World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Muslim woman strip-searched at Chicago's OHare airport

சிக்காகோ ஓஹேர் விமான நிலையத்தில் முஸ்லிம் பெண் ஆடை களைந்து சோதனைக்குட்படுத்தப்பட்டார்
By Lawrence Porter
21 January 2002

Back to screen version

கடும் வேறுபாடு காட்டல் மற்றும் அரசு ஆதரவு மதவெறி முதல் சரீரரீதியான காட்டுமிராண்டித்தனம் வரையிலான --அமெரிக்காவில் உள்ள அரபு வம்சாவழி மக்களால் எதிர்கொள்ளப்படும், அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக-- இனப் பின்புலத்தின் காரணமாக அமெரிக்க முஸ்லிம் மாணவி ஒருவர் தனியே கொண்டு செல்லப்பட்டு ஆடை களைந்து சோதனை செய்யப்பட்டார். இது சிக்காகோவின் ஓஹேர் பன்னாட்டு விமான நிலையத்தில் நடந்தது. இந்த மாணவியின் சார்பில் இல்லினாய்ஸ் அமெரிக்க மக்கள் உரிமைக் கழகம் (ஏ.சி.எல்.யு) நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.

சமர் கெளகாப் என்னும் 22 வயது ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழக பாகிஸ்தானிய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க மாணவி, தேவையில்லாத வகையில், தன்னை தகாத முறையில் சட்ட விரோதமாக சோதனையிட்டதை எதிர்த்து இல்லினாய்ஸ் தேசிய காவலர்கள் மற்றும் 3 பாதுகாவலர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

செப்டம்பர் 11ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக விமான நிலைய பாகுபாடு காட்டல் என்று கூறப்படும் 100க்கு மேற்பட்ட நிலுவையிலுள்ள வழக்குகளில் இது முதலாவதென நம்பப்படுகிறது. இந்த வழக்கில் இல்லினாய்ஸ் தேசிய காவலர்கள் மற்றும் அர்ஜென்பிரைட் பாதுகாப்பக நிறுவனம் ஆகியன பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

"இந்த வழக்கு இன அச்சுறுத்தல் மற்றும் பாகுபாடு காட்டல் பற்றியதாகும் அத்துடன் அவரைப் பரிசோதித்தது இன மற்றும் மத அடிப்படையில் செய்யப்பட்டது என நாம் நம்புகிறோம்" என்று ஏ சி எல் யூ சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த எட்வின் யோன்க்கா உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, "இது அந்த மாணவியின் குடியுரிமை மீறலாகும் அத்துடன் அது அரசியல் பிரச்சினைகளையும் எழுப்புகிறது. அவரை பர்தாவை நீக்கச் சொன்னது அவரது மத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மீறலென நாம் நம்புகிறோம். அவரை வரிசையிலிருந்து தனிமைப்படுத்தியது சட்டத்தின் 14வது திருத்தத்தில் கண்டுள்ள (சம பாதுகாப்பு உரிமை பற்றிய விதி) உரிமைகளுக்கு முரண்பட்ட செயலாகும் என நம்புகிறோம்."

ஏ சி எல் யூ வால் அழைக்கப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் செல்வி கெளகாப் உடனிருந்தார். கெளகாப் அமெரிக்க தன்னார்வ சேவை (VISA) அமைப்பின் மாநாட்டிற்கு சென்றுவிட்டு நவம்பர் 7, 2001-ல் அவரது கொலம்பஸ், ஓஹியோ இல்லத்திற்கு திரும்பியபொழுது இது நிகழ்ந்தது. கெளகாப் குறைந்த வருமானமுள்ள மாணவர்களுக்கு உதவும் அமெரிக்க அரசாங்க முகவாண்மையான (ஏஜன்சி) VISA வுக்கு வேலை செய்தார். உடன் பணியாற்றும் ஏனையோருடன் சேர்ந்து, வானூர்தி நிலையத்தில் அவரது பொருட்களை சோதனைக்கு உட்படுத்தினர் மற்றும் உலோக சோதனை கருவி கொண்டு சோதனை செய்யப்படும்பொழுது அது நிகழ்ந்தது.

உலோக சோதனைக் கருவி நிற்காது இயங்கிக் கொண்டிருந்த பொழுதும், இல்லினாய்ஸ் தேசிய காவலர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் செல்வி கெளஹாப்பை மிக கவனமாக சோதனையிடுமாறு பாதுகாவலரிடம் கூறினார் என ஏ எல் யூ அறிவித்தது. பாதுகாவல் பணியாளர் செல்வி கெளஹாப் உடல்மீது உலோக சோதனைக் கருவியை ஓட்டி அவரது காலணியிலுள்ளும் சோதனையிட்டார். அப்பொழுது அவர் செல்வி கெளஹாப் இன் முதுகை தட்டி உள்ளாடையிலுள்ள கொக்கியை இழுத்தார்.

அந்த நேரத்தில் கூட்டமும் கூடிட்டென்று ஏ சி எல் யூ சொல்கிறது. பாதுகாவலர்களால் நடத்தப்பெற்ற தர்மசங்கடமான சோதனையைக் கூட்டம் கவனித்தது. செல்வி கெளகாப்பின் தலையைச் சுற்றி காவலர் துழாவினார். அவரிடம் உலோகப் பொருளோ அல்லது தடைசெய்யப்பெற்ற எந்தப் பொருளோ இல்லாத பட்சத்தில் சோதனை நீட்டிப்புக்கு தேவையில்லாதிருந்தது. இருப்பினும் தேசிய பாதுகாவலரின் கட்டளைக்கு அடிபணிந்து பாதுகாவலர் இஸ்லாமிய மரபுப்படி அணியும் பர்தாவை எடுக்கும்படி கெளகாப்பை மேலும் வற்புறுத்தினார்.

பத்திரிகையாளர்களிடம், "தலையிலணிந்த பர்தாவை நீக்க மறுத்தல் என்னை சோதிப்பதற்கு ஒத்துழையாமை என்று கருதுவதற்கு உகந்ததல்ல. அது எனது சொந்த மத நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் பிரதிபலிக்கிறது. நான் திரைமறைவிலோ, தனித்த இடத்திலோ பெண்களால் சோதிக்கப்பட்டால் பர்தாவை நீக்க சம்மதம் தெரிவிப்பேன்", என்று செல்வி கெளகாப் கூறினார்.

ஆரம்பத்தில் தேசிய காவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தொடர்ந்து கெளகாப்பிடம் பர்தாவை நீக்கும்படி வலியுறுத்தி, அவரது கோரிக்கையை மறுத்தனர்.

இல்லினாய்ஸ் ஏ சி எல் யூ வின் வழக்கறிஞரான லோரி சேய்ட்டன் (Lorie Chaiten) கூறியதாவது, "பாதுகாவல் பொறுப்பிலுள்ளவர்கள் மற்றும் தேசிய காவலர்கள் செல்வி கெளகாப்பின் மத நம்பிக்கைக்கு முற்றிலும் உணர்வற்றவர்களாக இருந்தனர்." எந்தப் பிரச்சினையும் இல்லாமல் செல்வி கெளகாப் உலோக சோதனைக் கருவியினூடாக கடந்து சென்ற பொழுதும் சோதனை தொடர்ந்தது மற்றும் சோதனையில் அவரது பர்தாவுக்குள் எதுவும் மறைத்து வைத்திருப்பதாக எந்த குறிகாட்டலும் இல்லை. இவ்வாறு சோதனை செய்யப்பட்ட தன்மையானது முற்றிலும் நியாயமற்றது".

பின்னர் கெளகாப் ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரண்டு பெண் பாதுகாவலர்களால் சோதனையிடப்பட்டார். அப்பொழுது ஆண் பாதுகாவலர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அது கெளகாப் மத நம்பிக்கை அடிப்படையில் மறுப்பைத் தெரிவிக்க நேர்ந்தது. இருப்பினும் அதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்திய பின்னர்தான் அவர் வெளியில் சென்றார்.

அவர் சென்றபின் சோதனை மேலும் மேலும் இழிவுபடுத்துவதாக இருந்தது. கெளகாப் பர்தாவை நீக்கினார். அவர்கள் தலையிலும் தலை முடியிலும் கைவிரல்களைப் பாய்ச்சி சோதனையிட்டனர். அவரது விருப்பத்திற்கு விரோதமாக அந்த இளம் பெண்ணின் ஆடைகளைக் களைந்தனர்.

பெண் பாதுகாவலர்களுடைய சோதனை மிகவும் வரம்பு மீறலாக இருந்ததென யோன்க்கா (Yohnka) கூறினார். "அவர்கள் அவருடைய குளிர் காப்பு உடையை திறந்து அவரது மார்பகங்களைக் கைகளால் தடவினர். பின்னர் ஒரு பெண்மணி காற்சட்டையின் பொத்தான்களை அகற்றி கையையும் வைத்து பின்னர் உள்ளாடையினுள்ளும் கைகளால் துழாவி அடிவயிற்றிலும் அதன் கீழும் கால்களுக்கிடையிலும் சோதனையிட்டார்".

"இந்தச் சோதனைக்குப் பின்னர் அவர் போகலாம் என அறிவித்தனர். சோதனைக் காலம் முழுவதும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ன எதிர்பார்கிறார்கள் என்பது உட்பட அவரிடம் ஏதும் கூறவில்லை" என்று யோன்க்கா மேலும் கூறினார்.

இன்னொரு ஏ சி எல் யூ வழக்கறிஞர் லோரி செய்ட்டன் வலியுறுத்திக் கூறியதாவது, "கெளகாப் இனம் காணப்பட்டு இழிவுகரமாக சோதனையிடப்பட்டது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் அல்ல மாறாக அவர் அணிந்திருந்த பர்தாவை வைத்து அவர் முஸ்லிம் பெண் என அடையாளப்படுத்தியதால்தான்." கெளகாப் இழிவான முறையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது "மத மற்றும் இன" அடிப்படையைத் தவிர இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்று சேய்ட்டன் கூறினார்.

கொலம்பஸிலுள்ள உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் கெளகாப் கூறியதாவது, "தான் அணிந்துள்ள துணி வெறும் ஆடைத் துணுக்கன்று அது என்னுடைய உடலின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் ஒன்றாகும்". எனவே இந்த 30 நிமிட சோதனை மிகவும் வரம்பு மீறலாகவும், தர்மசங்கடமாகவும், இழிவுபடுத்துவதாகவும் இருந்தது".

இல்லினாய்ஸ் ஏ சி எல் யூ சட்ட இயக்குனர் ஹார்வி கிராஸ்மென் (Harvey Grossman) பின்வருமாறு குறிப்பிட்டார், செப்டம்பர் 11லிருந்து குறைந்த பட்சம் 100 அமெரிக்க முஸ்லிம்களாவது துன்புறுத்தப்பட்டனர். வழக்கின் முடிவான வேண்டுதல் இனியாவது இம்மாதிரி நியாயமற்ற மத இன அடிப்படையில் அர்த்தமில்லாத சோதனையிடல்கள் மற்றும் கைப்பற்றல்கள் நிகழாதவாறு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கவேண்டும் என்பதாகும்.

அமெரிக்க அராபியர் வேறுபாடு தவிர்க்கும் குழுவின் (American Arabic Anti-Discrimination Committee (ADC) இணையதளம் அரபு அமெரிக்கர்களுக்கு எதிரான 520 வன்முறை நிகழ்ச்சிகளை செப்டம்பர் 11லிருந்து பதிவு செய்துள்ளது. காவலர்களால் நிகழ்த்தப்பட்ட சோதனைகளில் கொடுமைப்படுத்தப்படுதல், வேலை வாய்ப்பில் வேறுபாடு, பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் இறுக்கம், மற்றும் அரபு மாணவர்களோடு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆகியோரிடம் ஏற்படும் நூற்றுக்கணக்கான இனங்கள் மேற்கண்ட கணக்கில் உள்அடங்காது.

கெளகாப் வழக்கினைச் சுட்டிக்காட்டி, இம்மாதிரி நிகழ்ச்சிகள் நிகழும்போது இது மாற்றத்தைக் கொண்டுவரும் என நீங்கள் நம்பலாம் என்று யோன்க்கா உலக சோசலிச வலைதளத்திடம் கூறினார்.

இது நாடு முழுவதும் உள்ள வானூர்தி நிலையங்களில் பயிற்சிக்கு வழி அமைத்து சீர்திருத்தம் ஏற்பட வாய்ப்பளிக்கும் என நீங்கள் நம்புங்கள் என்று கூறினார்.

"இந்த வழக்கு அபிவிருத்தி அடைவதற்கான காரணங்களுள் ஒன்று அந்தப்பெண் தைரியமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தமையாகும்" என யோன்க்கா தொடர்ந்து கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved