World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

LTTE's chief negotiator returns to a political minefield in Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் இலங்கையின் அரசியல் கண்ணி வெடித்தளத்துக்கு வருகை தந்துள்ளார்

By Wije Dias
8 April 2002

Back to screen version

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் "தத்துவாசிரியரும்" பிரதான பேச்சுவார்த்தையாளருமான அன்டன் பாலசிங்கம் கடந்த மாத இறுதியில், நாட்டின் 19 வருடகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நோர்வே நாட்டின் தரகு நடவடிக்கைகளுடன் கூடிய பேச்சுவார்த்தை தயாரிப்புகளின் மத்தியில் இலங்கைக்குத் திரும்பியுள்ளார். அவர் மார்ச் 29ம் திகதி குடிவரவு விதிமுறைகளை தவிர்ப்பதற்காக நோர்வே உத்தியோகத்தர்களால் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட Twin Otter கடல் விமானத்தில் தீவின் வட பகுதிக்கு நேரடியாகப் பறந்து வந்ததோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலான வன்னிப் பிராந்தியத்தில் ஒரு சிறிய குளத்தில் தரை இறங்கினார்.

பாலசிங்கம் தனது கடுமையான சுகயீனம் காரணமாக 1998ல் வன்னியில் இருந்து வெளியேறி லண்டனுக்குச் சென்று அங்கு விடுதலைப் புலிகளின் பிரதான அரசியல் பேச்சாளராகவும் பேச்சுவார்த்தையாளராகவும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவரது இலங்கைக்கான வருகையும் அது இடம்பெற்ற விதமும், விடுதலைப் புலிகளின் தலைமையும் நோர்வேயும் இலங்கை அரசாங்கமும் மற்றும் பெரும் வல்லரசுகளும் அவரது வருகையோடு சம்பந்தப்பட்டிருப்பதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகின்றன. பலவிதமான அவசியங்களைக் கொண்டுள்ள அவர்களில் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு எதிராக நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு மத்தியில் எதிர்ப்புகள் தோன்றக்கூடும் என எதிர்பார்த்திருக்கும் அதே வேளை அவ்வாறான ஒரு எதிர்ப்புக்கு முகம் கொடுக்கும் போது பாலசிங்கம் ஒரு பெரும் பாத்திரம் வகிப்பார் என எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முதல் கட்டமாக பெப்பிரவரி 22ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒரு காலவரையறை அற்ற யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் தீவின் வடக்கு கிழக்கில் ஒரு சுதந்திர ஈழத் தமிழ் அரசுக்கான தமது நீண்ட காலக் கோரிக்கையை பகிரங்கமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கைவிட்டனர். விடுதலைப் புலிகள் உடன்படிக்கை பத்திரத்தில் இலங்கை இராணுவத்துக்கு "இலங்கையின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான" உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதன் பெறுபேறாக, விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு ஆபத்தான நிலையில் இருந்துகொண்டுள்ளனர். பெரும் வல்லரசுகள், விசேடமாக அமெரிக்கா, விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையின் வழிமுறைகளை பின்பற்றத் தவறுமானால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. அதே நேரம், எந்தவொரு உடன்பாடும் நாட்டில் வேரூன்றியுள்ள இன வேறுபாடுகளுக்கு முடிவு கட்டுவதற்கும் வாழ்க்கை நிலைமைகளை அபிவிருத்தி செய்வதற்கும் இலாயக்கற்றதாக இருக்கும் நிலைமையில் தமிழ் மக்களின் பரந்த தட்டினருக்கு மத்தியிலும் தமது சொந்த இயக்கத்தினுள்ளும் எதிர்ப்பைத் தூண்டி விடும் என்பதையிட்டுக் விடுதலைப் புலிகளின் தலைமை அக்கறை கொண்டுள்ளது.

பாலசிங்கத்தின் வருகையின் பின்னர் இடம் பெற்ற சம்பவங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெருக்கடியின் தரத்தை மாத்திரமே உறுதிப்படுத்தியது. பாலசிங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்ததை அடுத்து, பேச்சுவார்த்தைக்கான தயாரிப்புகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக நோர்வே உத்தியோகத்தர்களைச் உடனடியாக சந்தித்தார். அனைவரும் பேச்சுவார்த்தைக்கான இடமாக தாய்லாந்தை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், தாங்களாகவே பேச்சுவார்த்தையை மே மாதம் வரை காலம் தாழ்த்தியுள்ளனர். இந்த காலதாமதம் அரசாங்கத்தரப்பில் இருந்து வருவதாகத் தெரியவில்லை. உண்மையில், பேச்சாளர் ஜீ.எல்.பீரிஸ், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு பிரதான தடையாக இருந்து கொண்டுள்ள விடுதலைப் புலிகள் மீதான உத்தியோகபூர்வ தடையை விலக்கிக் கொள்வதற்கான தயாரிப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாலசிங்கம் வருகை தருவதற்கு முன்னரும் கூட "அவர் விடுதலைப் புலிகளின் தகவமைவைப்" பற்றி தெளிவாக குறிப்பிட்டிருந்தார். மார்ச் மாத முற்பகுதியில் அவர் எதிர்கட்சியான பொதுஜன முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவின் விமர்சனத்துக்குள்ளாகியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முன்வந்தார். குமாரதுங்க மார்ச் முதலாம் திகதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், யுத்த நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக "நெருக்கமான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும்" வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதே நேரம் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரிவுகள் "இலங்கையின் இறைமைக்கு பொருத்தமற்றது" என்ற விமர்சனத்தையும் முன்வைத்தார்.

குமாரதுங்க புரிந்துணர்வு உடன்படிக்கையை வெளிப்படையாக எதிர்க்காத அதேவேளை அது கொழும்பில் உள்ள பெரும்வர்த்தகர்களின் பிரதான பகுதியினரதும் அதேபோல் பெரும் வல்லரசுகளதும் பின்னணியைக் கொண்டுள்ளது என்பதை அவர்புரிந்து கொண்டிருந்தார். ஆனால் அவரது கடிதம், சிங்கள தீவிரவாதக் குழுக்களுக்கு அழைப்புவிடுக்கும் நிதானமாக திட்டமிடப்பட்ட ஒரு தொகை கருத்துக்களை உள்ளடக்கியிருந்தது. இந்தத் தீவிரவாதக் குழுக்கள் எந்த ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் உறுதியாக எதிர்த்து வரும் அதேவேளை குமாரதுங்கவுடன் நெருக்கமான உறவுகளையும் கொண்டுள்ளன. அவர் தற்காலிக யுத்த நிறுத்தத்தின் திசையை காஷ்மீரின் 50 வருடகால பிரிவோடு ஒப்பிட்ட அதேவேளை நோர்வேயின் பாத்திரத்தை விமர்சிக்கும் போது: "இலங்கை மண்ணில் ஒரு எல்லைக் கோட்டை வரைவதற்காக ஒரு வெளிநாட்டு அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கப்படுவது சுதந்திரத்துக்கு பிந்திய இலங்கையின் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்" எனக் குறிப்பிட்டார்.

அடுத்த நாள் விக்கிரமசிங்கவிற்கு முண்டு கொடுப்பதற்காக விவாதத்தில் பங்குகொண்ட பாலசிங்கம்: "யுத்த நிறுத்த உடன்படிக்கையில் உள்ள சில பிரிவுகள் நாட்டின் இறைமையையும் தேசியப் பாதுகாப்பையும் சமரசத்துக்குள்ளாக்கியுள்ளதாக அவர் (ஜனாதிபதி) முன்வைக்கும் வாதம் உறுதிப்படுத்த முடியாத கற்பனைகளாகும்" எனக் குறிப்பிட்டார். அவர் இந்த யுத்த நிறுத்த பத்திரம் "உண்மையான அடிப்படை நிலைமைகளை" எளிமையாக பிரதிபலிப்பதாக குறிப்பிட்டதோடு அதை காஷ்மீருடன் ஒப்பிட்டுவது "விபரீதமானதும் நகைச்சுவையானதுமாகும்" என விமர்சித்தார்.

பாலசிங்கம், விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிக்கையை கைவிட்டுள்ளதாக குறிப்பிட்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்ட போதிலும், அவர் குமாரதுங்கவிற்கு அளித்த பதிலானது அந்த இயக்கம் விதிமுறைப்படி அவ்வாறு செய்வதற்குத் தயாராகியுள்ளது என்பதற்கு ஒரு உறுதியான அறிகுறியாகும். நீண்டகால அரசியல் எதிரியான விக்கிரமசிங்கவை தூக்கிப் பிடிப்பதற்கு அவர் விருப்பம் தெரிவித்ததன் மூலம், விடுதலைப் புலிகள் சமரசத்துக்காக மாத்திரமல்லாமல் அமெரிக்காவினதும் ஏனைய பெரும் வல்லரசுகளதும் வரவேற்பைப் பெற்றுக் கொள்வதற்கான அவர்களின் தடுமாற்றத்தை அம்பலத்துக்கு கொண்டுவந்துள்ளது.

சில நாட்களின் பின்னர், அமெரிக்கா சமாதானப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக மார்ச் 11ம் திகதி ஒரு உத்தியோகபூர்வமான அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சுட்டிக் காட்டியதாவது: விடுதலைப் புலிகள் "பயங்கரவாதம் மீதான நம்பிக்கையை கைவிட்டு சமாதானத்துக்கான பாதையை தெரிவு செய்துகொள்வதோடு, ஒரு ஈழ அரசு வெற்றிகொள்ள முடியாததும் அவசியமற்றதுமாகும் என ஏற்றுக்கொண்டால் மட்டுமே" வாஷிங்டன் விடுதலைப் புலிகளுக்கு சாதகமான வகையில் பிரதிபலிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது. பாலசிங்கம் "தீவில் சமாதானத்தையும் ஸ்திரநிலைமையையும் ஸ்தாபிதம் செய்வதற்காக அக்கறை கொண்டுள்ளதையிட்டு" அமெரிக்காவை உடனடியாக பாராட்டிய அதே வேளை யுத்த நிறுத்தத்தை மீறும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக் காட்டினார்.

இந்த நிலைமைகளின் கீழ் விடுதலைப் புலிகள் மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட்ட தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசங்களை அண்டிய நகரங்களில் முதல் முறையாக பல பெரும் கூட்டங்களை நடத்தியது குறிப்பிடத் தக்கது. பொங்குதமிழ் எனும் பதாகையின் கீழ் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள், "தமிழ் ஈழத்திற்கான சுயநிர்ணய உரிமை", "விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரித்தல்" ஆகிய சுலோகங்களின் கீழ் தமிழ் மக்களின் குறிப்பிடத் தக்க பகுதியினரை அணிதிரட்டிக்கொள்பவையாக விளங்குகின்றன.

விடுதலைப் புலிகளின் கொள்கைகளில் ஒரு மாற்றம் தென்படுவதற்குப் பதிலாக, எவ்வாறெனினும், இந்தக் கூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட சில குறிக்கோள்களின் பேரில் ஒழுங்கு செய்யப்பட்டவையாகும். முதலாவது தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளுக்கு அரசியல் ஆதரவை அணிதிரட்டிக் கொண்டு அதன் மூலம் எந்த ஒரு விமர்சனத்தையும் அல்லது எதிர்ப்பையும் முன்கூட்டியே தவிர்த்துக்கொள்வதும் நசுக்குவதுமாகும். இரண்டாவதாக எந்த ஒரு தீர்மானத்தையும் திணிக்கவும் அமுல்படுத்துவதற்குமான சக்தி தமக்கு மாத்திரமே உண்டு என்பதை கொழும்புக்கும் ஏனைய வல்லரசுகளுக்கும் உணர்த்துவதற்கு முயற்சிப்பதன் மூலம் பேரம் பேசும் மேசையில் தமது நிலைமையை பலப்படுத்திக்கொள்வதாகும்.

விடுதலைப் புலிகள் தமது ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு சுதந்திர ஈழத்திற்கான தமது கோரிக்கைக்காக பிரதான ஏகாதிபத்திய மையங்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு தசாப்தகால சந்தர்ப்பவாத பிரச்சாரங்களின் பின்னர் தமது தனியான தமிழ் அரசு கோரிக்கைக்கு அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஆதரவு கிடைக்கப்போவதில்லை என்பதை விடுதலைப் புலிகள் அறிந்துகொண்டனர். இந்த கோரிக்கை இந்தியத் துணைக்கண்டத்துக்கு அபாயத்தையும் ஸ்திரமற்ற நிலமையையும் சிருஷ்டிப்பதாகக் கருதப்பட்டது. பெரும்பாலும் செப்டம்பர் 11ம் திகதி முதல் விடுதலைப் புலிகள் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதம் மீதான பூகோள யுத்தத்தின்" இலக்குகளுக்கு உள்ளாகும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கடந்த நவம்பர் மாதம் தனது வருடாந்த மாவீரர் தின உரையில் பெரும் வல்லரசுகளின் கோரிக்கைகளுக்கு கீழ்படிவதற்கான சமிக்ஞையை தெளிவாக வெளிப்படுத்தினார். அவர் விடுதலைப் புலிகளின் கொள்கை பிரிவினைவாதமோ அல்லது பயங்கரவாதமோ அல்ல என வாதாடினார். ஆனால் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை கண்டனம் செய்வதற்குப் பதிலாக விடுதலைப் புலிகளின் முழு ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அவர் குறிப்பிட்டதாவது: "நாங்கள் உண்மையான பயங்கரவாதத்தை அடையாளம் காண்பதற்கும் தண்டிப்பதற்குமான அனைத்துலக சமூகத்தின் பயங்கரவாத-எதிர்ப்பு பிரச்சாரத்தை வரவேற்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.

கொழும்பு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான எந்த ஒரு உடன்படிக்கையினதும் உண்மையான விதிமுறைகள் இன்னமும் அமுலுக்கு வரவில்லை. ஆனால் எந்த ஒரு உடன்படிக்கையினது இலக்கும், தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் அபிலாஷைகளுக்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் முறையான வாழ்க்கை நிலைமைகளுக்கும் நேர் எதிரான அவசியங்களைக் கொண்டுள்ள பெரும் வல்லரசுகளதும் அனைத்துலக முதலீட்டாளர்களதும் கோரிக்கைகளை திருப்திப்படுத்துவதாகவே அமையும் என்பது முன்கூட்டிய தெளிவாகியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved