World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Tamil separatist leader confirms readiness for deal with Sri Lankan regime

தமிழ் பிரிவினைவாதத் தலைவர் இலங்கை ஆளும் வர்க்கத்துடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு தனது தயார்நிலையை உறுதிப்படுத்துகிறார்

By our correspondents
17 April 2002

Back to screen version

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கையின் வடபகுதியில் கடந்த வாரம் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்காவினதும் ஏனைய பிரதான வல்லரசுகளினதும் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து நாட்டின் நீண்ட உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு சம்மதம் தெரிவிக்கும் சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபாகரன் 300க்கும் அதிகமான இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு பின்வருமாறு விளக்கமளித்தார்: "தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி ஒரு தொகை தப்பபிப்பிராயம் இருந்து கொண்டுள்ளது. நாம் அனைத்துலக ஊடகங்கள் மூலம் விடுதலைப் புலிகள் தம்மை சமாதானத்துக்கும் பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்வுக்கும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளதை விளக்க விரும்புகிறோம்." இதை வலியுறுத்துவதற்காக 12 வருடங்களின் பின் அவர் நடத்தும் பத்திரிகையாளர் மாநாட்டில் தனது வழக்கமான போர்க்கள சீருடைக்குப் பதிலாக ஒரு இளநீல சபாரி உடையுடன் தோன்றினார். விடுலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் ஒற்றுமையை வெளிக்காட்டும் முகமாக, அவர் விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரும் பிரித்தானியாவில் இடம்பெயர் வாழ்க்கையில் இருந்து சற்று முன் நாடு திரும்பியவருமான அன்டன் பாலசிங்கத்தையும் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தமிழ்ச் செல்வனையும் தன் இருபுறங்களிலும் அமர்த்தியிருந்தார்.

பேச்சுவார்த்தையின் மையமாக, பெரும் வல்லரசுகளின் வற்புறுத்தலின் பேரில் தீவின் வட கிழக்கில் ஒரு தனித் தமிழ் அரசுக்கான விடுலைப் புலிகளின் நீண்டகாலக் கோரிக்கையை கைவிடுவது விளங்கியது. இந்த விடயம் விடுதலைப் புலிகளுக்குள்ளேயே பிரிவுகளை ஏற்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழியாக ஒரு தனியான தமீழீழத்தை இடைவிடாமல் கோரிவந்த விடுதலைப் புலிகள், ஜூன் மாதம் தாய்லாந்தில் பேச்சுவார்த்தை மேசையில் அமரப்போவது இந்தக் கோரிக்கை நிகழ்ச்சி நிரழில் இருந்து அகற்றப்பட்டுள்ளதை மறைமுகமாக புரிந்து கொண்டேயாகும்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தாம் முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளை தெளிவாக கிரகித்துக்கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் ஒரு சுதந்திர அரசை "கைவிடுமா" எனக் கேட்டபோது, பிரபாகரன் அந்தக் கேள்வியில் அடைபட்டுப் போனார். அவர் "ஒரு சுதந்திர அரசு சம்பந்தமான விடயத்தை கைவிடவேண்டிய சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை எனவும், ஈழத்துக்கான போராட்டம் தமிழ் மக்களின் கோரிக்கையேயாகும்" என பதிலுரைத்தார். அதே நேரம், எவ்வாறாயினும் அவர் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சிக்கான கொழும்பின் முன்மொழிவுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு இடம் கிடைக்குமானால் இந்தக் கோரிக்கையை கைவிடலாம் என மிகவும் சரியான வார்த்தைகளில் பிரகடனப்படுத்தினார்.

அவர் "சுயநிர்ணயம்" என எதை அர்த்தப்படுத்துகிறார் எனக் கேட்டபோது பிரபாகரன் பின்வருமாறு குறிப்பிட்டார்: "எமது மக்களுக்கு சுயாட்சியும் சுய அரசாங்கமும் வழங்கப்படுமேயானால், உள்நாட்டில் ஓரளவுக்கேனும் சுய நிர்ணயம் வழங்கப்பட்டுள்ளதென நாம் கூற முடியும். ஆயினும் இலங்கை அரசாங்கம் சுயாட்சிக்கும் சுய அரசாங்கத்துக்குமான எமது கோரிக்கையை நிராகரித்து ஒடுக்குமுறையை தொடருமேயானால், கடைசி முறையாக நாம் பிரிந்து செல்வதற்கான முடிவை தேர்ந்தெடுத்துக் கொள்வோம்... ஆகவே சுயநிர்ணயம் என்பது சுயாட்சியையும் சுய அரசாங்கத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. ஒரு தீவிரமான நிலைமையில், இறுதிக் கட்டத்தில், அது பிரிந்து செல்வதைக் குறிக்கும்" என்றார்.

தனது சொந்த ஸ்தாபனத்துக்குள்ளான இதன் தாக்கத்தை கருத்தில் கொண்ட விடுதலைப் புலிகள், இந்தச் செய்தியை மூடி மறைக்கும் முயற்சியாக "பிரபாகரனே தமிழீழத்தின் ஜனாதிபதியும் பிரதமருமாகும்" எனக் கூறிவரும் அதேவேளை தான் எப்போதாவது ஈழக் கோரிக்கையை கைவிட்டால் தனது படையினர் அவரை சுடவேண்டும் என்ற கொரில்லா தலைவரின் பிரகடனத்தையும் மீள வலியுறுத்தி வருகிறது. எவ்வாறெனினும், கொழும்பு இந்த அதிகளவிலான நாடகபாணியிலான சமிக்ஞைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளதுடன் பிரபாகரனால் கூறப்பட்ட கருத்துக்களை பெருமையுடன் வரவேற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனின் குறிப்புகளில் இருந்து "ஒரு அரசியல் தீர்வை நோக்கிய பல கருத்துக்களை" புகழ்ந்துரைத்துள்ளார்." கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் "சமாதானத்துக்கும் பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்வுக்குமான" விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பை வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அத்துடன் நோர்வேயின் பிரதி வெளிநாட்டமைச்சர் தாய்லாந்து பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை தயார் செய்வதற்காக இலங்கை வந்துள்ளார்.

பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதாக வாயடித்துக் கொள்ளும் அதேவேளை விடுதலைப் புலிகளின் வேலைத் திட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பிரதிபலிப்பதாக இல்லை. 1970 களின் ஆரம்பத்தில் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து தமிழர் விரோத பாரபட்சங்கள் உக்கிரமாக்கப்பட்ட நிலைமையில் ஒரு சோசலிச முன்நோக்கிற்கு எதிராக, ஒரு தனித் தமிழ் அரசுக்கான கோரிக்கை அபிவிருத்தி கண்டது. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிங்கள தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்தின் பேரிலான ஒரு வர்க்க அடிப்படையிலான தீர்வை எதிர்த்து வந்த அதேவேளை அதற்குப் பதிலாக, ஒரு சுதந்திர ஈழத்துக்காக அழைப்பு விடுத்தனர் -இது தங்களது சொந்த முதலாளித்துவ அரச அமைப்புக்கான தமிழ் முதலாளித்துவ வாதிகளின் குறிக்கோள்களைப் பிரிதிநிதித்துவம் செய்யும் ஒரு பிரேரணையாகும்.

இந்திய உபகண்டத்தின் ஸ்திரநிலைமையின் மீது அது தோற்றுவிக்கவிருக்கும் தாக்கத்தை கணக்கில் கொண்ட அமெரிக்காவும் ஏனைய பிரதன வல்லரசுகளும் ஒரு தனி ஈழத்தை உறுதியாக நிராகரித்தன. இதன் பெறுபேறாக தமிழீழ விடுதலைப் புலிகள், முறையான தமிழர் விரோத பாரபட்சங்களையும் பத்தொன்பது வருடகால உள்நாட்டு யுத்தத்தையும் முன்னெடுத்து வந்த கட்சிகளுடன், ஒரு ஐக்கிய இலங்கை அரசின் வறையறைக்குள் ஒரு அதிகார பகிர்வு திட்டத்துக்கான பேச்சுவார்த்தைகளுக்கு தயார் செய்துகொண்டுள்ளது.

விடுதலைப் புலிகள் செப்டம்பர் 11ம் திகதிக்கு பின்னர் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்ததை பிரபாகரன் மறுத்துள்ளார். அவர் தன்னைக் காத்துக்கொள்வதற்காக தனது வழிக்கு அப்பால் சென்று அமெரிக்காவுடனும் ஏனைய வல்லரசுகளுடனும் இணைந்துகொண்டுள்ளார். உலக சோசலிச வலைத் தள நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமெரிக்க கொள்கை மற்றும் குறிப்புகள் சம்பந்தமான எந்த ஒரு விமர்சனத்தையும் தவிர்த்துக் கொண்ட அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "நாம் அமெரிக்காவுக்கும் அல்லது ஏனைய அரசுகளின் அனைத்துலக ஒழுங்கமைப்புகளுக்கும் கொழும்புக்கும் இடையிலான வளர்ச்சியடைந்து வரும் ஒத்துழைப்பை கண்டனம் செய்ய முடியாது" எனக் குறிப்பிட்டார். அவர் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் பேரிலான புஷ்சின் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு", விடுதலைப் புலிகளின் ஆதரவை மீண்டும் வெளிப்படுத்திய அதே வேளை விடுதலைப் புலிகளை ஓர் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்த வேண்டாமென பரிதாபமாக வேண்டுகோள் விடுத்தார்.

பிரபாகரன் வடக்கு கிழக்கில் இரண்டு வருடகால இடைக்கால நிர்வாகம் ஒன்றுக்கான -விடுதலைப் புலிகள் ஆட்சி செலுத்த எதிர்பார்த்திருக்கும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை- அரசாங்கத்தின் பிரேரணைக்கு தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். அவர் "இரண்டு வருடங்களின் பின்னர் ஒரு முழு அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிவகுப்பதன் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளை பலப்படுத்த வேண்டும்" எனக் கூறியதன் மூலம் விக்கிரமசிங்க மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார். விக்கிரமசிங்க ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினதும் எதிர்க்கட்சியான அவரது பொதுஜன முன்னணியினதும் (PA) மற்றும் விடுதலைப் புலிகளுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வையும் எதிர்க்கும் சிங்கள தீவிரவாத அமைப்புக்களதும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

"உள்நாட்டு சுயநிர்ணயம்" தொடர்பான ஒப்பந்தத்தின் உண்மையான நிபந்தனைகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் பிரபாகரனது பல கூற்றுகள், அவை தமிழ் அல்லது சிங்கள சாதாரண உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினரது நலன்களுக்கு சார்பானவையல்ல என்பதை நன்கு தெளிவுபடுத்துகின்றன. அது அதைவிட, தமிழ் மக்களுக்கு இடையில் விடுதலைப் புலிகள் வகிக்கவுள்ள பொலிஸ்காரப் பாத்திரத்தோடு, தொழிலாளர் வர்க்கத்தை கூட்டுச் சேர்ந்து சுரண்டும் இரண்டு ஆளும் கும்பல்களுக்கிடையிலான ஒரு திட்டமாகவே விளங்கும்.

விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாகத்தில் ஆட்சி செலுத்துவார்களேயானால் அவர்களது வேலைத்திட்டம் எவ்வாறானதாக இருக்கும் எனக் கேள்வி எழுப்பியபோது, பாலசிங்கம் அது "திறந்த பொருளாதாரக் கொள்கையை" பின்தொடரும் எனத் தெரிவித்தார். இது கொழும்பை போலவே விடுதலைப் புலிகளும் சந்தைப் பொருளாதார கொள்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தினதும் அனைத்துலக முதலீட்டாளர்களதும் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வதாக அனைத்துலக மூலதனத்துக்கு விடுக்கும் தெளிவான செய்தியாகும்.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நீடித்த யுத்தம், யுத்தப் பிரதேசமான விசேடமாக வடக்கிலும் கிழக்கிலும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 60,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு பெரும்பாலானவர்கள் காயமடைந்துள்ளனர் அல்லது இடம்பெயர்ந்துள்ளனர். இப்பிரதேசங்களில் பல பாதைகளும் வீடுகளும் உட்கட்டமைப்பும் உடைந்து நாசமாகியுள்ளன. இவ்வாறான நிலைமைகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு தமது மூலதனத்தை திணிக்கத் தூண்டும் ஒரே ஒரு காரணி, கொழும்புடன் சேர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவர்களும் வழங்க முன்வரும் குறைந்த கூலியிலான ஒழுக்கமான தொழிலாளர் படை மாத்திரமேயாகும்.

அவ்வாறான ஒரு நிலைமையில், விடுதலைப் புலிகள் அரசியல் எதிராளிகளுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த மறுப்பது விசேடமான உள்நோக்கத்தைக் கொண்டதாகும். உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) நிருபர் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் ஏனைய அரசியல் அமைப்புகளை இயங்க அனுமதிக்குமா எனக் கேட்டபோது, முதலில் அதை ஏற்றுக்கொண்ட பாலசிங்கம், பின்னர் தமிழ் இயக்கங்கள் அனுமதிக்கப்படும் எனக் கூறி தனது கூற்றை திருத்திக் கொண்டார். தொழிலாளர் வர்க்கக் கட்சிகள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைப் பற்றிக் கேட்டபோது அவர் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறியபோதிலும் விடுதலைப் புலிகள் ஒரு அதிகாரத்தைக் கொண்டிருப்பர் எனவும் சுட்டிக்காட்டினார். அவர் "ஒரு விடுதலைப் போராட்டமானது" சில உரிமைகளைத் தடுக்கும் எனக் கூறியதன் மூலம் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஜனநாயக உரிமைகள் வெட்டித் தள்ளப்பட்டுள்ளதை நியாயப்படுத்தினார்.

விடுதலைப் புலிகள் அடிக்கடி தம்மை "தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக" உரிமை கோருவது முற்றிலும் ஜனநாயக விரோதமானதாகும். ஸ்தாபன ரீதியிலான பல தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் தமது அரசியல் இருப்பை புறந்தள்ளி விடுதலைப் புலிகளின் மேற்குறிப்பிடப்பட்ட கூற்றை ஏற்றுக்கொண்டுள்ளதையிட்டு பிரபாகரன் திருப்தியடைந்துள்ளார். ஆனால் விடுதலைப் புலிகள் தமிழ் குழுக்களது பின்னனியைப் பெற்றுக்கொண்டிருப்பினும் கூட, தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் ஒழுங்குமுறையான வாழ்க்கைத் தரத்தையும் மற்றும் அவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவர்களால் பூர்த்தி செய்யமுடியாது போகும். விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தனது கொள்கைகள் மீதான எந்த ஒரு எதிர்ப்பையும் நசுக்கி இல்லாமல் செய்வதை இலக்காகக் கொண்டவையாகும்.

இதற்கும் மேலாக "உள்நாட்டு சுயநிர்ணயத்துக்கான" திட்டங்கள் மேலும் பல இனவாத பதட்டநிலைமைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் வழிசமைக்கும். இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசம் கணிசமானளவு சிங்கள முஸ்லிம் சமூகத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. பிரபாகரன் 1990களின் முற்பகுதியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து மூர்க்கத்தனமாக வெளியேற்றியமைக்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டதோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்தார். ஆனால் தீவின் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் அடக்குமுறைகள் பற்றியும் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான கரிகாலன் முஸ்லிம்களுக்கு காணிகளை வைத்திருக்கும் உரிமையை மறுத்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதிலும், இவ்வாறான சம்பவங்கள் இனவாத அடிப்படையிலான எந்தவொரு ஒப்பந்தமும் தொழிலாளர் வர்க்கத்துக்கு வழங்கவுள்ள ஆபத்துக்களை சுட்டிக் காட்டுகின்றன.

பாலசிங்கத்தின் ஒரு கூற்று இந்த ஆபத்தினை கோடிட்டுக் காட்டியது. ஒரு ஊடகவியலாளர் மத்திய கிழக்கு ஒஸ்லோ உடன்படிக்கையின் விளைவுகள் நோவேஜிய மத்தியஸ்தத்தை கேள்விக்கிடமாக்க வில்லையா எனக் கேள்வியெழுப்பினார். அந்த ஒப்பீட்டை வெறுப்புடன் நிராகரித்த பாலசிங்கம், "பாலஸ்தீனிய பிரச்சினை மேலும் கஷ்டத்துக்குள்ளாகியதைப் பற்றி நாம் அறிவோம். ஆனால் எமது பிரச்சினை முற்றிலும் வேறுபட்டது" எனக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் மத்திய கிழக்குக்கும் இடையே குறிப்பிடத் தக்க வேறுபாடுகள் இருந்துகொண்டுள்ள போதிலும், விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் வெளிக்காட்ட விரும்பாத பல ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றன. அரபாத்தை போல பிரபாகரனும் அதே வழியில் மத்திய கிழக்கில் அழிவைத் தோற்றுவித்த பெரும் வல்லரசுகளின் கைகளில் தமிழ் மக்களின் எதிர்காலத்தை ஒப்படைத்துள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved