World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

Chirac wins French presidency with 82 percent of the vote
Gaullist president backed by Socialist Party, CP, Greens

பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில் சிராக் 82 வீத வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்

கோலிச ஜனாதிபதி சோசலிசக் கட்சியாலும், கம்யூனிஸ்ட் கட்சியாலும், பசுமைக் கட்சியாலும் ஆதரவளிக்கப்பட்டார்

By David Walsh in Paris
6 May 2002

Back to screen version

பிரான்சின் தற்போதைய ஜனாதிபதியும் கோலிச தலைவரான சிராக் மே மாதம் 5ம் திகதி தேர்தலில், 18% வாக்குகளை பெற்ற தேசிய முன்னணியின் தலைவரான நவ பாசிச லு பென்னை 82% மான வாக்குகளை பெற்று தோற்கடித்ததன் மூலம் தொடர்ந்தும் 5வருடம் பதவியிலிருப்பதற்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஏப்பிரல் 21ம் திகதியின் முதற்கட்ட வாக்களிப்பில் சிராக்கும், லு பெனும் சோசலிச கட்சி பிரதமரும், ஜனாதிபதி வேட்பாளருமான லியொனல் ஜொஸ்பனை தோற்கடித்ததை தொடர்ந்து, பிரான்சின் அரசியல் செய்தித்துறை கட்டமைப்பும் அதனது உத்தியோகபூர்வமான இடதுசாரிகளும் சிராக்கின் முழக்கமிடத்தக்க வெற்றிக்கு ஒரு உறுதியான பிரச்சாரத்தை செய்தனர். சோசலிச கட்சியாலும், கம்யூனிஸ்ட் கட்சியாலும், பசுமைக் கட்சியாலும் பரப்பப்பட்ட இப்பிரசாரத்திற்கு ஒரு முக்கிய தாக்கம் உள்ளது. 30% ஆகவிருந்த முதற்கட்ட வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்களின் தொகை இரண்டாவது கட்ட வாக்களிப்பில் கிட்டத்தட்ட 20% ஆக குறைந்தது.

உடனடியாகவே சிராக்கும் அவரது ஆதரவாளர்களும் எதிர்வரும் யூன் 9, 16ம் திகதிகளில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்களை கருத்திற்கொண்டு அவர்களது ஒருதலைப்பட்டசமான வெற்றியால் கிடைத்த அரசியல் பலன்களை அறுவடை செய்ய முயற்சிக்கின்றனர். உத்தியோகபூர்வ இடதுசாரிகளால் கையளிக்கப்பட்ட சிராக், கட்சிகளுக்கும் சமூக வர்க்கங்களுக்கும் மேலாக நிற்கும் பிரதிநிதி என்ற பாட்டை பாடுகின்றனர்.

வாக்களிப்பு நிலையங்கள் மூடப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் செய்தித்துறையால் இவ் வெற்றி தொடர்பாக பிரச்சாரம் செய்தவேளையில் வெளிவிடப்பட்ட அறிக்கையில் சிராக் ஒரு போனபாட்டிச மாதிரியான வடிவத்தை எடுத்து தனக்கு வழங்கப்பட்ட ஆணையை ''வெளிப்படையினதும், அமைதிக்கும்'' பிரயோகிக்கப்போவதாகவும், ''குடியரசினது ஐக்கியத்திற்கும், தேசத்தின் ஒன்றிணைவிற்கும், அரசாங்கத்தின் ஆளுமையினை மதிப்பளிக்கவும்'' பயன்படுத்தப்போவதாக வாக்களித்தார். தன்னை ஒரு சில நாட்களுள் ''ஒரு நோக்கத்தை கொண்ட அரசாங்கத்தின்'' உருவாக்கத்திற்கு தன்னை அர்ப்பணிப்பதாகவும், அதனது ''பாதுகாப்பின் தேவையை கருத்திற்கொண்டு (சட்டம் ஒழுங்கு) அரசாங்கத்தின் ஆதிக்கத்தை மறுசீரமைப்பது தனது முதற்கடமையாக'' இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சிராக்கின் குடியரசுக் கட்சிக்கு முக்கிய புத்துயிர்ப்பு வழங்கியவரும், அவரது முன்னாள் பிரதமருமான அலன் யூப்பே (1990 களின் மத்தியில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய வேலைநிறுத்த போராட்டத்தினால் பதவியிலிருந்து துரத்தப்பட்டவர்) ''குடியரசின் ஜனாதிபதி பிரான்சின் மக்ககள் அனைவருக்குமான ஜனாதிபதியாவர். அவரது வரலாற்று கடமை அவர்களை ஒன்றிணைப்பதும், அவர்களால் முன்வைக்கப்பட்ட செய்திக்கு கவனம் செலுத்தி இயங்குவதாகும்'' என பத்திரிகைக்கு தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ இடதுசாரிகள் இதற்கு ஒத்திசைப்பதாவும், சிராக்கிற்கு முழுஅளவிலான வாழ்த்து தெரிவிப்பதாகவே உள்ளது. சோசலிச கட்சியின் தலைவரும், ஜொஸ்பனின் பதவிவிலகலை தொடர்ந்து இடைக்கால தலைவருமான பிரான்சுவா ஒலான்ட் நவ பாசிச லு பெனை சுட்டிக்காட்டி ''தீவிரவாத்தையும் சகிப்புத்தன்மையின்மையையும் நிராகரித்துள்ளனர்'' என பிரான்சின் மக்களின் வாக்களிப்பை புகழ்ந்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் ''சோசலிச கட்சியின் சார்பில் நான் பிரான்சின் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, ஒப்பிடப்படமுடியாத இந்த வெற்றிக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன். பிரான்சு தனது உண்மையான நிறத்தை கண்டுள்ளதுடன், உலகம் பிரான்சை கண்டுகொண்டுள்ளது'' என குறிப்பிட்டார். ஜொஸ்பனின் அரசாங்கத்தின் முன்னைநாள் நிதியமைச்சரான Dominique Strauss-Kahn ''இடதுசாரிகளும் தமது கடமையை செய்துள்ளனர். லு பென் பாரியளவில் இடதுசாரிகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்'' என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் 3.37% வாக்குகளை மட்டும் பெற்ற பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான Robert Hue வலதுசாரிகளின் தோல்வியால் ''ஆழ்ந்த மகிழ்ச்சியடைந்ததாகவும்'' இதுதான் இரண்டாவது கட்டவாக்களிப்பின் ''ஒரேயொரு விடயம்'' என தெரிவித்தார்.

சோசலிஸ்ட் கட்சியின் உயர்மட்டத்தால் சிராக் ''குடியரசின் பெறுமதி'' என வர்ணம் பூசப்பட்டார். உண்மையில் அவர் ஒரு தனது நலன்களை மட்டும் கருத்திற்கொண்ட ஒரு வலதுசாரி அரசியல்வாதியும், 30 வருடங்களாக பிரான்சு ஆளும்தட்டின் நலன்களை பாதுகாத்தவராவார். அவர் ஊழலுக்கு பெயர்போனவருமாகும். ஜனாதிபதி பதவியிலிருந்ததே அவர் பாரிசின் நகரசபை தலைவராக இருந்தபோது பல ஆயிரக்கணக்காண டொலர் பொதுப்பணத்தை தனக்கும், தனது குடும்பத்திற்கும் உல்லாசப்பயணத்திற்கு செலவழித்ததற்கான குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்கு பாதுகாப்பளித்தது. 1980 களிலும் 1990 களிலும் தனது அரசியல் வாகனமாகிய அவரது கட்சிக்கு அவரது நிர்வாகம் மில்லியன்கணக்கான பணத்தை பின்வழிகளால் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டையும் விசாரணையாளர்கள் கவனித்துள்ளனர்.

பிரான்சின் இடதுசாரிகள் தற்போது முற்றுமுழுதான ஊழல்மிக்கதும், பிற்போக்குதனமாக மதிப்பிழந்ததும் 5ம் குடியரசு உருவாக்கப்பட்ட பின்னர் ஆகக்குறைந்த வாக்குகளை (19.2%) முதலாம் கட்டவாக்களிப்பில் பெற்ற ஒருவர் பரந்துபட்ட மக்களின் பாதுகாவலனாக வலதுசாரி தாக்குதலுக்கு எதிராக கவசமாக பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்குவதற்கும் உதவியுள்ளனர். இது ஏமாற்றும் பொய்யுமாகும். சிராக்கிற்கு வாக்களித்தவர்கள் பலர் அவரை இழிவாக கருதலாம், ஆனால் இடதுசாரிகள் விரைவில் தொழிலாளர்களின் தொழில்களின் மீதும், சமூக நிலைமையின் மீதும், ஜனநாயக உரிமைகளின் மீது தாக்குதலை செய்யக்கூடிய பிரான்சின் பிற்போக்கான அரசியலமைப்பை சட்டபூர்வமாக்குகின்றனர்.

5 வது குடியரசின் அரசியமைப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு குறிப்பிடத்தக்களவு அதிகாரங்கள் உண்டு. 5 வருடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரான்சின் ஜனாதிபதியால் பிரதம மந்திரியை நியமிப்பதற்கும், அரசாங்கத்திற்கு தலைமை தாங்கவும், பாராளுமன்றத்தை கலைக்கவும் உரிமை உண்டு. அவருக்கு வெளிநாட்டு கொள்கையை தீர்மானிக்கவும், மந்திரிசபை கூட்டத்திற்கு தலைமை தாங்கவும் முடியும்.

ஜொஸ்பனின் அரசாங்கமானது மே 6ம் திகதி உத்தியோகபூர்வமாக பதவிவிலகுவதுடன், ஒரு வலதுசாரி இடைக்கால அரசாங்கம் ஜனநாயக தாராளவாதக்கட்சியின் Jean-Pierre Raffarin ஆல், அல்லது கோலிச கட்சியின் Nicolas Sarkozy ஆல் தலைமை தாங்கப்படலாம். இது யூன் 9 இலும் 16 இலும் இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்வரை பதவியிலிருக்கும். சிராக்கின் பிரிவினர் ஜனாதிபதியின் பெரும்பான்மைக்கான கூட்டு (Union for a Presidential Majority-UMP) என்பதன் கீழ் 577 ஆசனங்களை கொண்ட சபையில் பெரும்பான்மையை பெறுமானால் வலதுசாரிகள் அரசாங்கத்தை அமைப்பர். சோசலிச கட்சியோ அல்லது இடதுசாரிக்கட்சிகள் ஒரு பெரும்பான்மையை பெறுமானால் பிரான்சு மீண்டும் ஒரு ''கூட்டு வாழ்க்கை'' காலத்தினுள் செல்லும். அதாவது ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பர்.

முதலாம் கட்ட வாக்களிப்பில் சிராக் ஒரு வலதுசாரித்தனமான, சட்டமும் ஒழுங்கும் பிரச்சாரத்தை செய்தார். ஜொஸ்பனும் அதனை தனது பிரச்சாரத்தில் ஒட்டிக்கொண்டார். உழைக்கும் மக்கள் எதிர்நோக்கும் பாரிய வேலையின்மை, வாழ்க்கை தரத்தின் வீழ்ச்சி, வீட்டுவசதிகளின் சீரழிவு, சுகாதார வசதி, கல்விவசதி, மோசமான பொருளாதார பாதுகாப்பின்மை போன்ற முக்கிய சமூகப்பிரச்சனைகள் தொடர்பாக இரண்டு பிரிவாலும் பாரியளவில் கவனிக்கப்படாது விடப்பட்டது. முன்னாள் தொழிலாளர் அமைப்புகளின் வலதுதிருப்பத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் வெற்றிடத்தினை தமக்கு சாதகமாக கொண்டு பெற்ற ஒரளவு வெற்றியால் லு பென் பரந்த சமூகத்தட்டினரிடமுள்ள இச் சமூக பிரச்சனைகளையும், அவநம்பிக்கையையும், அரசியல் குழப்பத்தையும் தனக்கு சாதகமாக பாவித்து தனது வார்த்தை ஜாலங்களையும், வாய்வீச்சுகளையும் வெளிவிடக்கூடியதாக இருந்தது. இந்த அதிருப்தியை அவர் தேசியவாத அடித்தளத்தில் ஐரோப்பாவினுடனான முதலாளித்துவ ஒருங்கிணைப்பை பிரான்சு தேசியவாதத்தினதும், குடியேற்றவாசிகளுக்கு எதிரான இனவாத அடித்தளத்தில் ஒரு வலதுசாரி நிலைப்பாட்டிலிருந்து தாக்குதல் செய்தார்.

சமூக நெருக்கடிக்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்சிகளின் பதில் மேலதிக போலிசும், கடுமையான ''பாதுகாப்பு'' நடவடிக்கைகளுமாகும். தேர்தல் பிரசாரத்தின் போது சிராக் விஷேடமான சட்டமும் ஒழுங்கு அமைப்பு மூலம் ''குற்றத்தின் மீது கடுமையான'' நடவடிக்கைக்கும், ''குற்றம் புரியும் குழுக்களை'' ஒடுக்குவதற்காக தற்போதுள்ள பொலிசினது தொகையை அதிகரிப்பதற்கும் மறுஒழுங்கமைப்பதற்கும் உறுதியளித்தார். அவர் இளம் குற்றவாளிகளை முக்கிய குறியாக கொண்டு, குற்றங்களுக்கு ''முற்றான பொறுமையின்மைக்கு'' அழைப்புவிட்டு தமது குற்றங்களை ஒப்புக்கொள்பவர்களுக்கு ''தண்டனையிலிருந்து விலக்களிப்பதை'' இல்லாதொழிக்கவும் அழைப்புவிட்டார்.

சிராக் வரிவெட்டினை மட்டுமல்லாது அவர் குறிப்பிட்ட முன்மொழிவுகள் எதனையும் முன்வைக்காதபோதிலும் நாட்டின் ஓய்வூதியம் மீதும், சமூக வசதிகளின் மீதும் தாக்குதல் நடாத்த அர்ப்பணித்துள்ளார். இதுவே 1995 இல் பாரிய வேலைநிறுத்தத்தை உருவாக்கியது.

பிரான்சின் முக்கிய வர்த்தக பிரிவான Mouvement des Entreprises de France (MEDEF) காரணங்கள் எதுவுமில்லாமல் சிராக்கிற்கு ஆதரவாக ஏப்பிரல் 29ம் திகதி திரும்பவில்லை. இதனுடன் ஏனைய சில பெரிய முதலாளிகளும் இணைந்துள்ளனர். உலகத்தின் 5 முக்கிய விளம்பர, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒன்றான Publicis Groupe இன் நிறைவேற்று அதிகாரியான Maurice Levy, தொழில் வழங்குரஞ்ஞர்கள் சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்புவிடுவதற்கு ஒரு தெளிவான நிலைப்பாடு எடுக்கவேண்டும்'' என கூறினார். Le Monde பத்திரிகைக்கு பாரிய வங்கியான BNP Parisbas இன் பிரதான நிறைவேற்று அதிகாரியான Michel Pébereau ''இரண்டாவது சுற்றில் சிராக்தான் சுதந்திரத்தின் மதிப்பையும், எமது சமுதாயத்தின் அடிப்படையான ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கின்றார். நான் அவருக்கு வாக்களிக்க இருக்கிறேன்'' என தெரிவித்தார். இந்த ஜனநாயக வார்த்தை ஜாலங்கள் மட்டுமல்லாது, யூரோ நாணயத்திற்கும், நாடுகடந்த நிறுவனங்களினதும் வங்கிகளினதும் கீழான தொடர்ச்சியான ஐரோப்பிய ஒன்றிணைவிற்கும் எதிரான லு பென்னின் எதிர்ப்பிற்காக அவர் நிராகரிக்கப்படவேண்டும் எனவும் MEDEF தெளிவாக குறிப்பிட்டிருந்தது.

சிராக்கின் மறுதெரிவிற்கான தமது ஆதரவானது ஜனாதிபதியின் கொள்கையை நவீனமயப்படுத்தவும், பரந்த கோரிக்கைகளையும், நலன்களையும் கவனத்திற்கு எடுக்க கடமைப்படுத்தும் எனவும் உத்தியோகபூர்வ இடதுசாரிகள் புகழ்ந்துகொண்டனர். அவர்கள் தமது நிலை தொடர்பாகவும், விஷேட நலன்கள் தொடர்பாகவும் பேசுவார்களானால் உள்ளடக்கத்தில் இவை சிராக்கினால் ஆபத்திற்குள்ளாகவில்லை. பரந்தபட்ட மக்களை கருத்திற்கொண்டால் இது வித்தியாமாகவுள்ளது.

சிராக்கின் பிரிவினர் எவ்விதமான தயக்கமுமில்லாமல் பிற்போக்கான அரசியலை கொண்டுசெல்லப்போக முனைவதை குடியரசுக்கட்சியின்(RPR) செயலாளரும், பிரதமராக வரலாம் என எதிர்பார்க்கப்படும் Nicolas Sarkozy தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். அவர் Le Figaro எனும் பத்திரிகைக்கு ஏப்பிரல் 30 வழங்கிய பேட்டியில் ''முதலாவது கட்டத்தின் முடிவுகளானது லியொனல் ஜொஸ்பனினதும், றொபேர்ட் கூயுனதும் முன்மொழிவுகளை மீண்டும் கொண்டுவருவதற்கான உண்மையான அழைப்பல்ல. 'குடியரசுவாத முன்னணியை' (வலதுகளினதும் சோசலிஸ்டுகளினதும் கூட்டுக்கு) நிராகரிப்பதற்கு வேலைத்திட்டங்களின் கூட்டை நிராகரிக்கவேண்டும். குடியரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஜாக் சிராக் முதலாவது கட்டத்தில் வெளிப்படுத்திய தனது வேலைத்திட்டத்தை தயவுதாட்சணியமில்லாமல் முன்வைப்பார்'' என தெரிவித்தார். சோசலிச கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் போலியான சந்தர்ப்பவாதிகளிடமிருந்து எவ்விதமான தெளிவான எதிர்ப்பும் வரப்போவதில்லை.

ஜனாதிபதி தேர்தலின் இரண்டு வாக்களிப்பிற்கும் இடையே லு பென் உடன் அவர் பிரான்சிற்கு பொருத்தமற்ற ஒரு அரசியல்வாதி என நிராகரித்து, சிராக் ஒரு பாரிய போட்டியான நிலைப்பாட்டை எடுத்தார். லு பென்னுடனான விவாதத்தை நிராகரித்து அவர் ''வெறுப்பையும், சகிப்புத்தன்மையும் காட்டுபவருடன் ஒருவிதமான உடன்பாடோ அல்லது விட்டுக்கொடுப்போ அல்லது கலந்துரையாடல்களோ சாத்தியமில்லை'' என தெரிவித்தார்.

எவ்வாறிருந்தபோதிலும் சிராக் விவாதத்தை நிராகரித்ததற்கு இன்னொருபக்கமும் உண்டு. தற்போதைய ஜனாதிபதி, ஒருபக்கத்தில் தனது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட விரும்பவில்லை. லு பென் தனது பிரச்சாரத்தின் இறுதிநாட்களில் சிறாக்கை ''நாட்டை உறிஞ்சி எடுத்த கூட்டத்தின் தலைவர். அவர் ஊழல்களால் நாற்றமெடுக்கிறார். அவர் அழுக்கான பணத்தால் நிரம்பிவழிகின்றார்'' என அழைத்திருந்தார். தேசிய முன்னணியின் தலைவர் ஜனாதிபதியுடன் நேரடியாக மோதுவதற்கு மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார்.

லு பெனிடமிருந்து விலகுவதற்கு சிராக்கிற்கு இன்னொரு காரணமும் உண்டு. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு சிலவேளை தங்கியிருக்கவேண்டியுள்ள தேசிய முன்னணியின் வாக்காளர்களிடமிருந்தும், அதன் கட்சி அமைப்பிலிருந்தும் அந்நியப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இந்த தேர்தல் அமைப்பு முறை காரணமாக கட்சிகள் வழக்கமாக ஒரு கட்ட வாக்களிப்பில் ஏனைய கட்சிகளுடன் கூட்டை ஏற்படுத்திக்கொள்வதும், அல்லது இரண்டாவது கட்டத்தில் ஏதாவது ஒரு கட்சிக்காக பின்வாங்கிக்கொள்ளவும் வழமை. 1998 இல் தேசிய முன்னணியின் வாக்குகளின் காரணமாக சிராக்கின் 3 பிராந்திய தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்கள் சிராக்கின் பிரச்சாரத்தின் போது சமூகமளித்திருந்தனர். அவர்களில் ஒருவரான Burgundy பிராந்திய தலைவரான Jean-Pierre Soisson ''லு பென் மீதான தாக்குதலில் ஜனாதிபதி சற்று கூடுதலாக போயுள்ளார்'' என ஒரு நிருபருக்கு தெரிவித்தார். சிராக்கின் பிரிவினருக்கும் அதிதீவிர வலதுசாரிகளுக்கும் இடையில் சகலவிதமான இழிவான உடன்பாடுகளும், கொடுக்கல்வாங்கல்களும் ஏற்கனவே இடம்பெறுகின்றது என்பது தொடர்பாக எவ்விதமான ஐயுறவுமில்லை.

சோசலிச இடதுசாரிகளை பொறுத்தவரையில், முதற்கட்ட வாக்களிப்பில் 30 இலட்சம் வாக்குகளைப் பெற்ற மூன்று கட்சிகளுமான Lutte Ouvrière (LO), Ligue Communiste Révolutionnaire (LCR), Parti des Travailleurs (PT) போன்றவை தம்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அழைத்துக்கொண்டாலும், நீண்ட காலத்திற்கு முன்னரே ட்ரொட்ஸ்கி போராடிய முன்னோக்குகளை கைவிட்டுள்ளதுடன், தம் முன்னே வைக்கப்பட்ட அரசியல் பரிசோதனையில் முற்றுமுழுதாக தோல்வியடைந்துள்ளனர். பிற்போக்கானதும் ஜனநாயத் தன்மையற்றதுமான போலித்தேர்தலை (முதற்கட்டத்தில் இடதுகட்சிகளுக்கு வாக்களித்த 44% ஆனோர் இரண்டாம் கட்டத்தில் ஒரு மாற்றீடும் இல்லாதபோது) வெளிப்படையாக நிராகரிக்கும் பொறுப்பை எதிர்கொண்டு, மூன்று போக்கினரும் தமக்குரிய சொந்த வழிகளில் சிராக்கிற்கு சார்பான பிரச்சாரத்திற்கு அடிபணிந்துபோனர்.

Parti des Travailleurs ஒரு நிலைப்பாடு எடுக்க மறுத்து, நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான பாதையை தாமே கண்டுகொள்ளுமாறு தமது ஆதரவாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கூறினர். Ligue Communiste Révolutionnaire உத்தியோகபூர்வமான பகிரங்க கருத்தின் அழுத்தத்திற்கு வெளிப்படையாக அடிபணிந்து தமது ஆதரவாளர்களுக்கு ''லு பென் இற்கு எதிராக'' வாக்களிக்குமாறு வேறுவகையில் கூறினர். அதாவது இன்னொருவகையில் ''சிராக்கிற்கு வாக்களி'' என்பதாகும். Lutte Ouvrière தனது ஆதரவாளர்கள் வெற்றுவாக்கு அல்லது செல்லுபடியாகாத வாக்களிக்குமாறு தெளிவாக தொழிலாளர்களுக்கு கூற விரும்பும் பொறுப்பை தவிர்த்தபோதும், வாக்களிப்பை நிராகரிக்குமாறு ஒரு பகிரங்க பிரச்சாரத்தை செய்ய மறுத்தது.

வாக்களிப்பு தொடர்பாக ஆய்வு செய்யும் நிறுவனங்களின் தேர்தலுக்கு முந்திய அறிக்கைகளில் பிரதிபலித்த அதன் விளைவுகள் இவ்வமைப்புகளுக்கான ஒரு தீர்ப்பாகும். அவ் அறிக்கைகளின்படி Ligue Communiste Révolutionnaire இற்கு முதற்கட்டத்தில் வாக்களித்தவர்களில் 76% இனரும், Lutte Ouvrière இற்கு முதற்கட்டத்தில் வாக்களித்தவர்களில் 72%னர் இரண்டாம் கட்டத்தில் சிராக்கிற்கு வாக்களித்துள்ளனர்.

சாதாரணமாக, முதலாம் கட்டத்தில் தமக்கு வாக்களித்தவர்களின் வாக்களிக்கும் தன்மை மீது கட்டுப்பாடுவிதிக்கும் தன்மை எந்தவொரு அமைப்பிற்கும் இல்லை. ஆனால், வாக்களிப்பில் கலந்துகொள்வதை பகிஸ்கரிக்குமாறு ஒரு தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்திருப்பார்களானால், மற்றும் அப்படியான நடவடிக்கையின் அரசியல் அவசியத்தை விளங்கப்படுத்தியிருப்பார்களானால், முதலாளித்துவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பிரதிநிதிகளுக்கிடையில் வாக்களிப்பதை தேர்ந்தெடுப்பது தவிர்க்கப்பட்டிருக்காலாம். அதாவது இது உழைக்கும் மக்கள் மத்தியில் மேலும் அரசியல் குழப்பத்தை அதிகமாக்கியுள்ளது.

இக்கட்சிகளின் அரசியல் ரீதியான பரிதாபகரமான பாத்திரத்தின் மத்தியிலும், முதற்கட்டத்தில் Lutte Ouvrière, Ligue Communiste Révolutionnaire, Parti des Travailleurs போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட வாக்குகளால் ட்ரொட்ஸ்கியினதும், ட்ரொட்ஸ்கிசத்தினதும் உருவத்தினால் (ஆவியால்) ஆளும்வர்க்கத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட பயமானது இன்னும் மறையவில்லை. இரண்டு கட்டத்திற்கும் இடையில் அரசியல் விவகாரங்களில் இப்படியான போக்கு இருப்பது தொடர்பாகவும், அதன் ஆளுமை அதிகரிப்பது தொடர்பாகவும் முதலாளித்துவ செய்தித்துறை விமர்சகர்கள் அவை தொடர்பாக விவாதிப்பதையும், புலம்புவதையும் நிறுத்தவில்லை.

Alain Madelin இனது வலதுசாரி தாராளவாத ஜனநாயக கட்சியினது பேச்சாளரான, Claude Goasguen பாரிசில் ஏப்பிரல் 30ம் திகதி இடம்பெற்ற சிராக்கின் கூட்டம் ஒன்றில் ''பல வேட்பாளர்களுக்குள் உள்ளடங்கியிருந்த ட்ரொட்ஸ்கிக்கும் லு பென்னிற்கும் இடையில் இளைஞர்கள் தீர்மானிக்கப்படும் நிலைமையை தவிர்ப்பது அவசியமாகும்'' என குறிப்பிட்டார். Le Figaro பத்திரிகைக்கு மே 3ம் FèF, Académie française இன் Jean d'Ormesson ''பிரான்சில் மூன்று ட்ரொட்ஸ்கிச கட்சிகள் 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருப்பது தொடர்பாகவும், ''இடதுதீவிர போல்சிவிச,ட்ரொட்ஸ்கிச'' வளர்ச்சி தொடர்பாகவும் புலம்பியுள்ளார்.

சோசலிச கட்சியும், கம்யூனிச கட்சியும் தமது பங்கிற்கு ஜொஸ்பனின் தோல்விக்கு ''இடதுகளின் பிளவுதான்'' என்பதை காட்டி இம்மூன்று கட்சிகளை காரணமாக்கும் முயற்சியில் தமது கவனத்தை ஒன்றுபடுத்தியுள்ளனர். ''ட்ரொட்ஸ்கிச'' இடதுசாரியினரின் (முக்கியமாக Ligue Communiste Révolutionnaire) இன் சேவையால் இரண்டு கட்டத்திற்கும் இடையில் சிராக்கிற்கு மக்கள் ஆதரவை திரளச்செய்து, தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பு பாதுகாத்த பின்னர் வலதுசாரி கட்சிகளின் வெற்றியை தடுப்பதற்காக சோசலிச கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போது ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ''தனி வேட்பாளரை'' நியமிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கின்றனர். இம் மூன்று அரசாங்கத்திலில்லாத இடது கட்சிகளும் சிராக்கின் பின்னால் அணிதிரளுவது முக்கியம் அல்லது அவரின் அழுத்தத்தை எதிர்க்க முடியாது என்ற விவாதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தமது வாக்காளர்களை மீண்டும் ஒருமுறை வாக்களிக்குமாறு கோருவதற்கு மிகவும் பலவீனமான நிலையில் இருப்பர்.

தேர்தல் தின இரவு சிராக்கின் வெற்றியை மக்கள் கூட்டம் மகிழ்ச்சியாக கொண்டாடுவதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. எவ்வளவிற்கு, எவ்வளவுகாலம் அவர்களது மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது கேள்விக்குரியது. எந்தவொரு நிகழ்விலும் பிரான்சு தொழிலாள வர்க்கம் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை. ஜனாதிபதி தேர்தலில் பிரான்சு முதலாளித்துவத்தின் ஊழல்மிக்க, மதிப்பிழந்த பிரதிநிதிக்கு 250 இலட்சம் மக்கள் வாக்களித்ததும், நவ பாசிச வாய்ச்சவடால் வாதிக்கு 60 இலட்சம் மக்கள் வாக்களித்ததும், ஒரு பக்கம் ஜனநாயகமற்ற தன்மையையும் மறுபக்கம் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் உள்ள முன்னோக்கினதும், தலைமையினதும் ஆழ்ந்த நெருக்கடியின் வெளிப்பாடாகும். எதிர்வரும் போராட்டங்களில், முக்கியமான அரசியல், வரலாற்று கேள்விகளை தெளிவுபடுத்துவதும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவை உலக புரட்சிகர இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரான்சில் ஒரு சர்வதேச சோசலிச கட்சியாக கட்டுவதற்கு அடித்தளமிடுவதும் அவசியமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved