World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

A revealing line-up of radical organisations in Sri Lanka's political crisis

இலங்கையின் அரசியல் நெருக்கடி தீவிரவாத இயக்கங்களின் அணிதிரள்வை அம்பலப்படுத்தியுள்ளது

By K.Ratnayake
24 August 2001

Back to screen version

இலங்கையின் இன்றைய அரசியல் நெருக்கடி பல்வேறு தீவிரவாத குழுக்களும் அமைப்புக்களும் -தம்மை அடிக்கடி "இடதுசாரிகள்" "சோசலிஸ்டுகள்" "ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" என்று கூட அழைத்துக் கொள்ளும்- முதலாளித்துவ ஆட்சியைக் காப்பதில் ஆற்றும் பிரதான பாத்திரத்தை அறிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பை அளித்துள்ளது.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் நூல் இழையில் தொங்கிக் கொண்டுள்ளது. அது பெரும்பான்மையை இழந்த போது, குமாரதுங்க ஜூலை 11ம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தவிர்க்கும் பொருட்டு பாராளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைத்ததோடு எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பொலிசாரை கட்டவிழ்த்து இருவரைக் கொலை செய்தார். அன்மையில் அவர் பாராளுமன்றத்துக்கு வெளியில் ஒரு ஆட்சிக்கு வழி அமைத்த அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான போலி சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திவைத்துள்ளார்.

வலுதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 1994க்கு முன்னர் தன்னுடைய ஆட்சியின் கீழான நடவடிக்கைகளால் செல்வாக்கிழந்துள்ளது. யூ.என்.பி. தலைவர்கள் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 7ம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அரசை தோல்வியடையச் செய்வதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் பிறந்திருக்கும் இந்த ஜனநாயகவாதிகள் அரசியல் காடைத் தனங்களையும் தேர்தல் மோசடிகளையும் கொண்ட தமது சொந்த வரலாற்றை மறந்துவிட்டனர். குமாரதுங்கவுக்கு முந்தியவரான முன்னாள் யூ.என்.பி. தலைவர் ஜனாதிபதி பிரேமதாச குற்றச்சாட்டுப் பிரேரணையை தவிர்ப்பதற்காக பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

அரசியல் ஸ்திரமற்ற நிலையானது ஆழமான அரசியல் பிரச்சினைகளின் அறிகுறியாகும் -யூ.என்.பி.யும் சரி பொதுஜன முன்னணியும் சரி நாட்டின் நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகளை அல்லது செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான விரிசலை கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதிலும் தோல்வி கண்டுள்ளன. தொழிலாளர் வர்க்கம் இந்த சிறிய செல்வந்தர்களின் சீரழிந்த கட்சிகளில் இருந்து விடுபட்டு தமது சொந்த சோசலிச தீர்வுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது இன்றைய அவசியமாகும்.

ஆனால் இந்த சூழ்நிலையில் பல்வேறு தீவிரவாதக் குழுக்களும் -நவசமசமாஜக் கட்சி (NSSP) மற்றும் ஏனைய கருத்துவேறுபாடு கொண்ட, பிளவுபட்ட குழுக்களும்- யூ.என்.பி.யையும் பொதுஜன முன்னணியையும் ஜனநாயகத்தினதும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளதும் பாதுகாவலர்களாக காட்டுவதோடு தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஏழைகளுக்கும் இந்த சீரழிவு கூட்டுக்களை தவிர வேறு மாற்றுவழி இல்லை என வலியுறுத்தி வருகின்றனர்.

உண்மையில் அவர்கள் தொழிலாளர்கள் பக்கம் இருப்பதாகக் கூறிக்கொண்டு வேலியின் அடுத்த பக்கத்தில் நின்றுகொண்டுள்ளதோடு ஏனைய முகாம்களுக்கு சேறடிப்பதன் மூலம் தங்களுக்கு ஜனநாயக சாயம் பூசிக்கொள்கின்றனர். நவசமசமாஜக் கட்சியும் அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னவும் குமாரதுங்க சார்பாக அவருடைய கருத்துக் கணிப்பிற்கான அழைப்பையும் எதிரணிகளுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஆதரிக்கின்றனர். ந.ச.ச.க.வில் இருந்து பிரிந்த ஒரு குழுவும் -முன்னாள் ந.ச.ச.க. தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான ஜனநாயக முன்னணி- ஐக்கிய சோசலிச கட்சியும் (USP) பழமைவாத யூ.என்.பி.யுடன் நின்றுகொண்டுள்ளன.

குமாரதுங்க பாராளுமன்றத்தை இடை நிறுத்தியபோது அவரை நியாயப்படுத்தி பாதுகாப்பதற்கு முன்நின்றவர் ந.ச.ச.க. தலைவர் விக்கிரமபாகுவாகும். அதற்கென அவர் மிக விரைவாக இடதுசாரி சமாதான இயக்கம் என்ற ஒன்றை நிறுவினார். அதன் அறிக்கை, நாடு அரசாங்கத்தினுள்ளும் வெளியிலும் சோவினிச சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாக அறிவுறுத்தியது. "இந்த அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு திகதி குறித்துள்ளார்." இந்த அறிக்கை "ஜனாதிபதியின் நடவடிக்கை சர்வாதிகார அரசியலமைப்பை மாற்றி ஒரு ஜனநாயக சமாதான நிலையை உருவாக்க வழிசமைத்துள்ளதாக" மேலும் குறிப்பிடுகின்றது.

இந்த அரசியல் தர்க்கம் ஒரு அசாதாரணமானது. குமாரதுங்க முதலில் சகல "இடதுசாரிகளதும்" தீவிரவாதிகளதும் ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்தது தொடக்கம் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்ததோடு உக்கிரமடையவும் செய்தார். அவர் சிங்கள சோவினிச குழுக்களுடனான தமது உடன்பாட்டை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திய அதே வேளை எந்தவிதமான எதிர்ப்பையும் சமாளிப்பதற்கான ஜனநாயக விரோத பாதுகாப்பு சட்டங்களை தன்வசம் கொண்டுள்ளார். தற்போது தனது அதிகாரத்தை பாதுகாப்பதற்கு "சர்வாதிகார அரசியலமைப்பில்" உள்ள நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி பராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார். இவை எல்லாவற்றையும் ந.ச.ச.க. சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான நகர்வு என குறிப்பிட்டுவருகின்றது.

குமாரதுங்கவின் நடவடிக்கைகளின் அதிகாரக்குவிப்பு கொள்கையை ந.ச.ச.க.வை ஏற்றுக்கொள்ளத் தள்ளியுள்ளது என்பது தெளிவு. "சந்திரிகா போனபாட்டிச சர்வாதிகார அதிகாரத்தினை பிரயோகித்தது உண்மை." ஆனால் அது உடனடியாகப் பிரகடனப்படுத்தியதாவது: "அது ஒரு இனவாத இராணுவ தேசிய அரசாங்க சதியை நசுக்குவதற்காக இல்லையா? வேறுவார்த்தைகளில் சொன்னால், குமாரதுங்குவுக்கு வழங்கும் ஆதரவை வலதுசாரி மாற்றீடுகளை கண்டனம் செய்வதாக நியாயப்படுத்தப்பட்டது. அதே நேரம், ந.ச.ச.க. தமது சேவையை குமாரதுங்கவுக்காக அர்ப்பணிப்பதன் மூலம் தமது இலாபத்தை கணக்கிட்டுக்கொண்டுள்ளது. "தமது போனபாட்டிச நிலையில் அவர் இடதுசாரி சக்திகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்" என ந.ச.ச.க. தலைவர் கருணாரட்ன கடந்த மாதம் ஒரு பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டர்.

தொழிலாளர் வர்க்கத்துக்கு வரவிருக்கும் ஆபத்துகளை பற்றி ஒரு துளியும் கணக்கிலெடுக்காத ந.ச.ச.க.வின் "இடதுசாரி சமாதான இயக்கம்" எவ்வாறு தொடர்ந்து செல்வது என ஆலோசனை வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு சாத்தியமான அளவில் நல்லதோர் முகமூடியை அணிவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதனுடைய அறிக்கை கருத்துக்கணிப்பை தொடர்ந்து அரசியல் அமைப்பை மாற்றியமைக்க அரசியலமைப்பு நிர்ணய சபையை கூட்ட அழைப்பு விடுத்தது.

இந்த சபையின் போலித்தனம் அதன் உள்ளடக்கத்திலுருந்து தெளிவாகின்றது -"வடக்கு தெற்கை சார்ந்த சகல அரசியல் கட்சிகளதும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் முதலமைச்சர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட "பிரபல்ய நிபுணர்கள்". மார்க்சிஸ்டுகள் கோரும் -புத்த மதத்தை அரச மதமாக்கியுள்ள- தற்போதைய இனவாத அரசியல் அமைப்பை மாற்றி, அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதி செய்யக்கூடிய ஜனநாயகரீதியாக தெரிவு செய்யப்பட்ட தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் நிர்ணய சபைக்கும் இவர்கள் கூறும் சபைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

குமாரதுங்க முன்வைத்துள்ள கருத்துக் கணிப்பு அரசியலமைப்பை மாற்றுவதற்கானதாக சொல்லிக்கொள்ளப்பட்டாலும் அது எவ்வாறான மாற்றமாக இருக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை. ந.ச.ச.க. சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான நகர்வு எனும் குமாரதுங்கவின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறெனினும் தமது அரசாங்கத்தை தக்கவைத்துக் கொள்ள தேவையான அரசியல் அமைப்பு மாற்றத்தினை செய்துகொள்ளக் கூடிய ஒரு வெற்றுக் காசோலையை கருத்துக் கணிப்பின் மூலம் பெற்றுக்கொள்வதேயாகும். இதுவே தெரிவு செய்யப்படும் அரசியலமைப்பு நிர்ணய சபையாலும் நியாயப்படுத்தப்படும்.

குமாரதுங்க பெரும் வியாபாரிகளின் அழுத்தத்தின் பேரில் திட்டத்தை கைவிட்டபோது ந.ச.ச.க. மனம் நொந்து உண்மையை வெளிப்படுத்தியது. கட்சியின் பத்திரிகையான "ஹரய" அண்மைய வெளியீடு அரசாங்கம் "பிற்போக்குக்கு" சந்தர்ப்பமளித்துள்ளதாகவும் எதிர்சக்திகளை நசுக்குவதற்கு போதியளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் முறைப்பாடு செய்தது.

இது குமாரதுங்கவுக்கான தமது ஆதரவுக்கு எந்தவிதமான அரசியல் காரணங்களையும் குறிப்பிடாத ந.ச.ச.க. வின் நீண்டகால சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் ஒரு புதிய அத்தியாயமாகும். ந.ச.ச.க. 1994 தேர்தலின் போது, யுத்தத்தை நிறுத்தி தீவில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதாகக் கூறிய பொதுஜன முன்னணிக்கு ஆதரவளித்தது. பின்னர் அரசாங்கம் யுத்தத்தை உக்கிரமாக்கி தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமையின் மீது தாக்குதலைத் தொடுத்தபோது "இராணுவத் தீர்வை நாடுவதாக பொதுஜன முன்னணியைக் குற்றம்சாட்டிய அதே வேளை மறுபுறத்தில் சிங்கள சோவினிச இயக்கமான மக்கள் விடுதலை முன்னணியை (JVP) பிரதான இடதுசாரி சக்தி என பிரகடனப்படுத்தி அதனுடன் இணைந்து கொண்டது. யுத்தத்திற்கான மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஆதரவை அடுத்தும் அது குமாரதுங்கவின் பக்கம் திரும்பியதையும் அடுத்து அதனுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளது.

யூ.என்.பி.யின் சகாக்கள்

யூ.என்.பி. ஆதரவு சகாக்களுக்கு தலைமை வகிக்கும் முன்னாள் ந.ச.ச.க. தலைவர் வாசுதேவ நாணயக்கார இதற்கு மாறானவர் அல்ல. அவர் 1994ல் பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான லங்கா சமசமாசக் கட்சியில் இணைவதற்காக கருணாரத்னவிடம் இருந்து பிரிந்தார். அரசாங்கம் மீதான எதிர்ப்பு வளர்ச்சி கண்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்தில் இருந்து விலகிய நாணயக்கார, பழமைவாத யூ.என்.பி. தலைமையிலான எதிரணியின் பிரதான ஆலோசகர்களில் ஒருவராகியுள்ளார்.

தற்போதைய நெருக்கடியில், யூ.என்.பி.யும் ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கமும், நாட்டின் சுதந்திரமும், மற்றும் சிங்கள உறுமய போன்ற சிங்களத் தீவிரவாத இயக்கங்களாக அணிதிரண்டுள்ள பூமிபுத்திர கட்சியும், மாதொலுவாவ சோபித போன்ற சோவினிச பெளத்த பிக்குகளாலும் ஒழுங்கு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்திலும் அவர் சமூகமளித்திருந்தார்.

குமாரதுங்கவின் வெளிப்படையான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாணயக்கார குழம்பிப் போயிருக்கும் அதேவேளை அவர் ஏன் வலதுசாரிகளையும் வெளிப்படையான சோவினிசக் கட்சிகளையும் ஆதரித்து வந்தார் என்பதை விளக்கி இருக்கின்றார். அவர் ஒரு பத்திரிகை நேர்கானலில் யூ.என்.பி.யின் அரசியல் திட்டம் என்ன என்பது பற்றி தனக்கு அக்கறையில்லை என வலியுறுத்தியிருந்தார். "ஒருவர் கருத்துக் கணிப்பை எதிர்ப்பதில், யூ.என்.பி. ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நிரலை கொண்டிருக்கின்றதா என்பதை கணக்கில் கொள்ளக் கூடாது. அவர்கள் சர்வாதிகார அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்பதே இங்கு ஒரே தேவையான நிலைமையாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக் கணிப்பு தொடர்பான ஒரு தொலைக் காட்சி பேச்சின் போது அவர் ஒரு படி மேலே போய் குறிப்பிட்டதாவது: "வரட்சிக் காலத்தில் காட்டு மிருகங்கள் ஒரே தண்ணீர் குழியில் தண்ணீர் குடிப்பது போல் நாங்கள் பழைய பகைமைகளை மறந்து ஜனாதிபதியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக போராட ஐக்கியப்பட வேண்டும்." எவ்வாறெனினும், அவர் தனது சிறுவயது கிராமப்புற நீதிக் கதைகளில், தன்னுடைய பழைய பகைமைகளை மறந்து ஒரு புலியுடன் தண்ணீர் குடிக்கச் சென்ற மானுக்கு என்ன நேர்ந்தது என்பதை விளக்க மறந்து விட்டார்.

இன்றைய அரசாங்கத்தைப் போலவே யூ.என்.பி.யும் எல்லா வகையிலும் மோசமான தொழிலாளர் வர்க்க விரோதி என்பதை இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்களின் கடந்த அரைநூற்றாண்டு கால வரலாறு காட்டியுள்ளது. இந்தக் கட்சி, குமாரதுங்க பாராளுமன்றத்தை ஒத்தி வைத்த "சர்வாதிகார அரசியலமைப்புக்கும்" யுத்தத்தை துரிதப்படுத்திய 1983 தமிழர் விரோத திட்டங்களுக்கும் 1988-1990 க்கு இடைப்பட்ட காலத்தில் தென்பிரதேசத்தில் 60,000 மக்கள் கொல்லப்பட்டு அல்லது கானாமல் போன பயங்கரவாத ஆட்சிக்கும் நேரடிப் பொறுப்பாளியாகும்.

இவை எதனையும் கணக்கில் கொள்ளாது, ந.ச.ச.க.விலிருந்து பிரிந்த எஸ்.ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய சோசலிசக் கட்சியும் (USP) யூ.என்.பி.யின் ஜனநாயகத்துக்கான "மக்கள் சக்தி" பிரச்சாரத்தில் இணைந்து கொண்டது. கருத்துக் கணிப்பை விலக்கிக் கொள்வதற்கான குமாரதுங்கவின் தீர்மானத்தை ஒரு பாரிய வெற்றியாக விளம்பரம் செய்த ஐக்கிய சோசலிச கட்சி (USP), யூ.என்.பி. ஒரு தேசிய ஐக்கியத்துக்கான அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பாக பொதுஜன முன்னணியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது மனம் நொந்து போனது. "ஒரு சர்வாதிகாரத்தை" எதிர்ப்பதில் பாரிய பாத்திரத்தை ஆற்றிய யூ.என்.பி. தற்போது பொதுஜன முன்னணியுடன் சேர்ந்து ஒரு "பெரும் சதியில்" ஈடுபட்டுள்ளது ஏன்? என்பதை ஐக்கிய சோசலிசக் கட்சியால் விளக்க முடியவில்லை.

பெரு வர்த்தகர்களின் சக்திமிக்க பகுதியினர் யூ.என்.பி.யும் பொதுஜன முன்னணியும் தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ஒரு ஐக்கிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என நெருக்கி வருகின்றனர். எந்தவிதமான அடிப்படை வித்தியாசமும் இல்லாத இந்த இரண்டு முதலாளித்துவக் கட்சிகளும், பல்லாயிரக்கணக்கான தொழில் வெட்டுக்களுக்கும் மேலும் ஒரு வாழ்க்கை நிலைமை சீரழிவுக்கும் இட்டுச் செல்லும் சர்வதேச நாணய நிதியத்தின் மீளமைப்பு வேலைத்திட்டம் உட்பட, ஆளும் வர்க்கம் வேண்டிக் கொண்டுள்ள திட்டங்களை அமுல் செய்யவும் ஒரு கூட்டு நிர்வாகத்துக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

எண்ணிக்கையில் சிறியவையான ந.ச.ச.க.வும் ஏனைய தீவிரவாத அமைப்புகளும் தமது சந்தர்ப்பவாத திருப்பங்களாலும் நிலைப்பாடுகளாலும் மக்களின் கண்களின் முன்னால் அவமானத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த அமைப்புகளுக்கு பிரதான பாத்திரம் வழங்கப்பட்டமை அரசியல் நெருக்கடியின் ஆழத்தை அளப்பதற்கான அளவுகோளாகும். ஒருபுறம் ந.ச.ச.க. தலைவருக்கு அரச இலத்திரனியல் தொடர்பு சாதனங்களில் பிரதான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டதோடு அரச பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளிலும் முதலிடம் அளிக்கப்பட்டது. மறுபுறத்தில் யூ.என்.பி. தலைமையிலான எதிரணி மேடைகளில் வாசுதேவ நாணயகாரவுக்கு முதலிடம் அளிக்கப்பட்டதோடு யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தானாகவே இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டமையானது, பொதுஜன முன்னணி யூ.என்.பி. க்கிடையிலான அரசியல் மோதல் தொழிலாளர் வர்க்கத்தினதும் கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளதும் எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்பதில் ஆளும் வர்க்கம் மிக கவனமாக இருப்பதையே பிரதிபலிக்கின்றது. இந்த குழுக்களின் நடவடிக்கைகளின் பாத்திரம், முதலாளித்துவ அரசை அச்சுறுத்தும் ஒரு சுயாதீனமான தொழிலாளர் வர்க்க இயக்கமொன்றின் உருவாக்கத்தை தடுப்பதையும், அதற்கும் மேலாக சிந்திக்கக் கூடிய தொழிலாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மத்தியில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்துக்கு ஒரு களம் அமைவதை தவிர்ப்பதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved