World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : இந்தியாTen million Indian workers strike against economic reforms பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக ஒரு கோடி இந்தியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் By Deepal Jayasekara மேலும் தனியார் மயமாக்கத்திற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கும் வேலை நீக்கங்களை எளிதாகச் செய்ய நாட்டின் தொழிற் சட்டங்களில் மாற்றம் செய்வதற்கும் தங்களது எதிர்ப்பினை ஒருகோடி தொழிலாளர்கள் எடுத்துக் காட்டியதால், ஏப்ரல் 16 அன்று நடைபெற்ற ஒருநாள் தேசிய அளவிலான பொதுவேலைநிறுத்தம் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை ஸ்தம்பிதம் அடையச் செய்தது. வேலைநிறுத்தமானது சந்தைச் சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு எதிரான என்றுமிருந்திராத பெரிய அளவிலான தொழில்துறை நடவடிக்கையாக இருந்தது மற்றும் அது பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயியின் அரசாங்கத்திற்கு உழைக்கும் மக்களின் பரந்த தட்டினர் மத்தியில் குரோதம் ஆழமாகி வருவதைப் பிரதிபலிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையில் இருந்து 120 பில்லியன் ரூபாய்கள் (2.5 பில்லியன் டாலர்கள்) திரட்ட இலக்கு நிர்ணயித்த, கடந்த பிப்ரவரி இறுதியில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய வரவு-செலவுத் திட்டத்திற்கு ஒரு பதிலாக இவ்வேலை நிறுத்தம் இடம்பெற்றது. இத்திட்டமானது - தனியார் மயமாக்கலுக்கான தயாரிப்பாக இருந்தாலும் சரி அல்லது புதிய உரிமையாளருக்கானதாக இருந்தாலும் சரி- அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் மேலும் ஒரு சுற்று வேலை அழிப்புக்களுக்கும் சம்பளங்களிலும் சூழ்நிலைமைகளிலும் கடும் வெட்டல்களுக்கும் நேரடியாக வழிவகுக்கும். 1000 தொழிலாளர்களுக்கும் குறைவாக உடைய எந்த நிறுவனமும் அரசாங்கத்தின் முன் அனுமதி இன்றி தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்ய அனுமதிக்கும் தொழிற்சட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு முன்னெடுக்குமானால் மேலும்கூட வேலை இழப்புக்கள் பின்தொடரும். அரசாங்கம் பொருளாதாரத்தை மறுசீரமைக்க ஆரம்பித்தபொழுது 1990களின் தொடக்கத்திலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் சட்டத்தில் திருத்தங்களை வலியுறுத்தி வந்திருக்கின்றனர். "தொழிற் சீர்திருத்தத்துக்கு" கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் முதல் தடவையாக கொடி காட்டப்பட்டது ஆனால் அது உடனடியாக எதிர்ப்புக்களைத் தூண்டி விட்டது. ஆயினும், வாஜ்பாயி அமைச்சரவையானது மாற்றங்களுக்கு அண்மையில் அனுமதி அளித்ததுடன் அது தற்போதைய பாராளுமன்ற வரவு-செலவு கூட்டத்தொடரின் மூலம் புதிய தொழிற்சட்டத்தை திணிப்பதற்கும் விருப்புக் கொண்டுள்ளது. வேலை இல்லாதோருக்கு சமூகப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், தொழிற்சங்க மயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் 85 சதவீதத்தினர் மற்றும் அனைத்துத் தொழிலாளர்களின் 90 சதவீதத்தினர் 1000க்கும் குறைவாக பணியாளர்களைக் கொண்டுள்ளதால், மொத்தமாக வேலைநீக்கத்திற்கு ஆளாக்கப்பட இருக்கின்றனர். தொழிற் சட்டத் திருத்தங்கள் மற்றும் மேலும் தனியார் மயமாக்கல் இவற்றுக்கான எதிர்ப்பு பரந்த அளவில் பரவிவருகிறது. வேலைநிறுத்தமானது வங்கித்துறையின் பெரும்பான்மையானவற்றை மூடியது. அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளில் உள்ள அதன் பங்கீடுபாட்டை 33 சதவீதமாகக் குறைக்க விரும்புகிறது, இவ்வாறு தனியார் பங்குதாரர்களுக்கு சக்தி மிக்க கட்டுப்பாட்டை வழங்குகிறது. நாட்டின் பிரதான வங்கியான இந்தியன் ரிசர்வ் வங்கியில் உள்ள 90 சதவீத பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டது, பம்பாய் மற்றும் எங்கும் நிதிச்சந்தைகளில் கடும் பாதிப்பைக் கொண்டிருந்தது. காப்பீட்டுக் கழக நிறுவனங்களில், நிலக்கரி சுரங்கங்களில் மற்றும் துறைமுகங்களில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள் கூட வேலைகளை நிறுத்தினர். நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் உள்ள நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. துறைமுகங்களை "கார்ப்பொரேட்டுகளாக" ஆக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் -- அவர்களின் தனியார்மயமாக்கலை நோக்கிய முதலாவது அடியானது, வேலைகளில், சம்பளங்களில் மற்றும் தொழிலாளர் பெற்ற வெற்றிகளில் கடும் வெட்டுக்களுக்கு வழிவகுத்தது. புதுதில்லியில் தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்று "சீர்திருத்தங்கள் ஒழிக!" என்று முழங்கிக் கொண்டு சென்றனர். நாட்டின் வணிகத் தலைநகரான பம்பாயில் 80 சதவீத துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டனர். அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்து ஆயிரக் கணக்கான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கித் தொழிலாளர்கள் மாநகரின் வர்த்தகப் பகுதியில் ஊர்வலமாகச் சென்றனர். மாநிலத் தலைநகர்கள் உட்பட ஏனைய முக்கிய மாநகர்களிலும் கூட ஊர்வலங்கள் நடைபெற்றன. சென்னைக்கு அருகே உள்ள தொலைபேசி அலுவலகத்தில், நமச்சிவாயம் என்ற தொழிலாளி உலக சோசலிச வலைதளத்திடம் இவ்வாறு கூறினார்: "பொதுத்துறை சார்ந்த தொழிற்சாலைகளை தனியார் மயப்படுத்துவதற்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பொதுத்துறை பணியாளர்கள் என்ற விதத்தில் வேலை உத்தரவாதம், ஓய்வூதிய உத்தரவாதம் இருக்கிறபடியால் தொழிலாளர்கள் பாதுகாப்பு உணர்வைப் பெறுகின்றனர். தனியார்மயமாக்கல் வேலைகள் மற்றும் வாழ்வு ஆதாரங்கள் தொடர்பாக பாதுகாப்பின்மையை உண்டு பண்ணுகின்றன." எதிர்க் கட்சியான காங்கிரஸ்(இ) -யின் உறுப்பான இந்திய தேசியத் தொழிற்சங்க மையம் (INTUC) தவிர்ந்த அனைத்துப் பிரதான தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன. இவற்றுள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -- மார்க்சிஸ்ட் தலைமையிலான இந்தியத் தொழிற்சங்கங்களின் மையம் (CITU), அகில இந்திய தொழிற்சங்கப் பேரவை (AITUC), இந்து மஸ்தூர் சங்கம் (HMS) மற்றும் பாரதீய மஸ்தூர் சங்கம்(BMS) ஆகியன உள்ளடங்குவன. ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ள மறுத்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சென்னையில் உள்ள எமது செய்தித் தொடர்பாளர்கள் ஐ.என்.டி.யு.சி அலுவலர் காலனிடம் (Kalan) பேசியபோது, முன்பும் இத்திட்டங்களுக்கு எதிராக எதிர்ப்புக்கள் இருந்திருக்கின்றன ஆகவே பொதுவேலைநிறுத்தம் என்பது தேவையில்லாதது என்று அவர் நொண்டிச்சாக்கைக் கூறினார். உண்மையில், ஐ.என்.டி.யு.சி- இன் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமை, ஆளும் தேசியஜனநாயகக் கூட்டணி (NDA) நெருக்கடியில் இருக்கையில், அதே சந்தைச் சீர்திருத்தங்களை நிறைவேற்றுதற்காக காங்கிரஸ்(இ) அர்ப்பணித்திருக்கிறது என உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும் சைகை ஆகும். வேலைநிறுத்தமானது, மேலும் பொருளாதார மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துதற்கான வாஜ்பாய் அரசாங்கத்தினது திறமை பற்றி பெரும் முதலாளிகளது வட்டத்தில் பெரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா இத்தொழில்துறை நடவடிக்கையை "துரதிர்ஷ்டவசமானது" என்றும் வங்கி மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததால் இழப்பு ஏற்பட்டது குறித்து புகாரும் கூறினார். "இந்தியாவின் வர்த்தக அவா பூகோள ரீதியாக போட்டித்திறன் மிக்கதாக ஆக வேண்டுமானால், தவிர்க்க முடியாத அத்தகைய வேலைநிறுத்தத்தால் பொருளாதார இழப்புக்களை இந்தியா தாங்க இயலாது" என அவர் எச்சரித்தார். ஐ.என்.டி.யு.சி-ன் பங்கேற்காமையை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, வாஜ்பாயியின் சொந்த பாரதீய ஜனதாக் கட்சியின் உறுப்பான பி.எம்.எஸ் தொழிற்சங்கங்கள் தன்னும் கூட தங்களின் உறுப்பினர்களை வேலைநிறுத்தத்துக்கு அழைக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டன. பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கின்மையை எடுத்துக் கொண்டால்-- பி.எம்.எஸ் தலைவர்கள் உண்மையில், தொழிலாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் இந்தியப் பொருளாதாரம் வெளிநாட்டு மூலதனத்துக்கு கதவு திறந்து விடப்பட்டதால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ள முதலாளிகளின் ஒரு பகுதியினர் மத்தியிலும் கூட செல்வாக்கை இழக்கும் நிலை கண்டு அஞ்சுகின்றனர். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு பதிலாகவே வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர் ஆனால் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தினால் எழுப்பப்பட்ட அரசியல் பிரச்சினைகளைக் குழிதோண்டிப் புதைத்தனர். சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைகளை நிறைவேற்றுவதற்கான அவரது விருப்பத்தை வாஜ்பாயி திரும்பத்திரும்ப எடுத்துக் காட்டிய போதிலும் கூட, தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தத்தின் இலக்கு அரசாங்கம் அதன் கொள்கைகளை மாற்ற அழுத்தம் கொடுப்பது என வலியுறுத்தினர். செய்தியாளர் மாநாட்டின் பொழுது, சி.ஐ.டி.யு-வின் பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தாவும் ஏனைய தொழிற்சங்க அலுவலர்களும் பொருளாதார மறுசீரமைப்புக்கான பொறுப்பை நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மேல் பிணைத்துப் போட முயற்சித்தனர். பொருளாதாரத்தின் "அனைத்து துன்பங்களுக்கும்" அவரைக் குற்றம் சாட்டினர் மற்றும் அவர்கள், "தொழிலாள வர்க்கத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் வல்லரசுகளாலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் ஆணையிடப்படும் தொழிலாளர் விரோத மற்றும் ஏனைய கொள்கைகளை திரும்பப்பெற" முதல் நிபந்தனையாக அவரை அகற்றலைக் கோரினர். மறுசீரமைப்புத் திட்டத்திற்கு பலியாடாக யஷ்வந்த் சின்ஹாவை ஆக்குவதற்குக் காரணம், மேற்கு
வங்காளத்தில் இரு தசாப்தங்களாக ஆட்சியில் இருந்து வரும் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சொர்க்கபுரியாக
மாநிலத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் உள்ளடங்கலான-- அனைத்து அரசியற்
கட்சிகளாலும் ஆற்றப்படும் பாத்திரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாகும். |