World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan navy kills two fishermen இலங்கை கடற்படையினரால் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர் On the spot report by our correspondents இலங்கை கடற்படை, நாட்டின் கிழக்குக் கரையின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு தொலைவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) ஆயுதம் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இரு ட்ரோலர் படகுகளை (ஆழ் கடலில் மீன்பிடிக்கும் படகுகள்) தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சு மே 2ம் திகதி அறிவித்தது. ஒரு படகு "தானாகவே வெடித்துச் சிதறியதோடு" சிவிலியன்களின் சிறிய மீன்பிடி படகுகளோடு கலந்து கொண்ட மற்றைய படகை கடற்படை பின்தொடர்ந்தது. "சிவிலியன்களின் படகுகளுக்கிடையே இருந்து திடீரென வெளிப்பட்ட விடுதலைப் புலிகளின் படகு, கடற்படை படகுகளை நோக்கி சுட்டது. விடுதலைப் புலிகளின் படகுகளோடு மோதிய கடற்படையினர், தங்களோடு மோதிய விடுதலைப் புலிகளின் படகுகளில் ஒன்றை அழித்தனர்." ட்ரோலர் படகு தோல்வியடைந்தது. எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு பத்திரிகைகள் உடனடியாக இந்தச் சம்பவத்தை, பெப்பிரவரியில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் மீறியுள்ளதற்கான சான்றாகப் பிரசுரித்தன. பாதுகாப்பு அமைச்சு, நோர்வே தலைமையிலான இலங்கைக் கண்காணிப்புக் குழுவுக்கு (Sri Lanka Monitoring Mission -SLMN) ஒரு உத்தியோகபூர்வ முறைப்பாடு செய்தது. கண்காணிப்புக் குழு உத்தியோகஸ்தர் ஒருவருடன் திரும்பவும் சம்பவ இடத்துக்கு சென்ற கடற்படையினர் ஆயுதப் பெட்டிகளை கண்டெடுத்தனர். பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன, இந்த ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என சுட்டிக்காட்டினார். எவ்வாறெனினும் விடுதலைப் புலிகள் எந்தவொரு தலையீட்டையும் நிராகரித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரைக்குச் சென்ற உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள், உள்ளூர் மீனவர்களுடனும், மாவட்ட கண்காணிப்புக் குழு தலைவருடனும் மற்றும் சாதாரண மக்களுடனும் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். "திடீரென சிவிலியன்களது மீனவ படகுகளின் மத்தியிலிருந்து தோன்றிய" "விடுதலைப் புலிகளின் படகு" மீதான கடற்படையினரின் தாக்குதலில் இரு மீனவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கடற்படையோ அரசாங்கமோ கொழும்பு ஊடகங்களோ அல்லது கண்காணிப்புக் குழுவினரோ அறிவிக்கவில்லை. கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் போராளிகள் அல்ல, மீனவர்களேயாகும். தாக்குதலில் இருந்து தப்பிய நூர் முகமது நசீர், (வயது 24) எமக்கு விளக்கமளித்தார்: "எமது படகுச் சொந்தக்காரரான முகமட் தம்பி சபீக்கும், ஆதாம்பாபா வெள்ளைத் தம்பியும், நானும் அந்த துர்பாக்கியத் தினத்தன்று மாலை சாலித்தீவில் (வாழைச் சேனைக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பு) மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். "நாங்கள் வலை விரித்துவிட்டு காத்திருந்தபோது, மாலை 6.30 மணியளவில் நான்கு கடற்படைத் துப்பாக்கிப் படகுகள் எமது படகைச் சுற்றி வந்து ஒரு சிவப்பு ஒலியை எம்மீது பாய்ச்சின. அதன் பின்னர் கடற்படையினர் எங்களை சுட ஆரம்பித்தனர். ஆதாம்பாபா ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். சபீக்கும் நானும் தப்புவதற்காக கடலில் குதித்து நீந்தினோம். ஒரு கடற்படை படகு எம்மை நோக்கி வந்து