World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Israel and Washington debate murder of Arafat, destruction of Palestinian Authority

அரபாத்தைப் படுகொலை செய்வது பற்றியும் பாலஸ்தீனிய நிர்வாகத்தை அழிப்பது பற்றியும் இஸ்ரேலும் வாஷிங்டனும் விவாதிக்கின்றன

By Patrick Martin
1 April 2002

Back to screen version

ரமல்லா நகரை ஆக்கிரமிக்கவும் பாலஸ்தீனிய தலைவர் யாசிர் அரபாத்தின் தலைமையகத்தை முற்றுகையிடவுமான இஸ்ரேலிய தீர்மானத்தை அடுத்துப் பின்தொடர்ந்து புஷ் நிர்வாகமும் இஸ்ரேலிய அரசாங்கமும் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இயக்கப்படும் வன்முறையின் திடீர் அதிகரிப்பிற்காக தயார் செய்து வருகின்றன.

ஞாயிறு அன்று அமெரிக்கத் தொலைக்காட்சியில் தோன்றுகையில், பாலஸ்தீனிய அமைதிப் பேச்சாளர் சாயெப் எரெக்காத், அரபாத்தைக் கொலைசெய்வதற்கு ஷெரோன் திட்டம் மேற்கொண்டிருக்கிறார் என்று எச்சரித்தார். பெய்ரூட் முற்றுகையின்போது, 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீனிய தலைவர் அரபாத்தைக் கொல்லாததற்கு தான் வருத்தப்படுவதாக ஷெரோன் திரும்பத்திரும்ப விடுத்த அறிக்கைகளை மேற்கோள்காட்டி, எரெக்காத் கூறினார், "அவர் தலைவர் அரபாத்தைக் கொல்வார்", அத்தகைய நேர்வில், "இப்பொழுது நாம் கண்டுகொண்டிருப்பது நீருக்குள் மறைந்திருக்கும் பனிப்பாறையின் நீட்டிக் கொண்டிருக்கும் முனை போன்றது என்பதை நான் உறுதி கூற முடியும்."

சி.என்.என்- க்கு அளித்த தொலைபேசிப் பேட்டியில், அரபாத்தே அவர் வன்முறையின் இலக்கு அல்ல என்று கூறும் இஸ்ரேலிய கூற்றைக் கண்டித்தார். "ஏவுகணைகள் எனக்கும் என்னுடன் இருக்கும் எனது சகோதரர்களுள் எவருக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா? இது ஒரு பெரிய இஸ்ரேலிய பொய் ஆகும்."

"நான் எதிர்கொள்வது முக்கியமல்ல," பாலஸ்தீனிய தலைவர் தொடர்ந்து கூறினார்."எனது மக்கள் நாளும் பொழுதும் என்ன நிலைமையில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியம். நேற்று அவர்கள் (இஸ்ரேலியர்கள்) ஒன்பது பேரைப் படுகொலை செய்தனர். டாங்கிகள் மருத்துவமனைகளைச் சூழ்ந்து கொண்டுள்ளன மற்றும் காயம்பட்டவர்கள் அங்கு கொண்டு செல்லப்படாமல் தடுக்கப்படுகின்றனர்."

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பாலஸ்தீனிய போராளிகள் கைது செய்து கொண்டு போகப்பட்டு விசாரணை எதுவும் இல்லாமலே மரணதண்டனை விதிக்கப்பட்ட பல சம்பவங்களை அரபாத் குறிப்பிட்டிருந்தார். பிரிட்டிஷ் செய்தித்தாளான ஒப்சேர்வர், பாலஸ்தீனிய தலைவரைப் பாதுகாத்து வரும் உயர் சிறப்புப் படைப்பிரிவான படை 17-ன் ஐந்து உறுப்பினர்கள் அருகாமையிலான சுடு தொலைவில் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று செய்தி அறிவித்தது. காட்சியைக் கண்ட செய்தியாளரின் படி, "பாலஸ்தீனிய நிலைகளை இஸ்ரேலிய படைவீரர்கள் இடித்துத் தள்ளிய சில நிமிடங்களுக்குப் பின்னர், ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் ஐந்து பேர்கள், ஒவ்வொருவரும் தலை அல்லது தொண்டையில் மர்மத் தாக்குதல் விடப்பட்டு இறக்க விடப்பட்டனர்.

அமெரிக்க செய்தித்தாள்களின் செய்தியாளர்கள் இந்த மரணதண்டனைகளை உறுதிப்படுத்தினர். வாஷிங்டன் போஸ்ட்டின் டானியல் வில்லியம்ஸ், படுகொலைகளை நேரில் கண்டோரின் கூற்றுக்களை மேற்கோள் காட்டி மேலும் குறிப்பிட்டதாவது, "அவர்களது இறுதி நிலைகளில் இருந்து சுட்டிருப்பார்கள் என்பதற்கு எந்த அடையாளங்களும் இல்லை. அவர்களது உடல்கள் ஜனநாயகத்தை எங்கும் பரப்புதற்கான மையம் எனும் அலுவலகங்கள் முன்னால் அரங்கின் வழியில் காணப்பட்டன, ஆனால் அவர்கள் தஞ்சம் புக முயற்சித்திருப்பதாக காணப்படவில்லை."

இஸ்ரேலிய படைவீரர்கள் மருந்தக இயங்கிகள் (ஆம்புலன்ஸ்கள்) மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் மற்றும் ரமல்லாவில் உள்ள அரபு நல மருத்துவமனையை ஆக்கிரமித்திருந்தனர், "அத்தகைய தேடுதல்கள் யுத்தம் பற்றிய சர்வதேச விதிமுறைகளை மீறுவதாக இருந்தபோதிலும் அதனைச் செய்தனர். "இஸ்ரேலிய வீரர்கள் போஸ்டன் குளோப் செய்தியாளர் அன்டனி ஷதித் என்பவரைக் சுட்டுக் கடுமையாகக் காயப்படுத்தினர், பின்னர் இராணுவ நிர்வாகிகள் சண்டையை மேலும் செய்தி கவனிப்பிற்கு ஆளாகாதிருக்கும்படி தடுக்க செய்தியாளர்களுக்கு ரமல்லாவை மூடினர்.

ஞாயிறு அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் பிரதமர் ஏரியல் ஷெரோன் இஸ்ரேல் பாலஸ்தீனியப் போராளிகளுடன் போரில் உள்ளதாக அறிவித்தார். "இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை வேரோடகற்ற, அவர்களின் உள்கட்டமைப்பைத் தரைமட்டமாக்க, சமரசத்திற்கு இடங்கொடா யுத்தத்தில், நாங்கள் இந்த பயங்கரவாதத்தினை எதிர்த்துக் கட்டாயம் போராட வேண்டும், ஏனெனில் பயங்கரவாதிகளுடன் சமரசம் இல்லை," என்றார் அவர். "இந்த பயங்கரவாதம் ஒரு மனிதனால், பாலஸ்தீனிய நிர்வாகத்தின் தலைவர் அரபாத்தால் தூண்டி விடப்பட்டது, ஒருங்கிணைக்கப்பட்டது மற்றும் இயக்கப்பட்டது."

அரபாத்தை அத்தகைய பூதமாக்குதல், ரமல்லாவை ஆக்கிரமித்தல் மூலம் பாலஸ்தீனிய தலைவரை "தனிமைப்படுத்துவதற்காக மட்டும்" கொல்வதற்காக இலக்கு வைக்கப்பட்டதல்ல என்று திரும்பத் திரும்பக் கூறப்படும் இஸ்ரேலின் மீள உறுதிப்படுத்தல்களை பொய்யாக்குகின்றது. ஷெரோன் மற்றும் ஏனைய தலைவர்களின் அறிக்கைகளில் இருந்து பெறப்படும் தர்க்கரீதியான ஒரே முடிவு வாஷிங்டனிடமிருந்து பச்சை விளக்கு காட்டப்பட்டதும் அரபாத் கொல்லப்படுவார் என்பதுதான்.

புஷ் நிர்வாகமானது, மேற்குக் கரையிலும் காசா பாலைநிலப் பகுதியிலும் இஸ்ரேலிய அதிகரிப்புக்கான தமது ஆதரவின் தெளிவான சைகைகளை அனுப்பி உள்ளது, குறிப்பாக சனிக்கிழமை அன்று டெக்சாஸ், கிராபோர்டில் அவரது பண்ணைக்கு அழைக்கப்பட்ட செய்தியாளர்களுக்கான புஷ்ஷின் சொந்த கருத்துக்களில் தெளிவான சைகைகளை அனுப்பி இருக்கிறார். அவர் நெருக்கடிக்கு அரபாத் மற்றும் பாலஸ்தீனிய நிர்வாகத்தினை பிரத்தியேகமாகக் குறை கூறினார் மற்றும் "இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான எந்த முடிவுகளையும் எடுக்கும்" என்று கூறிக் கொண்டு, இஸ்ரேலிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையையும் முக்கியமாக விமர்சிக்க மறுத்தார்.

இஸ்ரேலிய இராணுவம் அரபாத்தையும் சுற்றி வளைக்கப்பட்டு ரமல்லாவில் சக்திமிக்க வகையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரது நெருங்கிய உதவியாளர்களையும் கொல்வதற்கு இன்னும் நகரவில்லையானால்-- புஷ் நிர்வாகம் இன்னும் அந்நடவடிக்கைக்கு அதன் இசைவை வழங்காததன் காரணத்தினால் மட்டுமே ஆகும். வெள்ளை மாளிகையானது, முறையே, இறுதி முடிவை தாமதப்படுத்திக் கொண்டு, அதேவேளை அது ஐரோப்பிய அரசாங்கங்களிடமிருந்தும் மத்திய கிழக்கில் அரபு ஆட்சியாளர்களிடமிருந்தும் அரசியல் முகமூடியையும் ஆதரவையும் பெறுவதற்கு நாடுகின்றது.

வாஷிங்டனின் தயக்கமானது படுகொலை அரசாங்கக் கொள்கையாக இருப்பது பற்றிய குமட்டலைப் பிரதிபலிக்கவில்லை. அமெரிக்கா, பாலஸ்தீனிய தலைவர்களைக் கொல்லும் ஷெரோனின் கொள்கையை வெளிப்படையாக ஆதரித்து வருகின்றது. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய வன்முறையானது, பாக்தாத் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு அளிப்புக்களுக்கான வளங்கள் மற்றும் இராணுவ தளங்களாக சேவை செய்யும் அரபு ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் கொந்தளிப்புக்களைத் தூண்டி விடுவதன் மூலம், ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க வன்முறைக்கான திட்டங்களை குறுக்கே வெட்டி விடும் அல்லது தகர்த்தெறிந்துவிடும் என்பது அதன் கவலையாக இருக்கிறது.

மேற்குக் கரையிலும் காசாவிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் அரபாத் மீதான தாக்குதல் தொடர்பாகவும் ஐரோப்பியர்களிடமிருந்து இதுவரை காதடைந்து போன அமைதி இருந்து வருகிறது அதேவேளை அரபு ஆட்சியாளர்கள் அரபாத்தும் பாலஸ்தீனிய நிர்வாகமும் இலக்கு வைக்கப்பட்டது தொடர்பாக அடையாள எதிர்ப்பை மட்டும் காட்டி இருக்கிறார்கள்.

அரபாத்தைக் கொல்வது பாலஸ்தீனிய நிர்வாகம் முற்றிலும் தரைமட்டம் ஆவதாலும் மேற்குக் கரையிலும் காசா பாலைநிலத்திலும் இஸ்ரேல் இராணுவத்தின் நேரடி ஆட்சிக்கு திரும்புதலாலும் பின்தொடரப்படும். அத்தகைய நடவடிக்கைப் போக்கு இஸ்ரேலுக்குள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

க்னெசெட்டின் ஒரு தொழிற்கட்சி உறுப்பினரான ஹைம் ரமோன், பின்வருமாறு குறிப்பிட்டார், "ஷெரோன் அரபாத்தை அகற்றி மிதவாத பாலஸ்தீனிய தலைமையை அவருக்குப் பதிலீடு செய்ய விரும்புகிறார். பின்னர் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேற்குக் கரையின் 50 சதவீதத்தில் இருப்பதற்கு ஏற்றுக் கொள்ளவைக்கச் செய்வதில் முயற்சிப்பதுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் செய்வார். அது ஒரு பிரமை ஆகும். அது ஒருபோதும் நடக்காது. என்ன நடக்கிறது என்பதை நாம் இப்போது பார்க்கின்றோம்: மெய்யான நடப்பில் பாலஸ்தீனிய நிர்வாகமாக விட்டுச்செல்லப்பட்டதின் அழிவு மற்றும் மேற்குக்கரை மற்றும் காசா மீதான இஸ்ரேலின் முழு ஆக்கிரமிப்பு அல்லது கிட்டத்தட்ட முழுமையான மறு ஆக்கிரமிப்பு."

வலதுசாரி லிக்குட் கூட்டணிக்குள்ளே ஷெரோனின் தலைமைப் போட்டியாளரான முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தக் கொள்கைக்காக பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார். வெள்ளி அன்று ஜெருசலேம் போஸ்ட்டில் வெளியிடப்பட்ட குறிப்புரையில், நெதன்யாகு "முழு இராணுவ வெற்றிக்காக அழைப்பு விடுத்தார்... முதலில், நாம் பாலஸ்தீன நிர்வாகத்தை தரைமட்டமாக்க வேண்டும் மற்றும் அரபாத்தை வெளியேற்ற வேண்டும். இரண்டாவதாக, பாலஸ்தீன மக்கள் பிரதானமாக வாழும் மக்கள் மையங்களை சுற்றி வளைக்க வேண்டும், பயங்கரவாதிகளைக் களை எடுக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத உட்கட்டமைப்பை அழித்தொழிக்க வேண்டும். மூன்றாவதாக, பாலஸ்தீனிய எல்லைக்குள் இஸ்ரேலிய ஆயுதப் படைகளை நுழைய அனுமதிக்கும் ஆனால் பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் நமது நகர்களிலும் மாநகர்களிலும் நுழைவதிலிருந்து தடுக்கும் பாதுகாப்பு பிரிவினைக் கோடுகளை நாம் கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும்."

ஷெரோனின் அமைச்சரவையில் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட, நெதன்யாகுவின் சக சிந்தனையாளர்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பின்பற்றிய உதாரணத்தை இஸ்ரேலிய அரசாங்கம் பின்பற்ற அழைப்பு விடுத்தனர்-- இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து எதிர்ப்பு போராளிகளுக்கு எதிராக தேடுதல் மற்றும் அழித்தல் நடவடிக்கைகள் பின்பற்றப்படல்.

20,000 இஸ்ரேலிய இராணுவ தயார்நிலைப்படையினரை அழைத்தல், தசாப்தத்திலேயே அத்தகைய அணிதிரட்டல் மிகப் பெரிதாக இருக்கக் கூடியது, இஸ்ரேலிய அமைச்சரவை அத்தகைய முடிவை நோக்கி நகர்கின்றதைக் குறிப்புரைக்கின்றது. இந்த அழைப்பு இஸ்ரேலிய பொருளாதாரத்தில் மாதம் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவைப் பிடிக்கும், இதற்கான பற்றுச்சீட்டு (bill) தொகை செலுத்தப்படுவதற்காக சந்தேகத்திற்கிடமில்லாமல் வாஷிங்டனிடம் முன் வைக்கப்படும்.

தான் பிரதமராகப் பொறுப்பேற்ற அந்நேரத்திலிருந்து, ஷெரோனின் இலக்கு ஒஸ்லோ நிகழ்ச்சிப் போக்கையும் அதன் விளைவான பாலஸ்தீனிய நிர்வாகத்தையும் தரைமட்டமாக்குவதாக இருந்து வருகிறது. சியோனிச அரசியல் அமைப்பின் மிகவும் சக்தியுள்ள பகுதிகளால் இந்தக் கொள்கை தழுவப்படுவதானது, 1948, 1967 எல்லைகளுக்குள்ளாயினும் அல்லது அதி வலதுசாரி சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட "அகன்ற இஸ்ரேல்" பகுதிக்கு உள்ளேயாயினும், பாலஸ்தீனிய அரபுகளின் உறைவிடத்திலிருந்து அப்புறப்படுத்தலின் அடிப்படையில், யூத அரசு ஒன்றைப் பேணுவது என்ற, ஜனநாயகத் தீர்வுக்கான அடிப்படை மத்திய கிழக்கில் இல்லை என்பதை மட்டும் விளக்கிக் காட்டுகிறது.

ஒரு நீதியான மற்றும் அமைதியான தீர்வுக்கு, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியால், அதேபோல சியோனிசத்தால் ஏற்படுத்தப்பட்ட பிற்போக்கு அரச எல்லைகள் அனைத்தையும் அழித்தொழிப்பதும், மதம், மொழி மற்றும் தேசிய மூலம் இவற்றைப் பொருட்படுத்தாமல் பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்குமான சம உரிமைகளின் அடிப்படையில் மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதை வேண்டிநிற்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved