World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை New Sri Lankan government seeks to impose slump on masses புதிய இலங்கை அரசாங்கம் பொருளாதார அழிவை மக்கள் மீது சுமத்த முயற்சிக்கின்றது By K. Ratnayake அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட யூ.என்.பி. அரசாங்கம் உலக பொருளாதார பின்னடைவின் தாக்கத்தின் கீழ் உருவான பொருளாதார தள்ளாட்டத்தோடு வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்த பொருளாதார வீழ்ச்சியை உபயோகிக்க முயற்சிக்கின்றது. மத்திய வங்கி, 2000 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 6.4 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடும் போது கடந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் "வழமைக்கு மாறாக" 3.7 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக டிசம்பர் 30ம் திகதி அறிவித்தது. மொத்த தேசிய உற்பத்தி முதலாவது இரண்டாவது காலாண்டுகளில் முறையே 1.3 வீதத்தாலும் 0.4 வீதத்தாலும் வீழ்ச்சி கண்ட அதேவேளை, அதே ஆண்டின் அரைப்பகுதியில் பொருளாதார வீழ்ச்சி உக்கிரமடைந்தது. மத்திய வங்கி, இந்த பின்னடைவுகளுக்கு வரட்சியையும் உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலையையும் கடந்த ஜூலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச விமான நிலையம் மீது நடாத்திய தாக்குதலையும் செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற சம்பவங்களையும் காரணம் காட்டியது. மூன்றாவது காலாண்டில் உற்பத்தி மற்றும் சேவை பகுதிகள் முறையே 10.5 வீதத்தாலும் 2.9 வீதத்தாலும் வீழ்ச்சியடைந்த போது விவசாய உற்பத்தி 1.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. நாட்டின் பிரதான அந்நிய செலாவணியான தேயிலை உற்பத்தி 14.8 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தித் துறையில் ஆடை, துணி, மற்றும் தோல் உற்பத்தி ஆகியவை 16 வீதத்தால் வீழ்ச்சி அடைந்தன. இவை பெறுமதி சேர்க்கின்றதும் தொழில்களை உருவாக்கும் கைத்தொழில்களாக கருதப்படுகின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக மொத்த கேள்வியில் 90 வீதத்துக்கும் அதிகமாக கொண்டிருந்த அந்த நாடுகளில் உள்ள கொள்வனவாளர்களின் கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த பின்னடைவுக்கான பெரும் காரணம் என வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. இரசாயன பொருட்கள், இறப்பர், பிளாஸ்ரிக் பொருட்கள், மற்றும் பெற்றோலியம் போன்ற உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தி பொருட்களும் வீழ்ச்சி அடைந்துள்ளன. கடந்த வருடத்தின் முதல் பத்து மாதத்தின் ஏற்றுமதிகள் அதற்கு முந்திய வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 9.1 சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளன. பெரும்பாலும் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் இடைநிலை பொருட்கள் மீதான பாரிய வெட்டுக்களோடு ஏற்றுமதி 14.7 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. முதலீட்டு பொருட்களின் இறக்குமதி 24.1 வீதத்தினால் கவிழ்ந்து போனமை ஆழமடைந்து வரும் நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றது. இதேவேளை ரூபாவின் மாற்று விகிதம் 12.5 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்ததோடு உள்ளூர் விலைவாசியையும் அதிகரிக்கச் செய்தது. கடந்த ஆண்டின் பணவீக்க விகிதம் அதற்கு முந்திய ஆண்டின் 6.2 வீதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக 14.2 வீதம் வரை அதிகரித்ததோடு 1996ல் இருந்து முதற் தடவையாக இரண்டு இலக்க தரவை பதிவு செய்திருந்தது. இந்த தரவுகள் வேலை செய்கின்ற ஏழைகளதும், கீழ்தட்டு மத்தியதர வர்க்கத்தினரதும் வாழ்க்கைத் தரத்திலான கடுமையான அரிப்பை எடுத்துக் காட்டுகின்றது. மிகக் குறைந்த 40 வீத வருமானம் பெறும், தலைநகரில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் வருடாந்த வாழ்க்கைச் செலவு புள்ளி டிசம்பரில் 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதை கொழும்பு மாவட்ட நுகர்வோர் விலைச் சுட்டெண் காட்டுகின்றது. கிராமிய அபிவிருத்தி அமைச்சரும், பிரதி நிதிஅமைச்சருமான பந்துல குணவர்தன, அரசாங்கம் ஆபத்தான சூழ்நிலையில் இருந்து கொண்டுள்ளதை காட்டும் ஏனைய புள்ளி விபரங்களை முன்வைத்தார். அரசாங்கம் கடந்த வருடத்தில் 30.45 பில்லியன் ரூபா (236.45 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வருமான வீழ்ச்சிக்கு முகம் கொடுத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்திற்கமைய வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 8.5 வீதமாக கணிக்கப்பட்ட போதிலும் 10.5 வீதமாக அதிகரித்தது. உள்நாட்டு கடனும், இந்த ஆண்டில் மீளளிக்கப்பட வேண்டிய வட்டியும் 295 பில்லியன் ரூபாய்களாகும். இது திட்டமிடப்பட்டிருந்த 275 பில்லியன் ரூபா அரசாங்க வருமானத்தையும் தாண்டியுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான கூட்டுத்தாபனங்களின் ஒரு தொகை நஷ்டங்களைப் பற்றியும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 21.5 பில்லியன் ரூபா, இலங்கை மின்சாரசபை 15.6 பில்லியன் ரூபா, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் 8.3 பில்லியன் ரூபா, புகையிரதம், தபால் திணைக்களம் 2.3 பில்லியன் ரூபா மற்றும் இலங்கைப் போக்குவரத்து சபை 2.1 பில்லியன் ரூபா. அரசின் வங்குரோத்தை அம்பலப்படுத்துவதில் இந்தத் தரவுகள் சரியானதாக அல்லது பழையனவாக இருந்திருக்கலாம், ஆனால் தொடர்புசாதனங்களின் ஆதரவைப் பெற்ற யூ.என்.பி.யின் பிரச்சார நடவடிக்கைகள், அரசாங்கம் அவற்றை மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதலை கட்டவிழ்த்து விடவும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கவும் சர்வதேச நாணய நிதியம் கோரும் நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் பயன்படுத்த காத்திருக்கின்றது என்பதை காட்டுகின்றது. குணவர்தன அரசாங்க ஊழியர்களுக்கான உயர்ந்த சம்பளம், ஓய்வூதியம், தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் உர மானியங்கள், எரிவாயு மானியம், பால் மற்றும் மா போன்றவற்றுக்கான அரசாங்க செலவை அதிகரித்ததையிட்டு குறை கூறினார். முன்னைய பொதுஜன முன்னணி அரசாங்கம் பொதுத் தேர்தலில் முற்று முழுதான தோல்வியைத் தவிர்க்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாக இத்தகைய நடவடிக்கைகளில் சிலவற்றை அவசரமாக மேற்கொண்டது. புதிய நிதி அமைச்சர் கே.என்.சொக்ஸ்சி தனது பதவிப்பிரமான வைபவத்தின் போது "சீர்திருத்தம் வருத்தம் மிகுந்தது" என பிரகடனப்படுத்தினார். "நாம் மக்களை குறிப்பிட்ட காலத்துக்கு எங்களுடன் தாங்கிக் கொள்ளுமாறு கேட்கவேண்டும், அதன்படி அவர்கள் குறைந்த பட்சம் ஒரு வருடத்தின் முடிவிலாவது ஒரு வித்தியாசமான சித்திரத்தை காண்பார்கள்" என அவர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியம் தமது வேலைத்திட்டம் நடைமுறைக்கிடப்படும் "ஸ்தூலமான அறிகுறிகளை" காணவிரும்புகிறது. மதிப்பீடு செய்யப்பட்ட வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 13 வீதத்திலிருந்து 12 வீதமாக குறைக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புவதாக சொக்ஸ்சி குறிப்பிட்டுள்ளார். யூ.என்.பி. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்த்திருக்கின்ற போதிலும் சர்வதேச நாணய நிதியம் தமக்கு நடைமுறையே அவசியம் என உறுதியாக வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி நதீம் உல் ஹக் "அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்கைகள் கிடைத்துள்ள போதிலும் கடந்த காலங்களில் இவ்வாறான அறிவித்தல்களையும் குறைவான நடவடிக்கைகளையும் தரிச்சித்திருக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 3ம் திகதி, அரசாங்கம் கோதுமை மாவின் மானியத்தை நிறுத்தியது. இதனால் மா மற்றும் பாணின் விலை அதிகரித்தது. அடுத்தநாள் அரசாங்க சேவைக்கான புதிய நியமனங்களை நிறுத்துவதாகவும் அறிவித்தது. இந்த இரண்டு நடவடிக்கைகளும் முன்னைய பொதுஜன முன்னணி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் வரிசையில் இருந்து கொண்டுள்ளன. பொதுஜன முன்னணி அரசாங்கம், மக்கள் எதிர்ப்பின் காரணமாகவும் தமது அரசாங்கத்தின்
உள்ளார்ந்த நெருக்கடிகளாலும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த இலாயக்கற்றிருந்தது.
யூ.என்.பி. அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதை தவிர வேறுமார்க்கம்
இல்லாததால் எதிரில் கூர்மையான வர்க்கப் போராட்டங்கள் இருந்து கொண்டுள்ளன. |