World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காBush's stem cell decision: an attack on medical science and democratic rights ஜோர்ஜ் புஷ்ஷின் பரம்பரைக் கலம் பற்றிய முடிவு: மருத்துவ அறிவியல் மீதும் ஜனநாயக உரிமைகளின் மீதுமான தாக்குதல் By Patrick Martin ஜோர்ஜ் புஷ் ஆகஸ்டு 9 ஆம் தேதி அன்று அமெரிக்கா முழுவதும் ஒளிபரப்பான ஒரு தொலைக் காட்சி உரையில், முதிரா நிலையிலுள்ள கருவின் பரம்பரைக் கல (Stem cell) ஆராய்ச்சி வகைகளுக்கான அமெரிக்க அரசின் நிதி உதவி இனிமேல் தடை செய்யப்படும் என அறிவித்தார். மருத்துவ அறிவியல் மீதான இந்த பிற்போக்கான தாக்குதல் குடியரசுக் கட்சியின் வலதுசாரி அணியைச் சார்ந்தவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும். புஷ்ஷின் இந்த செயல் ஜனநாயக உரிமைகளின் மேல் நடத்தப்படும் ஒரு நேரடித் தாக்குதலாகும். அரசியலமைப்பு மதத்தையும் அரசையும் தனித்தனியாகப் பிரிக்கிறது. இந்த முடிவு மேற்படி பிரிவை அப்பட்டமாக மீறுகின்றது. சில கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டெண்ட் மத அடிப்படைவாதக் குழுக்களின் மதக் கண்ணோட்டங்களை நடுவண் அரசின் (Federal government) கொள்கையில் இணைப்பதாக இது அமைகின்றது. இந்த முடிவு ஒரு அழிவுகரமான பாதிப்பை சொல்லமுடியாதளவில், ஞாபகமறதி (Alzheimer) மற்றும் நரம்பு அமைப்பின் இயங்காமை (Parkinson) நோய்களினால் வருந்திக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது ஏற்படுத்தும். அத்தோடு முள்ளந்தண்டில் காயங்களினால் ஏற்படும் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர். இந்த பரம்பரைக் கல ஆய்வு மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு நிவாரணமும் அல்லது சில சமயங்களில் முழுமையாக குணப்படுத்துவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ள சிகிச்சை வழிமுறைகளைப் பற்றிய தேடலாக உள்ளது. இந்த முடிவு குடியரசுக்கட்சி மீதும் அமெரிக்க அரசியல் அமைப்பு முழுவதும் மீதும் கிறிஸ்தவ வலதுசாரிகளின் அபரிமிதமான ஆதிக்கத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இதனை அமெரிக்க மக்களுக்குள்ளே உள்ள இந்த மதவாத வலதுசாரிகளுக்கான குறுகிய ஆதரவுடன் ஒப்பிடுகையில் ஒப்பிட முடியாத அளவாகும். அமெரிக்க மக்களில் மிகப் பெரும்பாலோர் பரம்பரைக் கல ஆராய்சிக்கு நடுவண் அரசு நிதி உதவி அளிப்பதை ஆதரிக்கின்றனர். ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வும் வளமும் மருத்துவ விஞ்ஞானத்தின் முன்னேற்றமும் அரசியல் மற்றும் சமுதாய பிற்போக்குவாதிகளால் தடைப்பட்டுள்ளது. இவர்கள் ஈரானிய முல்லாக்கள் போன்று அமெரிக்க கிறித்தவ முல்லாக்கள் ஆக முயற்சி செய்கிறார்கள். புஷ் அறிவித்த கொள்கை மிகவும் மட்டுப்படுத்தப்படக் கூடியது. அவர் பரம்பரைக் கல ஆய்வுக்கான பணத்தை ஒரேயடியாக மறுப்பதைத் திணித்து இருக்க முடியும் --இந்நடவடிக்கை பெருவாரியான மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும். விஞ்ஞானிகள் மட்டுமல்லாது பாக்கின்சன்ஸ் மற்றும் ஜூவெனில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் வந்த அழுத்தத்தின் கீழ் புஷ் இருந்தார். அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினரும் புஷ்ஷை பரம்பரைக் கல ஆராய்ச்சிக்கு சிறிது பணம் கொடுத்து ஆதரவு நல்குமாறு வற்புறுத்தினர். பல வியாதிகளுக்கும் மரபியல் சூழல்களுக்கும் நிவாரணம் அளிக்கவும் வழிவகுக்கும் ஆய்வுகளுக்கான பச்சை விளக்காக அவரது முடிவை முன்வைக்க புஷ் முயற்சித்தபோதும், தற்போது உள்ள ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள பரம்பரைக் கல வரிசைகளை பயன்படுத்துதற்கான அமெரிக்க நடுவண் அரசின் நிதி உதவியை மட்டுப்படுத்துவதற்கான அவரது முடிவு முக்கியமான ஆய்வுகளை நெருக்கடிக்குள்ளாக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது. பரம்பரைக் கல ஆய்வை மேற்பார்வை செய்யும் மற்றும் எதிர்கால ஆராய்ச்சிக்கான கொள்கை ரீதியான பரிந்துரைகளை செய்யும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் குழு ஒன்றை புஷ் அமைத்தார். சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பழமைவாத உயிரியல் நீதியியலாளர் (Bioethicist) லியோன் காஸ் என்பவரை இதன் தலைவராக அறிவித்தார். காஸ், பரம்பரைக் கல ஆய்வை மட்டுமல்ல பரம்பரைக் கலங்களை உறிஞ்சி எடுப்பதற்கான கருக்களின் மூலமான விட்ரோ கருவாக்கம் (Vitro Fertilization) எனப்படுவதையும் எதிர்க்கிறார். புஷ் 60க்கும் மேற்பட்ட பரம்பரைக் கலங்களின் அணிகள் ஆய்வுக்கு இருப்பதாக கூறுவதை ஒருவர் ஏற்றுக் கொண்டால் --இக் குற்றச்சாட்டு இந்த துறையில் உள்ள பல விஞ்ஞானிகளால் சவால் செய்யப்படுகின்றது, அவர்கள் இதனை மொத்த மிகைப்படுத்தல் என மறுக்கின்றனர்-- ஆய்வின் தேவையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகச் சிறியது என்கின்றனர். அமெரிக்க தேசிய சுகாதார கழகம் வரையறை செய்துள்ள குறைந்த பட்ச தரக்கட்டுப்பாடுகளுக்குள் இந்த பரம்பரைக் கல அணிகள் பல அடங்கவில்லை. சில மிகவும் பழமையானவை. இவை இனவிருத்தி செய்யக் கூடிய ஆற்றல் இல்லாது உள்ளன. மற்றவை உயிரியல் தொழில் நுட்ப கம்பெனிகளின் சொந்த சொத்தாகும். இவற்றை அவை ஆய்வுக்காக விடுவிக்கப்போவதில்லை. மற்றும் சில வெளிநாடுகளில் அபிவிருத்தி செய்யப்பட்டதால் அமெரிக்க விஞ்ஞானிகளுக்குக் கிடைக்காது. ஆய்வுத்துறையின் சிக்கலான நிலையின் காரணமாகவும் மற்றும் பரந்த அளவிலான மனித உயிர் வகைகளை உண்மையாய் பிரதிபலிக்கும் மரபியல் வேற்றுமைகளுக்கான தேவையை எடுத்துக் கொண்டால் 60 பரம்பரைக் கல அணிகள் கண்டிப்பாக போதாது. உலகில் இன்று 600 கோடி மக்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் 1,00,000 மரபணுக்களின் விசித்திரமான சேர்க்கையைக் கொண்ட மரபணுத் தொகுதியை கொண்டுள்ளனர். புஷ்ஷின் அறுபது வகைகளை ஒப்பு நோக்குகையில், அமெரிக்காவில் 1,00,000 உறைபனி கரு முட்டைகள் புதிய பரம்பரைக் கல ஆய்வுக்கு தயாராக உள்ளன. விஞ்ஞான ரீதியான கட்டுப்பாடு இன்னமும் ஆரம்ப நிலையில் இருக்கையில், ஏற்கனவே உள்ள பரம்பரைக் கல அணிகளுக்கு பரம்பரைக் கல ஆய்வினை கட்டுப்படுத்துவது முட்டாள்தனமாகும். அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலின் கண்டுபிடித்தபோது அப்போதிருந்த காளான் வகைகளுக்குள் மட்டும் ஆய்வைக் கட்டுப்படுத்தி இருந்தால் எந்தளவிற்கு அந்த நோய் எதிர்ப்பு மருந்து அபிவிருத்தி முன்னேறி இருக்கும்? கலிலியோவுக்குப் பிறகு எந்த புதிய தொலைநோக்கியையும், கத்தோலிக்க சபை தடை செய்திருந்தால் வானியல் ஆய்வு எப்படி மேம்பட்டிருக்கும்? அமெரிக்க பத்திரிகைகள் பெரும்பாலும் புஷ்ஷின் கொள்கையை நடு நிலைமை என்றும் எல்லாக் கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து செய்யப்பட்ட நீதியான முடிவு என்றும் முன்வைக்கின்றன. ஜனநாயக உரிமைகளையோ விஞ்ஞான சுதந்திரத்தையோ பற்றிய செய்தி ஊடகங்களின் வேறுபாட்டை விட குறைவாகவே புஷ்ஷின் அறிவிப்பைப் பற்றிக் கூறுகிறது. புஷ்ஷின் உரை பல வகைகளில் அவருடைய கோழைத் தனத்தையும், குறைபாடுள்ள தன்மையையும் காட்டுகிறது. அமெரிக்க ஜனாதிபதி "அடிப்படையான வினாக்கள்" என்று அவர் அழைத்த கேள்வியை முன்வைத்தார். முக்கியமாக கரு மனித உயிராக கருதப்பட வேண்டுமா என்றார். ஆனால் அவர் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் சொல்லத் தவறி விட்டார். ஏனென்றால் பெரும்பான்மையான அமெரிக்க மக்களால் எதிர்க்கப்படும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு புஷ் ஆளாக நேரும் என்பதற்காக அவ்வாறு செய்தார். உண்மையில், அவரது உரையின் முக்கால் பகுதி அநேகமாக பரம்பரைக் கல ஆராய்ச்சிக்கு அமெரிக்க நிதி உதவியை அங்கீகரிப்பதற்கான முன்னுரையாக சேவை செய்திருக்கக்கூடும். அமெரிக்க ஜனாதிபதியின் உரை நீதி போதனைகளையும் "வாழ்க்கையின் கலாச்சாரத்திற்கு" அவரது அர்ப்பணிப்பையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்திருந்தது. இது டெக்சாஸ் மாநிலத்தில் ஆளுநராக இருந்தபொழுது 143 பேருக்கு, பெரும்பாலும் ஏழைகளாகவோ அல்லது சிறுபான்மையினராகவோ இருந்தவர்களுக்குக்கு மரண தண்டனை விதித்து, மரண தண்டனை நிறைவேற்றும் அறைக்கு அனுப்பிய மனிதனிடமிருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அவர் படைத்தளபதி என்ற முறையில் ஈராக்கை முற்றுகை இட்டு, கிட்டத்தட்ட பாரசீக வளைகுடாப் போர் முடிந்ததிலிருந்து 5,00,000 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்தார். வாஷிங்டன் போஸ்ட் டின் தொலைக்காட்சி விமர்சகர் டொம் ஷேல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்: அமெரிக்க ஜனாதிபதி நேற்றிரவு தொலைக்காட்சியில் தோன்றி மனித கரு பற்றிய தனது முடிவை வெளியிட்டார். அவர் மிகவும் தன்னம்பிக்கையுடனும் அமைதியாகவும் காணப்பட்டார். ஆனால் அவரது கண்களில் ஏதோ ஒன்று ஆழமாய் வட்டமிட்டுக் கொண்டிருந்தது, ஒருவேளை அச்சமடைவது கூட இருக்கலாம்." ஷேல் மேலும் கூறுகிறார்: புஷ்ஷின் உரை 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னோக்கி மக்கள் பார்க்கையில், கரு ஆராய்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையிலும் பெரும்பாலான மக்களின் பயங்கர வியாதிகளையும் குணப்படுத்துமாறு அமைந்திருந்த காலத்தின் ஏதோ புதிரான விடயம் போல் இருந்தது". ஆயினும், அமெரிக்க செய்தி ஊடகத்தில் இந்த விதமான விமர்சனங்கள் மிகவும் குறைவு. அவை பெரும்பாலும் புஷ்ஷின் உரைக்கு புகழாரம் சூட்டின. தெளிவாகவே கவனமாக கணிப்பிட்டு மோசமான சூத்திரத்தையும் வெளிப்படையான பதட்டத்தையும் குழப்புவதாக இருந்தது. புஷ் மத ஆணைகளை வழங்குவதற்காக அல்ல அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறப்படும் அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு பொருத்தமில்லா வகையில் நீதி போதனை செய்யும் உயர் மத குருவாகக் காட்டப்படுவது பற்றி பத்திரிகை செய்திப் படப்பிடிப்பில் எந்த விதமான கருத்தும் இல்லை. அதற்கு சமமாகவே ஜனநாயக கட்சியின் தாராண்மைப் பிரிவினரிடம் இருந்து விமர்சனமற்ற பதில் வந்தது. ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் செனட்டர் எட்வர்ட் கென்னடி புஷ்ஷின் முடிவை ஒரு "முக்கியமான முன்னேற்றப் படி" என்று விவரித்தார். அதேசமயம் அது "போதுமான அளவு போகவில்லை" என்று கென்னடி குறைப்பட்டுக் கொண்டார். பரம்பரைக் கல ஆய்வின் செயற்பரப்பை நீட்டிக்கும் சட்டத்தைக் கையாளும் குழுவின் செனட்டர் டொம் ஹார்க்கின் மற்றும் அமெரிக்க பாராளுமன்ற பெரும்பான்மை தலைவர் டொம் டாஷ்லே ஆகியோரிடமிருந்தும் இதே போன்ற விமர்சனங்கள் வந்தன. இருப்பினும், அறிவியல் உலகமும் பாக்கின்சன் நோய்வாய்ப்பட்டவர்களும் சிறுவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் முள்ளந்தண்டில் பாதிக்கப்பட்டவர்களும் இது குறித்து அதிகமாக வருந்துகின்றனர். நோபல் பரிசு பெற்ற அறிஞர் டாக்டர் ஹரோல்ட் வர்மாஸ், தேசிய சுகாதாரக் கழகத்தின் முன்னாள் தலைவர் இவ்வாறு கூறுகிறார்: மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் கல அணிகளை ஆய்வுக்கு கிடைக்குமாறு செய்வது "மிக மோசமான மற்றும் மிக கொடுமையான முதலீடு" என்கிறார். இப்போதுள்ள பரம்பரைக் கல அணிகளில் இருந்து மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டாலும் கூட, அதனால் பலரும் பயனடையமாட்டார்கள் ஏனெனில் அவருடைய உடல்கள் பதித்து வைக்கப்படும் இந்த கலங்களை ஏற்றுக் கொள்ளாது போகக்கூடும். ஒரு சிறந்த விரிவான ஆய்வுத் திட்டமே எல்லோருக்கும் சிகிச்சை முறை கிடைக்க வழி வகுக்கும். பென்சில்வேனியா பல்கலைக் கழக இயக்குநர் உயிரியல் நீதியியலாளர் ஆர்தர் எல். கேப்ளான் புஷ்ஷினுடைய அறிக்கையை நிராகரித்தார். "எப்பொழுது சமரசம் சமரசம் இல்லாது போகும்?" என்று அவர் கேட்டார். இவர் கூறுவதாவது "ஜனாதிபதி பரம்பரைக் கல விவகாரத்தில் ஒரு சமரச உடன்படிக்கையை அறிவித்தபொழுது உண்மையில் அந்தப் பிரச்சினையின் ஒரு பக்க சார்பை எடுத்தார்...... பார்க்கப் போனால் இந்த கல அணிகளுக்கு ஆய்வை மட்டுப்படுத்தியதன் மூலம் அமெரிக்க நடுவண் அரசின் நிதி உதவியை மனிதக் கரு பரம்பரைக் கல ஆராய்ச்சிக்கு தடைப்படுத்தி விட்டார். கேப்லான் எடுத்துக் காட்டுவதாவது என்னவென்றால், இப்பொழுது அமெரிக்க இனவிருத்தி மருத்துவ மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு இலட்சம் கருக்கள் உருத்திரிந்துள்ளன மற்றும் அவை ஐந்தாண்டுகளுக்கு மேலாக உறை நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறவற்றை கருப்பையில் பதிப்பது மிகவும் விரும்பத்தகாதது மற்றும் சிலவகைகளில் நீதிநெறிக்கு முரணானதுமாகும். அவர் தொடர்கிறார்: "உருச்சிதைந்த குழந்தைகள், முள்ளந்தண்டு காயத்தினால் சக்கர நாற்காலியில் பிணைக்கப்பட்டிருப்பவர்கள், மூளையில் கொடிய காயங்கள் கொண்டோருக்கு மற்றும், பக்கவாதத்தில் விழுந்தோருக்கு மற்றும் பார்க்கின்சனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சமமான இந்த கருக்கள் நீதிநெறியில் மதிப்பு மிக்கவை என்று ஜனாதிபதி அறிவிக்கிறார். அவை மதிப்பு மிக்கவை அல்ல." புஷ்ஷின் பிரபலமான பரம்பரைக் கலம் பற்றிய கடந்த இரண்டு மாதங்களான இந்த "சிந்தனை" சிடு மூஞ்சித்தனமான நடிப்பிற்கும் சற்று மிகையானதாகும். அது மத அடிப்படைவாதிகளுக்கு அவரது நிர்வாகம் அடிபணிதலையும் குடியரசுக் கட்சிக்கு உள்ளே ஆன உட்பூசல்களையும் பிரதிபலிக்கின்றது. இந்த பரம்பரைக் கல விஷயத்தில், வெள்ளை மாளிகை பணியாளர்கள் மத்தியில் அதே போல காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினர் மத்தியில் ஆழமான வேறுபாடுகள் உள்ளன. இந்த கருத்து வேற்றுமைகள் புஷ்ஷின் தீர்மானத்திற்கு கிடைத்த எதிர்ப்பில் பிரதிபலிக்கின்றன. தேசிய வாழ்வுரிமைக் குழு மற்றும் ஜெர்ரி பால்வெல், பாட் றொபர்ட்சன் மற்றும் தேம்ஸ் டாப்சன் போன்ற மத அடிப்படைவாத விசுவாசிகளும் மட்டுப்படுத்தப்பட்ட நடுவண் அரசின் நிதி உதவியை ஆதரித்தனர். ஆனால் புஷ்ஷின் தொலைக் காட்சி உரைக்குப் பின்னர் அடுத்த நாள், அதற்கு நேர் எதிர்மறைக் கருத்து உடையவர்களான கேரி பாயர், பிளிஸ் ச்லாப்லி மற்றும் சார்லஸ் கோல்சன் ஆகியோர் உள்ளடங்கிய அதிவலதுசாரிகளின் அணி, வாஷிங்டனில் உள்ள தேசிய பத்திரிகையாளர் சங்கத்தில் புஷ்ஷின் அறிக்கையைக் கண்டித்தது மட்டும் அல்லாமல் பரம்பரைக் கல ஆரய்ச்சியை நாஜிக்களின் மருத்துவ ஆய்வுகளுடன் ஒப்பிட்டனர். கத்தோலிக்கப் பேராயர்கள் மாநாடு இதே போன்று, கையளவே அளவிலான கலங்களாக அது இருக்கும்பொழுது மட்டும் தவிர, கரு உற்பத்தியான நேரத்திலிருந்து அதை குழந்தை அல்லது வளர்ந்தவருக்கான அதே உரிமைகளைக் கொண்ட முழு மனிதனாக கருத வேண்டும் என்று தனது நிலையை வலியுறுத்தி, பைத்தியக்காரத்தனத்தை வெளிப்படுத்தியது. புஷ்ஷின் உரை விஞ்ஞானத்தை அவமதிப்பதாகவும் அதே நேரத்தில் மதவாதிகளை ஆதரிப்பதாகவும்
'ஒரு விடயத்தை தீர்க்காமல் சுற்றிச் சுற்றி பேசுவதாக' அமைந்தது. வார இறுதியில், அத்தகைய ஆராய்ச்சி நோயைக்
குணப்படுத்தும் முறைகளில் தீவிர முன்னேற்றத்தைக் கொண்டு வந்தாலும் கூட, அனுமதிக்கப்பட்ட 60 கல அணிகளுக்கு மேல்
பரம்பரைக் கல எண்ணிக்கை விரிவாக்கப்பட மாட்டாது என்று அனுமதிக்கும், திரும்பத்திரும்ப கொடுக்கும் உறுதிமொழிகளுடன்
அதன் வலதுசாரித் தனத்தை ஆதரிக்கும் முயற்சியில் வெள்ளை மாளிகை மேலும் ஈடுபட்டது. வெள்ளை மாளிகை அலுவலர்களின்
தலைவர் ஆண்ட்ரூ கார்ட், அமெரிக்க நிதி உதவியை தடைசெய்வதோடு மட்டுமல்லாமல், புதிதாகப் பெறப்படும்
பரம்பரைக் கலங்களைக் கொண்டு தனியார் நடத்தும் பரம்பரைக் கல ஆராய்ச்சி செய்வதை குற்றமாக்கும் சட்ட
மசோதாவை புஷ் ஆதரிப்பார் என்று கூறினார். |