World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா

US provides military assistance to Nepal to crush Maoist guerrillas

மாவோயிச கொரில்லாக்களை அடக்க அமெரிக்கா நேபாளத்திற்கு இராணுவ உதவி அளிக்கிறது.

By W.A. Sunil
2 May 2002

Back to screen version

நேபாள மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி (CPN-M) தலைமையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு, அதிகரித்த அளவில் நம்பிக்கை இழந்துவரும் நேபாள ஆளும் வர்க்கம் இராணுவ உதவிக்கு அமெரிக்காவை நாடியுள்ளது.

உள்துறை அமைச்சர் தேவேந்திர ராஜ் கண்டெல் தினமும் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிக்கிறார். இவர் ஏப்பிரல் 21-அன்று செய்தி நிறுவனத்திடம், ``மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடவும் அரசு படை வீரர் இழப்பை குறைக்கவும் நேபாள அரசுக்கு நவீன ராணுவ தளவாடங்கள் தேவை" என்று கூறினார். கண்டெல் எவ்வளவு அமெரிக்க உதவி தேவைப்படும் என்று தெளிவாக கூறாத அதேவேளை, புஷ் அரசு "கூடுமானவரை எல்லா உதவிகளும்" செய்ய ஒப்புக்கொண்டுள்ளது என்றார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க அரசை சார்ந்த பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர் (Richard Boucher) ஒரு அறிக்கை வெளியிட்டார். இதன்படி புஷ் அரசு நேபாள இராணுவத்திற்கு உதவி செய்ய, அமெரிக்க பாராளுமன்றத்தில் 20 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கலைக் கோரியிருந்தது. நேபாள பாதுகாப்புப் படைகளின் தேவைகளைக் கண்டறிய ஒரு டஜன் அமெரிக்க இராணுவ வல்லுநர்கள் நேபாளம் வந்துள்ளனர். பெண்டகன் அதிகாரி செய்தி ஊடகத்திற்கு கூறியதாவது, ``இந்தக்குழு பல வாரங்களாக நேபாள இராணுவத்துடன் பணியாற்றி வருகிறது, மேலும் சில வாரங்கள் அங்கு தங்கியிருக்கும்."

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பாவெல் ஜனவரியில் முப்பதாண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நேபாளத்திற்கு விஜயம் செய்தார். இதனையொட்டி அமெரிக்கா நேபாளத்திற்கு குறிப்பிடத்தக்க இராணுவ உதவிகளை அளிக்க ஒப்புக்கொண்டது. பாவெல் நேபாள அரசருடனும், பிரதம மந்திரியுடனும், இராணுவ மேலதிகாரிகளுடனும் உயர்மட்ட அளவில் பல தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். இதனால் அமெரிக்கா நேபாளத்திற்கு இராணுவ உதவி செய்வதை முன்குறித்துக் காட்டியது. சென்ற நவம்பரில் மாவோயிஸ்டுகளுக்கும் நேபாள அரசாங்கத்திற்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, நேபாள அரசாங்கத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் மீண்டும் நடந்த சண்டைக்கு நடுவே பாவெல் பயணம் செய்தார்.

ஏப்பிரல் தொடக்கத்தில், அமெரிக்க பொருளாதார மற்றும் இராணுவ உதவி பற்றி விரிவாக விவாதிக்க, நேபாள வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா விஜயம் செய்தார். நேபாள பாதுகாப்புப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள், அமெரிக்காவும் நேபாளமும் இராணுவ ஒத்துழைப்பை அறிவிப்பதற்கு சாக்குப் போக்காக ஆயின.

ஏப்பிரல் 11-அன்று நேபாளத்தில் மேற்கு டாங் மாவட்டத்தில் உள்துறை பாதுகாப்பு அமைச்சர் கும் பகதூர் காத்கா (Khum Bahadur Khadka) வீட்டில் மாவோயிச கொரில்லாக்கள் பெரியதொரு தாக்குதலை நடத்தினர். இதில் 60 போலீசார் கொல்லப்பட்டனர், மேலும் 29 போலீசார் காயமடைந்தனர். எதிர்த் தாக்குதலில் 250 மாவோயிச கொரில்லாக்களுக்கு மேல் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறியது. மாவட்ட அதிகாரிகளின்படி, சடலங்கள் "வயல்களிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் சிதறிக் கிடந்தன." பிப்ரவரி17-க்கு பிறகு நடைபெற்ற இந்த பயங்கர மோதலில் அச்சாம் (Acham) மகாணத்தில் 137 படை வீரர்கள், போலீசார் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர்.

CPN-M ஒரு 5 நாள் பொது வேலைநிறுத்தத்தை அறிவித்தது. இதில் ஏப்பிரல் 23-27 வரை தொழிற்சாலைகளும், வியாபாரங்களும் மூடப்பட்டன. CPN-(M) நேபாள அரசாங்கத்தை நெருக்கடியில் ஆழ்த்தியது. இரண்டு தரப்பினரும் பரஸ்பரம் அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டிக்கொண்டனர். அரசாங்கம் வேலை நிறுத்தம் தோல்வியடைந்தது என கூறிற்று. ஆனால் தலைநகர் காத்மாண்டுவிலும் மற்ற நகரங்களிலும் பல வர்த்தக மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் மூடப்பட்டன. சென்ற வார இறுதியில் அரசாங்க படைகளுக்கும் கொரில்லாக்களுக்கும் இடையில் மேலும் சண்டை நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

உத்தியோகரீதியான கூற்றுப்படி, CPN-(M) தன் கொரில்லா போரை 1996-ல் தொடங்கிய பின்னர், சண்டைகளில் 3500 பேர்கள் இறந்துவிட்டனர். சென்ற நவம்பரில் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததிலிருந்து மேலும் 1,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

CPN-(M) இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண தயாராயிருந்தது. அரசாங்கம் சலுகைகள் அளிக்க மறுத்துவிட்டது. மேலும் அரசு CPN-(M) பொதுக்கூட்டங்களைத் தடை செய்தது. நவம்பர் 23 அன்று இராணுவ தளத்தின்மேல் ஒரு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, அரசாங்கம் அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்தது மற்றும் மாவோயிஸ்டுகள் மீது ஒரு பரவலான தாக்குதலை நடத்திற்று.

அவசரநிலை சட்டத்தின் கீழ் இராணுவமும் போலீஸும் அதிகமான அதிகாரங்களைப் பயன்படுத்தி பயங்கர அடக்குமுறையை கையாண்டு வருகின்றார்கள். குறிப்பாக மாவோயிஸ்டுகளின் கோட்டைகளான மேற்கு நேப்பாளத்தின் வறுமை நிறைந்த கிராமப்புற பகுதிகளில் இது அதிகம். மனித உரிமை குழுக்கள் அப்பாவி மக்களை கொடுமைப்படுத்துவதாகவும், கொன்றுவிடுவதாகவும் அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளன. உத்தியோகப் பூர்வ தகவலின்படி, அரசாங்கம் பிப்ரவரி மத்தியில் வரை மூன்று மாதங்களுக்குள் 3,000 பேரை சிறைப்படுத்தி உள்ளது. சமீபத்தில் அரசர் கயனேந்திரா (Gayanendra), தனது அதிகப்படியான அதிகாரத்தை உபயோகப்படுத்தி, கட்சியின் செயலாளர் பிரசாந்தா உள்பட CPN-(M) தலைவர்களை பிடிப்பதற்கான தகவல் தந்தால் பெரிய பரிசுகள் அளிப்பதாக அறிவித்தார்.

வாஷிங்டன் ஆதரவுடன் இந்தியா நேபாள இராணுவத்திற்கு உதவி அளித்து வருகிறது. இதில் பல இராணுவ ஹெலிகாப்டர்களும் பல லாரி நிறைய இராணுவ தளவாடங்களும் அடங்கும். மாவோயிச கொரில்லாக்கள் நகருவதைத் தடுப்பதற்கு இந்திய நிர்வாகத்தினரும் நேபாளத்துடனான எல்லையை மூடிவிட்டனர். மார்ச் முடிவில், நேபாள பிரதம மந்திரி ஷேர் பகதூர் தியூபா (Sher Bahadur Deuba) மேலும் இராணுவ உதவி பற்றி விவாதிக்க புதுதில்லி வந்தார். ஒரு கூட்டறிக்கையில் இரண்டு நாடுகளும் "பயங்கரவாதத்தை ஒழிக்க" மற்றும் "கைதி பரிவர்த்தனை ஒப்பந்தத்தை நாளின் நடப்புக்கு நீட்டிக்க" ஒப்புக்கொண்டன.

ஏப்ரலில் United Services Institute - ஓய்வுபெற்ற இந்திய ராணுவ தளபதிகள் மற்றும் கொள்கை உருவாக்குவோரின் அமைப்பு - நேபாளம் குறித்து ஒரு விவாதத்தை நடத்தியது. இதன்படி இந்தியா பாதிக்கப்படக்கூடும் என்ற அடிப்படையில் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தது. தியூபா முன்னதாக ``அயல்நாட்டு துருப்புகளை`` கேட்பதற்கான ஆலோசனையை வெளிவிட்ட அதேவேளை, நேரடி இந்திய குறுக்கீட்டிற்கு எதிர்ப்பு இருப்பதை எதிர்கொண்டு அவர் தன் கோரிக்கையை வாபஸ் வாங்கிக்கொண்டார்.

நேபாள ஆளும் செல்வந்த தட்டுக்கள் ஓரளவு சுதந்திரப்போக்கை கடைப்பிடிக்க- இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு பெரிய பிராந்திய வல்லரசுகளுக்கும் இடையே மாறி மாறி இடைப் புகுந்து - ஒன்றுடனான உறவை மற்றொன்றுடனான உறவுக்கு எதிராகப் பயன்படுத்த முயல்கின்றன. ஆனால் நேபாளத்துக்கு கடலோர துறைமுக வசதியில்லை. நேபாளம் இந்தியாவின்மீது பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் மிக அதிகமாக சார்ந்திருக்கிறது. இந்தியாவோடு வளர்ந்துவரும் உறவுகளை சமன் செய்ய வெளியுறவு செயலர் மது ராமன் ஆச்சார்யா இப்போதுதான் ருஷ்யாவிற்கும் சீனாவிற்கும் சென்று வந்துள்ளார். பெய்ஜிங் கிளர்ச்சிக்காரர்களை கண்டித்துள்ளது. மேலும் நேபாள - திபெத் எல்லையை மூடிவிட ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் நேபாளத்தில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு மேலும் அந்தப் பிராந்தியத்தின் அமைதியை குலைக்கும். சீனாவின் தெற்கு எல்லையில் உள்ள, அரசியல் ரீதியான உணர்வுடைய திபெத் அருகில் உள்ள நேபாளத்துடன் நெருங்கிய இராணுவ உறவுகளை பலப்படுத்த அமெரிக்கா மாவோயிச கிளர்ச்சியை பயன்படுத்தி வருகிறது என்பதை சீனா விரைவில் கவனிக்கும். நேபாளத்திற்கு அமெரிக்க இராணுவம் அனுப்பப்படாத அதேவேளை, அமெரிக்கா ஒரு சுமுகமான உறவை நேபாளத்துடன் அமைத்துக்கொள்ள தெளிவாகவே நோக்கம் கொண்டிருக்கிறது. அது ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் எங்கும் உள்ள தனது இருப்பிற்கு ஒரு பரிசாக இருக்கும். இந்த ராணுவ உறவைக் கட்டி எழுப்புதலின் முக்கிய இலக்கு சீனாவாகும். புஷ் சீனாவை ஒரு ``மூலோபாய போட்டியாளர்`` என்று தனது 2000 ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்டார்.

மன்னர் ஆட்சி கவிழ்ப்பு பற்றி வெளிப்படையான பேச்சு

நேபாளத்தில் இராணுவத்தால் மாவோயிச கொரில்லாக்களை நசுக்க முடியாத நிலை, நேபாளத்தின் மோசமான பொருளாதார பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் வட்டங்களில் பதட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது. பிரதம மந்திரி தியூபா பத்திரிகையாளர்களிடம், நேபாளம் வெளிநாட்டு உதவி பெறாவிட்டால், "கிளர்ச்சியை முறியடிக்க ஐந்து முதல் பத்து ஆண்டுகள் தேவைப்படும் என்றார். இக்கிளர்ச்சி அரசு கஜானாவை காலி செய்துவிட்டது, முக்கியமான சுற்றுலா துறையை பெரிதும் பாதித்துள்ளது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை விரட்டிவிட்டது."

ஆசிய அபிவிருத்தி வங்கி சென்ற ஏப்பிரலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன்படி இவ்வாண்டு வளர்ச்சி விகிதம் சென்ற ஆண்டு 5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயத்துறை வளர்ச்சி 4 சதவீதத்தில் இருந்து 3சதவீதம் சரிந்துள்ளது, அதேவேளை சேவைத்துறை 7.3 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது அயல்நாட்டு செலாவணியைப் பெற்றுத்தரும் சுற்றுலாத்துறை 40சதவீதம் குறைந்துவிட்டது.

இந்த அறிக்கை நகர்ப்புற வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதம் என்று சுட்டிக் காட்டுகிறது. ஆனால் நாடெங்கும் 47சதவீதம் உழைக்கும் மக்கள் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர் அதிகம். வெளிநாட்டு பண உதவியால் "வேலைக்காக உணவு" (Food for Work) திட்டத்தின்கீழ் இவர்கள் வேலை செய்கிறார்கள். உலகின் மிக ஏழ்மையான பத்து நாடுகளில் நேபாளமும் ஒன்று. சராசரி தலைவீத வருமானம் ஒரு நபருக்கு 230 அமெரிக்க டாலர்கள் அல்லது ஒரு நாளைக்கு 60 சென்ட்டுகள் ஆகும்.

ஆளும் செல்வத் தட்டினரின் சில பகுதியினர் அரசர் இராணுவ உதவியுடன் ஆட்சியை கைப்பற்றக்கூடிய சாத்தியக் கூறுகளை வெளிப்படையாகவே விவாதிக்கின்றனர்.

இராணுவ தளபதி General Prazzwala Rana மார்ச் 27 அன்று இராணுவ உயர்மட்ட அதிகாரிகளிடம் கூறியது பின்வருமாறு: கடந்த 12 ஆண்டுகளாக ``ஒத்துழையாமை`` க்காகவும் ``மோசமான ஆட்சி`` க்காகவும் ராணா அரசியல்வாதிகளை கண்டித்தார். 1990-ல் தான், பரந்த மக்களின் எதிர்ப்புக்குப் பின்னர், முன்பு முற்றமுழுதான முடியாட்சியாய் ஆண்டுவந்த அரசர் ஒரு சில ஜனநாயக உரிமைகளை அளித்தார்.

சென்ற வாரம் அரச குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புள்ள ஒரு கம்பெனியின் இயக்குநர் பிரபாகர் ராணா, காத்மாண்டை தளமாகக் கொண்டு வெளிவரும் டெலிகிராப் எனும் பத்திரிகைக்கு பின்வருமாறு பேட்டியளித்தார்: "`ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தியவர்கள் தோல்வியடைந்து விட்டார்கள். அவர்கள் முயற்சி செய்து வலுவூட்டிக் கொள்ள வேண்டும் மற்றும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மன்னரை அரசாளும்படி சொல்லும் அல்லது இராணுவமே ஆளும்." பிப்ரவரியில் புதுப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தின்கீழ் இராணுவம் அதிக பலம் பொருந்தியதாக விளங்குகிறது.

நேபாள இராணுவத்திற்கு அதிக இந்திய மற்றும் அமெரிக்க ஆதரவு கண்டு, மாவோயிச தலைமை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. டெலிகிராப் பத்திரிக்கையின் படி, CPN-(M) செயலர் பிரசாந்தா ஒரு அறிக்கைவிடுத்துள்ளார். ``ஒரு நல்ல ஆக்கபூர்வமான அரசியல் சூழ்நிலை அமையுமானால்`` தான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதில் சுட்டிக்காட்டினார். காத்மாண்டில் இடதுசாரி கட்சிகள், இராணுவம் தனது நிலையைப் பலப்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தைக்கு அறைகூவல் விடுத்துள்ளன. தியூபா அரசாங்கம் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டாலன்றி பேச்சுவார்த்தைக்கு வர முன்னர் ஒப்புகொள்ளவில்லை.

நேபாளத்தில் இராணுவம் செயல்பாட்டை நிறுவுதலில் ஆர்வம் கொண்டு, வாஷிங்டன் மோதல் தொடர்வதை விரும்புகிறது. அந்த நிலைப்பாட்டிலிருந்து, அமெரிக்க இராணுவ உதவியானது, காத்மாண்டுவில் நேபாள இராணுவத்தை மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றச் செய்வதிலும் கூட அதன் கரத்தைப் பலப்படுத்தும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved