World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா :
இலங்கை
Sri Lankan business demands deal with LTTE to end war இலங்கை வர்த்தகர்கள் யுத்தத்துக்கு முடிவு கட்ட விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுகின்றனர் By K. Ratnayake இலங்கையில் உள்ள பெரு வர்த்தகர்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்படிக்கை செய்யும்படியும் 18 வருடகால உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டும்படியும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தையும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைந்து கொள்ளும்படியும் கோரும் ஒரு உக்கிரமான பிரச்சார இயக்கத்தை தொடுத்துள்ளனர். விளம்பரங்கள், பொதுக் கூட்டங்களால் பெரிதும் அலங்கரிக்கப்பட்ட இந்த இயக்கம் இம்மாதம் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கும் தீவிர பேரினவாத ஜே.வி.பி.க்கும் இடையேயான உடன்படிக்கையின் பேரில் கம்பனி முதலாளிகள் கொண்டுள்ள அதிருப்தியை எடுத்துக்காட்டுகின்றது. இது அரசாங்கத்தை தோல்வியில் இருந்து காப்பாற்ற செய்து கொள்ளப்பட்டதாகும். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சந்தரி ஜயரத்ன பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் "நாட்டின் முன்னால் உள்ள பெரிதும் முக்கியமான விவகாரம் பகைமையை தணிப்பதும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதுமாகும்" என்றுள்ளார். செப்டம்பர் 19ம் திகதி கொழும்பின் வர்த்தக சம்மேளனங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மதிய போசன இடைவேளை ஆர்ப்பாட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினரும் இனவாத சிஹல உறுமய தலைவருமான சம்பிக ரணவக்க தலைமையில ஒழுங்கு செய்யப்பட்ட 300 காடையர்களின் தாக்குதலுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சிங்கள பேரினவாத அமைப்பான இது, தான் இத்தகைய கூட்டங்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என பிரகடனம் செய்தது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஜூனில் எதிர்க் கட்சிக்கு மாறியதால் ஏற்பட்ட மூன்று மாத கால உயிர்வாழ்க்கைப் போராட்ட பிரச்சினையின் பின்னர் ஜே.வி.பி.யுடன் செப்டம்பர் 5ம் திகதி ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை (Memorandum of Understandings) செய்து கொண்டார். இந்த உடன்படிக்கை அரசாங்கத்துக்கு ஒரு புதிய தற்காலிக குத்தகை வாழ்க்கையை வழங்கியது. இதன் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு சிறிய ஆறு (ஆசன) பெரும்பான்மையை பாராளுமன்றத்தில வழங்கியதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் பின்தள்ளியது. ஜே.வி.பி. அரசாங்கத்தை ஒருவருடகால "தகுதிகாண் காலத்துக்கு" "பாதுகாக்க" இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக குமாரதுங்க இக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது இருக்க வாக்குறுதி அளித்துள்ளார். பொதுஜன முன்னணி அரசாங்கம் "அதிகாரப் பரவலாக்கல் பிரேரணைகளையோ அல்லது சர்ச்சைக்கு இடமான வேறு எந்த ஒரு பிரேரணையும்" 12 மாதங்களுக்கு அறிமுகம் செய்யாதிருக்க உடன்பட்டது. அத்தோடு அமைச்சர் அவை எண்ணிக்கையை 20 அமைச்சர்களுடன் கட்டுப்படுத்தி வைக்கவும் நிதித்துறையினதும் கல்வி அமைப்பினதும் தனியார்மயத்தை நிறுத்தவும் உடன்பாடு காணப்பட்டது. ஜே.வி.பி. "அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்க வைக்க கூடிய ஏனைய கட்சிகளின் எந் ஒரு நாசகார வேலையையும் ஆதரிக்காது இருக்க" கடமைப்பட்டுள்ளது. வேறு வார்த்தையில் சொன்னால் தொழிலாளர் போராட்டங்களை நசுக்க உதவுவதாகும். சுகாதார துறையில் உள்ள தனது தொழிற் சங்கம் மூலம் ஜே.வி.பி. கடந்த வாரம் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டது. அது "மக்களுக்கு துயரங்களை உண்டுபண்ணுகின்றதுமான வேலை நிறுத்தங்களில் அடாவடித்தனமாக இறங்க வேண்டாம்" என தாதிமார்களைக் கேட்டுக் கொண்டது. இருப்பினும் பொதுஜன முன்னணி -ஜே.வி.பி. கூட்டு உடைந்து போகக் கூடியது. ஜே.வி.பி. உடன்படிக்கை எந்த ஒரு சமாதான ஏற்பாட்டையும் "தடைசெய்யும்" என்ற அடிப்படையில் நான்கு சிரேஷ்ட அமைச்சர்கள் கடந்த வாரம் (ஒருவர் பின்னர் அமைச்சரவையில் திரும்பச் சேர்ந்து கொண்டார்) இராஜினாமாச் செய்தனர். இந்த அமைச்சர்கள் யூ.என்.பி.யுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதோடு எதிர்க்கட்சிக்கு மாறிச் செல்ல காலம் பார்த்து வருகின்றனர். அவர்கள் ஏனைய எம்.பீ.களையும் தம்முடன் இழுத்துச் செல்லப் பார்த்துக் கொண்டுள்ளனர். ஜே.வி.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையே ஏனைய பிரச்சினைகளும் வெடித்துள்ளன. அதில் அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை, ஒரு புதிய அரசியலமைப்பு நிர்ணயசபைக்கான நியமனங்கள் என்பனவும் அடங்கும். ஜே.வி.பி. உடன்படிக்கை பொதுஜன முன்னணிக்கும் தொழில் அதிபர்களுக்கும் காலம் பிடித்து கொடுத்துள்ளது. தொழிலாளர்களை கட்டுப்படுத்த இது உதவியுள்ள போதும் பெரு வர்த்தகர்கள் இதையிட்டு மகிழ்ச்சி அடைவதாக இல்லை. பொதுஜன முன்னணியினர் ஜே.வி.பி.யுடன் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து வருகையில் 14 வர்த்தக சம்மேளனங்கள் செப்டம்பர் 4ம் திகதி கூடி, "இலங்கை முதலில்- இன்றே செய்வோம் அன்றேல் என்றும் இல்லை" (Sri Lanka First - It's Now or Never) என்ற ஒரு பிரச்சார இயக்கத்தை தொடுத்தனர். கூட்டத்தில் பேசிய தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் பெர்னாந்து: போதும், போதும். இந்நாடு இரத்தம் சிந்துகின்றது. எமக்கு சமாதானம் வேண்டும்... இருதரப்பும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் வரை இப்பிரச்சாரம் தொடரும்." வர்த்தகத் தலைவர்கள் தாம் "இந்த ஆரம்பிப்பினை நாம் சமாதானத்தை விரும்பும் மக்கள் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படி அரசியல் வாதிகளுக்கு சொல்லும் வண்ணம்" செய்கின்றோம். அவர்கள் 20 மில்லியன் ரூபாய்களை இந்தப் பிரச்சாரத்துக்கு ஒதுக்கியுள்ளதோடு அரச சார்பற்ற அமைப்புக்களதும் (NGO) தொழில்சார் நிபுணர்களதும் பிரபல திரைப்பட, விளையாட்டு நட்சத்திரங்களது ஆதரவையும் திரட்டிக் கொண்டுள்ளனர். ஒரு வர்த்தக பிரமுகரான லலித் கொத்தலாவலை சமாதானம் பற்றி பேச்சுவார்த்தை நடாத்த விடுதலைப் புலிகளின் தலைவர் வி.பிரபாகரனுடன் ஒரு சந்திப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இதே சமயம் கொத்தலாவலை குமாரதுங்கவுக்கும் யூ.என்.பி தலைவர் ரணில் விக்கிமசிங்கவுக்கும் தனது ஆரம்பிப்பு பற்றி அறிவித்துள்ளதோடு தனக்கு அரசியல்வாதிகளில் நம்பிக்கை கிடையாது எனவும் "மக்கள் சக்தி" இயக்கத்தை கட்டியெழுப்ப தாம் நெல்சன் மண்டேலாவை உருவாக்க விரும்புவதாகவும் தொடர்புச் சாதனங்களிடம் தெரிவித்தார். பொருளாதார சறுக்கல் இந்த கம்பனித் தலைவர்கள் "இன்றே செய்வோம்- அன்றேல் என்றும் இல்லை" என்ற சுலோகத்தை விடுதலைப் புலிகள் ஜூலை 24ம் திகதி நாட்டின் முக்கிய விமானப் படைத் தளத்துக்கு சர்வதேச விமான நிலையத்திலும் நடாத்திய பேரழிவுமிக்க தாக்குதலை தொடர்ந்தே முதலில் எழுப்பினர். இது விமானப் படையினதும் சிவில் விமான சேவையினதும் அரைவாசி விமானங்களை நிர்மூலமாக்கியது. ஏற்கனவே பிரமாண்டமான யுத்த செலவீனங்களுக்கும் அரசியல் ஈடாட்ட நிலைமைக்கும் உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கும் முகம் கொடுத்து வந்த அரசாங்கத்தின் நெருக்கடியை இது மேலும் ஆழமாக்கியது. விமானத் தளத்தில் ஏற்பட்ட சேதங்கள் யுத்த செலவீனங்களை நிதி பதங்களில் 10 பில்லியன் ரூபாய்களால் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக இது அரசாங்க நிதிகளில் 600 பில்லியன் ரூபாய்களை (7பில்லியன் டொலர்) ஏப்பம் விட்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைக்கும் கப்பல் சேவைக்கும் விமானத் தள பேரழிவுகளை விமானக் கட்டணங்களையும் காப்புறுதி கட்டணங்களை அதிகரிப்பதற்கும் சந்தர்ப்பமாக்கிக் கொண்டுள்ளன. இவை இலங்கையை ஒரு "யுத்த ஆபத்து நாடு" எனப் பேர் சூட்டியுள்ளன. அரசாங்கம் சகல ஆபத்துக்களையும் சமாளிக்கும விதத்தில் ஒரு 50 மில்லியன் டொலர் கடன் பத்திரத்தை (Bond) வழங்கியதைத் தொடர்ந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் மேலதிகக் கட்டணங்கள் (Surcharges) ஏற்றுமதிகளையும் இறக்குமதிகளையும் பாதித்துள்ளன. அரசியல் குழப்பநிலை காரணமாக வெளிநாட்டு முதலீடு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டின் முதலாவது காலாண்டு பகுதியில் பொருளாதார வளர்ச்சி 1 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது ஆரம்ப முன்னறிவிப்பான 4 சதவீதத்தைக் காட்டிலும் பெரிதும் குறைவானது. ஏற்றுமதி 1.5 வீதத்தினாலும் கைத்தொழில் ஏற்றுமதிகள் 2.6 சதவீதத்தினாலும் வீழ்ச்சி கண்டுள்ளன. நாட்டின் வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய மூலமான உல்லாசப் பிரயாணம் விமானத்தள தாக்குதலில் இருந்த 28 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. மத்திய வங்கி ஆளுனர் ஏ.எஸ்.ஜயவர்தன "பார் ஈஸ்டர்ண் இக்கொனொமிக் றிவியூ" (Far Eastern Economic Review) வுக்கு வழங்கிய பேட்டியில் "ஒரு புறத்தில் நாம் அரசியல் நெருக்கடியை கொண்டுள்ளோம். -அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு சிறுபான்மையாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு உயிர்வாழ்க்கைக்கு போராடுகின்றது. அத்தோடு விமானத்தள தாக்குதலின் தாக்கங்களும் இருந்து கொண்டுள்ளன." வர்த்தகத் தலைவர்கள் தொடர்ச்சியான அரசியல் ஈடாட்ட நிலை ஐ.எம்.எப். (IMF) உலக வங்கி மற்றும் அமைப்புக்களிடம் இருந்து கடன் பெறுவதை அச்சுறுத்தும் என அஞ்சுகின்றனர். ஐ.எம்.எப். நவம்பரில் வழங்க இருந்த இரண்டாவது பங்கினை வழங்காமல் தாமதித்துள்ளது. அதனை அது அடுத்த ஆண்டு முற்பகுதிக்கு தள்ளிப் போட்டுள்ளது. இலங்கையில் உள்ள இதன் பிரதிநிதியான நடீம் உல் ஹக் ஜே.வி.பி.-பொதுஜன முன்னணி உடன்படிக்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு குறுக்கே நிற்க அனுமதிக்கப்படக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். 'டெயிலி மிறர்' பத்திரிகையுடனான ஒரு பேட்டியில் அவர் அமைச்சர் பதவிகளை குறைப்பதற்கும் ஏனைய சேதங்களை ஒழிப்பதற்கும் ஆதரவாக பேசியபோதிலும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைகளையும் அரச கடன்களையும் குறைப்பதற்கும் உபமானியங்களையும் ஏனைய அமைப்பு மாற்றங்களையும் வலியுறுத்தினர். யுத்தத்தின் தொடர்ச்சி கூட பொதுமக்களிடையே அமைதியின்மையை உருவாக்கும். விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து கீல்ஸ் ஹோல்டிங்கஸ் (Keels Holdings) போன்ற பெரும் தொகுதிக் கம்பனிகள் நூற்றுக்கணக்கான ஹோட்டல் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளனர். சுமார் 30000 சுகாதார தொழிலாளர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்தம் செய்தனர். ஆயிரக் கணக்கான புகையிரத நிலைய அதிபர்களும் புகையிரத தொழில் நுட்பத் அதிகாரிகளும் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்தனர். இவர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்தனர். ஒரு அரை- அரசாங்க வைத்தியசாலையில் சுமார் 700 தாதிமார்கள் வேலைநிறுத்தம் செய்தனர். நிதி ஏகபோகங்கள் யூனில் பொதுஜன முன்னணியையும் யூ.என்.பியையும் உள்ளடக்கிய ஒரு "தேசிய ஐக்கிய அரசாங்கத்தை" அமைக்கும்படியும் யுத்தத்துக்கு முடிவு கட்டும்படியும் தொழிலாளர்களுடன் உடன்படிக்கை செய்யும்படியும் கோரினர். ஆனால் அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவது யார் என்பதையிட்டு இரு கட்சிகளும் உடன்பாட்டுக்கு வரவில்லை. கடந்த காலத்தில் பொதுஜன முன்னணியோ அல்லது யூ.என்.பி.யோ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த ஒரு இணக்கத்துக்கும் வரவில்லை. ஏனெனில் இவ்விரு கட்சிகளும் சிங்கள பெளத்த பேரினவாதத்தை பயன்படுத்தி தொழிலாளர் வர்க்கத்தையும் ஏனையோரையும் பிளவுபடுத்துகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜே.வி.பி. தீவிரவாத கட்சிகளில் ஒன்று -தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்படிக்கையை செய்து கொள்ள வரையப்பட்ட சுயாட்சி பிரேரணையை கைவிடும்படி பொதுஜன முன்னணியை நெருக்கியது. வர்த்தகத் துறையினரிடம் இருந்து வந்த நெருக்குவாரத்தினால் குமாரதுங்க தனது ஆட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு தீர்வுக்கு வராது போனால் உயிர் பிழைக்காது என்பதை உணர்ந்து கொண்டுள்ளதுபோல் தெரிகின்றது. பொதுஜன முன்னணி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு பொதுவிண்ணப்பம் விடுக்கும் வகையில் யூ.என்.பி.க்கு கடிதம் வரைந்துள்ளது. வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கடந்த வாரம் "அரசாங்கம் ஒரு பரஸ்பரம் உடன்படிக்கையுடன் கூடிய விதத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கும்" என அறிவித்துள்ளார். குமாரதுங்க கடந்த யூனில் யூ.என்.பி.க்கு கட்சி மாறிய ஸ்ரீலங்க முஸ்லீம் கங்கிரஸ் தலைவர் ராவுப் ஹக்கீமுடன் ஒரு கூட்டமும் நடாத்தினார். சமாதானப் பேச்சுவராத்தைகளை நோக்கிச் செல்வது எப்படி என்பதையிட்டு கலந்துரையாடவே இது கூட்டப்பட்டது. கூட்டத்தின் பின்னர் ஹக்கீம் தாம் பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும் இடையேயான நடுவர் ஆகக் கடமையாற்ற தயாராக உள்ளதாக அறிவித்தார். "இன்றே செய்வோம் அன்றேல் என்றும் இல்லை" என்ற பிரச்சாரத்துக்கும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிதம் செய்வதற்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் கிடையாது. வர்த்தகப் பிரமுகர்கள் நீண்ட காலமாக தொழிலாளர் வர்க்கத்தை சிங்கள, தமிழ் இனக்குழு அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு இனவாத யுத்தத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வாறெனினும் இன்று யுத்தம் ஒரு பொருளாதாரச் சுமையாக வந்துள்ளதோடு அனைத்துலக முதலீடுகள் நாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும் நிலைமையும் உருவாகியுள்ளது. பெரு வர்த்தகப் பிரமுகர்கள் தமிழ் முதலாளி வர்க்கத்தின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமீழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) ஒரு உடன்படிக்கை செய்து கொள்வதன் மூலம் தனது பொருளாதார அடிப்படையை விஸ்தரித்துக் கொள்ளவும் ஐ.எம்.எப். நிகழ்ச்சி நிரலை அமுல் செய்வதில் அரசாங்கத்தின் கரங்களை பலப்படுத்தவும் பார்க்கின்றது. மேலும் தென் ஆசியாவில் இலங்கை கொண்டுள்ள மூலோபாய முக்கியத்துவம் காரணமாக பெரும் மேற்கத்தைய சக்திகள் பொதுஜன முன்னணி ஆட்சியாளர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் ஒரு தீர்வுக்கு வரும்படி நெருக்குவாரம் கொடுக்கின்றன. அவர்களது அக்கறை இலங்கையின் அரசியல் முட்டுச் சந்து பற்றியதும் ஒரு தனிநாட்டை உருவாக்கும் விடுதலைப் புலிகளின் எந்த ஒரு முயற்சியும் இந்தியத் துணைக் கண்டம் பூராவும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதுமேயாகும். இங்கு எண்ணற்ற பிரிவினைவாத அமைப்புக்கள் இன்று தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன. ஆளும் பிரமுகர் கும்பல் வெகுஜனங்களின் யுத்தச் சலிப்பு உணர்வுகளை தனது சொந்த நோக்கங்களுக்கு
சுரண்டிக் கொள்ளப் பார்க்கிறது. ஆனால் அதன் நிகழ்ச்சி நிரல், வேலை நிலைமைகளை தொடர்ந்து வெட்டித் தள்ளுவதும்
வேலைக்கு இருத்தவும் விலத்துவுமான (Hire & Fire)
விதத்தில் தொழிற் சட்டங்களை புதுக்கி அமைப்பதும் விடுமுறைகளை குறைப்பதும்
கல்வி, சுகாதாரம், உட்பட அரசாங்க சேவைகளை தனியார் மயமாக்குவதுமேயாகும். |