World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Why the Bush administration wants war

புஷ் நிர்வாகத்துக்கு ஏன் யுத்தம் அவசியமாகியுள்ளது?

Statement of the WSWS Editorial Board
14 September 2001

Back to screen version

அமெரிக்க அரசாங்கத்தினதும் மானங்கெட்ட அரச கட்டுப்பாட்டிலான தொடர்புச் சாதனங்களதும் யுத்த வெறிக் கூச்சல்களுக்கு மத்தியில் ஒருவர் முன்னொரு போதும் இல்லாத விதத்தில் அமைதியையும் கடைப்பிடிப்பது அவசியமாகியுள்ளதோடு சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் விவாதிக்கவும் வேண்டிய சக்தியையும் கொண்டிருக்க வேண்டும். செப்டம்பர் 11ம் திகதி ஏற்பட்ட பயங்கரமான உயிரிழப்புக்களின் பேரில் துக்கம் அனுஷ்டிப்பது நிச்சயம் பொருத்தமானது. ஆனால் பலியுண்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நண்பர்களுக்குமான அனுதாபம் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக நடைமுறைப்படுத்தி வந்த ஒரு இராணுவ நிகழ்ச்சி நிரலை அமுல் செய்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக இந்த துயரச் சம்பவங்களை அமெரிக்க ஆளும் மேல்தட்டினர் சக்தி வாய்ந்த பகுதியினர் நோக்குகின்றனர் என்ற உண்மையை இருட்டடிப்புச் செய்துவிடக் கூடாது.

நவீன யுத்தங்களுக்கு ஒரு சாக்குப் போக்கு வேண்டியுள்ளது. அதனை ஆயுத நடவடிக்கைகளில் இறங்குவதற்குப் போதுமான ஒரு நியாயப்படுத்தலாக மக்களின் தலையில் கட்டியடிக்க முடியும். அமெரிக்க ஐக்கிய அரசுகள் (USA) ஒரு ஏகாதிபத்திய உலக சக்தியாக தலையெடுத்ததில் இருந்து-1898 ஸ்பானிய- அமெரிக்க யுத்தத்தில் இருந்து 1999ம் ஆண்டின் பால்கன் யுத்தம் வரை- பொதுஜன அபிப்பிராயத்தை கொழுந்து விட்டெரியச் செய்த ஒரு நிகழ்ச்சியை வேண்டி நின்றது.

ஆனால் அத்தகைய தொடர்ச்சியான சம்பவங்கள் என்ன தன்மையைக் கொண்டவையாக விளங்கினும் நிதானமான வரலாற்று ஆய்வுகளின் வெளிச்சத்தில் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற யுத்தங்களுக்கான நிஜ காரணிகளை ஒரு போதுமே நிரூபித்தது இல்லை. மாறாக யுத்தத்தில் இறங்குவதற்கான நிஜ தீர்மானம் - குள்ளத்தனமாக உருவாக்கப்பட்ட பொதுஜன அபிப்பிராயத்தின் மாற்றத்தினால் துணை போகும்போது- ஆளும் பிரமுகர் கும்பலின் மூலோபாய, அரசியல் நலன்களில் வேரூன்றிக் கொண்டுள்ள பெரிதும் அத்தியாவசியமான கணிப்பீடுகளில் இருந்து ஒவ்வொரு தடவையும் பெருக்கெடுத்தது.

அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் தனது பழமொழியில் வொன் களோஸ்விட்ஸ் (Von Clausewits) கூறியதாவது: "யுத்தம் என்பது வேறு வழிகளில் அரசியலைத் தொடர்வதாகும்." சாராம்சத்தில் இதன் கருத்து என்னவெனில் யுத்தம் என்பது அரசாங்கங்கள் சமாதான வழிகளில் அவை ஈட்டிக் கொள்ள முடியாத அரசியல் இலக்குகளை அடைய கையாளும் ஒரு சாதனம் ஆகும். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விமானக் கடத்தல்களுக்கும் குண்டுவீச்சுக்களுக்கும் பின்னர் வளர்ச்சி கண்டு வரும் நிகழ்வுகளுக்கு இந்த ஆழமான உண்மையை பிரயோகிக்க முடியாது என நம்புவதற்கு எதுவித காரணமும் இல்லை.

உலக வர்த்தக நிலையம் மீதும் பென்டகன் மீதும் இடம்பெற்ற தாக்குதல்கள் ஆளும் மேல்தட்டு கும்பலைச் சேர்ந்த பெரிதும் வலதுசாரிப் பிரிவினர் வருடக் கணக்காக கூக்குரலிட்டு வந்த ஒரு பாரதூரமான அரசியல் நிகழ்ச்சி நிரலை அமுல் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொண்டுள்ளன. தாக்குதல் இடம்பெற்ற ஒரு நாளினுள் -இந்த தாக்குதல் அல்லது சதியின் பரிமாணம் பற்றிய மூலம் தொடர்பாக எந்தவொரு வெளிச்சமும் பாய்ச்சப்படுவதற்கு முன் அரசாங்கமும் தொடர்புச் சாதனங்களும் அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க மக்கள் யுத்தகால சகல நிலைமைகளையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்ற ஒரு கூட்டு பிரகடனத்தை தொடுத்தனர்.

இன்று முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை வெளிநாட்டில் விஸ்தரிப்பதும் உள்நாட்டில் கருத்து முரண்பாடு கொண்டவர்கள் மீது தாக்குதல் நடாத்துவதும் நீண்டகாலத்துக்கு முன்பிருந்தே தயார் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆளும் மேல்தட்டினர் அத்தகைய கொள்கைகளை அமுல் செய்வதற்கு அமெரிக்க மக்களிடையே எந்த ஒரு கணிசமான அளவு ஆதரவு இல்லாமையும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள அதனது ஏகாதிபத்திய போட்டியாளர்களிடம் இருந்தும் கிடைத்த எதிர்ப்பு தடையாக விளங்கியது.

இப்போது புஷ் நிர்வாகம், செப்டம்பர் 11ம் திகதி சம்பவங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பொதுமக்களின் அதிர்ச்சியையும் மனமாற்றத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள ரீதியான பொருளாதார, மூலோபாய இலக்குகளை முன்வைப்பதற்கு சுரண்டி கொள்ளத் தீர்மானித்துள்ளது. அவருக்கு ஒரு தரக்குறைவான தொர்புச் சாதனங்களதும் குடியரசுக் கட்சியின் வலதுசாரிகளுக்கு எதிர்ப்புக் காட்டுவதாக காட்டிக் கொள்ளும் எந்த ஒரு நடிப்பையும் நிறுத்திக் கொள்வதையிட்டு பெரிதும் மகிழ்ச்சி கொள்ளும் ஜனநாயகக் கட்சியினதும் பூரண ஆதரவு கிடைக்கிறது. புஷ் வியாழக்கிழமையன்று பேசுகையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற அட்டூழியங்கள் "பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் நடாத்த ஒரு சந்தர்ப்பத்தை" வழங்கியுள்ளதை ஒப்புக் கொண்டார். இந்த யுத்தத்தை நடாத்துவது தனது முழு நிர்வாகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக விளங்கும் எனவும் அவர் தொடர்ந்து கூறினார். செப்டம்பர் 11ம் திகதிக்கு முன்னர் அத்தகைய ஒரு சாந்தமான இராணுவவாதத்தை பிரகடனம் செய்வது என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாக விளங்கியது. ஆனால் உலக வர்த்தக நிலையம் (WTC) மீதான தாக்குதல் ஏகாதிபத்திய நிஜ அரசியலின் பரிபாசையில் புதிய உண்மைகளை சிருஷ்டித்தது.

நியூயோர்க், வாஷிங்டன் மீதான பயங்கரவாத தாக்குதல்களை சூழவுள்ள பெரிதும் விசித்திரமான சூழ்நிலைகளை ஆழ்ந்த விதத்தில் புலன் விசாரணை செய்யத் தொடங்காமல் புஷ் நிர்வாகமும் தொடர்புச் சாதனங்களும் ஒரு முழு அளவிலான யுத்தத்தை பிரகடனம் செய்து கொண்டுள்ளமை இச்சம்பவங்களின் பேரில் சாத்தியமான ஒரே அக்கறையாக விளங்குகின்றது. இது அரசாங்கம் பயங்கரவாதிகளின் அரசியல் அடையாளத்தை ஸ்தாபிதம் செய்வதற்கு அல்லது இந்தளவு பரந்தளவிலான சதி -வெளிப்படையாக அமெரிக்காவினுள் இயங்கி வந்த டசின் கணக்கான சதிகாரர்கள் சம்பந்தப்பட்ட- எப்.பீ.ஐ.யினாலும் (FBI) சீ.ஐ.ஏ.யினாலும் (CIA) அவற்றுடன் தொடர்புபட்ட புலனாய்வு ஏஜன்சிகளாலும் அடியோடு கண்டுபிடிக்கப்படாது போனது எப்படி என்ற சங்கடமான கேள்விகளுக்கு பதிலளிக்காது போயுள்ளது.

சமஷ்டி விமானப் போக்குவரத்து நிர்வாகமும் (FAA) விமானப் படையும் அல்லது FBI யும் ஒரு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கத் தவறியது அல்லது கடத்தப்பட்ட விமானங்கள் திசை மாறி அமெரிக்க நிதி, இராணுவ நிறுவனங்களின் உயிர் மையங்களுக்கு பயணம் செய்வதை தடுக்க தவறியதை விளக்கவில்லை.

சோகத்துக்கும் அனுதாபத்துக்குமான சகல கோரிக்கைகளுக்காகவும் உலக வர்த்தக நிலையம் மீதும் பென்டகன் மீதும் இடம்பெற்ற தாக்குதலைக் காட்டிலும் புஷ் நிர்வாகத்துக்கு ஒரு பெரிதும் காலோசிதமானதும் தற்செயலானதுமான நிகழ்வு இருந்திருக்க முடியாது. ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் செப்டம்பர் 11ம் திகதி நித்திரை விட்டு எழுந்த போது அவர் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள ஒரு நிர்வாகத்துக்கு தலைமை தாங்கினார். வேலையில்லாத் திண்டாட்டத்தின் வளர்ச்சிக்கும் பங்குமுதல் சந்தையிலான துர்அதிஸ்டவசமான நஷ்டங்களுக்கும் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்க முடியவில்லை. வரவு செலவுத் திட்ட உபரி ஆவியாகுதலுக்கும், சமூக பாதுகாப்பு நிதியங்களை (Social Security Funds) செலவிடுவது இல்லை என்ற அதனது வாக்குறுதிகளை மாற்றியமைக்கும் எதிரான கண்டனங்களுக்கு முகம் கொடுத்ததன் காரணமாக நிர்வாகம் உள்வாரி கருத்து வேறுபாடுகளதும் சீரற்ற நிலையினதும் அறிகுறிகளைக் கொண்டிருந்தது.

மூன்று கிழமைகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 20ம் திகதி நியூயோர்க் டைம்ஸ் உலக முதலாளித்துவம் பிரமாண்டமான அளவில் ஒரு பூகோள ரீதியான பொருளாதார வீழ்ச்சியினுள் சிக்குண்டு போகும் அச்சத்தை ஆளும் வட்டாரங்கள் கொண்டுள்ளதாகக் காட்டும் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. டைம்ஸ் எழுதியதாவது: "சரியாக கடந்த வருடம் ஒரு தீவிர நடைவேகத்துடன் வளர்ச்சி கண்ட உலகப் பொருளாதாரம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஜப்பானும் இன்னும் பல பெரும் அபிவிருத்தி கண்டு வரும் நாடுகளும் அரிதான, சமகால பொருளாதார வீழ்ச்சிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கின்றன."

டைம்ஸ் தொடர்ந்து கூறியதாவது: "உலகம் பூராவும் இருந்து கிடைத்த இறுதியான பொருளாதார புள்ளிவிபரங்கள் பல பிராந்தியச் சக்திகள் -இத்தாலி, ஜேர்மனி, மெக்சிக்கோ, பிரேசில், யப்பான், சிங்கப்பூர்- பொருளாதார ரீதியில் தேக்கம் கண்டுபோனதோடு அமெரிக்காவிலான வீழ்ச்சியை ஈடு செய்ய ஏனைய நாடுகளில் வளர்ச்சி ஏற்படும் எதிர்பார்ப்புக்களை எதிர்க்கின்றன.... வளர்ச்சி வீதங்கள் பெரிதும் வேகமாக பின்னடைந்து போவதோடு உலகம் பொருளாதார சவுக்கடியை அனுபவித்துக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 1973ம் ஆண்டின் எண்ணெய் அதிர்ச்சியின் பின்னர் என்றும் இல்லாத விதத்தில் அதிகம் பின்னடைந்து போயுள்ளன. பரந்த அளவிலான பலவீனங்களுக்கு தனித்த ஒரு காரணி மட்டும் காரணம் அல்ல. சில பொருளியலாளர்கள் (பொருளாதார) மீட்சி மெதுவாகவே ஏற்படும் என்கின்றனர்.

"நாம் எண்ணெய் நெருக்கடியில் இருந்ததன் பின்னர் முன்னர் ஒரு போதும் இல்லாத வேகத்தில் செழிப்பில் இருந்து வங்குரோத்துக்கு போயுள்ளோம் என ஒரு நியூயோர்க் முதலீட்டு வங்கியின் பிரதம பொருளியலாளரான ஸ்ரீபன் எஸ்-றோச் தெரிவித்தார். ''இது நீங்கள் இதனை தடுத்து நிறுத்துமாறு கூச்சலிடுவதுபோலிருக்கையில் காற்றுத்தடுப்பினூடாகத் தூக்கி எறியப்பட்டது போல் உள்ளது."

î டைம்ஸ் வளர்ச்சி கண்டுவரும் நெருக்கடியின் பேரிலான புஷ் நிர்வாகத்தின் அக்கறையை ஏளனமான விதத்தில் வர்ணித்தது: "புஷ் நிர்வாகம் படத்தின் மீது ஒரு சார்பு ரீதியில் வெளிச்சமான வெளிப்பூச்சை இன்னமும் அது தடவுகின்றது. இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2002ம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு பெரும் திருப்பம் ஏற்படும் என்ற வெள்ளை மாளிகையின் அப்பட்டமான நம்பிக்கையீனத்தை இது அறிக்கை செய்தது.

அதே தினத்தன்று டைம்ஸ் போர்ட் மோட்டார் கம்பனி அதிக அளவிலான வேலை நீக்கங்களுக்கு தயார் செய்து வருவதாக செய்தி வெளியிட்டது. பிரதம நிறைவேற்று உத்தியோகத்தரான (CEO) ஜக்குவாஸ் நாஸர் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் "பொருளாதாரத்தை பலமாக புனருத்தாரணம் செய்ய எந்த ஒரு காரணியும் இருப்பதாக தெரியவில்லை" என்றுள்ளார்.

வோல் ஸ்ரீட் ஜேர்ணல் இதற்குச் சமாந்தரமான ஒரு கவர்ச்சியான சித்திரத்தை தந்து எழுதுகையில் கூறியதாவது: "உயர் தொழில் நுட்பத்திலும் உற்பத்தியிலும் வீழ்ச்சி ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டின் பின்னர் பொருளாதாரத்துக்கு துணை நின்று வந்த ஏனைய கோபுரங்கள் பலவீனம் அடையத் தொடங்கின. கடந்த ஆண்டு பிற்பகுதியில் கருவிகள், மென்பொருட்கள் (Software) மீதான செலவீனங்களை வெட்டித் தள்ள தொடங்கிய வர்த்தக நிறுவனங்கள் இன்று அதையே அலுவலக கைத்தொழில் மெய் சொத்து தொடர்பாகவும் செய்கின்றன...

"இந்த ஆண்டின் பெரும் பகுதியில் தாராளமான ஊக்குவிப்பு, குறைந்த வட்டி வீதத்தின் காரணமாக ஆச்சரியப்படத்தக்க விதத்தில் ஆரோக்கியமாக விளங்கிய மோட்டார் கார் விற்பனைகள் சரிந்து போகத் தொடங்கியுள்ளன. ஏப்பிரலில் இருந்து தொழிற் திணைக்களத்தால் தேடிப் பிடிக்கப்பட்ட பல தொழிற்துறை குழுக்கள் சம்பள பட்டியலை வெட்டி குறைத்துள்ளன.... மார்ச்சுக்கும் யூலைக்கும் இடையே கட்டிட நிர்மாண தொழிற்துறையில் 61000 வேலைகளை வெட்டியது. இது இந்நெருக்கடி உயர் தொழில் நுட்பத்திற்கும், உற்பத்திக்கும் பெருகி வந்ததற்கு இது ஒரு தெளிவான உதாரணம்."

ஆகஸ்டுக்கான தொழிற் திணைக்கள வேலையற்றோர் அறிக்கை வேலையற்றோர் வீதத்தில் ஒரு ஆழமான அதிகரிப்பை -தனி ஒரு மாதத்தில் 4.5 வீதத்தில் இருந்து 4.9 வீத அதிகரிப்பு- காட்டியது. வெள்ளிக்கிழமை வர்த்தக வட்டாரங்களிலான அரை இருள்படிந்த மனோநிலை பதட்டம் கொண்டதாக மாறியது. பொருளாதாரத்தின் சகல துறைகளையும் தொழில் வெட்டு பாதித்ததில் இருந்து ஆகஸ்டில் சுமார் 10 இலட்சம் வேலைகள் இழக்கப்பட்டன. நுகர்ச்சி செலவில் ஒரு வீழ்ச்சி ஏற்படும் சாத்தியத்துக்கு முகம் கொடுத்த நிலையில் குவிக்க விரைந்தனர். டோ ஜோன்ஸ் தொழிற்துறை சராசரி (Dow Jones Industrial Average) புள்ளி 230 புள்ளிகளால் வீழ்ச்சி கண்டது. அன்றைய தினத்தில் 10000 புள்ளிகளுக்கு கீழாக வீழ்ச்சி கண்டது.

பொருளாதார நெருக்கடி புஷ் நிர்வாகம் முகம் கொடுத்துள்ள வெளிநாட்டு கொள்கை அதிக அளவிலான வெளிநாட்டுக் கொள்கை சிக்கல் நிலையை கலக்கிக் கொண்டுள்ளது. ஈராக் மீதான வாஷிங்டனின் கொள்கை தடையுத்தரவுகள் சிதறுண்டு போனதோடு சின்னாபின்னமாகிப் போயுள்ளது. அமெரிக்கா பிரான்சு, ரூஷ்யா, சீனாவிடம் இருந்து தடை உத்தரவுகளைத் தொடர்வதற்கும் சதாம் ஹூசேனுக்கு எதிரான பழிக்குப்பழி வாங்குவதை உக்கிரமாக்குவதற்கும் அப்பட்டமான எதிர்ப்புக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த விடயத்திலும் ஏனைய பெரும் விவகாரங்களிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிலும் ஏனைய அனைத்துலக அமைப்புகளிலும் பிரேரணைகளை நிறைவேற்றுவது முடியாது போயுள்ளது. ஒரு தொகை போட்டி விவகாரங்களான ஏவுகணை பாதுகாப்பு, பூகோளம் உஷ்ணமடைதல் (Global warming) அனைத்துலக கொலைகார நீதிமன்றம் போன்றவற்றில் அமெரிக்கா அதனது பேரளவிலான சகாக்களுடன் அப்பட்டமாக மோதிக் கொண்டுள்ளது.

சமூக எதிர்ப்பினதும் முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வினதும் வளர்ச்சியானது "பூகோளமயமாக்கத்துக்கு எதிரான" ஆர்ப்பாட்ட அலைகளில் வெளிப்பாடாகியது. இவை சகல பெரும் வல்லரசுகளது அரசாங்கங்களும் பெரிதும் தனிமைப்பட்டு போனதையும் வலதுசாரிக் கொள்கைகளின் பேரிலான பொதுமக்களின் எதிர்ப்பின் வளர்ச்சியையும் இவை வெளிக்காட்டின. இதனை எல்லாவற்றுக்கும் மேலாக புஷ் நிர்வாகத்தில் காணக் கூடியதாக உள்ளது.

ஆனால் செப்டம்பர் 11ம் திகதிய பயங்கரவாத தாக்குதலின் பின்னர் புஷ் நிர்வாகம் ஒரு சிடுமூஞ்சித்தனமானதும் உண்மையைத் திரிக்கின்றதுமான தொடர்புச் சாதன பிரச்சாரத்தின் உதவியோடு ஒரு தேசாபிமான யுத்த காய்ச்சலை தூண்டிவிட தொழிற்பட்டு வருகின்றது. அது குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் அதனது உடனடிப் பிரச்சினைகளில் இருந்து தலையெடுக்க துணை நிற்கும். இதே சமயம் அது உள்நாட்டு, வெளிநாட்டு முனைகள் இரண்டிலும் ஆழமானதும் நிலையானதுமான மாற்றங்களுக்கான நிலைமைகளை உருவாக்கும்.

தேசிய ஐக்கியம் என்ற பெயரில் ஜனநாயக கட்சி புஷ்சுக்கு யுத்தத்தை நடாத்தவும் இராணுவ செலவீனங்களை அதிகரிக்கவும் சிவில் உரிமைகளை கட்டுப்படுத்தவும் ஒரு வெற்றுக் காசோலையை (Empty Cheque) வழங்கியுள்ளது. ஒரு விமர்சகர் சமயோசிதமாக கூறுவது போல்: "நாம் ஒரு தேசிய ஐக்கிய கட்சியை கொண்டுள்ளவர்களைப் போல் செயற்படுவோம். அதன் அர்த்தம் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் என்பதாகும்."

'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செப்டம்பர் 14ம் திகதி ஜனநாயக உரிமைகளுக்கும் சிவில் உரிமைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கும்படி கேட்டு தாராளவாத அமைப்புகளுக்காக (Liberal establishment) பேசியது. "புதிய விதிகள்" (New rules) என்ற தலைப்பிலான ஆசிரியத் தலையங்கம் பிரகடனம் செய்ததாவது: "அந்த தாக்குதலுக்கு பதிலளிப்பது அமெரிக்கவின் ஒழுங்கமைக்கும் கொள்கையாக நிஜமாக வரவேண்டுமானால் அது அப்படியே வரவேண்டும் என நம்புகின்றோம். அமெரிக்கா அதனை மிரட்டுவோருக்கு எதிரான கஷ்டமானதும் தாங்கிப் பிடிக்க வேண்டியதுமான இயக்கத்தை முன்னெடுக்கவேண்டுமானால், அப்போது அரசியலோ அல்லது இராஜதந்திரமோ அவை முன்னர் இருந்து வந்த இடங்களுக்கு திரும்ப முடியாது... காங்கிரசும் ஏனையோரும் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் தனியார் சுதந்திரம், இயக்க சுதந்திரம் மற்றும் சுதந்திரங்களை எல்லாம் உள்நாட்டு பாதுகாப்பின் தேவைகளின் பேரில் தியாகம் செய்ய வேண்டிய ஒரு சாத்தியம் உள்ளது என்பது பெரிதும் உண்மையாகும்."

கோடானு கோடி டொலர்கள் இராணுவ, பாதுகாப்பு செலவீனங்களின் வடிவத்திலும் சீரழிக்கப்பட்ட நியூயோர்க் நகரப்பகுதிகளை மீளநிர்மாணிக்கவும் பொருளாதாரத்தினுள் பாய்ச்சப்படும். சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் எஞ்சியுள்ளவற்றின் வைத்திய சேவை, சமூக பாதுகாப்பு (Medicare and Social Security) போன்றவற்றின் நின்று பிடிக்கக் கூடிய தன்மையானது வெள்ளை மாளிகையினாலும் காங்கிரசினாலும் பிரகடனம் செய்யப்பட்ட நன்மை எதிர் தீமை என்ற மங்கல் வெளிச்சப் போராட்டத்தை கடைப்பிடிப்பதற்கு குறுக்கே நிற்க அனுமதிக்கப்படமாட்டா.

அமெரிக்க இராணுவ பலப் பயிற்சியினதும் அத்தோடு சீ.ஐ.ஏ.யின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையினதும் மீதான ஒவ்வொரு கட்டுப்பாடும் தளர்த்தப்படும். ஆளும் மேல்த்தட்டினரில் பெரிதும் பிற்போக்கான பகுதியினர், பல ஆண்டுகளாக வோல் ஸ்ரீட் ஜேர்ணலின் ஆசிரியத் தலையங்கங்களிலும் வலதுசாரி "சிந்தனைக்கூடங்கள்" (Think Tanks) இலும் கருத்துகளை வெளியிடுவதன் மூலமும் "வியட்னாம் அறிகுறிகளுக்கு" ஒரு முடிவுகட்ட வேண்டுமென பிரச்சாரம் செய்து வந்ததோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை அடைவதற்கு இராணுவ பலத்தின் பாவனையை கட்டவிழ்த்து விடும்படியும் கோரிவந்தன. இப்போது அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக காண்கிறார்கள்.

ஏற்கனவே இரு கட்சிகளதும் முன்னணிப் பேச்சாளர்கள் கொலையை வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதை தடை செய்யும் ஜனாதிபதி உத்தரவை இரத்துச் செய்யும்படி கோரி வருகின்றனர். ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக அல்லது ஊக்குவிப்பதாக கருதும் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக யுத்தத்தில் ஈடுபடும் வரையறையற்ற அதிகாரத்தை வெள்ளை மாளிகைக்கு வழங்கும் பிரேரணைக்கு வாக்களிக்க தீர்மானம் செய்துள்ளனர். ஒரு நில ஆக்கிரமிப்புடன் இணைந்த விதத்தில் ஒரு பிரமாண்டமான குண்டு வீச்சு பிரச்சாரத்தின் முதல் இலக்குகளில் ஒன்றாக ஈராக் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் தாக்கப்படுவது நிச்சயம்.

ஒரு இராணுவ அதிகாரி புதன் கிழமை கூறியது போல்: "தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன." பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் றம்ஸ்பெல்ட் கூறியதாவது திட்டமிட்ட இராணுவ நடவடிக்கை தனி ஒரு குழுவிற்கு, அரசுக்கு அல்லது அரசு அல்லாத குழுவிற்கு கட்டுப்பட்டு நின்றுவிடாது." ஜோர்ஜியா (Georgia) ஜனநாயகக் கட்சிக்காரரான செல் மில்லர் அரசாங்க வட்டாரங்களில் நிலவிவரும் இரத்த வெறியை வெளிப்படுத்துவதில் பெரிதும் கவசம் இல்லாது இருந்தார்: "குண்டு வீசி அவர்களை நரகமாக்கிவிடு. ஒரு வம்ச அழிவு ஏற்பட்டாலும் கூட அது அப்படியே நடக்கட்டும்."

செனட்டர் ஜோன் மக்கெயின்: அமெரிக்கா "அணு ஆயுதங்களுக்கு குறைவான சக்தி எதையும் நிராகரித்து விடக் கூடாது" என்றுள்ளார். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளரான தோமஸ் பிரைட்மன் "மூன்றாம் உலக யுத்தம்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் அத்தகைய ஒரு எச்சரிக்கையை விடுக்க மறுத்தார். செப்டம்பர் 11ம் திகதிய தாக்குதலை "மூன்றாம் உலக யுத்தத்தின் (World War III) முதலாவது பெரும் போராக இருக்கலாம். அணு ஆயுதங்கள் அல்லாத பாரம்பரியமான ஆயுதங்களை மட்டும் கொண்ட கடைசி யுத்தம் இதுவாகவே இருக்கும்." என எழுதியுள்ளார்.

அமெரிக்க மக்கள் பிரமாண்டமான சோகத்துக்கும் பதட்டத்துக்கும் முகம் கொடுத்துள்ள ஒரு நிலையில் இன்னமும் பேர் குறிப்பிடப்படாத எதிரியையோ அல்லது எதிரிகளையோ எதிர்த்துப் போராடி கொல்வதற்கு அல்லது கொலையுண்டு போவதற்கு தமது புத்திரர்களையும் புத்திரிகளையும் தூர இடங்களுக்கு அனுப்பும் சாத்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்றார்கள். அதேசமயம் தமது ஜனநாயக உரிமைகளை சாம்பல் ஆக்குவதையும் எதிர்ப்பின்றி ஒத்துக் கொண்டாக வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான புனித யுத்தம் என்ற பேரில் அமெரிக்கன் கம்பனிகளும் நிதி ஆதிக்க பிரமுகர்களும் நீண்டகாலமாகக் கொண்டிருந்த பூகோள ரீதியான இலக்குகளை அடையும் பொருட்டு எண்ணற்ற ஆயிரம் மக்களின் தலையில் மரணத்தையும் பேரழிவுகளையும் கட்டியடிப்பதை உள்நோக்கமாக கொண்டுள்ளனர். மக்களுக்கு கூறப்படாதது இதுவே. "சமாதானத்துக்கும்" "உறுதிப்பாட்டுக்குமான" இந்தப் புனிதப் போர் மத்திய கிழக்கிலும், பாரசீக வளைகுடாவிலும் கஸ்பியனிலும் உள்ள எண்ணெய் இயற்கை எரிவாயு வளங்கள் மீதான பிடியை அமெரிக்கா இறுக்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகி விடாது என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமா? அரசியல்வாதிகளதும் தொடர்புச் சாதன விமர்சகர்களதும் பக்கச் சார்பானதும் தேசாபிமானதுமான பிரகடனங்களின் பின்னணியில் உலகின் புதிய பாகங்களில் ஆதிக்கம் செலுத்தவும் பூகோள ரீதியிலான மேலாதிக்கத்தை ஸ்தாபிதம் செய்யவுமான நீண்டகால திட்டங்கள் இருந்து கொண்டுள்ளன.

See Also:

19 September 2001

ஐக்கிய அமெரிக்க அரசுகளில் அரபு-அமெரிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்

14 September 2001

நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் அரசியல் வேர்கள்



Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved