World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

UN unveils a quasi-colonial regime for Afghanistan

ஐக்கிய நாடுகள் சபை ஆப்கானிஸ்தானுக்கு மேல் ஒரு காலனித்துவ ஆட்சி முறையை உருவாக்குகின்றது

By Peter Symonds
8 December 2001

Back to screen version

ஜேர்மனியின் Bonn நகருக்கு அருகே பீற்றஸ்பேர்க் விடுதியில் கடந்த ஒன்பது நாட்களாக மறைவில் இடம் பெற்ற பேரம் பேசலை அடுத்து ஆப்கானிஸ்தானைப் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மாநாடு கடந்த புதன் கிழமை அதன் விபரங்களை வெளிப்படுத்தி இருந்தது. அதாவது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் பேர்வழிகளைக் கொண்ட ஓர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட இருப்பதாக அது அறிவித்தது. அதன் முதல் வெளிப்பாடாக சாதாரண ஆப்கானிஸ்தான் மக்களின் குரல்கள் அனைத்தையும் தவிர்த்துள்ளதுடன், தேர்தலை நடாத்துவதை வெகு தொலைவிற்கு ஒத்திவைத்தும் உள்ளது.

ஒரு கடமைக்காக ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளால் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, ஆப்கானிஸ்தானிய அதிகாரத்தை பகிர்ந்துகொள்வோர் மத்தியில் தமது அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக இதைப் பற்றிய ஆத்திரமூட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த கொடுக்கல்வாங்கல்களில் தெளிவாக வெளிப்பட்டது அதன் காலனித்துவத் தன்மையாகும். பொஸ்னியா, கொசவோ, மற்றும் கிழக்கு தீமோர் போன்று, காபூல் அரசாங்கத்தையும் மேற்கின் பெரிய சக்திகள் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் தன்மை உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த ஆப்கானிஸ்தானுடைய தற்போதைய விசேட பிரிதிநிதியான Lakhdar Brahimi ஒப்பந்தத்தின் அனைத்து விதமான பொறுப்புக்களையும் மேற்பார்வை செய்வதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பிரிவின் தீர்மானங்களை ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு நிர்வாகத்தின் கீழ் கட்டிப் போடுகிறார். ஐக்கிய நாடுகள் சபை -loya jirga- (இது ஆப்கானிஸ்தான் போட்டித்தலைவர்கள் கூட்டம் கூடும் இடம்) வின் நடவடிக்கைகள் மீதும் மேற்பார்வை செய்கின்றது. இதற்கு அடுத்த இரண்டு வருடத்திற்கு ஒரு இடைக்கால ஆட்சியை தெரிவு செய்யப்படும்வரை எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த விசேட பிரதிநிதிக்கு சகலவிதமான அரசியல் இடையூறுகளையும் உடைக்கும் உத்தியோக பூர்வமான அந்தஸ்தை இந்த ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

இந்த உத்தியோக பூர்வமான நடவடிக்கைகளுக்கு பின்னால் பெரிய வல்லரசுகளின், பிரதானமாக அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவப் பலம் தங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் வரம்புகளுக்குள் ஒரு வெறும் கைப்பொம்மைகள் போன்று இயங்காது விடும்பட்சத்தில், அவர்கள் அனைவருக்கமான நிதியுதவிகள் மறுக்கப்படும் அபாயத்தை எதிர் நோக்குவர். இந்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவ பலத்தை காபுலுக்கு அனுப்பவதையும், அதே போன்று ஏனைய நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்துவதையும் சாத்தியமாக்கி உள்ளது. ஆனாலும் இதன் அளவும், இதை நடைமுறைப்படுத்துவதும் பிரச்சனைக்குள்ளதாக இருக்கின்றது.

அமெரிக்கா, அது அதனுடைய இராணுவத்தை எவ்வித தடையுமின்றி நாடு பூராவும் இயங்க வைத்து வருகிறது, அது மேலும் அதனுடைய மேலாதிக்கத்தை இறுக்கமாக்கும் பொருட்டு மற்றைய நாடுகளின் இராணுவத்தின் இருப்பை குறைத்துக் கொண்டுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய சக்திகள், எதிர்கால ஆப்கானிஸ்தானில் தமக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்துக் கொள்ளவதற்காக பலமான இராணுவ தலையீட்டுக்காக முன்தள்ளப்படுகின்றனர். முன்னைய வடக்கு கூட்டணியின் (Northern Alliance) பேச்சாளரும், தற்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு அமைச்சருமான Abdullah Abdullah என்பவர், ஐக்கிய நாடுகள் சபையின் துருப்புக்களின் எண்ணிக்கை எவ்வகையிலும் 200 க்கும் குறைவாகவே இருக்க வேண்டுமெனவும், அதே சமயம் அமெரிக்காவினதும், வடக்கு கூட்டினதும் இராணுவத்தினர் மட்டுமே உள்நாட்டில் ஒரு பலம் வாய்ந்த இராணுவமாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இப் புதிய நிர்வாகத்தின் பொம்மை ஆட்சித் தன்மையானது, Hamid Karzai என்பவரை தலைவராக தெரிவு செய்ததிலிருந்து வெளிப்படுகின்றது.

இப்பதவிக்கான அவரது தகுதிகளில் முதலாவது, அவர் ஒரு (Pashtun) இனத்தின் ஒரு தலைவராக வெளிநாட்டில் இருக்கும் அரசர் Zahir Shah வுடன் நெருங்கிய தொடர்பு உடையவராகவும் இருப்பதும், இரண்டாவது, அமெரிக்க செய்தி நிறுவனங்கள் இவரைப்பற்றி விபரித்ததின்படி ''வாஷிங்டனுக்கு மிகவும் விசுவாசமானவர்'' ஆக இருப்பது. காபூலில் இருக்கும் சோவியத் ஆதரவு அரசாங்கத்துக்கு எதிரான யுத்தத்துக்கு CIA மூலமாக நிதி மற்றும் ஆயுதங்களை பெற்ற முஜைகிதீன் உடைய ஏழு பிரிவுகளில் ஒரு பிரிவின் தலைவரான Sebghatullah Mojadeddi என்பவருடைய காரியாலயத்தை 1980 களில் இவர் Peshawar எனும் இடத்தில் இயங்க வைத்தார்.

சோவியத் சார்பான நஜிபுல்லா நிர்வாகம் 1992 ல் சரிந்ததைத் தொடர்ந்து, Sebghatullah Mojadeddi ஒரு குறைந்த காலத்திற்கு ஜனாதிபதியாகவும், அவரது பேச்சாளரான Hamid Karzai இற்கு பதில் வெளிநாட்டு அமைச்சர் பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டடார். Burhanuddin Rabbani ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, Hamid Karzai இப் பதவியில் தொடர்ந்தும் இருந்தார், பின்னர் 1994 ல் மொஐாடேடி எனும் இச் சிறு குழுவுக்கு உண்மையான அதிகாரம் கிடைக்காத காரணத்தால் அவர் அப்பதவியில் இருந்து இராஜிநாமா செய்தார்.

காஷாய், வாஷிங்டனுக்கு ஒரு மிகவும் முக்கியமான அரசியல் ''சொத்து'' என கருதப்படுகின்றார். அவர் கடந்த இரண்டு மாதங்களாக CIA வுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து வேலை செய்கிறார், தெற்கு ஆப்கானிஸ்தானில் அவர் செல்வாக்கு செலுத்தும், தலைமை தாங்கும் Popolzai குழுவுக்குள் தலிபான் படையினருக்கு எதிரான சண்டையில் முன்னணி வகிக்கிறார். நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் றும்ஸ்வெல்ட், காஷாய் மற்றும் அவருடைய தரப்பினர்கள் தலிபான் குழுக்களால் அச்சுறுத்தப்படுவதால், இவர்களை ''பிரித்தெடுக்க'' ஒரு விசேட நடவடிக்கைக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது என அறிவித்தார்.

காஷாய் Bonn நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கு பற்றவில்லை, அந்நேரத்தில் அவர் காண்டகாரை சரணடைதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். அதாவது அவர் தலிபான் தலைவர்களுடன், அவர்களுடைய போராளிகளால் மறித்து வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஆதரவாளர்களை விடுதலை செய்யப்படல் வேண்டும் எனும் ஒரு பேரம் பேசலில் ஈடுபட்டார். இவ் விடயத்தினால் கடந்த இரண்டு நாட்களாக இவருக்கும் வாஷிங்டனுக்கும் இடையே ஒரு முரண்பாடு ஏற்படலாயிற்று. தலிபான் தலைவர் Mullah Mohammed Omar ''பயங்கரவாதத்தை கைவிட்டால்'' அவருக்கு மன்னிப்பு வழங்கப்படல் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

காஷாயினுடைய இக் கோரிக்கை வாஷிங்டனால் உடனடியாகவே மறுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் றும்ஸ்வெல்டின் முகமத் முல்லா ஓமார் காவலில் வைக்கப்பட வேண்டும் அல்லது அவருக்கு எதிரான வழக்கு தொடரப்படல் வேண்டும், ''இது எமது கடுமையான நோக்கமாகும்'' என வலியுறுத்தினார். ''எமது கூட்டையும், ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்பவர்கள், அங்கே எதையாவது உருப்படியாக செய்ய விரும்பினால் தெற்கில் தெளிவான ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும்... ஆனால் இங்கோ நான் கூறியவற்றை இவை மறுதலிப்பதாக உள்ளன... ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு எமது குறிக்கோள் ஏமாற்றப்பட்டும், எதிர்க்கப்பட்டும் வந்தால் நாம் வேறு நபர்களுடன் இணைந்து இந்த வேலையை மேற்கொள்வதற்கு உள்ளோம்'' என அவர் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.

காஷாய் அமெரிக்காவுக்கும், தலிபானுக்கு ஆதரவு கொடுக்கும் Pashtun இனத்தின் தலைவர்களுக்கும் இடையேயும் ஊசலாடுகிறார். 1994 ல் தலிபான் இயங்க ஆரம்பிக்கையில் காஷாய் அவர்களுக்கு நிதியும், ஆயுதமும் கொடுத்து உதவி வந்தார். 1996 ல் தலிபானால் அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பொறுப்பான பதவியை மேலும் வழங்கப்பட்டது. பின்னர் அவருடைய தந்தை கொலை செய்யப்பட்டதையடுத்து, அவருடைய குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 1999 ல் அவர் தலிபான் தலமைக்கு எதிராக திரும்பினார்.

காண்டகாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் வெளிப்பாடு ஒரு தெளிவில்லாமலே உள்ளது. காஷாய் திடீரென றும்ஸ்வெல்டின் கட்டளைக்கு பதிலளிக்கவிரும்பி ''கட்டாயமாக நான் அவரை [Omar] சிறைப் பிடிக்க வேண்டும், நான் அவருக்கு பயங்கரவாதத்தை கைவிடுவதற்கான போதிய அவகாசத்தை கொடுத்துள்ளேன், ஆனால் அதற்கான நேரம் இப்போ காலாவதியாகிவிட்டது'' என அறிவித்தார். அதே சமயம், தலிபான் போராளிகள் முல்லா ஓமாருடன் அந்நகரத்தை விட்டே ஓடியிருக்கலாம் போலிருக்கின்றது. இதன் மூலம் காஷாய் இப்போது பிரச்சனையிலிருந்து தப்ப வசதியாகியது.

இனங்களுக்கு இடையேயான போட்டி

காண்டகாரில் நடைபெற்ற சம்பவம் காஷாய் அரசாங்கத்தின் அரசியல் முரண்பாடுகளின் ஒரு வெளிப்பாடாகும். ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தமது செல்வாக்குக்கு உட்பட்ட நிர்வாகத்தை அமைப்பதற்கான உடன்படிக்கையை ஆப்கானிஸ்தான் மீது திணிக்கின்றனர். இரண்டு சகாப்தங்களாக ஏற்பட்ட யுத்தத்திற்கு பின்னால், நாடு இன முரண்பாடுகளுக்குள்ளால் பிளவுண்டு போய் உள்ளது. மதவாத மற்றும் பழங்குடிவாசிகளின் தேசபக்தி போன்றவற்றால் அரசாங்கம் அதன் ஆரம்பம் முதலே அச்சுறுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு புதிய அமைச்சரும் காஷாய் போன்று ஒரேமாதிரியான நெருக்கடிகளுக்கே முகம் கொடுக்கின்றனர். இவர்கள் பெரிய சக்திகளின் உதவிகளை பேணிக் கொள்ளும் அதேசமயம் அவர்கள் தம்முடைய வழமையான உள்நாட்டு சட்ட விதிமுறைகளை முன்னேற்றுவதிலேயே ஆர்வமாய் உள்ளனர்.

இந்த தற்காலிக நிர்வாகம், ''ஓர் பரந்தளவிலான, பெண்களின் தனித்துவத்தை பேணுதல், மற்றும் பல்வேறுபட்ட இனங்களையும் இதில் பங்கேற்று ஒரு முழுமையான அரசாங்கம்'' ஒன்றை அமைத்துக் கொள்வதற்கான ஒரு முதலாவது படியாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துக் கொண்டது. இந்த அழகான, தந்திரோபாய வார்த்தைஜாலம் இந்நிர்வாகத்தின் பலமற்ற அடித்தளத்தை மூடிமறைப்பதாகும். அது முக்கியமாக இரண்டு அடித்தளத்தில் தங்கியுள்ளது. முதலாவதாக தளபதிகளிடமும், Tajiks, Uzbeks, Hazaras போன்ற இனகுழுக்களிடமும் ஆதரவு பெற்ற இராணுவக்குழுக்களை கொண்ட உறுதியற்ற கூட்டான வடக்கு கூட்டணியிலும், இரண்டாவதாக ரோம் நகரில் உள்ள பழைய அரசர் மற்றும் அவருடைய அடிவருடிகளிலுமாகும். 87 வயது நிரம்பிய அரசரான Zahir Shah, இவர் 1973 ல் இருந்து வெளிநாட்டில் வசித்து வருகிறார், Pashtuns எனும் இனத்தினரிடமிருந்தும், விசேடமாக மிகுந்த செல்வாக்கை கொண்டுள்ள Durrani இனக் குழுவிடமிருந்தும் இவருக்கு ஆதரவு கிடைத்து வருகின்றது.

வடக்கு கூட்டணியின் போராளிகள் பெரும்பாலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளையும், காபூலையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது. இது அரசவம்சத்திற்கு உயர் பதவிகளை விட்டுக்கொடுத்துள்ளது. இதற்கு பதிலாக 30 அரச அமைச்சர் பதவிகளில் 17ஐ இவர்கள் பெற்றுள்ளனர், அவற்றில் பிரதானமாக வெளிநாட்டு விடயங்கள், மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு விடயங்கள் என்பனவும் அடங்கும். அரசவம்சமான (Rome) ரோம் குழுவினர் 9 பதவிகளையும், மிகுதி 4ஐ Bonn இற்கு பிரதிநிதிகளாக வந்திருக்கும் இரு பிரிவுகளான பாக்கிஸ்தான் ஆதரவளிக்கும் Peshawar குழுவுக்கும் மற்றும், ஈரான் ஆதரவளிக்கும் Cyprus குழுவுக்கும் கொடுத்துள்ளது.

Bonn ல் நடைபெற்ற மாநாடு மூலம் ஆப்கானிஸ்தான் பிரிவுகள் தமக்கிடையேயும், மற்றும் ஏனைய பிரிவினர்களுக்கு இடையேயும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஒரு பக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கூட்டணியின் தலவரான Rabbani ஐ ஆப்கானிஸ்தான் அரசின் தலைவராக நியமனம் செய்வதென ஊர்ஜிதப்படுத்தியது. இறுதியாக எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த அவசர உடன்பாட்டின் ''ஆளமான மதிப்புயர்வு'' யாதெனில், றாபானி ''அவர் தன்னுடைய பதவியை மாற்றிக் கொள்ள தயாராக உள்ளார்'', ஆனால் புதிய அரசாங்கம் அவருக்கு ஒரு பதவியையும் வழங்காது இருக்கிறது என்பதாகும். மூன்று இளம் பேர்வழிகளான -Abdullah Abdullah, Younus Qanooni மற்றும் Mohammad Qaseem Fahim போன்றோர் வெளிநாட்டு விவகார, உள்நாட்டு விவகார, பாதுகாப்பு போன்ற மிக உயர்ந்த பதவிகளுக்கு தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.

1990 களின் நடுப்பகுதியில் இருந்து றாபானி ரஷ்யாவுடனும், ஈரானுடனும் நெருக்கமான உறவுகளை வளர்த்து வந்தார். இவ்விரு நாடுகளும் வடக்கு கூட்டுக்கு உதவுவதில் முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்தன. அமெரிக்காவின் கணிப்பின்படி இப் புதிய முகங்கள் அதனது நலன்களுக்காக அதிக விசுவாசமாக இருப்பார்கள் என்பதையிட்டு சந்தேகம் கிடையாது. இம் மூவரும் செப்டம்பர் 9 ல் இடம் பெற்ற ஒரு தற்கொலை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வடக்கு கூட்டணியின் முன்னைய இராணுவத் தளபதியான Ahmad Shah Masud உடன் எப்பொழுதும் மிக நெருக்கமாக இருந்தவர்கள் ஆவர். வாஹிம், இவர் மாசூத்திற்குப் பின்னால் வடக்கு கூட்டணியின் பாதுகாப்புக்கான தலைமைப் பதவியை வகிக்கிறார். மேலும் இவர் அமெரிக்க இராணுவத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் நெருக்கமாக இணைந்து வேலை செய்கிறார்.

ஒரு சில தகவல்களின்படி, றாபானி ஒரு பக்கமாக அமைதியாக ஒதுங்கிக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. புதிய நிர்வாகத்தில் இவருடைய நியமனம் Abdullah Abdullah, Younus Qanooni போன்ற போட்டியாளர்களால் வெற்றி கொள்ளப்பட்டு விட்டன. இருப்பினும் இவருடைய கோரிக்கை, Bonn மாநாட்டில் Qanooni தலமையின் கீழ் வடக்கு கூட்டணியின் பிரதிநிதிகளால் மிக இலகுவாக புறக்கணிக்கப்பட்டு, அவ் இருவருடைய பெயர்களும்தான் மீண்டும் அங்கே புகுத்தப்பட்டன. ஒரு பழமைவாத இஸ்லாமிய புத்திஜீவியான றாபானி ஐக்கிய நாடுகள் சபையின் இத் திட்டத்திற்கு அடிப்பையில் ஒரு முரண்பாடும் அற்றவர். அதே சமயம் அவர் இத்திட்டத்திற்கான எதிர்ப்பு, மற்றும் திருப்தியின்மை போன்றவற்றுக்காக ஒரு கூட்டை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

வடக்கு கூட்டணியின் ஒரு பகுதியான உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த படைத்தளபதியான Rashid Dostum இந்த அரசாங்கத்தை ''பகிஷ்கரிப்பதாக'' வியாழனன்று அறிவித்தார். இந்த பேச்சுவார்தை மூலம் அவருடைய பிரிவுக்கு கொடுக்கப்பட்ட வெளிநாட்டு விவகாரம் சம்பந்தமான பதவி இல்லாது போய்விட்டதாக அவர் மேலும் ''இது எம்மை அவமானப்படுத்துவதாக உள்ளது'' என குற்றம்சாட்டினார். அவருடைய Jombesh-e-Melli எனும் பிரிவுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விவசாயம், சுரங்கத் தொழில் மற்றும் தொழிற்சாலை போன்ற விடயங்களை அடுத்தே டொஸ்ரூம் இவ்வாறு கூறினார். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஆப்கானிஸ்தானுடைய எண்ணையும், எரிபொருளும் உள்ள அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வடக்கு கூட்டின் பகுதிக்குள் பிரவேசிப்பதை தான் மறுப்பதாக அவர் எச்சரிக்கை செய்தார்.

வடக்கு கூட்டின் நிதி அமைச்சரான Wahidullah Sabawoon, இவரும் இந்த உடன்படிக்கை, அவருடைய Hizb-e-Islami கட்சிக்கு எந்தவொரு நியமனத்தையும் கொடுக்கவில்லை என தாக்குதல் செய்தார். அவர் இந்த உடன்படிக்கையை இதற்கான பேச்சுவார்த்தைக் குழு காபூலுக்கு திரும்பி வந்ததும் மறுபடி திருத்தி எழுதுவதற்கு இருப்பதாக தெரிவித்தார். நிதி விடயங்களுக்கான பதவி முன்னாள் உலக வங்கியில் ஒரு அதிகாரியாக இருந்த அரச வம்சத்தைச் சேர்ந்த ஒரு பிரிவின் அங்கத்தவரான Hedayat Amin Arsala என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய இரு சிறிய வெளிநாட்டு குழுக்களும் இந்த உடன்படிக்கையில் தமது அதிருப்தியைக் காட்டினர். Peshawar குழுவின் தலைவரான அகமெத் கைலானி, மந்திரிமார்களுக்கான இந்த தெரிவானது ஒரு ''நியாயமற்றது'' எனத் தெரிவித்தார். எவ்வாறெனினும், அவர் loya jirga மறுபடியும் கூடும் வரையிலும் தான் அதற்காக காத்திருப்பதாக மேலும் தெரிவித்தார். ஈரானில் உள்ள ஆப்கானிஸ்தானியர்களின் சைப்பிரஸ் குழுவுடன் தொடர்புள்ள Gulbuddin Hekmatyar மிகவும் ஆக்ரோசத்துடன் இந்த உடன்படிக்கையை நிர்பந்தப்படுத்துவதற்காக அமெரிக்காவை குற்றம் சுமத்தினார். ''அதிகாரத்துவத்துக்கான சட்ட, சம்பிரதாயங்கள் தொடர்பான ஐயுறவு இம் மாநாட்டில் மேலோங்குகின்றன '' என்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கெஹக்மாற்யாவால் வழி நடத்தப்பட்ட Hizb-e-Islami எனும் ஒரு முன்னைய குழு, இது 1980 களில் CIA யால் நிதி வழங்கப்பட்டு பெருமளவிலான செல்வாக்கை அனுபவித்தது. நஜிபுல்லாவின் வீழ்ச்சி 1992 ல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கெஹக்மாற்யாவுக்கும், றாபானிக்கும் இடையேயான குரோதம் வாய்ந்த யுத்தத்தின் விளைவாக காபூலில் ஆயிரக்க கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டும், தலைநகரத்தின் பெரும்பாலான இடங்களும் அழித்தொழிக்கப்பட்டன. அனேகமாக புதிய நிர்வாகத்தில் உள்ள சகல குழுக்களன் அடித்தளமும், 1990 களில் பலவிதமான தனிப்பட்ட கோஷ்டி ஆட்சிகளுக்கு இடையே நாடு பிளவுண்டு போன, அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட கம்யூனிச விரோத முஜைகிடீன் குழுவினுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு இந்த போட்டிக் கட்சிகள் தமது விமர்சனங்களை இந்த Bonn உடன்படிக்கையில் தெரிவித்தார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். புதிய நிர்வாகம் டிசம்பர் 22 முதல் பதவியேற்கவுள்ளது. இவர்கள் இங்கே ஆட்சியை பொறுப்பேற்கும் சமயத்தில், நாடு பொருளாதாரத்தால் அழிந்து போய், அதன் விளைவான எண்ணிக்கையின் படி ஏழு மில்லியன் மக்களுக்கு போதுமான உணவு, இருப்பிடம் மற்றும் உடை எதுவுமே கிடைக்காமல் உள்ளன. ஏற்கனவே அவர்களுடைய பழைய அரசியல் முறைகளான, போட்டித்தளபதிகளும், இராணுவக்குழுக்களும் மீண்டும் தமது இராச்சியங்களை புனரமைப்பதற்கான தோற்றங்களே மேலெழும்புகின்றன. வாஷிங்டனின் வழிகாட்டலுடன் ஐக்கிய நாடுகள் சபை தனக்கான ஒரு அரசாங்கத்தை திணிப்பதற்கு முனைகிறது. இதை நடைமுறைப்படுத்த அது இரு முறைகேடான வழிகளை கையாள்கிறது. அவையாவன, லஞ்சம் முறையிலான பொருளாதார உதவியும், அது தோல்வியடையும் பட்சத்தில் மேலதிக இராணுவத் தாக்குதல் நடவடிக்கையினூடு பயமுறுத்தல் செய்வதுமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved