
|