World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா

European foreign ministers attack Bush's policy

ஐரோப்பிய வெளிநாட்டு அமைச்சர்கள் புஷ் இன் கொள்கையை தாக்குகின்றனர்

By Peter Schwarz
15 February 2002

Back to screen version

அமெரிக்க ஜனாதிபதி புஷ் இன் நாட்டின் நிலைமை தொடர்பான உரையின் இரண்டு வாரங்களின் பின்னர் சர்வதேச அரசியல் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் வெளிப்படையான மோதல் தோன்றியுள்ளது. ஆரம்பத்தில் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனத்தை வெளியிட்டபோதும், இப்போது முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகளிடமிருந்தும் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை தொடர்பான விமர்சனங்கள் அதிகரிக்கின்றன.

ஐரோப்பிய அரசியல்வாதிகள் தாம் ஒருதலைப்பட்சமான அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையையும், ஒருதலைப்பட்சமான இராணுவ கருத்துக்களையும், பாலஸ்தீனிய- இஸ்ரேல் முரண்பாட்டில் ஷரோனிற்கு ஆதரவழிப்பது தொடர்பாகவும், ஈரான், ஈராக், வடகொரியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களையும் எதிர்ப்பதாக கூறுகின்றனர்.

முதலாவது உயர் ஐரோப்பிய அரசியல்வாதியாக ஸ்பெயினின் வெளிநாட்டு அமைச்சரான Josep Piqué பெப்பிரவரி 5ம் திகதி தெகிரானுக்கு எதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கும் மத்தியிலும் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நாடாத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயின் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை வகிக்கின்றது.

இரண்டு நாட்களின் பின்னர் பிரான்சின் வெளிநாட்டு அமைச்சரான Hubert Védrine, புஷ் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் France Inter இற்கு வழங்கிய பேட்டியில் ''உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாவற்றையும் வெறும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக குறைத்துள்ள சாதாரணமான அணுகுமுறையால் ஆபத்திற்குள்ளாகியிருக்கின்றோம்'' என தெரிவித்தார். அவர் மேலும் ''இது நன்றாக சிந்திக்காத ஒன்றும், இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளமுடியாதது. அமெரிக்கர்கள் ஒருதலைப்பட்சமாகவும், மற்றவர்களை கலந்தாலோசிக்காமலும், தமது உலகப்பார்வையினதும், தமது நலன்களின் அடித்தளத்திலுமே முடிவுகளை எடுக்கின்றனர்'' என குறிப்பிட்டார்.

இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைகளுக்கான ஆணையாளரான Chris Patten இதேபோன்று தீவிரமாக தாக்கியுள்ளார். பெப்பிரவரி 9ம் திகதி Guardian பத்திரிகையில் பிரித்தானிய டோரி கட்சியின் செயலாளரும், கொங்கொங்கின் முன்னாள் ஆளுனருமான இவர் அமெரிக்க அரசாங்கத்தின் மீது உலகத்தின் மற்றைய பகுதியின் மீது ''மிகவும் சுலபமானதும், தனித்துவமானதுமான'' பார்வையை கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் மேலும் அமெரிக்கா ''தனித்துவம் அளவுகடந்து போகமுன்'' ஐரோப்பிய அரசாங்கங்கள் தமது குரலை வெளிப்படுத்தி அமெரிக்காவை நிறுத்தவேண்டும்'' எனவும் கூறினார்.

ஜேர்மனியில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளரான Ludger Vollmer 1991இன் வளைகுடா யுத்தத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தின் மூலம் ஈராக்குடனான ''தமது பழைய கணக்கை'' தீர்த்துக்கொள்ள முனைவதாக குற்றம்சாட்டினார். கிறிஸ்தவ ஜனநாயக் கட்சியின் வெளிநாட்டு கொள்கைக்கான பேச்சாளரான Karl Lamers, Spiegel பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ஈராக்கிற்கு எதிரான யுத்த தயாரிப்புக்கள் நடைபெறுகையில் ஜேர்மன் அரசாங்கத்தின் ''ஆச்சரியமான அமைதி'' குறித்து தனது கருத்தை தெரிவித்தார். ஈராக் மீதான தாக்குதலுக்கான உறுதியான தயாரிப்புக்கள் இருக்குமானால், நிலைமை தீவிரமடையுமானால் ஜேர்மன் பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் தமது குரலை உயர்த்தவேண்டும்'' என தெரிவித்தார்.

கடந்தவார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 வெளிநாட்டு அமைச்சர்கள் வழமைக்கு மாறாக ஸ்பெயினின் சிஊநீமீக்ஷீமீs நகரத்தில் சந்தித்தனர். உத்தியோகபூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாதபோதிலும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் அமெரிக்காவிற்கு எதிரான விமர்சனத்தை ஒத்துக்கொண்டிருந்தனர். Patten உடைய தீவிரமான கருத்துக்கள் அங்கு சமூகமளித்திருந்த எவராலும் மறுக்கப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைகளுக்கான உயர் பிரதிநிதியான Javier Solana ''அமெரிக்காவின் பூகோள ஒருதலைப்பட்சம்'' தொடர்பாக அமெரிக்காவை எச்சரித்தார். ஜேர்மனியின் வெளிநாட்டு அமைச்சரான Joschka Fischer புஷ்ஷின் ''பேய்களின் அச்சு'' தொடர்பாக கண்டித்தார். அவர் மேலும் ''இது நாங்கள் அரசியல் நடாத்தும் விதமல்ல'' என குறிப்பிட்டார். அவரது பிரான்சு கூட்டாளியான Védrine ''எங்களது குரல் கேட்பதற்காக நாம் உரத்த குரலில் பேசவேண்டும்'' என தெரிவித்தார். பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சரான Jack Straw அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ''வித்தியாசமான நிலைப்பாடு'' உள்ளதாக கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அமைச்சர்கள் மத்திய கிழக்கின் நிலைமை தொடர்பாக முக்கியமாக கவனம் கொண்டிருந்தனர். இது ''ஐரோப்பாவின் பாதுகாப்பின் ஒருபகுதி'' எனவும் நெருங்கிய அயல்நாட்டவர் என்ற வகையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் Joschka Fischer தெரிவித்தார்.

Védrine தமது சமாதான பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவை முன்வைத்ததுடன், விரைவாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவேண்டும் எனவும், அரபாத்தை மத்தியமாக வைத்து புதிய தேர்தல் நடாத்தப்படவேண்டும் எனவும் முன்மொழிந்தார். இது அவரது ஐரோப்பிய கூட்டாளிகள் மத்தியில் ஐயுறவுக்குரியதானது. அமெரிக்கா இதை உடனடியாக ''பிரயோசனமற்றது'' என நிராகரித்தது. எவ்வாறிருந்தபோதும் ஐரோப்பியர்கள் மத்திய கிழக்கில் மிகவும் கவனத்துடன் இருக்கவிரும்புகின்றனர். பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சரான Jack Straw உம், Joschka Fischer உம் இவ்வாரம் அங்கு செல்லவுள்ளனர்.

அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தீவிர மோதல்கள் ஆச்சரியப்படத்தக்கவகையில் உருவாகவில்லை. ''பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்திற்கான'' அடிப்படைகள் இங்குதான் உள்ளன. செப்டம்பர் 11ம் திகதி தாக்குதல் மத்திய ஆசியாவில் அண்மைய இராணுவ நடவடிக்கைகளுக்கான நிலைமையை உருவாக்கினாலும், இதற்கான தயாரிப்பு 1991 வளைகுடா யுத்தத்திலிருந்து கடந்த 10 வருடங்களாக இடம்பெற்றுவந்துள்ளது. இது மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் உள்ள நில எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பானதாகும்.

சோவியத் யூனியனின் முடிவானது அத்திலாந்திற்கு இடையாலான கூட்டின் அடித்தளத்தை இல்லாதொழித்துள்ளதுடன், பாரிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் உலக அதிகாரத்தை பங்கிடுவதற்கான போட்டிக்கான முன்நிலைமைகளை உருவாக்கியுள்ளது. உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இயற்கையான போட்டியாளர்களாக எழுகின்றன. ஐரோப்பாவின் பொருளாதார உயிர்வாழ்க்கைக்கு அவசியமான முக்கிய வளங்களை கொண்ட பிரதேசத்தில் அமெரிக்கா இராணுவரீதியாக பலமடைந்து, அரசியல் ரீதியான குரலெழுப்புவதை ஐரோப்பிய ஆளும்தட்டு சாதாரணமாக பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை.

உலக வர்த்தக மையத்தின் தூசுக்கள் அடங்கி 6 மாதம் ஆக முன்னர் இம் முரண்பாடுகள் மேலெழுந்து வரதொடங்கியுள்ளன. பல ஐரோப்பிய தொலைத்தொடர்பு சாதனங்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நோக்கங்கள் குறித்து குற்றம் சாட்டியுள்ளன. பெப்பிரவரி 4ம் திகதியின் Deutschland funk வானொலி அமெரிக்கா ''அரசியல் பொருளாதார வெடிமருந்தை'' கொளுத்துவதாகவும், உலக சமாதானத்தை அச்சுறுத்தும் காரணியாக மாறிவருவதாகவும் குற்றம்சாட்டியது. Frankfurter Rundschau பத்திரிகையானது பெப்பிரவரி 8ம் திகதி புஷ்ஷின் உரையை '' வாளை தட்டி சத்தமெழுப்பும் யுத்தப் பேச்சு'' என குறிப்பிட்டது.

பிரித்தானிய Observer பத்திரிகை பெப்பிரவரி 10ம் திகதி பின்வருமாறு எழுதியது. ''அமெரிக்காவின் ஆயுத மயமாக்கலுக்கான செலவின் அதிகரிப்பானது 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்கா ஒரு பாரிய சக்தியாக அல்லாது ஒரு பழையகால விலங்காக காட்சியளிக்கின்றது. ரோம் பேரரசு இருந்தகாலத்திலும் பார்க்க இன்று அமெரிக்கா பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்துவதுடன், இராணுவ ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஆதிக்கத்தை செலுத்துகின்றது. அமெரிக்காவின் ஆதிக்கத்தின் மீது பாரம்பரியமாகவே ஐயுறவுகொள்ளும் பிரான்சிடம் இதற்கு பொருத்தமான வார்த்தையை கண்டுபிடிக்கும் பொறுப்பு விடப்பட்டுள்ளது. அவர்களின் வார்த்தையில் Gigantisme militaire என குறிப்பிடப்படுகின்றது. இது அமெரிக்காவின் அபிலாசையை மட்டும் குறிப்பிடாது, ஒரு பாரியளவில் பருத்துப்போன உடலின் பகுதியானது நோய்வாய்ப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகின்றது''.

அத்துடன் அப்பத்திரிகை எந்த எதிரிக்கு எதிராக, ஏன் அமெரிக்கா இவ்வளவு பலமாக ஆயுதபாணியாகின்றது என மிகுதியான உலகம் கேட்கின்றது என கேட்டுள்ளது. இதற்கான பதிலை பிரித்தானியாவின் யுத்தத்திற்கும் சமாதானத்திற்குமான ஆய்வாளரிடம் விட்டுள்ளது. அவர் ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமானது உலகத்தின் மீது அமெரிக்கா தனது யுத்த விமானங்களின் பயங்கரத்தாலோ அல்லது மத்திய ஆசியாவில் இராணுவத் தளங்களை உருவாக்குவதன் மூலமாகவோ தனது கட்டுப்பாட்டை கொண்டுவருவதற்கான பண்பற்ற செயலாகும்'' என கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் மத்தியில் முக்கிய பிரச்சனையாக உள்ளது என்னவெனில் ஐரோப்பா இராணுவ ரீதியில் அமெரிக்காவிலும் பார்க்க மிகவும் பின்தங்கியுள்ளதாகும். அண்மைய இராணுவச் செலவீனத்தின் அதிகரிப்பின் பின்னர் அமெரிக்கா 379 பில்லியன் டொலரை செலவழிக்கவுள்ளது. ஏனைய நேட்டோ நாடுகள் அனைத்தும் இணைந்து 140 பில்லியன் டொலரை செலவழிக்கவுள்ளன. இரண்டுக்கும் இடையிலான தொழில்நுட்ப வித்தியாசமும் கடந்த 10வருடங்களாக அதிகரித்துள்ளது. நவீன யுத்தத்தின் தீர்க்ககரமான பங்குவகிக்கக்கூடிய வேவுபார்த்தல், தொலைத்தொடர்பு, அதிதொழில்நுட்பமிக்க ஆயுதங்களும், இடம்பெயர்வு போன்றவற்றில் ஒரு தலைமுறை முன்னணியில் இருப்பதுடன், ஐரோப்பா அண்மையில்கூட வரமுடியாதளவிலுள்ளது.

இந்நிலைமை தொடர்பான ஐரோப்பாவின் விரக்தியை Chris Patten இன் Guardian பத்திரிகை பேட்டி பிரதிபலிக்கின்றது. அவர் ''ஜனாதிபதி புஷ் இப்போதுதான் பாதுகாப்பு செலவீனம் 48 பில்லியன் டொலர் என அறிவித்திருக்கின்றார். ஐரோப்பாவினை அமெரிக்காவிற்கு தொடர்புபடுத்தி பார்க்க நாமும் இத்தொகையை பாதுகாப்பிற்கு செலவிடத்தயாராக இருந்தால், அதை மறந்துவிடுங்கள். எம்மால் நுழைவுக்கட்டணம் கூட செலுத்தவும் இது போதாது.

புஷ் இனைப்போல் பாதுகாப்பு செலவீனத்தை 14% ஆல் அதிகரிக்க எந்தவொரு ஐரோப்பிய கட்சியும் தயாராகவில்லை என Chris Patten கருதுகின்றார். இதற்கு பதிலாக ஐரோப்பிய அரசாங்கங்கள் யுத்தவிருப்புமிக்க அமெரிக்காவிற்கு எதிராக தம்மை சமாதானவாதிகளாக காட்டிக்கொள்வதுடன், உலகத்திலுள்ள சமத்துவமின்மையையும் அநீதியையும் இல்லாதொழிக்க விரும்புவர்களாக சர்வதேசரீதியான அரசியல் ஆதிக்கத்தை வெற்றிகொள்ள முனைகின்றன.

''வெளிப்படையாக கூறினால் புத்திசாலித்தனமான குண்டுகளுக்கு அவற்றிற்குரிய இடம் உண்டு. ஆனால் புத்திசாலித்தனமான அபிவிருத்தி உதவிகள் முக்கியாமானதாக எனக்கு தோன்றுகின்றது'' என Patten குறிப்பிட்டுள்ளதுடன், உலக உதவித்தொகையில் 55% இணையும், உதவிகடன்களில் மூன்றில் இரண்டு பகுதியையும் ஐரோப்பா வழங்குவதாக குறிப்பிட்டார். மேலும் அவர் அமெரிக்கர்கள் கூறிப்பிடும் ''பாதுகாப்பின் பலவீனமான பகுதிக்கு வருவோமானால், எனது கருத்தின்படி நாங்கள் பாதுகாப்பின் பலமான பகுதிக்கு கூடியளவு செய்யவேண்டியுள்ளது'' என குறிப்பிட்டார்.

இப்படியான கருத்துக்கள் சிஊக்ஷீநீணீக்ஷீமீs இல் கூடிய ஐரோப்பிய வெளிநாட்டு அமைச்சரிகள் பலரிடம் காணப்பட்டது.

இதேவேளையில் முக்கியமாக ஐரோப்பாவின் இடது தாராளவாத பத்திரிகைகள் வெளிநாட்டு கொள்கைகளில் அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கின்றன. பெப்பிரவரி 11ம் திகதி Frankfurter Rundschau பத்திரிகை ''அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான போக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் தமது சொந்த வெளிநாட்டு கொள்கையை உருவாக்கவும் பலமாக்கவும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது'' என குறிப்பிட்டது.

அது மேலும் ''தற்போதைய நெருக்கடியானது சிக்கலானதும், ஒடுக்குமுறைக்கும், அபிவிருத்தியடையாத நிலைமைக்கும், ஏழ்மைக்கும், சமத்துவமின்மைக்கும், பலாத்காரத்திற்கும், பயங்கரவாத்திற்கும் தொடர்புள்ளது என்ற ஐரோப்பாவின் கருத்திற்கு வாஷிங்டனில் எவரும் காது கொடுக்கவில்லை'' எனவும், ''இதுதான் அமெரிக்கா தனித்துவமாக செல்வதற்கான சாத்தியமான நிலைமையாக இருக்கின்றது. இது ஐரோப்பியர்களுக்கு வித்தியாசமான கொள்கையை வகுத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றது. அதிருப்தியடைந்து காத்திருப்பது ஐரோப்பியர்களின் கருத்தல்ல. அதற்கு அவர்களில் சிறியவர்களல்ல. அவர்கள் இச்சந்தர்ப்பத்தை தமது சொந்த வெளிநாட்டுகொள்கையை உருவாக்கிக்கொள்ள பயன்படுத்தாது விடுவார்களானால் இது ஒரு முக்கிய வரலாற்று தவறாகிவிடும்'' எனக்குறிப்பிட்டது.

அக்கட்டுரை ''அமெரிக்காவுடனான அழிவுமிக்க ஆயுதப்போட்டி'' தொடர்பாக எச்சரித்ததுடன், ''பலமான ஐரோப்பா என்பது சாதாரண தீர்வுகளிலும், இராணுவ பதிலிலும் அதன் அவநம்பிக்கையிலேயே தங்கியுள்ளது. இது அமெரிக்காவிலிருந்து தன்னை எல்லைப்படுத்திக் கொள்வதனால்தான் முடியுமானால் அவ்வாறே செய்துகொள்ளவேண்டும்'' என முடித்துள்ளது.

இந்த அமைதிவாத, சமுதாயப் பார்வைகொண்ட வார்த்தை ஜாலங்களால் ஏறாற்றமடைந்து விடக்கூடாது. அவர்களின் முன்மொழிவின் மத்தியாக இருப்பது ஐரோப்பா ஒரு வெளிநாட்டு அரசியலை ஆரம்பிப்பது அமெரிக்காவில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ளவதும் தனது பூகோள நலன்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதுமாகும். இது ஐரோப்பிய அரசாங்கங்களின் நிலைப்பாட்டுடன் முற்றாக பொருந்துவதுடன், இது தொடர்பாக அவர்கள் எவ்வித மனத்தளர்ச்சியையும் காட்டவில்லை. உதாரணத்திற்கு இது பிரான்சின் காலனித்துவக் கொள்கைகள் உகண்டாவில் நடந்த படுகொலைகளுக்கு முக்கிய பொறுப்பாக இருந்ததுடன், ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்ளகை யூகோசிலாவியாவில் பலவருடங்களாக குரோசியாவின் தேசியவாதத்தை கொழுந்துவிட்டெரிய செய்ததுடன் அதைத்தொடர்ந்த இனப்படுகொலைக்கு முக்கிய காரணமுமானது.

ஐரோப்பாவினுள் அமெரிக்காவுடனான மோதலை நிராகரிக்கும் கருத்துக்களும் முன்னைரைப்போல் உள்ளது. இது தொடர்பான கருத்து முரண்பாடுகள் பாரம்பரிய கட்சிகளின் எல்லைகளை கடந்து செல்கின்றது.

பிரித்தானியாவில் எதிர்க்கட்சியான டோரியினர் புஷ் நிர்வாகத்துடனான நெருக்கமான உறவினை வலியுறுத்துகின்றது. பாதுகாப்பு அமைச்சின் துணைசெயலாளரான Bernard Jenkins பிரதமர் ரொனி பிளேயர் புஷ் இற்கும் அவர்களது எதிர்ப்பாளர்களுக்கும் இடையாலான மத்திய நிலைப்பாட்டை எடுப்பதாவும், முன்னாள் பிரதமரான Chamberlain இன் ஜேர்மனியின் ஹிட்டலருடனான (Hitler) நிலைப்பாட்டுடன் ஒப்பிடுகையில் டொனி பிளேயர் பயங்கரவாதம் தொடர்பாக ஒரு தணிக்கப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பதாவும்'' குற்றம்சாட்டினார். ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்துவரும் பிளவுகளுக்கு மத்தியில் இரண்டு கண்டங்களுக்கும் இடையில் ஒரு ''பாலமாக'' தொழிற்பட்டு வந்த பிரித்தானியா இப்பங்கை வகிப்பது பிரச்சனையாகி வருகின்றது.

இக்கண்டத்திலுள்ள கருத்துமுரண்பாடுகள் கூடுதலாக தந்தரோபாய தன்மையை கொண்டுள்ளன. நீண்டகாலமாக வெளிநாட்டு கொள்கை பிரிவினர் அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சரான கொலின் பெளலின் மீது தம்மை அடித்தளமாக கொண்டிருந்தன. இதன் மூலம் பாதுகாப்பு அமைச்சரான டொனால்ட் ரும்ஸ்வெல்டினை சுற்றிவந்து கொண்டிருக்கும் பிரச்சனையால் உருவாகும் விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள முனைகின்றனர். ஆனால் தற்போது ஒரு வெளிப்படையான முரண்பாடுகளாக உருவாவது தவிர்த்துக்கொள்ள முடியாது என்ற கருத்து பலமடைந்து வருகின்றது.

ஐரோப்பாவின் மக்களை பொறுத்தவரையில் இவ்வழியிலான சர்வதேச முரண்பாடுகள் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். வெளிநாட்டின் ஒரு இராணுவ தாக்குதல் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதும், சமூக நலன்கள் மீதானதுமான தாக்குதல்களுடன் தொடர்பானது. இது செப்டம்பர் 11ம் திகதி தாக்குதல்களின் பின்னர் ஐரோப்பிய அரசுகள் எடுத்த மக்களின் உரிமைகள் மீதான தாக்குதலால் தெளிவாகியுள்ளது. Frankfurter Rundschau பத்திரிகை குறிப்பிடுவது போல் அழிவுகரமான ஆயுதப்போட்டிக்கான மாற்றுவழி வெளிநாட்டு அரசியல் எதிர்ப்பு அல்ல. இவை இரண்டு ஒன்றுக்கு ஒன்று உதவிசெய்வதாகும். இது அமெரிக்காவிலிருந்து சுயாதீனமான இரு இராணுவத்தை ஐரோப்பா கட்ட தீவிரமாக முயற்சிப்பதில் இருந்து வெளிப்பட்டுள்ளது.

சர்வதேச உறவுகளை இராணுவ மயமாக்குவதற்கு எதிராக ஒரேயொரு மாற்றுவழியே உண்டு: அது உலக ஏகாதிபத்தியத்திற்கும், இராணுவவாதத்திற்கும் எதிராகவும், தமது ஜனநாயக உரிமைகளையும், சமூக நலன்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் ஐரோப்பிய தொழிலாளர்கள், அமெரிக்க தொழிலாள வர்க்கத்துடன் ஒரு பொதுவான போராட்டத்தில் ஒன்றிணைந்து கொள்வதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved