World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

A socialist strategy to oppose war and defend democratic rights

யுத்தத்தை எதிர்ப்பதற்கும் ஜனநாயக உரிமைகளை பேணுவதற்குமான ஒரு சோசலிச மூலோபாயம்

Issued by the Socialist Equality Party and the World Socialist Web Site
19 April 2002

Back to screen version

ஏப்ரல் 20 இல் வாஷிங்டன் DC இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தானிலான யுத்தம், ஐக்கிய அமெரிக்கா ஆதரவளிக்கும் மேற்குக் கரையிலான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்க அழைப்புவிட்ட கீழ்க்காணும் அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களால் வினியோகிக்கப்பட்டது.

''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்'' என புஷ் பிரகடனம் செய்து ஏழு மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை பாதுகாக்கும் ஒரு பூகோள பிரச்சாரமாக அது வடிவமெடுத்துள்ளது. அமெரிக்காவின் படுபிற்போக்கு ஆளும் பிரிவால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக -அமெரிக்க இராணுவத் தாக்குதலின் ஒரு விரிவாக்கம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு செப்டம்பர் 11 பயங்கரத் தாக்குதலினை வெள்ளை மாளிகை ஒரு முன்நிபந்தனையாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.

ஆப்கான் மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அமெரிக்க படைகள் முன்னாள் சோவியத் குடியரசுகளான Georgia, Uzbekistan, Tajikistan, Kyrgyzstan மற்றும் Kazakhstan மற்றும் அதேபோல் யேமன், பாகிஸ்த்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் விரைவாக அனுப்பப்பட்டுள்ளன. ஈராக்குக்கு எதிரான ஒரு இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்புகள் மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எண்ணெய் வளமிக்க நாட்டினை ஒரு அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்திற்காக திருப்பப்பட்டுள்ளன. பென்டகன் மற்றும் CIA (அமெரிக்க உளவு நிறுவனம்) கொலம்பியா, வெனிசுலாவில் அண்மையில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் அவர்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

அதிசக்திவாய்ந்த ஆயுத பலத்தினை ஒரு நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக பாவித்த பலமான வெளிப்பாட்டினை மேற்குக் கரையிலான இஸ்ரேலின் கொடூரங்களில் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. அதனது சொந்தக் கொள்கைகளால் உருவான வெறுப்படைந்த பயங்கரவாத நடவடிக்கைகளினை தனக்கு சார்பாக தவறான வகையில் பாவித்துக்கொண்டு, யூத அடிப்படைவாத அரசு பாலஸ்தீன மக்களின் அரசியல் மற்றும் சமூக அடிக்கட்டுமானத்தை அழிப்பதற்கு ஒரு யுத்தத்தை செய்துகொண்டிருக்கிறது. இது, ஷரோன் மட்டுமல்ல மாறாக புஷ் மற்றும் முழு அமெரிக்க ஆழும் பிரிவும் பொறுப்பு வகிக்கும் ஒரு வரலாற்றில் காணமுடியாத குற்றமாகும்.

அண்மைய நிகழ்வுகள் ஏகாதிபத்தியம் என்பது கடந்தகாலத்திற்கு உரிய ஒன்றில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றன. எண்ணெய் வளம் மற்றும் ஏனைய மூல வளங்கள் நிறைந்த பிராந்தியமான மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் முதலாவதாகவும், முக்கியமாகவும் ஐக்கிய அமெரிக்க ஆளும்பிரிவு பூகோள மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க முயல்கிறது. புஷ் நிர்வாகம் உலக சந்தையில் சவால் செய்ய முடியாத ஆளுமையையும் இலாபத்தின் திரட்சி மற்றும் தனிப்பட்ட செல்வத்தின் மீது அனைத்து கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க விரும்பும் கொடூரமான அமெரிக்க நிறுவனங்களினை பிரதிநித்துவப்படுத்துகிறது.

உள்நாட்டில் இது ஜனநாயக உரிமைகள் மீது என்றுமில்லாத ஒரு தாக்குதலினை செய்யும் வடிவமாக தோன்றுவதுடன், அரச ஒடுக்குமுறையை பலப்படுத்திக் கொண்டு, பீதி மற்றும் அச்சுறுத்தல் நிலைமைகளை சிருஷ்டித்துக்கொண்டுள்ளது. பேச்சு சுதந்திரம், உண்மையான விசாரணைகள், அந்தரங்க வாழ்வின் சட்டரீதியான உத்தரவாதத்தினை கீழறுக்கும் கட்டளைகளை நிறைவேற்றும் நிழல் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. அராப் மற்றும் முஸ்லீம் வெளிநாட்டவர்கள் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதுடன், வரையறையற்ற முறையில் வழக்கறிஞர்களை சந்திக்க முடியாதபடியும், குற்றம் ஒன்றும் சுமத்தப்படாமலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். மாற்று அரசியல் கருத்தானது ''பயங்கரவாதத்திற்கு உதவுவதுடன், உற்சாகப்படுதும்'' என முத்திரை பொறிக்கப்பட்டிருக்கிறது.

யுத்தத்திற்கு சார்பான மற்றும் தீவிர தேசியவாத உணர்வுகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் மற்றும் ஊடகங்களின் முயற்சிகள் இருந்தபோதும், உழைக்கும் மக்களின் உணர்வுகள் சற்று வித்தியாசமாக இருந்தன. வேலை நீக்கம், வளர்ச்சியடைந்து வரும் கடன்கள், உயர்ந்துவரும் உடல்நல பாதுகாப்பு செலவுகள், வீட்டு செலவுகள், பாடசாலைகளின் சீரழிவு மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஒரு நிரந்திரமான நிலை இவையனைத்தும் பற்றி அவர்கள் கவலையடைந்துள்ளனர். பெரும்பான்மையினர் அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்திருப்பதுடன், வெளிநாட்டின் மீதான இராணுவ பலாத்தகாரத்தினை சந்தேகத்துடனும் பயத்துடனும் பார்க்கிறார்கள்.

எப்படியிருந்தபோதும், தற்போது இருக்கும் அரசியல் கட்டுமானத்திற்குள் புஷ்ஷின் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேறு எந்த பாதையும் கிடையாது. அனைத்து முக்கிய கேள்விகளிலும் குடியரசுவாத மற்றும் ஐனநாயக கட்சிகளுக்கிடையில் இருந்த எந்தவொரு முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாடுகளும் காணாமல் போய்யுள்ளன. ஜனநாயக வாதிகள் புஷ்ஷின் வெளிப்படையான யுத்தக் கொள்கைக்கு உற்சாகம் நிறைந்த ஆதரவினை கொடுத்துள்ளனர், அல் கோர் மற்றும் ஜோசப் லீப்பெர்மான் (Joseph Lieberman) ஈராக்குக்கு எதிரான யுத்த பேரிகையை முழக்கிக்கொண்டு, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான ஷரோனின் குற்றங்களை பாதுகாத்துள்ளார்கள்.

பெரு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் செய்தியூடங்கள் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் CIA இன் பிரச்சார சாதனங்களாய் செயல்பட்டு வருவதை, ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வாஷிங்டனுக்கு வந்தவர்கள் அனைவரும் அறிவர். பொய்களையும், உண்மையினை உருச்சிதைப்பதையும் தவிர வேறு எதையும் செய்தி ஊடகங்கள் அளிப்பதில்லை. பொதுக் கருத்தினை கையாளுவதற்கும், சிறந்த வடிவில் குழப்புவதற்கும் விமர்சன பார்வைகளை அவர்கள் தணிக்கை செய்துவிடுகின்றனர்.

ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்ப்பதற்காகவும், அடிப்படை ஐனநாயக உரிமைகளை பேணவும் ஒரு வழியினை தேடுபவர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவ அரசியலுக்கான எதிரான ஒரு புரட்சிகர மாற்றீட்டை முன்வைக்கிறது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினாலும் மற்றும் ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அல்லது ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களுக்கு ஒரு முடிவினை கட்டிவிடமுடியாது.

பயனளிக்கவல்ல மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு யுத்த எதிர்ப்பு இயக்கத்திற்கு வரலாற்று படிப்பினை, அமெரிக்க சமூக கட்டுமானத்தினுள்ளான ஒரு தெளிவான அறிவு மற்றும் உலகப் பொருளாதார உறவுகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேலைத்திட்டம் அவசியமாக இருக்கிறது. அத்துடன் ஏகாதிபத்தியத்தினை விட மிகப் பலம்வாய்ந்த ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தினை அது அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

இராணுவ வாதமும், ஒடுக்குமுறையும், சமூக செல்வத்தை உற்பத்தி செய்பவர்களான பெரும்பான்மை மக்கள் சில சலுகை படைத்த சிறுபான்மையான சமூக தேவையை தமது சொந்த இலாபங்களுக்கு கீழ்படிய வைப்பவர்களாலும், உற்பத்திச் சாதனங்களை கட்டுப்படுத்துபவர்களாலும் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவாகும். உலகெங்கும் இலாப அமைப்பு பண்புமயமாக்கியிருக்கும் தொழிலாளர் மற்றும் முதலாளித்துவத்திற்கு இடையில் விரிந்துபோய்யிருக்கும் பொருளாதார வெற்றிடம், அரச ஒடுக்குமுறை மற்றும் இராணுவ பலாத்தகாரத்திற்கும் இடையில் ஒரு உயிர்ப்பு நிறைந்த தொடர்பு இருக்கிறது.

ஆகையால் யுத்தத்திற்கு எதிரான அரசியல் இயக்கம் முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக நெறிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அது, பெரு வர்த்தக முதலாளிகளின் இரு அரசியல் கட்சிகளான ஐனநாயக மற்றும் குடியரசுவாதிகளை எதிர்ப்பதற்கு சுயாதீனமான தொழிலாளர் வர்க்க இயக்கமாக இருக்க வேண்டும். அது, அனைத்து உழைக்கும் மக்களும் ஒரு பொதுவான ஒடுக்குபவருக்கு எதிராக புறநிலையாக ஐக்கியப்படுத்தும் அடிப்படையான கோட்பாட்டினை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும். அது, தேசியவாதம், இனம், இனவாதம் அல்லது மதங்களை அடிப்படையாக கொண்டிருக்கும் அனைத்து வேலைத்திட்டத்தையும் எதிர்க்கும் சர்வதேசியவாத நிலைப்பாட்டினை தழுவியிருக்க வேண்டும்.

ஏகாதிபத்திய யுத்தமானது சாதரணமாக அந்த அல்லது இந்த அரசியல் தலைவர்களின் அல்லது கட்சிகளின் கொள்கையல்ல. அது இலாப அமைப்பிலிருந்து எழுவதுடன், உலகத்தின் இயற்கை வளம், சந்தை மற்றும் உழைப்பு சக்தி மீதான கட்டுப்பாட்டினை பாதுகாப்பதற்கு பெரும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் ஊக்குவிக்கப்படுகின்றது. ஏகாதிபத்தியம் ஆளுமை செலுத்தும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை அல்லது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு அழைப்புவிடுவதால் அதை நிறுத்திவிட முடியாது.

உலக மக்களின் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் உலகப்பொருளாதாரம் கொண்டுவரப்பட்ட பின்னர்தான், யுத்தத்திற்கு இட்டுச் செல்லும் பொருளாதார மற்றும் தேசிய முரண்பாடுகளை இல்லாமல் செய்வதுடன், உண்மையான உலக அமைதியை ஸ்தாபிக்க முடியும். இந்த வழியில் மட்டுமே உலக உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொழில் நுட்பத்திலான சாதகங்ளை பயன்படுத்தி பிரமாண்டமான முறையில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஏழ்மை, நோய் மற்றும் அறியாமையை அடியோடு அகற்றுவதுடன், தேசங்களுக்கிடையிலான மற்றும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை இல்லாமல் செய்ய முடியும்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து உலக நிகழ்வுகள் பற்றிய அதனது அன்றாட ஆய்வுகளின் மூலம் இந்த முன்னோக்கை ஒரு சர்வதேச பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல போராடி வருகிறது. இணையத்தில் மிகவும் பரந்தளவில் படிக்கப்பட்டுவரும் சோசலிச வெளியீடாக உலக சோசலிச வலைத் தளம் இருந்துவருவதுடன், உலகெங்கும் ஒரு புதிய சர்வதேச சோசலிச இயக்கத்தினை உருவாக்க முயற்சிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு அணிதிரளும் புள்ளியாக இது உருவாகியிருக்கிறது.

உலக சோசலிச வலைத் தளத்தினை ஊக்குவிப்பதற்கும், அதனது வாசகர்களை கட்டியெழுப்புவதற்கு திடமாக பணியாற்றுவதற்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் நாம் உற்சாகப்படுத்துகிறோம். உலக சோசலிச வலைத் தளத்திற்கு நிதி ரீதியாக ஆதரவளிக்கவும், கட்டுரைகள் பங்களிப்பு செய்யவும் உங்கள் அனைவரிடமும் நாம் கோரிக்கைவிடுகிறோம். மேலும், சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தினை படிக்கவும், அதை கட்டியெழுப்பவும், அதில் இணையவும் உங்களை நாம் கோருகின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved