World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : இலங்கைHigh-level US delegation issues veiled threat to Sri Lankan separatists அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கையின் பிரிவினைவாதிகளுக்கு மறைமுகமான அச்சுறுத்தலை விடுக்கின்றது By Nanda Wickremasinghe தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான உதவிச் செயலாளர் கிரிஸ்டினா ரொக்கா தலைமையிலான உயர் அதிகாரம் படைத்த அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்று, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தயார்செய்யப்பட்டுள்ள சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அரசாங்க அமைச்சர்களுடனும் இராணுவத்துடனும் கலந்துரையாடுவதற்காக, மார்ச் நடுப்பகுதியில், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. மே மாதத்தில் ஒரு தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தையின் முன்னோடி நடவடிக்கையாக கடந்த மாதம் கொழும்புக்கும் விடுதைலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு உத்தியோகபூர்வ யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதுவரை, அமெரிக்கா பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்பு நடவடிக்கைகளை, ஆரம்பத்திலிருந்து உதவியாளனாக கடமையாற்றிய நோர்வேயிடமும் இந்தியாவிடமும் விட்டு வைத்திருந்தது. ரொக்காவின் வருகை இலங்கை விவகாரங்களில் அமெரிக்காவின் அதிகபட்சமான தலையீட்டினை சுட்டிக்காட்டுகின்றது. பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்திலேயே விடுதலைப் புலிகளுக்கு ஒரு நேரடியான அச்சுறுத்தலை விடுப்பதே அதன் முக்கிய நோக்கமாகும்: அது, ஒன்று வாஷிங்டனால் தீர்மானிக்கப்பட்டுள்ள வழியில் செல்லுங்கள் இல்லையேல் இராணுவ முடிவை எதிர்கொள்ளுங்கள் என்பதாகும். மார்ச் 14ம் திகதி வருகை தந்த ரொக்கா: "இம்முறை எங்களுக்கு பெரும் அக்கறை இருந்துகொண்டுள்ளது" எனப் பிரகடனம் செய்தார். தற்போது சர்வதேச சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ள அதேவேளை சமாதானத்துக்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம் இதுவேயாகும். இப்போது உலக நிலைமை மாறியுள்ளதோடு தெற்காசியாவில் ஒரு நற்செய்திக்கான சரியான சந்தர்ப்பம் இதுவாகும்" எனவும் குறிப்பிட்டார். "சர்வதேச சூழல்" என அவர் குறிப்பிடுவது புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதம் மீதான பூகோள யுத்தத்தையும்" ஆப்கானிஸ்தான் மீதான அதன் இராணுவ தலையீட்டையுமாகும். வாஷிங்டனும் கொழும்பும் இலங்கைக்கான அமெரிக்காவின் இராணுவ உதவி விடுதலைப் புலிகளை விட்டுக்கொடுப்புகளுக்காக நிர்ப்பந்திப்பதற்கு பயன்படக் கூடும் என எண்ணிக்கொண்டுள்ளனர். ரொக்கா, யுத்தப் பிராந்தியமான வடக்கின் இதயமாக விளங்கும் யாழ்ப்பாண நகருக்கு விஜயம் செய்தபோது இராணுவ உயர் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவுடனும் படைகளின் உயர் அதிகாரிகளுடனும் பலாலி இராணுவ முகாமில் மூடிய கதவுக்குள் ஒரு மாநாட்டை நடத்தினார். அவருடன் அங்கு அமெரிக்க பிரிகேடியர் ஜெனரல் திமொத்தி கோர்மெளியும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரான அஷ்லி வில்சும் இருந்தனர். பின்னர் ரொக்கா சாவகச்சேரி நகரத்திற்கு விஜயம் செய்தார். பலாலியில் இடம்பெற்ற சந்திப்பானது சங்கேத முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2000 ஆண்டு மே மாதத்தில் விடுதலைப் புலிகள் முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு முகாமைக் கைப்பற்றி யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேறியபோது, இத்தளம் புலிகளின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. யாழ்ப்பாண குடாநாட்டின் வடபகுதியில் இலங்கை இராணுவ வீரர்களில் 30,000 த்துக்கும் மேற்பட்டவர்களை பொறிவைத்து கைப்பற்றிய பகுதிகளில் சாவகச்சேரியும் ஒன்றாகும். அச் சந்தர்ப்பத்தில், கொழும்பு அரசாங்கம் தனது படைகள் அனைத்தையும் அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பாக கடுமையாக ஆலோசித்து வந்தது. அமெரிக்கா, விடுதலைப் புலிகளை பின்வாங்கச் செய்வதற்காகவும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வைப்பதற்காகவும் தலையீடு செய்தது. சில வருடங்களின் பின்னர் முதற் தடவையாக, ஒரு அமெரிக்க உயர் அதிகாரி -அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் தோமஸ் பிக்கரிங்- எந்த ஒரு வல்லரசும் விடுதலைப் புலிகளின் தனித் தமிழ் அரசுக்கான கோரிக்கைக்கு உடன்படாது என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்தார். தாம் திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ரொக்கா, ஒரு தனியான தமிழ் அரசுக்கு அமெரிக்காவின் எதிர்ப்பை வலியுறுத்தியதோடு நோர்வேயின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார். தற்போது, அமெரிக்கா தனது பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளையும் சேர்த்துக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் "பகைமை நடவடிக்கைகளை நிறுத்தி, மனிதத்துவத்துக்கு மதிப்பளிப்பதோடு ஒரு சுயாதீன அரசு சாத்தியமான தீர்வு அல்ல என்பதை" ஏற்றுக்கொள்வதன் மூலம் தற்போதைய சமாதான நடவடிக்கைகளில் அக்கறை செலுத்துமானால் மாத்திரமே புஷ் நிர்வாகம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் என ரொக்கா குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் "அன்மையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதற்கான" "நம்பத் தகுந்த" அறிக்கைகள் இருப்பதாக குறிப்பிட்ட தூதுவர் அஸ்லி வில்ஸ் இந்த எச்சரிக்கையை மீள வலியுறுத்தினார். அவர், தொடர்ச்சியான ஆட்திரட்டல், சிறுவர்களை கடத்திச் செல்லுதல், பணயம் வைத்தல் மற்றும் கப்பம் வாங்குதல், ஆயுதம் சேகரித்தல் மற்றும் ஆயுதம் கடத்தல் போன்றவற்றை மேற்கோள் காட்டினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏதாவதொரு வழியில் பாதையிலிருந்து விலகிச் செல்லுமானால் அது யுத்த நிறுத்தத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் "பயங்கரவாத இயக்கமாக" இனங்காணப்படும் அபாயமும் இருந்துகொண்டுள்ளது என்பதாகும். ரொக்கா தொடர்புச்சாதனங்களுடன் பேசுகையில்: "ஜெனரல் கோர்மலி சி-130s ஐ (ஹேர்கிஸ் விமானம்) இயக்குவது தொடக்கம் பல்வேறு இராணுவ ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் ஏனைய மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுவதற்காக இங்கு வருகை தந்துள்ளார்" என மேலோட்டமாக குறிப்பிட்டார். கடற் படையணியின் கட்டளையிடும் அதிகாரியான கோர்மலியின் எண்ணத்தில் மனிதாபிமான உதவிகளை விட மேலதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அந்த வகையில் அவர் இலங்கையில் உள்ள தமது சமதரப்பினருடனான கலந்துரையாடலை அடுத்து ஈசான மூலையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்திற்கும் விஜயம் செய்தார். தமது அரசாங்கம் யாழ்ப்பாண குடாநாட்டில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ளதாக பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார். "நாங்கள் குறைந்த பட்சம் நான்கு மாதங்களுக்கு பத்துப் பேர் அடங்கிய நான்கு கண்ணி வெடி அகற்றும் குழுக்களை எதிர்பார்க்கின்றோம்... அமெரிக்கா கூடிய விரைவில் எமக்கு சில உபகரணங்களையும் தர முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க தூதரகத்தின்படி, இதற்கு முன்னர் 1994ல் இருந்து சிறிய இராணுவ பிரிவுகளுக்கு "யுத்த களத்தோடு சம்பந்தமில்லாத இராணுவ பயிற்சியை" வழங்குவதில் ஈடுபட்டிருந்த விசேட இராணுவ பயிற்சியாளர்களே இலங்கை மண்ணில் முதலாவதாக தங்கியிருந்த அமெரிக்க இராணுவமாகும். 1999 நவம்பரில் இலங்கை இராணுவத்தினரின் பின்னடைவுகளைத் தொடர்ந்து, அமெரிக்கா மோட்டார்களைக் கண்டுபிடிக்கும் கருவிகளை வழங்கியதோடு புலனாய்வு பரிமாற்றங்களிலும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்தது. மூலோபாய நலன்கள் இலங்கையிலான அமெரிக்க உயர் மட்ட தலையீடு பொதுவில் அரிதாகவே இருந்து வந்துள்ளது-இது இந்த சிறிய தீவையிட்டு வாஷிங்டன் எவ்வளவு தூரம் அக்கறை கொண்டுள்ளது என்பதை பிரதிபலிக்கின்றது. ஆனால் 1998ல், கிளின்டன் நிர்வாகம் இந்திய உபகண்டத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கியதை அடுத்து, தெற்காசியாவிற்கான உதவிச் செயலாளர் கார்ல் இன்டர்பேத்தும் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதி பில் ரிச்சட்சனும் நோர்வேயின் சமாதான முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக கொழும்புக்கு விஜயம் செய்தனர். 2000 ஆண்டு நவம்பரில் இலங்கை இராணுவம் ஆனையிறவில் பெரும் தோல்வியைத் தழுவியதையடுத்து இன்டபேர்த் இன்னுமொரு இலங்கை விஜயத்தை மேற்கொண்டார். இலங்கை மீதான வாஷிங்டனின் புதிய நோக்கு, "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையின் கீழ் அமெரிக்கா மூலோபாய நலன்களைக் கொண்டுள்ள பல நாடுகளுக்குள் அதன் இராணுவத்தை நிறுத்துவதுடன் தொடர்புடையதாகும். இது பிலிப்பைன்ஸ், யேமன், ஜோர்ஜியா மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற சில மத்திய ஆசிய குடியரசுகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இலங்கை, அராபியக் கடலுக்கும் வங்காள விரிகுடாவிற்குள்ளும் நுழைவதற்கு வசதியாக இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளதோடு இந்திய உபகண்டத்தினுள்ளேயும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதியான அடிப்படையையும் வழங்குகிறது. அமெரிக்கா, இலங்கையின் மேற்குக் கரைப் பிரதேசமான இரணவிலவில் ஏற்கனவே ஒரு தொலைத் தொடர்பு மத்திய நிலையத்தைக் கொண்டுள்ளது. அது சீனா, பர்மா, வடகொரியா உட்பட்ட பல நாடுகளிலும் அமெரிக்காவின் பிரச்சாரத்தை பரப்பிவந்துள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இலங்கைத் தீவை ஸ்திரமின்மைக்குள் தள்ளியுள்ளதோடு மட்டுமல்லாமல், இலங்கைத் தமிழர்களின் நிலைமைக்கு பெரும்பாலான ஆதரவாளர்களைக் கொண்டுள்ள, கிட்டத்தட்ட 50 மில்லியன் தமிழர்கள் வாழும் தென்னிந்தியாவினுள், பதட்ட நிலைமைகளை அதிகரிப்பதற்கான சாத்தியத்தையும் கொண்டுள்ள இந்த நீண்ட யுத்தத்துக்கு முடிவுகட்ட வேண்டியது அவசியமாகும். இந்த யுத்தம், புதுடில்லியில் வாஜ்பாய் அரசாங்கத்துடன் மிக நெருக்கமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு பிணைப்புகளை ஸ்தாபிதம் செய்துகொள்ளும் வாஷிங்டனின் முயற்சிகளுக்கு அச்சுறுத்தல் செய்கின்றது. கடந்த டிசம்பர் மாதம், யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்கான மக்களின் பரந்த உணர்வுகளுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அது யுத்தத்தை ஒரு பொருளாதார அழிவாகக் கருதிய பெரு வர்த்தகர் பகுதியினரது பின்னணியையும் கொண்டிருந்தது. அதே நேரம், எவ்வாறெனினும், நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையையும் வழங்குவதை ஒரு காட்டிக் கொடுப்பாகக் கருதும் சிங்களப் பேரினவாத இயக்கங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு தனித் தமிழ் அரசுக்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கையை கைவிட நிர்ப்பந்திக்கும் அதேவேளை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றது. பெரும்பாலும் இந்த தெளிவற்ற ஒப்பந்தத்தின் சில பகுதிகள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் இறக்குமதி செய்வதற்கும், நிதி சேகரிப்பதற்கும் ஆட்திரட்டளுக்கும் அனுமதியளிக்கின்றது. அது தற்போது கொழும்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதியளிப்பதன் மூலம், தடைசெய்யப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு இப்போது ஒரு குறிப்பிடத்தக்களவு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது. யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரான பேரினவாத எதிர்ப்புகள் எழுச்சி பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நிலைமையிலேயே அமெரிக்கக் குழு இங்கு விஜயம் செய்தது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்கட்சியான பொதுஜன முன்னணியின் சில பிரிவினரும் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி கண்டனம் செய்தனர். அவர் அமெரிக்கப் பிரதிநிதிகளின் விஜயத்தின் போது அவர்களைச் சந்திப்பதற்கு தமக்கு கால அவகாசம் கிடையாது என்ற போலிக் காரணத்தைக் கூறி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஏனைய தீவிரவாத இயக்கங்கள், விடுதலைப் புலிகளுடனான ஒரு இரகசிய ஒப்பந்தத்தினூடாக "தாயகத்தைப் பிரிக்கின்றார்கள்" என அரசாங்கத்தை மிகவும் கடுமையான முறையில் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பிடத்தக்க வகையில் ரொக்கா விடுதலைப் புலிகளுக்கு விடுத்த எச்சரிக்கையை இந்த அமைப்புகளில் சில பெரிதும் வரவேற்றன. பாசிச சிங்கள உறுமய கட்சி, விடுதலைப் புலிகளை அச்சுறுத்தியதற்காக அமெரிக்க அரசாங்கத்தைப் பாராட்டியது. "அமெரிக்கத் தூதுவர், விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்தி தனது கெரில்லாப் படைக்கு ஆள் சேர்ப்பதையும் பொதுமக்களிடமிருந்து பணம் கறப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்... நாங்கள் கிழக்கில் முஸ்லிம்களின் நிலையை விட மோசமான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள சிங்கள மக்களைப் பற்றியும் கருத்திற் கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு பணிவுடன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்" எனவும் அது குறிப்பிட்டுள்ளது. தம்மை மார்க்சிஸ்டுகள் என போலியாக கூறிக்கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணி (JVP), கடந்த காலங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்திருந்ததோடு வாயாடித்தனமாக குரலெழுப்பியது. ஆனால் அது ஏனைய பேரினவாத அமைப்புக்களின் வழியில் ரொக்காவின் வருகையையிட்டு முழு மொனத்தை கடைப்பிடித்தது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை, தாம் யுத்த நிறுத்த நிபந்தனைகளை கீழ்ப்படிவுடன் அமுல்படுத்துவதாக மீண்டும் ஒரு முறை உறுதியளித்ததன் மூலம் ரொக்கா மற்றும் வில்ஸ் ஆகியோரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்குப் பதிலளித்தது. பேச்சாளரான அன்டன் பாலசிங்கம், விடுதலைப் புலிகள் தம்மை "சமாதானத்துக்கும் பேச்சுவார்த்தை மூலமான ஒரு அரசியல் தீர்வின் பேரிலான சமாதான முன்னெடுப்புகளுக்கும் மிகவும் நேர்மையாகவும் அக்கறையுடனும் அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக" தெரிவித்தார். பாலசிங்கம் தமது பலவீனமான எதிர்ப்பை உணர்த்துவதற்காக: அமெரிக்காவின் அச்சுறுத்தலையிட்டு தாம் "ஆச்சரியமும் திகைப்பும்" அடைந்ததாக குறிப்பிட்டதோடு யுத்த நிறுத்த மீறல்களை கண்காணிப்பதற்காக சர்வதேச குழுவொன்று வருகைதந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். "ஆயினும், ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் செயல்படுவதற்காக இருசாராருக்கும் அழைப்புவிடுத்திருந்ததோடு தீவில் சமாதானத்தையும் ஸ்திரப்பாட்டையும் ஸ்தாபிதம் செய்வதற்காகவும் அமெரிக்க அரசாங்கம் பெரிதும் அக்கறைகொண்டதையிட்டு நாம் தைரியமடைந்துள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார். புஷ் நிர்வாகம் இலங்கையில் நேரடியாகத் தலையிடுவது சமாதானத்தையும் ஸ்திரப்பாட்டையும்
ஸ்தாபிதம் செய்வதற்காக அல்ல, மாறாக பிராந்தியத்தினுள் அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்துவதற்கேயாகும். விடுலைப்
புலிகளை கொழும்புடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு உடன்பட வைக்க முடியாது போனால், அமெரிக்கா யுத்தத்தை
உக்கிரமாக்குவது உட்டபட்ட ஏனைய வழிகளில் ஆதரவளிக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. |