World Socialist Web Site www.wsws.org |
WSWS
:செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா
: பாகிஸ்தான்
Pakistan's sham referendum endoreses Musharraf as president பாகிஸ்தானின் வெட்கக்கேடான சர்வஜன வாக்கெடுப்பு முஷாரப்பை ஜனாதிபதியாக ஊர்ஜிதம் செய்கின்றது By Vilani Peiris பாகிஸ்தானிய அதிகாரிகள், கடந்த வாரம் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஜெனரல் பர்வஸ் முஷாரப் மேலும் ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரகடனப்படுத்தியுள்ளார்கள். இந்தப் பெறுபேறுகள் முற்றிலும் வெட்கக்கேடான ஒன்றாக உள்ள அதேவேளை எவரையும் வியப்புக்குள்ளாக்காததோடு, 1999 அக்டோபரில் சதி புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த இராணுவப்பலம் மிக்க மனிதரை மேலும் அபகீர்த்திக்குள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தானிய தேர்தல் ஆணையாளரின்படி ஏப்பிரல் 30 சர்வஜனவாக்கெடுப்பில் நாட்டின் 63 மில்லியன் வாக்காளர்களில் 44 மில்லியன் அல்லது 70 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். 1992ல் கடைசியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 36 சதவீதத்துக்கும் குறைவானவர்களே வாக்களித்திருந்தனர். அதோடு ஒப்பிடுகையில் இது ஒரு பாரிய அதிகரிப்பாகும். வாக்களித்தவர்களில் 97.7 வீதமானர்கள் முஷராப்பிற்கு 'ஆம்' என வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். பெரும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை தேர்தலை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்ததோடு முடிவுகளை ஒரு மோசடி என கண்டனம் செய்தன. அவர்களது கணிப்பீட்டின்படி வாக்களிக்க தகுதியானவர்களில் 5 சதவீதத்துக்கும் 10 சதவீதத்துக்கும் இடைப்பட்டோரே வாக்களித்துள்ளனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் (PML) பேச்சாளர் சப்பார் அலி சஹா (Safar Ali Shah) "இதுவரை பாகிஸ்தானில் 36 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் வாக்களித்திருக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டியதோடு முடிவுகளை ஒரு "நிர்வாணமான மோசடி" என வர்ணித்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) பேச்சாளர் ராசி ரபானி (Razi Rabbani): "முஷராப் தொடர்ந்து செல்வதற்கு அரசியல் நீதியும் அதிகாரமும் இல்லை அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்" எனப் பிரகடனம் செய்தார். பாகிஸ்தான் மனித உரிமை ஆணைக்குழுவின் (HRCP) தலைவர் அப்ராசய்ப் கஹாட்டக் (Afrasiab Khattak): "மக்கள் ஜனநாயகத்தைப் புணர்நிர்மானம் செய்வதற்கான தமது பாதையில் கெட்ட அறிகுறிகளைக் காட்டும் அனுபவங்களைப் பெற்றுள்ளனர்," என எச்சரித்தார். அவருடைய அமைப்பு, "எல்லாவற்றையும் விட மக்கள் வாக்களிப்பதற்காக முன் தள்ளப்பட்டமையும் தேர்தல் நடைமுறைகள் மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையும் ஜனநாயகத் தெரிவு என்ற எண்ணக் கருவை தரம் குறைத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது. டவுன், நேஷன், GÎv, ஆகியவை உட்பட பிரதான செய்திப் பத்திரிகைகள் அனைத்தும் சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகளின் நம்பகத்தன்மை தொடர்பாக கேள்விகளை எழுப்பின. "நடைமுறையில் இந்த சர்வஜன வாக்கெடுப்பு சியாவின் சர்வஜன வாக்கெடுப்பை விட நம்பகமானதல்ல என்ற கருத்து அபிவிருத்தியடைந்து வருகிறது" என நேஷன் குறிப்பிட்டது. முன்னைய சர்வாதிகாரி சியா ஹூல் ஹக் சம்பந்தமான குறிப்பு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று. 1984ல், சியா ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தனது ஆட்சியை சட்டபூர்வமாக்க முயற்சித்தார். வாக்களிக்க தகுதி பெற்றோரில் 5 சதவீதமானவர்களே பங்குபற்றியிருந்தனர். ஆனால் அரசாங்கம் மிகவும் பெரும்பான்மையான ஆதரவு என இதை அறிவித்தது. சியாவைப் போலவே முஷராப்பும் அவரது வளர்ச்சியடைந்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட அரசியல் நிலமையிலிருந்து தலையெடுக்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாக சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். பாகிஸ்தான், செப்டெம்பர் 11க்குப் பின்னர், வாஷிங்டனின் பாரிய அழுத்தத்தின் காரணமாக தலிபான் அரசாங்கத்துடன் கொண்டிருந்த உறவுகளை துண்டித்துக் கொள்ளவும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் யுத்தத்துக்கு ஆதரவு வழங்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்த முடிவு முஷராப் முன்னர் நம்பியிருந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளதும் இராணுவத்தினதும் ஒரு பகுதியினரை அன்னியப்படுத்தியது. கடந்த வார தேர்தல், ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு சமாளிப்பு நடவடிக்கையாகவே காணப்பட்டது. முஷராப் சாதகமான முடிவை உறுதி செய்ய முயற்சி செய்யவோ செலவு செய்யவோ இல்லை. "குழுவாதத்தையும், தீவிரவாதத்தையும் தவிர்ப்பதற்காகவும்" சீர்திருத்தங்களுக்கும் ஜனநாயகத்தை புணர்நிர்மானம் செய்யவும் அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஒரு மனிதனாக காட்டுவதற்கான பிரச்சாரத்திற்கு பில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்பட்டன. வாக்குச் சீட்டும் இதே செய்தியைக் கொண்டிருந்தது. 'ஆம்' என குறிப்பிடப்பட்டிருந்த கட்டம் இஸ்லாமினதும் பாகிஸ்தான் கொடியினதும் நிறமான பச்சை நிறத்தை கொண்டிருந்தது. பகிஷ்கரிப்பை எதிர் கொண்டு வாக்களிப்புத் தொகையை அதிகரிப்பதற்காக வாக்களிப்பு வயதை 21 லிருந்து 18 ஆக குறைத்ததோடு வாக்களிப்பு நிலையங்கள் 87,000 மாக 10 மடங்கு அதிகரிக்கப்பட்டது. எக்கோனமிஸ்ட் (Economist) சஞ்சிகை கருத்துத் தெரிவிக்கையில்: "போலி அரசியல் நடவடிக்கைளில் இது ஒரு மித மிஞ்சியதாகும்" எனக் குறிப்பிட்டது. இந்த தேர்தல் வாக்காளர் பதிவுப் புத்தகத்தின் உதவியின்றியே நடாத்தப்பட்டது. அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்படவில்லை. வழமையான வாக்குச் சாவடிகள் மேலதிகமான ஆயிரக்கணக்கான நடமாடும் வாக்குச் சாவடிகளால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தன: இவை புகையிரத நிலையங்களிலும், காரியாலயங்களிலும், வீதி அந்தங்களிலும், ஹோட்டல்களிலும் நிறுவப்பட்டிருந்தன. இவை வியாபார நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் வாக்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. வாக்குச் சீட்டுக்கள் திணிக்கப்பட்டது தொடர்பாகவும் பல தடவை வாக்களிக்கப்பட்டது சம்பந்தமாகவும் பல்வேறு கணக்கீடுகள் இருக்கின்றன. "அங்கு வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாக்களித்திருந்ததோடு வாக்களிப்பதற்காக போலி அடையாளங்களைக் காட்டுதல் போன்ற ஒழுங்கீனங்கள் காணப்பட்டன," என இன்டிபென்டென்ட் குறிப்பிட்டிருந்தது. வாக்காளர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் ஏனைய புகைப்பட அடையாளங்களையும் காட்டி வாக்களித்தனர். ஆனால் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் ஒரு பெண் தன்னுடைய பெயரை ஒரு துண்டில் எழுதியிருந்ததை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டார்கள். "வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களாகும். அவர்களுக்கு ஜெனரல் முஷராப்பின் நியாயத் தன்மையை கொஞ்சம் உயர்த்த வேண்டியிருந்தது. பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் மக்களை ஊக்குவிக்கும் முயற்சியாக விழா போல் ஜனாதிபதியின் படங்கள் கட்டிங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு ஒவ்வொரு மின் கம்பத்திலும் தொங்கவிடப்பட்டிருந்தது. கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வண்டிகள் நகரத்தின் பிரதான சந்தையிலுள்ள ஜின்னா அவனியூ வழியாக தேசபக்த பாடல்களுடன் ஓட்டிச் செல்லப்பட்டன. வாஷிங்டன் போஸ்ட், "அரசாங்கம் முஷராப்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக காட்டுவதற்காக ஒரு பகீரத பிரயத்தனத்தை மேற்கொண்டது. அவ்வாறான முயற்சியொன்றில் தகவல் அமைச்சு வடமேல் மாகாண பெசவார், அபோதாபாத், நகர சபைகளின் வாக்குச் சாவடிகளுக்கு வெளிநாட்டு பத்திரிகயாளர்களை விமானம் மூலம் அழைத்துச் சென்றது. இரண்டிலும் ஒரே காட்சியே தெரிந்தது" என அறிவித்தது. வீதியில் பாடகர்கள் விருந்தாளிகளின் வருகையை அறிவித்தனர். பெசாவரில் மேளம் அடிப்பவர்களும் அபோதாபாத்தில் குழல் ஊதுவார்களும் இருந்தனர். சிறு பிள்ளைகள் மலர் தூவினார்கள். பல நிகழ்வுகள் நிகழ்ந்தன. வரிசையில் இருந்த 20-30 வாக்காளர்கள் எதிர்பார்த்திருந்த விதமாக ஒரு இராணுவ அணிவகுப்பைப் போல் விருந்தாளிகளின் பக்கம் திரும்பினார்கள். பெசாவரில் ஒரு பெண் தனது பர்தாவை விட்டு கைதட்டத் தொடங்கினார். ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ் தகவலின்படி: "குறைவான வாக்களிப்பு சம்பந்தமான பீதி, வாக்களிப்பை அதிகரிக்கச் செய்யவும், வாக்குச் சீட்டு திணிப்புக்கும் வழிவகுத்தது. பல வாக்காளர்கள் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு வாக்குச் சாவடியில் ஒரு பெண் 60 தடவை வாக்களித்ததாக குறிப்பிட்டார். இன்னுமொரு இடத்தில் 18 வயதிற்கு குறைந்த பாடசாலை மாணவிகள் வாக்களிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது." கையில் அடையாளமிடுவதற்கு பாவிக்கப்பட்ட மை இலகுவாக அகற்றக் கூடியதாக இருந்தது. ஒரு வாக்காளர் "மையை அகற்றுவது கடினமாதனதாக இருக்கவில்லை. நான் 8 தடவைகள் வாக்களித்தேன். நான் பல்வேறு வாக்குச் சாவடிகளில் எவ்வித பிரச்சினையுமின்றி வாக்களித்தேன்" என ஏ.எப்.பி.க்கு கூறியிருந்தார். சன் பிரான்சிஸ்கோ குரோனிகல், வடமேல் மாகாணத்தில் இருந்து செய்தி வழங்கும் போது: "அன்றைய தினம் பெறுபேறுகளில் அரச இயந்திரம் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகக் கருதுவதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பல பொதுத்துறை ஊழியர்கள் தம்மை வாக்களிக்கும்படி அழுத்தம் கொடுத்ததாக முறையிட்டனர். பல வாக்குச் சாவடிகளில், அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் மக்களை ஆம் என வாக்களிக்குமாறு வெளிப்படையாக ஊக்குவிப்பதையும் பெறுபேறுகளை அறிவதற்காக வாக்குச் சீட்டுக்களை திறந்து பார்த்ததையும் காணக்கூடியதாக இருந்தது," என அறிவித்தது. மேற்குலகில் இருந்து மறைமுகமான ஆதரவு அமெரிக்கத் தூதரகத்திலிருந்தும் பொதுநலவாய நாடுகளின் ஆணையகத்திலிருந்தும் நாடு பூராவும் உத்தியோகப்பற்றற்ற கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராஜதந்திரிகள் மேற் குறிப்பிடப்பட்ட அனைத்தையும் உற்சாகமாக நிராகரித்தனர். சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகையின்படி, சிறியளவிலான மோசடி சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் தேர்தல் ஒழுங்கு முறைகளை மாற்றியமைப்பதற்கான முறையான பிரச்சாரங்களின் ஆதாரங்கள் எதையும் அவர்கள் காணவில்லை. "இது ஒரு உத்தியோகபூர்வ மட்டத்தில் தெளிவான மோசடியாக இருக்கவில்லை. பரந்தளவிலான மோசடிகள் இடம்பெற்றதற்கான சாட்சியங்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை" என ஒரு இராஜதந்திரி தெரிவித்தார். வாஷிங்டன் சர்வஜன வாக்கெடுப்பை அனுமதிப்பதற்கான முழுமையான அங்கீகாரத்தை வழங்குவதை தவிர்த்துக் கொண்டது. அரச திணைக்கள பேச்சாளர் ரிச்சட் புச்சர்: "இந்த எண்ணிக்கைகளில் எந்தவொரு சுயாதீனமான உறுதிப்படுத்தல்களும் உண்மையில் இருப்பதாக நான் கருதவில்லை... நாடு ஜனநாயக மக்கள் ஆட்சிக்கு திரும்புவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு எதனை அர்த்தப்படுகின்றது என்பதை பாகிஸ்தான் மக்களே தீர்மாணிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் "நாங்கள் அக்டோபரில் மாகாண தேர்தல்களையும் தேசிய தேர்தல்களையும் எதிர்பார்க்கின்றோம். இந்தத் தேர்தல்கள் நாடு ஜனநாயக ஆட்சிக்கு திரும்புவதில் மிகவும் முக்கியமான அம்சமாக விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்," என்றார். இந்த குறிப்புக்கள் அமெரிக்க நிர்வாகத்தின் பக்கம் ஜனநாயகத்தின் பால் ஒரு புதிய அக்கறை இருப்பதைச் சுட்டிக்காட்டவில்லை. புஷ் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க யுத்தத்தின் போது இந்த இராணுவ சர்வாதிகாரியை ஒரு வசதியான சகாவாக அனைத்துக் கொண்டார். முஷராப் பயனுள்ளவராக இருக்கும் வரை இது தொடரும். அதே அளவில் ஒரு வெளிப்படையான மோசடியான தேர்தலில் இருந்து அன்னியப்பட்ட நிலையை பேணிவருவதோடு, புச்சரின் குறிப்புகளும் கூட அமெரிக்காவின் வழியை பின்பற்றுமாறு முஷராப்புக்கு ஞாபகப்படுத்துவதாக அமைகிறது. இல்லாவிடில், புஷ், ஜனநாயக விரோத குண்டன் என கண்டனம் செய்ததோடு சர்வதேச ஊடகங்களில், அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவன் என வர்ணித்ததைப் போல், ஒரு "உறுதி மிக்க திடநம்பிக்கையான தலைவர்" என்பதிலிருந்து பதவி இறக்கப்பட்டவராக முஷராப் தன்னைக் காண்பார். இந்தத் தகவலை முஷராப் விளங்கிக் கொண்டார். சர்வஜன வாக்கெடுப்பைத் தொடர்ந்து சுருக்கமான அவரது தொலைக்காட்சி உரையில், சர்வதேச நாணய நிதியத்தில் வலியுறுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைக்கிடுவதாகவும் "வரும் நாட்களில் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய பிரச்சாரம் அறிவிக்கப்படும்" எனவும் குறிப்பிட்டார். முஷராப் ஏற்கனவே அமெரிக்க அழுத்தங்களுக்கு தலைவணங்கியதோடு அமெரிக்க விஷேட படை வீரர்களை பாகிஸ்தான் படையினருடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் இயங்க அனுமதித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே பழங்குடியினர் மத்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை உருவாக்கி விட்டுள்ளது. அக்டோபர் தேர்தலை பொறுத்த மட்டில் அது நடத்தப்படுமா இல்லையா எனும் சந்தேகம் நிலவுகிறது. அவ்வாறு தேர்தல் நடந்து ஒரு அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் இராணுவ ஆதிக்கத்தின் கீழான தேசிய பதுகாப்பு சபையினூடாக இறுதி தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தன்னிடம் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். அவர் ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டில்: "அதிகாரம் என்பது ஒரு அரசாங்கத்தை நடத்துவதற்கான அதிகாரமாகும்... பிரதமரும் அமைச்சரவையும் அந்த அதிகாரத்தைக் கொண்டிருப்பர். பிழைகளை கவனிக்கும் அதிகாரம் தேசிய பாதுகாப்புச் சபைக்கே உள்ளது. நான் ஓய்வெடுத்து டெனிசும் கொல்பும் விளையாடப் போகிறேன்... ஆனால் நான் அவருக்கு (பிரதமருக்கு) மோசமாக நடத்த அனுமதிக்க மாட்டேன்" எனக் குறிப்பிட்டார். எப்படியிருப்பினும் முஷராப்பின் நிலைப்பாடு ஆபத்தானதாக உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பாகிஸ்தான் முஸ்லீம் கழகமும் இராணுவ அரசாங்கத்துடன் ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்திருந்த போதிலும் சர்வஜன வாக்கெடுப்பின் பேரில் எல்லாப் பெரும்பான்மைக் கட்சிகளினதும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார். ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததன் மூலம் ஆத்திரமூட்டல்களுக்கு எண்ணெய் வார்த்ததோடு அமெரிக்கப் படைகளை பாகிஸ்தானில் இயங்கவும் அனுமதித்தார். அதே நேரம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஆகக் கூடிய வேலையின்மைக்கு வழி வகுக்கும். அதே வேளை சமூகத் துருவப்படுத்தலை ஆழமாக்குவதோடு அரசாங்கத்துக்கு எதிரான பகைமை மேலும் வளர்ச்சியடைய வழிவகுக்கும். முடிவில் முஷராப் முன்னரை விட மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது அரசாங்கம்
இராணுவத்தின் குறுகிய தட்டுக்களிலும் அரச அதிகாரத்துவத்திலும் தங்கியிருப்பதோடு தொடர்ச்சியான பொருளாதார
உதவிகளுக்கும் அரசியல் ஆதரவுக்காகவும் வாஷிங்டனில் ஆழமான நம்பிக்கைக் கொண்டுள்ளது. |