World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Sri Lankan government and LTTE sign a tentative ceasefire agreement

ஸ்ரீலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்

By Wije Dias
27 February 2002

Back to screen version

பல வாரங்கள் நிகழ்ந்த தீவிர திரைமறைவான பேச்சுவார்த்தையின் பின்னர் ஸ்ரீலங்கா அரசாங்கம், நோர்வே உதவியாளர்கள் விதித்த காலக்கேட்டுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக பெப்பிரவரி 22ம் திகதி பிரிவினைவாத தமீழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு தற்காலிக யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. இவ் உடன்படிக்கையானது, 60,000 ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட 19 வருட உள்நாட்டு யுத்தத்தினை உடன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கான நிலைமையை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியால் தலைமை தாங்கப்படும் அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் நோர்வேயின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கிய அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்களின் பாரிய அழுத்தத்திற்குள்ளாகியிருந்தன. அவை இந்திய உபகண்டத்தில் ஸ்திரமற்ற நிலைமைக்கு காரணமாகும் இம்முரண்பாட்டை முடிவிற்கு கொண்டுவர வலியுறுத்தின. கொழும்பில் உள்ள வர்த்தகர் பிரிவும் யுத்தத்திற்கு முடிவுகட்ட விரும்பி கடந்த டிசம்பர் மாத தேர்தலின் போது யுத்தத்திற்கு முடிவுகட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வாக்குறுதியளித்ததை நிறைவேற்றுமாறு ஐக்கிய தேசிய கட்சியை வலியுறுத்தன.

பெப்பிரவரி 22ம் திகதியின் புரிந்துணர்விற்கான உடன்படிக்கையானது ஏற்கனவே இரண்டு பக்கத்தாலும் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்ட யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதுடன், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கான அடிப்படை குறித்து எதையும் குறிப்பிடவில்லை. அடுத்துவரும் 3 மாதங்களில் நடைபெறவிருக்கும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் அரசியல் உடன்பாட்டுக்கான மேலெழுந்தவாரியான அடித்தளத்தை இடும்.

இப் புரிந்துணர்விற்கான உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டிருந்தன. இவ் உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு ஒருநாளுக்கு முன்னர் கூட அரசாங்கம் பாராளுமன்றத்தில் இப்படியான உடன்பாடு இறுதியான நிலையை அடைந்துள்ளதை மறுத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான அன்டன் பாலசிங்கம் உடன்பாடுக்கான நிலைமைகள் தொடர்பான பத்திரிகைகளின் ஊகம் குறித்து உறுதியாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இப்பதட்டமான நிலைமையானது இருபிரிவினரும் இவ்வுடன்பாடு தொடர்பாக உருவாகவிருக்கும் எதிர்ப்பு குறித்து கொண்டிருந்த பயத்தையே பிரதிபலிக்கின்றது.

கொழும்பின் கடந்தகால அரசாங்கங்களின் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு உடன்பாடும் சிங்கள இனவாதிகளினது எதிர்ப்பால் கைவிடப்பட்டதை பிரதமர் ரனில் விக்கிரமசிங்க நன்கு அறிவார். புரிந்துணர்விற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்படுவதற்கும், அது தொடர்பான விபரங்கள் தெரியவர முன்னரும் கூட புத்த மதகுருமார்களும், மக்கள் விடுதலை முன்னணி, சிங்கள உறுமய உள்ளடங்கலான பல அரசியல் கட்சிகளும் 1998இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேல்கொண்டுவரப்பட்ட தடையை நீக்குவது தொடர்பான ஊகம் உட்பட பேச்சுவார்த்தைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்திருந்தன.

1983ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த பின்னர் தற்போது செய்யப்பட்டுள்ள யுத்த நிறுத்தமானது இரண்டாவது உடன்பாடாகும். முன்னாள் பொதுஜன முன்னணி அரசாங்கம் யுத்தத்தை நிறுத்துவதாக வாக்களித்ததால் 1994அம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டது. அதுவும் தற்போதைய உடன்பாட்டை போன்ற ஒரு உடன்பாட்டை கையெழுத்திட்டது. ஆனால் பேச்சுவார்த்தைகள் விரைவாக உடைந்ததுடன், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவால் தலைமை தாங்கப்பட்ட பொதுஜன முன்னணி அரசாங்கம் யுத்தத்தை தீவிரமாக்கியது.

முக்கிய நாடுகளின் அழுத்தங்களுக்குள்ளாகி 2000ஆம் ஆண்டு யுத்த்தால் சீரழிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு உட்பட மாநிலங்களுக்கு ஒரளவு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர குமாரதுங்கா முயற்சித்தார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் என குறிப்பிடப்பட்ட இத் தீர்வுப்பொதி சிங்கள தேசியவாதிகளின் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாராளுமன்றத்தில் தேவையான ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சி மறுத்ததை தொடர்ந்து தோல்வியடைந்தது.

2001இன் ஆரம்பத்தில் நாடு ஒரு வங்குரோத்து நிலையை அடைந்ததுடன், பாரிய நிலுவை பற்றாக்குறை நெருக்கடியை அடைந்தபோது, முக்கிய வர்த்தக பிரிவினர் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என உறுதியாக வலியுறுத்தினர். மார்ச் மாதத்தில் கடனுதவியை வழங்கவிருந்த உலக வங்கி அரசாங்கம் பாதுகாப்பு செலவீனத்தை வெட்டவேண்டும் என முக்கிய நிபந்தனையை வலியுறுத்தியது. எவ்வாறிருந்தபோதும் யுத்தநிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதும், தமீழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையும் சிங்கள இனவாத குழுக்கள், தமீழீழ விடுதலைப் புலிகளை சட்டபூர்வமாக்குவதை எதிர்த்ததால் அரசாங்கம் பயமடைந்ததுடன் தோல்வியடைந்தது.

செப்டம்பர்11ம் திகதி நிகழ்வுகளின் பின்னர் புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை'' தமீழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து விட்டுக்கொடுப்புக்களை பெற்று ஸ்ரீலங்காவின் நெருக்கடியை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஒரு சாதகமான சந்தர்ப்பமாக கொழும்பின் ஆளும் தட்டினர் நோக்கினர். முக்கிய வர்த்தகப் பிரிவினரின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சியும் அதன் கூட்டுக்களும் பொதுஜன முன்னணியை தோற்கடித்தன. பதவிக்கு வந்தவுடன் விக்கரமசிங்க நோர்வேயை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நடுவராக மீண்டும் வருமாறு அழைப்புவிட்டார்.

ஜனவரி 22ம் திகதியின் அவரது முதலாவது கொள்கை விளக்க உரையில் பாராளுமன்றத்திற்கு தனது நோக்கத்தினை பின்வருமாறு வெளிப்படுத்தினார்; ''நியூயோர்கின் மீதான செப்டம்பர் 11 ம் திகதியின் தாக்குதலின் பின்னர் சர்வதே கருத்து தீவிரமாகியுள்ளது. பயங்கரவாதத்தையும், ஆயுதப்போராட்டத்தையும் கைவிட்டு ஒரு அரசியல் தீர்விற்கு வருவதற்கு தமீழீழ விடுதலைப்புலிகள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்''.

தமீழீழ விடுதலைப் புலிகளின் விட்டுக் கொடுப்பு

அழுத்தங்களுக்கு உள்ளாகி தமீழீழ விடுதலைப் புலிகள் புரிந்துணர்விற்கான உடன்படிக்கையில் கையெழுத்து இடுவதற்கு ஒரு தொகை விட்டுக்கொடுப்புக்களை செய்துள்ளனர். மிகவும் முக்கியமாக வடக்கு கிழக்கில் ஒரு தனி தமிழ் அரசு அமைப்பதற்கான கோரிக்கையை ஆரம்பத்தில் கைவிட்டுள்ளனர். விக்கிரமசிங்க ஆரம்பத்திலேயே முக்கிய நாடுகளிடமிருந்து இதற்கு ஆதரவு கிடைக்காது என்பதால் தனிநாடு தொடர்பான எவ்விதமான விவாதத்தையும் நிராகரித்திருந்தார்.

புரிந்துணர்விற்கான உடன்படிக்கையானது தந்திரோபாயமாக ஸ்ரீலங்காவின் சட்டபூர்வ தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவரும் நடைமுறைகளை வரையறுத்த பின்னர் அவ் உடன்படிக்கையானது ''ஸ்ரீலங்காவின் சுயாதீனத்தையும், பிராந்திய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சட்டபூர்வமான நடவடிக்கைகளை அதன் ஆயுதப்படைகள் தொடர்ந்தும் ஈடுபடும்'' என குறிப்பிடுகின்றது.

தமீழீழ விடுதலைப் புலிகள் மேலும் வளைந்து கொடுப்பார்கள் என்பதற்கு ஆதாரமாக இதன் பிரதித் தலைவரான கரிகாலன், தமிழ்மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு ஒன்றினை அரசாங்கம் வழங்குமானால் தமது இயக்கம் தனிநாட்டுக்கான கோரிக்கையை கைவிடும் என கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தற்காலிக யுத்த நிறுத்தத்திற்கான முன்நிபந்தனையாக தம்மீதான தடையை நீக்கவேண்டும் என்பதையும் தமீழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டுள்ளனர். இவ் உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் தமீழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தையாளரான பாலசிங்கம் தமது இயக்கம் ''ஒரு சமனான பங்காளியாக'' கவனிக்கப்படவேண்டும் எனவும், ''தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்பது'' முக்கியமானது என குறிப்பிட்டார்.

விக்கிரமசிங்க தடையை நீக்க மறுத்தபோதும், மற்றைய போட்டி தமிழ் இயக்கங்களின் தகமையை இல்லாதொழிக்க தமீழீழ விடுதலைப் புலிகளுக்கு ஓரளவு சட்டபூர்வ தன்மை வழங்கப்படுவதற்கான கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகும். அவர்களது ஆயுதமற்ற அங்கத்தவர்கள் ''நடமாடுவதற்கான சுதந்திரத்தின் கீழ்'' வடக்கு-கிழக்கில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தினுள் அரசியல் வேலைகளை செய்ய படிப்படியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யுத்தநிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஒரு மாதத்தின் பின்னர் 50 போராளிகளும், இரண்டு மாதத்தின் பின்னர் கட்டுப்பாடில்லாத அளவிலானவர்களும் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இவ் உடன்பாடு தமிழ் துணைப்படையினரான EPRLF, PLOTE, EROS, TELO, EPDP போன்றவற்றின் ஆயுதங்களை களையவும் அழைப்புவிட்டுள்ளது. தனி தமிழ் நாட்டுக்காக போராடியதாக கூறிக்கொண்ட இக்குழுக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒரு பிரிவாகியிருந்தனர். அரசாங்கத்தால் ஆயுதமும் நிதியும் வழங்கப்பட்ட இவர்கள் தமீழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் இருந்த எதிர்ப்பை ஒடுக்கவும் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டனர். அவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்குமுகமாக வடக்கு- கிழக்கிற்கு வெளியே இராணுவத்தில் அவர்களுக்கு இடமளிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

புரிந்துணர்விற்கான உடன்படிக்கை ஊடாக தமீழீழ விடுதலைப் புலிகள் இடம் பெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் ஒரு குறிப்பிட்ட நிலையை பெற்றுக்கொள்வதற்கான பாதுகாப்பை பெற்றுள்ளனர். ஆனால் தமிழ் முதலாளித்துவ தட்டினது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இவ்வமைப்பினது வர்க்க நிலைப்பாடானது, யுத்தநிறுத்த உடன்படிக்கை ஒன்றினூடாக அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதை கைவிட்டுள்ளதில் வெளிப்படையாகியுள்ளது. தனது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் ஏனைய கட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவர்கள் அனுமதிப்பதில்லை.

ஆயுதக் கடத்தலை தடுப்பதற்காக தமிழ் மீனவர்கள் மீது இராணுவத்தால் திணிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை உடனடியாக இல்லாதொழிக்க தமீழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தவில்லை. மிகவும் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கும் மீனவர்கள் கட்டுப்பாடற்று மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும் என கோரிக்கைவிட்டுள்ளனர். கடந்த காலங்களில் அவர்களது எதிர்ப்புகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்த தமீழீழ விடுதலைப் புலிகள் இன்னும் மூன்று மாதத்திற்கு இக்கட்டுப்பாடு இருப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான தமிழர்களை ''விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்'' என்ற பொய்யான குற்றச்சாட்டின் கீழ் மாதக்கணக்காகவும், வருடக்கணக்காகவும் விசாரணையின்றி சிறையில் அடைத்துவைத்துள்ள மோசமான பயங்கரவாததடைச்சட்டம் இல்லாதொழிக்கப்படாது. இலங்கை அரசாங்கம் புரிந்துணர்விற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பின்னர் ''அப்படியான நடவடிக்கைகள் இடம்பெறாது'' என ஒத்துக்கொண்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படமாட்டார்கள்.

யுத்தத்தில் இரண்டு பகுதியினரும் பல நூற்றுக்கணக்கான யுத்தக் கைதிகளை கைப்பற்றி வைத்துள்ளனர். குடும்ப உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதித்துள்ளபோதிலும், அவர்களின் நிலைமை புரிந்துணர்விற்கான உடன்படிக்கையின் கீழ் மாற்றமடையப்போவதில்லை.

புரிந்துணர்விற்கான உடன்படிக்கை தொடர்பான பிரதிபலிப்பு

அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் முக்கிய நாடுகள் புரிந்துணர்விற்கான உடன்படிக்கையை உடனடியாக வரவேற்றுள்ளன. அமெரிக்க அரசு செயலாளரான கொலின் பெளவல், ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சருக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் ''அமெரிக்கா 100% ஸ்ரீலங்காவுடன் இருப்பதுடன், சமாதான பேச்சுக்கான எவ்விதமான உதவியையும் வழங்குவதாக'' குறிப்பிட்டிருந்தார்.

முக்கிய வர்த்தகர்கள் யுத்தத்திற்கு முடிவுகட்ட பிரயத்தனம் செய்துவருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும், வெளிநாட்டு முதலீட்டையும் பெருப்பிக்க விரும்பி சாதகமாக பதிலளித்துள்ளது. செவ்வாய்கிழமை கொழும்பின் பங்குவிலைகள் அதிகரித்து All Share Index 1.1% ஆலும், Milanka blue chip index முதல்நாள் 1.3% ஆலும் அதிகரித்தது.

இதேவேளை, யுத்தத்திலான பாரத்தை சுமந்துவந்த பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இச்சமாதன உடன்படிக்கைக்கு ஆதரவளிக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக இம்மோதலை முடிவிற்கு கொண்டுவருவதாக கூறிக்கொண்ட கட்சிக்கு வாக்காளர்கள் தமது வாக்களித்தனர். அண்மையில் வெளிவிடப்பட்ட கொள்கை மாற்றீட்டுக்கான சமூக ஆய்வு பிரிவினால் எடுக்கப்பட்ட பகிரங்க கருத்து கணிப்பெடுப்பின்படி 80.7% ஆனோர் சமாதான பேச்சுவார்த்தை குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் தொழிலாள வர்க்கத்தை இன, மத அடித்தளத்தில் பிரித்து வைப்பதற்காக யுத்தத்தை ஆரம்பித்த ஆளும் பிரிவினர் அதற்கான ஆதரவிற்கான அடித்தளத்தை யுத்தத்தால் இலாபமடைபவர்கள், உயர்மட்ட இராணுவம், அரச அதிகாரத்துவம், புத்தமத தலைமை, மக்கள் விடுதலை முன்னணி, சிங்கள உறுமய போன்ற தீவிரவாத சிங்கள இனவாத அமைப்புக்கள் மத்தியில் இட்டிருந்தனர். முன்னைய பேச்சுவார்த்தைகள் இப்பிரிவினர் இரண்டு பாரம்பரிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியிலும், பொதுஜன முன்னணியின் முக்கிய பிரிவான சுதந்திரக் கட்சியின் மீதும் செலுத்திய சக்திவாய்ந்த செல்வாக்கினால் தோல்வியடைந்தது.

ஸ்ரீலங்காவின் ஐனாதிபதியும் பொதுஜன முன்னணியின் தலைவியுமான குமாரதுங்கா புரிந்துணர்விற்கான உடன்படிக்கையை கேள்விக்குரியதாக்கியுள்ளார். அவர் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பான விபரங்கள் தனக்கு அறிவிக்கப்படவில்லை என ''ஆச்சரியமும், கவலையும்'' கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது அறிக்கை உடன்பாட்டிற்கு கவனமான நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவதுடன், அவர் ''குறிப்பிட்ட விஷேட ஷரத்துக்கள் குறித்தும், விடயங்கள் குறித்தும் பிரமருக்கு தனது கவலையை அறிவித்துள்ளதை'' எடுத்துக்காட்டுகின்றது.

செவ்வாய்க்கிழமை மக்கள் விடுதலை முன்னணி, ஈழமக்கள் ஜனநாயக விடுதலை முன்னணி உள்ளடங்கலாக பொதுஜன முன்னணியின் தலைவர்களுடன் சந்தித்துள்ளதுடன், இவ் உடன்பாடு குறித்தும் தமது அணுகுமுறை குறித்தும் கலந்துரையாடியுள்ளார். அவர்களுக்கிடையேயும் கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன. லங்கா சமஜமாஜ கட்சி, யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதுடன், ''பதட்டமும், பயமுமடைந்து பிரசாரம் ஒன்றை செய்வதற்கு எவ்வித காரணமும் இல்லை'' என சுட்டிக்காட்டி ஒரு அறிக்கையை விட்டுள்ளது.

லங்கா சமஜமாஜ கட்சியின் குறிப்புக்கள் தனது கூட்டினை நோக்கியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் இலாபமடையும் நோக்கத்தில் இனவாதத்தை கிளப்பிவிட முயல விரும்பும் பிரிவினருக்கும் எதிராக தெரிவிக்கப்பட்டதாகும். பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் தனது இராணுவத்திற்காக மாதாந்தம் பெற்றுவந்த 7 இலட்சம் ரூபாவும், ஆயுதங்களும் இல்லாது போய்விடும் என்ற காரணத்தால் ஈழமக்கள் ஜனநாயக விடுதலை முன்னணி உடன்பாட்டை கசப்புடன் எதிர்க்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணி புரிந்துணர்விற்கான உடன்படிக்கையை ''சரணடைவதற்கான உடன்பாடு'' என குறிப்பிட்டு, அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டு கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. பொதுஜன முன்னணியின் பிரிவினரை தமது பக்கம் வென்றெடுப்பதன் நோக்கத்தில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்ற குமாரதுங்காவின் கவலையை திரும்ப திரும்ப கூறுகின்றது. 1980 களின் இறுதியில் தமிழ் சிறுபான்மையினரை பாதுகாக்க என கூறப்பட்டு வடக்கு- கிழக்கிற்கு இந்திய இராணுவம் வருவதற்கு காரணமான இந்திய -இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தீவிரமான பிரச்சாரத்தை செய்தது. இவ்வுடன்படிக்கையை ''தாய்நாட்டை காட்டிக்கொடுப்பது'' என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டு தமது எதிர்ப்பிற்கு ஆதரவளிக்காத தொழிலாளர்களையும், அரசியல் எதிரிகளையும் வேட்டையாடியது.

பிரதமர் விக்கிரமசிங்க பாதுகாப்பு பிரிவினரிடமிருந்து உருவாகும் எதிர்ப்பு தொடர்பாக கவனத்திற்கு கொண்டிருந்தார். முக்கியமாக, உடன்படிக்கையில் கையெழுத்திட அவர் வடக்கு நகரமான வவுனியாவிற்கு சென்றதுடன், முக்கிய இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினர் மத்தியில் உரைநிகழ்த்தினார். இராணுவ உயர் மட்டத்தினரை சமாதானப்படுத்துவதற்காக பாதுகாப்பிற்கான செலவீனம் உடனடியாக வெட்டப்படாது என வலியுறுத்தினார். மற்றும் யுத்த நிறுத்த உடன்பாட்டினால் அவர்களது வேலைகள் இல்லாது போகாது என படைவீரர்கள் மத்தியில் தெரிவித்தார்.

யுத்த முனையில் துப்பாக்கிச் சத்தம் ஓய்வடைந்துள்ளபோதிலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அடிப்படையான ஒரு பிரச்சனையும் கவனிக்கப்படாததுடன், தீர்க்கப்படாதும் உள்ளது. தேர்தல் பிரச்சார காலகட்டத்திலும், அதை தொடர்ந்த காலத்திலும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான அரசியல் உடன்பாட்டிற்கான முன் ஆலோசனைகள் எதையும் தெரிவிக்காது கவனமாக தவிர்த்து வந்தார். மேலும் தனிநாடு தொடர்பாக விவாதிக்க தயாராக இல்லை எனவும் தெரிவித்திருந்தார். அவருக்கு குமாரதுங்காவின் 2000ஆம் ஆண்டின் அனுபவங்கள் ஞாபகத்தில் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. குமாரதுங்கா தனது தீர்வுப்பொதி தொடர்பாக விபரங்களை அறிவித்துடன், மக்கள் விடுதலை முன்னணியிடமும், சிங்கள உறுமய இடமிருந்து மட்டுமல்லாது ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்தும் தனது கூட்டணியிடமிருந்தும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

யுத்த நிறுத்தத்தை உருவாக்கியதும், விக்கிரமசிங்க யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான அடிப்படைகளை வரையறுப்பதற்கு ஆரம்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். சகலவிதத்திலும் இது குமாரதுங்காவின் தீர்வுப்பொதியைப் போலவே இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக பொதுஜன முன்னணியின் அரசியலமைப்பு திருத்தத்திற்கு 2000 ஆம் ஆண்டு தனது ஆதரவை வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி ஒத்துக்கொண்டது. தற்போது குமாரதுங்காவின் எதிர்நோக்கிய அரசியல் பிரச்சனைகளான முக்கிய வர்த்தக பிரிவினரையும், முக்கிய ஏகாதிபத்திய நாடுகளையும் திருப்திப்படுத்துவதற்காக யுத்தத்தை எவ்வாறு கொண்டுவருவது என்பது தொடர்பாகவும், தனது கட்சியினுள் இருக்கும் சிங்கள தீவிரவாதிகளையும் சமாதானப்படுத்தும் பிரச்சனையை எதிர்நோக்குகின்றார்.

குமாரதுங்காவின் அரசியலமைப்பு தீர்வு, திட்டமிட்ட இனபாகுபாட்டையும், தற்போதைய யுத்தத்திற்கு இட்டுச்சென்ற 1948 இல் இருந்து கொழும்பின் அரசியலால் தமிழ் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையை இல்லாதொழிப்பதை நோக்கமாக கொண்டதல்ல. மாறாக இது இன, மத பிரிவுகளுக்கும், மோதல்களுக்கும் மேலும் விதையிடும் சிங்கள, தமிழ், முஸ்லீம் வசதிபடைத்த தட்டினர் இடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் உடன்படிக்கையாகும். விக்கிரமசிங்கவின் சமாதான திட்டமும் உள்ளடக்கத்தில் இதிலிருந்து வித்தியாசப்படபோவதில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved