:
ஆப்கானிஸ்தான்
US massacre in eastern Afghanistan
கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படுகொலை
By the Editorial Board
7 March 2002
Back to screen version
அமெரிக்க செய்தி ஊடகத்திருந்து வரும் குறைவில்லாத பொய்களாலும் அல்லது திரித்தல்களாலும்
கிழக்கு ஆப்கானிஸ்தான் மலைகளில் அமெரிக்கப் படைகள், காலனித்துவ பாணியிலான படுகொலைகளை மேற்கொண்டிருக்கின்றன
என்ற உண்மையை மூடி மறைக்க முடியவில்லை. எஞ்சி உள்ளோரை கொல்வதனைப் பார்க்க விருப்பம் கொண்டுள்ள அமெரிக்க
இராணுவ அதிகாரிகளின்படி, ஐந்து நாட்கள் சண்டையில் நூற்றுக் கணக்கான தலிபான் மற்றும் அல்கொய்தா படைகள்
கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்க தலைமையிலான படுகொலை பற்றியதில் சாகசமோ அல்லது துணிச்சலோ ஒன்றுமில்லை.
மிகவும் அபிவிருத்தி அடையாத ஆயுதங்களைப் பயன்படுத்தும் சிறு அளவிலான குழுவிற்கு எதிராக மிகவும் நவீனமயப்படுத்தப்பட்ட
மற்றும் கொடூரமான பரந்த அழிவுகரமான ஆயுதங்கள் வீசப்பட்டு வருகின்றன. சமமற்ற போட்டி நோய்பீடித்ததாகக்
காணப்பட்ட காட்சி, அமெரிக்க வரலாற்றில் வெட்கங்கெட்ட அத்தியாயமாகும். கார்டெஸ் (Gardez)
இன் கிழக்குப் பகுதியில் பக்டியா (Paktia)
மலைகளில் நடைபெற்ற "யுத்தம்" பரந்த படுகொலைச் செயலாக இருந்தது.
அமெரிக்க இராணுவ அமைப்பால் பயன்படுத்தப்பட்ட மொழி, இத்தாக்குதலின் இயல்பு பற்றிய
தொலைநோக்குப் பார்வையை வழங்குகின்றது. மலைப்பாம்பு நடவடிக்கையின் தளபதி மேஜர் ஜெனரல் பிரான்க்
ஹாகென்பெக் (Frank Hagenbeck)
செய்தியாளர்களிடம், "கடந்த 24 மணி நேரத்தில், பல அல்கொய்தா மற்றும்
தலிபான் வீரர்களைக் கொன்றிருக்கிறோம். துல்லியமான எண்ணிக்கையை நான் கொடுக்க மாட்டேன் ஆனால் நூற்றுக் கணக்கானவர்கள்
கொல்லப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம்" என கூறினார்.
அவர்மேலும்: "நடுத்தர மதிப்பீட்டில் சரியாகச் சொன்னால், அந்த பகைவர் படைகளில்
குறைந்த பட்சம் பாதிப்பேரை நாம் கொன்றிருக்கிறோம் என்ற ஆதாரத்தால் நான் நம்பவைக்கப்பட்டிருக்கிறேன்.......
அவர்களை, அவர்கள் இங்கு அனுப்பும்வரை, நாங்கள் அவர்களை இங்கு கொல்வோம். அவர்கள் எங்கேயாவது போவார்களாயின்,
நாம் நமது ஆப்கான் கூட்டாளிகளுடனும் கூட்டணிப் படையினருடனும் சேர்ந்து சென்று, எங்கு சென்றாலும் அவர்களைக்
கொல்லுவோம்." கூறிச் சென்றார்.
மிகவும் மோசமான சமூக வகை மட்டுமே இந்த வகையில் "கொல்" என்ற வார்த்தையைப்
போற்றும் மற்றும் திரும்பத் திரும்பக் கூறும்.
சண்டை நடக்கும் இடத்தில் உள்ள கிராமத்தவர்கள், முன்னாள் தலிபான் ஆட்சிக்கு குரோதமானவர்கள்
கூட பயத்தில் உள்ளனர், அமெரிக்கக் குண்டுகள், பெண்கள், குழந்தைகள் அல்கொய்தா குடும்பங்கள் மற்றும் தலிபான் படையினர்
மற்றும் பின்னவருடன் டிசம்பரில் இவ் இடத்திற்கு வந்தவர்களையும் கொன்று கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் தலைமைப்
போர்க் குற்றவாளிகளுள் ஒருவரான பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட்
(Donald Rumsfeld) இந்தப் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான
விதியில் அப்பட்டமான அக்கறை இன்மையை வெளிப்படுத்தினார். அவர் மார்ச் 4 அன்று பத்திரிகையாளர்களிடம், "எங்கு
அல்கொய்தாவினரையும் தலிபான்களையும் பெருமளவில் பார்க்கிறீர்களோ அங்கு அவர்களுடன் போரில் ஈடுபடாதவர்களும்
இருப்பர், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஏதோ ஒரு வகையான ஆதரவாளர்கள்" எனக் கூறினார். மேலும்
ரம்ஸ்பீல்ட் அங்கு இருக்கும் குடிமக்கள், "அவர்களின் சொந்த சுதந்திர விருப்பில், யாருடன் அவர்கள் இருக்கிறார்கள்,
யாரை அவர்கள் ஆதரிக்கிறார்கள், யாரை ஊக்கப்படுத்துகிறார்கள் மற்றும் யாருக்கு உதவுகிறார்கள் என்பதை அறிந்து
கொண்டிருக்கின்றனர்" என்று கூறினார்.
மலைகளில் ஒன்றுக்கொன்று எதிராக அணிவகுத்த படைகள் முற்றிலும் பொருத்தமற்றது.
மதிப்பிடப்பட்ட 500 லிருந்து 800 வரையிலான தலிபான் மற்றும் அல்கொய்தா துருப்புக்கள் மோர்ட்டார்கள், சுழல்
வீச்சு ஏவு எறிகுண்டுகள் (rocket-propelled
grenades) மற்றும் கனரக எந்திரத் துப்பாக்கிகள் மற்றும் குறைந்து
செல்லும் துப்பாக்கிக் குண்டுகள் இவற்றுடன் ஆயுதபாணி ஆகி இருக்கிறார்கள். மற்றொரு புறத்தில், வாஷிங்டன்
போஸ்ட் குறிப்பிட்டவாறு, "பகைத் துருப்புக்களைக் கொல்ல, அல்கொய்தா மற்றும் தலிபான் போராளிகள் ஒளிந்திருப்பதாக
நம்பப்படும் குகைகளைத் தகர்க்க வடிவமைக்கப்பட்ட 2000 பவுண்டுகள் எடை உள்ள 'அனல் குண்டுகள்' உள்பட, அமெரிக்க
விமானப்படையின் படைக்கல சாலையில் உள்ள மிகவும் அழிவுகரமான வழக்கத்தில் உள்ள ஆயுதங்களை அமெரிக்கக்
கொமாண்டர்கள் பயன்படுத்தினர். கார்டெஸ் க்கு அருகில் நடைபெற்ற யுத்தத்தில் முதல் தடவையாக இரண்டு பயன்படுத்தப்பட்டு
இருந்தன."
இந்தவார இராணுவத் தாக்குதலில் விமானப்படையின் பி-52 மற்றும் எப்-15இ குண்டு வீச்சு
விமானங்களும் கடற்படை கப்பலைத் தளமாகக் கொண்டு தாக்கும் விமானமும் அத்துடன் ஏசி-130 பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன.
பகைவரின் "தற்காப்பு வலுவைக் குறைப்பதற்கு" தலிபான் நிலைகளின்மீது நூற்றுக் கணக்கான குண்டுகள் போடப்பட்டன.
இராணுவத்தின்AH-64 Apache
தாக்குதல் ஹெலிகாப்டர்கள் கூட பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அமெரிக்க இராணுவம் சண்டை தொடங்கியதற்குப் பின்னர்
ஒரு டஜனுக்கு மேற்பட்ட அப்பாசே மற்றும் AH-1 Cobra
ஹெலிகாப்டர்களை மேலும் சேர்த்துக் கொண்டது என்று அதிகாரிகள்
புதன் கிழமை அன்று செய்தி அறிவித்தனர்.
அமெரிக்கா தலைமையிலான பல்லாயிரம் பேரைக் கொண்ட படை ஆப்கானிஸ்தானிலும் உஸ்பெக்கிஸ்தானிலும்
தளம் கொண்டிருந்த 10வது மலைப்பிரிவு மற்றும் ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள காந்தஹாரில் 101வது விமானப்படைப்
பிரிவிலிருந்தும் படைவீரர்களை உள்ளடக்கி இருந்தது. ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும்
நோர்வேயில் இருந்து வந்த துருப்புக்கள், ஆப்கான் ஆதரவு அமெரிக்கப் படைகளாக, ஆயிரம் பேர் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தனர்.
நூற்றுக்கணக்கான தலிபான் மற்றும் அல்கொய்தா துருப்புக்களுடன் ஒப்பிடுகையில், எட்டு அமெரிக்க
இராணுவ வீரர்களும் ஆப்கான் வீரர்களும் இந்நடவடிக்கையில் இறந்திருக்கின்றனர், பல டசன் பேர்கள் காயமடைந்திருக்கின்றனர்.
இந்த வகையிலான படுகொலைக்கு மாதிரியாக 1870கள் மற்றும் 1880 களில் அமெரிக்க இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்க
இராணுவம் நடத்திய தாக்குதல் இருக்கிறது. அந்தத் தாக்குதலின்பொழுது தளபதி பிலிப் ஷெரிடான்
(Philip Sheridan),
"ஒரு நல்ல இந்தியர்கள் இறந்துபோன இந்தியர்கள்தான்" என்ற இழிபுகழ் பெற்ற சொற்றொடரை பிரபலமாக்கினார்.
முடிவில்லாத ஊழல் மற்றும் அடிவருடி அமெரிக்க ஊடகமானது கார்டெஸ் க்கு அருகில் நடந்த
படுகொலையை இரண்டாம் உலக யுத்தத்தின் கடுமையான சண்டை நிகழ்ச்சிகளை நினைவூட்டுகிறது என்று போலியாகக்
கூறுகிறது. எடுத்துக்காட்டாக, கிளீவ் லாண்ட் பிளெய்ன் டீலர் தலையங்கத்தில் பின்வருமாறு உறுதியாகக் கூறியது:
"முன்னர் நடைபெற்ற யுத்தம் என்ற அர்த்தத்தில் இது 1945ல் பேர்லினாக இருக்கிறது. அப்பொழுது வீடுவீடாக, அறை
அறையாக சண்டை போட்டது இப்பொழுது பாறைபாறையாக, குகைகுகையாக சண்டை நடக்கிறது. அத்தகைய யுத்தத்தில்
கடைசியாக மாட்டிக் கொள்ளும், நல்லமனிதர்களும் கெட்டவர்களுடன் இறப்பர்."
இது சுய ஏமாற்று முட்டாள் தனமாகும். இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்க இராணுவம்,
அந்நாளின் நவீன ஆயுதத்தளவாடங்களினால் மூக்கு முட்ட ஆயுதபாணி ஆக்கப்பட்ட சக்திமிக்க ஐரோப்பிய நாட்டை எதிர்கொண்டது--
உலகில் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழ்மை மிக்க நாடுகளுள் ஒன்றில் உறைபனி குகைகளில், குழந்தைகளுடனும் மனைவியுடனும்
மாட்டிக் கொண்ட, கண்டதும் கழியதுமான ஒரு கூட்டத்தினரை அல்ல.
இரண்டாம் உலக யுத்த சகாப்தத்துடன் மிகப் பொருத்தமான ஒப்பீடு முசோலினியின் பாசிச
இத்தாலியால் எத்தியோப்பியா ஆக்கிரமிக்கப்பட்டதாகும். 1935--41 காலனித்துவ யுத்தத்தின் பொழுது 275,000
எத்தியோப்பிய இராணுவத்தினர் இறந்தனர், அத்துடன் லட்சக் கணக்கான குடிமக்கள் பட்டினியால் இறந்தனர், கடூழியச்
சிறைமுகாம்களில் இறந்தனர் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டனர். அதனுடன் ஒப்பிடுகையில், 15,000 இத்தாலிய
இராணுவத்தினர் இறந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
புஷ் நிர்வாகமும் செய்தி ஊடகமும் எட்டு அமெரிக்கர்களின் உயிர்கள் இழந்திருப்பதை,
அவர்களின் சொந்த சிடுசிடுப்பு நோக்கங்களுக்காக பற்றிக் கொண்டுள்ளனர். ஒருபுறம், அமெரிக்க மக்களுக்குள்ளே யுத்தத்துக்கான
ஆர்வத்தைத் தட்டி எழுப்ப நடைபெற்றுக் கொண்டிருக்கும் முயற்சியின் பகுதியாக, இறந்து போனவர்கள் தெய்வமாக்கப்பட்டு
மாபெரும் நோக்கத்திற்கான தியாகிகளாக ஆக்கப்பட்டனர். வாஷிங்டன் போஸ்டின் தலையங்கம், "வீழ்ந்தோரை நினைவு
கொள்ளுங்கள்" என்பது பின்வருமாறு கூறியது. இறந்து போனவர்கள் "அனைவரும் அமெரிக்காவைப் பாதுகாக்க, கொடி
போர்த்தப்பட்ட சவப்பெட்டிக்குத் திரும்பும் ஆபத்தை எதிர்கொள்வதற்கு விரும்பி இருந்தார்கள். இவர்கள் இறந்த இந்த
யுத்தம்..... ஆப்கான் தாக்குதலுக்கு அத்தியாவசியமானது. அந்தத் தாக்குதலானது பெரும்பான்மையான அமெரிக்கர்களின்
அமோக ஆதரவால் ஆதரிக்கப்பட்டது மற்றும் உலகின் பெரும்பான்மை நாடுகளால் நியாயம் என அங்கீகரிக்கப்பட்டது.
அரசியல் கண்ணோட்டத்திலிருந்து, அமெரிக்க சேதங்கள் அத்தியாவசியமான தியாகமாக கட்டாயம் ஏற்கப்பட்டிருக்கிறது;
ஜனாதிபதி புஷ் யுத்தம் வெற்றியடைய வேண்டுமானால் அவர்கள் தப்ப முடியாதவராய் இருப்பர் என்று அடிக்கடி கூறினார்."
துன்பகரமான உண்மை என்னவெனில், இந்த மனிதர்களது உயிர்கள் --அங்கு இன்னும் நிறைய
நடக்க இருப்பவை-- வீணானவை ஆயின. "அமெரிக்க ஐக்கிய அரசுகளைப்" பாதுகாக்க அவர்கள் இறக்கவில்லை மாறாக
அமெரிக்க ஆளும் தட்டின் நலன்களின், எண்ணெய்க் கம்பெனிகளின், பாதுகாப்புத் துறை ஒப்பந்தக்காரர்களின் மற்றும் ஜோர்ஜ்
டபிள்யு. புஷ் செயலற்ற பெயரளவில் தலைமையாக சேவைசெய்கின்ற, நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள் அனைத்தினதும் நலன்களைப்
பாதுகாக்கையில் இறந்தனர்.
கொல்லப்பட்ட அமெரிக்க படைவீரர்கள் சம்பந்தமாக கவலையையும் பகிரங்க நினைவு
கூர்தலையும் கோபத்தையும் ஊக்கப்படுத்தும் அதேவேளை, மிகவும் வலதுசாரி விமர்சகர்கள் இறப்பு சம்பந்தமாக அவர்களது
மகிழ்ச்சியை வெளிப்படையாகவே காட்டினர். அமெரிக்க நிறுவனங்களின் பார்வையில், "வியட்னாம் நோய்க்குறி" யை (அதாவது,
அமெரிக்க யுத்த எந்திரத்திற்கு அமெரிக்க இளைஞர்களை தியாகம் செய்யும் வெளிநாட்டு இராணுவ சாகசங்களுக்கு
பொதுமக்களின் எதிர்ப்பை) தற்போதைய மோதலில் பாதிப்புக்கு உள்ளாவது மூலம் வெல்லமுடியும். மக்கள் தொகையினர்,
அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் போரில் ஈடுபடலில் இறக்கப் போகின்றனர் என்ற கருத்தை இயல்பாய் ஏற்கப்
பயன்படுத்தி "இரத்தமயமாக்கப்பட" இருக்கின்றனர்.
இதுதான் வால்ஸ்ட்ரீட் பத்திரிகை யின் "யுத்தத்தில், படைவீரர்கள் இறப்பு" என
தலைப்பிடப்பட்ட, "ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி" ரால்ப் பீட்டர்சால் வைக்கப்பட்ட இரத்தத்தை கொதிக்க
வைக்கின்ற கருத்தாகும். பீட்டர்ஸ் எழுதுகிறார்: "போரில் ஈடுபட்டு இறத்தல் என்பது, நாம் பகைவரை அழித்தல் பற்றி
அக்கறையாய் இருக்கிறோம், எதை எடுத்தாலும் அதனைச் செய்வதற்கு விருப்பமாய் இருக்கிறோம் என்பதை குறிகாட்டுகின்றது.
சேதங்கள் இல்லாத நடவடிக்கையில் நான் மிகவும் நம்பிக்கையில்லாதிருப்பேன்."
ஆப்கான் நடவடிக்கை தொடர்பான குறிப்பில் அவர், " நமது இராணுவம், ஒப்புக்கொண்டவாறு
கிளிண்டன் வருடங்களின் கோழைத்தனத்திலிருந்து இன்னும் மிச்சம் மீதி இருக்கும் தொற்றுதலால் பாதிக்கப்பட்டுக்
கொண்டிருப்பது, முதலில் வெட்கி ஒதுங்குகின்றதாக நகர்ந்துவிட்டது. பின்னர் இராணுவ தளபதிகளும் கடற்படைத்
தளபதிகளும் நமது தேசிய தலைமை இப்பொழுது அக்கறை கொண்டிருந்ததாக செய்தியைப் பெற்றிருக்கின்றனர் போல் தெரிகிறது.
வெளிச்சம் வந்து விட்டது, மற்றும் அவர்கள் பச்சைப் படைப்பிரிவினராக இருக்கின்றனர்..... அங்கு அதிகமான அமெரிக்க
சேதங்கள் இருக்கலாம். ஒருவேளை மிக அதிகமாகவும் இருக்கலாம். நாம் சில அமெரிக்க வீரர்கள் பதுங்கித் தாக்கப்படுவதை
மற்றும் துடைத்து அழிக்கப்படுவதைக் கூடக் காணலாம். அதுதான் யுத்தம், மக்களே." என சொல்லிச் செல்கின்றார்.
ஐக்கிய அமெரிக்க அரசுகள் தற்போதைய சண்டையில் அபரிமிதமான இராணுவ சாதகத்தைக்
கொண்டிருக்கிறது. கார்டெஸ் அருகேயான மோதலின் விளைவு ஒருபோதும் கருத்தார்ந்த சந்தேகத்திற்கு ஆளானதில்லை.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடுத்த சிலநாட்களில் அமெரிக்க குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள்
மற்றும் அவர்களின் உள்ளூர் முகவர்களின் மற்றும் கூட்டாளிகளின் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளால் கொல்லப்படுவார்கள்.
இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களைப் பெறுவதற்காக ஆயிரக் கணக்கானோர் ஏற்கனவே
கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இருப்பினும், செனி, ரம்ஸ்பீல்ட் மற்றும் அவர்களின் கூட்டாளிகளது புதுமைக்கு மாறாக, இராணுவப்
பக்கமானது சமநிலையின் ஒரு பகுதியும் இரண்டாந்தர முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். எண்ணாமல் துணிகிற அமெரிக்க
நடவடிக்கையால் தவிர்க்க முடியாதபடி கொண்டுவரப்படும் அரசியல் சீர்குலைவு, வாஷிங்டனில் அறியாமை மிக்க மற்றும்
தொலைநோக்கு இல்லா கொள்கை வகுப்பாளர்களால் கற்பனை செய்யப்பட்ட எதற்கும் அப்பால் மிகப் பாரதூரமான
விளைபயன்களைக் கொண்டிருக்கும்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கை கொடூரமான, குற்றத்தனமான கடுஞ்செயலாகும்.
எதிர்காலத்தில், அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவத் தலைமையை, மிகப் பெருவாரியான உலக மக்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியர்களைக் கொலைசெய்தவர்களை, 1930 களில் எத்தியோப்பியாவில் இத்தாலிய ஜெனரல்களை
அல்லது அதே விஷயத்திற்காக இரண்டாம் உலக யுத்தத்தில் கிழக்கு முனையில் ஜேர்மன் தலைமை ஆணையகத்தை வெறுப்புடனும்
அருவருப்புடனும் இப்போது உணர்ந்து பார்ப்பது போல் அதே வெறுப்புடனும் அருவருப்புடனும் கருதிப் பார்ப்பார்கள்.
|