World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

US bases pave the way for long-term intervention in Central Asia

மத்திய ஆசியாவில் நீண்டகாலத் தலையீட்டிற்கான வழியை அமெரிக்கத் தளங்கள் அமைத்துக் கொடுக்கின்றன

By Patrick Martin
11 January 2002

Back to screen version

அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் அண்மைய அறிக்கைகள் மற்றும் அமெரிக்க மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வரும் செய்தி அறிவிப்புக்கள், புஷ் நிர்வாகமும் பென்டகனும் மத்திய ஆசியாவில் இராணுவ நிலையைப் பலப்படுத்துவதை மேற்கொண்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. அதன் இலக்கு ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் மோதலுக்கான ஆதரவு மட்டும் இல்லை மாறாக இந்த எண்ணெய் வளமிக்க பிராந்தியத்தில் நிரந்தரமாக அதன் இராணுவம் இருப்பதற்கும் ஆகும்.

அமெரிக்க அரசாங்கமானது கிட்டத்தட்ட மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் அதன் எல்லைகளில் உள்ள இரண்டு டஜன் நாடுகளில் இருந்து தளம் கொண்டிருத்தல் அல்லது யுத்த விமானங்கள் பறந்து செல்வதற்கான உரிமைபெற்றிருத்தல், யுரேஷிய நிலத்தில் அமெரிக்க அதிகாரத்தை மையப்படுத்துவது எந்தவித வரலாற்று முன்னுதாரணத்தையும் கொண்டிருக்கவில்லை. ஜனவரி 9 அன்று, அமெரிக்க இராணுவ அதிகாரி சமீபத்திய ஈட்டத்தை, முன்னாள் சோவியத் குடியரசான கிர்கிஸ்தானில் பெரிய விமானத் தளம் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதை வெளிக்காட்டினார். கிர்கிஸ்தான் நாடானது சீனா, தஜிக்கிஸ்தான் உஸ்பெக்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளால் எல்லைகளால் சூழப்பட்டு இருப்பதுடன் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை உண்மையில் அடையமுடியாத ஒன்றாக ஒருசமயம் இருந்தது.

கிர்கிஸின் தலைநகரான பிஷ்கேக்கிலிருந்து 19 மைல் தொலைவில் உள்ள மனாஸில் 37 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இப்புதிய தளம் பிரதான இராணுவ தளமாக இருக்கும். அது 86வது விரைவு இராணுவப் படைப்பிரிவின் 300 உறுப்பினர்களுக்கான தற்காலிக குடியிருப்பைக் கொண்டிருக்கிறது. அங்கு கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வசதிகள் இறுதியில் 3000 இராணுவத்தினருக்கு வீடமைத்துக் கொடுப்பதாக இருக்கும். மனாஸ் தளம் ஜெட் போர் விமானங்கள், சி-130 சரக்கு விமானங்கள் மற்றும் KC-135 எனும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவற்றுக்கு சேவை அளிக்கக் கூடியதாக இருக்கும். கடந்தமாதம் கிர்கிஸ் பாரளுமன்றமானது, ஆப்கானிஸ்தான் மற்றும் எங்கும் போரிடும் வசதிகள் உட்பட எல்லா வசதிகளையும் அமெரிக்கா பயன்படுத்துதற்கு கட்டுப்பாடற்ற அதன் அனுமதியை வழங்கியது.

தற்போது அமெரிக்க நடவடிக்கைகளுக்கான பிரதான தளங்களாக பாக்கிஸ்தானில் இருக்கும் தளங்கள் இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் அதிகரித்து வரும் மோதலால் பயன்படுத்துவது கடினமாக ஆனாலும் கூட, ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து யுத்தத்தை நடத்த அதிகமான நெகிழ்ச்சித்தன்மையைக் கொடுக்கக்கூடியவகையில் காபூலின் வடக்கிலிருந்து சிலநிமிடங்களே பறக்கும் தொலைவில் கிர்கிஸ்தானில் உள்ள புதிய தளமானது, அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் நான்கு KC-135 இரக விமானங்கள் வர இருக்கின்றன. அத்துடன் ஜனவரி இறுதிவாக்கில் எப்-15 ஜெட் போர்விமானங்களின் விமானப் படைப்பிரிவும் வரவிருக்கிறது. "விமானப் படையுடன் மேலும் தரைப்படைகளும் அங்கு இருக்கும். 'சுதந்திரம் நிலைத்திருக்கும்' என்ற இராணுவ நடவடிக்கைக்கு முக்கியமாய் ஆதரவளிக்கும் முதலாவது விமான தளமாக இது இருக்கும் என்று மனாஸில் வேலைசெய்யும் ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க யுத்தத்துக்கு இதுதான் உத்தியோகபூர்வ பெயராகும். மனாஸில் அமெரிக்கத் துருப்புக்களுடன் பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் டேனிஷ் துருப்புக்களும் இருக்கும்.

புதிய அமெரிக்க தளங்கள் பற்றிய ஒப்பந்தங்கள் பாக்கிஸ்தான் மற்றும் ஏனைய முன்னாள் சோவியத் குடியரசுகளான தஜிக்கிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகியவற்றுடன்கூட முடிவடைந்துள்ளன. அமெரிக்க யுத்தவிமானங்கள் உஸ்பெக்கிஸ்தானில், கார்ஷியில், காண்டாபாத் விமான தளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக 1000 தரைப்படைத் துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவ மதிப்பீட்டுக்குழு தஜிக்கிஸ்தானில் உள்ள குல்யாப், கோஜாண்ட் மற்றும் டுர்கான் -டையூப் ஆகிய மூன்று ஆற்றல் மிக்க தளங்களைப் பார்வையிட்டது. பாக்கிஸ்தானில் பல இடங்களில் அமெரிக்கத் துருப்புக்கள் தங்கி இருப்பதும் போர்ப்பொறியியலாளர்கள் ஓடுதளங்களை மேம்படுத்துவதும் வீடுகளை அமைப்பதும் ஏனைய வசதிவாய்ப்புக்களை உருவாக்குவதும் இராணுவத்தின் நீண்டகாலத் தங்கலை தெளிவாகவே செயலில் குறிப்பதாக உள்ளன.

ஆர்மேனியா, அஜெர்பைஜான், துர்க்மேனிஸ்தான் மற்றும் கஜக்கஸ்தான் ஆகிய நான்கு முன்னாள் சோவியத் குடியரசுகளும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கத் தாக்குதலுடன் பல்வேறு வடிவங்களிலான நேரடி இராணுவ ஒத்துழைப்புகளுக்கு உறுதி கொடுத்திருக்கின்றன. ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் விமானங்கள்மேலே பறப்பதற்கு உரிமை வழங்கியுள்ளன. அவை நிலங்களால் சூழப்பட்ட மத்திய ஆசியாவுக்கு தீர்க்கமானவை ஆகும். புஷ் நிர்வாகத்தின் வலியுறுத்தலின் பேரில் காங்கிரசில் இருநாடுகளுக்கும் இராணுவ உதவிக்கான தசாப்தகால தடையை விலக்களித்தபொழுது, டிசம்பர் 19 அன்று, அவ்விரு நாடுகளுக்கும் வெகுமதி அளிக்கப்பட்டன.

தளங்களும் குழாய்வழிப் பாதைகளும்

காஸ்பியன் எண்ணெய்ப்படுகையின் எண்ணெய் செல்வத்தின் பெரும்பங்கை கொண்டிருக்கும் கஜகஸ்தான் அமெரிக்க இராணுவத்தளங்களுக்கு சாத்தியமான பல்வேறு இடங்களை வழங்குதற்கு முன்வந்ததாக அறிவிக்கப்படுகிறது. துர்க்மேனிஸ்தானானது பெரும் நிதி செலவழிக்கப்பட்ட குழாய்வழிப் பாதைகளின் சந்திப்புக்கான பிரதான இடமாகக் கருதப்படுகிறது. இக்குழாய் வழிப்பாதைகள் இப்பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு சேர்ம இருப்புக்களை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலுக்கு கொண்டுவரக்கூடியதாக இருக்கும்.

முன்னாள் யூகோஸ்லாவியாவில் உள்ள கொசோவாவில் உள்ள அமெரிக்க இராணுவப்படையின் தலைமையகமான பாண்ட்ஸ்டீல் முகாம் உட்பட இந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்றைய அமெரிக்கத் தளங்களின் இடங்கள்; துருக்கிக் குடாவின் அடைப்பு வழியைக் கடக்கும் குழாய் வழிப்பாதைக்கான ஆற்றல்மிக்கதாக பல்கேரியாவும் கருதப்படுகிறது; துருக்கியில் இன்சிர்லிக் விமானத்தளம் ஈராக் மீது குண்டுத் தாக்குதலை தசாப்தகாலமாய் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது; மற்றும் செளதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் பாரசீகவளைகுடாவில் உள்ள ஓமான் ஆகியனவும் ஆகும்.

கத்தாரில் அல் அடிட் எனுமிடத்தில், உண்மையில் இரகசியமாக 1.5 பில்லியன் டாலர்கள் செலவில் விமானத்தளத்தை அமெரிக்கா கட்டிக் கொண்டிருக்கிறது. இது வளைகுடாவில் உள்ள விமான ஓடுதளத்திலேயே 15,000 அடிநீளமுள்ள ஒன்றாகும். இதன் கட்டுமானப்பணி 2000-ம் ஆண்டு ஏப்ரலில் கிளின்டனின் செயலாளர் வில்லியம் கோகனின் விஜயத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. கத்தார் ஏற்கனவே அமெரிக்க இராணுவப்படைக்கு முனுரிமை வசதியைக் கொடுத்துள்ளது.

1990-91ல் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்துடன் இணைந்ததாக அமெரிக்கத் துருப்புக்கள் ஆரம்பத்தில் கத்தாரில் நிலைகொண்டிருந்த அதேவேளை, கடந்த ஆண்டு பென்டகனின் உயர் அதிகாரி ஒருவர், கத்தார் தளமானது "ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது இன்னொரு நாட்டின்மீது குவிமையப்படுத்தப்படாதிருந்தது, ஆனால் நாங்கள் வைக்க இருக்கும் அமைப்பின் பகுதியாக குவிமையப்படுத்தப்படும்" என்றார்.

மைய ஆணையகப் பேச்சாளர் கடற்படைத் துணைத்தலைவருக்கு அடுத்த பணியாளர் கிரெய்க் ஆர்.குய்க்லி, "உதாரணமாக, குறித்த நேரத்தில் ஆப்கானிஸ்தானின் சுற்றுவட்ட எல்லைப்பகுதியில் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள, மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்ற மற்றும் மனிதாபிமான உதவியைச் செய்யக்கூடிய அளவில் பல்வேறு இடங்களில் விமானத் தளங்களை கட்டுவதைத் தொடர்தல் பெரும் மதிப்பு மிக்கதாகும்" என்று கூறினார்.

அல் அடிட் விமானத்தளம் ஏற்கனவே உள்ளூர் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது. கடந்த நவம்பர் 7 அன்று, விமானத்தள எல்லைப் பகுதியில் தங்களை நோக்கி சுட்டதாகக் கூறப்படும் ஒரு அரபு மனிதன் அமெரிக்க மற்றும் கத்தார் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மைய ஆணையகத்தின் தலைவர் ஜெனரல் டோமி பிராங்கஸ், தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் கடற்படையின் தரைவழி நடவடிக்கைப்படை ஆகியன மத்திய ஆசிய அரங்கில் சுழற்சிமுறையில் தொடர்ச்சியாக துருப்புக்களை அனுப்பும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பதாக அறிவித்தது, அவர்களின் இருப்பு முடிவில்லாதது என்பதற்கு மேலும் கூடிய அடையாளமாகும்.

துணை பாதுகாப்புச் செயலாளர் பால்டி. வொல்போவிட்ஸ் நியூயோர்க்டைம்ஸ் உடனான பேட்டியில் தளங்களைப்பற்றிவிவாதித்தார். "அவற்றின் செயல்பாடுகள் உண்மையில் இராணுவத் தன்மையை விடவும் அரசியல் ரீதியானது" என்றார். அவர் புதிய தளங்கள் "உஸ்பெக்கிஸ்தான் போன்ற முக்கிய நாடுகள் உள்ளடங்கலாக எல்லோருக்கும், நாங்கள் திரும்புதற்கு மற்றும் திரும்ப உள்ளே வருவதற்கு திறம் பெற்றிருக்கிறோம் என்று செய்தி அனுப்புகிறது."

தலையீட்டிற்கான கட்டமைப்பு

தளங்கள் பற்றிய பல ஒப்பந்தங்களுக்கு ஆப்கான் யுத்தத்திற்கு ஆதரவானது ஒரு சாக்காக இருக்கின்ற அதேவேளை, மத்திய ஆசியாவில் இறக்கியுள்ள அமெரிக்கத் துருப்புக்கள் பெரிதும் பரந்த மூலோபாய செயல்பரப்பைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கிர்கிஸ்தானில் உள்ள மனாஸ் தளமானது, சீனாவின் மேல் கோடிமுனையிலுள்ள சிங்கியாங் மாகாணத்து எல்லையிலிருந்து 200 மைல் தொலைவில் மட்டுமே அமைந்துள்ளது, லோப்நோரில் அந்நாட்டின் பிரதான அணு ஆயுத சோதனை வசதிகளை அமெரிக்க விமானத் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகக்கூடிய தொலைவில் வைத்துள்ளது. எதிர்த்திசையில் மனாஸ் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள எண்ணெய் வயல்களுக்கு அதே அளவு சமமான தொலைவில் உள்ளது.

அமெரிக்க மற்றும் ரஷ்ய துருப்புக்கள் இரண்டுமே இப்பொழுது கிர்க்கிஸ்தானிலும் தஜிக்கிஸ்தானிலும் நிலைகொண்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளில் அமெரிக்கத் துருப்புக்களை நிறுத்துவதை பகிரங்கமாகவே ஆதரித்தார். ஆனால் இந்த முன்னேற்றம் தொடர்பான ரஷ்ய தேசியப் பாதுகாப்பு பற்றி ஆழ்ந்த கவலை இருப்பதாகக்கூறப்படுகிறது. ரஷ்யாவின் மிக உயர் பாதுகாப்பு இராணுவ, அணு ஆயுத மற்றும் வான்வெளி உட்கட்டமைப்பின் பெரும்பாலானவை வடக்கு கஜக்கஸ்தான் மற்றும் மேற்கு சைபீரியாவில் அமைந்திருக்கின்றன. இவை ஒருசமயம் பூகோளத்தில் எந்த அமெரிக்க இராணுவ வசதிக்கும் தொலைதூரத்தில் இருந்தன. ஆனால் இன்று அவை குறுகியதூர அமெரிக்க ஜெட்விமானங்கள் கூட அடையக்கூடிய தொலைவில் இருக்கின்றன.

அடுத்து ஆப்கானிஸ்தானிலேயே இருக்கிறது, அமெரிக்க ஐக்கிய அரசுகள் காந்தஹார் விமானத் தளத்தில் 1000 கடற்படையைச் சேர்ந்த தரைவழிப்படையினரை நிறுத்தி இருக்கிறது, அது இப்பொழுது அதே அளவு எண்ணிக்கை உடைய தரைப்படையின் 101வது வானிலிருந்து இறங்கும் படைப்பிரிவினரால் பதலீடு செய்யப்பட இருக்கிறது. அதன் பணிகளுள் ஒன்று பாதி நிலையாக ஆக்கிரமித்துக் கொள்வதாக இருக்கிறது. 1979-89 யுத்தத்தின்பொழுது சோவியத் இராணுவத்தின் மையமாக ஒரு சமயம் இருந்த நாட்டின் தலைநகரான காபூலின் வெளியே உள்ள பக்ராம் விமான தளத்தினை அமெரிக்கா எடுத்துள்ளது.

இந்த தளங்கள் தலிபான் ஆட்சியைத் தூக்கி வீசுவதற்கான அமெரிக்க ஆதரவு நடவடிக்கையின் பொழுது ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால் அப்பிராந்தியத்தில், சிறப்பாக எண்ணெய் வளம் மிக்க காஸ்பியன் கடற்கரைப் பிராந்தியம் வழியாக அமெரிக்க இராணுவத் தலையீட்டை ஆழப்படுத்த நன்கு சேவை செய்யக்கூடிய அளவுக்கு அவை வசதி வாய்ப்புக்களை வழங்கி உள்ளன. இப்பிராந்தியத்தில் கஜக்கஸ்தான், துர்க்மேனிஸ்தான் மற்றும் அஜர்பான் ஆகியனவும் உள்ளடங்குவன.

புதிய தளக்கட்டமைப்பின் மூலோபாய முக்கியத்துவம் பற்றி சுருக்கமாக, ெலாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் சிறப்பு செய்தித்தொடர்பாளர் வில்லியம் ஆர்க்கின் ஜனவரி 6 அன்று பின்வருமாறு எழுதினார்: "இரகசிய ஒப்பந்தங்களின் மூடுதிரையின் பின்னால், அமெரிக்க ஐக்கிய அரசுகள் ஆப்கானிஸ்தானைச் சுற்றி வளைக்கக்கூடிய புதிய மற்றும் விரிவான இராணுவ தளங்களின் வளையத்தை உருவாக்கி உள்ளது மற்றும் பெரும்பாலான முஸ்லிம் உலகம் முழுவதும் உள்ள இலக்குகளைத் தாக்கும் அளவுக்கு ஆயுதப்படைகளின் திறத்தை உயர்வுபடுத்தி இருக்கிறது."

பென்டகனின் தகவல்களின்படி, செப்டம்பர் 11க்குப் பின்னர், இந்தப்பிராந்தியத்தில் தளங்களின் வலைப்பின்னலை கணிசமான அளவு விரிவாக்கும் முகமாக, ஆப்கானிஸ்தானை அடுத்துள்ள ஒன்பது நாடுகளில் 13 இடங்களில் இராணுவம் கூடாரம் அடிக்கும் நகர்கள் உயர்ந்திருக்கின்றன. பல்கேரியா மற்றும் உஸ்பெக்கிஸ்தான் முதல் துருக்கி, குவைத் மற்றும் அதற்கும் அப்பால் வரை, 60,000 க்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினர் இப்பொழுது வாழ்கின்றார்கள் மற்றும் இந்த முன்தளங்களில் வேலைசெய்கின்றார்கள். 'சுற்றுப் பயணம் சார்ந்த விமான தளங்கள்' என்று அழைக்கப்படுவனவற்றில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் வரவும் செல்லவுமாய் இருக்கின்றன."

குளிர் யுத்தத்தின் பொழுது வெளிநாடுகளுடனான அமெரிக்க இராணுவ ஒழுங்குகள் வழக்கமாக பொதுவான சட்டபூர்வ பத்திரங்களில் "படை பற்றிய ஒப்பந்தங்களின் நிலை" என்று அழைக்கக்கூடியதாய் கூறப்பட்ட அதேவேளை, குளிர் யுத்தத்துக்கு பிந்தைய ஒப்பந்தங்களில் பல விருந்தினர் அரசாங்கங்களை உள்நாட்டு எதிர்ப்பினின்று பாதுகாப்பதற்கு அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு இராணுவ ரீதியில் கீழ்ப்படிதலாய் வகைப்படுத்தப்படுகின்றன என்று ஆர்க்கின் குறிப்பிடுகின்றார். இவற்றில் குவைத், ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் செளதி அரேபியா அகியவற்றுடனான ஒப்பந்தங்களும் உள்ளடங்குவன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved