World Socialist Web Site www.wsws.org


The Taliban, the US and the resources of Central Asia

தலிபான், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் மத்திய ஆசிய வளங்கள்

By Peter Symonds
24 October 2001

Back to screen version

இக் கட்டுரையின் முதல் பாகம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இரண்டாவதும் இறுதிப்பகுதியைம் கீழே காணலாம்.

பாகிஸ்தானிய உதவி

இருப்பினும், மனக் கற்பிதத்திற்கும் யதார்த்தத்திற்கும் (Image and reality) இடையில் பெரும் இடைவெளி இருந்தது. தலிபான் தாக்கி விட்டு மறைந்துவிடும் தந்திரோபாய கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆயுதம் தாங்கிய மதவாத உணர்ச்சி வெறியர்களைக் காட்டிலும் அதிகமான ஒன்றாக இருந்திருந்தால், அவ்வியக்கத்திற்கு தேவைப்படும் நிறையப்பணம், ஆயுதங்கள், குண்டுகள் அதேபோல கணிசமான அளவு தொழில் நுட்பம் மற்றும் இராணுவ நிபுணத்துவத்தை, வறுமை பீடித்த ஆட்சேர்ப்பிலிருந்து அது ஒன்றைக்கூட பெற்றிருந்திருக்க முடியாது.

தொடக்கத்திலிருந்தே தலிபானின் முக்கிய பாதுகாப்பாளர் பாக்கிஸ்தானாகும்.1980 கள் முழுவதும் முஜாஹைதீன் குழுக்களுக்கு பாக்கிஸ்தானின் சக்தி மிக்க உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ அமெரிக்க பணம், ஆயுதம் மற்றும் சிறப்புத்துறை அறிவுக்கான பிரதான நீர்வழிப் பாதை ஆக இருந்திருந்தது, அது ஆப்கானிஸ்தானின் அரசியலில் அதனை ஆழமாய் சிக்கவைத்தது. 1994 அளவில் பெனாசிர் புட்டோ அரசாங்கம் அர்ஜெண்டினிய கம்பெனி பிரிடாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது, ஆனால் தெற்கு ஆப்கான் வழியாக தடைகளை அகற்றி வழியைத் தெளிவாக்க அது நெருங்கவில்லை. பாக்கிஸ்தானின் பிரதான பதிலாள் ஹிக்மத்தியார் காபூலில் சண்டையில் மூழ்கி இருந்தார் மற்றும் தீர்வுகாண விருப்பமின்றி இருந்தார்.

ஒரு மாற்றீட்டிற்காக சுற்றி நோட்டமிடுகையில் புட்டோவின் உள்துறை அமைச்சர் நசீருல்லா பாபருக்கு தலிபானைப் பயன்படுத்தும் எண்ணம் திடுமென உதித்தது. 1994 செப்டம்பரில், அவர் காந்தஹார் மற்றும் ஹெரட் வழியாக துர்க்மேனிஸ்தான் செல்லும் சாலையை மதிப்பீடு செய்ய நில அளவையாளர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தார். அடுத்து வந்த மாதத்தில் துர்க்மேனிஸ்தானுக்குப் பறந்து சென்று துருக்மேன் எல்லை அருகே ஆப்கான் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ரஷித்டோஸ்தும் மற்றும் ஹெரட் மீது ஆட்சி செலுத்தும் இஸ்மாயில் கான் ஆகிய இரு முக்கிய யுத்தப் பிரபுக்களின் ஆதரவை உத்தரவாதம் செய்தார். சர்வதேச நிதி ஆதரவை வென்றெடுக்கும் முயற்சியில், பாக்கிஸ்தானும் கூட இஸ்லாமாபாத்தைத் தளமாகக் கொண்ட எண்ணற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளை காந்தஹாருக்கும் ஹெரட்டுக்கும் அனுப்பியது.

தனது திட்டத்திற்கான ஆதரவின் வெற்றியின் அளவை உத்திரவாதப்படுத்த, உள்துறை அமைச்சர் பாபர், மூத்த ஐ.எஸ்.ஐ களை அலுவலர்களின் தலைமையின் கீழும் தலிபான் போராளிகளின் காவலுடனும் பழைய இராணுவ ஓட்டுநர்களால் இயக்கப்படும் 30 இராணுவ வண்டிகளைக் கொண்ட சோதனை பயணப் பாதுகாப்புபடையை அமைத்தார். டிரக்குகள் 1994 அக்டோபர் 29ல் கிளம்பின மற்றும் பாதை தடைபட்ட பொழுது, தலிபான் படைகளைக் கொண்டு அதற்குப் பதிலளித்தது. நவம்பர் 5 அளவில் தலிபான், சாலையை மட்டும் சீர்செய்யவில்லை, மாறாக குறைந்த பட்ச சண்டையுடன் காந்தஹாரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

அடுத்த மூன்று மாதங்களில், தலிபான் ஆப்கானின் 31 மாகாணங்களில் 12ஐக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. குறைந்தது அதன் "வெற்றிகளில்" சில உள்ளூர் படைக் கொமாண்டர்களுக்கு பெரும் இலஞ்சம் கொடுத்து உத்திரவாதப்படுத்தப்பட்டன. 1995 மத்தியில் இராணுவ எதிர்த்தாக்குதலால் பாதிப்படைந்தபின், தலிபான் பாக்கிஸ்தான் உதவியுடன் மறு ஒழுங்கு செய்யப்பட்டு, மறு ஆயுதபாணி ஆக்கப்பட்டு 1995 செப்டம்பரில் ஹேரட்டுக்குள் நுழைந்தது, பாக்கிஸ்தானில் இருந்து மத்திய ஆசியாவுக்கு செல்லும் பாதையை சக்திமிக்க வகையில் ஒழுங்கமைத்தது. அடுத்து வந்த மாதத்தில் யுனோகால் அதனது துர்க்மேனிஸ்தான் உடனான குழாய்வழிப் பாதை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தலிபானுக்கு எந்த நேரடி உதவி பற்றியும் ஒப்புக் கொள்வதில் பாக்கிஸ்தான் எப்போதும் எச்சரிக்கையுடனிருந்தது ஆனால் தொடர்புகள் வெளிப்படையாக இருக்கின்றன. தலிபான் ஜாமியத்-இ-உலெம்மா இஸ்லாம் (JUI) எனும் பாக்கிஸ்தானை அடித்தளமாகக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாதக் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறது. அது ஆப்கானுடனான எல்லைப் பகுதிகளில் தனது சொந்த மதரஸாக்களை நடத்தியது. JUI அதன் பள்ளிகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் அதற்கு ஆட்களை வழங்கியது, அதேபோல பாக்கிஸ்தான் இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ -ன் மேல் தட்டுப் பகுதியினருக்குள்ளே தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

வெளியார் தலையீட்டின் மிகவும் கூறப்பட வேண்டிய அடையாளம் தலிபானின் இராணுவ வெற்றியாக இருந்தது. ஒரு வருடத்திற்கும் அதிகமாக, அது சிறிதளவே ஆன மாணவர்களில் இருந்து 200 போராளிகளைத் திரட்டக் கூடியதாய், டாங்கிகள், பீரங்கிப் படை மற்றும் ஆகாய வழி ஆதரவு ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட படையாக வளர்ந்திருந்தது.

ஒரு எழுத்தாளர் குறித்தவாறு: தலிபான் தொடக்கத்திலிருந்து அதன் நடவடிக்கைகளில் காட்டிய திறத்தின் அளவிலும் அமைப்பிலும் பார்க்கையில், பெரும்பாலும் முன்னாள் கெரில்லாக்களை மற்றும் பகுதி நேர மாணவர்களை உள்ளடக்கிய படை அந்த அளவு இயங்கி இருக்க முடியும் என்பது எண்ணிப்ப்பார்க்க முடியாததாக இருக்கிறது. அவர்களின் எண்ணிக்கையின் மத்தியில் சந்தேகத்திற்கிடமின்றி ஆப்கானிய ஆயுதப்படைகளின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கு இருந்த அதேவேளை, அவர்களின் தாக்குதல்கள் விரைவுடனும் நவீனமுறையிலும் நடத்தப்பட்ட விதம் மற்றும் அவர்களின் செய்தித் தொடர்புகளில் அத்தகைய அம்சம் ஆகியன அவர்கள் கட்டாயம் பாக்கிஸ்தானிய இராணுவத்தின் இருப்பிற்கு அல்லது குறைந்த பட்சம் தேர்ச்சி பெற்ற ஆதரவைக் கொண்டிருந்தனர் என்ற முடிவிற்கு தவிர்க்க முடியாது இட்டுச் செல்லும்." ( AfghanistanK A New History,Martin Ewers,Curzon, 2001,pPP 182-3)

உதவி செய்யும் மூலவளமாக பாக்கிஸ்தான் மட்டும் இருந்ததில்லை. சவுதி அரேபியாவும் கூட கணிசமான அளவு நிதி மற்றும் சடரீதியான வளங்களை தலிபானுக்கு அளித்தது. தலிபான் காந்தஹாரைக் கட்டுப்பாட்டில் எடுத்தவுடன், JUI தலைவர் மெளலானா பாஸ்லுர் ரஹ்மான் சவுதி அரேபியாவிலிருந்தும் வளைகுடா நாடுகளிலிருந்தும் உதவித் தொகைகளுக்காக "வேட்டையாடல் விஜயங்களை" ஒழுங்கு செய்யத் தொடங்கினார். 1996 நடுப்பகுதி அளவில், சவுதி அரேபியா தலிபானின் காபூலுக்குப் போவதற்கான முனைப்பிற்கு ஆதரவாக நிதிகளை, வாகனங்களை மற்றும் எரிபொருளை அனுப்பியது. காரணங்கள் இரட்டிப்பாக இருந்தன. அரசியல் தளத்தில், தலிபானின் அடிப்படை சித்தாந்தம் சவுதியின் சொந்த வாகாபிவாதத்திற்கு நெருக்கமாக இருந்தது. அது ஷைட் பிரிவுக்கு குரோதமாக மற்றும் ரியாத்தின் பிரதான பிராந்திய போட்டியாளர் ஈரானுக்கு குரோதமாக இருந்தது. சாதாரணமாக செய்தி மட்டத்தில், சவுதி எண்ணெய்க் கம்பெனியான டெல்டா ஆயில், யுனோகால் குழாய்வழிப் பாதையில் பங்குதாரராக இருந்தது மற்றும் அது அத்திட்டம் எழும்புதற்கு தலிபானின் வெற்றியில் அதன் நம்பிக்கையைக் கொண்டிருந்தது.

ஐக்கிய அமெரிக்காவும் தலிபானும்

பாக்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா போல ஐக்கிய அமெரிக்க நாடுகளும் தலிபானுக்கான எந்த ஆதரவும் பற்றி திரும்பத் திரும்ப மறுத்து வந்தது. 1980கள் முழுவதும் பாக்கிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ உடனான சி.ஐ.ஏ-ன் நெருக்கமான உறவை எடுத்துக் கொண்டால், தலிபானுக்கான பூட்டோ அரசாங்கத்தின் திட்டம் பற்றி மற்றும் அதற்கு வெளிப்படையான அனுமதியைக் கொடுத்தது பற்றி வாஷிங்டன் அறியாது என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. தலிபானுக்கு பாக்கிஸ்தான் ஆதரவு என்பது வெட்ட வெளிச்சமானது, இருப்பினும் 1990களின் இறுதியில்தான் ஐக்கிய அமெரிக்கா இஸ்லாமாபாத் ஆட்சி உடனான அதன் உறவுகள் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது.

அமெரிக்க தலிபான் உறவுக்கான மேலும் கூடிய மறைமுக ஆதாரம், அவையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டானா ரோஹ்ராபாச்சர், தலிபானின் உருவாக்கத்திற்குப் பின்னர் இருந்த ஆப்கான் தொடர்பான அமெரிக்க உத்தியோகப்பூர்வ பத்திரங்களைப் பெறுவதற்கு எடுத்த முயற்சியில் இருந்து வருகிறது. ஆப்கானிய அரசரின் ஆதரவாளரான ரோஹ்ராபாச்சர் கிளிண்டன் நிர்வாகத்துடன் பழிதீர்க்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள இருந்தார். ஆனால் அவரது கோரிக்கைகளுக்கான பதில் முக்கியத்துவம் உடையதாக இருந்தது. இரண்டாண்டுகால அழுத்தத்திற்குப் பிறகு, அரசுத்துறை இறுதியில் 1996க்குப் பின்னரான காலகட்டத்தைக் குறிக்கும், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட பத்திரங்களை கையளித்தது, ஆனால் தீர்க்கமான காலகட்டத்துடன் தொடர்புடைய எந்த நடவடிக்கைகளையும் வெளிப்படுத்த உறுதியாய் மறுத்தது.

தலிபானுடனான அல்லது பாக்கிஸ்தானிய கையாட்களுடனான ஆரம்ப அமெரிக்கத் தொடர்புகளின் துல்லியமான விவரங்கள் தெரியாதிருக்கின்ற அதேவேளை, வாஷிங்டனின் நோக்கம் தெளிவானதாக இருக்கிறது. ஆசிரியர் அஹமது ரஷீத் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "தலிபான் வாஷிங்டனின் ஈரான் எதிர்ப்புக் கொள்கையுடன் ஒத்துப்போயிருந்ததால், மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து ஈரானைத் தவிர்த்த எந்தவிதமான தென்பகுதி குழாய்வழிப் பாதையின் வெற்றிக்கும் அவர்கள் முக்கியமானவர்களாக இருந்ததால் கிளிண்டன் நிர்வாகம் தெளிவாகவே தலிபானுக்கு ஆதரவாக இருந்தது. அமெரிக்க காங்கிரஸ் ஈரானைச் சீர்குலைக்க சி.ஐ.ஏ வுக்கு 20 பில்லியன் டாலர் பட்ஜெட்டை ரகசியமாக அங்கீகாரம் செய்திருந்தது மற்றும் இந்த நிதியில் சிலவற்றை வாஷிங்டன் தலிபானுக்கு வழங்கியது என்று டெஹ்ரான் குற்றம் சாட்டியிருந்தது--இது வாஷிங்டனால் எப்போதும் மறுக்கப்பட்டு வந்தது." (Taliban ,Islam,Oil, and the New Great Game in CentralAsia,P.46)

உண்மையில் 1994ல் இருந்து 1997 வரையிலான காலகட்டம், யுனோகால் குழாய்வழிப் பாதைக்கான ஆதரவை உத்திரவாதப்படுத்துவதை இலக்காகக் கொண்ட, அமெரிக்க இராஜதந்திர நடவடிக்கைகளின் கதம்பத் திரளுடன் ஒத்துப்போனது. யுனோகால் திட்டத்தின் ஆதரவாளரான முக்கிய அமெரிக்க செனட்டர் ஹாங்க் பிரெளன், மார்ச் 1996ல் காபூலுக்கும் ஏனைய ஆப்கன் நகரங்களுக்கும் விஜயம் செய்தார். அவர் தலிபானைச் சந்தித்தார் மற்றும் அவர்களை யுனோகாலின் நிதி செலவழிப்பில் அமெரிக்காவில் நடைபெறும் ஆப்கானிஸ்தான் பற்றிய மாநாட்டிற்கு பேராளர்களை அனுப்பும்படி அழைப்பு விடுத்தார். அதே மாதம், ஐக்கிய அமெரிக்காவும் பாக்கிஸ்தானிய அரசாங்கம் பிரிடாஸ் உடனான ஏற்பாடுகளை கைவிடுமாறும் அமெரிக்கக் கம்பெனியை ஆதரிக்குமாறும் அழுத்தம் கொடுத்தது.

அடுத்து வந்த மாதத்தில், தெற்காசியாவுக்கான அமெரிக்க அரசு உதவிச் செயலாளர் ரொபின் ராபெல் பாக்கிஸ்தான், ஆப்கான் மற்றும் மத்திய ஆசியாவுக்கு விஜயம் செய்து, தொடர்ந்து வரும் மோதலுக்கு அரசியல் தீர்வை வற்புறுத்தினார். "அரசியல் ஸ்திரத்தன்மை மீள்விக்கப்பட முடியாது போனால், பொருளாதார வாய்ப்புக்கள் இங்கு நழுவவிடப்படும் என்பது பற்றி நாங்களும் கவலைப்படுகிறோம்" என அவர் செய்தி ஊடகத்திடம் கூறினார். ராபெல் தலிபான் தலைவர்களுடன் பேச்சு நடத்தவில்லை அல்லது வேறு எந்தவிதமான உத்தியோகப் பூர்வ ஆதரவின் குறிகாட்டலையும் வழங்கவில்லை. ஆனால் 1990களில் பிற்பகுதியில் ஆட்சிக்கு அதன் இறுதிக்கெடுவுக்கு அடிப்படையாய் அமைந்த பெண் உரிமைகள், போதைப் பொருட்கள் மற்றும் பயங்கரவாதம் பற்றிய தலிபானின் கொள்கையை ஐக்கிய அமெரிக்கா ஒருபோதும் கடுமையாய் விமர்சிக்கவில்லை. ஒருவர் வேண்டு மென்றே அவற்றைப் புறக்கணிக்காமல் இருப்பாரே ஆனால், இவ்வனைத்து மூன்று விஷயங்களிலும், அங்கு போதுமான ஆதாரம் இருந்தது.

* காந்தஹாரைக் கைப்பற்றியது முதற்கொண்டு தலிபான் மிக அடிப்படை ஜனநாயக உரிமைகளைக்கூட சகிக்காது என்பது உண்மையாக இருந்தது. பெண்கள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாது தடுக்கப்பட்டனர் மற்றும் பெண்கள் வேலை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டனர். இந்நடவடிக்கைகள் பிரம்மாண்டமான கஷ்டங்களை ஏற்படுத்தி இருந்தது. கடுமையான முட்டாள் தனமான உடை உடுத்தும் முறை கூட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது திணிக்கப்பட்டது. உண்மையில் வீடியோ மற்றும் தொலைக்காட்சியிலிருந்து பட்டம் விடுவது முதற்கொண்டு அனைத்துவிதமான பொழுதுபோக்குகளும் தடைசெய்யப்பட்டன. மதக்காவலர்கள் சமூக விதிமுறைகளை அமல்படுத்தினர், மீறுபவர்கள் தெருவிலேயே மனம்போனபடி தண்டனையை சந்தித்தனர். பிறர்மனை விழைதல், ஒரு பாலினச் சேர்க்கை போன்ற பரந்த அளவிலான குற்றங்களுக்கு பொது இடத்தில் பகிரங்க தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. முழு ஒடுக்குமுறை அமைப்பின் நோக்கமும் மக்களை தலிபானின் மதகுரு சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வதாகும். முல்லா சொல்வதைத்தவிர ஒருவர் எதையும் சொல்வதில்லை. அவர்களின் முடிவுகள் கூட காந்தஹாரில் உள்ள முல்லா உமரால் ரத்துச் செய்யப்படும்.

* பெரிய ஆப்கானிய ஹெராயின் தொழிலில், அதன் வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா பிரதான பாத்திரம் ஆற்றியது. 1980கள் முழுவதும், முஜாஹைதீன் குழுக்களும் அவர்களது பாக்கிஸ்தானிய ஆட்களும், சி.ஐ.ஏ உதவியுடன் ஆப்கானிஸ்தானுக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட இரகசிய அளிப்பு வழியை அபினை நாட்டுக்கு வெளியே கடத்த வேண்டி சுரண்டினர். சோவியத் இராணுவத்துக்கு எதிரான யுத்தத்தை பாதுகாக்கும் நகர்வின் பேரில் சி.ஐ.ஏ போதைப் பொருள் வர்த்தகத்தை அலட்சியம் செய்தது. 1990களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் உலகில் அதிக அபின் உற்பத்தியாளராக பர்மாவுடன் போட்டி இட்டது. ஐக்கிய அமெரிக்கா அதே மனப்பாங்கை தலிபான்பால் கொண்டிருந்தது, அது தொடக்கத்தில் அபினி பயிரிடலை நீக்க முடிவு செய்தது. ஆனால் அது ஆப்கானின் அழிவுற்ற பொருளாதாரத்தில் வருவாய்க்கான சில மாற்றீடுகள் இருந்தன என்று கண்ட பின்னர், விரைவிலேயே தனது முடிவை பின்வாங்கிக் கொண்டது. காந்தஹாரை தலிபான் எடுத்த பின்னர், சுற்றியுள்ள மாகாணங்களில் இருந்து அபின் வெளியேற்றம் 50 சதவீதமாக அதிகரித்தது. அதன் படைகள் மேலும் வடபகுதிக்கு நகர்ந்ததும், நாடு மொத்தமாகக் கணிப்பிடப்பட்ட அபின் உற்பத்தி 1997ல் 2800 தொன்னாக அதிகரித்தது -இது 1995லிருந்து குறைந்தபட்சம் 25 சதவீதம் உயர்வாகும். இவை எதுவும் அந்நேரம் வாஷிங்டனின் பகிரங்கக் கண்டனத்தைத் தூண்டவில்லை.

* இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய ஐக்கிய அமெரிக்காவின் மனப்பாங்கு வெறும் கபடத்தனமானது.1980களில், ஐக்கிய அமெரிக்கா பொதுவாக முஜாஹைதீன்களுக்கு மட்டும் ஆதரவளிக்கவில்லை, மாறாக 1986ல் குறிப்பாக --சோவியத் எதிர்ப்பு யுத்தத்துக்கு முழு முஸ்லிம் உலகும் ஆதரவளிப்பதாக எடுத்துக் காட்டுதற்கு சர்வதேசரீதியாக போராளிகளைச் சேர்த்த பாக்கிஸ்தானிய திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தது. அத்திட்டத்தின்படி, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் இருந்து 35000 இஸ்லாமியப் போராளிகள் திரட்டப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டனர் மற்றும் ஆப்கானில் போராடுவதற்கு ஆயுதபாணியாககப்பட்டனர். அரபு ஆப்கானியர்கள் என்று அவர்கள் குறிப்பாகக் காட்டியவர்கள் மத்தியில், 1980கள் தொடக்கம் முஜாஹைதீன்களுக்காக சாலைகள், கிடங்குகளைக் கட்டிக் கொண்டிருந்த செல்வந்த யேமனிய கட்டுமானத் தொழிலதிபரின் மகனான ஒசாமா பின்லேடன் என்பவரும் ஒருவர். அவர் 1986ல் ஆயுதங்களைப் பதுக்கவும் பயிற்சி எடுக்கவும் பெரும் நிலவறைக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு சி.ஐ.ஏ வுடன் சேர்ந்து வேலை செய்தார். பின்னர் 1989ல் அவரது சொந்த பயிற்சி முகாமைக் கட்டினார், அரபு ஆப்கானியருக்கான அல்கொய்தா (அடித்தளம்) அமைப்பை நிறுவினார்.

காபூலின் வீழ்ச்சி

1990களின் நடுவில், தலிபான் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் மனப்பாங்கு பின் லேடனால், போதைப் பொருட்களால் அல்லது ஜனநாயக உரிமைகளால் தீர்மானிக்கப்படவில்லை. அமெரிக்க அதிகாரி ரொபின் ராபெல் 1996 நடுப்பகுதியில் தலிபானை உத்தியோகப் பூர்வமாய் தழுவுவது பற்றி இரட்டை நிலை எடுத்தார் என்றால், அது வாஷிங்டன் தலிபான் போராளிகள் தங்களின் எதிராளிகளைத் தோற்கடிக்கக் கூடியவர்களாக மற்றும் யுனோகால் திட்டத்திற்கு ஸ்திரமான அரசியல் சூழலை அளிப்பார்களா என்ற உறுதி இல்லாததன் காரணமாகத்தான்.

1995ல் ஹெராட் கைப்பற்றப்பட்ட பிறகு, தலிபான் அதன் தாக்குதலுக்கான குவிமையத்தை காபூலுக்கு நகர்த்தியது. ஆப்கானில் தாங்கள் எதிர்பார்க்கும் பலத்தைக்காட்ட அனைத்துப் பகுதிகளும் தங்களின் கைப்பொம்மைகளை ஆயுதபாணியாக்குவதில் சம்பந்தப்பட்டனர். பாக்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா தலிபானுக்கு காந்தஹார் விமான நிலையத்தை நவீனப்படுத்திக் கொடுத்தது மற்றும் புதிய தொலைத் தொடர்பு மற்றும் வானொலி வலைப்பின்னலைக் கட்டியது. ரஷ்யா மற்றும் ஈரான் ஆயுதங்களையும் தளவாடங்களையும் எரிபொருளையும் ரப்பானி ஆட்சிக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் காபூலின் வடக்கே உள்ள பக்ராம் விமானதளம் வழியாக விமானத்தில் அனுப்பியது. இந்தியா மறைமுகமாக ஆப்கான் தேசிய விமான சேவையைப் புதுப்பித்ததுடன் பண உதவி அளித்ததன் மூலம் ரப்பானி அரசுக்கு உதவியது.

ஐ.நா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் ரப்பானிக்கும் தலிபானுக்கும் சமரசம் செய்ய எடுத்த முயற்சிகள் குழம்பின. 1996 ஆகஸ்டில் தலிபான் துருப்புக்கள் பாக்கிஸ்தான் எல்லையில் உள்ள ஜலாலாபாத் நகரைக் கைப்பற்றியது மற்றும் அடுத்து வந்த மாதத்தில் இறுதியில் அனைத்துத் துருப்புக்களையும் காபூலில் இருந்து வாபஸ் வாங்க நிர்ப்பந்தித்தது. அதன் நடவடிக்கைகளுள் ஒன்று கொடூரமாக சித்திரவதை செய்வது மற்றும் நஜிபுல்லாவையும் அவரது சகோதரரையும் கொன்றது, இவர்கள் 1992 முதல் தலைநகரில் இருந்த ஐ.நா சுற்றடைப்புக்குள் ராஜீய அந்தஸ்தில் வாழ்ந்து வந்தனர் மற்றும் அவர்களின் சிதைந்த உடல்கள் தெருவில் தொங்க விடப்பட்டன. இது தொடர்பான வாஷிங்டனின் எதிர் வினை பின்வருமாறு விளக்கப்பட்டது:

"தலிபானால் காபூல் கைப்பற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குள், அமெரிக்க அரசாங்கத்துறை தாம் ஒரு அதிகாரியை காபூலுக்கு அனுப்புவதன் மூலம் தலிபானுடன் ராஜிய உறவுகளை ஏற்படுத்தப் போவதாய் அறிவித்தது -அந்த அறிவிப்பை அது உடனடியாகப் பின் வாங்கிக் கொண்டது. அரசாங்கத்துறைப் பேச்சாளர் கிளின்டேவிஸ் கூறினார்: தலிபான் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் எடுக்கப்படும் நடவடிக்கையில் 'ஆட்சேபகரமானது எதையும்' காணவில்லை என்றார். அவர் தலிபானை மேற்குக்கு எதிரான எதிர்ப்பு என்பதை விட நவீனமயத்திற்கு எதிர்ப்பு என விவரித்தார். ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தலிபான் பக்கம் சாய்ந்தனர். 'நடந்தவற்றின் நல்ல பகுதி என்னவென்றால் பிரிவுகளுள் ஒன்று கடைசியில் ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்தை வளர்த்தெடுக்க முடிந்தது' எனயுனோகால் திட்ட ஆதரவாளரான செனடெட்டர் ஹன்க் பிரெளன் கூறினார்." ( பக்கம் 166)

யுனோகால் பதிலானது கிட்டத்தட்ட ஒரேபடித்தானதாய் இருந்தது. கம்பெனியின் பேச்சாளர் கிறிஸ் டாக்கெர்ட் தலிபானின் வெற்றியை வரவேற்றார், இப்பொழுது அதனது குழாய் வழிப் பாதையை பூர்த்தி செய்வது எளிதானதாக இருக்கக்கூடும் என்று விவரித்தார்- பின்னர் உடனடியாக அவ்வறிக்கையைப் பின் வாங்கிக் கொண்டார். அர்த்தம் தெளிவானதாக இருந்தது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் தலிபானை யுனோகால் திட்டத்திற்குத் தேவையான ஸ்திரத்தனமையை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த சாதனமாகப் பார்த்தனர், ஆனால் அதன் கட்டுப்பாடு சவால் செய்யப்படாதவரைக்கும் அவை புதிய ஆட்சியை வெளிப்படையாக ஆதரிக்க தயார் செய்யவில்லை.

1996ல் ஐ.நா உள் அரங்கக் கூட்டத்தொடரில், ராபெல் அப்பட்டமாக விளக்கினார்: "தலிபான் நாட்டில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் மேல் தனது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது, அவர்கள் ஆப்கானியர்கள், அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர், அவர்கள் அதிகாரத்தில் இருப்பதாக எடுத்துக் காட்டி உள்ளனர். அவர்களின் வெற்றியின் மூலவளம் பல ஆப்கானியர்களின், குறிப்பாக பஷ்துன்களின் விருப்பமாக இருந்திருக்கிறது, சமூகரீதியான கடும் கட்டுப்பாடுகளுடனும் கூட, அமைதி மற்றும் பாதுகாப்பை அளவிடுவதற்காக குழப்பம் மற்றும் சண்டையிடலை குறிப்பறிந்து முடிவுக்குக் கொண்டு வருவது அவர்களின் விருப்பமாக இருந்தது. தலிபான் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்பது இங்குள்ள எம்மில் எவரதும் அல்லது ஆப்கானியர்களதும் விருப்பமாக இருக்க வில்லை."

வாஷங்டனின் ஆதரவுடன் யுனோகால் தலிபான் தலைவர்களை செயலூக்கத்துடன் ஊக்கப்படுத்துவதைத் தொடர்ந்தது. மிகவும் இலாபகரமான பேரத்தைப் பெறுவதற்காக அவர்கள் அமெரிக்க கம்பெனியை பிரிடாஸூக்கு எதிராக வெற்றி பெறச்செய்ய செயலாற்றிக் கொண்டிருந்தனர். தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள காந்தஹாரில் உதவித்திட்டமாக ஒமாஹா பல்கலைக் கழகத்தில் ஆப்கானிஸ்தான் பற்றிய ஆய்வுப் படிப்பிற்கான மையத்தை அமைக்க ,யுனோகால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டொலர்களை வழங்கியது. கம்பெனியின் 'உதவி' யின் பிரதான வெளிப்பாடு அதன் குழாய் வழிப் பாதையைக் கட்டி அமைப்பதற்குத் தேவையான குழாய் பொருத்துபவர்கள், மின்னாளர்கள் மற்றும் தச்சர்கள் இவர்களைப் பயிற்றுவிப்பதற்கான பள்ளியாக இருந்தது. 1997 நவம்பரில், ஹெளஸ்டன் மற்றும் டெக்சாஸில் உள்ள யுனோகால் கம்பெனியால் தலிபான் பேராளர் குழு விருந்தூட்டி மகிழ்விக்கப்பட்டது. அவ்விஜயத்தின் போது அக்குழுவினர் அரசாங்கத்துறை அதிகாரிகளை சந்தித்தனர்.

வாஷிங்டனின் அரசியல் இடப் பெயர்ச்சி

ஆனால் அரசியல் காற்று ஏற்கனவே இடம் பெயர்ந்து இருந்தது. தலிபான் வடபகுதியின் பிரதான நகரான மஜார்-இ-ஷெரிப் மாநகரைக் கைப்பற்றி குரோதம் மற்றும் சந்தேகத்திற்கு இடமான உஸ்பெக்குகள், தஜிக்குகள் மற்றும் ஷைட் ஹஜாரஸ்கள் ஆகியோர் மீது தங்களின் சமூக மற்றும் மத ரீதியான கடும் கட்டுப்பாடுகளைத் திணித்த பொழுது, 1997ல் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. அவர்களின் நடவடிக்கைகள் கலகத்தைத் தூண்டிவிட்டது, நகரில் நடந்த சண்டையில் 600 தலிபான் துருப்புக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் தப்பி ஓட முயற்சித்தபோது குறைந்த பட்சம் 1000 பேர்களுக்கும் அதிகமானோர் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த இரு மாதங்களில், தலிபான்கள் வடக்கு எல்லைகள் வழியாக விரட்டி அடிக்கப்பட்டனர், அது அவர்களின் என்றும் நடந்திராத மிக மோசமான இராணுவத் தோல்வியாக ஆனது. 10 வாரங்களாக நடந்த சண்டையில் 3000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் காயம் அடைந்தனர், மற்றும் இன்னொரு 3,600 போராளிகள் கைதிகளாக சிறைப் பிடிக்கப்பட்டனர்.

மஜார்-இ-ஷெரிப் சம்பவம் வெறுமனே இராணுவப் பின்னடைவு அல்ல. தலிபான்கள் மறுபடியும் ஒன்று திரண்டு 1998 ஆகஸ்டில் நகரைக் கைப்பற்றினர், ஆண், பெண் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான ஷைட் ஹஜாரஸ்களை கொலை செய்தனர்- மற்றும் 11 ஈரானிய அதிகாரிகளையும் ஒரு பத்திரிகையாளரையும் படுகொலை செய்ததன் மூலம் பெரும்பாலும் ஈரானுடன் யுத்தத்தைத் தூண்டினர். இருப்பினும், 1997 மே சம்பவங்கள் தலிபான் பால் பஷ்துன் அல்லாதவர்கள் மத்தியில் ஆழமான வெறுப்பைக் காட்டியது. அது உள்நாட்டு யுத்தம் தவிர்க்க முடியாதபடி நீளக் கூடிய ஒன்று எனக் குறித்தது மற்றும் வடக்கில் எதிராளிகளின் பலமான நிலைகளைக் கைப்பற்றுவதில் தலிபான் வெற்றி பெற்றாலும் கூட, கிளர்ச்சி எழுச்சிகளும் மேலும் கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை இன்மையும் நிகழக் கூடியதாக இருந்தன.

மஜார்-இ-ஷெரிப் நெருக்கடியை உடனடியாகத் தொடர்ந்து, தீர்க்கமான பல முடிவுகள் வாஷிங்டனில் எடுக்கப்பட்டன. 1997 ஜூலையில், திடீரென எடுத்த கொள்கையில், கிளிண்டன் நிர்வாகம் -ஈரான் ஊடாகச்செல்லும் துர்கமேனிஸ்தான்- துருக்கி எரிவாயு குழாய்ப்பாதைக்கு அதன் எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. அடுத்து வந்த மாதத்தில் ராயல் டச் ஷெல் உள்ளடங்கிய ஐரோப்பிய கம்பெனிகளின் கூட்டிணைப்பு அத்தகைய செயல் திட்டத்திற்கான திட்டங்களை அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் BHP பெட்ரோலியம் கம்பெனி ஈரானிலிருந்து பாக்கிஸ்தான் மற்றும் இறுதியில் இந்தியாவுக்கு வந்து சேரும் இன்னொரு எரிவாயு குழாய்ப்பாதையை முன்வைத்தது.

அதே காலகட்டத்தில், ஐக்கிய அமெரிக்காவும் துருக்கியும் -அஜர்பைஜானில் உள்ள பாக்குவிலிருந்து ஜோர்ஜியா வழியாக மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள துருக்கியின் செய்ஹான் துறைமுகத்திற்கு செல்லும் குழாய்வழிப் பாதையுடன், "போக்குவரத்து இடைவழி நிலம்" பற்றிய திட்டத்திற்கு கூட்டாக திட்ட ஆதரவளிக்க முன்வந்தது. வாஷிங்டன் துர்க்மேனிஸ்தானையும் கஜக்கஸ்தானையும் முறையே, காஸ்பியன் கடலுக்கு அடியில், பின்னர் அதே இடைவழி நிலம் வழியாக எரிவாயு மற்றும் எண்ணெய்க் குழாய் வழிப் பாதைகளைக் கட்டி அமைப்பதன் மூலம், இத்திட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டியது.

துர்க்மேனிஸ்தானிலிருந்து வரும் எரிவாயு குழாய் வழிப் பாதைக்கான யுனோகாலின் திட்டம் இப்பொழுது போட்டியை எதிர்கொண்டது. மேலும், இந்த போட்டி முன்மொழிவுகள் முன்வைத்த வழித்தடங்கள் வழியாக குறைந்த பட்சம் குறுகியகாலத்துக்காகவாவது, மிகவும் அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மை எதிர்பார்க்கத்தக்கதாக இருந்தன. பிரிடாஸ் மற்றும் யுனோகால் இரண்டும் தெற்கு ஆப்கானிஸ்தானில் தங்களது திட்டங்களை முன்னிலைப்படுத்தின ஆனால் முன்னேற்றங்களோ வரவர எட்டாததாகக் காணப்பட்டன. 1997 பின் பகுதியில், யுனோகால் உதவித் தலைவர் மார்ட்டி மில்லர் பின்வருமாறு குறிப்பிட்டார்: "இந்த செயல்திட்டம் தொடங்கிய பொழுது நிச்சயமில்லாததாக இருந்தது. அது நாம் வேலைசெய்யும் அரசாங்கம் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமைதி இவற்றில் தங்கி இருக்கிறது. அது இந்த ஆண்டின் முடிவில், அடுத்த ஆண்டில் அல்லது இப்போதிருந்து மூன்று ஆண்டுகளில் முடிவடையலாம் அல்லது சண்டை தொடருமானால் வெற்றுத் திட்டமாகலாம்."

வாஷிங்டனின் அரசியல் பகட்டுக் கூச்சலில் ஒரு இணையான இடப் பெயர்வும் கூட இடம் பெற்றது. 1997 நவம்பரில், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசாங்கச் செயலர் மடலின் ஆல்பிரைட் பாக்கிஸ்தான் விஜயத்தின் பொழுது புதிதாய் தொனியை மாற்றிக் கொண்டார். அவர் அச்சந்தர்ப்பத்தை பெண்கள் தொடர்பான தலிபானின் கொள்கைகளை "இகழத் தக்கதாய்" க் கண்டித்தார் மற்றும் பாக்கிஸ்தான் சர்வதேச அந்நியப்படலுக்கு உள்ளாகக்கூடிய நிலை பற்றி எச்சரித்தார். ஹெரோயின் வர்த்தகத்தில் மற்றும் "இஸ்லாமிய பயங்கரவாதத்தில்" தலிபானின் ஈடுபாடு பற்றி வாஷிங்டன் பாக்கிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது.

ஐக்கிய அமெரிக்க அரசுகளின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமானது, 1998ல் கென்யா மற்றும் தான்சானியாவில் அமெரிக்க தூதரகங்களின் மீது குண்டுத் தாக்குதல் நடைபெற்றதன் பின்னர், கிளிண்டன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் எனும் இடத்தில் உள்ள பின்லேடனின் பயிற்சி முகாம் மீது க்ரூஸ் ஏவுகணைகளை வீசியபொழுது முழுமை அடைந்தது. 1996ல் பின்லேடன் ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பி இருந்தார். அப்போது பாரசீக வளைகுடாவிலும் மத்திய கிழக்கிலும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பாத்திரம் பற்றி அதிகமாய் கசப்படைந்திருந்தார். 1996 ஆகஸ்டில் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு எதிராக ஜிஹாத்தைத் தொடுக்குமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுக்க ஆரம்பித்தார். இருப்பினும், ஆப்பிரிக்காவில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர்தான் பின்லேடன் அதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான எந்தவித ஆதாரத்தையும் வழங்காமல், தலிபான் அவரை ஒப்படைக்க வேண்டும் என்று வாஷிங்டன் கோரிக்கை விடுக்கத் தொடங்கியது.

யுனோகால் தனது குழாய்வழிப் பாதை திட்டத்தை நிறுத்தி வைத்தது மற்றும் காந்த ஹாரிலும் இஸ்லாமாபாத்திலும் உள்ள தனது அனைத்துப் பணியாளர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டது. எண்ணெய் விலை பீப்பாய் 25 டாலரிலிருந்து 13 டாலருக்கு பாதியாகக் குறைந்த பொழுது, குறுகிய காலத்துக்காகவாவது, யுனோகாலின் குழாய்ப்பாதைத் திட்டம் இலாபகரமானதாக இல்லை என்று ஆனபொழுது, 1998ன் இறுதியில் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டது. அதே நேரத்தில், பின் லேடனை ஒப்படைத்தல், அதேபோல போதைப் பொருள் கட்டுப்பாடு மீதான நடவடிக்கை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கான கிளிண்டன் நிர்வாகத்தின் கோரிக்கைககள் 1999ல் தலிபான் மீது ஐக்கிய நாடுகள் அமைப்பினது தண்டணைக்குரிய வரிசைக்கிரமமான தடைகளுக்கு அடிப்படையாக ஆனது, பின்னர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அது பலப்படுத்தப்பட்டது.

தலிபான் மற்றும் பாக்கிஸ்தான் மீதும் கூட கடும் அழுத்தம் செயல் முனைப்புடன் இருப்பினும், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஒரு கோரிக்கை கூட நிறைவேறவில்லை. 1998 மற்றும் 1999ல், தலிபான் புதிய இராணுவத் தாக்குதல்களைத் தொடுத்து அதன் கட்டுப்பாட்டை விஸ்தரித்தது, மற்றும் அதன் எதிராளிகளை வடகிழக்கில் சிறு நிலப்பகுதிக்குள் விரட்டி அடித்தது. ஆனால் ரஷ்யாவும் ஈரானும் தலிபானின் எதிரணிக்கு தொடர்ந்து உதவி வழங்கி ஆயுதபாணி ஆக்கியதுடன் உள்நாட்டு யுத்தமானது எந்த முடிவுக்கும் வராமல் போனது. ஐ.நா பொருளாதாரத் தடைகளானது வாஷிங்டனின் எந்தப் போட்டியாளர்களையும் ஆப்கானில் சாதக நிலையை அடையமுடியாமல் செய்யும் பாதிப்பைக் கொண்டிருந்தது, ஆனால் ஐக்கிய அமெரிக்க அரசுகளை இந்தப் பிராந்தியத்தில் உறுதியாய் காலூன்றுவதற்கான ஆதாரத்தை நெருங்க முடியாத நிலைக்குக் கொண்டு வந்தது.

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிர்வாகமானது, -மத்திய ஆசியாமீது தான் நீண்டகாலமாய் வைத்திருந்த வடிவங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, நியூயோர்க் மற்றும் வாஷிங்டனின் மீதான செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதலை இப்பொழுது பற்றிக் கொண்டுள்ளது. ஆதாரம் எதனையும் காட்டாமல், புஷ் நிர்வாகமானது ஐக்கிய அமெரிக்காவில் பேரழிவிற்கான பொறுப்பு பின் லேடனுடையது என உடனடியாகப் பிடித்துக் கொண்டு தலிபான் ஆட்சிக்கு வரிசையாக இறுதிக்கெடு விதித்துள்ளது: பின் லேடனை ஒப்படையுங்கள், அல் கொய்தா அமைப்பு ஏற்பாடுகளை மூடுங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிற்கு அனைத்து "பயங்கரவாத பயிற்சி முகாம்களைப்" பற்றியும் விஷயங்களை அளியுங்கள் என்றது. தலிபான் அதன் முடிவில்லாத கோரிக்கைகளை நிராகரித்தபொழுது, புஷ் வெளிப்படையாக யாவரும் அறிந்த ஆட்சியை அகற்றுவதற்கான நோக்கத்துடன், தனது படைத்தளபதிகளுக்கு ஆப்கானிஸ்தான் மீது ஆயிரக்கணக்கில் குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசுவதற்கு சைகை காட்டினார்.

உலகின் மிகப் பின்தங்கிய நாடுகளுள் ஒன்றான ஆப்கானிஸ்தானுக்கு எதிரான விரிவான மற்றும் மிருந்த பொருட் செலவுள்ள யுத்தத்தை நடத்துவதற்கான ஒரே நோக்கம் பின் லேடனைப் பிடிப்பதற்காகவும் அல்கொய்தா வலைப் பின்னலை உடைப்பதற்காகவும் என புஷ் நிர்வாகமும் சர்வதேச செய்தி ஊடகங்களும் கூறுவதை ஒருவர் நம்புவதாக வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த வரலாற்றுக் கண்ணோட்டம் விளக்கிக் காட்டுகிறவாறு, ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் குறி இலக்குகள் பயங்கரவாதம் பற்றிய அச்சங்களாலோ அல்லது மனித உரிமைகள் மீது அது கொண்ட அக்கறைகளாலோ தீர்மானிக்கப்படவில்லை. ஐக்கிய அமெரிக்க நாடுகளானது உஸ்பெக்கிஸ்தானில் தனது துருப்புக்களுடன் முதல் தடவையாக மத்திய ஆசியக் குடியரசுகளில் தனது இராணுவத்தை நிறுத்தியுள்ளது மற்றும் அதனது இராணுவத்தாக்குதல் தலிபானுக்குப் பின் அமையும் எந்த ஆட்சிக்காகவும் தனது விதிமுறைகளை ஆணையிடும் என்பதை உறுதிப்படுத்துகிறது. நாளையே பின் லேடன் கொல்லப்பட்டாலும் அவரது அல்கொய்தா இயக்கம் அழிக்கப்பட்டாலும் கூட, இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலும் அதன் பரந்த எரிபொருள் வளங்களின் சேமவைப்பிடத்திலும் தனது மேலாதிக்கத்தை நோக்கிய முதல் அடிகளை பின்வாங்கிக் கொள்ளும் நோக்கம் வாஷிங்டனுக்கு இருக்காது.

References:
1. Taliban: Islam, Oil and the New Great Game in Central Asia, Ahmed Rashid, I.B Tauris, 2000
2. Afghanistan: A New History, Martin Ewers, Curzon, 2001
3. Reaping the Whirlwind: The Taliban Movement in Afghanistan, Michael Griffin, Pluto Press, 2001


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved