World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

An uneasy cease fire in Sri Lanka

இலங்கையில் ஒரு ஸ்திரமற்ற யுத்த நிறுத்தம்

By K. Ratnayake
23 May 2002

Back to screen version

இலங்கையில் கடந்த பெப்பிரவரி மாதத்திலிருந்து அரசாங்க இராணுவத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான (LTTE) ஒரு காலவரையறையற்ற யுத்த நிறுத்தம் அமுலில் இருந்து கொண்டுள்ளது. இது அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னேற்பாடாகும். ஆனால் நோர்வே மற்றும் ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய கண்கானிப்புக் குழுவின் மேற்பார்வையின் கீழான இந்த ஏற்பாடுகள் இலாயக்கற்றுப் போயுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இலங்கை அரசாங்கம், "சமாதான நடவடிக்கைகளுக்கான" ஆதரவை வெளிப்படுத்தும் அதேவேளை, விடுதலைப் புலிகளுடனான எந்த ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வையும் எதிர்க்கும் சிங்களத் தீவிரவாதக் குழுக்களின் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இரண்டு பெரும் கட்சிகளும் -விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் எதிர்க் கட்சியான சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP)- 19 வருடகால யுத்த முன்னெடுப்புகளுக்கு பொறுப்பாளிகளாக இருப்பதோடு, சிங்களப் பேரினவாதத்தினுள்ளும் முழுமையாக நுழைந்து கொண்டுள்ளன.

விக்கிரமசிங்க ஏப்பிரல் முற்பகுதியில் கண்டியில் பெளத்த பிக்குகளுடனான ஒரு சந்திப்பின் போது தனது அரசாங்கம் விடுதலைப் புலிகளின் "தாயகக்" கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வாக்குறுதியளித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தீவின் வடக்குக் கிழக்கிலான ஒரு தனித் தமிழ் அரசுக்கான கோரிக்கையை கைவிடுவதாகக் குறிப்பிட்ட போதிலும், "உள்நாட்டு சுயநிர்ணயம்" ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று என சுட்டிக் காட்டினார். எவ்வாறெனினும் பெளத்த பெரும் தலைவர்கள் உட்பட்ட சிங்களத் தீவிரவாதிகளைப் பொறுத்தவரையில் நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சுயாட்சியை வழங்குவதற்கான எந்த ஒரு பேச்சுவார்த்தையும் கூட ராஜதுரோகத்துக்கு சமனான ஒன்றாகும்.

விக்கிரமசிங்க, மே 11ம் திகதி இடம்பெற்ற பெளத்த பிக்குகளின் ஒரு விழாவின் போது, இவ்வாறான பிரிவுகளை ஆறுதல்படுத்துவன் பேரில், வடக்கு கிழக்கில் எந்த ஒரு இடைக்கால நிர்வாக சபையும் "மக்களதும்" பாராளுமன்றத்தினதும் அனுமதியுடனேயே அமைக்கப்படும் என குறிப்பிட்டார். அவர் "மக்கள்" எனக் குறிப்பிட்டது தனது பேச்சுக்கு செவிமடுத்திருந்தவர்களேயாகும். -அவர் விடுதலைப் புலிகளுடனான எந்த ஒரு உடன்படிக்கையையும் உறுதியாக மறுதளிப்பதாக பெளத்த பிக்குகளுக்கு உறுதியளித்தார்.

தாய்லாந்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேச்சுவார்த்தை இடம்பெறுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கான முன் நிபந்தனைகளின் அடிப்படையாக தமது அமைப்பு மீது இருந்து கொண்டுள்ள தடையை அரசாங்கம் விலக்க வேண்டும் என கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடத்தக்க கலந்துரையாடல் திரைமறைவில் இடம்பெற்றுவரும் அதேவேளை, விக்கிரமசிங்க இன்னமும் எந்த ஒரு தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் சட்ட ரீதியான அமைப்பாக கருதப்படாவிட்டால் அது தொடர்ந்தும் பேச்சுவார்த்தைக்காக தள்ளப்பட்டு வரும்.

ஸ்ரீ.ல.சு.க, மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் பெளத்த பெரும் தலைவர்கள் விடுதலைப் புலிகளை சட்டரீதியாக்குவதை எதிர்த்து வருகின்றனர். ஸ்ரீ.ல.சு.க. மே முற்பகுதியில் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எந்த ஒரு தடையையும் விலக்குவதற்கு முன்னர் பேச்சுவார்த்தையில் "திருப்திகரமான அபிவிருத்தி" காணப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. எதிர்க் கட்சியும், ஒரு இடைக்கால நிர்வாக சபை இறுதி ஒப்பந்தத்தின் பகுதியாக ஸ்தாபிக்கபடவேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது. ஜே.வி.பி.யினர், தடை நீக்கப்படுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என கோரியுள்ளனர். ஜே.வி.பி. தலைவர்கள் நோர்வேயின் தலையீட்டுக்கு ஒரு முடிவுகட்டும்படி கோருவதோடு நாட்டைப் பிரிப்பதற்காக விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக குற்றம்சாட்டி வந்துள்ளனர். சிங்கள உறுமய (SU) போன்ற ஏனைய குழுக்கள் எந்த ஒரு சமாதானப் பேச்சுவார்த்தையையும் எதிர்க்கும் அதேவேளை விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் நசுக்க வேண்டும் என கோருகின்றனர்.

ஜே.வி.பி. ஏப்பிரல் முற்பகுதியில் பெளத்த பிக்குகள் உட்பட, கிட்டத்தட்ட 4000 பேர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இந்தக் கூட்டம், "தாயகத்தைப் பிரிப்பதற்கு அனுமதிக்காதே" எனும் சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினருடனும் ஏனைய இனவாத குழுக்களுடனும் சேர்ந்து சமாதான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மே மாத முற்பகுதியில், கிட்டத்தட்ட 1,000 பெளத்த பிக்குகள் கொழும்பில் ஒரு கூட்டத்தை நடத்தியதோடு மனு ஒன்றைக் கையளிப்பதற்காக பிரதமரின் இல்லத்துக்கும் ஊர்வலமாகச் செல்ல முயற்சித்தனர்.

எவ்வாறெனினும் இவற்றில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் பிரமாண்டமானதாக இருக்கவில்லை. பெரும்பான்மையான மக்களைப் பொறுத்தளவில் 19 வருடகால யுத்தத்துக்கு முடிவு கட்டவேண்டியது அவசியமாகும். இந்த யுத்தத்தால் குறைந்த பட்சம் 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு பலர் ஊனமுற்றவர்களாகவும் அல்லது வீடுவாசல்களை இழந்தவர்களாகவும் உள்ளனர். கடந்த வருடம் சமாதானத்தைக் கொண்டுவருவதாக வாக்குறுதியளித்து பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற விக்கிரமசிங்க, ஒரு பலவீனமான சமபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பெரு வர்த்தகர்களில் மிகவும் சக்திவாய்ந்த பகுதியினரும் அதேபோல் பெரும் வல்லரசுகளும், முதலீடுகளுக்கு பெரும் தடையாக இருந்து கொண்டுள்ள இந்த யுத்தத்துக்கு ஒரு முடிவு கட்டுவதற்காக தள்ளிவருகின்றனர். அதேவேளை, எவ்வாறெனினும், பிரதமரால் பெளத்த பெரும் தலைவர்களையும் சிங்களத் தீவிரவாதிகளையும் ஆத்திரமூட்ட முடியாது. ஆகவே அவர் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஒரு சலுகையையும் வழங்குவதையிட்டு மிகவும் கவனமாக இருந்து கொண்டுள்ளார்.

விக்கிரமசிங்க, பிரத்தானியப் பிரதமர் ரொனி பிளேயர், ஐரோப்பா சங்கத்தின் தலைவர் ரொமானோ ப்ரோடி உட்பட ஏனைய தலைவர்களை சந்திப்பதற்காகவும், விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை மேலும் திருத்துவதன் பேரில், விசேடமாக தடையை நீக்குவதையிட்டு, அவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்காக இந்தத் தலைவர்களின் ஆதரவை சேகரிக்கவும் ஐரோப்பாவுக்கு செல்லத் தயாராகிக்கொண்டுள்ளார். இந்த நிலைமையில், விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டில் திருத்தங்கள் எதையும் செய்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வமற்ற வெளியீடாகக் கருதப்படும் தமிழ் கார்டியன் அதன் மே 15ம் திகதி வெளியீட்டில், அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கவலை தெரிவித்தது.

இராணுவ ஆத்திரமூட்டல்கள்

யுத்த நிறுத்தமும் இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது. மே 1ம் திகதி மிகவும் மோசமான சம்பவமொன்று இடம்பெற்றது. இலங்கை கடற்படை, தீவின் கிழக்குப் பகுதியில் பல படகுகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது. இலங்கை இராணுவம், இந்தப் படகுகள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டியதோடு, நோர்வேயால் ஸ்தாபிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவிடம் (SLMM) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்தது. குற்றச்சாட்டை மறுத்த விடுதலைப் புலிகள், இராணுவத்தினர் மீன்பிடி படகுகள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினர்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த எமது நிருபர்கள், பாதிக்கப்பட்ட உள்ளூர் மீனவர்களுடன் பேசியபோது, அவர்கள் தீடீரென தாக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். குறைந்த பட்சம் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். கண்கானிப்புக் குழுவின் பதில் தலைவர் ஹக்ருப் ஹுக்லன்ட் (Hagrup Haukland), கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், படகொன்று சட்டவிரோத ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக பிரகடனப்படுத்தினார். ஆனால் பெயர் குறிப்பிடப்பட முடியாத மூன்றாம் நபர் ஆயுதங்களைக் கடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறி இலங்கை இராணுவத்தையும் விடுதலைப் புலிகளையும் நியாயப்படுத்தினார்.

விக்கிரமசிங்க, இந்த யுத்த நிறுத்தம் வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதாக பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால் கண்கானிப்புக் குழு, இலங்கை ஆயுதப் படையின் ஒடுக்குமுறைகளையும் தொந்தரவுகளையும் பற்றி அதிகரித்து வரும் முறைப்பாடுகளைப் பதிவுசெய்துள்ளது. ஏப்பிரல் 29ம் திகதி இரவு, நிலாவெலியில் கடற்படையின் திடீர்த் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மாரிமுத்து பிச்சமுத்து எனும் 43 வயது தாய். மற்றவர் சுபாசினி எனும் 13 வயது மாணவி. மே 4ம் திகதி கிழக்கு நகரமான மூதூரில், இந்த சம்பவத்தையும் ஏனைய சம்பவங்களையும் கண்டித்து 15,000 பேர் வேலை நிறுத்தம் செய்ததோடு ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினர்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக ஒரு நீண்ட பட்டியல் இருக்கின்றது. மே 13ம் திகதி திருகோணமலைத் துறைமுகத்துக்கு அருகில் இலங்கை கடற்படை துப்பாக்கிப் படகுகள், மீன்பிடி படகுகளை சுற்றி வளைத்ததோடு 35 மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அம்பாறையில் விசேட அதிரடிப் படை, தமது பாதுகாப்பு எல்லைகளை விரிவுபடுத்துவதன் பேரில் ஒரு ஆடைத் தொழிற்சாலையை நாசம் செய்துள்ளது.

இராணுவம், யாழ் வடமாராட்சிப் பகுதியில் ஊர்காவற்துறையில் விடுதலைப் புலிகளுக்கு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதியளிக்க மறுத்து வருவதோடு வீதித் தடைகளையும் பாதுகாப்புப் பரிசோதனைகளையும் தொடர்ந்தும் பேணிவருகிறது. பாதுகாப்புப் படையினர் யாழ்ப்பாண நகரின் பல பிரதேசங்களில் புதிய பங்கர்களை அமைத்து வருவதாக உள்ளூர் வாசிகள் குற்றம்சாட்டியுள்னர். இராணுவம் ஏற்கனவே கைப்பற்றி முகாம்களாக பயன்படுத்தி வந்த 16 பாடசாலைகளில் இருந்தும் வெளியேற மறுத்து வருகின்றது.

அதிகாரிகள் உட்பட்ட இராணுவத்தின் சில பிரிவினர் யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்கான எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் கசப்புடன் எதிர்க்கின்றனர். வேலையற்ற கிராமப்புற இளைஞர்களான பெரும்பான்மையான படைவீரர்களைப் பொறுத்தளவில் இந்த மோதல்கள் அழிவுகரமானதாக இருந்து வந்துள்ளது. எவ்வாறெனினும், ஏனையவர்கள், ஒரு அதிகரித்த போக்கில் அல்லது இராணுவ கொந்தராத்துகளோடு சம்பந்தப்பட்ட வியாபாரங்களுடனான ஒரு கூட்டுழைப்பில் இலாபம் பெற்று வந்துள்ளனர். ஆயுதப் படைகளதும் அரச அதிகாரத்துவத்தினதும் பிரிவுகள் சிங்களப் பேரினவாதத்துடன் ஆழமாக ஊறிப்போயுள்ளதோடு சிங்கள தீவிரவாதக் குழுக்களுடனும் பெளத்த பெரும் தலைவர்களுடனும் நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டுள்ளன.

இவ்வாறான ஒரு நிலைமையின் கீழ், தொந்தரவுகளிலும் அடக்குமுறைகளிலும் ஈடுபடவும் யுத்த நிறுத்தத்தை தகர்ப்பதற்காக அல்லது குளப்புவதன் பேரில் வன்முறைகளைத் தூண்டிவிடவும் இராணுவத்தினருக்கு ஒரு பரந்த வாய்ப்பு இருந்து கொண்டுள்ளது. ஆயுதப் படைகளை தயார் நிலையில் பேணிவருவதாக உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். விடுதலைப் புலிகள் வடக்கின் வன்னிப் பிராந்தியத்தில் தமது கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளில் வானலை மூலமான இராணுவ ஆராய்ச்சிகள் இடம்பெறுவதாக முறைப்பாடு செய்துள்ளனர். அரசாங்கம், இராணுவத் தொகையை அதிகரிப்பதற்காக 5,000 படைவீரர்களை புதிதாக திரட்டுவதற்கான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் சிலவாரங்களில் தாய்லாந்தில் இடம்பெறவுள்ளது. எவ்வாறெனினும், இன்னமும் திகதி குறிப்பிடப்படாத நிலையில், பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதையிட்டு எந்தவிதமான உறுதிப்பாடும் கிடையாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved