World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : இலங்கைRightwing UNP wins general election in Sri Lanka இலங்கையின் பொதுத் தேர்தலில் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. By K. Ratnayake இலங்கையில் டிசம்பர் 5ம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஏழு வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குறுகிய பெரும்பான்மையை வென்று ஆட்சிக்கு வந்துள்ளது. யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிறு பிரதமராக பதவியேற்றதுடன் அவரது அமைச்சரவை புதன்கிழமை நியமனம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று ஆளும் பொதுஜன முன்னணியை (PA) விட்டு வெளியேறி அரசாங்கத்தை சிறுபான்மையாக்கியதோடு ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பேரிலான குறிப்பிடத்தக்க வெளியேற்றங்களுக்கும் முகம்கொடுத்ததை அடுத்து, கடந்த தேர்தல் நடைபெற்று 14 மாதங்களே பூர்த்தியாகியிருந்த நிலையில் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுஜன முன்னணி, யூ.என்.பி. இரண்டும் ஒரு தொடர்ச்சியான அரசியல் ஸ்திரமின்மைக்கு முடிவுகட்டுவதன் பேரில், ஸ்திரமான பெரும்பான்மைக்காக 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 120 ஆசனங்களைக் கைப்பற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. யூ.என்.பி. அரசாங்கம் மீதான ஆழமான வெறுப்புக்கு மத்தியிலும், பொதுஜன முன்னணி ஓடுகாலிகளையும், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசையும் (SLMC) மற்றும் பெரும்தோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), மலையக மக்கள் முன்னணி (UPF) ஆகியவற்றையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய தேசிய முன்னணியின் (Unitted National Front-UNF) ஒரு பாகமாக மாத்திரமே 109 ஆசனங்களை வென்றது. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியின் பதாகையின் கீழ் வேட்பாளர்களை நிறுத்திய அதேவேளை, சிறுபான்மை முஸ்லீம்கள் கணிசமானளவு வாழும் கிழக்கு மாகாணத்தில் தனது கட்சியின் பெயரில் வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிட்டதன் மூலம் 5 ஆசனங்களையும் வென்றது. இதனடிப்படையில் யூ.என்.பி. யின் கூட்டமைப்புக்கு பாராளுமன்றத்தில் 114 ஆசனங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் 15 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ள 4 தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் கிடைக்கும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் யூ.என்.பி. பெற்ற குறுகிய பாராளுமன்ற பெரும்பான்மைக்கு மாறாக, ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவினதும் அவரது பொதுஜன முன்னணி அரசாங்கத்தினதும் ஆழமான சீரழிவினை பிரதிபலிக்கின்றது. இலங்கை ஒரு சிக்கலான தேர்தல் முறையைக் கொண்டுள்ளது. 22 மாவட்டங்களில் இருந்து தெரிவாகும் 196 பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக, கட்சிகள் மொத்தமாக பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் மூலம் 29 பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்படுவர். பொதுஜன முன்னணியின் விகிதாசாரமானது அது முதலில் ஆட்சிக்கு வந்த 1994ல் 49 சதவீதமாகவும் 2000 ஆண்டுத் தேர்தலில் 45 சதவீதமாகவும் 2001ல் வெறும் 39 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு 13 மாவட்டங்களில் வெற்றிபெற்றிருந்த போதும் இம்முறை ஒரு மாவட்டத்தில் மாத்திரமே வெற்றிபெற்றது. பொதுஜன முன்னணிக்கான ஆதரவு யூ.என்.பி. தேசிய ரீதியிலும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலும் 11 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய வடமத்திய மாகாணத்தின் பொலனறுவை, அனுராதபுரம் மற்றும் தெற்கில் மாத்தறை, காலி போன்ற கிராமப்புற மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினரும் அவர்களின் சகாக்களான குண்டர்களும் ஆயிரக்கணக்கானவர்களை கொலைசெய்த 1990களின் முற்பகுதியில் கிராமப்புற இளைஞர்கள் மீது கொடூரமாக பாய்ந்து விழுந்தமைக்காக இன்னமும் யூ.என்.பி. யை கசப்புடன் நினைவு கூருகின்றார்கள். பொதுஜன முன்னணிக்கான ஆதரவு மத்திய மலையகப் பிரதேசத்திலும் பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் வாக்குகள் நுவரெலியாவில் 27 சதவீதத்தாலும் கேகாலையில் 8 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 3 மாவட்டங்களில் மட்டும் வெற்றிபெற்ற யூ.என்.பி. இந்தமுறை 17 தேர்தல் மாவட்டங்களில் பெரும்பான்மையை வென்றுள்ளது. அதன் மொத்த வாக்குகள் கடந்தாண்டின் 40.21 சதவீதத்திலிருந்து 45.62 சதவீதம் வரை 5 சத வீதத்தால் அதிகரித்துள்ளது. யூ.என்.பி. க்கான ஆதரவு நாட்டில் பெருந்தொகையான வாக்காளர்களைக் கொண்ட தலைநகர் கொழும்பில் 8 சத வீதத்தால் அதிகரித்துள்ளது. பரந்தளவில் தொழிலாள வர்க்கத்தை கொண்ட பிரிவுகளான பொரல்ல, கொழும்பு கிழக்கு, இரத்மலான போன்ற தொகுதிகளில் யூ,என்.பி. யின் வாக்குகள் கடந்தாண்டிலும் பார்க்க முறையே 10,8.8 சதவீதங்களால் அதிகரித்துள்ளது. யூ.என்.பி. நாட்டின் தொடர்ச்சியான உள்நாட்டுப் போருக்கு முடிவுகட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்து தமிழ் முஸ்லிம் வாக்காளர்களிடையே கணிசமான அளவு பெறுபேறுகளை ஈட்டியது. அதன் வாக்குகள் புத்தளத்தில் 9 சதவீதமாகவும் கேகாலையில் 7 சதவீதமாகவும் மாத்தளையில் 8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. கூட்டணியில் சேர்ந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தோட்டப் பிரதேசங்களில் தனது வாக்குகளை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் கொண்டுள்ளது. பதுளையில் 8 சதவீதமும் நுவரெலியாவில் 16 சதவீதமும் அதிகரித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை யூ.என்.பி. தலைவர் விக்கிரமசிங்க தனது கட்சியின் வெற்றி ''மக்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடு'' என புகழ்ந்துரைத்தார். எவ்வாறெனினும் தேர்தல் வெளிப்பாடுகள் பழமை பேணும் யூ.என்.பி. க்கு கிடைத்த நம்பிக்கை வாக்குகளல்ல. அதைவிட ஏழு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தும் யுத்தத்துக்கு முடிவுகட்ட இலாயக்கற்றுப்போன, உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள் மீது ஆழமான தாக்குதலை தொடுத்து வந்த பொதுஜன முன்னணி மீதான வெறுப்பின் வெளிப்பாடாகும். 1994ல் மக்கள் யூ.என்.பி. யின் 17 வருடகால ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்காக பொதுஜன முன்னணிக்கு வாக்களித்ததும் இதே காரணங்களுக்காகவாகும். இந்தக் கட்சி 1983ல் கொடூரமான யுத்தத்தை தொடக்கி வைத்ததோடு தொழில் வாழ்க்கைத் தரத்தை வெட்டிக் குறைக்க வழிவகுத்த திறந்த சந்தைக் கொள்கையையும் நடைமுறைக்கிட்டது. 2000ம் ஆண்டு தேர்தலிலும் கூட பொதுஜன முன்னணி, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தை வழங்கவும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தவும் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த பாராளுமன்றத்தில் கூடிய ஆசனங்கள் அவசியமாகியுள்ளது என வாக்காளர்களைக் கோரியது. எவ்வாறெனினும் குமாரதுங்க கடைசியாக இடம்பெற்ற தேர்தலில் சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியுடன் (JVP) கூட்டு சேர்ந்தார். பொதுஜன முன்னணி சமாதான பேச்சுவார்த்தைகளை முழுமையாக மேற்கொள்ளாத அதேவேளை, யூ.என்.பி. நாட்டைப் பிரிப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் இரகசிய உறவைக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியதன் மூலம் திட்டமிட்ட இனவாத உணர்வுகளுக்கு அழைப்பு விடுத்தார். யூ.என்.பி. தன் பங்குக்கு, தன்னைச் சமாதானத்துக்கான கட்சியாக பிரச்சாரம் செய்ததோடு விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தது. அவ்வாறு செய்ததன் மூலம், வெளிநாட்டு மூலதனத்தை கவர்வதற்கும் தளர்ச்சியுற்றுள்ள பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கவும் யுத்தம் ஒரு பிரதான தடை எனக் கருதும் பெரு வர்த்தகர்களில் மிகப் பலம்வாய்ந்த பிரிவினரின் நலன்களுக்காக பிரதிபலிக்கின்றது. தமிழ், முஸ்லீம் கட்சிகள் தனியார் ஊடகங்களுடன் ஒன்றிணைந்தபடி யூ.என்.பி. தலைவர் விக்கிரமசிங்கவைச் சூழ அணிதிரண்டதோடு அவரை ஓர் சமாதான விரும்பியாக சாயம் பூசின. சமாதானத்துக்கான விருப்பம் இப்போது இடம்பெற்றுள்ள தேர்லின் முடிவுகள் எதையாவது உணர்த்துமாயின், அது பெரும்பாலான வாக்காளர்களுக்கு 60,000 உயிர்களைப் பலிகொண்ட, ஜனத்தொகையில் பரந்த பிரிவினரில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்திய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியமாகியுள்ளது என்பதையாகும். வாக்காளர்கள் இந்த நம்பிக்கையை 2000 ஆண்டு தேர்தலில் குமாரதுங்கவிற்கு வழங்கி அவரை மீண்டும் ஆட்சியிலேற்றினர். தற்போது கணிசமான பகுதியினர் யூ.என்.பி. யின் பக்கம் சாய்ந்தது அவர்கள் இக்கட்சியின் மீது உயர்ந்த நம்பிக்கை கொண்டுள்ளதாலோ அல்லது அதனது முன்னைய வரலாற்றை மறந்து போனதாலோ அல்ல. மாறாக யூ.என்.பி. யை சமாதானத்துக்கான ஒரு வாய்ப்பாக கருதியதாலாகும். இப்போது வலதுசாரி யூ.என்.பி. ''சமாதானத்துக்கும், ஜனநாயகத்துக்கும் செழிப்புக்குமான'' கட்சியாக முன்நிற்பதற்கான பொறுப்பு, யுத்தத்தை மட்டுமல்லாமல் ஜனநாயக உரிமைகள் மீதும் வாழ்க்கை நிலைமைகள் மீதும் முன்னர் யூ.என்.பி. தொடுத்த தாக்குதல்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்த பொதுஜன முன்னணியையே சாரும். 1994ல் பொதுஜன முன்னணிக்கு லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), கம்யூனிஸ்ட் கட்சி (CP) , நவ சமசமாஜக் கட்சி (NSSP), மற்றும் ராவய, யுக்திய குழுக்கள் உட்பட்ட ''இடதுசாரி'' மற்றும் தீவிரவாத கட்சிகளதும் அமைப்புக்களதும் ஆதரவுடன் தன்னை ஒரு ''இடது சாரியாகவும்'', ''சோசலிஸ்டாகவும்'' கூட பிரகடனப்படுத்திக்கொள்ள முடிந்தது. கடந்த காலத்தில் தொழிலாள வர்க்கப் பிரிவினரின் ஆதரவைப் பெற்றிருந்த பொதுஜன முன்னணியின் ஆரம்பகாலப் பங்காளிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் அவர்கள் பரந்தளவில் நிராகரித்துவிட்டார்கள். முன்னர் லங்காசமசமாஜக் கட்சியின் கோட்டையாக விளங்கிய காலிக்கு அண்மையில் உள்ள கிராமப்புற பகுதியில் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் பொதுஜன முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே - பெளத்த பிக்கு வெற்றி பெற்றுள்ளார். ல.ச.ச.க. இப்பகுதியில் பல வருடங்களாக தமது சொந்தப் பெயரில் போட்டியிடவில்லை. கம்யூனிஸ்ட்கட்சி தமது இரண்டு பாராளுமன்ற ஆசனங்களையும் இழந்துவிட்டது. இந்த இரண்டு கட்சிகளும் வெறும் அதிகாரத்துவ எலும்புக்கூடுகளே தவிர வேறொன்றுமல்ல. இந்த உண்மையை அண்மையில் குமாரதுங்க பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களை தேசியப் பட்டியலில் இருந்து தெரிவு செய்யும்போது தனது அமைச்சர்களில் ஒருவராக இருந்த ல.ச.ச.க. தலைவர் பட்டி வீரக்கோனை தள்ளி வைக்க எடுத்த அவமதிப்பான தீர்மானம் கோடிட்டுக் காட்டியது. சந்தர்ப்பவாத நவசமசமாஜக் கட்சியைப் பொறுத்தவரை தமது ஆதரவை யூ.என்.பி.க்கு மாற்றியுள்ளது. இது 1994ல் யூ.என்.பி.யை நிராகரித்து ராவய பத்திரிகை யூ.என்.பி. ''யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தையும் செழிப்பையும் நிலைநாட்டப் போவதாக'' வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்தது. ராவய பத்திரிகை 1994ல் பொதுஜன முன்னணியைப் பற்றியும் இதையே கூறியது. இச் சகல ''இடதுசாரி'' தீவிரவாதக் குழுக்களுக்கும் உள்ள பொதுவான குணாம்சம், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக, தனது வர்க்க நலன்களுக்காக போராட அணிதிரள்வதற்கு எதிரான எதிர்ப்பாகும். இவர்களது காட்டிக்கொடுப்பு தேர்தலில் ஜே.வி.பி.க்கு குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வழிவகுத்தது. இந்தக்கட்சி இன்னுமொரு சிங்களத் தீவிரவாதக் கட்சியான சிங்கள உறுமயவும் பொதுஜன முன்னணியையும் வீழ்ச்சிகண்ட நிலையில் தனது மொத்த வாக்குகளை 6 சத வீதத்திலிருந்து 9 சதவீதம் வரையும், பாராளுமன்ற ஆசனங்களை 10லிருந்து 16 ஆகவும் அதிகரித்துக் கொண்டது.. சிங்கள உறுமய 2000 ஆண்டுத் தேர்தலில் பெற்ற வாக்குகளில் அரைவாசியையும், தனது ஒரே ஒரு பாராளுமன்ற ஆசனத்தையும் இழந்துள்ளது. ஜே.வி.பி. தனது வாக்குகளை சிங்கள மக்கள் செறிந்துவாழும் பகுதிகளான தெற்கு, மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் முறையே மூன்று சதவீதத்திற்கும் 5 சத வீதத்திற்கும் இடையே அதிகரித்துக் கொண்டுள்ளது. அது பிரதான கிராமப்புற பிரதேசங்களான அனுராதபுரம், ரத்தினபுரி, கம்பகா, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் மேலதிகமாக 5 ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் மேலதிகமாக ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது. யூ.என்.பி. க்கு எதிரான பொதுஜன முன்னணியின் பேரினவாதத் தாக்குதலையும் அது விடுதலைப் புலிகளுடன் உறவாடுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் ஆதரித்த ஜே.வி.பி. தன்னை சிங்கள நாட்டுப் பற்றின் உறுதியான வக்கீலாக காட்டிக் கொண்டது. அதேசமயம் அது தன்னை இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஒரு ''தீவிரவாத'' பதிலீடாகவும் முன்வைத்தது. இந்தக் கட்சி சிங்கள பேரினவாதத்தினதும் மா ஓ வாதத்தினதும் காஸ்ட்ரோ வாதத்தினதும் ஒரு கலவையாக 1960ல் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் 1983ல் யுத்தத்தின் வெடிப்புடன் ஒரு வெளிப்படையான பாசிச பண்பை எடுத்துக் கொண்டது. ஜே.வி.பி. கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் தொழிலாளர்களில் சில பிரிவினரை வென்றெடுப்பதற்கான ஆற்றல் பெற்றது. பழைய அதிகாரத்துவ தலைமைகளான லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மீது தொழிலாள வர்க்கத்துக்கு இருந்துகொண்டுள்ள நம்பிக்கையீனத்தின் பெறுபேறாகும். தமிழர்களும், முஸ்லிம்களும் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொதுஜன முன்னணிக்கு ஏற்பட்ட திருப்பம் பெரிதும் குறிப்பிடத் தக்கது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் (TULF) தமிழீழ விடுதலை இயக்கமும் (TELO) அகில இலங்கை தமிழ் காங்கிரசும் (ACTC) யூ.என்.பி. விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததை ஆதரித்த அதே வேளை வடக்குக் கிழக்கில் போட்டியிடுவதற்காக ஒரு தேர்தல் கூட்டணியையும்- தமிழ் தேசிய முன்னணியையும் (TNA) அமைத்தன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட தமிழ் தேசிய முன்னணி தனது வாக்குகளை யாழ் மாவட்டத்தில் 27 சதவீதமும் வன்னியில் 44 சதவீதமும் அமோகமாக அதிகரித்துக்கொண்ட அதேவேளை, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளில் பொதுஜன முன்னணியில் அங்கம் வகித்த ஒரேயொரு கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (EPDP) பாரிய தோல்வியை ஏற்படுத்தியது. ஈ.பி.டி.பி. தனது நான்கு ஆசனங்களில் இரண்டை இழந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்வதை பாதுகாப்புப்படை தடுக்காதிருந்தால் தமிழ் தேசிய முன்னணிக்கான வாக்குகள் மேலும் அதிகரித்திருக்கக் கூடும். ஏறத்தாள வன்னி மற்றும் மன்னார் பிரதேசத்தில் 27,000 வாக்காளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 30,000 வாக்காளர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என அரசாங்க உத்தியோகத்தர்கள் மதிப்பீடு செய்திருந்தனர். பாதுகாப்புப் படையினர் சோதனைச் சாவடிகளை ''பாதுகாப்புக் காரணங்களுக்காக'' மூடியதாக குறிப்பிடும்போது, பொதுஜன முன்னணி அரசாங்கத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தமது ஆதரவை அதிகரித்துக் கொள்வதில் இரு பிரதான கட்சிகளதும் சீரழிவின் பிரதிபலிப்பாக இந்தத் தேர்தல் அதிகளவில் வன்முறை நிறைந்ததாக இருந்தது. தேர்தல் தினத்தன்று கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பறவில் 10 முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் முன்னாள் பொஜன முன்னணி அமைச்சரான அனுருத்த ரத்வத்தையின் குண்டர்கள் என சந்தேகிக்கப்படுவோரால் படுகொலை செய்யப்பட்டனர். பிரச்சாரத்தின் போது 46 கொலைகள் உட்பட 2,247 தேர்தலோடு சம்பந்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த இரண்டு பிரதான கட்சிகளும் எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காத பட்சத்தில் ''மக்கள் தேர்தல் அமைப்பில் நம்பிக்கை இழந்து விடுவார்கள்'' என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க எச்சரிக்கை செய்தார். பெரும் வர்த்தகர்கள் யூ.என்.பி. க்கு ஆதரவு கொழும்பு பங்குச் சந்தையில் முழு பங்கு விலைச் சுட்டெண்களது அதிகரித்த வளர்ச்சி புதிய யூ.என்.பி. அரசாங்கம் மீது பெரு வர்த்தகர்கள் ஆர்வம் கொண்டிருப்பதற்கான நிச்சயமான அறிகுறியாக இருந்தது. இது தேர்தல் முடிவடைந்து நான்கு நாட்களின் பின்னர் 1074 புள்ளிகளால் அல்லது 26 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. இது திங்கட்கிழமை 678 புள்ளிகளை எட்டியது. இது 1999 மே மாதம் முதல் இன்றுவரை காணப்பட்ட மிகவும் உயர்ந்த புள்ளியாகும். பெரும் கம்பனிகளின் (Blue Chip Companies) மிலங்கா சுட்டெண் 293 புள்ளிகளால் அல்லது 34 சதவீதத்தால் அதிகரித்ததோடு இதே காலப்பகுதியில் மிகவும் உயர்ந்த புள்ளியான 1164 புள்ளிகளை எட்டியது. ஆரம்பத்தில் உணர்ச்சி பூர்வமான நிலை இருந்தபோதிலும் ஆளும் வட்டாரங்களுக்குள் முன்னைய பொதுஜன முன்னணி அரசாங்கத்தைப் போல் யூ.என்.பி.யும் அதே அரசியல் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. யூ.என்.பி. க்கு தனது சொந்த அமைப்புக்குள் பெரும்பான்மை இல்லாததோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்கின்றது. பொதுஜன முன்னணியைப் போல் யூ.என்.பி யும் சிங்கள பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு விடுதலைப் புலிகளுடன் இணக்கம் காண்பதற்கான எந்தவொரு முயற்சியையும் ஜே.வி.பி, சிங்கள உறுமய போன்ற சிங்கள தீவிரவாத கட்சிகளது எதிர்ப்பைத் தூண்டிவிடுவதுடன் தனது சொந்த குழுக்களது எதிர்ப்பையும் கூட தூண்டிவிடும். எவ்வாறெனினும் புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுடன் முன்செல்லத் தவறுமானால் அது தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளது ஆதரவையும் அதேபோல் பெரு வர்த்தகர்களது ஆதரவையும் இழக்கும் அபாயத்திற்கு உள்ளாகும். இதற்கும் மேலாக அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்களவு நிறைவேற்று அதிகாரங்களுடன் 2005 ம் ஆண்டுவரை ஜனாதிபதி பதவியில் இருக்கப் போகும் ஜனாதிபதி குமாரதுங்காவுடன் ஒரு உடன்பாட்டைக் காண்பது யூ.என்.பி. க்கு ஒரு மேலதிக சிக்கலாகும். பெரு வர்த்தகர்கள் முரண்பாடுகளையும், அரசியல் ஸ்திரமின்மையையும் தவிர்க்கும் பொருட்டு தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அழைப்பை புதுப்பித்துள்ளனர். இலங்கை வர்த்தக சம்மேளனத் தலைவர் சந்திரா ஜயரத்தின, குமாரதுங்காவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் ஏனைய கட்சித் தலைவர்களுக்கும் ''நீண்டகாலத்துக்கு கொண்டு செலுத்தக் கூடிய வகையிலான ஒரு இணைப்பு நடவடிக்கையாக ஒரு ஐக்கிய அரசாங்கத்துக்காக ஒன்றிணைந்து அரசியல் ஸ்திரப்பாட்டை உருவாக்குமாறு அழைப்பு விடுத்தார். அவரும் கொழும்பில் இருக்கும் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதியான நடீம் உல் ஹக்கும் அடுத்த அரசாங்கம் தனியார்மயமாக்கல் உட்பட்ட சர்வதேச நாணயநிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு பொதி, அரசாங்க செலவீனங்களில் வெட்டு ''உழைப்புச் சந்தை மறுசீரமைப்பு'' ஆகியவற்றை அமுல்படுத்த வேண்டும் என எச்சரிக்கை செய்தனர். விக்கிரமசிங்க தேசிய ஐக்கிய அரசாங்கத்தை பிரேரித்திருந்த போதிலும் அமைச்சரவையை நியமிப்பது தொடர்பாக ஏற்கனவே குமாரதுங்காவுடன் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சர் பதவியை தயக்கத்துடனேயே கையளித்தார். அவர் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும்போது தொலைக்காட்சிக் கமராக்கள் தன்னை ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்காததோடு பொதுஜன முன்னணியிலிருந்து வெளியேறி தற்போது யூ.என்.பி. யில் அமைச்சராக உள்ள எஸ்.பி. திஸாநாயக்காவின் அதிகாரங்களை குறைக்கவும் முயற்சித்துள்ளார். தொடரும் அரசியல் ஸ்திரமின்மையும் இரண்டு பிரதான கட்சிகளும் மாற்றமின்றி பேரினவாதத்தை நாடுவதும் பொதுஜன முன்னணியும் சரி அல்லது யூ.என்.பி. யும் சரி பொதுஜனங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இலாயக்கற்றவை என்ற உண்மையை சுட்டிக்காட்டுகின்றன. பேச்சுவார்த்தை தொடர்பான அவர்களது பல்வேறுபட்ட திட்டங்களும் யுத்தத்துக்கு முடிவு கட்டுவது உட்பட அனைத்தும் சிங்கள, தமிழ், முஸ்லிம் கும்பல்களுக்கிடையிலான அதிகார பகிர்வையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இது இனவாத பதட்ட நிலையை அதிகரிக்கச் செய்யும் அதேவேளை உழைக்கும் வர்க்கம் மீதான சுரண்டலையும் ஆழப்படுத்தும். எல்லா வகையிலான இனவாதத்தையும் சோவினிசத்தையும் எதிர்க்கவும் தொழிலாள வர்க்கத்தின் சொந்த நலன்களைக் காப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் அடிப்படையில் ஒர் சோசலிச அனைத்துலக வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்காகவும் தொழிலாளர் வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. சோசலிச சமத்துவக் கட்சி அனைத்துக் கட்சிகளதும் தொழிலாளர் வர்க்க விரோத கொள்கையின் தெளிவான அறிகுறியையிட்டு எச்சரிக்கை செய்தது. யூ.என்.பி. மற்றும் பொதுஜன முன்னணி தொடக்கம் நவ சமசமாஜக் கட்சி, ஜே.வி.பி. வரை அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு எதிராகத் தொடுத்துள்ள ஏகாதிபத்திய யுத்தத்துக்கு ஆதரவு வழங்கின. சோ.ச.க. கொழும்பு மாவட்டத்தில் 243 வாக்குகளை பெற்றுள்ளது. இது தொழிலாளர்களில்
வர்க்க நனவுள்ள ஒரு பிரிவினரும் இளைஞர்களும் ஒரு நியாயமான சோசலிச பதிலீட்டை பற்றிச் சிந்திக்கின்றனர் என்பதற்கு
ஒரு முக்கியமான அறிகுறியாகும். ஆனபோதிலும் இது பரந்த தொழிலாளர் பிரிவினரிடையே நிலவும் முன்னோக்கின்மையையும்
தெளிவாக வெளிக் கொணர்கிறது. சோ.ச.க. யின் பிரச்சாரத்தின் போது பெரு வர்த்தக கட்சிகளுக்கு கணிசமான
அளவு எதிர்ப்பு இருந்து கொண்டுள்ளதையும் சமாதானம், ஜனநாயக உரிமைகள், வாழ்க்கைத் தரம் ஆகியவை சம்பந்தமாக
பலத்த அபிலாஷைகள் காணப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவற்றில் எதுவுமே பொதுஜன முன்னணியினாலோ
யூ.என்.பி யாலோ கிடைக்கப் போவதில்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS)
ஊடாக இலங்கையிலும் அனைத்துலகிலும் இடம்பெறும் முற்றுப்பெறாத நிகழ்வுகளை விமர்சன ரீதியில் பரீட்சிப்பதற்காகவும்
எமது அனைத்துலக சோசலிச பதிலீட்டில் கவனமாக அக்கறை செலுத்தவும் எங்களுடன் கலந்துரையாடிய அல்லது எமது
வேட்பாளர்களுக்கு செவிமடுத்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும், இளைஞர்களையும், புத்திஜீவிகளையும் நாம் உற்சாகப்படுத்துவோம். |