World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள்
& ஆய்வுகள்:
ஆசியா
: ஆப்கானிஸ்தான் Civilian casualties mount in Afghanistan. ஆப்கானிஸ்தானில் பொதுமக்களின் இழப்புக்கள் அதிகரிக்கின்றன. By kate Randall கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா தொடுத்துவரும் ஆகாயத் தாக்குதல்களால் பொதுமக்களின் இழப்புக்கள் அதிகரித்து வருவதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Afghan Islamic Press (AIP) விடுத்த அறிக்கையில் 250 க்கு மேலான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியபோதும், 300க்கு மேற்பட்ட இழப்புக்கள் நடந்துள்ளதாக தலிபான்கள் கூறினார்கள். USA Today விடுத்த அறிக்கையின்படி, தினமும் நடந்துவரும் ஆகாயத் தாக்குதல்களால் அதிகமான இழப்புக்கள் இருக்கக்கூடுமென அங்கிருந்து உதவிபுரிந்துவரும் உத்தியோகத்தர்களிடமிருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பாகிஸ்தானிலுள்ள மேற்கத்தைய இராஜதந்திரிகள் பெற்றதாகக் கூறியது. அமெரிக்காவின் குண்டுத் தாக்குதல்களால் அழிவுகள் உருவாகி வருவதாக தினமும் அங்கிருந்து அகதிகளாக பாகிஸ்தானுக்கு வந்துகொண்டிருப்பவர்கள் கூறுகின்றனர். Khawaja Ahmad என்பவர், செவ்வாயன்று தனது இரு வயதான சகோதரர்களுடன் ஜலலாபாத்திலிருந்து வந்திருந்தார். அவர், அங்கு அதிகமான குழந்தைகள் காயப்பட்டு பல வீடுகள் நாசமாகியுள்ளதாக USA Today இடம் தெரிவித்ததுடன் ''நாங்கள் எங்கள் குழந்தைகளும் தாய்மார்களும் இறப்பதைப் பார்த்தோம். ஏன் எங்களைக் கொல்லுகின்றீர்கள்? எமது மக்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்?'' என அவர்களைக் கேட்டார். வியாழக்கிழமை, ஆயிரக்கணக்கான ஆப்கானிய அகதிகள் கபூல், கண்டாகர், ஜலலாபாத் ஆகிய இடங்களிலிருந்து தமது வீடுகளை இழந்து வெளியேறுவதற்கு, கடந்த ஞாயிறு அன்று ஆரம்பித்த அமெரிக்காவின் போர் விமானங்களின் பாரிய குண்டுத் தாக்குதல்களே காரணமாயின. அவர்கள் தங்களது நிலைமைகளுக்கு ஏற்றவிதத்தில் கழுதைகளிலும், டாக்சிகளிலும், ட்ரக் வண்டிகளிலும் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வந்தார்கள். அமெரிக்காவின் ஆகாயத் தாக்குதல்களினால் 26 மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்களில் குறைந்த பட்சம் 1.1 மில்லியன் மக்கள் தமது இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஜலலாபாத்திலிருந்து வந்த பழ வியாபாரியான Riza Kahn என்பவர் USA Today யிடம் ''மக்கள் எல்லா இடமும் சிதறி ஓடுகின்றார்கள். அவர்கள் மறைவதற்கு முயற்சிக்கின்றார்கள். அதுவும் அவர்களால் இயலுமான இடங்களில் மட்டும்தான். ஆனால் எல்லா இடங்களிலும் குண்டுகள் பொழியப்படுகின்றன''. என்றார். ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.நா விற்கான இணைப்பாளரும் பேச்சாளருமான Stephanie Bunker என்பவர் இந்த அகதிகளுக்கான உணவு, குடிநீர், தங்குமிடம் போன்றவைகள் குறைவாகவும் அல்லது முற்றிலும் இல்லாதிருப்பதுமாகத் தெரிவித்தார். அவர் USA Today யிடம், செப்டம்பர் 11 லிருந்து ஜலலாபாத்திலிருந்த 100.000 பேர்களில் முக்கால்வாசிப்பேர்களும், 100.000 பேர்கள் வசித்த கண்டாகரிலிருந்து அரைவாசிப் பேர்களும் மற்றும் 1.8 மில்லியன் பேர்கள் வாழும் கபூலிலிருந்து ஐந்தில் ஒரு பகுதி மக்களும் வெளியேறியுள்ளார்கள் எனக் கூறினார். பாகிஸ்தான் எல்லைக்கு வர முடிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் கிராமப்புறங்களை நோக்கி நகர்ந்தார்கள். ஐ.நா அதிகாரிகளின் அறிக்கைகள் வெளியேறிவர்களில் அதிகமானவர்கள் விதவைகளும், முதியவர்களும், வறுமையானவர்களுமாக இருப்பதுடன் அவர்களுக்கான வளங்கள் மிகவும் பற்றாக்குறையாக இருக்கின்றன எனக் கூறியது. செல்வி Bunker என்பவர் ''வறுமைக்குள்ளும் வறுமையானவர்களே அங்கு வாழ தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ரொட்டியிலும் தண்ணீருலுமே அவர்களது வாழ்க்கை நடக்கின்றது'' என்றார். நாட்டில் பரவலாக பொதுமக்கள் வாழும் இடங்கள் யாவும் நாசமாக்கப்பட்டுள்ளன என ஆப்கான் அகதிகள் கூறியுள்ளதுடன் மின்சாரமும், குடிநீரும் நாட்டின் பலபகுதிகளில் இல்லாதிருப்பதாகவும் தெரிவித்தனர். AIP யின் அறிக்கையின்படி அக்டோபர் 10 ம் திகதி புதன்கிழமை ஜலலாபாத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Kourram கிராமத்தில் அமெரிக்காவின் ஆகாயத் தாக்குதல்களால் 100 பேர்கள் கொல்லப்பட்டோ அல்லது காயப்படுத்தப்பட்டோ உள்ளார்கள் என்றது. வேறு 12 பேர்கள் ஜலலாபாத் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். தொடர்ச்சியாக மூன்று இரவுகள் அமெரிக்க விமானங்கள் நடாத்திய தாக்குதல்களினால் இக்கிராமம் கடுமையாக அழிக்கப்பட்டதாக அக்கிராமவாசிகள் கூறினார்கள். இக்கிராமத்தில் 25 வீடுகள் முழுமையாக நாசமாகின. 50 உடல்கள் கடினமான இடிபாடுகளுக்கிடையில் சிக்குண்டதாக தலிபான்கள் தெரிவித்தார்கள். ஐ.நா அதிகாரிகள், கண்டாகரிலிருந்து தென் பகுதியிலிருக்கும் நகரில் 10 பேர்களும் Mazar-e Sharif லிருந்து வடபகுதியில் 20 பேர்களும் இறந்துள்ளதாகக் கூறினர். செவ்வாய் அதிகாலையில் அமெரிக்காவினால் ஏவிவிடப்பட்ட ஏவுகணை ஒன்று காபூலில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீழ்ந்து வெடித்ததினால் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். AIP விடுத்த இன்னொரு அறிக்கையின்படி, வியாழன் காலையில் பல ஏவுகணைகள் நகரில் வீழ்ந்து வெடித்தபோது குறைந்தது 18 பேர்கள் கொல்லப்பட்டும் 30 பேர்களுக்கு மேல் காயப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் குழைந்தைகளும் பெண்களுமாவர் எனத் தெரிவித்தது. AIP யின் அறிக்கையின்படி, ஜலலாபாத்திலிருந்து 40 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள மேற்குப் பகுதியில் Kadam கிராமத்தில் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் 200 பேர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது. பயங்கரவாதிகளின் முகாம் இப்பகுதிக்கு அண்மையில் இருப்பதாக அமெரிக்கா கருதுவதால் Kadam பகுதிக்கு மீண்டும் வான் தாக்குதல்கள் நாடாத்தப்படும். ''மீட்கப்பட்ட 160 க்கும் அதிகமான உடல்களில் அதிகமானவை குழைந்தைகளும் பெண்களுமாவர். இது மிகைப்படுத்தப்பட்டதல்ல. மேலும் பல உடல்கள் மீட்கப்படாமல் இருக்கின்றன என AIP க்கு தலிபான்கள் கூறினர். பாகிஸ்தானிலுள்ள தலிபான் தூதுவர் Abdul Salam Zaeef, ஜலலாபாத்திற்கு அருகிலுள்ள Torghar பிராந்தியத்தில் வியாழன் காலையில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 100 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அத்தோடு புதன் இரவு ஜலலாபாத் பள்ளிவாசலில் 15 மக்கள் கொல்லப்பட்டதும் அதில் அடங்கும் என்றார். வெள்ளி அதிகாலை மணித்தியாலங்கள் தலைநகர் கபூல் கடும் குண்டுத் தாக்குதலின் கீழ் இருந்தது. வர்ணிக்க முடியாதளவில் திரளாக வந்த விமானங்களினாலும் ஏவுகணைகளினாலும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாக குடிமக்கள் கூறினார்கள். அதிகாலை 3.15 மணியளவில் விமானங்கள் அலையலையாக நகருக்குமேல் பறந்ததாகவும், 10 குண்டு வெடிச்சத்தங்களை தான் எண்ணியதாகவும் Agence France Presse (AFP) நிருபர் குறிப்பிட்டார். ''அந்த நேரங்களில் விமானங்கள் இல்லை ஆனால் தொடர்ந்தும் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன. ஆகவே அங்கு ஏவுகணைகள் வந்து வீழ்ந்து கொண்டிருக்க வேண்டும்'' சில குண்டுகள் நகரின் உள்ளே வீழ்ந்தன என்றும் தொடர்ந்தும் அவர் குறிப்பிட்டார். காபூல் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அதன் விமான நிலையப் பகுதியையும் நோக்கி அதிகமான Cruise ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் அந்த நேரத்தில் பல வீடுகள் தரைமட்டமாகியதாகவும் AIP செய்தி வெளியிட்டது. காபூலிலிருந்து பாகிஸ்தானிலுள்ள பெஷாவர் பழச் சந்தைக்கு வந்த வாகனச் சாரதிகள், இரவு நேரங்களில் தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களினால் ஆப்கானிஸ்தானின் தலைநகரத்து மக்கள் முகம் கொடுக்கும் நிலைமைகளை The Scotsman பத்திரிகைக்கு விபரித்தார்கள். Aqbal Anwar என்பவர், ''முதலாவது இரவு குண்டு வீச்சுகளுக்குப் பின்பு, அவர்களால் பகலில் தமது கடமைகளை அடுத்த இரவு தாக்குதலுக்கு முன்பு செய்யக் கூடியதாகவிருந்தது. ஆனால் தற்போது பகலிலும் தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எதிரான பயங்கரவாதமாகும். அமெரிக்காவும் பிரித்தானியாவும்தான் உண்மையான பயங்கரவாதிகளாவார்'' என்றார். இன்னொரு சாரதி, ''நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. எந்தவொரு தற்பாதுகாப்புமற்ற அப்பாவி மக்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுவதனால் அவர்கள் அமெரிக்காவை ஒருபோதும் மறக்கப் போவதில்லை. நான் தரைமட்டமான வீட்டைப் பார்த்தேன். மக்கள் காயப்படுத்தப்பட்டு கொல்லப்படுவதையும் நாங்கள் அங்கு கேள்விப்பட்டோம். இத்தாக்குதலானது அங்குள்ள இராணுவத்துக்கு எதிரானது அல்ல. அமெரிக்கர்களால் இதை வெல்லமுடியாது. எனெனில் அவர்கள் அங்கு குண்டுபோட்டுத் தள்ளுவதற்கு ஒன்றுமில்லை மற்றும் அவர்களால் ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியர்களையும் கொன்றொழிக்க முடியாது'' எனக் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் Donald Rumsfeld வியாழன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ''ஐக்கிய அமெரிக்க அரசானது மக்களை இலக்கு வைக்கவில்லை என்பது இங்குள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்'' என்றார். வாஷிங்டன் மக்களுக்கு இலக்கு வைக்கப்பட்டதை மறுத்ததுடன், அவர்கள் இராணுவ முரண்பாடுகளினுள் இருப்பது தவிர்க்கமுடியாதது என மேலும் அவர் தெரிவித்தார். பிரித்தானியாவினுடைய சர்வதேச அபிவிருத்திச் செயலாளரான Clare Short ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை வெள்ளியன்று அடியோடு மறுத்தார். ''தெளிவாக அங்கே தவறான பிரச்சாரம் பரப்பப்படுகின்றது......... தகவல்கள் உள்ளேயும் வெளியேயும் எல்லைகளை ஊடறுத்து வருகின்றன, அங்கு அகதிகளும் குடும்பங்களும் உள்ளன, ஆப்கானிஸ்தான் அகதிகள்தான் மத்தியில் சிவிலியன் இழப்புக்கள் இல்லையென்பதை பாரியளவில் விளங்கிக் கொள்ளவேண்டும்'' என்றார். காபூலைச் சுற்றிலும் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் அராபிக்
கடலிலுள்ள அமெரிக்க விமானம் தாங்கி யுத்தக் கப்பல்களால் நடாத்தப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அடையாளம்
காணப்படமுடியாத நிலத்திற்கு கீழுள்ள வரிசையான கட்டிடத் தொகுதிகளை துல்லியமாக அமெரிக்கா தாக்கியதாக
Rumsfeld
வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறினார். GBU-28
"Bunkers Busters" என்னும் 5000 இறாத்தல் நிறையுடைய
இந்த ஆயுதங்கள் லேசர் கதிரினால் வழிகாட்டப்படுவதுடன், இக்குண்டுகள் பலமான சீமேந்துக் கட்டிடங்களை பயங்கரமாக
துளையிட்டுத் தாக்கக் கூடியவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. |