The Taliban, the US and the resources of Central Asia
தலிபான், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் மத்திய ஆசிய வளங்கள்
By Peter Symonds
24 October 2001
Back to screen version
ஆப்கானிஸ்தானில் அண்மைய அமெரிக்க ஆக்கிரமிப்பின் இலக்கு தலிபான் ஆகும். எவ்வாறாயினும்
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் பற்றிய விரிவான, செய்தி ஊடக படப்பிடிப்பில், இந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின்
ஊற்றுமூலம் அதன் சமூக மற்றும் தத்துவார்த்த அடிப்படை மற்றும் அது அதிகாரத்துக்கு வந்தமை பற்றிய எந்தவிதமான
முரண்பாடற்ற விளக்கத்தையும் ஒருவர் தேடுதல் வீண் ஆகும். இந்த விடுபாடு தற்செயலானது அல்ல. தலிபான் பற்றிய எந்தவிதமான
கருத்தூன்றிய ஆய்வும் காபூலில் உள்ள தற்போதைய மதகுருமார் ஆட்சியை வளர்த்தெடுப்பதில் வாஷிங்டனின் குற்றத்திற்கான
உடந்தை நிலையை வெளிப்படுத்துகின்றது.
புஷ் நிர்வாகம் இஸ்லாமிய தீவிரவாதி ஒசாமா பின் லேடன் மற்றும் அவரது அல்கொய்தா
அமைப்பிற்கு புகலிடம் அளித்ததற்காக தலிபானுக்கு எதிராகப் பழி தூற்றுகின்றது. ஆனால் 1980கள் முழுவதும், தொடர்ந்து
வந்த மொஸ்கோ ஆதரவு ஆட்சிக்கு எதிராக முஹைதின் போராளிகளால் நடத்தப்பட்ட ஜிஹாத் அல்லது இஸ்லாமிய புனிதப்
போருக்கு கோடிக்கணக்கான டொலர்களைச் செலவழித்தன. மேலும் 1990கள் வரை ஐக்கிய அமெரிக்க அரசுகள் இஸ்லாமிய
அடிப்படை வாதத்துக்கும் மற்றும் தலிபானின் பின்னடைவான சமூகக் கொள்கைகளுக்கும் பாரா முகமாக இருந்தது. தலிபான்
இந்தப் பிராந்தியத்தின் வாஷிங்டனது இரு நெருக்கமான கூட்டாளிகளால் --சவுதி அரேபியா மற்றும் பாக்கிஸ்தானால்--
ஆதரிக்கப்பட்டு நிதியூட்டப்பட்டது. ஆப்கானிஸ்தானில் வாஷிங்டன் நோக்கு நிலையின் திடீர்த்திருப்பங்கள் மற்றும்
திரும்புதல்களைத் தீர்மானிப்பதில் பிரதான காரணி, இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து வரும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை
மாறாக, 1991ல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவினைத் தொடர்ந்து மத்திய ஆசியாவில் திறந்து விடப்பட்ட புதிய சந்தர்ப்பங்களை
எப்படி சிறந்த முறையில் சுரண்டுவது என்பதேயாகும். கடந்த தசாப்தம் முழுவதும், ஐக்கிய அமெரிக்காவானது ரஷ்யா,
சீனா, ஐரோபிப்பிய வல்லரசுகள் மற்றும் ஜப்பானுடன் -இந்த முக்கியமான மூலோபாய பிராந்தியத்தில் அரசியல்
செல்வாக்கிற்காகவும் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய ஆசிய குடியரசுகளான-- துர்க்மேனிஸ்தான், கஜக்ஸ்தான்,
உஸ்பெக்கிஸ்தான், தாஜிக்கிஸ்தான் மற்றும் கிர்க்கிஸ்தானில் உள்ள உலகின் மிகப் பெரிய, துளையிட்டு எடுக்கப்படாத வாயு
மற்றும் எண்ணெய் வளங்களைச் சுரண்டுவதற்கான உரிமையை வெல்வதற்கான போட்டியில் ஈடுபட்டு வந்திருக்கிறது.
மத்திய ஆசியாவில் பெரும் இலாபம் பெறக்கூடிய உள்ளுறைக்கான திறவுகோல் விநியோகம்
--இந்த தனிமைப்படுத்தப்பட்ட, நிலங்களால் சூழப்பட்ட, பின்தங்கிய பிராந்தியத்திலிருந்து உலகின் பிரதான எரிபொருளை
சந்தைக்கு எப்படி கொண்டு செல்வது என்பது ஆகும். இருக்கின்ற ஒரே குழாய் வழிப்பாதை ரஷ்யா வழியாக செல்லும்
பழைய சோவியத் விநியோக வலைப்பின்னல் ஆகும். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வளங்களுக்காக முண்டியடித்துக் கொண்டு
போகுதல் உக்கிரமடைகையில், அமெரிக்க நோக்கங்கள் தெளிவாகின. அது ஏனைய போட்டியாளர்களை இந்தப் போட்டியிலிருந்து
ஓரம் கட்டி வைப்பதை உறுதிப்படுத்தும் அதேவேளை, ரஷ்யாவின் பொருளாதார ஏகபோகத்தைக் கீழறுக்க விரும்பியது.
ஆகையால் குழாய்ப்பாதை சீனா மற்றும் ஈரானைத் தவிர்த்ததாய் அமெரிக்கா கணிசமான அரசியல் செல்வாக்கை செலுத்தக்
கூடிய நாடுகள் மீது செல்ல வேண்டி இருந்தது.
மத்திய ஆசியக் குடியரசுகள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்தது மற்றும்
அவை சீனாவுடனும் ஈரானுடனும் சீண்ட எல்லைகளைக் கொண்டிருந்தன. ஆகையால் ரஷ்யா, சீனா மற்றும் ஈரானைத்
தவிர்த்த குழாய்ப் பாதை இரு மாற்றீடுகளை விட்டிருந்தது. ஒன்று காஸ்பியன் கடலுக்கு அடியில், காகசஸ் வழியாக அஜர்பெய்ஜான்
மற்றும் ஜோர்ஜியா, அதன்பின் துருக்கி வழியாக செல்லக் கூடியது. இரண்டாவது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான்
வழியாக செல்லக் கூடிய சிறியது, ஆனால் அது உடனடியாக கடினமான அரசியல் பிரச்சினைகளை எழுப்பியது. ஆப்கானிஸ்தானில்
யாருடன் பேசுவது மற்றும் குழாய்ப் பாதைகளைக் கட்டவும் அதனைப் பராமரிக்கவும் தேவையான அரசியல் ஸ்திரத்தன்மை
எப்படி உத்திரவாதம் செய்யப்பட முடியும் என்பதாகும்.
சோவியத் ஆதரவு முகமது நஜிபுல்லா ஆட்சி 1992ல் வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து,
காபூல் போட்டியில் ஈடுபட்டுள்ள முஜாஹைதின் படைகளால் யுத்த களமாக மாறியது. பெயரளவில் அரசாங்கத்தின் தலைவராக
இருந்தவர் பேராசிரியர் பர்கானுதின் ரப்பானி. இவர் வட ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தாஜிக்குகள் மற்றும் உஸ்பெக்குகள்
இனக்குழுக்களை முக்கிய அடித்தளமாகக் கொண்ட, பெரிதும் ஸ்திரமற்ற மற்றும் நிலை பெயர்ந்து கொண்டிருக்கும் கூட்டணிக்குத்
தலைமை வகித்தார். போட்டி ஹிஸ்ப்-இ-இஸ்லாமி படையானது, தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பான்மை பஷ்துனிலிருந்து
வந்தவர்களைக் கொண்டது, காபூலின் புற நகர்ப் பகுதிகளில் நிலைகொண்டிருதந்தது. குல்புத்தின் ஹெக் மத்தியாரால்
தலைமை வகிக்கப்பட்ட படை, தலை நகரிலிருந்த அரசாங்க நிலைகளை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருந்தது.
தலைநகரை இடிபாடுகளாக்கி அகதிகளின் அலைக்குப் பின் அலையை உருவாக்கிய இம் மோதலின்
இருபுறமும் அணிவகுத்துவர்கள் ஏனைய படைக் குழுக்கள், அவர்கள் நாட்டின் எண்ணற்ற இனக்குழு மற்றும் மதப்பிரிவுகளைப்
பிரதிபலித்தன. போட்டிக் குழுக்கள் உள்ளூர் பகைமைகளை மட்டும் பிரதிபலிக்கவில்லை மாறாக தமது மேலாதிக்கத்தை
நிறுவ விரும்பும் பல்வேறு ஆதரவு அரசுகள் ஒவ்வொன்றின் நலன்களையும் பிரதிபலிக்கின்றன. பாக்கிஸ்தான் ஹெக்மத்தியாரை
ஆதரித்தது, ஈரான் ஷைட் ஹசாரஸ்-ஐ ஆதரித்தது மற்றும் சவுதி அரேபியா பல குழுக்களுக்கு நிதி அளித்தது, குறிப்பாக
எவை தமது அடையாள இஸ்லாமுக்கு -வஹாபிசம்- ஆதரவாக இருப்பனவோ அவற்றுக்கு நிதி அளித்தது. மத்திய ஆசியக்
குடியரசுகள் வட ஆப்கானிஸ்தானில் உள்ள இனக்குழுக்களுடன் தொடர்புகளை வைத்திருந்தன. இந்தப் பின்புலத்தில், இந்தியா,
ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகள் அனைத்தும் ஆப்கானிய அரசியல் விவகாரங்களில் சம்பந்தம் கொண்டிருந்தன.
காபூலில் உள்ள நிலைமை, நாடு மொத்தத்தின் நுண்மாதிரிப் படிவமான
(Microcosm) காட்சி
ஆக இருந்தது. ரப்பானி அரசாங்கம் அதன் உடனடி இராணுவக் கட்டுப்பாட்டிற்குக் கீழான பகுதிக்கு அப்பால் உண்மையான
பொறுப்பினைச் செயலாற்ற முடியவில்லை. நாடு போட்டி படைக் குழுக்களுக்கு மத்தியில் துண்டாடப்பட்டது,
பொருளாதாரம் அழிந்தது மற்றும் சமூகக் கட்டிணைப்புக்கள் கந்தல் கந்தலாக ஆகி இருந்தன. 1980களில் சோவியத்
ஆதரவு ஆட்சிக்கு எதிரான யுத்தத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர் மற்றும் பலர் அகதிகளாயினர்.
1990 நடுப்பகுதி அளவில், வாழ்நாள் எதிர்பார்ப்பு வெறும் 43-44 ஆண்டுகளாக இருந்தன மற்றும் குழந்தைகளில் கால்
பகுதியினர் ஐந்து வயதை அடையும் முன்னரே இறந்தனர். மக்களில் 29 சதவீதத்தினர் மட்டுமே பாதுகாக்கப்பட்ட குடிநீரைப்
பெறக் கூடியவர்களாக இருந்தனர்.
1994ல் தலிபான் தோன்றிய தெற்கில் உள்ள பஷ்துன்
(Pashtun) பகுதிகள்
அவர்களுள் மிகவும் தாறுமாறானவர்கள். நாட்டில் உள்ள பெரிய நகரம் ஆன காந்தஹார் மூன்று யுத்தப் பிரபுக்கள் இடையில்
பிளவு பட்டிருந்தது மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் எதேச்சாதிகார மற்றும் அடிக்கடி கொடூரமாய் நடக்கும் டசின் கணக்கான
இராணுவப் படை கொமாண்டர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. ஆப்கானின் பொருளாதார ரீதியான மிகப் பின்தங்கிய
மற்றும் சமூக ரீதியில் பழமை வாய்ந்த இப்பிராந்தியம், பாரம்பரியமாக நாட்டின் மன்னர் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
காபூலின் புதிய தாஜிக் மற்றும் உஸ்பெக் தலைமையை நோக்கிய உள்ளூர் சீற்றம் ஆனது, தாங்கமுடியாத பொருளாதார
மற்றும் சமூக நிலைமைகளால் உருவாக்கப்பட்ட ஆற்றொணா நிலையுடன் பின்னிப் பிணைந்து கொண்டிருந்தது.
இருப்பினும், துர்க்மேனிஸ்தானிலிருந்து பாக்கிஸ்தானுக்கு, முன்மொழியப்பட்ட பல குழாய்ப்
பாதைகளில் தெற்கு ஆப்கானிஸ்தானும் கூட முன்னுரிமை கொடுக்கப்பட்ட வழித் தடம் ஆகும். அர்ஜெண்டினிய கம்பெனி பிரிடாஸ்
முதலில் இப்போட்டியில் நுழைந்த ஒன்றாக இருந்தது. இக் கம்பெனி 1992லும் 93லும் துர்க்மேனிஸ்தானில் நாட்டின் வாயு
வளங்களைச் சுரண்ட மற்றும் துளையிடுவதற்கான உரிமைகளைப் பெற்றது மற்றும் 1994ல் துர்க்மேன் மற்றும் பாக்கிஸ்தான்
அரசாங்கங்களுடன் எரிவாயு குழாய்ப்பாதை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலைத் திறந்தது. இது 1995ன்
ஆரம்பத்தில் நடைமுறைப் படுத்தக்கூடிய ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட வழிவகுத்தது. பிரிடாஸ் தொடக்கத்தில்
அமெரிக்காவின் பெரும் இராட்சத சக்தி நிறுவனமான, யுனோகல்
(Unocal) ஐ திட்டத்தில்
ஈடுபடுத்த முயற்சித்தது. யுனோகல் தனக்கென்று சொந்தமாய் திட்டங்களை வைத்திருந்தது மற்றும் அடுத்து வந்த ஆண்டில்
தனியான குழாய் வழிப் பாதைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது இவ்விரு கம்பெனிகளுக்கு இடையிலான கடும்
போட்டியையும் சட்ட யுத்தங்களையும் தூண்டி விட்டது.
முன்வைக்கப்பட்ட வழித் தடம் வழியே நிலைகொண்ட குழப்பமான சூழ்நிலைமைகளுக்கு அரசியல்
தீர்வு காணப்பட முடியும் என அனைத்து குழாய் வழிப் பாதைத் திட்டங்களும் பற்றிக் கொண்டன. குறைந்த வர்த்தக நலன்களைக்
கொண்ட ஏனையோரும் கூட குட்டி யுத்த பிரபுக்கள் மற்றும் படைகளை அகற்ற முனைப்புக் கொண்டிருந்தனர். பாக்கிஸ்தானில்
உள்ள குவெட்டாவிலிருந்து கந்தஹார் மற்றும் ஹெராட் வழியாக துர்க்மேனிஸ்தான் செல்லும் சாலையானது யுத்தத்தில்
மூழ்கியுள்ள காபூல் வழியாக மத்திய ஆசியாவுக்கு செல்லும் வடக்கு சாலைக்கு ஒரே மாற்றுப் போக்குவரத்துத் தடத்தை
வழங்கியது. இலாபகரமான மத்திய ஆசிய வர்த்தகத்தில் சம்பநதப்பட்டுள்ள நிறுவனங்களும் டிரக் உடைமையாளர்களும்
கடத்தல் புள்ளிகளும் ஒவ்வொரு கொமாண்டருக்கும் அவர்களது பகுதிகளைத் தங்கள் வாகனங்கள் கடந்து செல்வதால் அதிக
சாலை வரி செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர், இச்சூழலுக்கு முடிவு கட்ட அவர்கள் விரும்பினர்.
தலிபான் தோற்றம்
இவ்விவாதங்களின் மத்தியில், தலிபான் இயக்கம் சாத்தியமான தீர்வு போல் காணப்பட்டது.
தலிபான் --இஸ்லாமியப் பள்ளிகள் அல்லது 'மதரஸாக்களில்' இருந்து வந்த மாணவர்கள் அல்லது 'தலிப்கள்'-- அரசாங்கம்
மற்றும் வர்த்தக நலன்களால் சாதாரணமாக உருவாக்கப்பட்டார்கள் என சொல்வதற்கில்லை. 1994ல் இப்புதிய இயக்கத்தின்
திடீர்த் தோற்றம், அதன் விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றி இரண்டு காரணிகளின் --முதலாவதாக, ஆயத்த ஆள்சேர்ப்பால்
உருவாக்கப்பட்ட சமூக மற்றும் அரசியல் சதுப்பு நிலம் மற்றும் இரண்டாவதாக, பாக்கிஸ்தான், சவுதி அரேபியா
மற்றும் எல்லாவற்றிலும் அமெரிக்கா நிதி, ஆயுதம் மற்றும் ஆலோசகர்கள் வடிவத்தில் வெளி உதவி-- இவற்றின் உற்பத்தி
ஆக இருந்தது.
சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்க ஆதரவு 'ஜிஹாத்தில்' எண்ணற்ற தலிபான் தலைவர்கள்
போராடி இருந்தாலும், அவ் இயக்கமானது ஏனைய முஜாஹைதீன்களால் இணைந்த ஒன்றோ அல்லது அவற்றிலிருந்து துண்டாகப்
பிரிந்த ஒன்றோ அல்ல. அது பெரும்பாலும் 1980களில் போரில் நேரடியாக சம்பநதப்பட்டிராத புதிய தலைமுறையை
அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர்கள் நஜிபுல்லாவின் வீழ்ச்சிக்குப் பின்னர், சாதாரண ஆப்கானியரின் வாழ்வில்
ஒன்றையும் கொண்டுவராத மாறாக துன்பத்தைக் கொண்டு வந்த குட்டி முஜாஹைதீன் சர்வாதிகாரிகளின் ஊழல் ஆட்சியைக்
குரோதமாகப் பார்த்தனர். அவர்களது சொந்த வாழ்க்கை யுத்தத்தால் சீரழிந்திருந்தது. அவர்களுள் பலர் பாக்கிஸ்தானில்
உள்ள அகதி முகாம்களில் வளர்ந்தனர் மற்றும் பல்வேறு பாக்கிஸ்தானிய இஸ்லாமிய தீவிரவாத கட்சிகளால் நடத்தப்பட்ட
மதரஸாக்களில் (Madrassas)
அடிப்படைக் கல்வியைப் பெற்றனர்.
ஒரு ஆசிரியர் பின்வரும் விவரத்தை வழங்குகிறார்: "இப் பையன்கள் 1980 களில் நான்
அறிந்த முஜாஹைதீன்களிலிருந்து -அவர்கள் தங்களின் மலைவாழ் இன மற்றும் மரபு வழியை மீண்டும் எண்ணிப் பார்த்தனர்,
தங்களின் கைவிடப்பட்ட வயல்வெளிகளை, பள்ளத்தாக்குகளை தாயக நாட்டத்துடன நினைவு கூர்ந்தனர் மற்றும் ஆப்கான்
வரலாற்றில் இருந்து வரும் கதைகள் மற்றும் புராணங்களை எண்ணிப் பார்த்தனர்- புறம்பான உலகத்தைச் சேர்ந்தவர்கள்.
இப் பையன்கள் தங்களின் நாட்டை அமைதியில் -ஆப்கான் ஆக்கிரமிப்பாளர்களுடனான யுத்தம் மற்றும் அதற்குள்ளேயான யுத்தத்தில்
இல்லாத ஆப்கானிஸ்தானை...- ஒருபோதும் பார்த்திராத தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சரியான
அர்த்தத்தில் யுத்தத்தின் அனாதைகள், அவர்கள் மூலமற்ற, ஓய்வற்ற, வேலை அற்ற மற்றும் சிறிதளவே சுய அறிவுத்திறமுடையோராய்
பொருளாதார ரீதியாக ஏழ்மையானவர்களாய் இருந்தனர்.
"மீட்பாளர் மீதான அவாவில், சாதாரண கிராமத்து முல்லாக்களால் போதிக்கப்பட்ட தூய
இஸ்லாத்தில் அவர்களின் சாதாரண நம்பிக்கை, அவர்கள் பற்றிக் கொள்ளக் கூடிய ஒரே ஆதாரமாக இருந்தது, அது
அவர்களின் வாழ்வை ஏதோ அர்த்தமுள்ளதாக்கியது. அவர்களின் மூதாதையரது பாரம்பரிய விவசாயம், ஆடுமேய்த்தல்
அல்லது கைத்தறி போன்ற தொழில்களில் கூட, எதிலும் பயிற்றுவிக்கப்படாதோராய், கார்ல் மார்க்ஸ் இன் ஆப்கானின்
உதிரிப்பாட்டாளிகள் என்ற பதத்தைக் கூறக்கூடியவர்களாய் இருந்தனர்."(Taliban:Islam,oil
and the New Great Game in Central Asia,Ahmed Rashid,IB Tauris,2000,P.32)
தலிபானின் சித்தாந்தம் -இந்த சமூகத்தட்டினருக்கு விடுக்கப்பட்ட கருத்துக்களின் கூட்டுக் குவியலாக
இருந்தது. இவ்வியககம் அதன் தொடககத்திலேயே ஆழமாய் பிற்போக்கானதாக இருந்தது. அது அதன் சமூகத் தீர்வுக்கு
பின்புறமாய், முகமது தீர்க்கதரிசியின் போதனையைக் கடுமையாய் பின்பற்றிய புராதன கடந்த காலத்தைப் பார்த்தது.
அது ஆழமாய் கம்யூனிச எதிர்ப்பில் தோய்த்தெடுக்கப்பட்டது. அது காபூலில் அடுத்து வந்த சோவியத் ஆதரவு ஆட்சி,
'சோசலிசம்' எனும் பதாகையின் கீழ் போலியாய் ஆட்சி செய்த கொடூரம் மற்றும் ஒடுக்குமுறையால் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.
கம்போடியாவில் கேமரூஜ் போல், தலிபான் -நகரவாழ்க்கை, கற்றல், கலாச்சாரம்
மற்றும் தொழில் நுட்பம் பற்றிய ஒடுக்கப்பட்ட கிராமத் தட்டினரின் குரோதம் மற்றும் சந்தேகத்தைப் பிரதிபலிக்கின்றது.
அதன் தலைவர்கள் அரைகுறைக் கல்வி கற்ற கிராமப்புற முல்லாக்கள், அவர்கள் மத விளக்கங்களையும் மறைநூல்களையும்
கற்றுணர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் அல்லர். அவர்கள் ஏனைய இஸ்லாமிய மதப்பிரிவினர் தொடர்பாக குறிப்பாக ஷியாக்கள்
தொடர்பாக, மற்றும் பஷ்துன் அல்லாத இனக்குழுக்கள் தொடர்பாகவும் குரோதம் கொண்டிருந்தனர். தலிபான்களின்
பின்னோக்கிய சமூகவிதிமுறை எந்த இஸ்லாமிய மரபும் போல, பஷ்துன் மலைவாழ் மக்களின் சட்டங்கள் அல்லது பஷ்துன்வாலியிலிருந்து
பெறப்பட்டது. அதன் சித்தாந்தம் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இஸ்லாமிய அடித்தளத்தை --19ம் நூற்றாண்டின்
செல்வாக்குமிக்க சீர்திருத்த இயக்கமான டியோபாண்டிசத்தை (Deobandism)--
கொண்டிருந்தது ஆனால், வடிவத்தில் எந்த முன்னேற்றமும் இன்றி இருந்தது.
தலிபான், யுத்தத்தில் மூழ்கடிக்கப்பட்ட ஆப்கானில், மதகுரு பாசிச வடிவின் வகையாகத்
தோன்றியது. முல்லா, சிறு அதிகாரிகள், சிறு விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் பிள்ளைகள் ஆகிய வர்க்கமிழந்த
மற்றும் பிடுங்கி எறியப்பட்ட கிரமப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கத் தட்டினரின்-- நம்பிக்கை இழந்த, விரக்தியை அது
எதிரொலித்தது. அவர்கள் ஆப்கானில் மலிந்துள்ள சமூக அவலங்களுக்கு சர்வாதிகார இஸ்லாமிய ஆட்சியைத் திணிப்பதன்
வழியாகத் தவிர வேறு எதனையும் மாற்றீடாகக் காண முடியாதவர்களாயிருந்தனர்.
தலிபானின் தோற்றுவாய் தொடர்பான அதன் சொந்த அறிவிப்பு அதனது அழைப்பு பற்றிய
உள்ளார்ந்த பார்வையை அளிக்கிறது. 1994 ஜூலையில் தலிபானின் உயர் தலைவர் முகமது உமர், அப்போது கிராமத்து
முல்லாவாக இருந்தார், உள்ளூர் படை கொமாண்டர்களால் கடத்திக் கற்பழிக்கபட்டிருந்த இரு பெண்களை விடுவிப்பதில்
உதவிக்கு வரும்படியான வேண்டுகோளுக்கு இசைந்தார். உள்ளூர் மதரஸாக்களில் உள்ள மதக் கல்வி கற்ற மாணவர்கள்
மத்தியில் உள்ள ஆதரவாளர்களுடன் சேர்ந்து, முஜாஹைதீன் அமைப்புக்களுள் ஒன்றுடன் போராடினார். சிறிதளவே துப்பாக்கிகளுடன்
ஆயுதபாணியாகிய அக்குழு அப் பெண்களை விடுவித்ததோடு கொமாண்டரைப் பிடித்து வந்து, கொமாண்டரின் டாங்கியின்
பீரங்கிக் குழாயிலில் கட்டித் தூக்கிலிட்டது.
இச்சம்பவம் பற்றிய உண்மை எதுவாயினும், தலிபான்கள் தம்மை, சாதாரண மக்கள் மீது சுமத்தப்பட்ட
தவறுகளைத் திருத்தும் நோக்கு கொண்ட, மதக் காவலர்களாக காட்டிக் கொண்டனர். அதன் தலைவர்கள் தங்களது இயக்கம்,
முஜாஹைதீன் அமைப்புக்களைப் போல அரசியல் கட்சி அல்ல மற்றும் அரசாங்கம் அமைப்பதல்ல என்று வலியுறுத்தினர்.
அவர்கள் தூய இஸ்லாமிய நிர்வாகத்திற்கான வழியை தெளிவாக்குவதாக கூறிக் கொண்டனர் மற்றும் அதன் அடிப்படையில்,
அவர்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கப்பட்டவர்களிடமிருந்து மாபெரும் தியாகங்களைக் கோரினர். அவர்களுக்கு சம்பளம்
கிடையாது, அவர்கள் ஆயுதங்களையும் உணவையும் மட்டும் தான் பெறுவர்.
தொடரும்.........
|