மீண்டும் சுட ஆரம்பித்தது. சாபீக் தோளில் காயமடைந்தார். எனது காலில் தோட்டா ஒன்று பாய்ந்தது. நாம் இரத்தம் வடிய வடிய மறுநாள் காலை வரையும் நீந்திக் கொண்டிருந்தோம். சபீக் மேற்கொண்டு தன்னால் நீந்த முடியாதென கூறினார். நானும் மிகவும் களைப்படைந்திருந்ததோடு அவருக்கு உதவமுடியாமல் இருந்தது." மறுநாள் நசீர் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள காயான் கேனியை அடைந்ததோடு அங்கு மருத்துவ உதவிகளையும் பெற்றார். சபீக் கடலில் மூழ்கிவிட்டார். கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தப்பிய ஏனைய 36 மீனவர்களை நசீர் சந்தித்தார். அவர்களில் பதினாறுபேர் சிங்களவர்களாகும். ஏனையவர்கள் முஸ்லிம்களும் தமிழர்களுமாகும். பெரும்பாலானோர் மேற்கு பகுதியான புத்தளத்தையும் ஏனையவர்கள் கிழக்குப் பகுதியான திருகோணமலையையும் சேர்ந்தவர்கள். நசீர் தமது படகு தாக்கப்படுவதற்கு முன்னர், தூரத்தில் ஒரு படகு வெடித்து சிதறியதை கண்டதாக விளக்கினார். கடற்படையினரால் பின்தொடரப்பட்ட ட்ரோலர் படகுகளைப் பற்றி அவர் எதுவுமே அறிந்திருக்காததோடு, தானும் உயிரிழந்த தனது இரு நண்பர்களும் விடுதலைப் புலிப் போராளிகள் அல்ல எனத் தெரிவித்தார். அவர்கள் மூவரும் ஏழை மீனவர்களாகும். ஆதம்பாபாவினதும் சபீக்கினதும் குடும்பங்கள் இரண்டும் இப்போது தமது ஒரே ஒரு வருமானத் துணையை இழந்துவிட்ட நிலைமையில் உறவினர்களின் உதவியில் தங்கி வாழத் தள்ளப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கண்காணிப்புக் குழு தலைவர் ஹேய்க்கி ஹுல்கொனன் (Heikki Hulkkonen) எங்களுடன் பேசுகையில், விடுதலைப் புலிகள், தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருந்த 36 மீனவர்களைப் பற்றி தனக்கு அறிவித்திருந்ததாக தெரிவித்தார் -ஒருவர் காயமடைந்திருந்தார். "கடற்படையினர், தாம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்திய படகை தாக்கியதாக தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இந்தக் கதைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. எமது திருகோணமலைக் குழு இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றது. அவர்கள் சம்பவம் இடம்பெற்ற கடலில் வெடிபொருட்களைக் கண்டு பிடித்துள்ளனர். எங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை, ஆனால் நாம் மிகக் கவனமாக நிலைமையை அவதானிக்க வேண்டும்," என்றார். ஹுல்கொனன் எந்தவொரு திட்டவட்டமான நிலைப்பாட்டையும் எடுக்கத் தயங்கிய அதே சமயம் உள்ளூர் மீனவர்களை கொலை செய்தமை, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பதை ஏற்றுக்கொண்டார். அவர் "அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் தவிர, சில சமயம் சமாதான முயற்சிகளுக்கு எதிரான சில குழுக்கள் இச்சம்பவத்தில் தலையிட்டிருக்கக் கூடும் என தாம் உணர்வதாக" தெரிவித்தார். ஹுல்கொனன் முழுமையாக விபரிக்காத போதிலும், இராணுவத்தின் சில பகுதிகள் "சமாதான முயற்சிகளை" எதிர்ப்பதையும், பேச்சுவார்த்தைகளை குழப்புவதற்காக எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தக் கூடும் என்பதையும் அவர் சந்தேகத்துக்கிடமின்றி புரிந்துகொண்டிருந்தார். மே மாத நடுப்பகுதியில், கண்காணிப்புக் குழு இராணுவத்தை மன்னிக்கும் ஒரு உத்தியோகபூர்வமான அறிக்கையை வெளியிட்டது. அது "கடற்படை சந்தேகத்துக்கிடமான ட்ரோலர் படகுகளை வேவுபார்க்கும் தனது சட்டரீதியான பணியில் ஈடுபட்டது" என கூறியதோடு, ஒரு ட்ரோலர் சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக உறுதிப்படுத்தியது. எவ்வாறெனினும், இந்தக் கண்காணிப்புக் குழு, "ட்ரோலர் எந்த பகுதியுடன் தொடர்புடையது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை" எனக் குறிப்பிடுவதோடு -ஆயுதங்களும் படகும் யாருக்குச் சொந்தமானது என்ற பிரதான கேள்வியை தோற்றுவித்துள்ளது. இதனால் இந்த அறிக்கை எந்த ஒரு யுத்த நிறுத்த மீறல்களுமே இடம்பெறவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. கொல்லப்பட்ட இரண்டு மீனவர்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. யுத்த நிறுத்தத்தின் கீழ் தொடரும் நெருக்கடிகள் இலங்கையின் தொழிலாளர் வர்க்கமும் ஏழைகளும் 19 வருடகால உள்நாட்டு யுத்தத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதோடு, அந்த நிலைமைகள் யுத்த நிறுத்தத்தின் கீழும் தொடர்கின்றன. நூர்முகமட் நசீரீன் வசிப்பிடமான வாழைச் சேனையில், ஏறத்தாள 90 சதவீதமான மக்கள் மீன்பிடிப்பதிலும் நெற்செய்கையிலுமே ஜீவிக்கின்றனர். அங்கு 300 படகுகளே உள்ளன. ஆனால் 7000 ஆண்கள் மீன்பிடிப்பதில் ஈடுபடுகின்றனர். யுத்தத்தின் பெறுபேறாக 50 மீனவர்கள் உட்பட சுமார் 100 பேர் இப்பிரதேசத்தில் இறந்துள்ளனர் -சிலர் கடற்படையினரின் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இருவரில் ஒருவரான சபீக்கின் உறவினர் எங்களுடன் உரையாடுகையில்: "எமது பகுதியிலுள்ள மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை (ஒரு முஸ்லிம் தேசியவாதக் கட்சி) அமைக்க முன்னணியில் நின்றார்கள். தற்போது அவர்கள் எம்மை கைவிட்டு விட்டார்கள். நாம் ஏழைகளாக இருப்பதுதான் இதற்கான காரணம் என நான் நினைக்கின்றேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் பெரிய தலைகளுடன் இருக்கின்றார்கள். எமது பாராளுமன்ற உறுப்பினரான மொஹிதீன் அப்துல் காதரும் ஒரு பிரதி மீன்பிடியமைச்சர். இங்கு வந்து தாக்குதலில் இறந்த மீனவர்களின் சடலங்களை எம்மிடம் கையளிப்பதாக உறுதியளித்தார். ஆனால் பின்னர் அந்த சடலங்கள் கிடைக்கவில்லை எனக் கூறினார். எமது படகுகளை விடுதலைப் புலிகள் தாக்கவில்லை. ஆனால் அவர்களும் பணம் வசூலிப்பார்கள்." என்றார் ஒரு முஸ்லிம் விவசாயி கூறியதாவது: "இந்த கல்குடா தொகுதியில் 40,000 ஏக்கர் பயிர்ச் செய்கை நிலம் உள்ள போதிலும், 20 ஏக்கர் மாத்திரமே பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது. நாம் இரு பக்கங்களில் இருந்து வரும் அழுத்தங்களால் கைவிட்டுவிட்டோம். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் எம்மை பயிர்ச் செய்கையில் ஈடுபடுமாறு கேட்டனர். ஆனால் 15, 20 கிலோமீட்டர்கள் பிரயானம் செய்ய வேண்டும். நாங்கள் இன்னமும் அங்கு போகவில்லை, ஏனென்றால் நாங்கள் சமாதான முயற்சிகளில் நம்பிக்கை கொள்ளவில்லை. யுத்த நிறுத்தம் முறிவடைந்தால் எமக்கு அங்கு சென்று எமது பயிர்களையும் அறுவடையையும் கவனிக்க முடியாமல் போகும். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக விவசாயம் செய்ய முடியாமல் திண்டாடுகின்றோம்." இலங்கை பாதுகாப்பு படையினரின் அடக்குமுறைகள் பற்றி தினசரி அறிக்கைகள் வெளியாகும்
அதே வேளை விடுதலைப் புலிகள் வரி சேகரிப்பதாகவும் அதன் எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவதாகவும் முறைப்பாடுகள்
உள்ளன. வழக்கமான அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் பேசிய ஒருவர்: "தற்போதைய சந்தர்ப்பத்தில் எங்களால்
வெளியில் செல்லக் கூடியதாக இருப்பதோடு நிலைமைகள் அபிவிருத்தியடைந்துள்ளன. எவ்வாறெனினும், இந்த நிலைமைகள்
எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? மீண்டும் யுத்தம் வெடிக்கக் கூடும் என நாங்கள் அஞ்சுகிறோம்." எனக் குறிப்பிட்டார். |