World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கைSri Lankan goverment cynically exploits terror attack in US இலங்கை அரசாங்கம் அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதலை சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக்கொள்கின்றது By K. Ratnayake இலங்கையின் ஆளும் பிரமுகர்கள் புஷ் நிர்வாகத்தின் எதிர்காலஇராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, செப்டம்பர் 11ம் திகதி இடம்பெற்ற அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதலை சுரண்டிக்கொள்வதற்கு சிடுமூஞ்சித்தனமாக முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான தாக்குதலை ஆட்சேபித்து, பொதுஜனமுன்னணி (PA) அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்சுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில், இது "தீவிரவாதத்தை நசுக்குவதற்காக சர்வதேச சமூகத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் அதிமுக்கியமான அவசியத்தை" தோற்றுவித்துள்ளதாக தெரிவித்தார். குமாரதுங்கவின் கருத்துக்கள், பயங்கரவாதிகளின் அக்கிரமங்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் மீதான எந்த ஒரு உண்மையான அனுதாபத்திலிருந்தும் பண்பாக்கம் செய்யப்பட்டவையல்ல, மாறாக புஷ் நிர்வாகத்திடமிருந்து, ஒரு தனித்தமிழ் நாட்டுக்காக போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான இலங்கை அரசாங்கத்தின் நீண்ட யுத்தத்துக்காக அதிகளவிலான ஆதரவைப் பெற்றுக் கொள்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தற்போது தேர்வு செய்யப்பட்ட இலங்கை ஆயுதப் படைகளின் ஒரு பகுதியினருக்கு பூரண போர்ப் பயிற்சியை வழங்கி வருவதோடு தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் பிரகடனம் செய்துள்ளது. இலங்கை சர்வதேச விமான நிலையம் மீதான ஜூலை 24ம் திகதிய விடுதலைப் புலிகளின் தாக்குதலை சுட்டிக்காட்டிய குமாரதுங்க, அமெரிக்காவினுள்ளான நிலைமை "தீவிரவாதத்தை சமாளிப்பதற்கான முயற்சிகளை இரட்டிக்க "கோருவதாகவும், தனது அரசாங்கம்" அனைத்து சர்வதேச பூர்வாங்கத் திட்டங்களுக்கும் ஆதரவு வழங்க" சிபார்சு செய்வதாகவும் உறுதியளித்தார். செப்டம்பர் 15ம் திகதி, அரசாங்கத்துக்குச் சொந்தமான 'டெயிலி நியூஸ்' (Daily News) பத்திரிகை, தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையின் யுத்தப் பிரதேசமான வடகிழக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் நியூயோர்க் மற்றும் வாஷிங்கடன் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துவருவதாக குற்றம் சாட்டியது. இந்தத் தாக்குதல் "அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு ஒரு நல்ல எச்சரிக்கை" எனவும் எல்லா "சுதந்திரப் போராளிகளுக்கும்" உதவியானதாக இருக்கும்" எனவும் அந்தத் துண்டுப்பிரசுரத்தில் சொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த அறிக்கையை உடனடியாக நிராகரித்ததோடு "அமெரிக்க மக்கள் முகம் கொடுத்துள்ள ஆச்சரியமான துன்பத்தில்" இலாபமடைய முயற்சிப்பதாக அரசாங்கத்தையும் அதன் கூட்டுக் கட்சியான ஈழ மக்கள் ஜனநயாகக் கட்சியையும் (EPDP) குற்றம் சாட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் விசேடமாக அமெரிக்காவிடமும் ஐரோப்பாவிடமும் அரசியல் ஆதரவை வெற்றி கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கையில், இவ்வாறான ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டிருப்பார்கள் என நம்புவது கடினமானதாகும். அமெரிக்காவின் கோபத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிராக தூண்டிவிடுவது, பொதுஜன முன்னணி உட்பட ஈ.பி.டி.பி. யின் ஒரு அவநம்பிக்கையான நடவடிக்கையின் ஒரு பாகமாகும் என்பதே டெயிலி நியூஸ் கட்டுரையின் அடிப்படை அம்சமாகும். கடந்த வாரம் சண்டே டைம்ஸ் (Sunday Times) ஆசிரியர் தலையங்கம் "தீவிரவாதம் எங்கு தோன்றினாலும் அங்கு அதற்கெதிராக யுத்தம் தொடுக்க..." அமெரிக்காவுக்கும் மேற்குலக சக்திகளுக்கும் அழைப்பு விடுத்த அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் யுத்தத்துக்கு மேற்குலகு ஆதரவு வழங்குமா என்பது பற்றி ஒரு சந்தேகக் குரலையும் எழுப்பியது. எவ்வாறெனினும், "தீவிரவாதத்தை பூகோள ரீதியாக நசுக்குவதற்கான நகர்வுகள், புலி கெரில்லாக்களை (LTTE) பெருமளவில் பாதிக்கும் என்ற நம்பிக்கை பாதுகாப்பு அமைப்புக்களின் குறிப்பிட்ட சில பகுதியினருக்குள் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளதாக" பத்திரிகையின் கட்டுரையாளர் வெளிப்படுத்தியுள்ளார். ஒஸாமா பின் லேடனுடனும் தலிபான் அரசாங்கத்துடனும் முன்னர் அமெரிக்கா கொண்டிருந்த உறவை சுட்டிக்காட்டிய சில தொடர்புசாதன அறிக்கையாளர்கள், ஈராக்குக்கும் யூகோஸ்லாவியாவுக்கும் எதிரான அமெரிக்கா தலைமையிலான யுத்தத்தையும் மத்தியகிழக்கிலான அமெரிக்க கொள்கையையும் விமர்சித்துள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் எந்த ஒரு எதிர்கால அமெரிக்க இராணுவ பிரதிபலிப்புக்களையும் அனுமதிக்கும் வகையிலேயே பூர்த்தி செய்திருந்தனர். இலங்கையின் ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான த ஐலன்ட் (The Island) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அது அமெரிக்கா மீதான தீவிரவாதத் தாக்குதல் "புத்தாயிரத்தின் முதலாவது யுத்தத்தின் ஆரம்பமாக" இருந்தது என குறிப்பிட்டதோடு புஷ் நிர்வாகத்துக்கு முழு ஆதரவையும் வழங்கியது. அது ஒரு யுத்தம் அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையிட்டு ஆராய முயற்சிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தாலும் உலக பொருளாதராத்தின் வீழ்ச்சியாலும் பாதிப்புக்குள்ளான இலங்கையின் பெருவர்த்தகர்களின் சில பகுதியினர் செப்டம்பர் 11க்கு பின்னரான மேலும் ஒரு பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி சந்தேகக் குரல் எழுப்பியுள்ளனர். வியாபார ஆய்வாளர்கள் இலங்கை பொருளாதாரம் மீதான நீண்டகால பாதிப்பைப் பற்றியும், விசேடமாக அமெரிக்காவை பிரதான ஏற்றுமதிச் சந்தையாக கொண்டுள்ள ஆடைக் கைத்தொழில் சம்பந்தமாகவும் எச்சரிக்கை செய்துள்ளனர். புதன் கிழமை, சர்வதேச காப்புறுதிக் கூட்டுத்தாபனங்கள் மத்திய கிழக்கிலிருந்து ஆரம்பிக்கும் விமானச் சேவைகளுக்கு அதிவிசேட கட்டண விதிமுறைகளைத் திணித்ததை அடுத்து, ஐக்கிய அரேபிய எமிரேட் விமானச் சேவை கொழும்புக்கான அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்திக் கொண்டது. கடந்த ஜூலை மாதம் கொழும்பு விமான நிலையம் மீதான தமிழிழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலின் பேரில் சில விமானச் சேவைகள் ஏற்கனவே இலங்கைக்கான பல விமானங்களை குறைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டியுள்ளன. மத்திய கிழக்கிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டின் அன்னிய செலாவணியின் பிரதான அங்கமாக விளங்குவதால் விமான சேவை மீதான வெட்டு தங்களது வியாபாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என சுற்றுலாக் கம்பனிகளும் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆள்திரட்டும் முகவர்களும் எச்சரிக்கை செய்துள்ளனர். அமெரிக்கத் தாக்குதலின் பேரிலான சிங்களசோவினிச ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP அல்லது மக்கள் விடுதலை முன்னணி) பிரதிபலிப்புகள், ஏனைய உலகத் தலைவர்களும் பின்பற்றக்கூடிய வகையிலான ஒரு உதாரணத்தை அமைப்பதற்காக புஷ் நிர்வாகத்தை தூண்டுவதாக விளங்கியது. செப்டம்பர் 12ம் திகதி வெளியிடப்பட்ட ஜே.வி.பி. அரசியல் குழுவின் அறிக்கை பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த அதேவேளை இஸ்ரேலுக்கான அதன் ஆதரவை முடிவுக்கு கொணரவும் "இலங்கை போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தை நிர்மூலமாக்கவும்" அழைப்பு விடுத்தது. இந்த நகர்வானது, "உலகம் பூராவும் உள்ள மக்களின் ஆதரவை வெற்றிகொள்ள (அமெரிக்காவுக்காக) ஒரு முன்னோடியாகவிளங்கும்" என அது குறிப்பிட்டுள்ளது. "அமெரிக்கா எந்தக் கஷ்டமும் இன்றி ஒரு சிறந்த உலகத் தலைவனாக முடியும்" என அது மேலும் தொடர்ந்தது. இந்த முகஸ்துதியுடனான அழைப்பானது, ஜே.வி.பி. யின் பேரினவாத அரசியலுடனும் அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான அதன் அண்மைய கோரிக்கையுடனும் இணைந்துகொண்டுள்ளது. இன்னுமொரு சிங்கள பேரினவாத அமைப்பான, சிஹலஉறுமய (சிங்கள உரிமை) மிகவும் வெளிப்படையானதாக இருந்தது. அதன் அறிக்கை குறிப்பிட்டதாவது: உலக பயங்கரவாதத்தை துவம்சம் செய்வதற்கு அமெரிக்கா தலைமை வகிக்க வேண்டும் என்பதே சிஹல உறுமயவின் எதிர்பார்ப்பாகும். தங்களை சோசலிசஸ்டுகள் எனப் பிரகடனம் செய்துகொள்ளும் சர்வதேச பப்லோவாத இயக்கத்துடன் இணைந்த ஒரு தீவிரவாத குட்டி முதலாளித்துவ குழுவான நவ சமசமாஜக் கட்சி (NSSP), பயங்கரவாதத்தை அரசியல் ரீதியில் ஏற்றுக்கொள்வதில் ஒரு நிரந்தர சாதனையாளனாகும். ந.ச.ச.க. தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னவால் கையொப்பமிடப்பட்ட அறிக்கை, பயங்கரவாதத் தாக்குதலை கண்டனம்செய்ய முயற்சிக்கவில்லை, மாறாக அதை வரவேற்றுள்ளது: தகவல் தொழில் நுட்பத்தின் இன்றைய மட்டத்திலும், மக்களின் ஒரு சிறிய குழுவினராலும் கூட, அவர்கள் உயர்ந்தளவில் உந்தப்பட்டிருப்பார்களேயானால், தமது தேர்வு செய்யப்பட்ட எதிரி மீது ஒரு பரந்த தாக்குதலைத் தொடுக்கமுடியும்..." ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களின் இறக்கமற்ற படுகொலையை உதாசீனம் செய்யும் கருணாரத்ன, "ஏழைகளதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் சவால்களுக்கு அப்பால் உள்ள ஒரு அமைப்பு முறையாக காணப்பட்ட நவீன முதலாளித்துவத்தின் தோற்றம் முற்று முழுதாக அழிந்து விட்டது" என குறிப்பிட்டார். இதேபோல் ந.ச.ச.க. ஐந்து வருடங்களுக்கு முன்னர், பல ஊழியர்களைப் பலிகொடண்ட இலங்கை மத்திய வங்கி மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலை, நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழும்பு அரசாங்கம் நடாத்தும் யுத்தத்துக்கு எதிரான "தமிழ் மக்களின் நியாயமான வெறுப்பின் வெளிப்பாடு" என வர்ணித்திருந்தார். இலங்கை முழுவதிலுமான சாதாரண மக்களைப் பொறுத்தளவில், அவர்கள் பயங்கரவாதத்
தாக்குதல் இடம்பெற்ற அன்று அதிர்ச்சியுடனும் அச்சத்துடனும் வானொலி தொலைக்காட்சி ஒலிபரப்புக்களில்
ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தீ பரவும் யுத்தக்களமாக மாறக்கூடிய, புஷ் நிர்வாகத்தின்
பிரதிபலிப்புகள் பிராந்தியத்துள் எந்தவகையிலான தாக்கத்தை எற்படுத்தும் என்பதையிட்டு பரந்தள அவிலான கலந்துரையாடல்கள்
தொடர்ந்தன. |