World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

Indian union leaders open the door for tough austerity measures in Kerala

இந்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கேரளாவில் கடும் கெடுபிடி நடவடிக்கைகளுக்காக கதவு திறந்து விட்டனர்

By Ram Kumar
2 April 2002

Back to screen version

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட 32 நாட்களாக நடைபெற்று வரும் வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்கான தொழிற்சங்கத் தலைவர்களின் முடிவானது, முதலமைச்சர் ஏ.கே. அந்தோனி தலைமையிலான மாநில அரசாங்கம் அதன் பாரதூரமான கெடுபிடிக் கொள்கைகளை முன்னெடுப்பதற்கு பச்சை விளக்குக் காட்டி இருக்கிறது.

மார்ச் 25 அன்று ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) உயர் அதிகாரக் குழுவானது, ஆசிய அபிவிருத்தி வங்கி செயல்முறை ஏற்பாடு உட்பட, வெளியார் உதவி செயல்முறை ஏற்பாடுகளுடன் மேற்கொண்டு செல்வதற்கு முன்மொழிவுகளை அங்கீரித்துள்ளது. அதன் மூலம் பொருளாதார மறுசீரமைப்பு நடைபெற இருக்கிறது.

உயர் அதிகாரக் குழுவானது ஓய்வூதிய உரிமைகளைக் மற்றும் பணியாளர்களின் ஏனைய நலன்களைக் குறைத்தலுக்கு பரிந்துரை செய்து, "நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில்" "அளவுக்கு அதிகமாக உள்ள பணியாளர்களை" ஒட்டுமொத்தமாய் பணியில் இருந்து அகற்றுவதற்கு வழி அமைத்தது. இக்குழுவானது 50க்கும் குறைவான மாணவர்களை உடைய - "கட்டுப்படி ஆகாத" பள்ளிகளை மூடுவதற்கான அழைப்பையும் கூட விடுத்தது. 60,000 வேலைகள் அழிக்கப்பட இருக்கின்றன மற்றும் 1,200 பள்ளிகள் மூடப்படவிருக்கின்றன.

மார்ச்9 அன்று வேலைநிறுத்த முடிவினைப் பின்தொடர்ந்து அறிவிப்புக்கள் வந்தன. தொழிற்துறை ரீதியான பிரச்சாரமானது தொழிற்சங்கங்களின் கூட்டுப் பேரவையால் தலைமை வகிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் (இ) உட்பட ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளுடன் உறுப்பாக இணைந்துள்ள தொழிற்சங்கங்கள், மற்றும் இம்மாநிலத்தில் முன்னர் ஆட்சியில் இருந்த, எதிர்க் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- மார்க்சிஸ்ட் (சி.பி.ஐ (எம்)) ஆகிய இரண்டையும் சார்ந்த தொழிற்சங்கங்கள் உள்ளடங்குவன.

இவ்வேலை நிறுத்தமானது ஜனவரி மத்தியில் அந்தோனி அரசாங்கம் 28 மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பொதி ஒன்றை அறிவித்த பின்னர் பிப்ரவரி 6ல் வெடித்தது. இவற்றில் உள்ளடங்குவன: "அளவுக்கு அதிகமான பணியாளர்கள்" வெட்டிக் குறைக்கப்படல், அனைத்துத் தற்காலிக பணிநிலைகளையும் ரத்துச் செய்தல், "கட்டுப்படி ஆகாத பள்ளிகளை" மூடல், "கட்டுப்படி ஆகாத பள்ளிகளில்" பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அரசாங்கப் பணியாளர்களுக்கு தானாக முன்வந்து ஓய்வு பெறல் என்று கூறப்படும் திட்டம், இந்த ஆண்டில் வீடு அல்லது வாகனத்திற்கு கடன் வசதிகள் இல்லை மற்றும் புதிதாகப் பணியில் சேருபவர்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு அடிப்படை மட்டத்தில் சம்பளத்தில் ஆப்பு வைத்தல் ஆகியனவாகும்.

பணிஓய்வு பெறுபவர்களுக்கு (இளைப்பாறுவோருக்கு) நிதிச்செலவினங்களை வெட்டும்முகமாக, அரசாங்கமானது ஓய்வூதிய பிடித்தவீதத்தை 4.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதம் வரை உயர்த்தியதுடன், பணி ஓய்வு பெற்றவர்கள் முழு ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருத்தலை அறிமுகப்படுத்தியது மற்றும் புதிய ஆட்சேர்ப்புகளுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைத் திணித்தது.

முதலமைச்சர் அந்தோனி வேலைநிறுத்தம் தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தைகளையும் நிராகரித்தார் மற்றும் போலீஸ் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார். அவர் முதல் நாளன்றே, "அவர்கள் வேலைநிறுத்தத்தை நீண்டகாலத்துக்கு தொடர முயற்சித்தால் வேலைநிறுத்தம் செய்யும் தொழிற்சங்கங்கள் தனிமைப்படுத்தப்படும் மற்றும் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெறும்படி நிர்ப்பந்திக்கப்படும்" என்று எச்சரித்தார். அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிறைவைக்கப்பட்டனர். இச்சட்டத்தைப் பயன்படுத்துவது இந்த மாநிலத்தின் வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவை ஆகும். மேலும் நூற்றுக் கணக்கானோர் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

அந்தோனி கிராமப்புற ஏழைகளையும் சிறு விவசாயிகளையும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தவும் கூட முயற்சி செய்தார். கெடுபிடிக் கொள்கை நடவடிக்கையின் மூலம் மிச்சமாகும் 5 பில்லியன் ரூபாய்களை (103 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) விவசாயிகளுக்கு உதவுவதற்காக உறுதிகொடுத்து, "மற்றவர்கள் துன்பப்படும் அதேவேளையில் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நாம் அனுமதிக்க முடியாது" என்று கூறினார். கேரள போலீஸ் தலைமை அதிகாரியும் கூட "வேலைநிறுத்தத்தை எதிர்கொள்வதற்கு" மற்றும் வேலைநிறுத்தத்தை உடைப்பவர்களுக்கு உதவுவதற்கு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் இருப்பினும், வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு வளர்ந்தது. வங்கிகள் சங்கத்தின் ஐக்கிய அவை வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளித்ததுடன் வங்கிகள் மூலம் கருவூல நடவடிக்கைகளை நடத்துவதற்கான முயற்சிகளை நிராகரித்தன. வேலைநிறுத்தம் தொடர்பான விஷயத்தில் நான்கு பணியாளர்களை தற்காலிக வேலை நீக்கம் செய்ததை எதிர்த்து கேரள நீர் நிர்வாகத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். விற்பனை வரி அலுவலர்கள் எதிர்ப்பில் கலந்து கொண்டதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைகளில் நூற்றக்கணக்கான வாகனங்கள் குவிந்து போயின. கல்வி நிறுவனங்களும் அலுவலகங்களும் பலநாட்கள் மூடப்பட்டன.

மார்ச் 4 அன்று, கேரள நீதிமன்றம் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஆணையிட்டது. அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குதற்கு வசதியாக நீதிமன்ற நடவடிக்கைகளை நாடியது மற்றும் அதேவேளை நிர்வாகம் வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை தனது அரசியல் ஆதரவாளர்களைக் கொண்டு பதிலீடு செய்ய பணியில் அமர்த்த முயற்சித்தது. மாநில ஆளுநர் சுக்தேவ் சிங் காங், கேரளாவை இன்னும் முதலீட்டாளருக்கு சாதகமான நிலைக்கு மாற்றும் கண்ணோட்டத்துடன் "சட்டவிரோத தொழில் நடைமுறைகளை" தடுப்பதற்கு வேண்டி, "இறக்கும் தறுவாயில்" உள்ள தொழிற்சட்டத்தில் மாற்றங்களை செய்ய சட்டவல்லுநர்களைக் கொண்ட அங்கம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று எச்சரித்தார்.

இருப்பினும், இந்த நடவடிக்கைகள் வேலைநிறுத்தம் செய்தவர்களை அச்சுறுத்திப் பணியவைக்கத் தவறின. காங்கிரஸ் (இ) தலைமையிலான தொழிற்சங்கங்களில் சேர்ந்திருந்த பல சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்கிக் கொண்டன. ஆனால் எஞ்சிய சங்கங்கள் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மார்ச் 5 அன்று, பந்த் மூடலுடன் (பரந்த எதிர்ப்புக்களுடன்) சேர்ந்த 24 மணிநேர பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு நிர்பந்திக்கப்பட்டன. தொழில்துறை நடவடிக்கையானது மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொழில்துறை நிறுவனங்களை, வங்கிகளை, காப்பீட்டு நிறுவனங்களை, அஞ்சல் சேவைகளை மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களை அதேபோல பல கடைகளை மற்றும் அலுவலகங்களை மூடியது. மருத்துவப் பணியாளர்கள் கூட நடவடிக்கையில் இறங்கப்போவதாக அச்சுறுத்தினர்.

தொழில்துறை அமைதியின்மையை ஏனைய மாநிலங்களுக்கும் தூண்டிவிடும் உள்ளுறை ஆற்றலைக் கொண்டிருந்த, இவ்வேலைநிறுத்த நடவடிக்கை தொடர்வது, ஆளும் வட்டங்களில் ஆழ்ந்த கவலைகளைத் தூண்டிவிட்டது. முன்னாள் காங்கிரஸ்(இ) முதலமைச்சர் கருணாகரன் மார்ச்6 அன்று பின்வருமாறு எச்சரித்தார்: "எல்லாம் இயங்காது நின்றுபோதல் வரும் அளவுக்கு வேலைநிறுத்தத்தைத் தொடரவிடுவது உசிதமானது அல்ல. அவர், "தொழிற்சங்கங்கள் நம்பிக்கையுடன் எடுத்துக்கொள்ளச் செய்வதன் மூலம் வேலைநிறுத்தத்தைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்க்ைகளை எடுக்க" மாநில அரசாங்கத்தை அழைத்தார்.

காங்கிரஸ் (இ) கட்சியானது அரசாங்கத்தையும் தொழிற்சங்க தலைவர்களையும் சந்திப்பதற்கு, அதன் மூத்த தேசிய செயலாளர்களுள் ஒருவரான குலாம்நபி ஆசாத்தை புதுதில்லியிலிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைத்தது. அவர் இந்த வேலைநிறுத்தத்தைக் கருச்சிதைக்க முக்கியப் பாத்திரம் ஆற்றினார். அந்தோனி, வேலைக்குத் திரும்பு முன்னர் பேச்சுவார்த்தைக்கு மறுத்த நிலையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். சிலமணி நேரங்களுக்குள், காங்கிரஸ்(இ) மற்றும் சி.பி.ஐ(எம்) தொழிற்சங்க அலுவலர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு விரைந்தனர் மற்றும் முதலமைச்சர் வகுத்த நிபந்தனைகளுக்கு உடன்பட்டனர்.

அந்தோனி பல சிறிய திருத்தங்களுக்கு உடன்பட்டார்- ஓய்வூதிய பிடித்தங்களில் முன்மொழியப்பட்ட அதிகரிப்பில் குறைப்புக்கும் மற்றும் ஓய்வூதிய சம்பளத்தில் குறைப்பிற்கும் அல்லது திட்டமிட்ட சம்பளவெட்டுக்களில் குறைப்பு -மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றி மேலும் பேச்சுக்களை நடத்துவதாக உறுதி அளித்தார். இந்த மேலீடான உறுதிமொழிகள், வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொள்வதற்கு, பரவிவரும் தொழில்துறை நடவடிக்கை பற்றி அரசாங்கத்தைப் போலவே ஆர்வம் கொண்டிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கின.

சி.பி.ஐ (எம்) ஸ்ராலினிஸ்டுகள் உட்பட, தொழிற்சங்கத் தலைவர்கள் ஒருவர் கூட, "வெளிநாட்டு முதலீட்டுக்கான சூழலை" உருவாக்குவதற்கான மாநில அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்புக் கொள்கைகளுக்கு அடிப்படை ரீதியாக உடன்பாடின்மையைக் கொண்டிருக்கவில்லை.

இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பு உலகவங்கியுடன் சேர்ந்து செயல்நிலைப்படுத்தப்பட்ட, 10 இந்திய மாநிலங்களைப் பற்றிய அண்மைய ஆய்வு பின்வருமாறு முடித்தது: "ஏனைய இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது கேரளாவில் முதலீடு செய்வதற்கான சூழ்நிலை திருப்திகரமாக இல்லை." ஆய்வின்படி, கேரளாவானது அதன் நேரடிப் போட்டியாளர்களான ஏனைய தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுக்குப் பின்னால் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

கேரளாவை "மிகப் போட்டித்திறன் மிக்கதாக" செய்வது மாநிலத்தின் ஆளும் வட்டங்களில் -ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் அதைப்போலவே எதிரணியான சி.பி.ஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆகிய இருவருக்கும்- பெரிதும் அக்கறைக்குரியதாக இருந்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் தயாரிக்கப்பட்ட அண்மைய சி.பி.ஐ(எம்) பத்திரம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தினைத் தக்கவைத்திருக்கும் கட்சியை வெளிநாட்டு மூலதனத்தை நோக்கி திசைவழிப்படுத்துதற்கு வெளிப்படையாகவே சுட்டிக் காட்டுகிறது. இடது முன்னணியும் நமது பணிகளும் என்று தலைப்பிடப்பட்ட அது, " 'மக்கள் முதலாளித்துவத்தின்' சீன மாதிரியை அடிப்படையாகக் கொண்ட வங்காளத்தின் தொழில்துறைப் புதுப்பித்தலுக்கான நகல் திட்டத்திற்கு" அழைப்பு விடுக்கிறது.

கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் முன்னர் கேரளாவில் சி.பி.ஐ(எம்) பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சிப்போக்கை முன்னெடுத்தது. அவர்களின் ஆதரவாளர்களையும் உறுப்பினர்களையும் கொண்ட நிர்வாகமானது, "நிதிக்கஷ்டம் மற்றும் அளவுக்கு அதிகமான பணியாளர்கள்" காரணமாக அவர்களின் ஆதரவு பெற்ற கைரளி சானலில் 20 தொழிலாளர்களை மொத்தமாய் பணிநீக்கம் செய்தது, இவ்வாறு தற்போதைய வேலைநீக்கத் திட்டங்களுக்கான முன்னோடியை அமைத்துக் கொடுத்தது. மேலும் இடது முன்னணி அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுக்காக ஊடாடித் திரிந்தது. அக்கடன் அந்தோனியின் கெடுபிடி நடவடிக்கைகளுக்கான மேடையை அமைத்துக் கொடுத்தது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved